Saturday, March 25, 2006

தொகுதி அலசல் : குறிஞ்சிப்பாடி

தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எந்த தொகுதியில் எந்தக் கட்சி நிற்கிறது என்ற நிலவரம் தெரிந்து விட்டதால் தேர்தல் கணிப்புகளும் இனி தொகுதிவாரியாக தொடங்கி விடும். அந்த வகையில் என்னுடைய சொந்த ஊரான நெய்வேலியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி தொகுதி நிலவரத்தை என்னால் இங்கிருந்து சரியாக கணிக்க முடியாது என்றாலும் ஒரளவு கணிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

மதிமுகவுக்கு அதிமுக வழங்கியுள்ள சில தொகுதிகளை கவனித்தேன். ஒரு விஷயம் எனக்கு தெளிவாக புரிகிறது. தான் கண்டிப்பாக தோல்வி அடையக்கூடும் என்று நினைக்கும் சில தொகுதிகளை அதிமுக மதிமுகவிடம் தள்ளி விட்டுள்ளது. வேலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, தருமபுரி, தாரமங்கலம், பெரம்பூர், எழும்பூர் என திமுக-பாமக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்லக்கூடிய பல வட மாவட்ட தொகுதிகளை மதிமுகவிடம் ஜெயலலிதா தள்ளி விட்டுள்ளார். சென்ற பாரளுமன்ற தேர்தலில் கூட பாஜகவிற்கு இந்த நிலை தான் ஏற்பட்டது. தென்மாவட்ட தொகுதி நிலவரம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் வடமாவட்டங்களில் நிறைய தொகுதிகள் ஏன் மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று புரியவில்லை. மதிமுகவிற்கு வடமாவட்டங்களில் எந்த அடித்தளமும் இல்லை.

குறிஞ்சிப்பாடியில் கட்சிகளின் நிலவரத்திற்கு செல்வதற்கு முன்பாக இங்கிருக்கும் சில முக்கிய அம்சங்களை கவனிக்கலாம். வடமாவட்டத்தில் உள்ள பல தொகுதிகள் போல தலித், வன்னியர் என இரு சமூகங்கள் மட்டுமே இருக்கும் தொகுதியாக இல்லாமல் குறிஞ்சிப்பாடி தொகுதி ஒரு கலவையான தொகுதியாக பல சமூக மக்களும் இருக்கும் இடமாகவே உள்ளது. நெய்வேலியில் பல சமூக மக்களும் இருக்கின்றனர். நெய்வேலிக்கு வெளியே இருக்கும் பகுதிகளில் தலித், வன்னியர், ரெட்டியார், நாயுடு போன்ற சமூக மக்கள் அதிகம் உள்ளனர்.

நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பகுதிகள் குறிஞ்சிப்பாடி தொகுதியின் கீழ் வருகிறது. நெய்வேலி நகரம் மற்றும் அதன் அருகாமையில் இருக்கும் நெய்வேலியைச் சார்ந்தப் பகுதிகளே பல தேர்தல்களில் குறிஞ்சிப்பாடி தொகுதியின் வெற்றியை தீர்மானித்து வந்துள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இங்கு இருந்தாலும், மைய அரசுக்கு லாபம் ஈட்டும் ஒரு பொதுத்துறை நிறுவனமாக நெய்வேலி இருந்தாலும், நெய்வேலியால் அருகில் இருக்கும் கிராமங்களுக்கோ, சிறு நகரங்களுக்கோ எந்த ஒரு உபயோகமும் இல்லை. குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ள பகுதியாக இதனை சொல்ல முடியா விட்டாலும் மக்களின் வாழ்க்கைத் தரம் நெய்வேலியை தவிர்த்தப் பிற பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. விவசாயம் தான் இந்தத் தொகுதியின் முக்கிய பொருளாதாரம் (நெய்வேலி தவிர).

குறிஞ்சிப்பாடி சுற்றி இருக்கும் பகுதிகள் நல்ல வளமான பூமி என்று சொல்லலாம். நிலத்தடி நீர் தான் பாசனத்திற்கு உதவுகிறது. முக்கிய விவசாயமாக நெல் மற்றும் வேர்கடலை உள்ளது (இதனை மல்லாட்டை, மல்லாக் கொட்டை என்று இந்தப் பகுதியில் கூறுவார்கள்). நெல், கரும்பு போன்றவையும் இங்கு உண்டு. குறிஞ்சிப்பாடி அரிசி என்பது இந்தப் பகுதியில் கொஞ்சம் பிரபலம். எங்கள் கடைக்கு அதிகம் குறிஞ்சிப்பாடி அரிசியையே வாங்குவோம்.

நிலத்தடி நீர் குறைவது, நெய்வேலியில் நிலம் இழந்தவர்களுக்கு வேலை போன்றவை இங்கு முக்கிய பிரச்சனைகள். ஆனால் இன்று வரை தீர்வு ஏதும் ஏற்பட்டதில்லை. குறிஞ்சிப்பாடி தொகுதியில் கடந்த காலங்களில் வெற்றி பெற்றவர்கள் தொகுதிக்கு உருப்படியாக எதுவும் செய்ததில்லை. தமிழகத்தின் மிகவும் பிந்தங்கிய மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் உண்டு. இந்தப் பகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் பகுதியில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் தமிழகத்தின் பல தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு இல்லாத வசதி இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வுக்கு உண்டு. நெய்வேலி இந்தப் பகுதியில் இருப்பதால் நெய்வேலி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் என்.எல்.சி. நிர்வாகம் செய்து கொடுத்து விடுகிறது. ஏதாவது வசதி குறைவு என்றால் மக்களின் கோபம் என்.எல்.சி. நிர்வாகம் மேல் தான் திரும்புகிறது. எம்.எல்.ஏ.வுக்கு பிரச்சனையில்லை. அது போல பல தொகுதிகளில் இருக்கும் குடிநீர் பிரச்சனையும் இந்த தொகுதியில் இல்லை. நெய்வேலிக்கு அருகாமையில் இருக்கும் பகுதிக்கு என்.எல்.சி குடிநீர் வழங்கி விடுகிறது. இதனால் இந்த தொகுதி எம்.எல்.ஏ ஒரு வேலையும் இல்லாமல் நன்றாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்

இந்த தொகுதியில் நெய்வேலியை தவிர்த்துப் பார்த்தால் ஒரு உருப்படியான விஷயமும் இல்லை. நெய்வேலிக்கு வெளியே ஒரு தொழிற்சாலையோ, நல்ல பள்ளியோ, கல்லூரியோ இல்லை. பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பக்கத்து ஊர்களில் இருக்கும் வியபாரப் பரபரப்பு கூட இங்கு இருக்காது. நெய்வேலியிலும் இதே நிலை தான். இந்தப் பகுதியே ஒரு சோம்பேறிப் பகுதியாக எனக்கு தோன்றும்.


நெய்வேலி நகரம் படித்தவர்கள் நிறையப் பேர் இருக்கும் இடமாக இருப்பதால் எப்பொழுதுமே திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. நெய்வேலிக்கு அருகாமையில் இருக்கும் பிற பகுதிகளான வடலூர், குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகள் கிரமப்புற பகுதிகள். இங்கு பாமக ஒரு வலுவான இயக்கம் என்று சொல்லலாம். அதே அளவு வலுவான நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமும் உள்ளது. கட்சி ரீதியாக அதிமுக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு இங்கு பெரிய அளவில் எந்தச் செல்வாக்கும் இல்லை. ஆனால் அதிமுகவிற்கு கிராமப்புற மக்களின் கணிசமான வாக்கு வங்கி இங்கு உண்டு.

நெய்வேலியில் இருக்கின்ற தொழிற்சங்கங்களில் மிகவும் வலுவானச் சங்கம் திமுகவின் தொ.மு.ச தான். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது விடுதலைச் சிறுத்தைகளின் தொழிற்சங்கம். மூன்றாம் இடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்கத்திற்கும், நான்காம் இடம் கம்யுனிஸ்ட்களுக்கும் உள்ளது. ஐந்தாம் இடத்தில் அதிமுக வருகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர்கள் எந்த தொழிற்சங்கத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை பொறுத்து இந்த நிலைகள் திர்மானிக்கப்படுகிறது (என்னுடைய நெய்வேலி பற்றிய பதிவை பார்க்கலாம்).

கடந்த தேர்தலில் (2001) தமிழகத்திலேயே திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி குறிஞ்சிப்பாடி தொகுதி தான். திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சுமார் 23,863 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார். இவர் முன்னாள் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பெற்ற வாக்குகள் 65,425 (சுமார் 55.78% வாக்குகள்). இந்த தேர்தலில் அதிமுக 41,562 வாக்குகள் பெற்றது. இதில் பாமகவின் வாக்குகளும் உள்ளன என்பதை கவனிக்க வேண்டும். அதே போல திமுகவின் 65,425 வாக்குகளில் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் உள்ளன.

இங்கு மதிமுகவிற்கு எந்த அடித்தளமும் இல்லை. வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய பொழுது நெய்வேலி திமுகவில் ஒரு பிரிவு வைகோவுடன் சென்றது. அந்தப் பிரிவின் தலைவர் நாகலிங்கம் என்பவர். பின்னர் அவர் மறுபடியும் திமுகவுடன் இணைந்தார். அவர் தான் இப்பொழுது திமுகவின் நெய்வேலி நகர தலைவர்.

மதிமுகவிற்கு இங்கு அமைப்பு ரீதியாக கூட எந்த பலமும் இல்லை. தன்னால் வெற்றி பெற முடியாத தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விடும் ஜெயலலிதாவின் வழக்கமான பாணியில் இந்த தொகுதி இம்முறை மதிமுகவிற்கு வருகிறது.

மதிமுகவில் யார் வேட்பாளராக நிற்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் திமுகவில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு தான் இந்த தொகுதி ஒதுக்கப்படும். 1996க்குப் பிறகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திமுகவின் அசைக்க முடியாத புள்ளியாக கடலூர் மாவட்டத்தில் உருவாகி விட்டார். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் காட்டுமன்னார்குடி. காட்டுமன்னார்குடி தனி தொகுதியாக இருப்பதால் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாறினார். தொகுதி மக்களிடம் பெரிய அளவில் நல்ல பெயரும் இல்லை. கெட்டப் பெயரும் இல்லை.

இவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்னும் ஒரு காரணம் திமுகவில் அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே ஒவ்வொரு திமுக உட்கட்சி தேர்தலிலும் தன்னுடைய ஆதரவாளர்களை பெரும் அளவில் பணத்தைக் கொட்டி வெற்றி பெறச் செய்வதில் எம்.ஆர்.கே அதிக அக்கறை செலுத்துவார். இந்த தொகுதியில் இவருக்கு எதிராக கட்சியில் சீட் கேட்பார்கள் என்று கருதப்பட்ட நெய்வேலி இராமகிருஷ்ணன், வடலூர் தண்டபானி, குறிஞ்சிப்பாடி கணேசமூர்த்தி போன்ற இந்தப் பகுதியின் பிரபலமான திமுக தலைவர்களை உட்கட்சி தேர்தலில் சில டம்மி வேட்பாளர்கள் கொண்டே தோற்கடித்தார். இதன் மூலம் திமுக தலைமை தனக்கே வாய்பாளிக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்.

குறிஞ்சிப்பாடி தொகுதியை பொறுத்தவரை போட்டி என்பதே இல்லை என்று சொல்லலாம். அதிமுகவோ, விடுதலைச் சிறுத்தைகளோ நின்றிருந்தால் கூட ஒரு பரபரப்பு இருந்திருக்கும். ஆனால் மதிமுக நிற்பதால் அந்த பரபரப்பு கூட இல்லை. இந்தப் பகுதிக்கே உரிய சோம்பலுடனே தொகுதியும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

குறிஞ்சிப்பாடியில் திமுக முந்துகிறது

(அடுத்த தொகுதி அலசல் - இந்த தேர்தலில் பரபரப்பாக இருக்கப் போகிற தொகுதிகளில் ஒன்றான, நெய்வேலிக்கு பக்கத்து ஊரான "பண்ருட்டி")

18 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

நெல்லிக்குப்பம் தொகுதியை பொட்டீக்கடை சத்யா அலசிவிட்டார், குறிஞ்சிப்பாடியை நீங்கள் எழுதிவிட்டீர், கடலூரையாவது எனக்கு விட்டு வைங்க,

சசி எம்.ஆர்.கே.பி யின் சாதி பாசத்தினால் பல பாமகவினர் சென்ற தேர்தலில் எதிர்முகாமில் இருந்த போதும் திமுகவிற்கு வேலைசெய்தது குறிப்பிடத்தக்கது...

1:40 AM, March 26, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

குழலி,

கடலூர் பக்கம் நான் வரப்போவதில்லை. எனக்கும் கடலூருக்கும் ரொம்ப தூரம் - 50கி.மீ :-))

1:45 AM, March 26, 2006
Pot"tea" kadai said...

சசி,
நெல்லிக்குப்பத்தை நான் ஓரளவுக்கு பிரித்து மேய்ந்து விட்டேன். குறிஞ்சிப்பாடியை நீங்கள் அலசி விட்டீர்கள்.

நான் அடுத்து பண்ருட்டியை யோசித்து வைத்திருந்தேன்...நீங்கள் முந்திக் கொண்டீர்கள்! என்னுடைய கருத்துக்களை உங்களுடைய அந்த பதிவில் வைக்கிறேன்!

அதிமுக கூட்டணியின் தொகுதி பட்டியலைப் பார்த்தபோது எனக்கேற்பட்ட சிரிப்பை அடக்க முடியவில்லை.

பாவம் வைகோ!

குழலி, கடலூர் உங்களுக்குத் தான்... மேலும் புவனகிரி/காட்டுமன்னார்குடி பற்றியும் எழுதுங்கள்!

1:59 AM, March 26, 2006
Pot"tea" kadai said...

சசி, முடிந்தால் என்னுடைய நெல்லிக்குப்பத்தை பற்றிய பதிவை பார்க்கவும்!

2:00 AM, March 26, 2006
Anonymous said...

சசி,

உங்களின் மற்ற தேர்தல் கட்டுரைகளைப் போலவே, இதுவும் சுவாரசியமாக உள்ளது.

அரசியல் கட்சிகளின் கூட்டணியை விட, சசி, சத்யா & குழலியின் தொகுதி அலசல் கூட்டணி நன்றாக இருக்கிறது ;-)

நன்றி
கமல்

8:10 AM, March 26, 2006
Unknown said...

ஐயா மக்களே, சிதம்பரம் & காட்டுமன்னார்குடிக்கு நான் இருக்கேன். ஆட்டய போட்டுடலாம்.

சிதம்பரம் தொகுதிக்கு எம்.ஆர்.கே.பியின் அக்கா மகன் செந்தில்குமாரும், துரை.கி.சரவணனும் கண் வைத்திருக்க, தொகுதி கம்யூனிஸ்ட் கைக்குப் போய்விட்டது.

காட்டுமன்னார்குடி வேட்பாளர் நியமனத்தையும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

குறிஞ்சிப்பாடியைப் பொறுத்தவரை மதிமுக பலியாடு தான். சிறுத்தைகளிடம் கொடுத்திருந்தாலாவது கொஞ்சம் தாக்குப்பிடித்து இருக்கலாம்.

9:41 AM, March 26, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

கடலூர் மாவட்ட தொகுதி அலசல்களுக்கு இவ்வளவு போட்டியா? எம்.எல்.ஏ சீட்டு புடிக்கிற அளவுக்கு போய்கிட்டு இருக்கு :-))

நம்ம இன்னொரு பக்கத்து ஊரான விருத்தாசலத்தைப் பற்றியும் நான் எழுதப் போறேன்

9:53 AM, March 26, 2006
Vassan said...

படிக்க சுவராசியமாக உள்ளது சசி.

நெய்வேலியிலும் இதே நிலை தான். இந்தப் பகுதியே ஒரு சோம்பேறிப் பகுதியாக எனக்கு தோன்றும்.

நெய்வேலி-1 = மந்தாரகுப்பம் கலகலப்பாக இருந்ததாக ஞாபகம்.. ரொம்ப, ரொம்ப நாளைக்கு முன் !

ஒரு வேண்டுகோள்: கொஞ்சமாய் தெற்கே நகர்ந்து சிதம்பரம் & சீர்காழி பற்றியும் முடிந்தால் அலசுங்கள். அதுவும் சீர்காழியில் வி.சிறுத்தைகள் நிற்க போகிறார்களாம். தனித்தொகுதி என்பதால் யார் நிற்க போகிறார்கள், வெற்றியடைய என்ன வாய்ப்பு என்பதை தெரிந்து கொள்ள ஆவல்.

நன்றி, சசி,குழலி & பொ.கடை

9:53 AM, March 26, 2006
nayanan said...

சசியின் அலசல் நன்று.
குறிஞ்சிப்பாடி பற்றிய எனது கருத்தை இங்கு இடுகிறேன். ('நயனம்' பதிவிலும் காணலாம்).

1996ல் குறிஞ்சிப்பாடியில் தி.மு.க, காங்கிரசு மற்றும் சிபிஐ
கூட்டோடு, அ.தி.மு.கவை விட 58% வாக்குகள் அதிகம்
பெற்று வென்றது. பா.ம.க தனித்து நின்றது. பா.ம.க 12231
வாக்குகள் பெற்றது. அ.தி.மு.கவிற்கு எதிரான அலை இருந்தது.

1996ஐ விட 2001ல் அங்கு தி.மு.க பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது.
2001ல் கூட்டணி வலுவோடு பெரும்பான்மை வெற்றியை அ.தி.மு.க
பெற்றபோது கூட, தி.மு.க அங்கு 36% வாக்குகள் அதிகம் பெற்று
வென்றது. இம்முறை பா.ம.க அ.தி.மு.கவோடு கூட்டு வைத்திருந்தது.
ம.தி.மு.க இங்கு தனித்துப் போட்டியிட்டு 6415 வாக்குகள் பெற்றிருந்தது.
இந்த வெற்றிக்கு குறிஞ்சிப்பாடியில் உள்ள தி.மு.க வலுவோடு,
விடுதலை சிறுத்தைகலின் வலுவும் சேர்ந்ததால்தான் அது சாத்தியமாயிற்று
என்பதை 2004 தேர்தலை கண்ணுற்றால் அறிய முடியும்.

2004 பாராளுமன்றத் தேர்தலில், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட

6 சட்டமன்ற தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள்
அமைப்பின் தலைவர் திருமா நிறைய வாக்குகள் பெற்றார். 6 சட்டமன்றத்
தொகுதிகளில் ஒரு இடத்தில் (காட்டுமன்னார் கோயில்) முதல் இடமும்,
மீதி உள்ள 5 தொகுதிகளில் இரண்டாம் இடமும் பெற்றார். அ.தி.மு.க
கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட பா.ச.க மூன்றாவது இடத்தையே
6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பெற்றது. இந்தப் பாராளுமன்றத் தொகுதியை
பா.ம.க வென்றது.

தற்போது, வி.சியின் வலு தெரியக் கிடக்கையில் வி.சியின் வாக்கு வங்கியின்
சக்தி புலப்படுகிறது.
குறிஞ்சிப்பாடியில், 2004ல்

1) பா.ம.க (திமுக அணி) பெற்ற வாக்குகள் : 56320
பா.ச.க (அ.தி.மு.க அணி) : 19323

2) தனித்து நின்ற வி.சி வாக்குகள் : 40497

3) தற்போது வி.சி, அதி.மு.கவுடன் சேர்ந்திருப்பதால்
அ.தி.மு.க அணிக்கு 19323 + 40497 = 59820 வாக்குகள் ஆகின்றன.

இது தி.மு.க அணியின் வாக்குகளை விட அதிகம்.

4) 2004ல் ம.தி.மு.க தி.மு.கவோடு அணிசேர்ந்திருந்தது. தற்போது
எதிரணியில்.

2001ல் ம.தி.மு.க தனித்து நின்று பெற்ற வாக்குகள் 6415.

ம.தி.மு.கவின் இந்த வாக்குகள் இதை விட தற்போது குறைந்திருக்கும்
என்ற சொல்வதற்கில்லை. அப்படியே குறைந்தது என்றாலும்,
பெரிய அளவில் குறைந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பொடா
என்ற விளையாட்டு உச்சத்தில் இருந்த காலம் 2004. தற்போது
ம.தி.மு.கவே களத்தில் இருப்பதால் இவ்வாக்குகள் முக்கியத்துவம்
பெறுகின்றன.

அது அ.தி.மு.க அணியை 59820 + 6415 = 66235 வாக்குகள்

பெறவைக்கிறது.

ம.தி.மு.கவின் அந்த வாக்குகளை அ.தி.மு.கவோடு சேர்ப்பதாடு,
தி.மு.க அணியில் இருந்து அந்த வாக்குகளை கழிக்கவும் வேண்டியுள்ளது.
ஏனெனில் அணி மாறுகிறது.

அதனால் தி.மு.க அணி, 56320 - 6415 = 49905 என்ற அளவிற்குக்
குறைந்து போய் விடுகிறது.

அ.தி.மு.க அணி - தி.மு.க அணி = 66235 - 49905 = 16330 வாக்குகள்.

சில ஆயிரம் வித்தியாசம் என்றால் நிலைமை மாறக்கூடும். ஆனால்,
16000+ வாக்குகள் பலம் அ.தி.மு.கவிற்கு அதிகமாக இருப்பதால்
தி.மு.க இங்கு மண்ணை கவ்வ வைக்கக் கூடும் என்று
கருத வாய்ப்புள்ளது.

வைகோ போனதற்கு கருணாநிதி வருந்துகிறாரோ இல்லையோ,
வைகோ தான் மட்டும் போகாமல், தனக்கு முன்னால் திருமாவையும்
அனுப்பி வைத்து விட்டுப் போனதற்காக கருணாநிதி நிச்சயம்
வருத்தப் படுவார் என்பதற்கு குறிஞ்சிப்பாடி ஒரு காட்டு.

இந்தக் கணக்கினாலேயே, இத்தொகுதியை அ.தி.மு.கவிற்கு (ம.தி.மு.க)

பயனுள்ள தொகுதி என்று எனது கணிப்பில் கூறியிருக்கிறேன்.

வாசன்: சிதம்பரம் - அ.தி.மு.க, சீர்காழி - தி.மு.க என்று நமது தரவுகள் சொல்கின்றன.

சசியின் கருத்தறிய ஆவல்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

12:00 PM, March 26, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

நயனம்,

உங்கள் கணிப்பு சுவாரசியமாக இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் நெய்வேலியில் திமுகவிற்கு அடுத்த மிக வலுவான அமைப்பு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகளை இழந்தது வடமாவட்டங்களில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எனது முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தேன்.

Arithmetic Analysis ஐ தவிர சில முக்கிய விஷயங்களையும் இங்கு கவனிக்க வேண்டும்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் எம்.ஆர்.கே தனக்கென் தனிப்பட்ட செல்வாக்கை உருவாக்கியிருக்கிறார். அவருடைய செல்வாக்கிற்கு ஈடுகொடுக்க்க கூடிய வேட்பாளராக மதிமுகவில் யாரை நிறுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

பாரளுமன்ற தேர்தலில் நெய்வேலியில் பாஜக விற்கு நிறையப் பேர் வாக்களித்தனர். ஆனால் இம்முறை அது சாத்தியமா என்று தெரியவில்லை. இவர்களின் வாக்குகள் திமுகவிற்கு கிடைக்கலாம்.

விசியின் வாக்குகள் நீங்கள் கூறுவது போல தேர்தலின் முடிவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தப் பதிவில் மற்றொரு விஷயத்தையும் நான் சொல்ல தவறிவிட்டேன். அது திமுகவின் உட்கட்சி பூசல். திமுகவில் எம்.ஆர்.கே.வின் எதிர்கோஷ்டியினர் அவர் தோல்வியை மிகவும் விரும்புகின்றனர். எந்தளவுக்கு அவர் இதனை ஈடுசெய்யப் போகிறார் என்பதை பொறுத்தே அவர் வெற்றி அமையும்

12:32 PM, March 26, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

நெய்வேலி-1 = மந்தாரகுப்பம் கலகலப்பாக இருந்ததாக ஞாபகம்.. ரொம்ப, ரொம்ப நாளைக்கு முன் !

வாசன்,

மந்தாரக்குப்பம் நெய்வேலி-2 பகுதியைச் சேர்ந்தது. இது பழைய நெய்வேலி என்றும் அழைக்கப்படும். மந்தாரக்குப்பத்தில் முன்பு போல பரபரப்பு இப்பொழுது இல்லை. இது விருத்தாசலம் தொகுதியைச் சார்ந்தது.

4:00 PM, March 26, 2006
Gopalan Ramasubbu said...

Tirupur pathi nan eluthina nenga ellam padipengala?;) nan piranthu vazhantha ooru Tirupur thaan.

MDMK- DuraiSamy(MLF)
Communist(CPM)- C.Govindasamy

I heard from my friends that Tirupur Municipal Chairman Mr.Visaithari.Palanisamy(ex-MlA) is planning to contest all alone to divide Communist votes since they troubled him a lot in Municpal meetings.It's gonna be tough for both the parties.

7:56 PM, March 26, 2006
Gopalan Ramasubbu said...

Nerupu sivanna,

அட என்னங்னா, விசைத்தரி BJP விட்டு போய் ரொம்ப நாளாச்சுங்ணோவ். Candidates எல்லாருமே கவுன்டர்கரதுனால சாதி ஒட்டு ஒன்னும் பெருசா(Deciding factor) இருக்காதுன்னு வைங்க. நம்மூரு கம்பனி முதலாழிகளுக்கும் செங்கொடிக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான்,செங்கொடிய விரும்பமாட்டாங்க. வைகோ நம்மூர்ல நல்லா பிரச்சாரம் பன்னார்ன்னா வாய்பு கிடைக்கலாம்.மக்கள் சிவசாமி மேல கோவமா இருக்கறதா சொல்றாங்க.செங்கொடி காரங்களும் லேசுப்பட்டவங்கில்ல.ஊர்ல இருந்தா சந்தோசமா பாத்து ரசிக்கலாம்.என்ன பன்றது போங்க.

11:40 PM, March 26, 2006
குழலி / Kuzhali said...

//Arithmetic Analysis ஐ தவிர சில முக்கிய விஷயங்களையும் இங்கு கவனிக்க வேண்டும்.
//
கூட்டணி கூட்டல் கழித்தல்களை தாண்டி உள்ள பல காரணிகள் உள்ளன, உதாரணமாக நான் பின்னூட்டத்தில் குறிப்பட்டது போல எம்.ஆர்.கே.பி யின் சாதி பாசத்தினால் பல பாமகவினர் சென்ற தேர்தலில் எதிர்முகாமில் இருந்த போதும் திமுகவிற்கு வேலைசெய்தது குறிப்பிடத்தக்கது...

எதிர்பார்த்தது போலவே மதிமுக சார்பாக பத்மனாபன் குறிஞ்சிப்பாடியில் நிற்கின்றார், இவரும் வன்னியர் என்றாலும் கடலூரில் நின்றிருந்தால் ஏற்பட்டிருக்க கூடிய பரபரப்பும் போட்டியும் குறிஞ்சிப்பாடியில் இவர் நிற்பதால் ஏற்படாது, ஏதேனும் அலை வந்து புரட்டி போடாமல் இருந்தால் குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி

7:52 AM, March 27, 2006
குழலி / Kuzhali said...

//3) தற்போது வி.சி, அதி.மு.கவுடன் சேர்ந்திருப்பதால்
அ.தி.மு.க அணிக்கு 19323 + 40497 = 59820 வாக்குகள் ஆகின்றன.
//
40497 வாக்குகள் திருமா வேட்பாளர் என்றதால் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், திருமா போட்டியில் இல்லாத நிலையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த வாக்குகள் மதிமுகவிற்கு சாதகமாக விழாது.

நன்றி

10:59 AM, March 28, 2006
Anonymous said...

அதிமுக மதிமுகவுக்கு தள்ளி இருக்கும் எல்லா தொகுதைகளுமே தம்மால் வெற்றிபெற முடியாது என்று நினைத்த தொகுதிகள்தான். அய்யோ பாவம் வைகோ. சீட்டு பெற்றும் புண்ணியமில்லை நிலைதான்.

8:34 PM, March 28, 2006
Pot"tea" kadai said...

குறிஞ்சிப்பாடியில் சௌ.பத்மநாபனுக்கு இடம் கிடையாதாமே?
யார் இந்த இராமலிங்கம்?

டொய்ங் டொய்ங் டொய்ங்...

3:21 AM, March 30, 2006