Saturday, March 11, 2006

காஷ்மீர் பற்றிய குறும்படம்

காஷ்மீரில் உள்ள உண்மையான நிலை இந்திய ஊடகங்களில் வெளி வருவதேயில்லை. நேர்மையான செய்தி நிறுவனமாக தங்களை கூறிக்கொள்ளும் பல இந்திய செய்தி நிறுவனங்கள் காஷ்மீர் பற்றிய எந்த உண்மையையும் வெளியிடுவதில்லை. அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் பலருக்கு தெரிவதே இல்லை. இந்தியாவில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட விட மாட்டோம் என்று கூறும் வலது சாரி இயக்கத்தினர் மற்றும் தீவிர தேசபக்தியினர் காஷ்மீர் மக்களின் இன்னல்களை தெரிந்து கொள்வது முக்கியம்.

காஷ்மீர் இந்தியாவிற்குச் சொந்தமா, பாக்கிஸ்தானுக்குச் சொந்தமா என்பதை விட காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது, அவர்களின் முடிவு தான் முக்கியமானது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால் நம்மில் பலர் இதனை புரிந்து கொள்வதேயில்லை. உண்மையை கூறுபவர்களை தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தி விடுகிறோம்.

காஷ்மீரில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் மற்றும் இந்திய இராணுவத்தினரால் பாதிக்கப்படுவது அப்பாவி காஷ்மீர் மக்கள் தான். இராணுவம், தீவிரவாதிகள் என இவர்கள் இருவரிடம் சிக்கிக் கொண்டு தங்களின் அன்றாட வாழ்க்கையை கடும் இன்னல்கள், மனித உரிமை மீறல்கள் இவற்றிடையே கழிக்கும் காஷ்மீர் குறித்த ஒரு குறும்படத்தை இன்று பார்த்தேன்.

காஷ்மீர் பற்றிய இந்தப் படம் 2004ல் எடுக்கப்பட்டது. இது போன்ற ஒரு படத்தை இது வரையில் நான் எந்த இந்திய ஊடகங்களிலும் பார்க்கவில்லை. இந்திய இராணுவத்தின் அடக்குமுறைகளால் இந்தியாவின் மீது காஷ்மீர் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக இந்தக் குறும்படம் தெரிவிக்கிறது.இந்தப் படத்தை UNREPORTED WORLD என்ற செய்திப் பிரிவிற்காக Channel 4 தயாரித்திருக்கிறது

இந்த ஆங்கில வலைத்தளம் மூலம் இது எனக்கு காணக்கிடைத்தது.

இருவருக்கும் எனது நன்றியுடன் இந்தக் குறும்படத்தை இங்கு பயன்படுத்திக் கொள்கிறேன்

5 மறுமொழிகள்:

தமிழ் சசி said...

இந்தப் பதிவை நான் வெளியிட்டப் பிறகு நிறைய "அனானிமஸ்" பின்னூட்டங்கள் வந்தன, இந்தியாவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் இந்தப் பின்னூட்டங்கள் எழுதப்பட்டிருந்தன. முதலில் வந்த இரு பின்னூட்டங்களை வெளியிட்டேன். ஆனால் ஒரு நண்பரின் அறிவுறுத்தலின் பேரில் முதல் பின்னூட்டத்தை நீக்கினேன்.

அனானிமஸாக இந்தியாவிற்கு எதிராக கருத்துச் சொல்ல அனுமதிப்பது தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதற்காக நாகரிகமாக எழுதப்பட்ட மற்றொரு பின்னூட்டத்தையும் நீக்கினேன். பின்னூட்டமிட்ட நண்பர் அதற்கான காரணத்தை கேட்ட பொழுது நானும் எனது நிலையை விளக்கினேன். அவரும் எதற்கு அனானிமஸாக பின்னூட்டம் எழுதினார் என்பதை எனக்கு விளக்கினார்.

ஆனால் சில பின்னூட்டங்கள் நாகரிக்கமற்ற முறையிலே எழுதப்பட்டிருந்தன. இதனை பொருட்படுத்த தேவையில்லை என்று நினைத்தாலும் சிறு விளக்கம் மட்டும் இந்தப் பதிவிலே கொடுத்து விடலாம் என்று தோன்றியது.

என்னுடைய நாடு இந்தியா தான், எனக்கு இந்திய இறையாண்மையில் நம்பிக்கை இருக்கிறது என்பதை மட்டும் கூறி விட்டு, பத்ரி காஷ்மீர் பிரச்சனையை பற்றி அவர் பதிவிலே எழுதிய கருத்து என் நிலையை விளக்குவதால், (பத்ரி ஆட்சேபிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்) அதனை இங்கே பயன்படுத்திக் கொள்கிறேன்.


காஷ்மீர்தான் இந்தியா, இந்தியாதான் காஷ்மீர்", "இந்தியன் என்ற அடையாளம்" - இவைதான் சரியான தீர்வுக்கு எதிரியாக உள்ளன. தேசியம் என்பது ஒருவர்மீது புகுத்தப்படுவதல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகம் தானாக உணர வேண்டியது. வெளியிலிருந்து திணிக்கமுடியாதது.

மாநிலங்களுக்கு இடையேயான கோடுகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையேயான கோடுகளும்கூட arbitrary-ஆகத் தோன்றியவைதான். அதனால்தான் தேசியம் பற்றிய கருத்துகளும் மாறவேண்டும். மகாபாரதக் காலம் தொட்டு இந்தியா என்பது இதே நிலப்பரப்பாகத்தான் உள்ளது என்று சங் பரிவார் கோஷ்டிகளும் பிற அதீத தேசியவாதிகளும் பேசுகின்றனர். மகாபாரத நிகழ்வுகள் - உண்மையாகவே இருந்தால் - இன்றைய ஆஃப்கனிஸ்தான் பகுதியிலும்தான் நடந்துள்ளன.

அகண்ட பாரதம் வேண்டும் என்று கத்திய பலரும் இன்று வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் பாகிஸ்தான் என்றொரு தனி தேசிய அடையாளம், பங்களாதேசம் என்ற மற்றொரு தனி தேசிய அடையாளம் இன்று தோன்றிவிட்டது. தேசிய அடையாளங்கள் மாறிக்கொண்டே இருப்பவை. காலம் காலமாக ஒரேமாதிரியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இலங்கை விடுதலை பெற்றபோது சிலோன் என்றொரு தேசிய அடையாளம்தான் வெளிப்படையாக இருந்தது. இலங்கைத் தமிழர் தேசியம் என்னும் கருத்தாக்கம் சிறிது சிறிதாகத்தான் வெளிவந்துள்ளது. ஆனால் இன்று மறுக்க முடியாத அளவுக்கு நிலைபெற்றுவிட்டது - என்கிறார் ஜெயரத்னம் வில்சன் (Sri Lankan Tamil Nationalism).

இந்தியா என்ற தேசிய அடையாளம் வலுவாக இருக்கவேண்டுமானால் சில இனக்குழுக்கள் நசுக்கப்படுவது நிற்கவேண்டும். இந்தத் தேசிய அடையாளமும் திணிக்கப்படாமல் தானாக உருவாகி நிலைபெற வேண்டும். வெற்று கோஷம் போடுவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதாலும் மட்டுமே இதனை அடைய முடியாது.

நன்றி

3:35 PM, March 12, 2006
Thangamani said...

சசி:

இந்தப் பதிவுக்கு எவ்வளவு நேர்மையான விவாதங்களைத் தூண்டுகிறது என்பதைப் பார்க்கவும், குறுக்கீடுகள், அங்கீகரிப்புகள் இல்லாத சூழலில் இந்திய ஜனநாயக புத்தி எப்படி இதை எதிர்கொள்கிறது என்பதை பார்க்க எண்ணினேன். எதிர்பார்த்ததே நடந்தது. வாழ்க ஜனநாயகம்.

நன்றி சசி.

4:46 PM, March 12, 2006
திரு said...

சசி நல்ல பதிவு. இந்தியர்கள் என்கிற நம்மை சிந்திக்க தூண்டும் பதிவு. மனித உயிர்களும், மனித கண்ணியமும் காலடியில் மிதிபடுவதை அனுமதியாதிருப்பது தான் அழகும் மனிதத்தனமும். எல்லைக்கோடுகளுக்கு இருக்கிற முக்கியத்தன்மை இவ்வுலகில் மனிதர்களுக்கு இல்லாமல் போனது வேதனையானது. எல்லைக்கோடுகளற்ற மனிதனை மனிதனாக மதிக்கிற கலாச்சாரங்களை மிதிக்காத உலகம் வேண்டும்.

தொடருங்கள் பதிவுகளை...

திரு

5:28 PM, March 12, 2006
நந்தன் | Nandhan said...

I can't stop asking 'WHY all these?' Who will answer?

11:16 PM, March 12, 2006
பட்டணத்து ராசா said...

இந்த ஆவனத்தை இங்கு இட்டதுக்கு நன்றி சசி.

4:48 AM, March 26, 2006