புதிய யுத்தம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் பேச்சு இலங்கைப் பிரச்சனையில் மற்றுமொரு புதிய யுத்தத்தை தொடங்கியிருக்கிறது. அது தான் ராஜதந்திர யுத்தம். அடுத்து வரும் நாட்களில்/மாதங்களில் இந்த ராஜதந்திர யுத்தத்தை தான் இரு குழுக்களும் புரியப்போகின்றன. பிரபாகரனின் பேச்சு அதற்கு தான் அடித்தளமிட்டு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இம் முறை பிரபாகரனின் பேச்சு பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. தன்னிலை விளக்கம் தரும் உரையாகவும், இலங்கையின் யதார்த்த சூழலை வெளிப்படுத்துவதாகவும், மஹிந்த ராஜபக்ஷவை ஒரு பொறிக்குள் சிக்க வைப்பதாகவும் அவரது பேச்சு இருந்தது. ஆனால் பிரபாகரனின் பேச்சுக்கு எதிர்வினையாக ராஜபக்ஷ எதுவும் செய்யாமல் மிகுந்த கவனத்துடன் காய்களை நகர்த்துவதாகவே தோன்றியது.




கடந்த காலங்களில் சிங்கள அரசுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை ஒரு நிர்பந்தம் காரணமாகவே எழுந்ததாகவும், சிங்கள அரசு தமிழர்களின் உரிமைகளை எக் காலத்திலும் நிறைவேற்றப் போவதில்லை என்றும் பிரபாகரன் தெரிவித்தார். கடந்த காலங்களில் புலிகள் உண்மையிலேயே தமிழீழக் கோரிக்கையை கைவிடவில்லை, வெளிப்பூச்சாகத் தான் அதனைக் கூறுகிறார்கள் என்பதான ஒரு எண்ணம் இருந்தது. பிரபாகரன் அதனை உறுதிப்படுத்தும் அதே வேளையில் ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்பு பேசிய உரையை தனக்கு சாதகாமாக பயன்படுத்திக் கொண்டார். கூட்டாச்சி, புலிகளை தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ஏற்பது, சுனாமி நிவாரணப் பணிகளில் புலிகளுடன் இணைந்து செயல்படுவது போன்ற உலக நாடுகளால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களைக் கூட ராஜபக்ஷ மறுதளித்தது பிரபாகரனின் வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இருந்தது.

பொதுவாக பிரபாகரனின் பேச்சில் போர் பற்றிய தீவிரம் எதுவும் இருக்கவில்லை. மாறாக உலகநாடுகளிடம் தங்களுக்கான அங்கீகாரத்தை வேண்டுவதும், சிங்கள அரசு தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்பதை வெளிப்படுத்துவதும் தான் முக்கிய நோக்கமாக இருந்தது. பிரபாகரனின் பேச்சிற்கு முன்பாக இலங்கை ஒன்றுபட்ட ஒரே நாடு அல்ல என்பதை முன்னிறுத்தும் செயல்களை புலிகள் மேற்கொண்டிருந்தனர். பிரபாகரனின் பேச்சிலும் தாங்கள் ஏற்கனவே வடகிழக்கில் ஒரு தனி அரசாங்கத்தை நிறுவி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

சரி..தங்களுக்கான ஒரு அங்கீகாரத்தை தேடத் தான் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக பிரபாகரன் கூறினார். உண்மையிலேயே அவர்கள் எதிர்நோக்கிய அங்கீகாரம் உலகநாடுகள் மத்தியில் கிடைத்ததா ? இது வரை அவர்கள் அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளனரா ?

இல்லை என்பது தான் உண்மை.

இலங்கை அரசு கடந்த காலங்களில் சந்திரிகா, லஷ்மன் கதிர்காமர், ரனில் விக்ரமசிங்கே போன்றோர் மூலமாக நடத்திய ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோல்வியடைந்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் மூவரும் இலங்கை அரசுக்கு ஒரு Diplomatic முகத்தை கொடுத்தனர். குறிப்பாக லஷ்மன் கதிர்காமர் உலக நாடுகளிடம் இலங்கைக்கு நெருங்கிய நட்புறவை ஏற்படுத்தி அதன் மூலம் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வைத்தார்.

புலிகள் குறித்தான ஒரு அவநம்பிக்கையை மிக கவனமாக உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசு வளர்த்திருந்தது. புலிகள் கடந்த காலங்களில் செய்த அரசியல் படுகொலைகள் அரசின் நோக்கத்திற்கு உதவி புரிந்தது. லஷ்மன் கதிர்காமர் தவிர புலிகளுக்கு சலுகைகளை அதிகம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ரனில் கூட புலிகளுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டுவதில் வெற்றி கண்டிருந்தார். நார்வேயை மட்டுமே அனுசரணை செய்யும் நாடாக புலிகள் நினைத்தனர். ஆனால் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கி புலிகளை ஒரு பொறிக்குள் சிக்க வைக்க ரனில் முயன்றார். வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டால் அது தங்களுக்கு ஒரு முக்கியமான அங்கீகாரத்தை கொடுக்கும் என்று புலிகள் நினைத்தனர். ஆனால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவே புலிகள் அழைக்கப்படவில்லை. புலிகள் விலக்கப்பட்டது குறித்து ரனில் அதிகம் அக்கறை கொள்ளாமல் அடுத்த மாநாட்டை டோக்கியோவில் நடத்த தயாராகினார். சமாதான பேச்சு வார்த்தை என்ற பொறிக்குள் தங்களை ரனில் கொண்டுவர நினைப்பதை தாமதமாக உணர்ந்த புலிகள் அந்தப் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகினர்.

இலங்கை அரசு மேற்கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளை கடந்து, புலிகள் சில வெற்றிகளை பெற்றிருந்தனர்.

இலங்கைக்கு வருகின்ற பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்புவில் ஜனாநிதிபதியையும், பிரதமரையும் சந்தித்து விட்டு கிளிநொச்சி சென்று பிரபாகரனையும் தமிழ்ச்செல்வனையும் சந்திப்பது வழக்கமான ஒன்றானது. குறிப்பாக சுனாமிக்கு பின்பு புலிகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிடைத்தது. புலிகளின் பகுதியில் ஒரு தனி நாடு போன்ற அமைப்பு இருந்தது நிவாரணப் பணிகளில் புலிகளையும் சேர்த்து கொள்வது போன்றவற்றில் உதவியது. அது போல புலிகளின் கிழக்கு மாகாண தலைவர் கொளசல்யன் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலர் கோஃபி அன்னான் அதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அப்பொழுது புலிகளுக்கு ஐ.நா. அங்கீகாரம் தர முயலுவதாக இலங்கை அரசு, மற்றும் சிங்கள் தேசியவாதிகள் கோஃபி அன்னான் மீது குற்றம் சாட்டினார்.

ஆனால் இவை புலிகள் அங்கீகாரம் பெறுவதற்கு போதுமானதாக இருக்கவில்லை

கடந்த காலங்களில் உலகநாடுகளிடம் புலிகள் அங்கீகாரம் பெற முயன்ற பல முயற்சிகளை லஷ்மன் கதிர்காமர் தடுத்தார்.

ஆனால் கடந்த காலங்கள் போல் இல்லாமல் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் பெருத்த மாறுதல் இருக்கிறது.

இன்றைக்கு அரசியல் ரீதியாக ஒரு சமபலம் நிலவுகிறது. புலிகளை பார்க்கும் அதே கோணத்தில் போரினை விரும்பும், சிங்கள தீவிர தேசியவாத குழுவாகவே இலங்கை அரசும் தற்பொழுது பார்க்கப்படுகிறது - Hawkish. இலங்கைக்கு கடந்த காலங்களில் இருந்த ஒரு Diplomatic முகம் தற்பொழுது இல்லை. கடந்த காலங்களில் உலகநாடுகள் கவனிக்க மறந்த பல விஷயங்கள் தற்பொழுது கூர்ந்து கவனிக்கப்படும். கிழக்கு மாகாணங்களில் தங்கள் மீது நிழல் யுத்தத்தை இலங்கை அரசு தொடுத்திருப்பதாக புலிகள் குற்றம்சாட்டினர். வரும் நாட்களில் இது போன்ற விஷயங்களை உலகநாடுகள் கூர்ந்து கவனிக்கும். இந்தச் சூழ்நிலையை Exploit செய்து விடும் நோக்கத்தில் தான் பிரபாகரனின் பேச்சு இருந்தது.

அது போலவே நார்வேவை சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்க வேண்டும் என்பன போன்ற பேச்சுகள் ராஜபக்ஷவின் தேர்தல் முழுக்கமாக இருந்தது. வெற்றி பெற்ற பிறகு ராஜபக்ஷ நார்வே குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லையெனினும், அனுசரணை செய்யும் நாடுகளை பலப்படுத்துவது குறித்து ராஜபக்ஷ தெரிவித்து இருந்தார். இதன் மூலம் நார்வேக்கு இருக்கும் முக்கியத்துவத்தை குறைப்பது தான் ராஜபக்ஷவின் நோக்கம். நார்வே புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டாலும் நார்வேவை அனுசரணை செய்வதில் இருந்து தன்னிச்சையாக நீக்குவதையோ, தற்போதைய சூழ்நிலையில் நார்வே விலகுவதையோ இலங்கை விரும்பவில்லை.

புலிகளுக்கு ஆதரவான நாடாக நார்வேயை இலங்கை கருதுகிறது. நார்வே நாட்டினை அனுசரணையாளர் என்பதில் இருந்து நீக்கினால் இலங்கைக்கு அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக புலிகள் தமிழீழத்தை அறிவித்தால் அதனை அங்கீகரிக்க கூடிய நாடாக நார்வே இருக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இப் பிரச்சனைகளில் தன்னுடைய சார்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கி தனக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி விட்டு பிறகு நார்வேயின் முக்கியத்துவத்தையோ, நார்வே வை முழுமையாக நீக்குவதையோ மேற்கொள்ள இலங்கை நினைக்கிறது. ஆனால் இந்தியா இந்தப் பிரச்சனைகளில் நுழையுமா என்பது சந்தேகமே. அமெரிக்கா இந்தப் பிரச்சனைகளில் நுழையக்கூடிய வாய்ப்பு வரும் காலங்களில் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே உள்ளது. தற்போதைய இலங்கை அரசு தலைமையை நம்பி அமெரிக்கா இந்தப் பிரச்சனைகளில் நுழையக்கூடிய வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

தமிழர்களின் நிலையை ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடிய அமைப்பாக கருதப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் லஷ்மன் கதிர்காமரின் படுகொலைக்கு பிறகு எடுத்த நிலைப்பாடு புலிகளுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அமெரிக்கா, இந்தியா ஆதரவை விட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு புலிகளுக்கு முக்கியமானது. இதனை புலிகள் பெற்றாக வேண்டும்.

பிரபாகரனின் பேச்சுக்கு முன்பாக தமிழீழம் அறிவிக்கப்படும் என்பன போன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால் அவ்வாறு ஒரு அறிவிப்பு வெளியிடக்கூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை. உலகநாடுகள் அதற்கு ஆதரவு தராது. எனவே தான் பிரபாகரனின் பேச்சில் பெரும் பகுதி உலகநாடுகளை நோக்கியே அமைந்து இருந்தது. தங்களுடைய பொறுமை குறைந்து கொண்டிருக்கிறது என இறுதி எச்சரிக்கையை விடுத்து உலகநாடுகளை இப் பிரச்சனையில் அதிக கவனத்தை பெற வைக்க பிரபாகரன் முயலுகிறார்.

உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால் அவ்வாறு தனது நிலையை மாற்றிக் கொள்ள ஜே.வி.பி போன்ற அமைப்புகள் அவரை அனுமதிக்குமா என்பது அடுத்த கேள்வி. அவரை ஒரு Hawk என்றே உலகநாடுகள் தெரிந்து வைத்திருக்கின்றன. இதனை மாற்றியாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருக்கிறது.




இலங்கைப் பிரச்சனை தற்பொழுது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. ஆனால் பிரச்சனை மேலும் சிக்கலாகி இருக்கிறது. போரும் இல்லாமல், சமாதானமும் இல்லாமல் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் இந்த யுத்தத்தில் யார் வெற்றி பெற போகிறார்கள் ?