2006 தேர்தலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தொகுதியாக விருத்தாசலம் மாறியிருக்கிறது. விஜயகாந்த் இந்த தேர்தலில் இங்கு களமிறங்குகிறார். விருத்தாசலத்தில் விஜயகாந்த் களமிறங்குவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமாவட்டங்களில் விஜயகாந்த்திற்கு குறிப்பிடத்தகுந்த "செல்வாக்கு" இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருவது அவரை இங்கு நிற்க தூண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் பாமகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பாமக வலுவாக இருக்கும் இடங்களில் தங்களை தேவையில்லாமல் நுழைத்து கொள்கிறார்கள் என்று தோன்றினாலும் ரஜினிகாந்த்துடன் விஜயகாந்த்தை என்னால் ஒப்பிட முடியவில்லை. ரஜினிகாந்த் தோல்வி அடைந்து விட்டதால் விஜயகாந்த்தும் தோற்று விடுவார் என்றும் நாம் முடிவு செய்து விட கூடாது. ரஜினிகாந்த்தை விட விஜயகாந்த் கொஞ்சம் "புத்திசாலி" என்பது என் எண்ணம். எனவே அவரது இந்த முடிவின் பின் இருக்கும் சில காரணங்களை நாம் ஒதுக்கி விட முடியாது.
விஜயகாந்த் தன்னை ஒரு சக்தியாக இந்த தேர்தலில் நிலைநிறுத்திக் கொள்ள முனைகிறார். அது தேர்தலில் வெற்றி என்பதை விட கணிசமாக வாக்குகளை பெறுவது அவரது குறிக்கோளாக இருக்கிறது. இந்த கணிசமான வாக்குகளை வடமாவட்டங்களில் பெற்று விட முடியும் என்று விஜயகாந்த் நினைக்கிறார். இதற்கு குமுதம், தினமலர் போன்ற பத்திரிக்கைகளும் தூபம் போட்டுள்ளன. குமுதம் தன்னுடைய கருத்து கணிப்பில் வடமாவட்டங்களில் விஜயகாந்த்திற்கு பல தொகுதிகளில் 10-15% வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
விஜயகாந்த்திற்கு வடமாவட்டங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ரஜினியை விட ஆதரவு அதிகம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நெய்வேலியை ஒட்டிய ஊர் விருத்தாசலம் என்பதால் இங்கிருக்கும் சில கிராமங்களின் அறிமுகம் எனக்கு உண்டு. இங்கிருக்கும் பல இளைஞர்கள் விஜயகாந்த்தின் தீவிர ரசிகர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதாவது 30வயதிற்குட்பட்ட பலர் விஜயகாந்தின் ரசிகர்கள். இதற்கு அடுத்த நிலையில் தான் ரஜினி, சரத்குமார் போன்றோர் உள்ளனர். இங்கு பலருக்கும் ரசிகர்கள் உண்டு. எந்த நடிகர்களுக்கும் ரசிகர்கள் பஞ்சம் ஏற்படுவதில்லை. விஜய், அஜித், விக்ரம் தொடங்கி சிலம்பரசன், தனுஷ் வரை அனைவருக்கும் ரசிகர்கள் உண்டு. இவர்களிடையே விஜயகாந்த்தின் ரசிகர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.
விஜயகாந்த் ரசிகர்களில் அதிகளவில் வன்னியர்கள் குறிப்பாக பாமகவினர் இருப்பதாக பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. இருக்கலாம். பிற கட்சியினரும் இருக்கலாம். குறிப்பாக திமுகவினர் இருக்கலாம். இவர்களில் பலர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்திருக்கலாம். சிலர் தங்களுடைய சாதி மற்றும் கட்சி அபிமானத்தால் பாமக, திமுக ஆகிய கட்சிகளில் தொடர்ந்து கொண்டும் இருக்கலாம். 90% விஜயகாந்த் ரசிகர்கள் விஜயகாந்த் கட்சியில் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மொத்தமாக விருத்தாசலத்தில் 5000பேர் இருக்கலாம்.
இதை மட்டுமே கொண்டு விஜயகாந்த் களத்தில் இறங்குவாரா ? அதுவும் கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் இங்கு தன்னுடைய பலத்தை நிருபித்து இருக்கும் பாமகவை எதிர்த்து எந்த தைரியத்தில் விஜயகாந்த் களத்தில் இறங்குகிறார் ?
பாட்டாளி மக்கள் கட்சி வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் தொகுதிகளில் விருத்தாசலம் முக்கியமான தொகுதி. இங்கிருக்கும் பல கிராமங்கள் முழுக்க முழுக்க வன்னிய இன மக்கள் மட்டுமே இருக்கும் கிராமங்கள் ஆகும். பல கிராமங்களில் பிற கட்சியினரை வாக்கு சேகரிக்க கூட விடுவதில்லை. அப்படியான ஒரு கிராமம் தான் ஆதாண்டர்கொல்லை என்னும் கிராமம். இது எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் சிறு கிராமம். இங்கு ஒரு சில ஓட்டுகளை தவிர மொத்த ஓட்டுகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் விழும். இங்கு பிற கட்சியினர் எவரும் வாக்கு சேகரிக்க கூட செல்வதில்லை. இங்கிருக்கும் இளைஞர்கள் அனைவருமே தீவிர பாமக தொண்டர்கள். இவ்வாறான பல கிராமங்களை உள்ளடக்கியது தான் விருத்தாசலம் தொகுதி. இந்த தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் கிராமத்து வாக்குகள் தான்.
1991ல் தன்னுடைய முதல் தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி, தனித்து போட்டியிட்டு இங்கு சுமார் 37,634 ஓட்டுகளை பெற்று இரண்டாமிடம் பெற்றது. அந்தக் கட்சியின் அப்போதைய தலைவரும் பின்பு பாமகவில் இருந்து நீக்கப்பட்டவருமான தீரன் இங்கு போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜீவ் காந்தி அனுதாப அலையில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றது. திமுகவிற்கு மூன்றாமிடம் கிடைத்தது.
1996 தேர்தலில் கடுமையான ஜெ எதிர்ப்பு அலையில் பாமகவின் வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி சுமார் 42,218 ஓட்டுகளைப் பெற்றார். இந்த தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட்டு இரண்டாமிடத்தை பெற்றது. தமிழகமெங்கும் மிக எளிதாக வெற்றி பெற்ற திமுக இங்கு போராடி 6885 ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு பாமகவின் செல்வாக்கு தவிர டாக்டர் கோவிந்தசாமியின் தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய காரணம். டாக்டர் கோவிந்தசாமி இங்கு மிகவும் பிரபலமான டாக்டர். குறிப்பாக கிரமத்து மக்களிடையே குறிப்பிடத்தகுந்த செல்வாக்கு மிக்கவர். இங்கு டாக்டர் கோவிந்தசாமி தான் வெற்றி பெறுவார் என்று அந்த தேர்தலில் கருதப்பட்டது. பல பத்திரிக்கைகளும் அப்படி தான் எழுதிக் கொண்டிருந்தன. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
கடந்த 2001 தேர்தலில் பாமக-அதிமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கோவிந்தசாமி சுமார் 68,905 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி சுமார் 61,777 ஓட்டுகளைப் பெற்றது.
இங்கு பலமான கட்சிகள் என்று பார்த்தால் முதல் இடம் பாமகவிற்கு தான். அடுத்த நிலையில் திமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் உள்ளன. இதற்கு அடுத்த நிலையில் இருப்பவை அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள். காங்கிரசுக்கு இங்கு ஒரளவிற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
முதன் முறையாக திமுக-பாமக இணைந்து இந்த தொகுதியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. பாமகவின் வாக்கு வங்கியாக இங்கு சுமார் 37,000 முதல் 40,000 ஓட்டுகள் உள்ளன. திமுகவிற்கு சுமாராக 30,000 முதல் 40,000 வாக்குகள் உள்ளன. இங்கு காங்கிரசுக்கும் கணிசமான ஆதரவு இருக்கிறது. இதன் படி பார்த்தால் இங்கு பாமக மிக எளிதாக வெற்றி பெற வேண்டும். 2004 பாரளுமன்ற தேர்தலில் கூட இங்கு
திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி அதிக ஓட்டுகளை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
ஆனால் பாமகவின் வெற்றிக்கு முக்கியச் சவாலாக இருக்கப் போவது இரண்டு காரணங்கள்
- பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி
- விஜயகாந்த் factor (அப்படி ஒன்று இருந்தால்)
பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி எந்தளவுக்கு தொகுதியில் பிரபலமாக இருந்தாரோ அதே அளவுக்கு அவருக்கு தொகுதியில் தற்பொழுது கெட்டப் பெயர். தன்னுடைய டாக்டர் தொழிலை மட்டும் பார்க்கிறார். கிராமங்கள் பக்கம் வரவேயில்லை. கிராம மக்களிடம் சரியாக பேசுவதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மணிமுத்தாறு பாலம் உடைப்பட்டது மிக முக்கிய தேர்தல் பிரச்சனையாக உள்ளது. டாக்டர் ராமதாசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் மட்டுமே டாக்டர் கோவிந்தசாமிக்கு தேர்தலில் சீட் கிடைத்திருக்கிறது. இந்த தேர்தலில் பாமக தோல்வியடைந்தால் அதற்கு முக்கிய காரணகர்த்தா டாக்டர் கோவிந்தசாமி தான்.
அடுத்ததாக சொல்லப்படுவது விஜயகாந்த factor. அவரின் ரசிகர் மன்றத்தினர், சினிமா கவர்ச்சி தவிர கிராமத்து மக்கள் டாக்டர் கோவிந்தசாமி மேல் உள்ள அதிருப்தியை விஜயகாந்த்திற்கு சாதகமாக மாற்றக் கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே விஜயகாந்த்தை அவரது அரசியல் ஆலோசகர் பண்ருட்டியார் இங்கு போட்டியிட வைத்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஓரளவிற்கு கணிசமான வாக்குகளை விஜயகாந்த் பெறக்கூடும் என்று பண்ருட்டியார் நினைத்திருக்க கூடும்.
அதே சமயத்தில் இங்கு முக்கிய போட்டி பாமகவிற்கும் அதிமுகவிற்கும் தான். ஆனால் அதிமுகவில் அதிகம் அறிமுகமில்லாத வேட்பாளர் களமிறங்கி இருப்பது பாமகவிற்கு சாதகமான அம்சம். அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஆர் என்று இங்கு அழைக்கப்படும் ஆர்.டி.ரங்கநாதன் களமிறங்கி இருந்தால் அதிமுகவிற்கு இன்னும் பலம் சேர்ந்திருக்கும்.
மொத்தத்தில் வி.ஐ.பி தொகுதியாக மாறியிருக்கும் விருத்தாசலத்தில், பாமக தேர்தல் முன்பு வரை தன்னுடைய தோழனாக இருந்த திருமாவளவனின் இழப்பை முக்கியமாக உணரும். பாமக தன்னுடைய தனிப்பட்ட பலத்தை ஓரளவிற்கு இழந்தாலும் திமுக, காங்கிரஸ் என்ற வலுவான கூட்டணி பலத்துடன் இருப்பதால் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.
விடுதலைச் சிறுத்தைகள் இங்கு பாமகவிற்கு உதவுக்கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.விஜயகாந்த்தே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பதால் இது நாள் வரை ரசிகர் மன்றங்களுக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் பாமகவிற்கு Cross-voting செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
"கேப்டன்" தன்னுடைய டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ளுவார் என்று நம்புகிறேன். இரண்டாமிடம் எதிர்பார்க்க முடியாது.
இரண்டாமிடம் அதிமுகவிற்கோ, பாமகவிற்கோ தான்.
(ஒவ்வொரு தேர்தலிலும் என்னுடைய அப்பாவின் கணிப்பு சரியாக அமைந்திருப்பதை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஒரு வியபாரியாக இருப்பதால் பலதரப்பு மக்களிடமும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் நிற்கிறார் என்றதும் ஒரு ஆர்வத்தில் உடனே என்னுடைய அப்பாவையும், விருத்தாசலத்தில் இருக்கும் சில நண்பர்களையும் தொடர்பு கொண்டேன். அவர்கள் கொடுத்த தகவல்களை என்னுடய கணிப்புகளுடன் கலந்து இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்)
19 மறுமொழிகள்:
தமிழகத் தேர்தல் 2006 : Viruthachalam Vijayganth - Dinamalar
7:37 PM, March 31, 2006விருத்தாசலம் குறித்த இன்ஸைடர் அலசலுக்கு நன்றி...
என்னோட இரண்டணா கேள்வி:
---ரஜினிகாந்த் தோல்வி அடைந்து விட்டதால் விஜயகாந்த்தும் தோற்று விடுவார் ---
ரஜினி எங்கே எப்போது தேர்தலில் தோல்வி அடைந்தார்?
பாலா,
8:27 PM, March 31, 2006இது தானே வேண்டாங்கறது. நான் இங்க என்ன சொல்றன்னு புரியாத மாதிரி கேட்கறீங்க :-))
கடந்த தேர்தலில் பாமகவை தோற்கடிப்பேன் என்று கூறி 6 தொகுதிகளில் ரஜினி தோற்றுப் போனது குறித்து தான் இங்கு குறிப்பிட்டேன்.
கண்டிப்பாகத் தேறுவார்!
8:59 PM, March 31, 2006இது ஒன்றும் சிங்கத்தை அதன் கோட்டையிலேயே சந்திக்கும் திறனோ,
அல்லது, தீரமான முடிவு என்றோ பம்மாத்து பண்ணாமல்,
சற்று அறிவுபூர்வமாக ஆலோசித்தால்,
விருத்தாசலம் நகரில்தான் VK-வுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும்,
வடக்கை முக கழகமும்,
தெற்கை ஜெகழகமும்,
குத்தகை எடுத்திருப்பதாக பிரமை கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில்,
நடுவில் கை வைப்பதே, சரியான யுக்தி என்பதும் விளங்கும்.
"பாலம்" புகழ் டாக்டர். கோவிந்தசாமியை எதிர்த்து வலுவில்லாத ஜெகழக வேட்பாளர் இருக்கும் நிலையில்,
ஒரு புதிய அலை எழும்பும், எழுப்ப வேண்டும் என்ற துணிச்சலோடு தனித்துப் புறப்பட்டிருக்கும், கேபடன் , சரியான தொகுதியையே தெரிவு செய்திருக்கிறார் என்றே படுகிறது.
மக்கள் ஒரு மாற்றத்தை விரும்ப்வது உண்மையானால்,
கேபடன் ஜெயிப்பதும் உருதியே!
Pl. see my posting in Thiru, Muthu's blog on 'karthik-VK kuutu' also. Thanks.
//இந்த தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட்டு இரண்டாமிடத்தை பெற்றது. தமிழகமெங்கும் மிக எளிதாக வெற்றி பெற்ற திமுக இங்கு போராடி 6885 ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது
9:00 PM, March 31, 2006//
இதற்கு முக்கிய காரணம் கடைவீதி வாக்குகள், கிட்டத்தட்ட 10,000 வாக்குகள் உள்ள விருத்தாசலம் கடைவீதி, மற்றும் வணிகர்கள் மத்தியில் கிளப்பப்பட்ட பீதி, பாமக வெற்றிபெற்றால் இங்கு கடையே நடத்த முடியாது என்று நேரடி பிரச்சார பீதி மேற்கொள்ளப்பட்டது, இன்று விருத்தாசலம் சட்டமன்றம், நகர்மன்றம் விருத்தாசலம் தொகுதி அடங்கிய பாராளுமன்றம் என அத்தனையும் பாமகவின் கையில் ஆனால் அதே ஆட்கள் இன்னமும் அதே கடை வீதியில் வியாபாரம் செய்து கொண்டு தான் உள்ளனர் எந்த பிரச்சினையும் இன்றி.
//கடந்த 2001 தேர்தலில் பாமக-அதிமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கோவிந்தசாமி சுமார் 68,905 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி சுமார் 61,777 ஓட்டுகளைப் பெற்றது.
//
1996-2001ன் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிறந்த முறையில் பணியாற்றியது இதற்கு முக்கிய காரணம்,
//அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஆர் என்று இங்கு அழைக்கப்படும் ஆர்.டி.ரங்கநாதன் களமிறங்கி இருந்தால் அதிமுகவிற்கு இன்னும் பலம் சேர்ந்திருக்கும்.
//
பலம் சேர்ந்திருக்கும், ஆனாளும் 1991-1996ல் நிறைய கெட்ட பெயர் சம்பாதித்திருந்தவர் இவர்.
//பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி எந்தளவுக்கு தொகுதியில் பிரபலமாக இருந்தாரோ அதே அளவுக்கு அவருக்கு தொகுதியில் தற்பொழுது கெட்டப் பெயர். தன்னுடைய டாக்டர் தொழிலை மட்டும் பார்க்கிறார். கிராமங்கள் பக்கம் வரவேயில்லை. கிராம மக்களிடம் சரியாக பேசுவதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மணிமுத்தாறு பாலம் உடைப்பட்டது மிக முக்கிய தேர்தல் பிரச்சனையாக உள்ளது
//
நானும் கேள்விப்பட்டேன், வேட்பாளர் கோவிந்தசாமி மீதான அதிருப்தி நிறையவே தாக்கத்தை ஏற்படுத்தும், நகர்மன்ற உறுப்பினர்களின்(கவுன்சிலர்கள்) ஊழலுக்கு துணைபோகாமல் அதை நேரடியாக எதிர்த்து, பதவியை வைத்து சொத்து சேர்க்காமல் நல்ல முறையில் பணியாற்றும் பாமகவை சேர்ந்த தற்போதைய நகர் மன்ற தலைவர் போட்டியிட்டிருந்தால் பாமகவிற்கு இன்னும் பலமாக இருந்திருக்கும்.
//"கேப்டன்" தன்னுடைய டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ளுவார் என்று நம்புகிறேன். இரண்டாமிடம் எதிர்பார்க்க முடியாது.
இரண்டாமிடம் அதிமுகவிற்கோ, பாமகவிற்கோ தான்.
//
திரைப்பட கவர்ச்சி அதிகம் உள்ள இடத்தில் இப்படி கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை முடிவுகள் எப்படியும் இருக்கலாம், ஆனால் மருத்துவர் பாமக, அதிமுக இருவருக்குமே இங்கே வெற்றி அத்தனை எளிதல்ல
தினமலர் செய்தியின் படி
9:07 PM, March 31, 2006பாமக இங்கு 75 ஆயிரத்து 620 ஓட்டுக்களைப் பெற்றது.
திருமாவளவன் = 34 ஆயிரத்து 387 ஓட்டுக்கள்
அ.தி.மு.க. = 24 ஆயிரம் ஓட்டுக்கள்
விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக ஒன்று சேர்த்தால் 58,387 வருகிறது.
ஆக 17,233 வாக்கு வித்தியசத்தில் இங்கு பாமக முன்னிலையில் இருக்கிறது என்ற தகவலை கொடுத்த தினமலர், அதற்கே உரிய இடைச்சொருகலை இதிலேயும் நுழைத்து "இரண்டு நாட்கள் இந்த தொகுதியை விஜயகாந்த் சுற்றி வந்தாலே அவர் வெற்றி பெறுவது நிச்சயம் என ரசிகர் மன்றத்தினர் கூறுகின்றனர்" என்று தன்னுடைய ஆசையையும் வெளிப்படுத்தி விடுகிறது :-))).
வன்னியர்கள் ஓட்டு விஜயகாந்த்திற்கு வந்து அவர் வெற்றி பெற வேண்டுமானால் திமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணி தன்னுடைய ஓட்டுகளில் சுமாராக 70%-80% ஓட்டுகளை இழக்க வேண்டும், அவர்களுக்கு -70% Vote swing இருக்க வேண்டும். இது வரை இந்திய தேர்தல் வரலாற்றில் இது போல Vote swing இருந்ததில்லை. சில தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக சில சுயோட்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். விஜயகாந்த்திற்கு எந்த தனிப்பட்ட செல்வாக்கும் இங்கு இல்லை.
விஜய்காந்த் ஓட்டுக்களை பிரிக்க கூடும்.
பாமக நூலிழையில் வெற்றி பெறலாம் என்றே நான் நினைக்கிறேன்
இல்லையெனில் அதிமுக வெற்றி பெறலாம். விஜய்காந்த்திற்கு எந்த வாய்ப்பும் இங்கு இல்லை
தமிழ்சசி,
9:27 PM, March 31, 2006உங்கள் கணிப்பு மிகவும் ஒத்துக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. பாமக வெற்றி பெறக்கூடும் என்றுதான் நான் நினைக்கிறேன். விஜய்காந்த் இத்தொகுதியில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு என்றே தொன்றுகிறது.
///Pl. see my posting in Thiru, Muthu's blog on 'karthik-VK kuutu' also. Thanks.///
SK,
நீங்கள் எங்காவது கொடுத்த பின்னூட்டத்தினைக் குறிப்பிட விரும்பினால் நெரடியாய் அந்த பின்னூட்டத்தின் சுட்டியையே கொடுக்கலாம், உதாரணமாய் நீங்கள் குறிப்பிட்ட எனது வலைப்பதிவிலிட்ட பின்னூட்டம் ( http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_29.html#114384113413540131 )
SK,
9:31 PM, March 31, 2006//
"பாலம்" புகழ் டாக்டர். கோவிந்தசாமியை
//
அது என்ன "பாலம் புகழ்" ?
கொஞ்சம் விளக்குங்கள். எனக்கு தெரியவில்லை
தி,மு.க ஓட்டு பா.ம.க ஓட்டு இரண்டையும் கூட்டி அதிமுக ஓட்டை கழித்தால் விஜயகாந்திற்கு ஏதுவுமே மிஞ்சாது போல் தெரிகிறது.....
11:01 PM, March 31, 2006டெபாஸிட் கிடைத்தால் ஆச்சரியம் தான்.பார்ப்போம்..
தமிழ் சசி,
12:26 AM, April 01, 2006ரஜினி பா.மா.காவை தோற்கடிப்பேன் என சவால் விட்டு களத்தில் இறங்கவில்லை. பா.ம்.காவை தோற்கடிப்பேன் என சூளுரைக்கவுமில்லை. பா.ம்.காவிற்கு எதிராக ரசிகர்களை வேலை செய்யச் சொன்னார். மற்றபடி கூட்டணி பலத்தை எதிர்த்து வெல்ல முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இது அவரது உளறிக் கொட்டிய ராகவேந்திரா மண்டப பேட்டியை பார்த்தேலே தெரியும்.
ரஜினி கள்த்தில் இறங்கி வேலை செய்யும் அரசியலில் ஈடுபட தயங்கினார். அதுவே அவரது பின்னடைவுக்கு காரணம். மற்றபடி ரஜினி தோற்றார் என குறிப்பிடுவது நியாயமில்லை. வெற்றி என்ற குறிக்கோளை எதிர்பார்த்திருந்தால்தானே தோல்வியடைந்ததாக குறிப்பிட முடியும்?
ராஜ்குமார்,
12:37 AM, April 01, 2006ரஜினி தோற்றார் என்பதை கொஞ்சம் Polished ஆக நீங்கள் கூறியது போல சொல்லலாம்.
மற்றபடி ரஜினி பாமகவிடம் தோற்றார் என்பதை நாம் மறுக்க முடியாது.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. உங்களது மாற்றுக் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் என்னால் ஓப்புக்கொள்ள முடியவில்லை
சசி, விருதாசலத்த விட்டு வந்து ரொம்ப நாள ஆகுது, இருந்தாலும் விஜயகாந்து factor கண்டிப்பா இருக்கும்ன்னுதான் நினைக்குறேன். கோவிந்தசாமி க்கு இருக்குற கட்சிகளை மிறின நல்லப் பெயர் தான் அந்த வாக்குகளின் எண்ணிக்கை, ஆனா நிங்க சொல்றத பார்த்தா இப்போ அது இல்லன்னு தெரியுது.
12:52 AM, April 01, 2006rdr க்கு அவ்வளவு நல்லப் பெயர் இருத்தது இல்ல காசிநாதனும் அந்த குருப்த்தான் நினைக்குறேன் அப்படிப்பாத்தா அதிமுகாவுக்கு வாய்ப்பு குறைவுதான்.
முடிவுகள் அச்சரியத்தை தரலாம்.
தமிழ் சசி:
12:58 AM, April 01, 2006இதிலே ரஜினியை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டு அரசியலுக்கு, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு களத்தில் குதிக்க வேண்டும். பல்வேறு விஷயங்கள் பற்றிய பொதுவான பார்வை, கொஞ்சம் தகவல்கள் போன்றவை, இந்தத் தகுதிகள் அவரிடம் கிடையாது. இரண்டு தேர்தல்களில் ஒரு கட்சி/கூட்டணீ சார்பாக, ஆதரவுக் குரல்/எதிர்ப்புக் குரல் கொடுத்ததைத் தவிர, அவர் 'அரசியல்' செய்ததில்லை என்று நினைக்கிறேன். மேலும், பாமாகவுக்கு எதிராக ரசிகர்கள் வேலை செய்வார்கள் என்று சொன்னது கூட, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எடுக்கப் பட்ட முடிவே தவிர, கொள்கை அளவிலான முடிவு இல்லை. தன் நிலை உணர்ந்து, மீண்டும் கலையுலகம் பக்கம் திரும்பி, கூடவே, இந்தத் தேர்தலில் தன் ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம் என்று அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கியவரை, அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசுவது, ரஜினியின் தாக்கம் இந்தத் தேர்தலிலும் இருக்கிறது என்ற பிரமையை உண்டு பண்ணும். இந்த அரிசி உப்புமா ஜர்னலிசத்தை, ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர் செய்யட்டும். நீங்கள் வேண்டாம்.
மற்றபடிக்கு விஜயகாந்தின் வெற்றிவாய்ப்புகள் குறித்த அலசல் உள்ளிட்ட, உங்கள் தேர்தல் பதிவுகள் அனைத்தும்
குழப்பாமல் தெளிவாக, நம்பும்படியாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.
பிரகாஷ்,
1:26 AM, April 01, 2006ஆர்க்யூமெண்ட் என்று நினைக்கவேண்டாம்..
1.சசி ரஜினியை இழுக்கவில்லை என்று நினைக்கிறேன்.
2.ரஜினி ஆதரவு நிலை உணர்வு பூர்வமாக கொடுத்ததோடு மட்டும் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள்.
3.தன் படம் ஓடவேண்டும் என்பதற்காக ரசிகர்களுக்கு சொறிந்து கொடுத்ததுதான் பிரச்சினை.
பிரகாஷ்,
2:36 AM, April 01, 2006உங்கள் கருத்துக்கு நன்றி
தமிழக அரசியலில் ரஜினி ஒரு சக்தியாக இருப்பதாக தொடர்ந்து ஊடகங்கள் எழுதி வந்துள்ளன. இங்கு நான் குறிப்பிடும் ஊடகங்கள் தினமலர், குமுதம், விகடன் போன்றவை தான். இன்றும் கூட 1996ல் திமுக வெற்றி பெற்றதற்கு ரஜினி ஒரு முக்கிய காரணம் என்று வாதிடுபவர்களை பார்க்க முடிகிறது. அவ்வாறான ஒரு பிம்பம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது ஊடகங்களின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்,
நான் இங்கு ரஜினியை தனிப்பட்ட வகையில் இழுக்க விரும்பவில்லை என்றாலும் அந்த வாதங்களை குறித்து எதிர் வாதம் செய்யாமல் இருக்க முடியாது. அதுவும் ரஜினியை முன்னிலை படுத்திய அதே ஊடகங்கள் இன்று விஜயகாந்த்தை முன்னிலைப் படுத்துகின்றன. சினிமாத் துறையைச் சார்ந்து இந்த வாதங்கள் இருக்கின்றன.
விஜயகாந்த் வெற்றி பெற்று விடுவார் என்று எந்த அடிப்படையும் இல்லாமல் வாதிட்டு கொண்டிருக்கின்றன. அதே ஊடகங்கள் முன்பு ரஜினிக்கு வாதிட்டு கொண்டிருந்தன. விஜயகாந்த்திற்கோ, ரஜினிக்கோ எங்கிருந்து இந்த ஆதரவு வந்து சேரும் என்று இவர்கள் விளக்கினார்களா ?
ரஜினி வேட்டியை மடித்து கொண்டு வந்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது தான் எனது வாதம். ரஜினி வேட்டியை மடித்து கொண்டு வரவில்லையே தவிர அவரது ரசிகர் மன்ற தலைவர் முதல் விசிலடிச்சான் குஞ்சுகள் முதற்கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்ததையும், ரஜினி நல்லவர், வல்லவர் என்று சில ஊடகங்கள் துதி பாடியதையும் நானறிவேன். அதே ஊடகங்கள் இன்று விஜயகாந்த்திற்கு துதி பாடிக் கொண்டிருக்கின்றன.
ரஜினி உணர்ச்சி வசப்பட்டு சொன்னாலும் சரி, இல்லை ஆழ்நிலை தியானத்தில் இருந்து கூறியிருந்தாலும் சரி, மிகத் தெளிவாக பாமக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றே கூறினார். அதனால் பாமக-திமுக கூட்டணி கலக்கம் அடைந்து இருக்கின்றன என்றும் ஊடகங்கள் எழுதின. அந்த வாதங்களை முறியடித்து பாமக வெற்றி பெற்றது என்றே நான் இங்கு கூறுகிறேன்.
ரஜினியுடைய தாக்கம் இங்கு எங்குமே இல்லை. ஆனால் அவ்வாறு பரப்பபட்ட ஊடகங்களின் வாதத்தை விட விஜயகாந்த்தின் தாக்கம் சிறிதளவேனும் இந்தப் பகுதியில் உண்டு என்பது தான் எனது வாதம்.
ஆனால் அது வெற்றியை பெற வைக்காது என்றே நான் நினைக்கிறேன்.
இன்று பா.ம.க் வேட்பாளரை மாற்றிவிட்டதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விஜயகாந்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக நான் இதைக் கருதுகிறேன்.
2:52 AM, April 01, 2006தலித்களின் ஆதரவு இல்லாத நிலையில் பா.ம.க.விற்கு விழுவது வன்னியர்களின் ஓட்டுத்தான் என்று வைத்துக் கொண்டால், பாமக, அதிமுக இரண்டிலும் வன்னியர்கள் நிற்கும் போது வன்னியர்களது வாக்குகள் பிரியும். அந்த நம்பிக்கையில் விஜயகாந்த் நிற்கிறாரோ என்னவோ?
5:45 AM, April 01, 2006All these days, media predicted that he will contest in Aruppukottai (thats where I come from). Even there, a victory is not sure for him. But I am sure he will get at least 2nd place there. He has the name and fame.
6:11 AM, April 01, 2006I dont have any idea about Vridhachalam and PMK vote bank. But his decision to contest in Vridhacalam means, there is an agenda of more than winning. I think to prove a point for PMK.
ராஜ்குமார்,
9:32 AM, April 01, 2006பாமக தன்னுடைய வேட்பாளரை மாற்றியது உண்மையெனில் அது பாமகவை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் முடிவாகத் தான் நான் பார்க்கிறேன்.
இது விஜயகாந்த் ஓட்டுக்களை நிச்சயம் குறைக்கும்.
அதுவும் கட்டுவெட்டி குரு போன்ற அதிரடி அரசியல் செய்பவர்களை நுழைப்பது, பாமகவின் ஓட்டு வங்கியை காப்பாற்ற உதவும்.
இன்னும் சொல்லப்போனால் காடுவெட்டி குருவுக்கு விருத்தாசலம் புதிய தொகுதியும் அல்ல. பாமக தனித்து போட்டியிட்ட பொழுது டாக்டர் கோவிந்தசாமியை வெற்றி பெற வைக்க காடுவெட்டி குரு இங்கு தேர்தல் பணியாற்றியதை குறிப்பிட வேண்டும்.
//2.ரஜினி ஆதரவு நிலை உணர்வு பூர்வமாக கொடுத்ததோடு மட்டும் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்க மாட்டார்கள்.
1:04 AM, April 17, 20063.தன் படம் ஓடவேண்டும் என்பதற்காக ரசிகர்களுக்கு சொறிந்து கொடுத்ததுதான் பிரச்சினை.
- முத்து ( தமிழினி
ரஜினி வேட்டியை மடித்து கொண்டு வரவில்லையே தவிர அவரது ரசிகர் மன்ற தலைவர் முதல் விசிலடிச்சான் குஞ்சுகள் முதற்கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்ததையும், ரஜினி நல்லவர், வல்லவர் என்று சில ஊடகங்கள் துதி பாடியதையும் நானறிவேன்.
- தமிழ் சசி//
இதையெல்லாம் நிரூபித்தால் இணையத்து வாழ்க்கைக்கு முற்றும் போட நான் ரெடி. ஒரு நல்ல காரியம் நடத்த நீங்க ரெடியா? :-)
Post a Comment