வைகோவின் எதிர்காலம்

தமிழக அரசியலில் வைகோ குறித்த ஒரு குழப்பமான எண்ணமே தற்பொழுது உள்ளது. இந்தப் பக்கம் தாவுவதா, அந்தப் பக்கம் செல்வதா என்பது குறித்து கணநேரத்தில் முடிவு செய்து தாவி விடும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இந்தக் குழப்பம் விந்தையாகத் தான் இருக்கிறது. ஒரு புறம் அவரை சிறையில் தள்ளிய ஜெயலலிதா, மற்றொரு புறம் அவரது பலத்தை மட்டும் உபயோகித்து கொண்டு ஆனால் அவரை அதிகம் வளர விடாமல் செய்யும் நோக்கத்தில் இருக்கும் கலைஞர் என அவரது அரசியல் வாழ்வின் இரு எதிரிகளில் ஒரு எதிரியை தேர்ந்தெடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் வைகோ இருக்கிறார்.


கொஞ்சம் அதிக இடங்களை கொடுத்தால் திமுகவிடமே தங்கி விடலாம், கொள்கைவாதி என்ற இமேஜையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசை.அந்த நப்பாசையால், தன்னுடைய பேரத்தை தக்க வைத்துக் கொள்ள இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று வைகோ ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார். திட்டமிட்டு இந்தக் குழப்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழம்பிய குட்டையில் பெரிய மீன்களாக பிடித்து விட வைகோ முனைந்துக் கொண்டிருக்கிறார்.

வைகோ முன் இருக்கும் குழப்பாக ஊடகங்கள் எழுதிக் கொண்டிருப்பது இரண்டு தான்.

அதிக இடங்களா ? காப்பாற்ற வேண்டிய இமேஜா ?

அதிக இடங்கள் முக்கியம் இல்லை என்றால் எதற்கு அரசியல் என்ற கேள்வி வரும். இமேஜ் முக்கியம் என்றால், அதை மட்டும் வைத்து கொண்டு வைகோ எத்தகைய அரசியல் நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழும்.


இமேஜை காப்பாற்ற நினைத்தால் சுந்தரமூர்த்தி கூறுவது போல திக, தமிழர் தேசியக் கட்சி போன்றவை போல மதிமுகவை மாற்றி விடலாம். மதிமுக தொண்டர்கள் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சென்று விடுவார்கள். கூடாரம் காலியாகிய பிறகு திருவாசகம் விழாவில் இளையராஜா கூறியது போல அவரை ஒத்தவர்களுடன் சேர்ந்து அவரது பேச்சாற்றலைக் கொண்டு உலகெங்கிலும் தமிழ்மணம் பரப்பலாம். கிட்டத்தட்ட ஒரு கிருபானந்த வாரியார் போல மாறிவிடலாம். ஆன்மீகத்திற்கு பதிலாக பெரியாரிசத்தையும், தமிழ் உணர்வையும் பரப்பலாம்.

ஆனால் வைகோ அதை செய்ய நினைக்கிறாரா என்ன ?

அதிகார பலம், சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இருக்கும் எண்ணிக்கையின் பலம் மற்றும் தேர்தலில் வெற்றி இவை தான் அரசியலில் நீடித்து நிற்க தேவை. வெற்றி ஒன்றே கட்சியின் தொண்டர்களையும், பிற கட்சி தலைவர்களையும் வசியப் படுத்தும் வசிய மருந்து. அந்தப் பலத்தை எதையாவது செய்து பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இமேஜை காப்பாற்ற வேண்டுமானால் தனி பலம் தேவை. அந்த தனி பலம் வைகோவிடம் இல்லை.

சிறையில் வைகோ தனக்கான திட்டமாக சிலவற்றை முடிவு செய்திருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு வைகோவின் சில நடவடிக்கைகளும் அவ்வாறே இருந்தன. பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதில்லை என முடிவு செய்தார். நடைபயணம் மேற்க்கொண்டார்ர். அந்த முயற்சிகளின் பலனை அறுவடை செய்யும் நேரமிது. அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இது. அதனால் தான் அவருடைய திட்டங்களின் அடுத்த அத்தியாயமாக இந்தக் "குழப்ப நாடகம்" அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

வைகோவின் கடந்த கால முடிவுகளும் அவரை இந்தத் தேர்தலில் ஒரு உறுதியான முடிவை எடுக்க தூண்டியுள்ளன. அந்த உறுதியான முடிவு "எண்ணிக்கை" மட்டுமே. இமேஜ் அல்ல.

கடந்த காலங்களில் வைகோவின் சரியான திட்டமிடாத அரசியல், சந்தர்ப்பச் சூழ்நிலை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், இமேஜை காப்பாற்றும் பயம், அரசியல் தடுமாற்றம் இவற்றால் மதிமுக அழிவின் விளிம்பிற்குச் சென்றது. இரு பெரும் திராவிட கட்சிகளின் தலைவர்களும் மதிமுகவை அழிப்பதில் காட்டிய பெரும் அக்கறையும் அதனை எதிர்த்து வீம்பிற்காக தன்னந்தனியாக சாதூரியம் இல்லாமல் போராட முற்பட்டதும் மதிமுகவை காணாமல் போக செய்திருக்கும். வைகோவின் போராடும் குணம் ஒன்று மட்டுமே அவரையும் அவரது கட்சியையும் அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியது.

ஆனால் எந்தவித சரியான பாதையும், செயல் திட்டமும் இல்லாமல் போராடிக் கொண்டே இருப்பதில் என்ன பயன் இருக்க முடியும் ? வைகோ இதனை யோசிக்காமல் இருந்திருக்க முடியாது.

வைகோவின் அரசியல் பயணத்தில் முக்கிய கட்டமான திமுகவின் பிளவு. அந்த ஆரம்பம் மிகுந்த ஆரவாரத்துடனே இருந்தது. தமிழக ஊடகங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு திமுக இரண்டாக பிளவு பட்டு தொண்டர் பலமும், இளைஞர் கூட்டமும் வைகோ பின் திரண்டு இருப்பதாக எழுதின. சினிமாவில் இருந்து தான் சென்னை கோட்டையை எட்ட முடியும் என்று வலுவாக நம்பப்பட்ட நேரத்தில் தன்னுடைய அனல் கக்கும் பேச்சாற்றல் ஒன்றை மட்டுமே கொண்டு தமிழகத்தின் கோட்டையை தொட்டு விடும் தூரத்தில் வைகோ இருப்பதாக நம்பப்பட்டது. ஊடகங்கள் அதனை மிகைப்படுத்தி எழுதின என்றாலும் முழுமையான பொய் என்றும் சொல்லி விட முடியாது. மதிமுக தான் சந்தித்த முதல் இடைத் தேர்தலில் திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

திமுகவின் பலத்தை குறைக்க வேண்டுமானால் தனக்கு சாதகமான ஒரு நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆனால் வைகோ அதனைச் செய்ய வில்லை. திமுகவின் பாரம்பரிய பலம் வடமாவட்டங்கள் தான். அங்கிருந்த பாமகவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அவர் தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாத மார்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்தார். கலைஞர் தனது வழக்கமான அரசியல் சாணக்கியத்தனத்தை பயன்படுத்தி மூப்பனாரை வளைத்துப் பிடித்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையும் அப்பொழுது வைகோவிற்கு எதிராகவே அமைந்தது. தமிழகத்தில் கரைபுரண்டோடிய "ஜெ எதிர்ப்பு அலையில்" வைகோவால் கரை சேர முடியவில்லை. ஜெ எதிர்ப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் - திமுக கூட்டணி போன்றவைக்கு மத்தியில் தனதுசொந்த ஊரில் கூட வைகோவால் வெற்றி பெற முடியவில்லை.

கலைஞர் ஆட்சியை பிடித்ததும், வைகோ தன் சொந்த தொகுதியில் கூட தோல்வி அடைந்ததும் வைகோவின் கூடாரத்தில் இருந்தவர்களை திமுக நோக்கி திருப்பியது. ஆனாலும் 1996 தேர்தலில் வைகோ 15லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்தார். வைகோ அன்று அடைந்த சரிவில் இருந்து பிறகு மீளவே இல்லை. மறுபடியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மோசமான முடிவை எடுத்தார். அது தான் அவரது அரசியல் வாழ்க்கையை படுகுழிக்கு கொண்டு சென்றது.

கடந்த கால தவறுகள் வைகோவிற்கு நல்ல பாடத்தையே கொடுத்திருக்கின்றன. அதனால் தான் அவர் இன்று குழப்ப நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் திடமான ஒரு முடிவை எப்பொழுதோ எடுத்து விட்டதாக நான் நினைக்கிறேன். இது சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக மட்டுமே எடுக்கும் முடிவல்ல. திமுக எத்தனை தொகுதிகளை அவருக்கு விட்டு கொடுக்கும் என்பது அவரால் கணிக்க முடியாத சிதம்பர ரகசியம் அல்ல. கூட்டணியில் இருந்து நழுவ ஒரு நல்ல காரணத்தை தேடிக் கொண்டு தனது பேரத்தை அதிகரித்து கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். நழுவக் கூடிய நேரமும் தற்பொழுது வந்து விட்டது.

இன்று தமிழகம் கூட்டாட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில், அலை வந்தது போல ஒரு கூட்டணிக்கே தமிழக மக்கள் தொடர்ந்து வாக்களித்து வந்துள்ளனர். ஆனால் இம் முறை அது நடக்கப் போவதில்லை என்பது எனது கணிப்பு.

கடந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி பலத்திற்கும் தற்போதைய கூட்டணி பலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மதிமுக-அதிமுக -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணிக்கு அது ஒரு சரியான மாற்று கூட்டணியாகவே அமையக்கூடும். அதிமுக, மதிமுகவின் பலம் தென்மாவட்டங்கள் தான். திமுக-பாமக-விடுதலைச் சிறுத்தைகள் வடமாவட்டங்களில் பலமாக இருப்பவை. விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் சேரும் பட்சத்தில் வடமாவட்டங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும். ஆனால் திருமாவளவன் அதிமுக கூட்டணியில் சேருவார் என்றே இப்பொழுது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ. பலம் இருக்க வேண்டும். அதுவும் தவிர இந்த தேர்தலில் வைகோ பெறும் எண்ணிக்கை தான் அவரது எதிர்கால தமிழக அரசியல் நிலையை தீர்மானிக்கப் போகிறது. பாமக கடந்த சில தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் தமிழக அரசியலில் அதற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளன. இத்தகைய வெற்றியை மதிமுகவும் இன்று பெற்றாக வேண்டும்.

இந்திய அரசியலில் மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்து மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பது போல, தமிழக அரசியலும் இன்று சிதறுண்டு காணப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளால் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட தேவர், நாடார் இன வாக்குகளும் எதிர்காலத்தில் இவ்வாறு சிறு கட்சிகளால் சிதறுண்டு போகும் அபாயமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் தன்னுடைய குறுகிய அரசியல் பலத்தை பலப்படுத்துவதும், தனது தளத்தை விரிவுபடுத்துவதும் வைகோவிற்கு முக்கியம். திமுக தரும் 20 தொகுதிகளை கொண்டு வைகோ அரசியலில் ஒன்றும் சாதித்து விட முடியாது. ஜெயலலிதா தரத் தயாராக இருக்கும் 40-50 தொகுதிகள் கவர்ச்சிகரமான பேரமாகவே உள்ளது. அதில் கணிசமான தொகுதியில் வெற்றி பெற்றால் மதிமுக அடுத்த நிலைக்கு தயாராகும். அடுத்த நிலையாக வைகோ கருதுவது கலைஞருக்குப் பின் இருக்கும் திமுக. அவர் நினைப்பது எல்லாம் கைகூடுமா என்பது தெரியவில்லை. ஆனால் it's worth a gamble.

இந் நிலையில் ஜெயலலிதா தன்னை கைது செய்தது போன்ற செண்ட்டிமெண்ட் விஷயங்களில் தனது கவனத்தை வைகோ சிதற விட மாட்டார். தமிழக அரசியலில் அவரது Mr.Clean, கொள்கைவாதி என்ற இமேஜ் சரியப்போகிறது. அந்த இழப்பு தேர்தலில் வெற்றியாக மாறுமா, எதிர்காலத்தில் வைகோ பெரிய சக்தியாக மாறுவாரா என்பதை இந்த தேர்தலும், எதிர்வரும் காலங்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.















வைகோ அவ்வாறு ஒரு சக்தியாக உருமாறும் பட்சத்தில் தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்று தலைவருக்கு காணப்படும் வெற்றிடம் நிரப்பப்பட்டு விடும்.