சாப்பலின் Remote Control


இந்தியப் பாராளுமன்றம் கங்குலி நீக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்போகிறது. இது நாட்டிற்கு அவசியமான, முக்கியமான பிரச்சனை போல இடதுசாரி மற்றும் மேற்குவங்காள தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். கங்குலி நீக்கப்பட்டது சாப்பல்-பவார் & Coவின் அரசியல் காரணமாகத் தான் என்பதிலும் கங்குலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதிலும் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் இது பாரளுமன்றம் விவாதிக்ககூடிய முக்கியமான பிரச்சனையா என்பது தான் கேள்வி.

இந்திய கிரிக்கெட்டின் அரசியலும் தேர்வுக் குழுவில் இருக்கும் தில்லுமுல்லுகளும் இன்று வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பாரளுமன்றமும் இந்தப் பிரச்சனையை விவாதிப்பது பிரச்சனையை மேலும் அரசியல் மயமாக்கி விடும்.

என்னைப் பொறுத்தவரை கங்குலியை நீக்கியது சரி அல்ல. அவரை மறுபடியும் அணியில் சேர்க்க வேண்டும்.



கங்குலியை ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கிய பொழுது அது சரியானது என்றே நினைத்தேன். அது போல கங்குலி டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது அது சரியான முடிவல்ல, கிரிக்கெட் அரசியல் தான் காரணம் என்று கருதினேன்.

ஆனால் இப்பொழுது கங்குலி நீக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் அரசியலின் உச்சகட்டமாகத் தான் தெரிகிறது.

தில்லி டெஸ்ட் போட்டியில் கங்குலியின் ஆட்டம் சிறப்பாகவே இருந்துள்ளது. நான் போட்டியை பார்க்கவில்லை. அர்ஜுனா ரணதுங்கா கங்குலி அடித்த சில கவர் டிரைவ்கள் தான் தில்லி டெஸ்ட் போட்டியில் தான் பார்த்த ஷாட்களில் சிறப்பான ஷாட்டாக இருந்ததாக தெரிவிக்கிறார். கங்குலி சிறிது காலம் தன்னுடைய பழைய ஆட்டத்திறன் இல்லாமல் இருந்தார். அதனை பெற முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தில்லி போட்டியில் ஓரளவுக்கு நன்றாக ஆடிய கங்குலி அடுத்த போட்டியில் சதம் அடித்தால் அவரது இடம் அணியில் உறுதியாகி விடும் என்று நினைத்து கங்குலியை சாப்பல்-கிரண் மோர் & Co நீக்கியிருக்கிறார்கள்.

சாப்பல் - கங்குலி சண்டையில் சாப்பல் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் முட்டாள்தனம் நிறைந்த அதிகப்பிரசங்கித்தனம் என்றே நான் நினைக்கிறேன். அணியின் கேப்டன் என்னும் பொழுது அவர் அணியில் இருந்தாக வேண்டும் என்பது தான் நியதி. கோச் கேப்டனுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் டீம் மீட்டிங்கில் கங்குலியை விலகிக் கொள்ளுமாறு கோச் கூறியது அதிகப்பிரசங்கித்தனம். சாப்பலுக்கு கேப்டனை விலகச் சொல்லும் அதிகாரம் கிடையாது. இது கேட்பனாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு செய்யப்பட்ட அவமரியாதை. கங்குலி கேப்டனாக இருப்பதிலோ, அணியில் இருப்பதிலோ பிரச்சனை என்றால் அதனை கிரிக்கெட் தேர்வாளர்களிடம் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு கேப்டனை நீ அணியில் இருந்து விலகிக் கொள் என்று சொல்வது எந்த வகையில் சரி என்பது எனக்கு தெரியவில்லை. அது போலவே கங்குலி அந்தப் பிரச்சனையை மீடியாக்களிடம் கொண்டு சென்றதும் சரியான காரியமல்ல.

நன்றாக விளையாடுபவர்கள் மட்டுமே அணியில் இருக்க வேண்டும் என்று கூறுவது மிகச் சரி. அப்படியானால் கங்குலி மட்டுமே தான் அணியில் சரியாக விளையாட வில்லையா ? இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அடித்த 90+ தவிர சச்சின் கடந்த இரு வருடங்களாக எந்தளவுக்கு விளையாடி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இலங்கைக்கு எதிராக அடித்த 90+க்குப் பிறகு தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் சச்சின் சரியாக விளையாடவில்லை. எனவே அவர் எதிர் வரும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு விடுவாரா ? கங்குலிக்கு ஒரு நியாயம், சச்சினுக்கு ஒரு நியாயம் ?

தன்னுடைய அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய கேப்டனுக்கு முழு அதிகாரம் உண்டு. கங்குலி கேப்டனாக இருந்த பொழுது அதைத் தான் செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புக்கே ஒரு புதிய முகத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் கங்குலி. ஆனால் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் திராவிடை சாப்பல் தன் ரிமோட் கண்ட்ரோலால் இயக்குவது போல தான் தோன்றுகிறது. சாப்பல் தான் இந்தியக் கிரிக்கெட்டின் தேர்வாளர், கோச், கேப்டன் எல்லாமும்.

சிறப்பாக விளையாடும் அனைவருக்கும் கங்குலி அணியில் இடமளிக்க தவறவில்லை. ஓய்வு பெற்று விடும் முடிவுக்கே சென்ற ஸ்ரீநாத்தை அணிக்கு கொண்டு வந்து அவரை கங்குலி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அணித் தேர்வில் இருந்த பல தில்லுமுல்லுகளை கங்குலி நீக்கி திறமையானவர்களை ஊக்குவித்தார். ஒரு கேப்டன் அப்படித் தான் இருக்க வேண்டும். ஆனால் திராவிட் கங்குலி விஷயத்தில் நடந்த கொண்டு முறை அவ்வாறாகத் தெரியவில்லை.

கங்குலி தில்லி போட்டியில் சிறப்பாக விளையாடினார், அடுத்த வரும் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடக்கூடும் என்றால் அவரை அணியில் தக்கவைத்துக் கொள்ளவே எந்த கேப்டனும், கோச்சும் விரும்பவேண்டும். அர்ஜுணா ரணதுங்க கூட கங்குலி தொடர்ந்து இந்திய அணியில் இருப்பது இந்தியாவிற்கு நல்லது என்றே கூறுகிறார். கங்குலி தன்னை அணியில் நிலைநிறுத்திக் கொள்ள சிறப்பாக விளையாடவேண்டும். தில்லி போட்டியில் கூட அதைத் தான் அவர் செய்ய முயன்றுள்ளார். அது இந்திய அணிக்கு நல்ல விஷயமும் கூட. ஆனால் கங்குலியை ஆடவிடாமல் நீக்க வேண்டும் என்பதில் தான் சாப்பலும் திராவிட்டும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதனால் கங்குலியை அடுத்த போட்டியில் ஆட விடாமல் நீக்கி இருக்கிறார்கள்.

கங்குலி அணியில் உள்ளவர்களை பிரிக்கிறார் என்பதில் எந்த லாஜிக்கும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு குழு என்று வரும் பொழுது அதில் பிரச்சனைகளும் வரத் தான் செய்யும். சிலரை மட்டுமே கொண்ட சாப்ட்வேர் டீமில் கூட எவ்வளவு பிரச்சனைகள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்திய கிரிக்கெட் அணியிலும் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தான் செய்யும். அது அணியில் உள்ளவர்களை கங்குலி பிரிக்கிறார் என்று பொருள் தருமா என்று தெரியவில்லை. கங்குலியை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாப்பல் பிதற்றுவதாகத் தான் தோன்றுகிறது. இப்பொழுது கூட இந்திய அணியில் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் ஒரே எண்ணத்தில் சாப்பலின் பின் இருக்கிறார்களா என்ன ?

இப்பொழுது கங்குலியை அணியில் கொண்டு வந்து ஒரு போட்டித் தொடருக்கு வாய்ப்பளித்து பின் அவரே ஓய்வு பெற்றுக் கொள்வது என்பதான ஏற்பாடு பேசப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஸ்டீவ் வாக்கிற்கு கொடுக்கப்பட்டது போல கங்குலிக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்படுமாம். இது ஒரு முட்டாள்தனமான காரியம். முதலில் ஸ்டீவ் வாக்கிற்கு செய்யப்பட்டதே பெரிய அவமதிப்பு. அதையே கங்குலிக்கும் செய்வது முட்டாள்தனம்.

கங்குலி நன்றாக விளையாடினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தே தீர வேண்டும். நன்றாக விளையாடா விட்டால் நீக்கி விடலாம். அதற்காக அவர் ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும், அரை சதம் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் - just too much