Sunday, February 05, 2006

கார்டூன் விவகாரம்

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட கார்டூன்கள் இஸ்லாமியர்களுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மற்றொரு பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது. டென்மார்க், நார்வே போன்ற நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக இஸ்லாமிய நாடுகள் அச்சுறுத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பல இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டமாக லெபனானில் டென்மார்க் தூதரகத்தை இஸ்லாமிய ஆர்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியிருக்கிறார்கள்.



பல மேற்கத்திய நாடுகளின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த கார்டூன்கள் மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. தங்களுடைய கருத்துரிமைக்கு எதிராக இது இருப்பதால் தாங்கள் இது போன்ற கார்டூன்களை வெளியிடவே செய்வோம் என்ற போக்கில் அதே கார்டூன்களையும், வேறு சில புது கார்டூன்களையும் அமெரிக்க, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த சில பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. இணையம் எங்கும் இது போன்ற பல கார்டூகள் தற்பொழுது கொட்டிக் கிடக்கின்றன.

உருவ வழிபாடும், நபிகள் நாயகத்தை உருவமாக வரைவதையும் இஸ்லாம் மதம் தடை செய்கிறது. தங்களுடைய மத உணர்வை புண்படச் செய்து விட்டதாக இஸ்லாமியர்கள் கொதித்து எழ, மற்றொரு சர்சைக்கு இது அடித்தளமிட்டு இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய மக்களிடையே மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உணர்வுகளுக்கு இது மேலும் உரமூட்டி இருக்கிறது.

இந்தப் பிரச்சனையின் பிண்ணணி என்ன ?

முகமது நபியைப் பற்றி குழந்தைகளுக்காக புத்தகம் (The Quran and the prophet Muhammad's life) எழுதிய டென்மார்க் எழுத்தாளர் Kare Bluitgen என்பவர் முகமது நபி அவர்களை குறித்து குழந்தைகளுக்கு விளக்க தனக்கு முகமது நபி அவர்களை விளக்கும் சித்திரம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதனை வரைந்து கொடுக்க கூடிய தைரியம் யாருக்கும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். முகமது நபி அவர்களை உருவமாக வரைவது இஸ்லாமியர்களிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் யாருமே இதற்கு முன்வர வில்லை.


இதையெடுத்து Jyllands-Posten பத்திரிக்கை செப்டம்பர் 30, 2005ல் "முஸ்லீம்கள் தங்களுக்கு தனியான சிறப்பு இடத்தை கேட்கிறார்கள். தற்பொழுது இருக்கும் சுதந்திர உலகில் இது யாருக்கும் கிடைக்காது" என்று கூறி முகமது நபியை கார்டூனாக வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள காட்டூனிஸ்டுகளிடம் முகமது நபியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே வரையுங்கள் to draw Muhammad as they see him என்று கூறியிருக்கிறது.

இவ்வாறு தான் முகமது நபியை சித்தரிக்கும் வகையில் 12 கார்டூன்கள் வெளியிடப்பட்டன.

இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு கார்டூன்கள் வெளியிடுவது சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும் Jyllands-Posten விஷமத்தனமாக இதனை செய்துள்ளது. இது பத்திரிக்கை சுதந்திரம் என்று கூறும் Jyllands-Posten ஒரு முறை சர்சையைக் கிளப்பக் கூடும் என்று கூறி ஒரு கிறுத்தவ செய்தியை வெளியிட மறுத்த தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அப்பொழுது பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பற்றி அப் பத்திரிக்கை நினைக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்பட செய்யும் பொழுது மட்டும் பத்திரிக்கைச் சுதந்திரம் என்று கூறுவதும் மேற்கத்திய ஊடகங்களின் இரட்டை வேடமே.

முகமது நபி பல் வேறு காலக் கட்டங்களில் உருவமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தளங்கள் எழுதியுள்ளன. முகமது நபி வெவ்வேறு காலக்கட்டங்களில் உருவமாக வரையப்பட்ட சித்திரங்களையும் சில இணையத் தளங்களில் பார்த்தேன். எனவே இஸ்லாமியர்கள் கூறும் வாதம் பொருந்தாது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. சில இஸ்லாமியர்கள் நபிகள் அவர்களை படமாக வரைவது தவறு கிடையாது என்று சொல்வதாகவும் அந்த ஊடகங்கள் கூறுகின்றன.

ஆனால் Jyllands-Posten வெளியிட்ட கார்டூன்கள் - கேலிச் சித்திரங்கள். இது வரை முகமது நபியை யாரும் இது போல வரைந்ததில்லை என்பதை இந்த ஊடகங்கள் கூறாமல் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கின்றன. அதுவும் தவிர இந்த 12 கார்டூன்களில் சில கார்டூன்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும், மிதவாத இஸ்லாமியர்களையும் எரிச்சல் படுத்தவே செய்யும்.

ஒரு கார்டூனில் முகமது நபியின் தலைக் கவசத்தில் வெடிகுண்டு தீப்பற்ற வைத்துள்ளது போல உள்ளது. மற்றொன்றில் இறந்த பின்பு மேலே செல்லும் தற்கொலை குண்டுதாரிகளை முகமது நபி வரவேற்பது போன்ற படம் உள்ளது. முகமது நபியை பயங்கரவாதியாக சித்திரிக்கும் முயற்சியாக முஸ்லீம்கள் இதனை பார்க்கின்றனர். முகமது நபியை உருவமாக வரைவதே தீவிர பிரச்சனையாகும் பொழுது இவ்வாறான செயல் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் இருக்க முடியாது. விஷமத்தனமான சர்சைகளுக்கு அடிபோடவே இவ்வாறான செயல்கள் செய்யப்படுகின்றன.

இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் கடந்த காலங்களில் செயல்பட்ட விதம், ஆப்கானிஸ்தானை சோவியத் யுனியன் ஆக்கிரமித்தது போன்றவையே இஸ்லாமிய தீவிரவாதம் வளர முக்கிய காரணம். ஜிகாத் இயக்கங்கள் தோன்ற காரணமே மேற்கத்திய நாடுகள் தான்.

அதன் பிறகு இராக் மீது படையெடுத்தது, அதில் பலியான பெண்கள், குழந்தைகள் போன்றவை இஸ்லாமிய மக்களிடையே அமெரிக்க, மேற்கத்திய நாடுகள் மீதான துவேஷத்தை பன் மடங்கு அதிகரித்தன. இஸ்லாமிய மக்களிடம் ஏற்பட்டுள்ள அந்த அதிருப்தியை அதிகரிக்கும் வண்ணம் ஈரானை அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன.



இப்பொழுது இது போன்ற விவகாரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் இருக்கின்ற இடைவெளியை அதிகரிக்கவே செய்யும். சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கார்டூன் வெளியிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை கொல்லப்போவதாக அச்சுறுத்தி இருக்கின்றன. இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுதெல்லாம் சில தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்பதை மலிவு விலை விளம்பரத்திற்காக சர்ச்சையை கிளப்பும் ஊடகங்கள் எப்பொழுது புரிந்து கொள்ளுமோ ?. அது புரிந்து கொள்ள படாத வரை தீவிரவாதம் பெருகிக் கொண்டே தான் இருக்கும். எத்தனை நாடுகளை கூட்டணி அமைத்து தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டாலும் அதனால் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை.

உலகில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருமே பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விஷமத்தனத்தை கண்டிக்கவே செய்வார்கள்

படங்கள் : BBC

15 மறுமொழிகள்:

Anonymous said...

silly.. especially from someone like u!

7:28 PM, February 05, 2006
Thangamani said...

தமிழ்சசி:

நன்றாக எழுதியுள்ளீர்கள். சில பத்திரிக்கைகள் பரபரப்பைத் தூண்டுவதற்காக எதையும் செய்கின்றன. அதே சமயத்தில் நபிகளையும், அல்லாவையும் கேலிக்கு உள்ளாக்குவதும், பொய்யான கருத்தாக்கத்துக்கு ஆட்படுத்துவதும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் செய்ல்படும் மாற்றுமத மாற்று மதப் பத்திரிக்கைகள் மட்டும்தானா, வகாபிஸம், மாற்றமுடியாத இறையியல் சட்டம் என்ற பெயரில் செயல்படும் மத அடிப்படைவாதிகள் இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படவேண்டியே உள்ளது. பிற நிறுவனங்கள் நபிகளையும் அல்லாவையும் கேலிக்குள்ளாக்க முடியும் என்பதுபோல இஸ்லாத்தின் பெயராலும் செய்யமுடியும் என்பதை சாதரண முஸ்லீம்கள் உணரவேண்டும். மற்றபடி உலகலாவிய இஸ்லாமிய தீவிரவாதம் என்ற மேற்குலகின் பிரச்சாரம் மேற்குலகின் அணுகுமுறைத் திமிரையும், அமெரிக்கக்கிறிஸ்துவ மத அடிப்படைவாதத்தையும் பின்புலமாகக் கொண்டது என்பது தனி விதயம்.

இவ்விதயம் குறித்த மாலிக்கின் பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் படிக்க இங்கு குறிப்பிடுகிறேன்.

http://vilambi.blogspot.com/2006/02/blog-post.html

8:15 PM, February 05, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

தங்கமணி,

சுட்டிக்கு நன்றி

எந்த மதமும், அமைப்பும் விமர்சனத்திற்குரியதே. ஆனால் நபிகள் நாயகம் கூறிய கொள்கையைப் பற்றியோ, அவர் ஏன் தன்னுடைய உருவத்தை வரையக் கூடாது என்றார் என்பது குறித்த விமர்சனமாகவோ இல்லாமல் "The Face of Muhammed" என்ற பெயரில் அவர் தலையில் வெடிகுண்டை வரைவது பிரச்சனையை உண்டக்கும் நோக்கம் காரணமாகத் தான் இருக்க முடியும்.

அதுவும் தவிர ஏற்கனவே இருக்கும் மேற்கத்திய உலக - இஸ்லாமிய நாடுகள் மோதலில், பத்திரிக்கைச் சுதந்திரத்தை நிலைநாட்ட இது போன்ற உணர்ச்சியை தூண்டக்கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்பட வேண்டியவை.

இவ்வாறான பிரச்சனைகள் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஜிகாத் அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்களை அதிகரிக்கவேச் செய்யும். சில குண்டுவெடிப்புகளுக்கு பிறகு "பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்" என்று சொல்லிக் கொள்வதில் எந்த பயனும் விளையப்போவதில்லை.

9:17 PM, February 05, 2006
Anonymous said...

two points to note
1. The danish paper has a conservatiave background
2. By overreacting, Palastinians and Lebanese erode the support and sympathy that they have in western secular people.

10:37 PM, February 05, 2006
அழகப்பன் said...

அன்பின் சசி... அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

ஒருவரின் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மனதை புண்படுத்துவதில் நிச்சயமாக அமையமுடியாது. ஒவ்வொருவரும் தமக்கு பிரச்சனை என்று வரும்போதுதான் சுதந்திரம் குறித்து பேசுகின்றனர். இலண்டன் ஊர்வலத்தில் எனக்கு ஆட்சேபமான வார்த்தைகளைக் கொண்டு சென்ற போராட்டக்காரர்களை எப்படி அது அவர்களின் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளமுடியவில்லையோ அதுபோன்றதுதான் இதுவும். (அதைவிட கொடியது என்றும் என்னால் வாதிடமுடியும்) ஆனால் போராட்டக்காரர்களின் செயல்களை அத்துமீறல்களாகக் காண்பவர்கள் அச்செயலைச் செய்யத் தூண்டிய முதலாவது காரணியை சுதந்திரம் என்று போற்றுவதுதான் வேடிக்கையானது.

இந்த பிரச்சனையின் ஆரம்பம் முதல் பிப்ரவரி முதல் நாள்வரையிலான ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து நோக்கினால் இதனை உலகளாவிய பிரச்சனையாக மாற்றியது யார் என்று தெரியும். ஆனாலும் பழியை முஸ்லிம்கள் மீதே திருப்புகின்றனர்.

இதுகுறித்து என்னுடைய பதிவையும் பாருங்கள்.
கருத்துச் சுதந்திரமும் காழ்ப்புணர்வும்

10:42 PM, February 05, 2006
Anonymous said...

இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்திவரும் கிறீஸ்துவ நாடுகளின் அரசியலை இது போன்ற பதிவுகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும். வாழ்த்துக்கள் சசி & தங்கமணி.

11:17 PM, February 05, 2006
மு. சுந்தரமூர்த்தி said...

மேற்கத்திய கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் இஸ்லாமியர்களை சீண்டுவதற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாங்கள் சீண்டப்படும்போது கொதித்தெழத் தயாராகவும் இருப்பதற்கான இன்னொரு உதாரணம் இந்த கார்ட்டூன் - அதற்கு எதிர்ப்பு. இந்த போட்டியில் எந்த அடிப்படைவாதம் வென்றாலும் அது உலக அமைதிக்கு அச்சுறுத்தலே.

12:08 AM, February 06, 2006
G.Ragavan said...

இனி என்ன நடக்கும்! லெபனானில் நடந்து மற்ற நாடுகளிலும் நடக்கும். கார்டூனை ஒரு கூட்டம் நியாயப்படுத்துவது போலவே இது போன்ற நிகழ்வுகளும் நியாயப்படுத்தப்படும். மொத்தத்தில் உலகமெங்கும் சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. அவ்வளவே.

12:18 AM, February 06, 2006
Anonymous said...

Yours is a sensible writing Mr. Sasi.

Though some reactions to be condemned, one cannot deny there is a 'big hand' behind insulting moslems.
In this view, your writing is remarkable.

While others (among our tamil bloggers) try to provacate Moslems by pointing out the harsh reactions alone, you are viewing the root-cause.

Keep it up
Selvam

8:14 AM, February 06, 2006
Anonymous said...

//அதே சமயத்தில் நபிகளையும், அல்லாவையும் கேலிக்கு உள்ளாக்குவதும், பொய்யான கருத்தாக்கத்துக்கு ஆட்படுத்துவதும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் செய்ல்படும் மாற்றுமத மாற்று மதப் பத்திரிக்கைகள் மட்டும்தானா, வகாபிஸம், மாற்றமுடியாத இறையியல் சட்டம் என்ற பெயரில் செயல்படும் மத அடிப்படைவாதிகள் இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படவேண்டியே உள்ளது. பிற நிறுவனங்கள் நபிகளையும் அல்லாவையும் கேலிக்குள்ளாக்க முடியும் என்பதுபோல இஸ்லாத்தின் பெயராலும் செய்யமுடியும் என்பதை சாதரண முஸ்லீம்கள் உணரவேண்டும். //


well said!

11:50 AM, February 06, 2006
Anonymous said...

sinthanaiyai usuppi vitta karuthu. good

2:20 PM, February 06, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி

இதே கருத்தைப் போன்று இன்று BBC வெளியிட்டுள்ள ஒரு செய்தி.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4686536.stm

தாமதமாக உணர்ந்து என்ன பிரயோஜனம் ?

8:03 AM, February 07, 2006
மு மாலிக் said...

As everyone has commented, It is a balanaced writing. When I tried to capture the issue, the irresposible violence had not started much, so I have not written anything about them. The protesters have not just over-reacted, they have crossed the limits of tolerance. Their protest have just added to the already existing demonization attempts of media.

And as you have pointed out, the media also has turned more sensible at reporting about this issue later. In the begining of this issue, when people called for rights with resposiblities, the media had put the word responsibity under quotes (Or in the similar tone). But not now.

Thank you

(Sorry, could not write in Tamil as I am in a different machine).

12:32 PM, February 07, 2006
நல்லடியார் said...

//உலகில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருமே பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விஷமத்தனத்தை கண்டிக்கவே செய்வார்கள்//

உங்களின் நடுநிலை விமர்சனத்திற்கும் பதிவுக்கும் நன்றி சகோ.சசி.

4:55 AM, February 08, 2006