Monday, August 15, 2005

காஷ்மீரின் விடுதலை - 6

ஸ்ரீநகர்-முசாராபாத் நெடுஞ்சாலை தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் மக்களை பிற முக்கிய பகுதிகளுக்கு இணைக்க கூடிய முக்கியமான இணைப்புச் சாலை. இந்தச் சாலைக்கு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, ஷேக் அப்துல்லாவிற்கு ஆதரவு தெரிவிக்க, இந்த சாலை வழியாக பயணிக்கும் பொழுது தான் ஜவகர்லால் நேருவை காஷ்மீர் மன்னர் ஹரி சிங் கைது செய்தார்.

250கி.மீ, தூரமுள்ள இந்த நெடுஞ்சாலை தான் காஷ்மீர் மக்களின் முக்கிய வணிகச் சாலையாக இருந்தது. இந்தச் சாலை ஸ்ரீநகரை முசாராபாத்துடன் இணைப்பதுடன், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. 1947 பிரிவினனக்குப் பிறகு இந்த சாலையும் மூடப்பட்டு விட்டது. இதனால் காஷ்மீரிகள் துண்டிக்கப்பட்டனர். அவர்களின் வணிகமும், பொருளாதாரமும் சீர்குலைந்தது.

காஷ்மீர் ஆப்பிள்கள் ஒரு முக்கிய வணிகப் பொருள். காஷ்மீரில் பயிரிடப்படும் ஆப்பிள்களை தில்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தான் இங்குள்ள விவசாயிகளால் தற்பொழுது விற்க முடியும். நீண்ட தூரத்தில் இருக்கும் வர்த்தக தளங்களால் இவர்களின் லாபம் குறைகிறது. மாறாக இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் முசாராபாத், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களுக்கும் மிக எளிதாக வர்த்தகம் செய்ய இயலும். லாபமும் அதிகரிக்கும்.

அது போலவே பாக்கிஸ்தானின் காஷ்மீரில் இருக்கும் தங்கள் உறவினர்களை பார்க்க வேண்டுமானால் முதலில் பாஸ்போர்ட், விசா போன்றவை கிடைக்க வேண்டும். பின் தில்லிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தில்லி-லாகூர் பேருந்து மூலமாக லாகூர் சென்று, அங்கிருந்து ராவல்பிண்டி பின் முசாராபாத் என்று ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயணம் 4 நாட்கள் நீடிக்கும். ஆனால் ஸ்ரீநகர்-முசாராபாத் பேருந்து மூலமாக சில மணி நேரங்களில் தங்கள் உறவினர்களை பார்த்து விடலாம். நேரம், செலவு, விசா அலைச்சல் போன்ற எந்த பிரச்சனையும் இருக்காது.

உறவுகளை இணைப்பதுடன், வணிக வாய்ப்புகளும் பெருகுவதால் ஸ்ரீநகர்-முசாராபாத் பேருந்து போக்குவரத்து காஷ்மீர் மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது,

இந்த பேருந்து போக்குவரத்தை இந்திய பிரதமர் வாஜ்பாய் தான் ஆக்ரா பேச்சுவார்த்தையின் பொழுது பாக்கிஸ்தானிடம் முன்வைத்தார். ஆனால் பாக்கிஸ்தான் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம் இரு காஷ்மீரிடையே பயணிக்க பாஸ்போர்ட், விசா போன்றவை தேவை. இதனால் இரு காஷ்மீருக்கு இடையே இருக்கும் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு - LOC சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் பாக்கிஸ்தானுக்கு இருந்தது. எனவே, இரு காஷ்மீரிடையே மக்கள் செல்வதற்கு பாஸ்போர்ட், விசா போன்றவை இருக்ககூடாது. மாறாக விசா, பாஸ்போர்ட் இல்லாத பர்மீட் (Permit) முறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் இதனை இந்தியாவால் ஏற்க முடியவில்லை. இந்த பிரச்சனையால் பல மாதங்கள் பேருந்து போக்குவரத்து நிலுவையில் இருந்தது.

பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாமல், பர்மீட் மூலமாக பயணம் செய்யலாம் என்ற பாக்கிஸ்தானின் வாதத்தை பிறகு இந்தியா ஏற்றுக்கொண்டது. அது போலவே இந்த பேருந்து மூலமாக காஷ்மீரிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தன் பிடிவாதத்தையும் பாக்கிஸ்தான் தளர்த்திக் கொண்டது.

இரு நாடுகளும் ஒரளவுக்கு பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் போக்கினை கையாண்டதால் கடந்த ஏப்ரல் மாதம் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. அதிக ஆரவாரத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் இதனை தொடங்கி வைத்தார்.



பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக ஸ்ரீநகரில் பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்த பகுதி தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இந்த பேருந்து போக்குவரத்தை நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று தீவிரவாதிகள் அச்சுறுத்தினர்.



பாக்கிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் தீவிரவாத மற்றும் ஜிகாத் அமைப்புகள், இந்தியாவில் இருக்கும் ஹிந்துத்துவ அமைப்புகள், இந்திய இராணுவம் போன்றவை பேருந்து போக்குவரத்தை எதிர்த்தன.

இந்திய இராணுவம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் முயற்சி எடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் இருக்க கூடிய இடங்களில் மின்சார வேலிகளை அமைத்து இருந்தது. இதன் மூலம் தீவிரவாதிகளின் ஊடுறவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாஸ்போர்ட் கூட இல்லாமல் இரு காஷ்மீருக்கு இடையே நடக்கும் போக்குவரத்தால் தீவிரவாதிகள் உள்ளே நுழையும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக இராணுவம் கருதியது.

பாக்கிஸ்தானில் இருக்கும் ஜிகாத் அமைப்புகள் இந்த பேருந்து போக்குவரத்து மூலம் காஷ்மீர் மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்தியா முயலுவதாக குற்றம் சாட்டின. தற்பொழுதுள்ள சூழலில் காஷ்மீரை பாக்கிஸ்தானுடன் இணைப்பது தான் முக்கியமானதே தவிர இத்தகைய போக்குவரத்து அல்ல என்று அந்த அமைப்புகள் நினைத்தன. அதனால் இந்த போக்குவரத்தை எதிர்த்தன.

ஆனால் சராசரி காஷ்மீர் மக்கள் இந்த பேருந்து போக்குவரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இது அவர்களின் நீண்ட நாள் கனவு. அவர்களுக்கு இந்த பிரச்சனையின் அரசியல் முக்கியமானதாக தெரியவில்லை.

சரி.. காஷ்மீர் பிரச்சனையின் தீர்வுக்கு இந்த பேருந்து போக்குவரத்து எந்தளவுக்கு பங்காற்றும் ?

உண்மையில் காஷ்மீர் பிரச்சனைக்கு இந்த பேருந்து போக்குவரத்து எந்த வகையிலும் தீர்வாகாது. காஷ்மீர் மக்களின் 58 ஆண்டு கால பிரச்சனைக்கு இது ஒரு இடைக்கால நிவாரணம் தான்.

ஆனால் இரு காஷ்மீரிடையே இருக்கும் எல்லைகள் திறக்கப்படும். 1947க்கு முன்பாக எவ்வாறு இரு காஷ்மீரிடையே வணிக, கலாச்சார தொடர்புகள் இருந்ததோ அதே தொடர்பு உருவாக்கப்படும். Soft Borders எனப்படும் எளிதாக கடக்க கூடிய எல்லைகளுடன் இரு காஷ்மீரும், காஷ்மீர் மக்களும் இணைக்கப்படுவர்.

ஆனால் இந்த இணைப்பு எவ்வளவு நாட்கள் சாத்தியப்படும் ? திடீர் என்று இழுத்து மூடப்படக்கூடிய வாய்ப்புகள் இல்லாமலா போகும் ?

அப்படியெனில் என்ன தீர்வு உள்ளது இந்த பிரச்சனைக்கு ?

அடுத்தப் பதிவில்...

0 மறுமொழிகள்: