![](http://photos1.blogger.com/blogger/7063/294/320/walmart-logo.gif)
சில்லறை வியபாரத்தில் (Retail) அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. இடதுசாரிகளின் முதல் சிறு வியபாரிகள் வரை பலரும் முன்வைத்த பலமான எதிர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.
இந்தியாவிற்கு வால்மார்ட் வருவதால் அப்படி என்ன தான் பிரச்சனை இருக்கிறது ?
இந்தியாவின் சில்லறை வியபாரம் முறைப்படுத்தப் படாத வர்த்தகம். சிறு வியபாரிகள் முதல் அவர்களுக்கு பொருள்களை தரும் சப்ளையர்கள், பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் என பலர் இருந்தாலும் இது முறைப்படுத்தப்படாத, காலப்போக்கில் கிளை விட்டு வளர்ந்த ஒரு மிகப் பெரிய Network.
இந்த Networkல் யார் வேண்டுமானாலும் நுழைந்து அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள முடியும். நானும் கூட இந்த Networkல் இருந்து வந்தவன் தான். என் அப்பாவுக்கு நெய்வேலியில் மளிகை கடை உண்டு. ஓய்வு நேரங்களில் நானும் கடையை பராமரித்திருக்கிறேன். இதில் இருக்கும் பல பிரச்சனைகள் புரியும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பல மாறுதல்களும் எனக்கு தெரியும்.
முன்பெல்லாம் சோடா, கலர் போன்றவை கடைகளில் அதிகளவில் விற்கும். எங்கள் கடைக்கு விற்பனை செய்யும் சோடா சப்ளையருக்கு கோடை காலங்களில் நல்ல வியபாரம் நடக்கும். எங்கள் கடையைப் போலவே நெய்வேலியில் இருக்கும் பலக் கடைகளுக்கும் அவர் தான் விற்பனையாளர். நல்ல முறையில் சென்று கொண்டிருந்த அவர் வியபாரம் அந்நிய குளிர் பான நிறுவனங்கள் இந்தியாவெங்கும் பரவிய பொழுது நசிந்துப் போனது.
அன்றைக்கு கோலி சோடாவை வைத்துக் கொண்டு இந்த கோலி குண்டு வெளியில் வருமா, வராதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நான், இன்றைக்கு அதனை ஏதாவது கண்காட்சியில் தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். கிராமங்களில் கூட லெகர் சோடாக்கள் கிளை பரப்பி விட்டன. கோலி சோடா/குண்டு சோடா காணாமல் போய் விட்டது
அவ்வாறே ஊறுகாய் வியபாரம். மட்டைகளில் வைக்கப்பட்டு குடிசை தொழில்களாக செய்யப்பட்டு விற்கப்பட்ட ஊறுகாய்கள், "ருசி" ஊறுகாய் பாட்டில்களாக மாறிய பொழுது அதனைச் செய்து கொண்டிருந்தவர்களின் தொழில் நசிந்தது. இது போன்ற பல வியபாரங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நசிந்து போய்ப் இருக்கிறது.
இப்பொழுது மொத்த மளிகைக் கடைகளுக்கும் வேட்டு வைக்க கூடிய வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்க காத்திருக்கின்றன.
![](http://photos1.blogger.com/blogger/7063/294/320/nutsnspices1.jpg)
மளிகைக் கடைகளுக்கு வியபாரம் பாதிப்படையும் பொழுது அதனை நம்பி இருக்கிற மளிகைக் கடை வியபாரிகளில் இருந்து, சப்ளையர்கள், அவர்களுக்கு பொருள் வழங்கும் விவசாயிகள் வரை பாதிப்படைகின்றனர்.
பெரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அவர்களே கொள்முதல் செய்து கொள்வார்கள். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக - Whole Sale ஆக பொருள்களை வாங்குவதால் விவசாயிகளுக்கும் குறைவாகத் தான் கொடுப்பார்கள். ஆனால் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். பொருள் விளையும் இடத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்லப்படும் பழைய முறைகள் மாறுதல் அடையும். Food processing போன்ற துறைகள் வளர்ச்சியடையும் வாய்ப்புகள் உள்ளன.
விவசாயிகளிடம் இருந்து பெரிய நிறுவனங்களே கொள்முதல் செய்வதால் சப்ளையர்களுக்கு வேலை இருக்காது. பொருள்களை பெற்று TVS 50ல் பலக் கடைகளுக்கும் சப்ளை செய்யும் விற்பனையாளர்கள் வேலை இழப்பார்கள்.
பலர் தங்களுக்கு ஒரு மாற்று வருமானமாக பெட்டிக்கடைகளையோ, சிறு வியபாரத்தையோ செய்து வருகின்றனர். வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் வந்தால் இவ்வாறு செய்ய முடியாது. இது இந்தியாவில் பெரிய பாதிப்புகளையும், சமுதாய மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்று இடதுசாரிக்கட்சிகள் கூக்குரலிடுகின்றன.
இது முழுமையான உண்மை என்றோ, அடுத்த சில வருடங்களில் நடந்து விடும் என்றோ நிச்சயமாக கூறமுடியாது. இந்தியா போன்ற பெரிய நாட்டில், வருமானத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் நாட்டில், இத்தகைய மாற்றங்கள் வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் இது குறித்த ஒரு அச்சம் நிலவத் தான் செய்கிறது.
மாற்றங்கள் என்பது இன்றியமையாதது. சில்லறை வியபாரத் தொழில் இந்தியாவில் பல காலமாக ஒரே நிலையிலேயே இருந்து வருகின்றது. இது நிச்சயமாக ஒரு மாற்றத்தை எதிர்கொள்ள தற்பொழுது தயாராகி வருகிறது என்று சொல்லலாம்.
![](http://photos1.blogger.com/blogger/7063/294/320/spencer_plaza.jpg)
வால்மார்ட்டை அனுமதிக்க மாட்டோம், அதனால் சிறு வியபாரிகள் பாதிப்படைவார்கள் என்று கூறும் இடதுசாரிகள், டாட்டாவோ, ரிலையன்ஸோ இவ்வாறு ஆரம்பிக்கும் பொழுது பிரச்சனை வராது என்று நினைக்கிறார்களா ?
டாட்டா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வால்மார்ட் போன்ற அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என்று கருதுகிறார்களா ?
வால்மார்ட் இந்தியாவில் நுழைவதில் உள்ள சிக்கல் என்ன ?
இது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்
13 மறுமொழிகள்:
"WALMART - என்ன பிரச்சனை ?"
9:31 PM, November 24, 2005என்ற தலைப்பைப் பார்த்தவுடன், வால்மார்ட்டுக்கு என்ன பிரச்சனை என்று நினைத்தேன்.
நீங்கள் கேட்டிருப்பது சரிதான். வால்மார்ட் வந்தால் இங்குள்ள சில்லைரை வியாபாரிகள், பெட்டிக்கடைகள் நேரடியாகப் பாதிக்கப்போவதில்லை. அவர்களை ஏற்கனவே சுபிக்ஷா போன்றவர்கள் ஒரு கைபார்த்து இப்போது டாட்டா, ரிலையன்சும் தம் பங்குக்கு இறங்குகிறது. இதனால் வால்மார்ட் வந்தால் அது டாடா, ரிலையன்ஸ் போன்று பெரிய அளவில் இறங்குபவர்களை வேண்டுமானால் பாதிக்கும். அதுபோக வால்மார்ட் வந்தால் மூலைக்குமூலையா கடை பரப்பப் போகிறார்கள் வேண்டுமானால் டில்லி, பம்பாய், சென்னை போன்ற பெருநகரங்களில்தான், பெரும்பாலும் இது நெய்வேலி பொட்டிக்கடையைப் பாதிக்காதுதானே!?
சரி அது வரதனால என்ன பயன் சொல்லுங்கோ....
sasi, excellent, as usual :-)
10:21 PM, November 24, 2005சில்லறை விற்பனையில், அன்னிய முதலீட்டை, ஒரு சில கட்டுப்பாடுகள் வைத்து, உள்ளே விடலாம். இது மளிகைக் கடை அண்ணாச்சிகளின் தலையில் கையை வைக்காது என்று நினைக்கிறேன். நம்முடைய 'வாங்கும் பழக்கம்', பிற நாட்டினருடன் ஒப்பிடும் போது, சற்று வித்தியாசமானது. உலகமெங்கும் credit cards தாக்கம் அதிகமாக இருக்கும் போது, நம் ஊரில் டெபிட் அட்டை தான் பாப்புலர் :-). ஒரு சாம்பிளுக்கு, சென்னையை எடுத்துக் கொள்கிறேன்.ஸ்பென்செர்ஸ் ஆக்கிரமித்துக் கொண்ட food world தொடக்கம், சுபிக்ஷா, விதான், போன்ற நடுத்தர குடும்பங்களுக்கான சிறப்பங்காடிகளின் எண்ணிக்கை, அந்த அந்த இடங்களில் இருக்கிற மளிகைக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடவில்லை. தொட்டு உணர்ந்து, பார்த்து வாங்கும் பொருட்களுக்கு ரீடெயில் மால்கள், ளையும், அரிசி உப்பு புளி மிளகாய் போன்ற commodities க்கு, நம்பகமான மளிகைக்கடைக்காரர் என்பதாகத்தான் இருக்கிறது. personalised service, மாசந்திர கடன் போன்றவை யும் ஒரு காரணம். 'எட்டாம் நம்பர் வீட்டம்மாவுக்கு மாச ஆரம்பத்திலே, பொன்னி 20 கிலோ,' குறுக்கு தெரு அய்யரூட்டம்மாவுக்கு வீட்டிலே நாளைக்கு திதி, அதனால நைட்டுக்குள்ளே சரக்கு போவணும்.." என்ற அளவுக்கான customization மெகா மால்களில் கிடைப்பது கஷ்டம்.
ஒரு காலத்தில் ரிச்சி தெருவில் ரேடியோ, டூ இன் ஒன் சமாசாரங்கள் தான் கிடைக்கும். காலப் போக்கில், அவை கணிணிக் கடைகளாக மாறிவிட்டன.. நாளைக்கு எலக்ட்ரானிக்ஸில் புதிய வர்த்தகம் வந்தால், அதற்கேற்ப, ரிச்சி தெரு தன்னை மாற்றிக் கொள்ளும்.
பன்னாட்டு ரீடெயில் பிராண்ட்கள் வந்தாலும், இங்கே இருப்பவர்கள், அதற்கு ஈடு கொடுக்கிறாற் போல தங்களை மாற்றிக் கொள்வார்கள். நம்ம மளிகைக் கடை அண்ணாச்சிகளை, அத்தனை சுலபமாக இடம் பெயர்த்து விடமுடியாது :-)
பயம் என்பது 'என்ன நடக்குமோ' என்பதைப் பற்றியது. எதிர்காலத்தை அறுதியிட்டுச் சொல்லமுடியாது.
10:41 PM, November 24, 2005இன்று ஃபுட்வோர்ல்ட் லாபத்தில் இயங்கவில்லை. இத்தனை நாள் தொழிலில் இருந்தும்...
ஆனால் பெட்டிக்கடைகள் எல்லாம் லாபத்தில்தான் இயங்க வேண்டும். இல்லாவிட்டால் இழுத்து மூடவேண்டும், எனெனில் அவர்களிடம் மூலதனம் இல்லை.
ஆனாலும் எனக்கு ஃபுட்வோர்ல்ட் சென்று பொருள் வாங்கத்தான் வசதியாக இருக்கிறது.
நாளடைவில் அதிக மூலதனத்துடன், அதிக அனுபவத்துடன் பலசரக்கு வியாபாரிகள் உள்ளே நுழையும்போது பெட்டிக்கடைகள் பாதிக்கத்தான் படும்.
பாதிக்குப் பாதியாவது குறையும். பெருநகரங்களிலும் சிறு நகரங்களிலும் நிச்சயம் இது நடக்கும். இது உள்நாட்டு முதலீடோ, அந்நிய முதலீடோ நடந்துதான் தீரும். இதற்கு ஏற்ப பலரும் முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொள்வது நல்லது.
Sasi, Excellent. Pl. cover the impact of WALMART imposed by other countries also. Keep it up
11:18 PM, November 24, 2005எனக்கும் வால்மார்ட் வரவினால் சில்லறை வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. வேண்டுமானால் அவர்களின் எண்ணிக்கை குறையலாம். portfolio மாறலாம். சென்னை சில்க்ஸ் வந்தாலும் போத்திஸ் வந்தாலும் ஒவ்வொரு பாக்கத்திற்கும் ஒரு துணிக்கடை இருக்கத் தான் செய்கிறது. நான் ஸ்வீடன் போயிருந்தபோதும் பக்கத்து neighbourhood கடையில்தான் வாங்கினோம். விவசாயிகளுக்குத் தரமான விதைகள் மூலம் அதிக மகசூல;நிலையான வருமானம். மக்களுக்கு குறைந்தவிலையில் தரமான பொருட்கள். தளர்ச்சியற்ற பொருளாதாரம். எல்லோருக்கும் வெற்றியென்றே தோன்றுகிறது.
6:16 AM, November 25, 2005உங்கள் கருத்துக்கள் மற்றும் அலசலை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.
பன்னாட்டு மூலதனத்துக்கோ, நிறுவனங்களுக்கோ நான் கொள்கை அளவில் எதிர் நிலையில் இல்லை. ஆனால் ரீடெயில் விதயமே தனி. இதில் வெறும் வியாபாரம் மட்டுமல்ல, நாட்டின் உணவு உற்பத்தி, உணவுக்காப்பு, தேவைக்கேற்ப பகிர்ந்தளிப்பு என அனைத்தும் அடங்கும். நாட்டின் முழு உணவுப் பாதுகாப்பையும் பன்னாட்டு முதலாளியத்திற்கு கைவிட்டு விட்டு நாம் உட்கார்ந்திருப்பது என்பது கனவிலும் நினைக்க முடியாதது. நமது பால், கோழி பண்ணை அபிவிருத்தி முதலிவற்றையும், கிராம, தனிநபர் குடும்பங்களின் மீது அவற்றின் தாக்கத்தையும் கூர்ந்த்து கவனிக்க வேண்டும். Backward integration என்று சொல்லி முழு உணவு supply chain சங்கிலியையும் என்ன நம்பிக்கையில் பிற நாட்டு ஏஜன்ஸிகளுக்கு விடமுடியும்? அதுவும் தடையற்ற முதலாளித்துவம் பேசும் அமெரிக்கா,ஈயூ, ஜப்பான் போன்ற எந்தப் பகுதியும் இதற்கு முழு ஒப்புதல் தராதபோது. IT, Manufacturing, Agriculture and Trade are different beasts. We open up each one at our time of choosing and at our pace. நாட்டின் உள்கட்டுமானக்களை சரிவர (ஆய்வுக்கூடங்களிலிருந்து- பண்ணை- சந்தை வரை) நிறுவும்வரை .... கொஞ்சம் பொறுங்கள்.
12:39 PM, November 25, 2005அதற்கு முன்னால் விவசாயிகள் தாம் விரும்பும் பொருளை எந்தநாட்டுக்கு வேண்டுமானாலும் தடையின்றி ஏற்றுமதி செய்ய அரசு ஏன் அநுமதிக்கக்கூடாது ?. Java Code தான் நம் நாட்டில் ஏற்றுமதிக்கு தகுதியான ஒரே பொருள் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அருள்
சமீப காலத்தில் தொடங்கப்பட்டு, அதிகரித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் பெரும் சில்லரை வியாபார நிறுவனங்கள், உள்ளூர் மளிகை முதலான கடைகளை எந்த அளவிற்குப் பாதித்திருக்கின்றன என்றும் பார்க்கவேண்டும். இதுகுறித்து யாரேனும் அலசியுள்ளனரா என்று தெரியவில்லை.
5:39 PM, November 25, 2005தமிழ்சசி, இன்னொன்று. நீங்கள் எழுதும் கட்டுரைகள் முக்கியமானவை. இன்னொரு கோணத்தை பதிக்கவே என் பின்னூட்டம். விரிவாக எழுதுங்கள். அனைவரையும் பாதிக்கும், நிறைய விவாதிக்க வேண்டிய கருத்துகள் இவை.
10:52 PM, November 25, 2005அருள்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்
1:59 PM, November 28, 2005வழுவல; கால வகையினானே'
என்று கருதவும் அதற்கேற்ப மாறவும் நம்மால் எளிதாக இயலுவதில்லை. ஏன்...?
அன்னாச்சி! வால்மார்ட் வந்தால் சிறு வியாபாரிகளுக்கோ, மற்றவர்களுக்கோ பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறியுள்ளீர்கள். அத்துடன் வால்மார்ட் கடை வைப்பதை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள், அப்படியென்hல் இந்தியாவில் உள்ள ரிலையன்°, டாட்டா வைத்தால் எதிர்க்க மாட்டார்களா? என்று கேட்டுள்ளீர்கள்! வாதத்தில் வல்லவரோ நீர்!
4:59 AM, November 29, 2005ஒரு உதாரணத்துடன் ஆரம்பிப்போம்! நாம் மிகச்சரியா பராமரிக்கக்கூடிய “தோட்டங்களை” பார்த்திருப்போம் பார்ப்பற்கு மிக அழகாக இருக்கும். நேரத்தியாக இருக்கும். அதே சமயம் நீங்கள் காட்டிற்குச் சென்று பாருங்கள் இயற்கையை பார்த்து மலைக்கலாம். அங்கே ஒரு சீரமைப்பு இருக்காது செடிகளும், கொடிகளும், முட்களும், மரங்களும் அது, அது அதன் போக்கில் வளர்ந்திருக்கும்.
இதுபோலத்தான் எந்தவொரு நாட்டிலும், எந்த துறையிலும் யார்? யார் ஈடுபட வேண்டும் என்ற அளவு கோல் தேவை! உதாரணமாக நீங்களே கூறியுள்ளது போல் 90 சதவீதம் தண்ணீரைக் கொண்ட பெப்சியும் - கோக்கும் நுழைந்ததால் இந்திய குளிர்பான நிறுவனங்களும், லோக்கல் கோலி சோடா கம்பெனிகளும் காலியாகி விட்டன. இதனால் யாருக்கு நஷ்டம் நம்முடைய இந்திய மக்களுக்குத்தான். குளிர்பானம் தயாரிப்பது என்ன பெரிய தொழில்நுட்பமா? இதுபோலத்தான் இன்றைக்கு அந்நிய நிறுவனங்கள் சிப்° தயாரிப்பது முதல் சில்லரை வியாபாரம் வரை வியாபித்துவிட்டனர்...
உதாரணத்திற்கு சரவணா °டோரை எடுத்துக் கொள்வோம். டி. நகரின் ஏகபோகம் அதுதான். இதனால் சிறுகடை வியாபாரிகள் பாடு திண்டாட்டம்தான். நமக்கு தெரியாத தொழில்நுட்பத்தை கொண்டு தொழில் ஆரம்பித்தால் வரவேற்கலாம். அதை விட்டு விட்டு பொரி கடலைக்கு எல்லாம் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ தேவையில்லை.
மீண்டும் அடிமையாக வேண்டுமா? இந்தியா
கே. செல்வப்பெருமாள்
சில்லறை வர்த்தகம் குறித்து நானும் ஒரு பதிவு செய்துள்ளேன். உங்களின் இந்தப்பதிவும் சேரும் பொழுது என் கருத்துக்கு வலு சேரும் என நினைக்கின்றேன்.
9:07 AM, May 20, 2006சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிப்பவர்கள் நிச்சயம் அதற்கான விலை கொடுக்கவேண்டும்.
4:33 AM, December 01, 2011அது சிரியாதா? பெரியதா? என்பது அல்ல.
பிரச்சனை சிரியதாக ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு இந்திய கம்பனிக்கும் இந்த திட்டத்திற்கும் என்ன வேறுபாடு.
அப்போதும் கிழக்கு இந்திய கம்பனியை அதரிப்பவர்கள் சொன்னது மேற்கண்ட உங்கள் கருத்தைத்தான்.
நானும் எழுதியுள்ளேன்
9:34 PM, December 04, 2011சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு : வேண்டுமா, வேண்டாமா : பகுதி 1
Post a Comment