திமுகவிற்கு தோல்வியா ?

தமிழகத்தில் கூட்டணி குழப்பங்கள் விலகி ஒரு தெளிவான களம் உருவாகி இருக்கிறது. மிக பலமான கூட்டணியாக காணப்பட்ட திமுக இன்று சிதறி, கூட்டணி பலத்தில் ஒரு சமபலம் நிலவுவதாகவே தெரிகிறது. இனி சிறிய உதிறிக் கட்சிகள் இரு கூட்டணிகளிலும் இடம் பிடிக்கலாம். அதனால் கூட்டணியில் கட்சிகளின், தலைவர்களின் எண்ணிக்கை உயருமே தவிர வேறு பலன் இருக்கப்போவதில்லை

தமிழகத்தில் பலமான கட்சிகளை வரிசைப்படுத்தினால், அதிமுக, திமுக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என வரிசைப்படுத்தலாம். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், பாஜக போன்ற கட்சிகளை பாராளுமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய மட்டுமே பயன்படுத்தலாம். மாநில அரசியலில் அவர்கள் ஒரு பொருட்டு அல்ல. காங்கிரஸ் முதுகில் ஏறினால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால் இன்றைக்கு அந்த நிலை இல்லை. ஒரளவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் கூட்டணியின் பலத்தை நிர்ணயிக்கும் அளவுக்கோ, சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அளவுக்கு வலிமையான கட்சியாகவோ காங்கிரஸ் இல்லை. பாஜகவிற்கு கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற சில இடங்களில் கணிசமான ஆதரவு உள்ளது. தமிழகத்தில் கம்யுனிஸ்ட்களுக்கு நாகப்பட்டினம், மதுரை போன்ற சில இடங்களிலும், கம்யுனிஸ்ட்களின் தொழிற்சங்கங்கள் வலுவாக இருக்கும் இடங்களிலும் ஆதரவு இருந்தாலும் கூட்டணி சமபலத்தை இவை எந்தவிதத்திலும் பாதிக்காது.

கூட்டணி கட்சிகள் மூலம் திமுக பலம் வாய்ந்த கூட்டணி போல தெரிந்தாலும், காங்கிரஸ் கம்யுனிஸ்ட்களால் திமுகவிற்கு ஒரளவிற்கு வாக்குகள் சேருமே தவிர, பெரிய பலம் ஏதும் கிடையாது. இதனால் திமுக கூட்டணியை பல கட்சிகளின் கூட்டணி என்பதை விட திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி என்றும், அதிமுகவை அதிமுக-மதிமுக-விடுதலைச்சிறுத்தைகள் என்பதாக மட்டுமே பார்க்க முடிகிறது. இவ்வாறு பார்க்கும் பொழுது இரு கூட்டணிக்கும் இருக்கும் சம்பலம் தெளிவாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்த போதிலும் அதிகபட்ச "பேராசை" காரணமாகவும், சரியான Strategy இல்லாமலும், தனிப்பட்ட ஈகோ காரணமாகவும் திமுக, தேர்தலுக்கு முந்தைய முதல் ரவுண்டில் அதிமுகவிடம் தோல்வி கண்டுள்ளது. கலைஞர் அரசியல் சாணக்கியரா என்ற கேள்வி கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுதே எனக்கு எழுந்தது. குட்டிக் கட்சிகளுக்கு ஸ்டாலின் மேற்பார்வையில் அதிக இடங்களை கடந்த தேர்தலில் ஒதுக்கிய கலைஞர், மதிமுக, பாமக போன்ற தன் பக்கம் இருக்க கூடிய கட்சிகளை பறிகொடுத்தார்.

இம்முறையும் அது போன்றே நிகழ்ந்துள்ளது.

திமுகவின் கூட்டணி குழப்பங்களை ஆரம்பத்தில் இருந்து கவனிக்கும் பொழுது மதிமுக-திமுக இடையே ஒட்ட முடியாத ஒரு நிலை தான் இருந்து வந்துள்ளது. அதனால் தான் வைகோ குறித்த பதிவினை எழுதும் பொழுது கூட வைகோ அதிமுக பக்கம் செல்வது தான் அவருக்கு நல்லது என்று நான் எழுதினேன். ஜெயலலிதாவிடம் வைகோ கூட்டணி வைக்கும் பொழுது கடந்த கால நிகழ்வுகள் குறித்த சில சங்கடங்கள் குறிப்பாக பொடா கைதினால் ஏற்பட்ட மனக்கசப்பு இருக்கலாம். ஆனால் அதைத் தவிர பெரிய முரண்பாடோ, உறவுச்சிக்கலோ இந்த இரு கட்சிகளுக்கு ஏற்படும் வாய்ப்பு இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் பொழுது வைகோவின் வளர்ச்சி குறித்து திமுக தலைமைக்கு இருக்கும் அச்சம், அதன் காரணமாக அவரை பலவீனப்படுத்தும் முயற்சிகள் போன்றவையெல்லாம் நடக்கும். எனவே திமுக-மதிமுக எந்தக்காலத்திலும் ஒரு இயல்பான கூட்டணியாக இருக்க முடியாது. வைகோவின் பலத்தை மட்டும் உயயோகித்துக் கொண்டு மதிமுகவிற்கு குறைவான, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை கலைஞர் (ஸ்டாலின்) ஒதுக்கக்கூடும் என்றே நான் நினைத்தேன். திமுகவின் கூட்டணி தகராறுகளை பார்க்கும் பொழுது அவ்வாறே தோன்றியது. இன்று வைகோவின் பேட்டி கூட அதனை உறுதிப்படுத்துகிறது.


அதே நேரத்தில் ஜெயலலிதா ஏற்படுத்தும் எந்தக் கூட்டணியும் தேர்தலில் அவருக்கு வெற்றியை கொண்டு வருவதற்கான தற்காலிக ஏற்பாடு மட்டுமே. கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதாவும் கைகழுவி விடுவார். பின் அடுத்த தேர்தல் வந்தால் மறுபடியும் அரவணைக்க முயலுவார். ஜெயலலிதா, கலைஞர் இருவருமே எதிரிகள் என்னும் பொழுது இந்த தற்காலிக ஏற்பாடு ஒரு வகையில் வைகோவிற்கு நல்லது. வைகோ பெரிய குழப்பத்திற்குப் பிறகு ஒரு நல்ல முடிவையே எடுத்துள்ளார் என்று சொல்ல வேண்டும்.

மிகப் பெரிய கூட்டணியில் தொகுதி சிக்கல்கள் வரும் என்றாலும் அதனைச் சுமூகமாக தீர்த்து வைக்க திமுக முனைந்ததா என்பதே கேள்வி ? இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். கலைஞர் அரசியல் சாணக்கியத்தனத்துடன் இந்தப் பிரச்சனையை அணுகவில்லை. சில தனிப்பட்ட விரோதங்கள், ஈகோ காரணமாக தமிழகத்தின் அடுத்த ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளார் என்றே நான் நினைக்கிறேன்.

திமுக கூட்டணியில் தொகுதிகளை இவ்வாறு பிரித்து இருக்கலாம்.
திமுக - 130, காங்கிரஸ், மதிமுக, பாமக - 26, விடுதலைச் சிறுத்தைகள் - 10, கம்யுனிஸ்ட்கள் - 16
பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இருவரும் கூட்டாக 30தொகுதிகளுக்கு தயாராக இருந்தனர் என்பதும், மதிமுக 25 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டனர் என்பதையும் வைத்து பார்க்கும் பொழுது கலைஞர் மிகச் சுலபமாக இந்த கூட்டணி பிரச்சனையை தீர்த்து இருக்கலாம். இங்கு குறைவான தொகுதிகள் காங்கிரசுக்கு தான். காங்கிரசுக்கு கொஞ்சம் அதிகமான தொகுதிகளை கொடுக்க நினைத்தால் இவ்வாறு பிரித்து இருக்கலாம்.
திமுக - 130, காங்கிரஸ் - 32 , பாமக - விடுதலைச் சிறுத்தைகள் - 30 மதிமுக - 26 கம்யுனிஸ்ட்கள் (மார்க்ஸ்சிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட்) - 16.
பிற கட்சிகளுக்கு "மனதில் இடத்தை" கொடுத்து கூட்டணிப் பிரச்சனையை முடித்திருக்கலாம்.

இதன் மூலம் மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற வலுவான கட்சிகளை கலைஞர் தன்னுடன் தக்க வைத்திருக்க முடியும். இந்த உடன்பாட்டில் காங்கிரசுக்கு சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் கூட்டணியில் இருந்து வெளியேற முடியாத கட்சியான காங்கிரசை டெல்லி தலைமை மூலம் எளிதாக சமாதானப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் இவ்வாறு எதையும் செய்யாமல் மதிமுகவை குறி வைத்து அவர்களுக்கு குறைவான இடங்களை வழங்கும் போக்கிலேயே கலைஞரின் நிலை இருந்து வந்துள்ளது. மதிமுகவிற்கு குறைவான இடங்களைக் கொடுத்து அவரை ஒரு குட்டி தலைவராக்கி விடலாம் என்றோ, வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளைக் கொடுத்து அவருக்கு பலம் ஏதும் இல்லை என்று நிருபித்து விடலாம் என்பதாகவோத் தான் திமுக தலைமை யோசித்து இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே திமுகவிற்கும் மதிமுகவிற்கும் பிரச்சனை தொடங்கியது இதன் காரணமாகத் தான். 18, 20, 22 என எண்ணிக்கையை அதிகரித்த திமுக பிறகு அத்துடன் நிறுத்திக் கொண்டது. மதிமுக 35ல் தொடங்கி 25வரை தனது தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள முன்வந்தது. மதிமுகவுக்கு மட்டும் தொகுதிகளைக் குறைத்துக் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டிய திமுக தலைமை, ஏன் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தொகுதிகளை குறைப்பதில் முனைந்திருக்க கூடாது ?

கலைஞர் யோசித்து நயமாக, கவிதையாக பேசக் கூடியவர் என்ற நிலை மாறி இன்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கும் வாய்ப்பை கெடுத்தது கலைஞரின் பேச்சு தான். "22க்கு ஒப்புக் கொண்டால் கூட்டணியில் இருக்கலாம்" என்று கூறியதன் மூலம் மதிமுக அணி மாறுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.

முதலில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணியை அமைக்க முயற்சி எடுக்க வேண்டும். பின் தனித்து ஆட்சியை பிடிக்க முடியுமா, கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். இனி கலைஞர் 145தொகுதிகளில் கூட போட்டியிடலாம். ஆனால் எத்தனை இடத்தில் வெற்றி பெறப் போகிறார் ? இந்த தேர்தலில் அதிமுக சார்பான கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கலாம். அல்லது ஒரு குழப்பமான முடிவை தமிழக மக்கள் கொடுக்கலாம். திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும்.

இன்று தமிழகத்தின் வாக்கு வங்கி பல கட்சிகளிடையே சிதறிக் கிடக்கிறது. இதில் பலமான கட்சியாக இருப்பது அதிமுக. அடுத்த நிலையில் தான் திமுக உள்ளது. இந்த இரு கட்சிகளின் பலத்தை ஆராயும் பொழுது திமுக வடமாவட்டங்களில் பலமாக உள்ளது. அதிமுகவின் பலம் தென்மாவட்டங்கள்.

கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் பெரும்பாலும் வடமாவட்டங்களில் இருப்பவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக, வடமாவட்டங்களில் அதன் கூட்டணி கட்சியாக இருந்த பாமக மூலம் கணிசமான தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் ஆட்சியைப் பிடித்தது. கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றதற்கு மதிமுக தனித்து போட்டியிட்டதும் ஒரு காரணம்.

திமுக வடமாவட்டங்களில் கடந்த முறை வெற்றி பெற முக்கிய காரணம் அதனுடைய பலம் மட்டும் என்று சொல்லி விட முடியாது. விடுதலைச் சிறுத்தைகளுடன் திமுக கொண்ட கூட்டணியும் முக்கிய காரணம். இதனையும் இம் முறை கலைஞர் கவனிக்க தவறி விட்டார்.


கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் சுமார் 2லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். திமுக-பாமக-மதிமுக-காங்கிரஸ் என்ற பலமான கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக, திருமாவளவனை விட சுமார் 80,000 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக சுமார் 1லட்சம் ஓட்டுகளைப் பெற்றது. இதனை கவனிக்கும் பொழுது திருமாவளவன் எந்தளவுக்கு வெற்றியை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருக்கிறார் என்பது தெளிவாகும். சுமாராக 20-25 தொகுதிகளில் திருமாவளவனுக்கு கணிசமான ஆதரவு உள்ளது. திருமாவளவனை அதிமுக கூட்டணிக்கு அனுப்பியதன் மூலம் எளிதில் வெற்றிப் பெறக்கூடிய 20க்கும் மேற்பட்ட வடமாவட்ட தொகுதிகளை கலைஞர் கடுமையான போட்டிக்குள்ளாக்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தலித் மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.

திமுக-பாமக கூட்டணி வடமாவட்டங்களில் வலுவான கூட்டணி தான் என்ற போதிலும் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்குச் சென்றது அதிமுகவிற்கு வலுச் சேர்த்துள்ளது.

தென்மாவட்டங்கள் என்று பார்த்தால் அதிமுக தான் பலமான கட்சி. மதிமுகவின் பலமே தென்மாவட்டங்கள் தான். கடந்த தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிட்ட பொழுது சுமார் 20தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இம்முறை மதிமுக அதிமுகவுடன் சேரும் பொழுது இந்த தொகுதிகளை நிச்சயமாக திமுக இழக்கும். இவை தவிர மதிமுக தன்னுடைய வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக கூறி வருகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சிக்கும் தென்மாவட்டங்களில் பலம் கிடையாது. கிட்டத்தட்ட திமுக தென்மாவட்டங்களில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை தான் உள்ளது.

இவ்வாறு கூட்டணி கணக்குகளை சீர்தூக்கி பார்க்கும் பொழுது வடமாவட்டங்களில் திமுக கூட்டணியும், தென்மாவட்டங்களில் அதிமுக கூட்டணியும் வலுவாக உள்ளன. சுமாராக 100 தொகுதிகளில் திமுகவும், 100முதல்-130 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் பலமாக உள்ளன. இந் நிலையில் திமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் எந்தளவுக்கு உள்ளன என்பது விவாதத்திற்குரியது. கூட்டணியே இல்லாமல் இருந்த ஜெயலலிதா மிக Aggressive கவும், திமுக குழப்பங்களுடனும் இது வரை களத்தில் உள்ளனர்.

கடந்த சில தேர்தல்களை கவனிக்கும் பொழுது ஜெயலலிதா ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகவே வெளிப்பட்டுள்ளார். அவருக்கு ஆலோசனை சொல்லும் சில "பத்திரிக்கையாளர்கள்", பணமுதலைகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள், ஆட்சியில் இருக்கும் பொழுது உதவும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் என ஒரு வலுவான ஆலோசனைக் குழுவை உருவாக்கியிருக்கிறார். ஆனால் திமுக தலைமை ஸ்டாலினின் மேற்பார்வையில் இருப்பதால் கலைஞருக்கே இருக்கக் கூடிய சாணக்கியத்தனம் இல்லாமல் ஒரு குழப்பான யூனிட்டாகத் தான் வெளிப்பட்டு இருக்கிறது.

திமுகவிற்கு கூட்டணி தவிர கைக்கொடுக்க கூடிய ஒன்று anti-incumbency factor - ஆளும்கட்சிக்கு எதிராக ஒவ்வொரு தேர்தலிலும் உருவாகும் எதிர்ப்பு உணர்வு. திமுக சரியான பிரச்சாரம் மூலமாக இனி வரும் நாட்களை திடமாக எதிர்கொண்டால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். இது வரை திமுக கூட்டணி ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது. கூட்டணியின் பலம் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு தெளிவான பிரச்சாரத்தை திமுக முன்னெடுக்க வேண்டும். ஆளும்கட்சிக்கு எதிராக இயல்பாக இருக்க கூடிய உணர்வுகளை தங்களுக்கு சாதகாமாக மாற்றிக் கொள்ள முனைய வேண்டும்.

இல்லையேல் அடுத்த ஐந்து ஆண்டுகள் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிக் கொண்டு எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்க முடியும்