French Fries

பா.ராகவன் எழுதிய "பாக். ஒரு புதிரின் சரிதம்" என்ற புத்தகம் சமீபத்தில் படிக்க கிடைத்தது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இது குமுதத்தில் தொடராக வந்து கொண்டிருந்ததாக நினைக்கிறேன். அப்பொழுது மேம்போக்காக இதனை வாசித்து இருந்தாலும் காஷ்மீர் பிரச்சனை குறித்து படித்து அது குறித்து எனது எண்ணங்களை வளர்த்துக் கொண்ட பிறகு இப்பொழுது தான் இதனை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


கிழக்கு பதிப்பகம் இணையத்தளத்தில் "காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது" என்ற வரிகளை பார்த்து இந்தப் பத்தகம் குறித்த ஒரு எதிர்பார்ப்புடன் படிக்க தொடங்கினேன். படிக்க தொடங்கிய சில அத்தியாயங்களில் காஷ்மீர் குறித்த விஷயங்கள் சரியாக எழுதப்படவில்லை என்று தான் எனக்கு தோன்றியது. காஷ்மீர் பிரச்சனை மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட வித்தியாசமானது. இது இரு தேசங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்சனை இல்லை. காஷ்மீர் மக்களை இரு தேசங்களுக்கிடையே துண்டாக்கி மனித உறவுகளை கூறு போட்ட ஒரு பிரச்சனை. பா.ரா. இது குறித்து அலசி ஆராய்ந்து எழுதி இருக்கலாம் என்று தோன்றியது.

பா.ரா. இதனை எழுதும் பொழுது இருந்த சூழ்நிலையை விட இன்று இப் பிரச்சனை குறித்த இரு நாடுகளின் நிலையும் ஓரளவிற்கு மாறியிருக்கிறது (கவனிக்கவும், ஓரளவிற்கு மட்டுமே). காஷ்மீரின் எல்லைகளை திறந்து (Soft Borders) காஷ்மீர் மக்களிடையேயான உறவுகளை வளர்ப்பது இப்பொழுது முக்கியமாக பேசப்படுகிறது.

நான் காஷ்மீர் குறித்து எழுதிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய ஒரு நண்பர் இப் பிரச்சனை குறித்து தானும் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். இப் பிரச்சனை குறித்த ஒரு சரியான அறிமுகத்தை அவர் தமிழ் வாசகர்கள் முன் வைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

*************

பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் தன் வேலையை உதறி பங்குச்சந்தையில் முழுமையாக நுழைந்து விட்டான். பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்க அவன் செய்யும் டிரேடிங்கிலும் கொழுத்த லாபம். இதனை கேட்டதில் இருந்து நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் என் மனதில் தோன்றி விட்டது. ஆனால் சிரமப்பட்டு அதனை அடக்கிக் கொண்டேன். பங்குச்சந்தையின் பொருட்டு வேலையை உதறுவது சரியானது தானா என்று மனதில் ஒரு பட்டிமன்றத்தையே நடத்தி முடிவில் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம் சந்தையில் குவிந்து கொண்டே இருக்கிறது. உலகப் பொருளாதார நிலையும் அதற்குச் சாதகமாக இருக்கிறது. இந்தச் சாதகமான சூழ்நிலை இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்ககூடும். அதுவரை இந்தியாவில் இருப்பவர்கள் பங்குச்சந்தையில் புகுந்து விளையாடலாம்.

*************

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா இந்தியாவில் இருப்பதாக தமிழ்நெட் இணைத்தளம் தெரிவிக்கிறது. இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தி

http://www.hindustantimes.com/news/7598_1572346,000500020002.htm

இது உண்மையா என்று தெரியவில்லை. அவ்வாறு இருப்பின் இந்தியாவில் இருக்கும் இரண்டாவது புலிகள் எதிர்ப்பு தலைவர் இவர். ஏற்கனவே இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் எங்கோ வடஇந்தியாவில் இருப்பதாக ஊடகங்களில் படித்த நினைவு.

யார் வரதராஜ பெருமாள் என்கிறீர்களா ? அது சரி...

*************

அது என்ன French Fries ன்னு தலைப்பு ?

பயங்கர குளிர். முகம், காது, கை மற்றும் உடலெங்கும் கவசம் அணிந்தும் நடுங்க வைக்கும் குளிர். என்ன செய்வது ? ஓரளவுக்கு சுமாரான குளிரில் கொடைக்கானலிலும், ஊட்டியிலும் ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட மிளகாய் பஜ்ஜி, தேங்காய் சட்னி ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது. இங்கும் அது போல சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு முறை ஒரு இந்தியன் கடையில் பஜ்ஜி சாப்பிட்டு, அடுத்த முறை பஜ்ஜியை பார்த்தால் ஒரே ஓட்டம் தான்.

நேவார்க் (Newark) வரை சுரங்க ரெயிலில் வந்து பின் வீட்டிற்கு பேருந்து பிடிக்க காத்திருந்த சில நிமிடங்களில் மெக்டோனால்சில் சாப்பிட்ட French Fries தான் எனக்கு நம்மூர் பஜ்ஜியாக தெரிந்தது. நல்ல சூடான French Fries குளிருக்கு இதமாக இருந்தது. இங்கு கிடைக்கும் நம்மூர் பஜ்ஜியை விட French Fries 1000% times better.



அதில் மெய்மறந்து போய் இந்த கதம்பமான பதிவிற்கு French Fries என்று வைத்து விட்டேன்