பத்திரிக்கைகள், டிவி சேனல்கள் எனப் பலவற்றின் வழக்கமான மசாலாவை பார்த்து பழகிப் போன எனக்கு IBNLiveன் ராஜ்தீப் சர்தேசாய் இவ்வாறு கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை தான்,
I believe that we in the media are running out of ideas
செய்தி நிறுவனங்களில் இருக்கும் எங்களுக்கு புதிய உத்திகள் எதுவும் தெரியவில்லை, அதனால் தான் சாதாரணப் பேட்டிகளைக் கூட "Exclusive" என்பன போன்ற பெயர்களில் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் ராஜ்தீப்.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் அவர் கூறிய மற்றொரு கருத்து தான் கவருவதாக இருந்தது.
Maybe, we as journalists need to start recognising that a channel is not a one day 24 hour match, its a 365 day hour by hour challenge where our main task is simply to stay on top of the news, without titillating the viewer, but actually enhancing their knowledge. Will it happen? Don't know.
ஒரு செய்தி நிறுவனத்தின் வேலை "செய்திகளை" தருவது மட்டுமே. கொடுக்கின்ற செய்திகள் பார்ப்பவர்களை வசப்படுத்துவதற்காக இல்லாமல்,
செய்திகளை கொடுப்பது மட்டும் தான் ஒரு செய்தி நிறுவனத்தின் வேலை என்கிறார் ராஜ்தீப். Very simple.
ஆனால் தமிழகத்தில் வெளியாகும் மஞ்சள் பத்திரிக்கை தொடங்கி சில ஆங்கிலப் பத்திரிக்கைகள், டிவி சேனல்கள் வரை செய்திகளை எவ்வாறு தருகிறார்கள் என்பது நமக்கு புரியும். உதாரணமாக சன் டிவியின் உளவியல் வன்முறை பற்றி மானுஷ்ய புத்திரன் எழுதியிருந்தார். சன் டிவி பொதுமக்களின் பேட்டி என்பன போன்ற ஒரு செய்தி வடிவத்தைக் கொண்டே எப்படி தன் கருத்துக்களை மக்கள் மீது திணித்து அவர்களை தங்கள் பக்கம் வசப்படுத்த முனைந்துக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெளிவாக தெரியும்.
அது போல இந்த ஆண்டின் பட்ஜெட் குறித்து தினமலர் வெளியிட்ட செய்தியை இங்கு குறிப்பிடலாம். தினமலர் வெளியிடும் செய்திகளில் பட்ஜெட் பற்றி மட்டும் தான் குறிப்பிட வேண்டுமென்பது இல்லை, அவர்களுடைய பல செய்திகள் திரிக்கப்பட்ட செய்திகள் தான். ஆனால் பட்ஜெட் போன்ற செய்திகளை கூட தங்களுக்கு சாதகமாக எப்படி திரிக்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது வியப்பு ஏற்படுகிறது.
ஒரு பத்திரிக்கையின் தலைப்பு செய்தியாகட்டும், வேறு எந்தச் செய்தியாகட்டும் அதனைச் செய்தியாக மட்டுமே கொடுக்க வேண்டும். பத்திரிக்கைகள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களை தலையங்கங்களில் மட்டும் வெளிப்படுத்த வேண்டுமென்பது பத்திரிக்கைகளின் நியதியாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் "சிதம்பரம் மக்களை ஏமாற்றினார்" என்பன போன்று வெளியிடுவது, பத்திரிக்கையின் செய்தி வெளியிடும் தன்மையையே கேலிக் கூத்தாக்கி விடுகிறது.
இவ்வாறு பொய்யும் புரட்டும் வெளியிடும் பத்திரிக்கைகள் தங்களை ஜனநாயகத்தின் நாடித்துடிப்பு என்றும், அவர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் ஐனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் முயற்சி என்றும் கூறுவது தான் நகைச்சுவையான விஷயம். இந்து பத்திரிக்கை ஆசிரியர்களை கைது செய்ய ஜெயலலிதா முயற்சி செய்த பொழுது எழுந்த கூக்குரல் இந்த வகையான நகைச்சுவையைச் சார்ந்தது தான். ஜெயலலிதாவின் நடவடிக்கையை சரி என்று ஏற்க முடியவில்லை என்றாலும் அவரின் நடவடிக்கை ஒரு வகையில் எனக்கு குரூரமான திருப்தியையே கொடுத்தது.
அது போலவே கேபிள் தொலைக்காட்சி சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தது முறையற்ற செயல் என்றாலும் பலர் இதனை வரவேற்கவேச் செய்தனர். அந்தளவுக்கு அந்த நிறுவனங்களின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருந்தது.
இன்று தேர்தல் குறித்து செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள் தொடங்கி, தேர்தல் கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் செய்தி நிறுவனங்கள் வரை அவர்களின் செய்திகளைப் பார்க்கும் பொழுது they are running out of ideas என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த தேர்தலை எப்படி எதிர்கொண்டார்களே அதேப் போன்ற உளுத்துப் போனச் செய்திகள், வம்பானந்தா தொடங்கி கழுகு வரை அனைவரும் சொல்லும் பொய்க் கதைகளைப் படிப்பதில் ஏற்படும் அலுப்பு காரணமாக அந்தப் பக்கம் நான் செல்லுவதே இல்லை. பல வருடங்களாக இங்கு ஒரே Formula தான். இதனை தாண்டி வேறு வகையில் தமிழ் பத்திரிக்கைகள் போக முடியாதா என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் they are running out of ideas என்னும் பொழுது நாம் என்னச் செய்ய முடியும்.
***
ராஜ்தீப்பின் கருத்துப் படி ஏதாவது ஒரு செய்தியையோ புத்தகத்தையோ படித்திருக்கிறேனா என்று யோசித்த பொழுது இந்தியப் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப்பின் "Island of Blood" என் நினைவுக்கு வந்தது. இது ஒரு Reporter's Dairy. இலங்கை, ஆப்கானிஸ்தான், அயோத்தி ராமர் கோயில் இடிப்பு போன்ற சம்பவங்களின் நேரடிப் பதிவு தான் இந்தப் புத்தகம்.
Reporter's Dairy என்று சொல்லும் பொழுது அது ஒரு செய்தியாளனின் நேரடி அனுபவங்களை மட்டும் கூற வேண்டும். படிக்கின்ற வாசகன் மீது எந்த வித கருத்து திணிப்பையும் செய்யாமல், கொடுக்கும் செய்திகளைக் கொண்டே ஒரு வாசகன் தன் கருத்துக்களை நிர்ணயித்துக் கொள்வதாக இருக்க வேண்டும். பயணக் கட்டுரைகள் செய்திகளைக் கொடுப்பவை தான். ஆனால் ஒரு தீவிரமான பிரச்சனையை சுற்றி எழுதப்படும் செய்திகளில் சார்பு இல்லாமல் ஒரு செய்தியாளன் எழுதுவது முக்கியம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே செய்தியாளன வாசகர்கள் அறியத் தர வேண்டும்.
அப்படி கொடுக்கும் புத்தகம் தான் Island of Blood என்று நான் நினைக்கிறேன். நான் ஈழத்துப் பிரச்சனைகள் குறித்து எழுதும் பொழுது இந்தப் புத்தகத்தில் இருந்து மேற்கோள்களை காட்டுவது கூட அதன் பொருட்டு தான். அதே சமயத்தில் அனிதா மற்ற இந்தியப் பத்திரிக்கையாளர்கள் போலவே விடுதலைப் புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் விமர்சனங்களை வைத்தார் என்பதும் உண்மை.
ஆனால் Island of Blood அவர் கொண்ட கருத்துக்களை தூக்கி நிறுத்துவதற்காக எழுதப்படாமல் அவருடைய நேரடியான அனுபவங்களை பதிவு செய்யும் முயற்சியாக தெரிவதால் ஒரு நம்பகத்தன்மையை கொடுக்கிறது. அது போல இந்தப் புத்தகம் ஈழப்பிரச்சனையின் வரலாற்றையோ அந்தப் பிரச்சனையையோ விரிவாக சொல்லும் புத்தகமும் அல்ல. ஒரு செய்தியாளரின் நேரடி வர்ணனை என்று சொல்லலாம்.
அனிதா, யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் தன்னுடைய அனுபவத்தை விவரிப்பதற்கும், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் விவரிப்பதற்கும் இருக்கின்ற பெருத்த வேறுபாடு தெளிவாக தெரிகிறது. புலிகளின் இயக்கத்தைச் சுற்றிச் சுழலும் அவரின் அனுபவங்களைக் காணும் பொழுது புலிகளின் இயக்கத்தில் உள்ளவர்களின் விடுதலை உணர்வு தெளிவாக வெளிப்படுகிறது. மாறாக தாலிபான்களின் மத அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் அவர் வர்ணனையைக் கொண்டே அறிய முடிகிறது. புலிகளை தாலிபான்களுடன் ஒப்பிடுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை அவரின் இரு அத்தியாயங்களே தெளிவாக விளக்கும்
அதே நேரத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பல காலமாக இருக்கும் விமர்சனங்களுக்கும் சில இடங்களில் பதிலை தருகிறார். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் பிரபாகரன் ஏன் பத்திரிக்கையாளர்களை அதிகம் சந்திப்பதில்லை, மாத்தையா கொல்லப்பட்டது போன்றவையும் புத்தகத்தில் வருகிறது. இதில் தன்னுடைய சொந்தக் கருத்தாக அனிதா எதனையும் வெளிப்படுத்தவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இதற்கு நேர்மாறாக இருக்கும் மற்றொரு பயணக் கட்டுரையும் எனக்கு ஞாபகத்தில் வருகிறது. அது வாஸந்தியின் யாழ்ப்பாணப் பயணக் கட்டுரை.
இது தன் சொந்தக் கருத்தை வாசகர்கள் மீது திணிக்கும் முயற்சி. ராஜ்தீபின் கருத்துப் படி சொல்ல வேண்டுமானால் வாசகர்களை தன்னுடைய கருத்தை நோக்கி "வசப்படுத்தும்" முயற்சி.
ஒரு பயணக் கட்டுரை எழுதும் பொழுது தான் நேரில் காண்பதை உள்ளபடியே பதிவு செய்ய வேண்டும். அது தான் நேர்மையான அணுகுமுறை. வாஸந்தியின் கட்டுரையை வாசிக்கும் பொழுது அவர் முன்கூட்டியே ஒரு முடிவை திட்டமிட்டு விட்டு அதன் காரணங்களை யாழ்ப்பாணத்தில் தேடிக்கொண்டிருந்தார் என்று தெரிகிறது. கட்டுரையின் இறுதியில் அதனை அவரே தெளிவுபடுத்துகிறார்.
பிரபாகரனை நான் நேரில் சந்திக்காவிட்டாலும், யாழ்ப்பாண விஜயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும், கிடைத்த தரிசனங்களும் மிக முக்கியமானவை, என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் ஊர்ஜிதமாயின. யாழ்ப்பாணத்தில் எழுபது சதவிகிதத்துக்கு மேற்பட்ட மக்களை புலிகள் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஒரு திட்டமிட்ட சாதனையாகத் தோன்றிற்று. அவர்களது ராணுவ பலமும், எதிர்ப்பவர் தமிழரானாலும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், மக்களை விநோதமான மனநிலைக்கு ஆளாக்கியிருந்தது. கண்டும் பதைத்தும், வாய் திறக்கும் திறனை இழந்ததோடு, புலிகள் செய்வதில் ஒரு நியாயம் இருப்பதாகக்கூட நினைக்கும் நிலைக்கு மக்கள் உட்பட்டிருந்தார்கள்
புலிகள் யாழ்ப்பாண மக்களை "உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கட்டுப்படுத்தி" வைத்திருப்பதாகச் சொல்லும் வாஸந்தி அவரது கட்டுரையில் அவர் வாதத்திற்கான காரணங்களைச் சொல்லவில்லை. அவர் சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது என மேம்போக்காக சொல்லி விட்டுச் சொல்கிறார்.
யாழ்ப்பாண குடும்பங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் இருந்து ஒருவர் இயக்கத்தில் இருப்பதாக சொல்லி விட்டு இறுதியில் இவ்வாறு கூறுவது கட்டுரைக்கு ஒரு செயற்கைத்தனத்தையே கொடுக்கிறது.
வாஸந்தி தன்னுடைய யாழ்ப்பாணப் பயணம் குறித்து எழுதும் பொழுது யாழ் நிலவரம் குறித்து சில இடங்களில் கூறுகிறார்,
தமிழீழம் என்பது ஏற்கெனவே சாத்தியமாகிவிட்ட ஒன்றாகத் தோன்றிற்று. ராணுவத்தைக்கண்டு எங்களுக்குப் பயமில்லை, புலிகள் இருக்கிறார்கள் எங்களைக் காப்பாற்ற என்பது மக்களின் தாரக மந்திரம் என்று பட்டது
அசாதாரண காலகட்டத்தை, புலிகள் தங்கள் பொருண்மீய திட்டங்களினால் திறமையாக சமாளித்து வந்ததை, அதன் இயக்குனர், இளைஞர் ரவி அலுவலகத்தைச் சுற்றிக்காட்டி உத்வேகத்துடன் விளக்கினார். பல இளம் புலிகள், பிரபாகரனை ‘‘அம்மா, அப்பாவை விட அதிகமா மதிக்கிறோம். ‘‘அவரது வழிகாட்டலில் நாடு விடுதலை அடைஞ்சு, சுபிட்சமா இருக்கப் போகிறோம் என்கிற நம்பிக்கை இருக்கு" என்றார்கள்
ஆனால் இது எதுவுமே அவருக்கு இயல்பாக தெரியவில்லை. மொத்த யாழ்ப்பாண மக்களும் புலிகளால் மெஸ்மரிசம் செய்யப்பட்டு விட்டனர் என்ற ரீதியில் கட்டுரை எழுதி இருக்கிறார்.
***
அனிதா பற்றி ஒரு சிறு குறிப்பு சொல்லவேண்டுமானால், இவர் 1983 இலங்கை இனக்கலவரம் முதல் இலங்கையின் பலப் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொண்டுள்ளார். 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவத்தை பதிவு செய்த இந்தியாவின் முதல் செய்தியாளர் இவர் தான். இவர் எழுதிய இலங்கை இனக்கலவரம் பற்றிய கட்டுரைகள் தான் இந்தியாவை இலங்கைப் பிரச்சனையில் ஈடுபடவைத்தன என்றுச் சொல்லலாம். 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டும் அல்ல. கொழும்பில் இருந்த பல தமிழரல்லாத இந்தியர்களும் தான் என அனிதா கூறுகிறார். கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்த பல இந்தியக் குடும்பங்கள் சூறையாடப்பட்டதாகவும் அனிதா இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
1983 கலவரம், இந்தியப் படைகள் இலங்கையில் இருந்த பொழுது நடந்த போர்கள், ஜெ.வி.பிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே நடந்த கொலைவெறிப் பிரச்சனைகள், ரஞ்சன் விஜயரத்னே, காமினி திசநாயகே போன்ற இனவெறி தலைவர்களுடனான சந்திப்புக்கள் போன்றவை இலங்கையின் மற்றொரு கோரமுகத்தை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்துகிறது. இது ஒரு சிறிய புத்தகம் தான். ஆனால் இவையனைத்தும் போரினிடையேயும், கலவரத்தின் இடையேயும் எழுதப்பட்டவை என்பதால் இந்தப் புத்தகத்தில் ஒரு யதார்த்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
ஆனால் இலங்கை குறித்துச் சில அத்தியாயங்களே இருப்பது ஒரு குறையாகவும் உள்ளது. இந்தப் புத்தகம் மூலம் இந்தப் பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்தப் போரட்டத்தின் நீண்ட வரலாற்றில் சில நிகழ்வுகளைச் சுற்றி இந்தப் புத்தகம் பின்னப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
சென்னையின் ஏ.சி. அறையில் இருந்து கொண்டு தான் "இலங்கைப் பிரச்சனையின் ஸ்பெஷலிஸ்ட்" என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளின் குண்டுகளுக்கிடையே ஓடி ஒளிந்து அனிதா செய்திகளை சேகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கை மட்டுமில்லாமல் பெண்களை மோசமாக நடத்திய ஆப்கானிஸ்தானில் உயிரை பணயம் வைத்து அவர் செயல்பட்ட விதம் உண்மையிலேயே என்னை வியப்பில் ஆழ்த்தியது.
Saturday, March 11, 2006
பத்திரிக்கைகளிடம் "சரக்கு" இல்லை
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 3/11/2006 02:38:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
9 மறுமொழிகள்:
சசி,
9:47 AM, March 11, 2006மிக நல்ல பதிவு (இதைக்கேட்டுக்கேட்டு உங்களுக்கு புளித்துப்போய்விட்டிருக்கக்கூடும்:-) ஊடகங்கள் அவர்களுடைய அனைத்து கிம்மிக்குகளையும் போன தேர்தலிலேயே விற்றுவிட்டார்கள் என்பதால் எந்தப் புதிய உத்தியையும் எதிர்பார்க்கமுடியாது!
வாஸந்தி அவர்கள் எழுதியதை உங்கள் பதிவு சரியாக பிரதிபலிக்கவில்லை. நீங்கள் சுட்டிய வாஸந்தி அவர்கள் கட்டுரையிலிருந்து:
11:14 AM, March 11, 2006"எத்தகைய நியாயமான போராட்டமாக இருந்தாலும் வன்முறையை நான் எதிர்ப்பவள். அதனால் ரணம் தான் மிஞ்சுமே தவிர சாதகம் இல்லை என்று நினைப்பவள். சொந்த இனத்தவரையும் ஒழிக்க முற்படும் சகிப்புத்தன்மையற்ற போக்கு, மானுடத்துக்கு எதிரான அசுரத்தனம் என்று நம்புபவள். இந்த எனது நம்பிக்கையே எனது நாவலில் புலிகளைப்பற்றின விமர்சனமாகப் பிரதிபலித்தது. தமிழ்ச்செல்வனே தனது கருத்தை விளக்கட்டும் என்று நான் பேசாமல் இருந்தேன். 'தியாகி கிட்டு மற்றும் தியாகி திலீபன் மரணங்களை நீங்கள் மிகவும் கொச்சைப்படுத்திவிட்டீர்கள். எங்கள் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் எழுதிவிட்டீர்கள்' என்றார். 'என் கருத்து தவறாக இருந்தால் அடுத்த புத்தகத்தில் திருத்தி எழுதி விடுகிறேன்' என்றேன் சிரித்தபடி. 'திறந்த மனத்துடன் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறேன்; உங்கள் தலைவரை நேரில் காணும் எதிர்பார்ப்புடன். அவரையும் உங்கள் இயக்கத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆவலுடன்' என்றேன். அதைத் தொடர்ந்து, ஆன்டன் பாலசிங்கம் கிட்டத்தட்ட அரைமணிநேரம் இந்திய அரசும் தமிழகமும் இந்தியப் பத்திரிகைகளும் தங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகவும், தங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதாகவும், அது தங்களுக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் சொன்னார். 'இந்தியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள்தான் இங்கு மக்களுடைய போராட்ட சக்தி. இந்தப் பிரதேசமே எங்க கட்டுப்பாட்டிலே இருக்கு' என்றார் காட்டமாக.
அதைப் பற்றி எனக்கு சந்தேகமிருக்கவில்லை. 'ராஜீவ் காந்தி படுகொலை ஒட்டுமொத்த இந்திய மக்களை உலுக்கிவிட்டது. இந்திய நிலைப்பாட்டிற்கு அதுதான் காரணம்' என்று என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
'எந்த அரசியல் கொலை நடந்திருந்தாலும் எங்களை சம்பந்தப்படுத்துகிறார்கள். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்திய ராணுவம் இங்க செஞ்ச அட்டூழியத்தின் எதிர் விளைவா சிலது நடந்திருக்கலாம்' என்றார் பாலசிங்கம்.
காதில் பூ சுத்துவதுபோல் இருந்தது எனக்கு. 'உங்களுக்கு அதில் சம்பந்தமில்லையா?' என்றேன். ஒலிநாடா ஓடிக்கொண்டிருந்தது. பாலசிங்கம் இல்லை என்னும் பொருள்பட தலையை மட்டும் அசைத்தார்."
டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது: ஒரு கூடை பூ அல்லவா சுற்றுகிறார் பாலசிங்கம்!
'பிரபாகரன் ஏன் வெளியில் வருவதில்லை?'
'அவர் அரசியல்வாதி இல்லே. மக்களுக்காக ஓய்வில்லாமல் செயல்படுபவர். அதற்கு விளம்பரம் தேவையில்லை'.
'அவரை நான் சந்திக்கணும். இளைஞர்களிடம் அவருடைய வசீகரம் ஏற்படுத்தும் மாற்றம் ஆச்சரியமானது. நேரில் காண ஆசைப்படுகிறேன்.'
பாலசிங்கம் மழுப்பலாகச் சிரித்தார். 'அவரை நேரில் கண்டா ஒரு ப்ராஸிக்யூஷன் வக்கீலைப் போல் கேள்வி கேட்பீர்களே?'
எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 'உங்கள் நாவலைப் படித்ததில் அவருக்கு நிரம்ப வருத்தம்' என்றார் தமிழ்ச் செல்வன்.
'நேரில் சந்தித்தால் என் எண்ணங்களை மாற்றிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்' என்றேன்.
'நீங்கள் இந்தியா திரும்பிய பிறகு எங்களைப் பற்றி என்ன எழுதுகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும் அது.' அதே சிரிப்புடன் வந்தது பதில்.
'உங்கள் வேண்டுகோளைத் தெரிவிக்கிறோம். சம்மதித்தால் சொல்லி அனுப்புவோம்' என்றார் பாலசிங்கம்.
இரண்டுநாள் கழித்து, 'பிரபாகரனுக்கு என்னை சந்திக்க நேரமில்லை' என்ற தகவல் வந்தபோது எனக்கு வியப்பேற்படவில்லை.
"யாழ்ப்பாணத்தில் நான் கால் வைத்த அடுத்த இருதினங்களில் பிபிஸி ஆனந்தி வந்து சேர்ந்திருந்தார். புலிகளுக்கு இணக்கமான அவருக்கு பிரபாகரன் விரிவான ஒரு பேட்டி அளித்தார். நான் இந்தியா திரும்புகையில் அது தினமணியில் ஏக விளம்பரத்துடன் பிரசுரமாயிற்று."
டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது: ஆக, பிரபாகரனை சந்திக்க முழு முயற்சியும் மேற்கொண்டார் வாஸந்தி அவர்கள் என்பது வெள்ளிடைமலை. பிரபாகரன் அவரை சந்திக்க பயந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது.
"எனது தோல்வியைச் சுட்டிக்காட்டுவதுபோல. பிரபாகரனை நான் நேரில் சந்திக்காவிட்டாலும், யாழ்ப்பாண விஜயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும், கிடைத்த தரிசனங்களும் மிக முக்கியமானவை, என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் ஊர்ஜிதமாயின."
டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது:
தன்னுடைய முடிவுகளுக்கு காரணம்தான் கீழே கொடுக்கிறாரே வாஸந்தி அவர்கள்.
"புலிகளின் பார்வையும் செவியும் எங்கும் வியாபித்தன. அவர்களுடைய அனுமதியில்லாமல் யாரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற முடியாது. பலரின் வீடுகள், நிலங்கள் கைப்பற்றப்பட்டன. வெளிநாட்டில் குடியேற நினைத்தவர்கள், பல லட்சங்கள் இயக்கத்துக்குக் கொடுத்தால்தான் செல்ல முடியும். கொழும்பில் பாதிக் குடும்பமும் யாழ்ப்பாணத்தில் பாதிக் குடும்பமுமாக அல்லல்பட்டவர்கள் ஏராளம். இரவோடு இரவாகப் பல முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பல தமிழர்களால் ஏற்க முடியவில்லை. பீதியுடன் அக்கம் பக்கம் பார்த்து ஒருவர் சொன்னார். "இவங்களை விட்டா இப்ப எங்களுக்கு வேற வழியில்லே என்கிற காரணத்தாலே பேசாம இருக்கோம்."
"கொழும்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பி காலை உணவிற்கு என்னை அழைத்து உபசரித்தது நேற்று போல் இருக்கிறது. 'சமாதானம் வருவதில் நிறைய சிரமங்கள் இருப்பதை நான் உணர்கிறேன்' என்றார் சிவத்தம்பி. 'நீண்ட காலமாக நடந்த போரில் இலக்கு புலிகள் என்றாலும் அடிபட்டது பொதுமக்கள். சமாதானப் பேச்சில் புலிகளுக்கு என்ன வேண்டும் என்பது பிரச்னையில்லை. இந்த நாட்டின் அரசியல் சட்ட சாஸனத்தில் தமிழர்களின் நிலை என்ன என்பதுதான் கேள்வி.'
உள்ளத்தில் எதிர்காலத்தைப் பற்றி எத்தனையோ கலக்கம் இருந்தாலும், அவரும் அவரது மனைவியும் காட்டிய அன்பும் விருந்தோம்பலும் ஆயுளுக்கும் மறக்காது. நான் கிளம்பும்போது அவரது மனைவி மாடியிலிருந்து என்னுடன் கீழ் இறங்கினார். என் கைகளைப் பற்றி பொலபொலவென்று கண்ணீர் உகுத்தார். 'யாழ்ப்பாணத்துக்குப் போக இயலாது. வயசுப் பெண்ணையோ மகனையோ அங்க அனுப்ப இயலாது. ஏனெண்டா அங்கு போனா அவன்களாலெ திரும்பி வர இயலாது. விடிவு காலம் எப்ப வருமோ ஈசுவரா எண்டு இருக்கு.' எனக்கு அடிவயிற்றைக் கலக்கிற்று. யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாத தன் துயரத்தை என்னிடம் இறக்கிவிட்ட நிம்மதியில் அவர் எனக்கு விடைகொடுத்த காட்சி, இன்னும் கனமாக இதயத்துள் அமர்ந்திருக்கிறது."
டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது: தன் பிள்ளைகளை பத்திரமான இடத்தில் வைத்துவிட்டு ஊரார் பிள்ளைகளுக்கு பெல்ட்பாம் கட்டும் இயக்கத்தின் தலைவனை கண்டு அவ்வளவு பயம் பொது மக்களுக்கு.
இப்பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவன் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணம் அதன் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் செய்திகள் மூலமே உண்மைகளை உணர்த்துவது பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
12:01 PM, March 11, 2006வாஸந்தி அவ்வாறு சொல்லாமல் தனிப்பட்ட தன்னுடைய கருத்துகளை நிலை நிறுத்த முனைந்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு பயணக்கட்டுரை செய்திகளின் மூலமே சொல்லப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் பெண் புலிகளுடன் தான் பேசியது பிரபாகரனுக்காகத் தான் என்ற தனது யூகங்களை இங்கே நிலை நிறுத்துகிறார். அதற்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா ?
புலிகள் தங்களுடைய ஒவ்வொரு நிகழ்வையும் ஆவணப்படுத்தவே செய்கின்றனர். இதனை அனிதா அவருடைய புத்தகத்தில் உணர்த்தியிருக்கிறார்.
***
நான் ஒரு செய்தியாளன் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அது பற்றி மட்டும் விவாதிக்கலாம்
தனிப்பட்ட பேட்டிகளை குறித்து நான் எதுவும் சொல்ல அல்ல.
பேட்டி எடுப்பதும், செய்தி சேகரிப்பதும் பத்திரிக்கை துறையில் வேறு வேறானவை என்றே நான் நினைக்கிறேன்.
பேட்டி எடுப்பதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.
எதிராளியை மடக்குவதற்காக பேட்டி எடுப்பது ஒரு ரகம். இது பேட்டி எடுப்பவரின் திறமையை பறைச்சாற்றும். ஆனால் எதற்கு பேட்டி எடுக்கிறோமோ அந்த நோக்கத்தைச் சிதைத்து விடும்.
மற்றொறு வகை, பேட்டி எடுக்கப்படுபவரை பேசவிடுவது. அதன் மூலம் அவர்களின் எண்ணங்களை வெளிக்கொணருவது.
என்னைப் பொறுத்தவரையில் இரண்டாம் வகை தான் முக்கியமானது என்று நினைக்கிறேன். அது தான் ஒரு பத்திரிக்கையாளனின் செய்தி சேகரிப்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.
****
அனிதா இந்தியாவின் தலைச்சிறந்த செய்தியாளர்களில் ஒருவர். அவர் பிரபாகரனை பல முறை சந்தித்திருக்கிறார். அவருடன் ஒப்பிடும் பொழுது வாஸந்தி ஒன்றும் பெரிய பத்திரிக்கையாளர் அல்ல.
அது போல அனிதா பெற்ற வெற்றிகளையும் வாஸந்தி பெறவில்லை. எதனால் என்று நோக்கும் பொழுது அவர்கள் இருவருக்கும் (career wise)இருக்கும் பெருத்த வேறுபாடு தெரிகிறது.
இதுவே ஒரு பத்திரிக்கையாளரின் திறமையை உணர்த்துகிறது.
****
இந்தப் பதிவில் நான் எழுதியுள்ளது பத்திரிக்கைகள் மற்றும் செய்தியாளர்களின் போக்கு குறித்து தான். அதைப் பற்றி மட்டும் விவாதிக்க வேண்டும்.
பிரபாகரன் தன் பிள்ளைகளை எங்கு வைத்திருக்கிறார் என்பன போன்ற விவாதங்களை அவ்வாறு எழுதப்படும் பதிவுகளில் சென்று நடத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சசிக்கு ஒரு ராசி போலும். பதிவுகளில் அவர் பேச வரும் முக்கிய விஷயங்கள் பின்னூட்டங்களால் எங்கோ திசை திரும்பி விடுகின்றன; திருப்பி விடப் படுகின்றன.டோண்டுவின் பின்னூட்டம் இதைத்தான் இங்கு செய்கிறது.
12:03 PM, March 11, 2006சசி சொல்ல வந்தது பத்திரிக்கைகள் எப்படி செய்திகளைத் தரவேண்டுமென்ற அவர் கருத்தை. அதற்கு இரு பத்திரிகையாளர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். இதில் எதற்கு வாஸந்தியைத் தனிப்பட்ட முறையில் டோண்டு ஏற்றிப்பிடிக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.
"டோண்டு ராகவன் இங்கு கூற விரும்புவது:பிரபாகரன் அவரை சந்திக்க பயந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது." டோண்டின் இந்த 'லாஜிக்'கும்,முடிபும் ரொம்ப தமாஷா இருக்கு. பேஷ்..பேஷ்...!
சசி: செய்தியாளர்கள் ஒருவகையில் பத்திரிக்கையின் நிறுவனத்தார் சார்ந்துள்ள கருத்துக்களை ஒரு அளவிற்காவது ஒட்டி எழுதுவதாக அல்லது அப்படி எழுதெ பணித்துள்ளதாக எனக்கு படுகிறது. தொலைகாட்சிகளும் அப்படியே, இது அமெரிக்காவானாலும் ஆண்டிப்பட்டி ஆனாலும் முக்கியத்துவம் தருவதன் விகிதம் மாறுபடுகிறது.
12:13 PM, March 11, 2006"சசிக்கு ஒரு ராசி போலும். பதிவுகளில் அவர் பேச வரும் முக்கிய விஷயங்கள் பின்னூட்டங்களால் எங்கோ திசை திரும்பி விடுகின்றன; திருப்பி விடப் படுகின்றன.டோண்டுவின் பின்னூட்டம் இதைத்தான் இங்கு செய்கிறது."
12:57 PM, March 11, 2006சசி சொல்ல வந்தது பத்திரிக்கைகள் எப்படி செய்திகளைத் தரவேண்டுமென்ற அவர் கருத்தை. அதற்கு இரு பத்திரிகையாளர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். இதில் எதற்கு வாஸந்தியைத் தனிப்பட்ட முறையில் டோண்டு ஏற்றிப்பிடிக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை."
வாஸந்தியை உதாரணமாக எடுத்துக் காட்டியது சசி அவர்களே. அதில் அவர் கூறியதில் உள்ள குறைபாட்டைத்தான் கூறினேன். இதில் திசை திருப்பல் எங்கு வந்தது? மேலும் பிரபாகரன் வாசந்தி அவர்களை சந்திக்கத் தயங்கியிருக்கிறார் என்பதும் நிஜமே. பெல்ட் பாம் பற்றிக் குறிப்பிட்டதும் புலிகள் செய்யும் அராஜகத்தை எடுத்துக்கட்டி, வாசந்தி அவர்கள் தான் வந்த முடிவுகள் குறித்துஎழுதியதில் தவறு இல்லை என்றுதான் கூற முயற்சி செய்தேன். மற்றப்படி அவரை தூக்கிப் பிடிக்கும் அவசியம் எனக்கில்லை.
"இந்தப் பதிவில் நான் எழுதியுள்ளது பத்திரிக்கைகள் மற்றும் செய்தியாளர்களின் போக்கு குறித்து தான். அதைப் பற்றி மட்டும் விவாதிக்க வேண்டும்."
அதைதான் நானும் விவாதித்தேன். அதற்காக நீங்கள் சுட்டிய கட்டுரையை முழுக்கப் படித்து அதிலிருந்தே மேற்கோள் காட்டினேன். உங்களுக்கு அனிதா செய்தது சரியென்றுபட்டிருக்கிறது. அதைக்கூறப் புகுந்த நீங்கள் இன்னொரு பத்திரிகையாளர் செய்தது சரியில்லை என்று கூறினீர்கள். சரியாகத்தான் எனக்குப் படுகிறது என்று நான் கூறினேன். நீங்களும் விவாததினுள்ளேயே இருங்கள் என்றுதான் நானும் கூறுகிறேன்.
இப்பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவன் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணம் அதன் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
/*
1:42 PM, March 11, 2006செய்தியாளர்கள் ஒருவகையில் பத்திரிக்கையின் நிறுவனத்தார் சார்ந்துள்ள கருத்துக்களை ஒரு அளவிற்காவது ஒட்டி எழுதுவதாக அல்லது அப்படி எழுதெ பணித்துள்ளதாக எனக்கு படுகிறது
*/
இது உண்மை தான். பத்திரிக்கையாளன் செய்தியை சேகரிக்கும் முறையில் இருக்கும் நோக்கம் தான் அவர்கள் கொடுக்கும் செய்தியை வேறுபடுத்திக் காட்டுகிறது. இது அந்தப் பத்திரிக்கையை எப்படி நடந்த வேண்டும் என்று நினைக்கிற அந்தப் பத்திரிக்கையின் உரிமையாளரையோ, ஆசிரியரையோச் சார்ந்து தான் இருக்கிறது. தன்னுடைய பணியை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டோ அல்லது தான் கொண்ட கருத்துக்களை நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டோ கொடுக்கும் செய்திகள் திரிக்கப்படுகின்றன அல்லது அவர்கள் கருத்துக்கு எதிராக உள்ளவை சொல்லாமல் விடப் படுகின்றன.
அதனால் தான் இந்து போன்ற பத்திரிக்கைகளில் இலங்கை, திபெத் போன்ற பிரச்சனைகளை அவர்கள் எழுதும் பொழுது சார்பு நிலை தெரிகிறது.
ஆனால் பிறச் செய்திகளைக் கொடுக்கும் பொழுது தெரிவதில்லை.
வாசந்தியை பிரபாகரன் சந்திக்கவிரும்பவில்லை என்ற முடிவுக்கு ஒருவர் வரலாம். அவர் ஆனந்திக்கு அளித்த பேட்டி அடுத்த இருதினங்களில் தினமணியில் வெளியாகியுள்ளது. அதை அவருக்கு ஏற்பட்ட தோல்வி என்பதுபோல வாசந்தி குறிப்பிடுகிறார். ஆனந்திக்கு இதனால் கிடைத்த பட்டம் ஆனந்தி புலிகளுக்கு இணக்கமானவர் என்பதுதான். ஆனந்தி புலிகளுக்கு இணக்கமானவர்; சரி. அனிதா? அவர் 13 தடவைகளுக்கு மேலாக பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார் தனது நேர்காணல்கள், செய்திகளுக்காக. ஒவ்வொருமுறையும் கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகும், பாதுகாப்புச்சோதனைகளுக்கு பிறகும், சாவின் விளிம்பில் நடந்து சென்றும். இந்த 'வாசந்தி' மனப்பான்மை அதற்குச் சொன்ன காரணம் என்னவென்றால் பிரபாகரனுக்கும் அவருக்கும் காதல் என்பதுதான். அத்தனை தடவைகள் அவர் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களையும் சந்தித்திருக்கிறார் என்பதை மறந்து (மறைத்து) விடுகிறார்கள்.புலிகள் தாங்கள் அனிதாவுக்கு பேட்டி அளிப்பதற்குக் காரணமாகக் குறிப்பிட்டது என்னவென்றால் அவர் அதை திரிக்காமல் வெளியிடுகிறார் என்பதுதான். தென்இலங்கை அரசியல்வாதிகள் அனிதாவைச் சந்திப்பதற்குக் காரணமும் அதுதான்.
4:19 PM, March 11, 2006ஒரு செய்தியாளரின் அடிப்படை தகுதி செய்திகளை திரிக்காமல் வெளியிடுவது, செய்திகளின் மறைக்கப்பட்ட பக்கங்களை தேடிச்செல்வது, அதற்காக தமது உயிர் உட்பட அனைத்தையும் பணயம் வைப்பது, கேட்கப்படாத மக்களின் மெல்லிய குரலைக் கேட்பதற்கு வகை செய்வது இவைதான். இதனாலேயே இவர்கள் ஜனநாயகத்துக்கு பெரும்பணி செய்வதாய் மரியாதையைப் பெறுகிறார்கள்; 4வது தூணாகிறார்கள். பிரபாகரனாகட்டும் அல்லது யாராகட்டும் ஊடகங்களில் இருந்து சந்திக்கவிரும்புவது செய்தியாளர்களைத்தான், நீதிபதிகளை அல்ல. ஒவ்வொரு செய்தியாளருக்குள்ளும் ஒரு நீதிபதி, வழக்குரைஞர் இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்தியாளர்கள் அல்ல. செய்தியாளர்களின் வேலையை அவர்கள் செய்யக்கூடாது. அனிதாவுக்குள்ளும் ஒரு சார்புக்கான வழக்குரைஞர் இருக்கிறார். ஒரு முடிவைச் சொல்லுகிற நீதிபதி இருக்கிறார் (அந்தப்புத்தகத்தில் அவர் தீர்ப்புகளைச் சொல்லவும் செய்திருக்கிறார்). அவருடைய நீதிபதிகள்/ வழக்குரைஞர்கள் செய்தியாளர் வேலையைச் செய்யவில்லை என்பதாலேயே பிரபாகரன் அவரிடம் பேசமுடிகிறது; அதனாலேயே அவர் ஒரு நல்ல செய்தியாளராகிறார்; பல இந்திய, வெளிநாட்டு பெரும் ஊடகங்களில் பணியாற்ற முடிந்தது. வாசந்திகளின் நோக்கம் அதுவல்ல. வாசந்தியிடமிருப்பது ஒரு பெரும்பாலான இந்திய ஊடகவியலாளரிடம் இருக்கும் ஒரு வழக்குரைஞர் cum நீதிபதி மனப்பான்மை. அவர் பிரபாகரனிடம் கேள்விகளுடன் செல்கிறார், எதற்காக என்றால் தமது சந்தேகங்களை, முன்முடிவுகளை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள, நிரூபிக்க. ஆனால் செய்தியாளர் ஒரு தரப்பினுடைய நியாயங்களைச் சொல்ல இடமளிக்கும் கேள்விகளுடன் செல்லவேண்டும். எவர் இருதரப்புக்கும் அப்படியான வசதியை அதிகமாக அளிக்கிறாரோ அவரே சிறந்த பத்திரிக்கையாளர்; செய்தியாளர் ஆகிறார்.
இறுதியாகச் சொல்லுவதென்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது. அனிதாவுக்கு ஒரு நல்ல செய்தியாளராய் செயல்பட வேண்டியது தேவை. ஆனால் வாசந்தியினுடைய தேவை வேறு.
"சிதம்பரம் ஏமாற்றினார்" என்று "செய்தி" வெளியிடும் நீதிபதி மனப்பான்மை உறுத்தாத அளவுக்கு பழகிப்போன ஜனநாயக பத்திரிக்கை/ வாசகத் தளத்தில் தான் கோபால் ஏன் வீரப்பனைச் சந்திக்கமுடிகிறது அப்போது ஏன் அவர் கைது செய்ய உதவக்கூடாது போன்ற கேள்விகள் சாதரணமாய் பிறக்கின்றன.
ஓட்டுத்திருவிழாக்களை தவறாமல் கொண்டாடுவதால் நாம் பெரிய ஜனநாயக நாடாகிவிடமுடியாது என்பதை இந்த மனோபாவம் அதனுடுடைய வழியில் காட்டுகிறது.
வழக்கம் போல நன்றி சசி! :)
தங்கமணி,
10:06 PM, March 11, 2006உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு என்னுடைய நன்றி
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் பின்னூட்டங்கள் வாதத்தை திசைமாற்றி விடாமல் தடுத்த தருமிக்கும் (:-)) என்னுடைய நன்றி
Post a Comment