WALMART - என்ன பிரச்சனை ?

சில்லறை வியபாரத்தில் (Retail) அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. இடதுசாரிகளின் முதல் சிறு வியபாரிகள் வரை பலரும் முன்வைத்த பலமான எதிர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.
இந்தியாவிற்கு வால்மார்ட் வருவதால் அப்படி என்ன தான் பிரச்சனை இருக்கிறது ?
இந்தியாவின் சில்லறை வியபாரம் முறைப்படுத்தப் படாத வர்த்தகம். சிறு வியபாரிகள் முதல் அவர்களுக்கு பொருள்களை தரும் சப்ளையர்கள், பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் என பலர் இருந்தாலும் இது முறைப்படுத்தப்படாத, காலப்போக்கில் கிளை விட்டு வளர்ந்த ஒரு மிகப் பெரிய Network.
இந்த Networkல் யார் வேண்டுமானாலும் நுழைந்து அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள முடியும். நானும் கூட இந்த Networkல் இருந்து வந்தவன் தான். என் அப்பாவுக்கு நெய்வேலியில் மளிகை கடை உண்டு. ஓய்வு நேரங்களில் நானும் கடையை பராமரித்திருக்கிறேன். இதில் இருக்கும் பல பிரச்சனைகள் புரியும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பல மாறுதல்களும் எனக்கு தெரியும்.
முன்பெல்லாம் சோடா, கலர் போன்றவை கடைகளில் அதிகளவில் விற்கும். எங்கள் கடைக்கு விற்பனை செய்யும் சோடா சப்ளையருக்கு கோடை காலங்களில் நல்ல வியபாரம் நடக்கும். எங்கள் கடையைப் போலவே நெய்வேலியில் இருக்கும் பலக் கடைகளுக்கும் அவர் தான் விற்பனையாளர். நல்ல முறையில் சென்று கொண்டிருந்த அவர் வியபாரம் அந்நிய குளிர் பான நிறுவனங்கள் இந்தியாவெங்கும் பரவிய பொழுது நசிந்துப் போனது.
அன்றைக்கு கோலி சோடாவை வைத்துக் கொண்டு இந்த கோலி குண்டு வெளியில் வருமா, வராதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நான், இன்றைக்கு அதனை ஏதாவது கண்காட்சியில் தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். கிராமங்களில் கூட லெகர் சோடாக்கள் கிளை பரப்பி விட்டன. கோலி சோடா/குண்டு சோடா காணாமல் போய் விட்டது
அவ்வாறே ஊறுகாய் வியபாரம். மட்டைகளில் வைக்கப்பட்டு குடிசை தொழில்களாக செய்யப்பட்டு விற்கப்பட்ட ஊறுகாய்கள், "ருசி" ஊறுகாய் பாட்டில்களாக மாறிய பொழுது அதனைச் செய்து கொண்டிருந்தவர்களின் தொழில் நசிந்தது. இது போன்ற பல வியபாரங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நசிந்து போய்ப் இருக்கிறது.
இப்பொழுது மொத்த மளிகைக் கடைகளுக்கும் வேட்டு வைக்க கூடிய வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்க காத்திருக்கின்றன.

மளிகைக் கடைகளுக்கு வியபாரம் பாதிப்படையும் பொழுது அதனை நம்பி இருக்கிற மளிகைக் கடை வியபாரிகளில் இருந்து, சப்ளையர்கள், அவர்களுக்கு பொருள் வழங்கும் விவசாயிகள் வரை பாதிப்படைகின்றனர்.
பெரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அவர்களே கொள்முதல் செய்து கொள்வார்கள். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக - Whole Sale ஆக பொருள்களை வாங்குவதால் விவசாயிகளுக்கும் குறைவாகத் தான் கொடுப்பார்கள். ஆனால் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். பொருள் விளையும் இடத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்லப்படும் பழைய முறைகள் மாறுதல் அடையும். Food processing போன்ற துறைகள் வளர்ச்சியடையும் வாய்ப்புகள் உள்ளன.
விவசாயிகளிடம் இருந்து பெரிய நிறுவனங்களே கொள்முதல் செய்வதால் சப்ளையர்களுக்கு வேலை இருக்காது. பொருள்களை பெற்று TVS 50ல் பலக் கடைகளுக்கும் சப்ளை செய்யும் விற்பனையாளர்கள் வேலை இழப்பார்கள்.
பலர் தங்களுக்கு ஒரு மாற்று வருமானமாக பெட்டிக்கடைகளையோ, சிறு வியபாரத்தையோ செய்து வருகின்றனர். வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் வந்தால் இவ்வாறு செய்ய முடியாது. இது இந்தியாவில் பெரிய பாதிப்புகளையும், சமுதாய மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்று இடதுசாரிக்கட்சிகள் கூக்குரலிடுகின்றன.
இது முழுமையான உண்மை என்றோ, அடுத்த சில வருடங்களில் நடந்து விடும் என்றோ நிச்சயமாக கூறமுடியாது. இந்தியா போன்ற பெரிய நாட்டில், வருமானத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் நாட்டில், இத்தகைய மாற்றங்கள் வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் இது குறித்த ஒரு அச்சம் நிலவத் தான் செய்கிறது.
மாற்றங்கள் என்பது இன்றியமையாதது. சில்லறை வியபாரத் தொழில் இந்தியாவில் பல காலமாக ஒரே நிலையிலேயே இருந்து வருகின்றது. இது நிச்சயமாக ஒரு மாற்றத்தை எதிர்கொள்ள தற்பொழுது தயாராகி வருகிறது என்று சொல்லலாம்.

வால்மார்ட்டை அனுமதிக்க மாட்டோம், அதனால் சிறு வியபாரிகள் பாதிப்படைவார்கள் என்று கூறும் இடதுசாரிகள், டாட்டாவோ, ரிலையன்ஸோ இவ்வாறு ஆரம்பிக்கும் பொழுது பிரச்சனை வராது என்று நினைக்கிறார்களா ?
டாட்டா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வால்மார்ட் போன்ற அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என்று கருதுகிறார்களா ?
வால்மார்ட் இந்தியாவில் நுழைவதில் உள்ள சிக்கல் என்ன ?
இது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்