சோனியா பதவி விலகல் தியாகமா ?

சோனியா காந்தி தனது பாரளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது மிகப் பெரிய தியாகம் என்று காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியினரும் கூறி வருகின்றனர். பாரதீய ஜனதா கட்சியோ அது ஒரு தியாகமும் அல்ல என்று வலியுறுத்தி கூறி வருகிறது. எது எப்படியாயினும் சோனியா தன்னுடைய அதிரடி முடிவுகளால் மக்களின் மத்தியில் மறுபடியும் தன் இமேஜை உயர்த்திக் கொண்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி சோனியா காந்திக்கு எதிராக பலமான அஸ்திரம் என்று நினைத்து பிரச்சனையாக்கும் விஷயங்களை தன்னுடைய நடவடிக்கைகளால் சோனியா நிர்மூலமாக்கி விடுகிறார். பிரதமர் பதவியை மறுத்தது முதல் தற்பொழுது எம்.பி பதிவியை ராஜினாமா செய்தது வரை பாரதீய ஜனதா கட்சிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் அவர் வழங்குவதில்லை.



சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க கூடாது, சோனியா பதவி ஏற்றால் மொட்டை அடித்துக் கொள்வோம் என்று முழங்கிய பாரதீய ஜனதா கட்சியினர், உண்மையில் சோனியா அந்த பதவியை ஏற்க வேண்டும் என்றே நினைத்தனர். சோனியா அவ்வாறு பதவி ஏற்பதன் மூலம் தாங்கள் தான் உண்மையான தேச பக்தர்கள், இந்த நாட்டை காப்பாற்ற தகுதியானவர்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். சோனியாவை குறி வைத்து பாரதீய ஜனதா கட்சி தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க முடியும். ராமர் கோயில் பிரச்சனை போன்றவற்றுக்குப் பிறகு இந்தப் பிரச்சனை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடிப்பதற்கு நல்ல முழக்கமாக இருக்கும் என்று பாஜகவினர் நினைத்தனர்.

சோனியா காந்தி உட்பட வெளிநாட்டில் பிறந்தவர்கள் இந்தியாவின் பிரதமராக கூடாது என்ற சட்டத்தை இயற்றப் போவதாக கூறி வந்த வாஜ்பாய் மற்றும் பாஜகவினர் தங்களுடைய ஐந்து ஆண்டு ஆட்சியில் அதற்கான எந்த "முயற்சியையும்" மேற்கொள்ள வில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சோனியாவை குறிவைத்து அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க இந்தச் சட்டம் பயன்படாது என்று நினைத்தனர். சோனியா பிரதமராகும் வாய்ப்பு இருந்தால் தான் அதனை தங்களால் தேர்தல் பிரச்சனையாகவும் ஆக்க முடியும் என்று நினைத்தனர். அந்த வாய்ப்பை தொடர்ந்து அப்படியே பராமரித்து சோனியா பிரதமரானால் மொட்டை அடித்து கொள்வோம் என்று பிரச்சாரத்தையும் நடத்தினர்.


பாரதீய ஜனதா கட்சியினருக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் சோனியா பிரதமர் பதவியை மறுத்தார். அவரது இமேஜ் பாரதீய ஜனதா கட்சியின் அனுதாபிகள் தொடங்கி, நடுநிலையாளர்கள் வரை உயரவேச் செய்தது. இதற்குப் பிறகு உட்கட்சிப் பூசல், அத்வானி பிரச்சனை, எம்.பி.களின் லஞ்சம் எனப் பல பிரச்சனைகளில் சிக்கி தவித்த பாரதீய ஜனதா கட்சிக்கு சோனியா ஆதாயம் தரும் பதவியை வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. ஆனால் அது மிகப் பெரிய பிரச்சனையாகும் முன்பாக மிகச் சாதுரியமாக சோனியா தனது பதவியை விட்டு விலகி பாஜகவினர் இந்தப் பிரச்சனை மூலம் எந்த ஆதாயத்தையும் அடையாமல் செய்து விட்டார். தன்னுடைய இமேஜையும் உயர்த்திக் கொண்டார்.

ஆனால் காங்கிரசும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் சொல்வது போல இந்தப் பதவி விலகல் தியாகமா ?

சோனியாவின் பதவி விலகல் எப்படி தியாகமாகும் என்பதை இவர்கள் கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை. சோனியா இந்தப் பதவியை விட்டு விலகி அரசியலில் இருந்து ஓய்வு எடுத்து விட்டாரா, அல்லது இனி தேர்தலிலேயே போட்டியிட மாட்டேன் என்று கூறி விட்டாரா ? மிகவும் அழுத்தமாக தான் மறுபடியும் அதே தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக கூறியிருக்கிறார். தனக்கு ஏற்பட்டச் சிக்கலில் இருந்து தன்னை மிகவும் சாதுரியமாக விடுவித்துக் கொண்ட அதே நேரத்தில் அரசியல் ஆதாயத்தையும் தேடிக் கொண்டார். இது எந்தவிதத்திலும் தியாகமாகி விடாது. மாறாக மக்கள் மீது தேவையில்லாத மற்றொரு இடைத்தேர்தல் திணிக்கப்படுகிறது.

முதலில் இந்தப் பிரச்சனையே அரசியல் காரணங்களுக்காக தான் நடந்ததே தவிர அரசியல் நேர்மையை கட்டிக் காக்க வேண்டிய எண்ணம் இந்தப் பிரச்சனையை முதலில் முன்நிறுத்திய காங்கிரசுக்கும் சரி, பின் இந்த பிரச்சனையை தன் கையில் எடுத்துக் கொண்ட பாரதீய ஜனதா கட்சிக்கும் இருந்ததில்லை. லஞ்சம் வாங்கிய தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக வாதாடிய அத்வானி போன்ற தலைவர்கள் சோனியாவுக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க செல்வது எல்லாம் ஒரு பெரிய சீரியசான விஷயமாக எனக்கு தோன்றியதில்லை. அரசியல் நாடகத்தில் ஒரு அத்தியாயம் அவ்வளவு தான். ஜெயா பச்சனுக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய காங்கிரஸ், சோனியாவை காக்க அவசரச் சட்டம் கொண்டு வர முனைந்தது எல்லாம் மறந்து போய் இன்று சோனியாவின் தியாகம் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பதவி மூலம் சோனியா பெரிய ஆதாயங்கள் எதையும் அடைந்து விடப் போவதில்லை. மைய அரசின் ஆட்சியே அவர் கையில் இருக்க ஏதோ ஒரு பதவி மூலம் தான் அவர் ஆதாயம் அடைய வேண்டுமா என்ன ? இந்தப் பிரச்சனையே முதலில் அர்தமற்றது. பாரதீய ஜனதா கட்சிக்கு அரசியலாக்க கிடைத்த ஒரு விஷயம் என்பதை தவிர இதில் எந்த முக்கியத்துவமும் இருப்பது போல எனக்கு தெரியவில்லை.

இந்தப் பிரச்சனை எழுந்தவுடனே சோனியா பதவி விலகி இருந்தால் அவர் நேர்மையை நாம் சிலாகித்து இருக்கலாம். மாறாக இந்தப் பிரச்சனை தனக்கு அதிக பிரச்சனைகளை கொண்டு வரும் என்று தெரிந்தப் பிறகு தான் அவர் விலகி இருக்கிறார். இதில் எந்த தியாகமோ, நேர்மையோ இல்லை. தானும் இந்தியாவின் பல அரசியல்வாதிகள் போன்ற ஒருவர் தான் என்பதை சோனியா மற்றொரு முறை நிருபித்து இருக்கிறார். பிகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை ஆட்சியில் அமர்த்த கவர்னர் பதவியை தங்களுக்கு சாதகமாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

எம்.பி.க்கள் ஆதாயம் தரும் பதவிகளில் இருக்க வகைச் செய்யும் சட்டத்தை காங்கிரஸ் இப்பொழுது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போகிறது. இதற்கு ஆதரவாகவே பாரதீய ஜனதா கட்சியும் வாக்களிக்கும். அல்லது வாக்களிப்பை புறக்கணித்து இந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்ற உதவும். இவ்வாறு இருக்கையில் சோனியாவின் "தியாகம்" எவ்வளவு நகைப்பிற்குரியதோ, அதே அளவுக்கு இந்தப் பிரச்சனையை முன்நிறுத்தும் பாரதீய ஜனதா கட்சியின் கோஷங்களும் நகைப்பிற்குரியவையே.