Saturday, February 25, 2006

டெல்லி இரவு வாழ்க்கை, ஒரு கொலை

ஜெசிக்கா லால், இவர் ஒரு மாடல். மிகவும் கலகலப்பானவர். இரவு பார்ட்டிகள் மீது இவருக்கு தனிக் கவர்ச்சி உண்டு. பார்ட்டிகளில் மேல் இவர் கொண்ட ஆசை தான் இவரை Tamarind Court என்ற டெல்லியின் பிரபலமான பாரில் மது உற்றிக் கொடுக்கும் bartender வேலையில் சேர்த்து விட்டது. ஒரு மாடலாக இருந்தாலும் பகுதி நேர வேலையாக இதனை ஜெசிக்கா செய்ய காரணம் இத்தகைய பார்ட்டிகள் மீது அவருக்கு இருந்த தனி ஈடுபாடு.

Tamarind Court டெல்லியின் பிரபலமான பணக்காரர்கள் கூடும் இடம். இதனை நடத்திக் கொண்டிருந்தவர் பீனா ரமணி. பீனா ரமணி தான் பணக்காரர்களின் டெல்லி இரவு வாழ்க்கை பிசினஸில் முக்கியமானவர். பார்ட்டிகள் மூலம் இவருக்கு டெல்லியின் பினினஸ் மேக்னட்கள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், மாடல்கள் என அனைவருடைய அறிமுகமும் உண்டு. Tamarind Courtல் கூப்பன் முறை மூலம் மது வழங்கப்படுவது வழக்கம். 1999ல் ஒரு கூப்பன் 100ரூபாய். ஒரு கூப்பனுக்கு ஒரு மதுவகை உண்டு. ரம்மோ, விஸ்கியோ ஏதோ ஒன்றை குடிக்கலாம். டெல்லியின் பணக்காரர்கள் எல்லாம் ஒன்று கூடி வாரத்திற்கு ஒரு நாள் குடித்து விட்டு உல்லாசமாக இங்கு இரவை கழித்து விட்டு செல்வார்களாம். போலிஸ் அதிகாரிகள் முதல் மந்திரிகளின் வாரிசுகள் வரை அனைவரும் இங்கு வருவது வழக்கமானாலும் இங்கு மது விற்பனை சட்டவிரோதமாகத் தான் நடந்து கொண்டிருந்தது. அதாவது மது விற்பனைக்கான பர்மீட் Tamarind Courtக்கு இல்லை.

ஜெசிக்கா ஒரு நாள் வழக்கம் போல பார்ட்டிகளில் மது வழங்கிக் கொண்டிருக்க தமது தமிழ் சினிமா வில்லன் மாதிரி மானு சர்மா அங்கு வருகிறார். ஏற்கனவே போதையின் உச்சத்தில் இருந்த அவர், ஜெசிக்காவிடம் மது கேட்கிறார். நேரம் அப்பொழுது அதிகாலை 1.45 மணி. நேரமும் கடந்து விட்டது, மதுவும் தீர்ந்து போய் விட்டது என்கிறார் ஜெசிக்கா. ஆனால் போதை தலைக்கேறி இருந்த மானு சர்மாவுக்கு அது காதில் விழுவதாக இல்லை. வாக்குவாதம் ஏற்படுகிறது. போதையுடன் வெறி ஏற்பட கையில் இருந்த பிஸ்டலை எடுத்து வானத்தை நோக்கி சுடுகிறார், பின் ஜெசிக்காவை சுடுகிறார், ஜெசிக்கா சரிகிறார், வேகமாக அந்த இடத்தில் இருந்து மானு சர்மா அண்ட் கோ எஸ்கேப் ஆகிறது

ஏதோ தமிழ் சினிமாவில் தான் சொல்வதை கேட்க மறுப்பவர்களை வில்லன் சுட்டுக்கொல்வது போல நிஜ வாழ்க்கையிலும் நடந்து விட்டது. இந்த மானு சர்மா ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் மகன். அவருடன் இருந்த பலர் பெரும் புள்ளிகள். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் அப்பாவும் அவர்களில் ஒருவர். பணம் விளையாடுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்த ரத்தக்கறைகள் அழிக்கப்பட்டு சாட்சியங்கள் கலைக்கப்பட்டது. எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது என்கிறார் அந்த பாரின் உரிமையாளர் பீனா ரமணி. ஜெசிக்காவுடன் பாரில் மது வழங்கிக் கொண்டிருந்த சக நண்பர்கள் சட்டது மானு சர்மா கிடையாது என சாட்சியம் அளிக்கின்றனர். மானு சர்மாவும் அவரது கூட்டாளிகளும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

NDTV இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று கூறிக்கொண்டிருக்கிறது. இந்தியத் "திருநாட்டில்" இந்த ஒரு தீர்ப்பு மட்டும் தான் நியாயத்திற்கு புறம்பாக உள்ளது, மற்ற எல்லா தீர்ப்புகளும் மிக நியாயமாக நடந்துள்ளது என்று NDTV கருதுகிறது போலும். நாடெங்கிலும் மக்கள் மத்தியில் இந்த தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக NDTV கூறுகிறது. ஒரு வேளை நான் அமெரிக்காவில் இருப்பதால் தான் இந்திய மக்களின் அதிருப்தி எனக்கு தெரியவில்லையோ ?


ஜெசிக்காவை கொன்ற மானு சர்மா போன்ற கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்தப் பிரச்சனையில் ஆதாயம் தேட முயலும் செயல் தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு பிரச்சனைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அது நாடெங்கிலும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று NDTV போன்ற செய்தி நிறுவனங்களே செய்தி வெளியிடும் பொழுது அதன் மேல் இருந்த நம்பக்தன்மை சிதறுகிறது. சன் டிவி போன்ற செய்தி நிறுவனமாக NDTV மாறுவது தான் சகிக்க முடியாததாக உள்ளது. இந்தப் பிரச்சனையில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் இந்த தீர்ப்பிற்கு முன்பாகவே இது பற்றி NDTV புலனாய்வு செய்திருக்கலாம். சாட்சியங்கள் கலைக்கப்பட்டது பற்றிய உண்மையை வெளியிட்டிருக்கலாம். குறைந்தப்பட்சம் அவர்களின் பணபலத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஜெசிக்காவின் பெற்றோர்களுக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால் அதனைச் செய்யாமல் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு வந்துள்ள தற்போதைய காலக்கட்டத்தில் NDTV என்ன செய்ய நினைக்கிறது என்பது புரியவில்லை.

நாடெங்கிலும் இது போன்ற நியாயத்திற்கு புறம்பான தீர்ப்புகள் தொடர்ந்து நீதிமன்றங்களால் வழங்கப்படவே செய்கின்றன. ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு மாடல், ஒரு அரசியல்வாதி, ஒரு பாரில் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற மிக பிரபலமான வழக்கில், பொதுமக்களை கவரக்கூடிய சுவாரசியமான வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது நல்ல விளம்பர யுத்தி என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.

தினத்தந்தியில் வரும் "கள்ளக்காதலன் கொலை", "கள்ளக்காதலால் மனைவி கொலை" போன்ற செய்திகளை விரும்பி தேடிப் படிக்கும் எத்தனையோ நபர்களை பார்த்திருக்கிறேன். இவ்வாறு படிக்கும் வாசகர்களை மனதில் கொண்டே சின்ன செய்தியை கூட கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். விஜய் டிவியில் டாக் ஷோவாக வந்து கொண்டிருந்த ஒரு பிரபலமான நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் இதைப் போன்ற விஷயங்கள் தவிர வேறு எதுவும் இல்லாதது போன்ற நிலை ஏற்பட்டது இருந்தது. தினமும் இது போன்ற பல பிரச்சனைகளை மையமாக வைத்து ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள். பொதுமக்களின் இந்த சுவாரசிய விருப்பத்தின் காரணமாகவே செய்தி நிறுவனங்களும் இந்தச் செய்திகளையே வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்.

ஜெசிக்காவின் கொலை வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பு பணபலத்திற்கு முன்பாக இந்தியாவில் நீதி, நியாயம் என்பதெல்லாம் கிடைக்காது என்பதை மற்றொரு முறை வலுவாக நிருபித்து இருக்கிறது.

7 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

//ஜெசிக்காவின் கொலை வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பு பணபலத்திற்கு முன்பாக இந்தியாவில் நீதி, நியாயம் என்பதெல்லாம் கிடைக்காது என்பதை மற்றொரு முறை வலுவாக நிருபித்து இருக்கிறது.
//
வேதனையான உண்மை...

1:59 AM, February 26, 2006
Anonymous said...

தமிழ் சசி, அமெரிக்காவிலே இவ்வகை புலனாய்வுத்தொ/க்கொலைக்காட்சிகள் காட்டும் கூத்தினைப் பார்க்கின்றீர்கள்தானே? நடாலி ஹொலேவேயினை வைத்து நடக்கும் கூத்து ஓரளவுக்கு ஓய்ந்திருக்கின்ற வேளையிலே (அப்படியும் சொல்லிவிடமுடியாது; முந்தநாள்தான் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர், 20/20 இலோ 60 minutues இலோ செவ்வி காணப்பட்டாரென ஞாபகம்), எண்ட்விசிலின் கொலைச்சங்கதி முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றது. இதிலே தொலைக்காட்சிகளுக்கு பண வருவாய்; ஆள் அடுத்த அலைவரிசைக்குப் போகாய், வருவாய். கூட தமக்குத்தாமே புலநாய்க்காவலர்களென (மக்களுக்கு உண்மையைப் பிட்டுபிட்டாக புட்டுபுட்டு வைப்பது என) முடிசூட்டல். போட்டி முதலாளித்துவத்திலே இந்நிலை கவர்ந்திழுக்க இவர்களுக்குத் தவிர்க்கமுடியாதது. இக்கொலையைவிட ஆயிரம் அவசியமான சங்கதிகள் மறைக்கப்படுகின்றன - விற்பனைக்கு ஆகாதென்பதால். அதை நீங்கள் செய்திருப்பதுபோல சுட்டிக்காட்டவேண்டும்; வலைப்பதிவுகள் சுட்டிக்காட்டமுடியும். ஆனால், அதற்கப்பால், இந்நிலை இருக்கும் சூழலில் மாறுமென எந்நாட்டிலும் எதிர்பார்க்கமுடியாது. நக்கீரனின் புலனாய்வைப் பகிடி பண்ணிக்கொண்டு ஜூனியர்விகடனின் புலனாய்வை மெச்சும் இணைப்பு அள்ளிப்போடும் எத்தனை பேர் நம்மிடையே இருக்கின்றார்களெனப் பார்த்தால், இப்படியான புலனாய்வுகளினை நம்பி வாசிக்க, பார்க்கத் தேர்ந்தெடுக்கின்றவர்களிலே தினத்தந்தியை இறங்கப்பார்த்துக்கொண்டு விகடனை 'பைண்டு' பண்ணும் ஆசாமிகள் நமக்குத் தரும் சுவராசியத்தைக் கெடுத்துவிடாதீர்கள் ;-)

8:07 AM, February 26, 2006
Jayaprakash Sampath said...

இது ரொம்ப அநியாயம். hostile witness ஐ ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சட்டம் வரவேண்டும். அப்போதுதான், இது போன்ற high profile வழக்குகளில் நியாயம் கிடைக்கும்.

10:09 AM, February 26, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

பிரகாஷ்,

/*
hostile witness ஐ ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சட்டம் வரவேண்டும்
*/

இவ்வாறு சட்டமெல்லாம் கொண்டு வர முடியாது என்றே நினைக்கிறேன். அது ஒருவர் தனது நிலையை மாற்றிக் கொள்ளும் அடிப்படை உரிமையை தடை செய்வதாக அமைந்து விடும்.

சாட்சிகளை விசாரிப்பதை முறைப்படுத்த வேண்டும். அவர்கள் தங்களுடைய சாட்சியத்தை மாற்றிக் கொள்ளும் பொழுது, அந்த முரண்பாடு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

"Lie Detector" போன்ற நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். உண்மையை வெளிக்கொண்டு வர டெக்னிக்கல் அம்சங்களை பயன்படுத்த வேண்டும்

12:47 PM, February 26, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

இன்னொன்றையும் இங்கு கூற வேண்டும். ஜெசிக்காவின் உடம்பில் இருந்து இரு குண்டுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த இரு குண்டுகள் இரு வேறு துப்பாக்கியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூறுகிறது

இதன் மூலம் இறுதி வரை சாட்சியம் அளித்த விலைக்கு வாங்க முடியாத ஒருவரின் சாட்சியத்தை தவறென்று நிருபித்து இருக்கிறார்கள்.

போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரை விலைக்கு வாங்கி உண்மையான ஒரு சாட்சியை பொய்யாக்கி விட்டார்கள்.

பணம் இருந்தால் எதையும் இந்தியாவில் செய்து விட முடிகிறது. இதன் முன் நீதிமன்றம், சட்டம் இவையெல்லாம் அர்த்தமற்றவையாக மாறி விடுகின்றன

1:26 PM, February 26, 2006
பத்மா அர்விந்த் said...

சசி
பணம் + பதவி இருந்தால் எல்லா ஊரிலும் எதையும் செய்ய முடியும்:)

7:34 PM, February 26, 2006
சீனு said...

//சன் டிவி போன்ற செய்தி நிறுவனமாக NDTV மாறுவது தான் சகிக்க முடியாததாக உள்ளது//

வாஸ்தவமான பேச்சு வாத்யாரே...

11:39 AM, March 02, 2006