கார்டூன் விவகாரம்

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட கார்டூன்கள் இஸ்லாமியர்களுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மற்றொரு பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது. டென்மார்க், நார்வே போன்ற நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக இஸ்லாமிய நாடுகள் அச்சுறுத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பல இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டமாக லெபனானில் டென்மார்க் தூதரகத்தை இஸ்லாமிய ஆர்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியிருக்கிறார்கள்.



பல மேற்கத்திய நாடுகளின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த கார்டூன்கள் மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. தங்களுடைய கருத்துரிமைக்கு எதிராக இது இருப்பதால் தாங்கள் இது போன்ற கார்டூன்களை வெளியிடவே செய்வோம் என்ற போக்கில் அதே கார்டூன்களையும், வேறு சில புது கார்டூன்களையும் அமெரிக்க, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த சில பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. இணையம் எங்கும் இது போன்ற பல கார்டூகள் தற்பொழுது கொட்டிக் கிடக்கின்றன.

உருவ வழிபாடும், நபிகள் நாயகத்தை உருவமாக வரைவதையும் இஸ்லாம் மதம் தடை செய்கிறது. தங்களுடைய மத உணர்வை புண்படச் செய்து விட்டதாக இஸ்லாமியர்கள் கொதித்து எழ, மற்றொரு சர்சைக்கு இது அடித்தளமிட்டு இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய மக்களிடையே மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உணர்வுகளுக்கு இது மேலும் உரமூட்டி இருக்கிறது.

இந்தப் பிரச்சனையின் பிண்ணணி என்ன ?

முகமது நபியைப் பற்றி குழந்தைகளுக்காக புத்தகம் (The Quran and the prophet Muhammad's life) எழுதிய டென்மார்க் எழுத்தாளர் Kare Bluitgen என்பவர் முகமது நபி அவர்களை குறித்து குழந்தைகளுக்கு விளக்க தனக்கு முகமது நபி அவர்களை விளக்கும் சித்திரம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதனை வரைந்து கொடுக்க கூடிய தைரியம் யாருக்கும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். முகமது நபி அவர்களை உருவமாக வரைவது இஸ்லாமியர்களிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் யாருமே இதற்கு முன்வர வில்லை.


இதையெடுத்து Jyllands-Posten பத்திரிக்கை செப்டம்பர் 30, 2005ல் "முஸ்லீம்கள் தங்களுக்கு தனியான சிறப்பு இடத்தை கேட்கிறார்கள். தற்பொழுது இருக்கும் சுதந்திர உலகில் இது யாருக்கும் கிடைக்காது" என்று கூறி முகமது நபியை கார்டூனாக வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள காட்டூனிஸ்டுகளிடம் முகமது நபியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே வரையுங்கள் to draw Muhammad as they see him என்று கூறியிருக்கிறது.

இவ்வாறு தான் முகமது நபியை சித்தரிக்கும் வகையில் 12 கார்டூன்கள் வெளியிடப்பட்டன.

இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு கார்டூன்கள் வெளியிடுவது சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும் Jyllands-Posten விஷமத்தனமாக இதனை செய்துள்ளது. இது பத்திரிக்கை சுதந்திரம் என்று கூறும் Jyllands-Posten ஒரு முறை சர்சையைக் கிளப்பக் கூடும் என்று கூறி ஒரு கிறுத்தவ செய்தியை வெளியிட மறுத்த தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அப்பொழுது பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பற்றி அப் பத்திரிக்கை நினைக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்பட செய்யும் பொழுது மட்டும் பத்திரிக்கைச் சுதந்திரம் என்று கூறுவதும் மேற்கத்திய ஊடகங்களின் இரட்டை வேடமே.

முகமது நபி பல் வேறு காலக் கட்டங்களில் உருவமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தளங்கள் எழுதியுள்ளன. முகமது நபி வெவ்வேறு காலக்கட்டங்களில் உருவமாக வரையப்பட்ட சித்திரங்களையும் சில இணையத் தளங்களில் பார்த்தேன். எனவே இஸ்லாமியர்கள் கூறும் வாதம் பொருந்தாது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. சில இஸ்லாமியர்கள் நபிகள் அவர்களை படமாக வரைவது தவறு கிடையாது என்று சொல்வதாகவும் அந்த ஊடகங்கள் கூறுகின்றன.

ஆனால் Jyllands-Posten வெளியிட்ட கார்டூன்கள் - கேலிச் சித்திரங்கள். இது வரை முகமது நபியை யாரும் இது போல வரைந்ததில்லை என்பதை இந்த ஊடகங்கள் கூறாமல் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கின்றன. அதுவும் தவிர இந்த 12 கார்டூன்களில் சில கார்டூன்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும், மிதவாத இஸ்லாமியர்களையும் எரிச்சல் படுத்தவே செய்யும்.

ஒரு கார்டூனில் முகமது நபியின் தலைக் கவசத்தில் வெடிகுண்டு தீப்பற்ற வைத்துள்ளது போல உள்ளது. மற்றொன்றில் இறந்த பின்பு மேலே செல்லும் தற்கொலை குண்டுதாரிகளை முகமது நபி வரவேற்பது போன்ற படம் உள்ளது. முகமது நபியை பயங்கரவாதியாக சித்திரிக்கும் முயற்சியாக முஸ்லீம்கள் இதனை பார்க்கின்றனர். முகமது நபியை உருவமாக வரைவதே தீவிர பிரச்சனையாகும் பொழுது இவ்வாறான செயல் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் இருக்க முடியாது. விஷமத்தனமான சர்சைகளுக்கு அடிபோடவே இவ்வாறான செயல்கள் செய்யப்படுகின்றன.

இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் கடந்த காலங்களில் செயல்பட்ட விதம், ஆப்கானிஸ்தானை சோவியத் யுனியன் ஆக்கிரமித்தது போன்றவையே இஸ்லாமிய தீவிரவாதம் வளர முக்கிய காரணம். ஜிகாத் இயக்கங்கள் தோன்ற காரணமே மேற்கத்திய நாடுகள் தான்.

அதன் பிறகு இராக் மீது படையெடுத்தது, அதில் பலியான பெண்கள், குழந்தைகள் போன்றவை இஸ்லாமிய மக்களிடையே அமெரிக்க, மேற்கத்திய நாடுகள் மீதான துவேஷத்தை பன் மடங்கு அதிகரித்தன. இஸ்லாமிய மக்களிடம் ஏற்பட்டுள்ள அந்த அதிருப்தியை அதிகரிக்கும் வண்ணம் ஈரானை அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன.



இப்பொழுது இது போன்ற விவகாரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் இருக்கின்ற இடைவெளியை அதிகரிக்கவே செய்யும். சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கார்டூன் வெளியிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை கொல்லப்போவதாக அச்சுறுத்தி இருக்கின்றன. இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுதெல்லாம் சில தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்பதை மலிவு விலை விளம்பரத்திற்காக சர்ச்சையை கிளப்பும் ஊடகங்கள் எப்பொழுது புரிந்து கொள்ளுமோ ?. அது புரிந்து கொள்ள படாத வரை தீவிரவாதம் பெருகிக் கொண்டே தான் இருக்கும். எத்தனை நாடுகளை கூட்டணி அமைத்து தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டாலும் அதனால் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை.

உலகில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருமே பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விஷமத்தனத்தை கண்டிக்கவே செய்வார்கள்

படங்கள் : BBC