தேர்தல் நெருங்கி விட்டது. "உங்கள் கைத் தொட்டு, கால் தொட்டு, சிரம் தாழ்த்தி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்" என்று இது வரையில் மக்களை கண்டுகொள்ளாத வேட்பாளர்கள், மக்களை தேடித் தேடி வந்து மைக் வைத்து அலற வைக்கப் போகிறார்கள். பொங்கலுக்கு சுண்ணாம்பு பூசிய சுவர்களில் எல்லாம் தலைவர்களும் அவர்களின் கொடிகளும் சின்னங்களும் அலங்கரிக்கப் போகின்றன. தமிழகம் கலர்புள்ளாக, திருவிழாக் கோலத்தில் மாறி விடும்.
நான் இங்கு எழுதப் போவது அதைக் குறித்து அல்ல. தேர்தல் சமயம் என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் தமிழகத்தை பரபரப்பிலேயே வைத்திருக்கும் கட்சியைப் பற்றியது தான் இந்தப் பதிவு. The most colourful Party in Tamil Nadu - பாட்டாளி மக்கள் கட்சி. அதனுடைய தலைவர் முதற்கொண்டு, தொண்டர்கள் வரை கடந்த ஐந்தாண்டு காலமாக "பயங்கர பிசி"யாக இருந்து விட்டனர். இப்பொழுது உச்சக்கட்ட பிசியான சூழலில் இருக்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழகத்தில் பிசியாக, பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டுக் கொண்டே இருந்த ஒரே கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி தான். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது, ரஜினியை விமர்சித்தது, குஷ்பு விவகாரம், தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்று தமிழ் பத்திரிக்கைகளில் அதிகம் இடம் பெற்ற கட்சி பாமக வாகத் தான் இருக்க கூடும். அவர்களின் இந்தக் கூச்சலை மட்டுமே எழுதும் பத்திரிக்கைகள், அவர்கள் செயல்படுத்த முனைந்த "சில" நல்ல விஷயங்களை பற்றி எழுதுவதே இல்லை. வலைப்பதிவுகளிலும் அவ்வாறான சூழல் தான் உள்ளது. பாமக குறித்த விமர்சனத்தை பலர் எழுதி விட்டதால், பாமக மேற்க்கொண்ட சில நல்ல முயற்சிகளை கூறி விட்டு, அதன் பலம் இம் முறை தேர்தலில் எப்படி திமுகவிற்கு உதவக் கூடும் என்பது குறித்தான எனது பார்வையை இந்தப் பதிவில் எழுதப் போகிறேன்.
இது வரையில் தமிழகத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சி மூன்று பட்ஜெட்கள் தயாரித்து இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ? உண்மை தான்.
எனக்கும் கூட ஆச்சரியமாகத் தான் இருந்தது. நான் வட மாவட்டத்தைச் சேர்ந்தவன். அதுவும் பாமக வின் கோட்டை என்று சொல்லப்படும் பகுதிக்கு அருகில் இருப்பதாலும், பாமக பல முறை நடந்திய பல போராட்டங்களை அறிந்திருந்ததாலும், ஒரு முறை பாமக நடத்திய போராட்டம் காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொசு, சாக்கடை நாற்றம் இடையே ஒரு இரவை கழித்த அனுபவம் இருந்ததாலும், பாமகவை சாதிக் கட்சி, வன்முறைக் கட்சி என்று மட்டுமே நினைத்திருந்தேன். அத்தகைய கட்சி பட்ஜெட் தயாரித்தது தான் என்னுடைய ஆச்சரியத்திற்கு காரணம்.
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு மாற்று பட்ஜெட்டாக அதனை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த பட்ஜெட் குறித்த மேலோட்டமான செய்தியை ஒரு முறை இந்துவில் வாசித்தேன். தமிழ்ப் பத்திரிக்கைகளில் இது குறித்து எழுதப்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் பட்ஜெட்டில் என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருந்தார்கள், நிதிப் பிரச்சனை குறித்து என்ன மாற்று திட்டங்களை முன்வைத்தார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலும் பாமகவிற்கு என்று தனியாக இணைய தளம் இல்லாததால் இது குறித்த முழுமையான விவபரங்கள் தெரியவில்லை.
பாமகவின் இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டிய முயற்சி. இந்தியாவில் வேறு ஏதேனும் கட்சிகள் இது போல செய்கின்றனவா என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சி என்றால் அரசு எடுக்கும் அனைத்து திட்டங்களையும் குறை சொல்லி அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் இங்கு நியதியாக இருந்து வருகிறது. அரசுக்கு மாற்றாக தாங்கள் முன்வைக்க கூடிய திட்டம் என்ன என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதே இல்லை. அரசு செயல்படுத்தும் திட்டங்களை விமர்சிப்பது எளிதாக இருப்பதால் அதனை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சியாக இருந்த கட்சி பிறகு எதிர்கட்சியாக மாறினாலும் இதே கதை தான்.
எதிர்க்கட்சிகளும் பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும். அரசின் தற்போதைய நிதி நிலையை கொண்டு எந்த மாதிரியான மாற்று திட்டங்களை தாங்கள் முன்வைக்க முடியும் என்பது குறித்து கூற வேண்டும். அது தான் சரியான அரசியலாக, மக்கள் நலம் குறித்த அரசியலாக இருக்க முடியும். பாமகவின் முயற்சி அதற்கு முன்னோடியாக உள்ளது என்று சொல்லலாம்.
பாமகவின் அடுத்த முயற்சி தமிழிசை குறித்தான முயற்சி. "தமிழ் என் உயிர்", "தமிழனத்தலைவர்" என்றெல்லாம் தன்னைக் கூறிக் கொள்வதில் பெருமைக் கொள்ளும் கலைஞர் இது வரை இது குறித்த முயற்சிகளை எடுக்க வில்லை. பாமக ஆண்டுதோறும் தமிழ் பாட மறுக்கும் சபாக்களின் மத்தியில் தமிழிசையை வளர்க்க முனைந்துள்ளது பாரட்டத்தக்க முயற்சி.
அது போல கடும் விமர்சனத்திற்கு ஆளான தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் என்னைக் கவர்ந்த சில விஷயங்களும் உண்டு. அன்புமணியின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள், ராமதாஸ் வீட்டு பெயர்ப் பலகையில் ஆங்கிலம் இருக்கிறதே என்று விமர்சிக்கப்பட்ட அளவுக்கு ஒவ்வொரு பகுதியிலும் பெரிய பெரிய பலகைகளில் வைக்கப்பட்ட ஆங்கிலப் பெயர்களுக்கான தமிழ்ப் பெயர்களின் அறிமுகத்தை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அந்தப் பலகைகளை படிக்கும் பொழுது நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் எத்தனை பொருள்களுக்கு நாம் தமிழில் பெயர் தெரியாமல், வேறு மொழியில் இருந்து கடன் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று எனக்கு தோன்றியது. அவமானமாகக் கூட இருந்தது.
பாமகவின் மிக நல்ல செயல், ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற மாநிலத்தில் இருக்க கூடியவர்களையும் திரட்டி தமிழ் ஈழ ஆதரவு மாநாடு நடத்தப் போவதாக தமிழகம் வந்த இலங்கை மலையகத் தமிழ் கட்சி தலைவரன சந்திரசேகரனிடம் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக தமிழ் நெட் இணையத் தளத்தில் கடந்த மாதம் படித்தேன். இதுவும் ஒரு நல்ல முயற்சி. கடந்த காலங்களிலும் பாமக இது போன்ற முயற்சியை எடுத்தது. அத்வானியை சிறப்பு அழைப்பாளராக கொண்டு ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. மாநாடு நடப்பதற்கு சில தினங்கள் முன்பாக நம் வில்லன் "இந்து" பத்திரிக்கை அவதூறான ஒரு செய்தி வெளியிட்டு அத்வானி கலந்து கொள்ள விடாமல் செய்தது.
இத்தகைய நல்ல முயற்சிகளுக்கிடையே குஷ்பு, சுகாசினி விவகாரங்கள் தேவையற்றவை. ஆனாலும் பாமக அது போன்றவற்றை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறது. அதற்குத் தான் அதிக விளம்பரமும் கிடைக்கிறது. குஷ்பு, சுகாசினி விவகாரங்களுக்கு செலவழிக்கும் நேரத்தை ஒரு நல்ல இணையத் தளம் வைக்க பயன்படுத்தலாம்.
தேர்தல் வரும் பொழுதெல்லாம் ரஜினி யாருக்கு வாய்ஸ் கொடுப்பார் என்று பத்திரிக்கைகள் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே எழுதத் தொடங்கி விடும். அவரும் வாய்ஸ் கொடுப்பார். தனக்கு மிகப் பெரிய பலம் இருப்பதாக நினைத்திருந்தார் போலும். பத்திரிக்கைகளும் அதற்கு தூபம் போட்டு கொண்டு இருந்தன. ஆனால் இம் முறை யாரும் இது வரையில் எழுதவில்லை. இனி மேல் அவர்கள் எழுதினாலும் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. காரணம் திண்டிவனம் (தைலாபுரம்) டாக்டர் தான். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பத்திரிக்கைகளால் மிகப் பெரும் மக்கள் சக்தி உள்ளவராக சித்தரிக்கப்பட்டு ஊதி பெரிதாக்கப்பட்ட ரஜினி என்ற கலர்புல்லான பலூனை, சிறு துளையிட்டு, காற்றைப் பிடுங்கிய பெருமைக்குரியவர் தைலாபுரம் டாக்டர் தான் (பூனைக்கு மணி கட்டியவர் என்று சொல்லலாமோ).
இந்த தேர்தலில் மற்றுமொரு கேள்விக்கு விடை கிடைத்து விடும். மற்றொரு "காந்த்" மக்களை இழுக்கும் காந்தமா, வெற்று காகிதமா என்பது தெரிந்தால், "வருங்கால முதல்வர்" என்று நடிகர்களுக்கு கோஷம் எழுப்பி நாயகர்களை ரசிகர்கள் காமெடியன்களாக்க மாட்டார்கள்.
பாமக கடந்த தேர்தலுக்கு முன்பாக திமுக-பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 27/29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக-காங்கிரஸ் கூட்டணில் போட்டியிட்டு 6/6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த இரு தேர்தல்களில் கிட்டத்தட்ட 100% வெற்றி. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாமக தங்களைக் கூறிக் கொள்கிறது. அதனுடைய கடந்த கால வெற்றிகளையும், தொண்டர் பலத்தையும் பார்க்கும் பொழுது அதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. பாமக எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று பார்த்து அங்கு சாய்ந்து விடுகிறது என்ற கருத்து உள்ளது. அதில் உண்மை இருந்தாலும், பாமகவிற்கு பலமே இல்லை என்றால் எந்தக் கூட்டணியிலும் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வளவு தொகுதிகளையும் கொடுக்க மாட்டார்கள். பாமகவின் பலம் எதிர் அணிக்கு செல்வதை திமுக, அதிமுக இருவருமே விரும்பவில்லை.
கடந்த முறை ஜெயலலிதாவின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டது.
- ஒன்று மதிமுக தனித்து போட்டியிட்டது. திமுக தென்மாவட்டங்களில் தோல்வியடைய அது தான் முக்கிய காரணம். அதிமுக ஓட்டு பிரிந்ததால் தென்மாவட்டங்களில் வெற்றி பெற்றது
- மற்றொன்று வடமாவட்டங்களில் பாமகவுடன் கூட்டணி அமைத்தது. வடமாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணி வெற்றி பெற பாமகவின் பலம் தான் முக்கிய காரணம். திருமாவளவன், பொன்முடி போன்ற பிரபலங்கள் தவிர பெரும்பாலான திமுக வேட்பாளர்கள் தோல்வியே அடைந்தனர். பொன்முடி விழுப்புரம் தொகுதியில் கடும் போட்டியில் அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டணி காரணமாகவே வெற்றி பெற்றார்.
திமுக தென்மாவட்டங்களை விட வடமாவட்டங்களில் தான் பலமான கட்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதனுடைய பலத்துடன் பாமக பலம் சேரும் பொழுது அந்தக் கூட்டணி மிகச் சுலபமாக வடமாவட்டங்களில் வெல்ல முடியும். திருமாவளவன் திமுக கூட்டணியில் சேரும் பட்சத்தில் வடமாவட்டம் திமுக கைகளில் என்று உறுதியாக சொல்லலாம்.
தமிழக அரசியலில் குறிப்பாக, வட மாவட்ட அரசியலில் ஓட்டு வங்கிகளும், சாதியும் தான் பிரதானமாக இருந்து வருகிறது. எந்த அலையும் இல்லாத தேர்தல்களில் கட்சியின் பலம் தான் வெற்றியை தீர்மானிக்கிறது. குஷ்பு பிரச்சனையா, கலாச்சார பிரச்சனையா என்பதெல்லாம் இங்கு முக்கியமாக தெரிவதில்லை. அந்தப் பிரச்சனை குறித்து அலசி ஆராய்ந்து பேசும் நாமெல்லாம் ஓட்டு போடுவதில்லை. இப்படி அலசி ஆராய்ந்து ஓட்டு போடுபாவர்களை நம்பியும் பாமக போன்ற கட்சிகள் இருப்பதில்லை.
அவர்களுடைய பலம் கிராமங்கள். அங்கு இருக்கும் அவர்களின் சாதி மக்கள். அந்த மக்கள் இது வரை கட்சி மாறியதாக தெரியவில்லை
அடுத்தப் பதிவு - மிதில் மேல் பூனை - மதிமுக பற்றி