3வது பெரிய கட்சி : மதிமுகவா ? பாமகவா ?

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது ? இது தான் இந்தத் தேர்தலில் எழுந்த ஒரு சுவாரசியமான விவாதம். தங்களுக்கு பாமகவை விட ஒரு இடமாவது அதிகமாக தர வேண்டுமென மதிமுகவும், மதிமுகவை விட நாங்கள் தான் பலமான கட்சி என பாமகவும் போட்டியிட்டன. நாங்கள் தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என பாமக தொடர்ந்து கூறி வந்தததும், கடந்த பாரளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு மதிமுகவை விட அதிக தொகுதிகளை ஒதுக்கியதும் தான் இந்தப் போட்டிக்கு அடித்தளமிட்டது.

உண்மையில் மூன்றாவது பெரிய கட்சி மதிமுகவா ? பாமகவா ?

தமிழகம் முழுவதும் இருக்கும் கட்சியாக மதிமுகவும், கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் கட்சியாக பாமகவும் உள்ளன. கடந்த தேர்தல்களில் மதிமுக, பாமக தனித்து போட்டியிட்ட பொழுது சுமார் 5% வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். 5% என்பது ஒட்டுமொத்த தமிழக வாக்கு வங்கியில் 5%. தமிழகமெங்கும் இருக்கும் கட்சி என்று பார்க்கும் பொழுது மதிமுக பெரிய கட்சியாகத் தெரிகிறது. ஏனெனில் பாமக வடமாவட்டங்களில் மட்டுமே உள்ளது.


பாமகவின் 5% ஓட்டுவங்கி என்பது வடமாவட்டங்களில் உள்ள ஓட்டுகள் மட்டும் தான். தமிழகத்தின் மொத்த வாக்குகளை கொண்டு பாமகவின் ஓட்டு சதவீதத்தைப் பார்ப்பது சரியான கணக்கு அல்ல. வடமாவட்ட வாக்குகளை மட்டுமே கொண்டு பார்க்கும் பொழுது, வடமாவட்டங்களில் சுமாராக 15%வாக்கு வங்கி உடைய கட்சியாக பாமக உள்ளது. சில தொகுதிகளில் இது 30-40% வாக்குகளாகவும் உள்ளன. 1996 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இந்த தேர்தலில் கடுமையான "ஜெ எதிர்ப்பு அலை" இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வடமாவட்டங்களில் உள்ள சுமார் 70 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பாமக உள்ளது. இதனால் தான் தேர்தல் காலத்தில் பாமகவிற்கு எப்பொழுதும் மவுசு அதிகமாக உள்ளது. அவர்களும் அதிக இடங்கள் கொடுப்பவர்களிடம் தாவிக் கொண்டிருக்கிறார்கள்.


இதற்கு மாறாக மதிமுக மாநிலமெங்கும் இருப்பதால் அதன் 5% ஓட்டுகள் மாநிலமெங்கும் பல இடங்களில் பரவலாக பெற்ற வாக்குகளாக உள்ளன. சில இடங்களில், குறிப்பாக தென்மாவட்டங்களில் கணிசமான ஆதரவு இருந்தாலும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் சக்தியாக உள்ளது என்பதை பார்க்கும் பொழுது சுமாராக 30-50 தொகுதிகளில் மட்டுமே வைகோவிற்கு கணிசமான ஆதரவுள்ளது. 1996, 2001 ஆகிய இரு தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட மதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெற வில்லை. 1996ல் "ஜெ எதிர்ப்பு அலை" என்று கூறினாலும் 2001ல் மதிமுகவிற்கு ஏற்பட்டது கடுமையான சரிவு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஒரு விஷயத்தை தமிழக அரசியலில் பலர் உணர்ந்து கொள்வதேயில்லை (தினமலர் போன்ற பத்திரிக்கைகளின் பிரச்சாரம் காரணமாக இருக்கலாம்). தமிழக அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

பாமக, மதிமுக இந்த இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கியும் ஒரே அளவாக உள்ளவையே. மதிமுகவிற்கு பாமகவை விட சற்று அதிக ஓட்டுக்கள் உள்ளன என்று வைத்துக் கொண்டால் கூட மதிமுக கூட்டணிக்கு வெற்றி தேடி தரும் கட்சி அல்ல.

எப்படி ?

இரண்டு கட்சிக்கும் சுமாராக 15லட்சம் ஓட்டுக்கள் உள்ளன.

பாமகவின் ஓட்டுகள், "சில" மாவட்டங்களில் மட்டுமே பெறப்படும் ஓட்டுகள். அதாவது சுமாராக உள்ள 80-90லட்சம் வடமாவட்ட ஓட்டுகளில் பெறப்பட்டவை. 80-90லட்சம் ஓட்டுகளில் 15லட்சம். ஆனால் மதிமுகவின் ஓட்டுகள் தமிழகமெங்கும் பெறப்பட்டவை. சுமார் 2.5கோடி வாக்குகளில் 15லட்சம் ஒரே இடத்தில் Concentratedஆக இருக்கும் பாமகவின் ஓட்டுகள் வடமாவட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கின்றன.

ஆனால் மதிமுகவின் ஓட்டுக்கள் தமிழகமெங்கும் சிதறி இருப்பதால் சில தொகுதிகளில் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்க கூடியதாக உள்ளன.
"தமிழகமெங்கும் இருக்கும் கட்சியாக" ஆனால் 15லட்சம் ஓட்டுக்களைப் பெறும் கட்சியாக மதிமுக இருப்பது அதன் பலவீனம். ஆனால் சில மாவட்டங்களில் மட்டுமே இருப்பது தான் பாமகவின் பலம்.

தமிழகமெங்கும் இருக்கும் கட்சி என்பதும், தமிழகமெங்கும் ஒரு கட்சிக்கு அமைப்பு ரீதியாக பலம் இருக்கிறது என்பதை மட்டும் கொண்டு அந்தக் கட்சி பலமான கட்சி என்று முடிவு செய்து விட முடியாது. தமிழகமெங்கும் இருக்கும் கட்சி என்று பார்த்தால் பல தேசிய கட்சிகள் தமிழகமெங்கும் உள்ளன. காங்கிரஸ், பாஜக, கம்யுனிஸ்ட்கள் போன்றவையும் தமிழகமெங்கும் உள்ள கட்சி தான்.

மதிமுக பலவீனமான கட்சி என்றும் நான் சொல்ல வில்லை. பாமகவுடன் ஒப்பிடும் பொழுது மதிமுக பலம் குறைந்த கட்சி என்பது தான் எனது வாதம்.
மதிமுகவின் ஓட்டுக்களை நீங்கள் தொகுதிவாரியாக அலசினால் பல தொகுதிகளில் 1000க்கும் குறைவான ஓட்டுக்கள், சில தொகுதிகளில் 2000, 5000, வெகு சில தொகுதிகளில் மட்டுமே 10,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். அதாவது தமிழகமெங்கும் போட்டியிட்டு 15லட்சம் ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் பாமக பலமாக இருக்கும் பல தொகுதிகளில் 15,000 ஓட்டுக்கள், சில தொகுதிகளில் 30,000 ஓட்டுக்கள் சில தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பொழுது பெற்ற இரண்டாமிடம், 4 தொகுதிகளில் "ஜெ எதிர்ப்பு அலையின்" பொழுதும் கூட பெற்ற வெற்றியையும் கவனிக்க வேண்டும். மிக சொற்பமான தொகுதிகளில் (50-70 இருக்கும்) அவர்கள் பெற்ற ஓட்டுக்கள் 15லட்சம்.

ஒரு தொகுதியின் சராசரி வாக்குகளை கணக்கிட்டால் 15லட்சம்/70 = சுமாராக 20ஆயிரம் ஓட்டுக்கள் வருகிறது.

மாறாக மதிமுக 15லட்சம்/200 = சுமாராக 7500 மட்டுமே

பாமக 50தொகுதிகளில் பலமாக இருக்கிறது என்று கணக்கிட்டால் கூட பாமகவிற்கு வழங்கப்படும் 25 தொகுதிகள் போக மீதம் உள்ள 25தொகுதிகளில் கூட்டணியை வெற்றி பெறச் செய்கின்றனர்.

இதனால் தான் திமுக பாமகவை தன்னுடைய முக்கியமான கூட்டாளியாக கருதுகிறது.

சட்டமன்றத்தில் கணிசமான உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் இரு அவைகளான லோக்சபா, ராஜசபா போன்றவற்றில் பிரதிநிதித்துவம், காபினட் அமைச்சர் என பாமக ஒரு அரசியல் கட்சிக்கான அனைத்து நிலைகளிலும் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இன்னும் மாநில அமைச்சரவை தான் பாக்கி. வரும் நாட்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டால் ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்ந்து அந்த நிலையையும் அடைந்து விடுவார்கள்.கடந்த காலங்களில் பாண்டிச்சேரியில் ஆட்சியை பிடிக்கப் போவதாக முழங்கிக் கொண்டிருந்தார்கள். பாண்டிச்சேரியில்
திமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணி வெற்றி பெற்றால் பாமக கூட்டணி ஆட்சியில் இடம் பிடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

மாறாக மதிமுகவால் இது வரையில் சட்டமன்றத்தில் நுழைய முடியவில்லை. இது வரை ஒரு அரசியல் சக்தியாக மதிமுகவால் வளர முடியவில்லை.

கடந்த கால வெற்றிகளையும், அரசியல் பலத்தையும், தொண்டர் பலத்தையும் கொண்டு பார்க்கும் பொழுது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மதிமுக இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் ஒரு தேக்க நிலைக்கு சென்று விட்டது என்று தான் கூற வேண்டும். சாதி அடிப்படையிலான கட்சியாக பாமக இருப்பதால் பிற சமூகத்தினர் இந்தக் கட்சியில் இது வரையில் இணைந்ததில்லை. இனி மேலும் இணையும் வாய்ப்புகள் இல்லை. பாமகவை பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் இயக்கமாக மாற்ற டாக்டர் ராமதாஸ் மேற்க்கொண்ட முயற்சிகள் தோல்வியையே கண்டன.

மாறாக மதிமுக தன் தளத்தை விரிவுப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சரியான உத்தியை வைகோ உருவாக்கினால் நிச்சயம் 3வது பெரிய கட்சியாகவோ, சந்தர்ப்பம் வாய்த்தால் முதல் - இரண்டாம் இடத்தில் கூட வரலாம். ஆனால் வைகோ எதிர்காலத்தில் மேற்கொள்ளும் யுத்தியை பொறுத்தே அது உள்ளது. வைகோவின் யுத்தியை விட சந்தர்ப்பமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்.

தன்னுடைய கட்சிக்கு 8% வாக்கு வங்கி உள்ளதாக வைகோ தெரிவித்து இருக்கிறார். இந்த தேர்தலில் அது உண்மையா என்று தெரிந்து விடும்.

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே மூன்றாவது பெரிய கட்சி பற்றிய கேள்விக்கும் விடை கிடைக்கும். ஆனால் தற்போதைய நிலையில் பாமக தான் மூன்றாவது பெரிய கட்சி என்பது வைகோவிற்கு கசப்பளிக்கும் உண்மை.