தமிழக அரசியலில் கொள்கைகள்

தேர்தல் நேரம் வந்தாலே கொள்கைப் பற்றியப் பிரச்சனையும் வந்து விடுகிறது. ஒரு கூட்டணியில் இருந்து மற்றொரு கூட்டணிக்கு தாவும் அரசியல் தலைவர்களின் கொள்கைகள் குறித்து கடுமையாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படும். சென்ற சில தேர்தல்களாக டாக்டர் ராமதாஸ் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு தாவுவது குறித்து விமர்சனங்களும், கேலியும், நையாண்டியும் பிரபலமான பத்திரிக்கையில் தொடங்கி வலைப்பதிவு வரை அரங்கேறியது. ராமதாஸ் பத்திரிக்கைகளின் விமர்சனங்கள் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், ஒவ்வொரு முறை கூட்டணி தாவும் பொழுதும் அதிக தொகுதிகள் பெற்று மைய அமைச்சரவையில் சாதாரண துணை அமைச்சர் தொடங்கி காபினட் அமைச்சர் வரை தன் கட்சியை நிலை நிறுத்திக் கொண்டார். இப்பொழுது ராமதாஸ் அணி மாறுவது ஒரு சாதாரண நிகழ்வாகி விட்டது. பத்திரிக்கைகளின் விமர்சனங்களையோ, பிற எதிர்ப்புக்களையோ ராமதாஸ் அதிகம் கண்டுகொள்வதும் இல்லை. ராமதாசின் கொள்கைகள் பற்றியும் இப்பொழுது யாரும் அதிகம் பேசுவதில்லை

ஆனால் இம்முறை இந்தச் சுழற்ச்சியில் சிக்கிக் கொண்டவர் வைகோ. வைகோ நிறைய யோசித்தார். என்னவோ அவர் கொள்கையுடன் இருந்தால் அவரை தமிழக முதலமைச்சராக தமிழக மக்கள் உட்கார வைத்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தாரா அல்லது எதிர்கால தமிழக ஆளுங்கட்சியாக அமர கொள்கைவாதியாக இருக்க வேண்டும் என நினைத்தாரா தெரியவில்லை. பலமாக யோசித்தார். அவர் ஒவ்வொரு நாளும் யோசித்துக் கொண்டே இருக்க, வைகோ எங்கே திமுகவுடன் தங்கி விடுவாரோ என்ற "எரிச்சலில்" இருந்த "சில" பத்திரிக்கைகள், இணையத்தில் இருக்கும் "சில" குழுக்கள் எல்லாம் வைகோ அணி தாவியவுடன் கொள்கை என்னவாயிற்று, அரசியல் நேர்மை என்னவாயிற்று எனக் கூக்குரலிட தொடங்கி விட்டனர்.

இங்கு கொள்கைகள் வைகோவிற்கும், திருமாவுக்கும் தான் அதிகம் போதிக்கப் படுகிறது. ஆனால் ஜெயலலிதாவின் கொள்கைகள் பற்றி யாரும் பேசுவதில்லை.

தமிழ் மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள், எனக்கு கூட்டணி தேவையில்லை என சூளுரைத்த "அம்மா", கூட்டணிக் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு யாராவது வரமாட்டார்களா என்று காத்துக் கிடந்த நிகழ்வுகள் பற்றி இந்தப் பத்திரிக்கைகளும், குழுக்களும் ராஜதந்திரம் என்று தான் எழுதிக் கொண்டிருந்தனவே தவிர அம்மாவின் பரிதாப நிலைப் பற்றியோ, அவரின் கொள்கைகள் பற்றியோ எழுதவேயில்லை.

இந்தியத் திருநாட்டின் இறையாண்மையை காக்கப் பிறந்த ஜெயலலிதா, "பயங்கரவாதி" வைகோவை பொடா சட்டத்தில் உள்ளே தள்ளி இந்திய இறையாண்மையை காப்பாற்றிய அரும் பெரும் காரியத்தைச் செய்தவர். இந்திய இறையாண்மையை காப்பாற்ற ஜெயலலிதா செய்த இந்த மகத்தான காரியத்திற்காக ஒரு பிரபலமான அரசியல் "விமர்சகர்" ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போடுங்கள் என அவரின் வாசகர்களுக்கு பரிந்துரை செய்தாராம். அவ்வாறு இந்திய இறையாண்மையை காத்து நின்ற ஜெயலலிதா ஒரு "பயங்கரவாதியை" தன் கூட்டணியில் கொண்டு வருவதற்காக தமிழகத்தின் உளவுத்துறை மூலமும், பிற தூதவர்கள் மூலமும் தினமும் "கெஞ்சிக்" கொண்டிருந்த கொள்கைப் பற்று மிக்க நிகழ்வுகளைப் பற்றி "சில" பத்திரிக்கைகள், இணையக் குழுக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதன் நோக்கம், கணிக்க முடியாத புதிர் அல்ல.

உளவுத்துறையின் "திறமையை" மட்டும் நம்பி இல்லாமல் வைகோவின் பால்ய நண்பரான காளிமுத்துவை கட்சியின் தலைவராக்கி, அவருடைய ஒரே வேலை வைகோவை கூட்டணிக்கு கொண்டு வருவது தான் என்று உத்தரவு பிறப்பித்து, அவரும் அப்பல்லோவில் "க்ளுக்கோஸ்" ஏற்றிக்கொண்டிருந்த நிலையிலும் குட்டிக் கதைகளையும், இதிகாச உதாரணங்களையும் எடுத்துக் கூறி வைகோவை "துரத்திக்" கொண்டிருந்த, அழுது கெஞ்சிக் கொண்டிருந்த அற்புதமான காட்சிகளை, ஜனரஞ்சகமான நிகழ்வுகளை தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கள். என்றாலும் அந்த கொள்கைப் பற்று மிக்க காட்சிகளை அனைவருக்கும் இந்தத் தருணத்தில் ஞாபகப் படுத்தலாம் என்று தோன்றியது.

இந்து மடத்தின் பிரபலமான மடாதிபதியை ஜெயலலிதா சிறையில் தள்ளியதையும், அவருடைய எல்லையற்ற "பேரானந்த" நிலைகளை பிரபலப்படுத்தியதையும் இந்து தர்மத்தின் பாதுகாவலர்களாக தங்களை கருதிய "பாரதீய ஜனதா கட்சியால்" சகிக்க முடியாமல் போய் ஜெயலலிதாவுடன் இனி எக்காலத்திலும் கூட்டு கிடையாது என சூளுரைத்ததையெல்லாம் மறந்து "அம்மாவின்" அருளுக்காக காத்து நின்ற அந்த கொள்கைப் பற்று மிக்க திருக்கோலத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது.

அம்மா இந்தக் "காவிக் கூட்டத்தை" கண்டுகொள்ளாமல் "முஸ்லீம் லீக்கை" அரவணைத்துக் கொண்டது கொள்கைப் பற்று மிக்க நிகழ்வாக பலருக்கு தெரிகிறது போலும். காங்கிரசை "pseudo-secularist" என்று வர்ணிக்கும் அரசியல் அறிவுஞீவிகளுக்கு ஜெயலலிதா Perfect secularist ஆக தெரிந்திருக்கிறார். ராமர் கோயில் கட்ட கரசேவை, முஸ்லீம்களை வேட்டையாடிய நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் தோன்றிய திருக்கோலம், மதமாற்ற தடுப்புச் சட்டங்கள் என எல்லாமும் மறந்துப் போய் இன்று அம்மா நோன்பு கஞ்சி சாப்பிட கிளம்பி விட்டார்.

இப்படி ஜெயலலிதாவின் கொள்கைகள் பற்றி அதிகம் பேசப்படாமல் வைகோவின் அரசியல் நேர்மை மட்டுமே கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது. வைகோவும் இவ்வாறு கொள்கைகள் பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு மிகவும் சிரமப்பட்டு கருணாநிதி இந்திரா காந்தியை ஆதரிக்கவில்லையா ? மிசாவில் ஜெயிலில் போடவில்லையா என்பன போன்று பேசி இன்னமும் தான் அரசியல் அரிச்சுவடி தாண்டவில்லை என்று உணர்த்திக் கொண்டிருக்கிறார். வைகோ தைலாபுரம் சென்று அரசியல் பாடம் பயிலலாம். இவ்வாறான சூழ்நிலையில் ராமதாஸ் எப்படி நடந்து கொள்வார் என்பதை தெரிந்து கொள்வது வைகோவின் எதிர்காலத்திற்கு முக்கியமாகப் படுகிறது.

சுந்தரமூர்த்தி அவர்கள் கூறுவது போல தான் ஒரு கொள்கைவாதி என ஒரு புறம் காட்டிக் கொள்வதும் பிறகு அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதும் வைகோவிற்கு எந்த வகையிலும் உதவாது. அவர் எடுத்த நிலைப்பாட்டினை உறுதியாக எடுக்க வேண்டுமே தவிர தடுமாறி, உளறிக் கொட்டிக் கொண்டிருக்க கூடாது. அவருடைய பேச்சு அவரது நிலைப்பாட்டில் அவருக்கே சில பிரச்சனைகள் இருக்கிறது, சந்தர்ப்பத்தால் இது நேர்ந்திருக்கிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதாக உள்ளது.

இப்படி பரவலாக அனைவரும் பேசும் கொள்கைகள் என்றால் என்ன ? எந்தக் கொள்கையை யார் கட்டி காப்பாற்ற வேண்டும் ? சாதாரண மக்களுக்கும் இந்தக் கொள்கைகளுக்குமான தொடர்பு என்ன ?

திராவிட கட்சிகளின் வழி வந்த தமிழக மக்கள் தான் இன்று சபரிமலைக்கும், திருப்பதிக்கும், பழனிக்கும், மேல்மருவத்தூருக்கும் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்து மத பக்தர்களாக காட்சி தரும் இவர்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்பரிவார் அனுதாபிகளும் அல்ல. விநாயகர் சதூர்த்தி வந்தால் தமிழகமெங்கும் விநாயகர் சிலைகள் முளைத்து, காவிக் கொடிகளுடன் கும்மாளமாய் குளத்தில் கரைக்கச் செல்பவர்கள் கூட சங்கராச்சாரியார் கைது போன்ற பிரச்சனைகளை "மிக சுவாரசியமான", பார்க்க பரபரப்பான, கிளுகிளுப்பான பிரச்சனையாகத் தான் பார்த்து கொண்டிருக்கின்றனரே தவிர, தாங்கள் வணங்கும் இந்து மத கடவுள்களை கட்டிக் காக்கும் (?) மடாதிபதி கைது செய்யப்பட்டதாக உணர்ச்சிப் பொங்க வில்லை. (உணர்ச்சிப் பொங்கியவர்கள் எல்லாம் குறிப்பிட்டச் சிலரே).

90களில் விநாயகர் சதூர்த்தி தமிழகமெங்கும் பரவிய பொழுது தமிழகம் சங்பரிவார் கும்பல்களின் மற்றொரு புகலிடமாகி விடுமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்பட்டது. சென்னையில் மார்வாடிகளால் கொட்டப்பட்ட பணம் கலவரங்களாக மாறிய சூழ்நிலை அவ்வாறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு ஊரிலும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப் பட்டாலும், இந்து முண்ணனி இந்த விழாக்களை தங்களின் விழாக்களாக நடத்தினாலும் இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கடவுள் பக்தியை விடவும் ஒரு உற்சாக மிகுதியான உணர்வு தான் இருக்கிறது. கொஞ்சம் ஜாலியாய் கொண்டாடும் பண்டியாகத் தான் இதனைக் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

நெய்வேலியில் என் வீட்டிற்கு அருகிலேயே பெரிய விநாயகர் சிலையை வைத்து கொண்டாடும் எத்தனையோ பேர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் விநாயகப் பகதர்களோ, ஆன்மிகவாதிகளோ அல்ல. அவர்களுக்கு தேவை ஒரு உற்சாகம். இந்த உற்சாகம் எதில் கிடைக்கிறதோ அதனுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வார்கள். சிறிது நாட்கள் விநாயகரை வைத்து கொண்டாடி விட்டு அந்த நாட்களை ஜாலியாக கழித்து விட்டு, பின் அந்த பெரிய விநாயகர் சிலைகளை கொண்டு ஏரியிலோ, குளத்திலோ அடித்து உதைத்து கரைத்து விடுவதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம் கிடைக்கிறது. இன்னும் சொல்லப் போனால் விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பது போன்ற விஷயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் விநாயகர் சதூர்த்தி இந்தளவுக்கு தமிழகத்தில் பரபரப்பாக இருந்திருக்காது.

இவ்வாறு தான் ஒவ்வொரு விழாவும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் மாரியம்மன் விழா, செடல் விழா போன்றவை பார்க்கும் பொழுது நமக்கு இது இன்னும் தெளிவாக புரியும். இந்த விழாக்கள் உற்சாகம் மிகுந்த தருணங்களாகவே பார்க்கப்படுகின்றன.

இவ்வாறான மக்களின் இந்த உற்சாகப் பிரியம் தான் அதனை தடுக்கும் பெரியாரின் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்து விட்டன என நான் நினைக்கிறேன்.

இன்று சபரிமலைக்குச் செல்லும் சாதாரண பக்தனாக இருந்தாலும், அலகு குத்தி தேர் இழுக்கும் அதி தீவிர பக்தனாக இருந்தாலும் அவன் தீவிர ஆன்மிகவாதியும் அல்ல, இந்து மதத்தின் மேல் பற்றுக் கொண்டவனும் அல்ல. ராமர் கோயில் கட்டுவது அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவது அவனை உணர்ச்சி வசப்படுத்துவதும் இல்லை.

இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இன்னும் பல விஷயங்களில் தமிழனின் இத்தகைய, "எதனுடனும் தீவிரமாக ஒட்டாத" மனப்பாங்கினை பார்க்க முடியும்.

இவ்வாறான நிலையில் சாதாரண தமிழக வாக்காளன் எதைக் கொண்டு வாக்களிக்கிறான் ?

இன்றைய இந்திய/தமிழக சூழலில் மக்களுக்கு தேவை கொள்கைகள் அல்ல. யாருடைய கொள்கைகளும் யாருக்கும் தேவையில்லை. மக்களின் தேவை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தான். இவை தான் தேர்தலில் முக்கிய பிரச்சனை.

தலைவர்கள் மற்றும் கட்சிகள் மீதான அபிமானம், சாதி அபிமானம், உள்ளூர் பிரச்சனைகள், உள்ளூர் தலைவர்கள், அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் இவையே தமிழக வாக்காளனை உந்தும் சக்திகள். தமிழக வாக்காளனின் இந்தப் பிரச்சனைகளை யார் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் தான் தேர்தலில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். சிறு நகரங்கள், கிராமங்கள் இவற்றை பரவலாக உள்ளடக்கிய தமிழகத்தில் இதனைக் கொண்டு மட்டுமே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. பெரு நகரங்களில் வேண்டுமானால் கொள்கைகள் பற்றி அறிவுஞீவிகளும், படித்தவர்களும் பேசிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் கொள்கைகளோ, கூட்டணி தாவுதலோ சாதாரண தமிழக வாக்காளனைப் பொறுத்தவரை பெரிய பிரச்சனையில்லை. அவன் அதைப் பொருட்படுத்துவதுமில்லை

தமிழக அரசியலில் கொள்கைகளின் போக்கு குறித்து சங்கரபாண்டி அவர்களின் கருத்துக்கள்