Monday, March 27, 2006

பண்ருட்டி

பண்ருட்டி என்றாலே பலாப்பழமும், முந்திரியும் தான் அனைவரது நினைவுக்கும் வரும். சென்னை - கும்பகோணம் சாலையில் செல்பவர்கள் ரோட்டோரங்களில் சீசன் நேரங்களில் பண்ருட்டி, நெய்வேலி பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் பலாப்பழங்களையும், சாலையின் இரு புறமும் சூழ்ந்துள்ள முந்திரி தோப்புகளையும் பார்த்திருக்கலாம். பண்ருட்டியில் இருந்து நெய்வேலி வரும் வரையிலும், நெய்வேலி உள்ளே நுழைந்து நெய்வேலி நகரை எட்டும் சிறு தூரம் வரையும் சாலையின் இரு புறங்களிலும் இருக்கும் முந்திரி தோப்புகள் செல்வச் செழிப்பு உள்ள பயிர் போல பலருக்கு தோன்றும். ஆனால் உண்மையில் அதனை நம்பி இருக்கும் பலருக்கு வறுமை தான் மிச்சம் என்பது பலருக்கு தெரியாது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்காக "கடலூர் மாவட்ட கலைக் கழக" போட்டிகள் நடைபெறும். பெரும்பாலும் இந்தப் பகுதியில் இருக்கும் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தான் இந்தப் போட்டி நடைபெறும். நெய்வேலியில் இருக்கும் பிற ஆங்கிலப் பள்ளிகள் எதுவும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்றதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் எங்கள் பள்ளி (Saint Pauls Matric school) இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் பங்கு பெறும். எங்கள் பிரின்சிப்பால் தந்தை தாமஸ் இந்தப் போட்டிகளில் நாங்கள் பங்கு பெற்றால், நெய்வேலி பள்ளிகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற கருத்து உடையவர். இந்தப் போட்டிகளில் நான் பல முறை கலந்து கொண்டிருக்கிறேன்.

பல கிராமங்கள் எனக்கு இந்த வகையில் தான் அறிமுகமாகின. நெய்வேலி அருகே இருக்கும் சில கிராமங்கள் நண்பர்கள் மூலமாக அறிமுகமாகின. இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டுமானால் செம்மண் சாலைகள் வழியாகத் தான் செல்ல வேண்டும். சில நேரம் சைக்கிளில் சென்றிருக்கிறோம். முந்திரி தோப்புகளுக்கு இடையே ஒத்தையடி பாதை போல இருக்கும் வழியாகத் தான் பல நேரங்களில் செல்வோம். முந்திரி தோப்புகளிடையே அங்காங்கே சிறு சிறு கிராமங்கள் இருக்கும். இந்த கிராமங்களில் இருக்கும் அனைவருக்கும் முந்திரி தோப்புகள் சொந்தம் அல்ல. இவர்கள் இந்த முந்திரி தோப்புகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் தான்.

நெய்வேலியை ஒட்டிய கிராமப் பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலை மிகவும் பரிதாபமானது. இவர்களில் பெரும்பாலானோர் ஒரு காலத்தில் ஒரளவுக்கு முந்திரி தோப்புகளுடனோ அல்லது தங்கள் வாழ்க்கைத் தேவைக்கான பிரச்சனைகள் அதிகம் இல்லாமலும் இருந்தவர்கள். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம் மற்றும் அதன் பணியாளர்களுக்கு தேவையான குடியிருப்புகள் (Neyveli Township) போன்றவை இவர்கள் கிராமங்களையும், விளை நிலங்களையும் விழுங்கி விட்டன. இந்த நிலங்களுக்கு நஷ்ட ஈடும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலையும் வழங்குவதாக என்.எல்.சி நிர்வாகம் ஆரம்ப காலங்களில் வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் இந்த வாக்குறுதி பிறகு என்.எல்.சி அதிகாரிகளால் நிறைவேற்றப் படவில்லை. இவர்களுடைய பிரச்சனையை முன்னெடுத்துச் செல்ல எந்த அரசியல் தலைவர்களும் இல்லாத நிலை தான் இருந்தது. இதில் சில குடும்பங்களை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். மிகவும் ஏழ்மையான குடும்பங்கள். இவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம் என்.எல்.சி நிர்வாகம் தங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவார்கள் என்பது தான். இந்த எதிர்பார்ப்புகளை தவிர இவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு இந்தப் பகுதியில் பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லை. எந்த பெரிய தொழிலும் இங்கு இல்லை.

விவசாயம் என்று சொன்னால் பண்ருட்டியில் முந்திரியும், பலாப் பழமும் தான். மாங்காய், கொய்யா போன்றவையும் இங்கு விளைவது உண்டு (குருவி குடைஞ்ச கொய்யாப் பழம் இப்படி தான் சினிமாவிற்கு வந்து சேர்ந்தது). ஒரு விஷயத்தை இங்கு கவனிக்கலாம். இங்கு விளையும் அனைத்துமே வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே விளையக் கூடியவை. அதுவும் தவிர பெரிய வருமானத்தையும் சிறு கூலி விவசாயிகளுக்குப் இவை பெற்று கொடுத்து விடாது. முந்திரி தோப்புகள் சிறு விவசாயிகளிடமும் இருக்காது. இவர்கள் கூலி வேலைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். அதுவும் ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டுமே வருமானம் இருக்கும். வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இவையிடையே முந்திரி தோப்புகளில் தீவிரவாதம் வளர்ந்ததில் ஆச்சரியம் இல்லை தான்.

1980களில் முந்திரி தோப்புகளில் விளைந்த தமிழ் தேசியம் சார்ந்த தீவிரவாதம் பண்ருட்டியிலும் இருந்தது. சில நாட்டு குண்டுவெடிப்புகள், போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது போன்றவை குறித்து எனக்கு ஞாபகம் இருக்கிறது.

இங்கு விளையும் பலாப் பழத்தை குறித்து அதிக விளக்கம் கொடுக்க தேவையில்லை. முந்திரிப் பழம் எனக்குப் பிடிக்கும். முந்திரிப் பழத்தை வெட்டி, உப்பு போட்டு ஊற வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். சில நேரங்களில் தொண்டையில் ஒரு மாதிரி நமச்சல் ஏற்படவும் செய்யும். முன்பெல்லாம் முந்திரி தோப்புகளில் முந்திரிப் பழத்தை இலவசமாக பறித்துக் கொள்ளலாம். முந்திரிப் பழத்தைப் பறித்துக் கொண்டு கொட்டையை மட்டும் கொடுத்து விட வேண்டும். முந்திரிப் பழம் விற்று சிலர் தங்கள் அன்றாடத் தேவைகளை ஒரளவுக்குப் பூர்த்திச் செய்து கொள்வார்கள். ஆனால் இப்பொழுது முந்திரிப் பழம் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், சில கெமிக்கல் தொழில்களுக்கு உபயோகப்படுவதாலும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை.

முந்திரிப் பருப்பு மிகவும் விலை உயர்ந்த பொருள் தான் என்றாலும் பச்சை முந்திரிக் கொட்டையை கொழம்பு வைக்கும் வழக்கமும் இந்தப் பகுதியில் உண்டு. இதில் பெரிய சுவை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பலாப் பிஞ்சை பொறியல் செய்வதும் இங்கு வழக்கம். அது நன்றாக இருக்கும். ஆனால் ஏதோ சக்கையை சாப்பிடுவது போல இருக்கும்.

இந்தப் பகுதியில் முந்திரி, பலா சீசன் வந்து விட்டால் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பலாப் பழமும், முந்திரி பழமும் கொடுப்பது ஒரு வழக்கமாகவே உள்ளது. நண்பர்கள் மற்றும் எங்கள் கடைக்கு சப்ளை செய்பவர்கள் மூலமாக எங்கள் வீட்டிற்கு நிறைய பழங்களும், பச்சை முந்திரி பருப்பும் வரும். அழகி படத்தில் கூட பார்த்திபன் வீட்டிற்கு அவரின் கிராமத்து நண்பர்கள் பலாப்பழத்தை தூக்கி கொண்டு வருவதை கவனித்து இருக்கலாம். இது இந்தப் பகுதியில் இயல்பாக இருக்கும் ஒரு பழக்கம். சில நேரம் சென்னைக்கு பேருந்தில் செல்லும் பொழுது பண்ருட்டியில் இருந்தும், நெய்வேலியில் இருந்தும் நிறையப் பேர் இவ்வாறு பலாப்பழத்தை தூக்கி கொண்டுச் செல்வதை பார்க்கலாம். சென்னையில் ஒரு பேருந்து மேல் நிறையப் பலாப் பழம் இருந்தால் அந்த பேருந்து எங்கிருந்து வருகிறது என்பதை கவனியுங்கள். நெய்வேலி, பண்ருட்டி வழியாக வரும் கும்பகோணம், தஞ்சாவூர் பேருந்தாக இருக்கும்.

பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் 1980களில் இருந்த அளவுக்கு வறுமை இப்பொழுது இல்லை என்று சொல்லலாம். இங்கிருந்து முந்திரி ஏற்றுமதி செய்யப்படுவது ஒரு காரணம். முன்பு தங்கள் விளைச்சலை பக்கத்து ஊர்களில் சந்தைப் படுத்திக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது ஏற்றுமதி செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

அது போல நெய்வேலியில் நிலம் இழந்தவர்களுக்கு வேலை வழங்கும் பிரச்சனை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பிறகு முக்கியத்துவம் பெற்றது. சில போராட்டங்களும் நடந்திருக்கின்றன. பாமக முயற்சியால் நிறையப் பேருக்கு வேலை கிடைத்தது.(என்னுடைய நெய்வேலி பற்றிய பதிவில் இது குறித்து எழுதி இருக்கிறேன்).

பாமக போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் முந்திரி தோப்புகள், பேருந்து மேல் மறைந்திருந்து கல் எறிவதற்கும், பேருந்தை கொளுத்தி விட்டு ஓடி ஒளிந்து கொள்வதற்கும் நல்ல வசதியாக இருந்தது என்று சொல்லலாம். பாமக போராட்டமா, நிச்சயம் பேருந்து பண்ருட்டியை தாண்டாது. அது போல சிதம்பரம், சேத்தியாதோப்பு பகுதிகளை தாண்டாது. இதன் இடையில் இருப்பதால் நெய்வேலிக்கு எந்த திசையில் இருந்தும் பேருந்து வராது.

பேருந்து என்றதும் இந்தப் பகுதியில் ஞாபகத்திற்கு வருபவர், பண்ருட்டி ராமச்சந்திரன் தான். "செல்லமாக" பண்ருட்டியார். மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்கோ, இந்தப் பகுதியில் தொழில் வளர்ச்சிக்கோ பண்ருட்டியார் எதுவும் செய்யவில்லை. ஆனால் பல பண்ருட்டி கிராமங்களை பேருந்தால் இணைத்து விட்டார். அதுவே அவருக்கு அபரிதமான செல்வாக்கை பெற்று கொடுத்தது. பண்ருட்டி டவுன் பஸ் என்பது நான் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தே மிகப் பிரபலம். நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து தொடங்கி என் பள்ளி வழியாக பண்ருட்டி செல்லும் டவுன் பஸ் சில நேரங்களில் நான் பள்ளுக்குச் செல்ல உதவி இருக்கிறது. பண்ருட்டி டவுன் பஸ்கள் நிறையப் பேருக்கு இன்னமும் பண்ருட்டியாரை தான் ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஞாபக சக்தி தனக்கு தேர்தலில் வெற்றி பெற வைக்கும் என்று எண்ணி கடந்த தேர்தலில் பண்ருட்டியார் இங்கு தனித்து போட்டியிட்டார். ஆனால் மூன்றாம் இடத்தையேப் பெற்றார். இந்த தேர்தலில் தான் இங்கு போட்டியிட கூட வாய்ப்பு இருக்கிறது என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார் என்பதால் இந்த தேர்தலில் கவனிக்கப்படும் தொகுதியாக பண்ருட்டி உருவாகி இருக்கிறது.

பண்ருட்டி பற்றி எழுத தொடங்கி பதிவு நீண்டு விட்டதால், பண்ருட்டி தொகுதி குறித்த அலசல் அடுத்தப் பதிவில் வரும்

5 மறுமொழிகள்:

ஜோ/Joe said...

//ஆனால் ஏதோ சக்கையை சாப்பிடுவது போல இருக்கும்.//

எங்கள் ஊரிலும்(குமரி) ,கேரளாவிலும் பலாப் பழத்தையே 'சக்கை' என்று தானே சொல்கிறார்கள்.

11:08 PM, March 27, 2006
Vassan said...

பல வருடங்களுக்கு முன்பு அடிக்கடி போன ஊர் பக்கங்கள். முந்திரி மரத்தின் அழகை பார்த்து பலமுறை வியந்ததுண்டு. ஒருதடவை கூட அவற்றின் பின்னால் இருக்கும் தொழிலாளர்களை பற்றி நினைத்ததில்லை. தற்போது ஏழ்மை அவ்வளவு கிடையாது என்பது அறிய சமாதானமாய் உள்ளது.

இங்கே நானிருக்கும் அல்புகர்க்கியில், கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாரே தனித்தமிழ்நாடு இயக்கத்தின் தமிழரசன் < முந்திரி காட்டில் வளர்ந்தவர்? > அவருடைய அண்ணன் பையன் ஒருவர் இருக்கிறார்.

வடலூரில் பீங்கான் தொழிற்சாலைகள் என்னவாயின..?

சீர்காழியில் பண்ருட்டி பக்கத்திலிருந்து வரும் முந்திரி பழங்களை ரொம்ப விலை குறைவாக விற்பார்கள், கூறு 25 காசு என மத்திய 70 களில் இருந்ததாக ஞாபகம். காய்வெட்டான பழத்தை தின்றுவிட்டு முழித்துள்ளேன் ஒரு தடவை.

மீந்து போன,அழுகிய பழங்களை கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மூட்டையோடு வாங்கிப் போவார்கள்.

பலாக்கொட்டையில் குழம்பு வைத்தால் ஒண்ணாங்கிளாஸாய் இருக்குமே...
நிறைய தேங்காய் போட்டு பொரித்த குழம்பு வைக்கலாம் < வட்டார உணவு ? >
2 தடவை சாதத்துடன் சாப்பிட்டுவிட்டு திரும்ப அதையே மோர்சாததுக்கும் தொட்டுக்கலாம் !

நன்றி சசி.

11:42 PM, March 27, 2006
வசந்தன்(Vasanthan) said...

எங்கள் பக்கம் முருங்கைக்காயும் பலாக்கொட்டையும் சேர்த்த கறி பிரபலம்.

12:53 AM, March 28, 2006
Anonymous said...

Dear Mr.Sasi,
Your article is very informative.
I have been travelling on Kumbakonam Chennai road for sevral years now.I had always wondered how it would be inside those Cashew groves.This is first time for me to know that there are villges inside those groves.
In the last two years, I am seeing lot of construction activity ,on the other side of the road opposite to NLC.Also, several acres of land between Panruti and Vikravandi (especially upto railway gate across Villupuram -Pondy road ) have been made plots and real estate activity is picking up there.
This may be becasue of the improvement in the economic situation of people in these areas as mentioned by you.(Somewhere here is a modern school run by Mr.Ponmudi, Ex-Minister)
Execpting Chemplast's factory at KAdampuliyur, there is no factory or industy worth its name in this area.I understand that Sesashayee and other Ceramic factories at Vadalur have been closed.
Since NLC is only a power plant , I believe that there was not much ancilliary industry development in this area , unlike what was possible by BHEL at Trichy.

The area between Vadalur and Sethiathope is rendered fertile , thanks to the water supply made possible by NLC.(You mentioned it already in your article on Kurinchipadi)

I am awaiting your analysis on the possiblities at Panruti.

K.G.Subbramanian

1:39 AM, March 28, 2006