தேர்தலும், தமிழ் ஈழ அங்கீகாரமும்

விடுதலைப் புலிகளின் புண்ணியத்தால் சிங்கள தேசியவாதத்தை தேர்தலில் முன்னிறுத்திய மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருக்கிறார். இந்தச் சொற்றொடரை எழுதும் பொழுதே எனக்கு ஆச்சரியம் தான். விடுதலைப் புலிகள் ஏன் ஒரு சிங்கள இனவாத தலைவரை வெற்றி பெற வைக்க நினைக்கிறார்கள் ?

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியை அறிவித்த பல செய்தி நிறுவனங்களின் தலைப்பு செய்திகளைப் பார்த்தால் விடுதலைப் புலிகள் ஏன் இதனைச் செய்தார்கள் என்பது தெளிவாகும். Hardliner wins Sri Lanka election என்று BBC கூறுகிறது. CNN, சமாதானத்தை முன்னிறுத்தக் கூடிய ரனில் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவிக்கிறது. Economist மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி சமாதானத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறது.



தற்பொழுது உலக நாடுகளின் மத்தியில் சமாதானத்திற்கு வேட்டு வைக்க கூடிய வில்லனாக மஹிந்த ராஜபக்ஷ தெரிகிறார். இதைத் தான் புலிகள் எதிர்பார்த்தனர். ஹிந்து தன் தலையங்கத்தில் கூறியிருப்பது போல சிங்கள இனவாதத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்துவது தான் விடுதலைப் புலிகளின் நோக்கம். இந்த நோக்கத்தில் புலிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர்

இந்த தேர்தலில் இருவருக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. ஒன்று சிங்கள இனவாத முழக்கத்திற்கு. மற்றொரு வெற்றி புலிகளுக்கு. தமிழர்களின் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு மூலம் தங்கள் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பதை இலங்கையின் தெற்க்கில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தி இருக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் நிலை பரிதாபமாகத் தான் தெரிகிறது. அவர் வெற்றி பெற்ற நேரத்தில் இலங்கையின் பங்குச்சந்தை சுமார் 7% வீழ்ச்சி அடைந்தது. இலங்கையில் வலது சாரி பொருளாதார சீர்திருத்தத்தை முன்னிறுத்தி தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் ரனில். அவரது தோல்வி இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தும் என்று அங்கு முதலீடு செய்ய முயலும் நிறுவனங்கள் நினைக்கின்றன. அது தவிர ராஜபக்ஷவின் தீவிர இடது சாரி நிலைப்பாடு, அவர் அணி சேர்ந்துள்ள ஜே.வி.பி யின் மார்க்ஸ்ட நிலைப்பாடு போன்றவை இலங்கையின் பொருளாதாரத்தையும் அங்கு இனி வர இருக்கும் முதலீடுகளையும் குறைக்கும். ஏற்கனவே இலங்கையின் பொருளாதார நிலை தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறது. கோட்டா முறை நீக்கப்பட்ட பிறகு இலங்கையின் ஜவுளித் துறை சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் ஜவுளி ஏற்றுமதியில் ஈடுகொடுக்க முடியாமால் திணறிக் கொண்டிருக்கிறது.

புலிகளைப் பொறுத்தவரை தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பலக் கட்ட திட்டத்தில் முதல் கட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். கடந்த தேர்தல்களில் சந்திரிகா, ரனில் போன்றோர் சமாதானத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று விட்டு உலக நாடுகளின் மத்தியில் தாங்கள் சமானத்தை அதிகம் விரும்புவதாகவும், விடுதலைப் புலிகள் மட்டுமே சமாதானத்தை எதிர்ப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர். தென்னிலங்கையில் இருக்கும் தீவிர சிங்கள, புத்த இனவாதம் அதிகம் வெளிக்கொணரப்படவில்லை. ஜே.வி.பி, புத்த பிக்குகள் போன்ற சில குழுக்கள் மட்டுமே சிங்கள இனவாத அமைப்புகளாக வெளிஉலகுக்கு தெரிந்தது. ஆனால் தற்பொழுது இலங்கையின் ஜனாதிபதியை சிங்கள தேசியவாத தலைவராக விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அது மட்டுமில்லாமல் இலங்கையின் தேர்தல் முடிவுகளில் தெரியும் ஒரு Polarized சமுதாயமும், இத்தகைய சமுதாயத்தில் சமாதானமோ, தங்களுக்கான உரிமையோ சரியாக கிடைக்காது என்று கூறி ஏற்கனவே அவர்கள் அமைத்து விட்ட தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகள் மத்தியில் அங்கீகாரம் கோருவது தான் விடுதலைப் புலிகளின் பல கட்ட திட்டங்களின் இறுதி நோக்கமாக தெரிகிறது. இதனை நோக்கியே அடுத்து வரும் நாட்கள் இருக்கும். சமாதானப் பேச்சு வார்த்தை என்பது தற்போதைய இலங்கை சூழலில் நடக்கும் என்று தோன்றவில்லை.

TamilNet இணையத்தளத்தில் இருக்கும் இரு செய்திகள் என்னை மிகவும் கவர்ந்தன.

ஒன்று, தமிழ் ஈழப் பகுதியில் நுழைந்த இலங்கையின் காவல்துறையைச் சேர்ந்த மூன்று போலீசாருக்கு "தமிழ் ஈழ நீதி மன்றம்" ஜாமீன் வழங்க மறுத்துள்ள செய்தி. இந்த வழக்கு "தமிழ் ஈழ சட்டதிட்டங்களின்" கீழ் நடைபெறுவதாக TamilNet தெரிவிக்கிறது. இது ஏதோ பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைதாகும் செய்தி போல உள்ளது. தங்களின் எல்லையை புலிகள் அதிகம் கண்காணிப்பதாக TIME இதழும் கூறுகிறது. இலங்கை ஏற்கனவே இரண்டு துண்டுகளாக உள்ளதை இது உறுதிப்படுத்துகிறது.

மற்றொரு செய்தி "தமிழ் ஈழ தேசிய கீதத்தை" இயற்றுமாறு தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இம்மாதம் வர இருக்கும் மாவீரர் நாளில் இந்த கீதம், தமிழ் ஈழ தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ் ஈழ தேசியக் கொடி, தேசிய மலர் போன்றவற்றை புலிகள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்திகள் கடந்த காலங்களில் அதிகமாக வெளிஉலகுக்கு தெரியவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக புலிகளின் தமிழ் ஈழ தேசிய உள்கட்டமைப்பு ஊடகங்கள் மூலமாக அதிகம் பேசப்படுகிறது. இலங்கையின் தேர்தல் பற்றி எழுதியுள்ள TIME இதழ் ராஜபக்ஷ கூறும் "ஒரே நாடு" என்ற பேச்சு புலிகள் ஏற்கனவே அமைத்து விட்ட ஒரு தனி தேசத்தை மறைக்கும் நோக்கில் பேசப்படும் பேச்சாக தெரிவிக்கிறது.

அதிக அளவில் கண்காணிக்கப்படும் எல்லைகள், நீதிமன்றங்கள், சிவில் நிர்வாக மையங்கள், காவல்துறை, தேசியக் கொடி, தேசிய கீதம் போன்றவற்றின் மூலம் புலிகள் ஏற்கனவே ஒரு தனி தேசத்தை உருவாக்கி விட்டதாக TIME இதழ் தெரிவிக்கிறது

புலிகள் தற்பொழுது கோருவதெல்லாம் தமிழ் ஈழத்திற்கான உலக நாடுகளின் அங்கீகாரம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின் முதல் படி தான் இந்த தேர்தல் புறக்கணிப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு உதவியதன் முக்கிய நோக்கம்.

தமிழ்ச்செல்வன் TIME இதழுக்கு அளித்த பேட்டியிலும் அதனை உறுதிப்படுத்துகிறார்

TIME: It's plain if you look around L.T.T.E. territory that you have, in fact, built most of the facets of a separate state. You have borders, an army, police, courts, a civil administration, a flag. I even hear you're writing a national anthem. Do you think the debate in Colombo regarding Tamil separatism is historical—that they're arguing about something that's actually already happened?

T: It is historic. Colombo is behind on their history. What the Tamil people have established has all the hallmarks of a separate state. But this is nothing new. There was a distinct Tamil nation prior to the 16Th century. There was a Tamil nation here, with its own sovereignty and a rich heritage and culture. The people lost it, and now they are taking it back. About 60-70% of our homeland is liberated and nobody can prevent this process going further. This is reality. What Colombo says about a unitary nation is imagination. If Colombo refuses to accept this reality, Colombo has to pay for it one day. And the cost will be terribly high and the damage irreparable for them.

புலிகளின் தனி தேசத்தை உலக நாடுகள் தற்பொழுது நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு அங்கீகாரம் தருவார்களா ?
அது புலிகள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே உள்ளது.

லஷ்மன் கதிர்மாரின் படுகொலைக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் புலிகளின் இந்த நோக்கத்திற்கு தடை போடுவதாகவே அமைந்துள்ளது.

சிங்கள தேசியவாதத்தை வெளிப்படுத்தியும், சமாதானத்தை அதிகம் விரும்பும் குழுவாக தங்களை வெளிப்படுத்துவதும் தான் புலிகளுக்கு தற்பொழுது இருக்கும் சவால். அதனை நோக்கி தான் இரு குழுக்களும் நகரப் போகின்றன.

இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தான் இப்பொழுது உள்ள கேள்வி