அடுத்த முதல்வர் ஸ்டாலினாக இருக்க கூடும் என்று சிலர் யூகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். கலைஞர் முதல்வராக பதவியேற்று விட்டு பிறகு ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைப்பார் என்றும், ஸ்டாலின் துணை முதல்வராக ஆகக் கூடும் என்றும் சில யூகங்கள் உலாவிக் கொண்டிருக்கிறன. ஆனால் தனக்கும் இந்த யூகங்களுக்கும் எந்த ஒரு பொருத்தமும் இல்லாதது போல ஸ்டாலின் வழக்கம் போல கலைஞர் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுகவின் அடுத்த தலைவரிடம் இருக்க வேண்டிய குணநலன்களோ, ஆளுமைத் தன்மையோ, போர்க்குணமோ, சாணக்கியத்தன்மையோ ஸ்டாலினிடம் இருக்கிறதா ?
கலைஞரின் "அன்பு" மகன் என்பதால் தான் ஸ்டாலினுக்கு மரியாதையும் தலைவர் இமேஜும் ஏற்பட்டதே தவிர ஸ்டாலின் இயல்பாக தலைவராக இருக்கக் கூடிய தகுதி வாய்ந்தவரா என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. Stalin is not a leader on his own right என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. எத்தனை தருணங்களில் ஸ்டாலின் தன்னை ஒரு தலைவராக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை யோசிக்கும் பொழுது என்னால் ஒரு உதாரணத்தையும் வெளிப்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கிறேன்.
தமிழகத்தின் தலைவர்களாக இருப்பவர்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கவேச் செய்திருக்கிறது. இதனை Charismatic என்று சொல்லலாம். மக்களை இழுக்கக் கூடிய தன்மை. பெரியார், காமராஜர் தொடங்கி இன்றைக்கு தலைவர்களாக இருக்க கூடிய திருமாவளவன் வரை அவர்களிடம் இயல்பாக தெரியக்கூடிய ஆளுமைத் தன்மை, போராட்டக்குணம், மக்களை கவரும் தன்மை போன்றவை ஸ்டாலினிடம் காணப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
தமிழகத்தின் தலைவர்களாக இருக்கக் கூடியவர்களிடம் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும் என்பதான ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் பேச்சாற்றல் மட்டுமே தலைவர்களை உருவாக்கி விடுவதில்லை. அதைக் கொண்டு மட்டுமே தமிழக மக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுத்து விடுவதில்லை.
தமிழகத்தின் தற்போதைய பல தலைவர்களின் மேடை பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். வைகோ, திருமாவளவன் போன்றவர்களின் பேச்சு அளவுக்கு ஸ்டாலினின் பேச்சு இருக்காது என்றாலும் அவர் மோசமான பேச்சாளர் அல்ல. ஸ்டாலின் மிகச் சிறப்பாக பேசக்கூடியவர் தான். சென்னை நகரின் மேயர் பதவி பறிபோன நிலையில் அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பேச்சை கேட்டிருக்கிறேன். நன்றாக பேசக்கூடியவர் தான். ஆனாலும் திருமா, வைகோ போன்றவர்கள் இத்தகைய தருணத்தில் எப்படி பேசி இருப்பார்கள் என்பதைக் கவனிக்கும் பொழுது ஸ்டாலினின் பலவீனம் நமக்கு தெரியவரும். வைகோ, திருமா போன்றவர்கள் இத்தகைய தருணத்தில் பேசும் பேச்சு சிலரையாவது சலனப்படுத்தி இருக்கும். ஆனால் ஸ்டாலின் யாரையும் சலனப்படுத்தவில்லை.
இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் மோசமான பேச்சாளர் என்றால் அது டாக்டர் ராமதாஸ் தான். இவரது பேச்சை நான் ஒரு திருமண விழாவில் கேட்டிருக்கிறேன். இவர் பேச்சை அவரது கட்சியின் தீவிர தொண்டர்கள் கூட கவனித்ததாக தெரியவில்லை. ஒரு சில வார்த்தைகளை கோர்த்து மேடைப் பேச்சு தமிழில் பேசக் கூட இவருக்குத் தெரியவில்லை. சாதாரண பேச்சுத் தமிழில் தான் பேசினார். ஒரு சாதாரண அரசு மருத்துவராக இருந்து, அரசியல் பிண்ணணி இல்லாமல் ஒரு தலைவராக உருவாக இவரது பேச்சாற்றல் இரு காரணமாக இருந்திருக்கலாம் என்றே நான் அது வரை நினைத்திருந்தேன். ராமதாசின் வளர்ச்சிக்கு சாதி ஒரு காரணம் என்று வாதிட்டாலும், அந்தச் சாதியில் பல தலைவர்கள் இருந்தாலும் ராமதாசை மட்டுமே அந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அது போல தலித் சமுதாயத்தில் பல தலைவர்கள் இருந்தாலும் திருமாவளவன் தான் தலைவராக உருவாக முடிந்தது.
இங்கு ஒன்றை கவனிக்கலாம். பேச்சாற்றல், எதுகை மோனையுடன் கவிதையான பேச்சு, குட்டிக் கதைகள் இவற்றை மட்டுமே கொண்டு தங்கள் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து விடுவதில்லை. நல்ல பேச்சாற்றல் உள்ளவர் தான் தலைவராக உருவாக முடியும் என்றால் வைகோ பெரிய தலைவராகி இருக்க வேண்டும். ராமதாஸ் தலைவராகவே ஆகியிருக்க முடியாது. ஆனால் மக்கள் வேறு ஏதோ ஒரு குணத்தைக் கொண்டே தங்கள் தலைவர்களை தேர்தெடுக்கிறார்கள். இந்தத் தலைவர்களிடம் இருக்க கூடிய சில குணநலன்கள் மக்களை கவர்ந்திருக்க வேண்டும்.
அப்படி பார்த்தால் எனக்கு தெரிவது தலைவர்களின் செயல்பாடுகள், அவர்கள் மேற்கொள்ளும் "அதிரடி" நடவடிக்கைகள், பிரச்சனைகளை அணுகும் முறை, போராட்டக் குணம் போன்றவையே மக்களை கவருகிறது. தொண்டர்களிடம் தலைவர்கள் நெருக்கமாக பழகுவதே தொண்டர்களை கவருகிறது. இது இந்தியா என்று இல்லை, பல நாடுகளிலும் இவ்வாறு தான் இருந்து வருகிறது. தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத தலைவர்கள் பிரகாசிக்க முடிவதில்லை.
திமுகவில் வைகோவின் எழுச்சி தொண்டர்களிடம் அவர் கொண்ட நெருக்கத்தாலேயே நிகழ்ந்தது. வைகோவின் பேச்சாற்றல், அவரது கம்பீரம் நிறைந்த கவர்ச்சி, தொண்டர்களை அரவணைக்கும் முறை போன்றவற்றாலேயே வைகோ திமுகவில் ஒரு முக்கிய தலைவராக வளர்ந்தார். ஆனால் வைகோவை கலைஞருக்கு மாற்றாக திமுக தொண்டர்கள் நினைக்கவில்லை. கலைஞரின் போர்வாள், கலைஞருக்கு அடுத்த திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதாகவே வைகோவை கருதினர். எனவே தான் வைகோ கலைஞருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதை நிறைய திமுக தொண்டர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வைகோ திமுகவை பிளப்பார் என்று கருதப்பட்ட நிலையில் ஒரு சிறு பிரிவையே தன்னுடைன் வெளியே கொண்டுச் செல்ல முடிந்தது.
ஆனால் கலைஞருக்கு பின் ?
திமுக தொண்டர்கள் போர்க்குணம் நிறைந்த, பேச்சாற்றல் மிக்க வைகோவை ஏற்பார்களா, ஸ்டாலினை ஏற்பார்களா ?
இது தான் இன்றைய தமிழக அரசியலில் சுவாரசியமான கேள்வி
சாதாரண திமுக தொண்டன் இன்றும் வைகோவை விரும்புகிறான். கலைஞருடன் வைகோ இருந்தால் வைகோ மீது அவனுக்கு தனிப்பாசம் ஏற்படவே செய்கிறது. ஸ்டாலினுடன் ஒப்பிடும் பொழுது வைகோவிற்கு கவர்ச்சியும் அதிகம். ஆனால் வைகோ ஜெயலலிதாவுடன் செல்லும் பொழுது திமுக தொண்டனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவனால் எந்தக் காலத்திலும் ஜெயலலிதாவுடன் உறவாடுவதை ஏற்க முடியாது. வைகோவை ஜெயலலிதா பக்கம் கொண்டு செல்வதே திமுக தொண்டனை தக்க வைத்துக் கொள்ளும் சரியான முயற்சி. அதைத் தான் ஸ்டாலின் இந்த முறைச் செய்தார்.
அடுத்து ஆட்சியை பிடிப்பதை விட வைகோ மீதான அச்சமே கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் இருந்தது. அதனாலேயே வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலையை உருவாக்கினார்கள்.
வைகோ மீது ஸ்டாலினுக்கு ஏன் இத்தகைய அச்சம் ? திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் வைகோவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் வைகோ ஏன் ஸ்டாலினை அச்சப்படுத்த வேண்டும் ?
ஏனெனில் திமுகவில் ஸ்டாலின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக எந்த ஒரு வளர்ச்சியையும் பெறவில்லை. அவருடைய வளர்ச்சி கலைஞர் என்ற
பிம்பத்தால் நிகழ்ந்தது. ஸ்டாலினின் தனிப்பட்ட எந்த குணநலனும் திமுக தொண்டனை கவர்ந்ததில்லை.
ஆனால் வைகோவின் வளர்ச்சி அவ்வாறு இல்லை. வைகோவின் வளர்ச்சி ஒரு இயல்பான வளர்ச்சி. எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் அடிமட்ட
தொண்டனாக தொடங்கிய வைகோ தன்னுடைய தனிப்பட்ட பண்புகளாலேயே வளர்ச்சி அடைந்தார். வைகோ வளர்ச்சி அடையும் ஒவ்வொரு சூழலிலும் அதனை தடுக்க கலைஞர் தன்னுடைய சாணக்கியத்தனத்தை நுழைத்துள்ளார். வைகோ தன்னை கொல்ல முனைந்ததாக கதை கட்டி திமுக தொண்டனை வைகோவிற்கு எதிராக மாற்ற முனைந்தார். இதில் அவருக்கு வெற்றி தான்.
அடுத்து ஜெயலலிதா வைகோவை கைது செய்த பொழுது, வைகோ சிறையில் இருந்த நிலையில் வைகோவிற்கு இயல்பாக எழுந்த அனுதாபத்தை
முறியடிக்க அந்த அனுதாபத்தில் தன்னையும் கலைஞர் இணைத்துக் கொண்டார். இன்று மறுபடியும் வைகோவை ஜெயலலிதாவிடமே வைகோவை கொண்டுச் சேர்த்து திமுக தொண்டர்களை வைகோவிற்கு எதிராக மாற்றி விட்டார். கலைஞரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர் வெற்றியே பெற்றார். வைகோ பலிகடாவாகவே மாறினார்.
இந் நிலையில் தேர்தல் முடிவு தான் பல நிலைகளை தெளிவாக்க முடியும்.
ஆனாலும், வைகோவால் திமுக தொண்டர்களை கவர முடியுமா ? ஸ்டாலினால் திமுகவை தன்னிடத்தே தக்க வைத்துக் கொள்ள முடியாதா ? என்ற கேள்விகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இது ஒரு சுவாரசியமான எதிர்காலத்தை குறித்த அலசலாக இருப்பதால் இது குறித்த யூகங்களும் ஆர்வங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில் தான் இந்த பதிவை எழுத முனைந்துள்ளேன்
ஸ்டாலின் vs வைகோ, யார் வெற்றி பெற போகிறார்கள், உண்மையிலேயே இது ஒரு போட்டி தானா இல்லை ஊடகங்கள் உருவாக்கிய மற்றொரு தேவையில்லாத சர்ச்சையா ?
அடுத்தப் பதிவில்
Sunday, March 26, 2006
ஸ்டாலின் vs வைகோ - 1
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 3/26/2006 09:12:00 AM
குறிச்சொற்கள் தமிழக அரசியல், தேர்தல் 2006
Subscribe to:
Post Comments (Atom)
9 மறுமொழிகள்:
சசி,
10:09 AM, March 26, 2006வைகோ திமுக கூட்டணியில் தொடர்ந்திருந்தாலும் அவரை தலைவனாக ஏற்றுக்கொள்வார்களா என்பதே சந்தேகம் தான். அப்படி ஏற்றுக்கொள்வார்கள் என நம்பித்தான மதிமுகவும் இவ்வளவு நாள் காத்திருந்தது. கலைஞரின் வயதை கருதி காத்திருந்திருக்கலாம். ஆனால் அடுத்த தேர்தல் வந்துவிட்டது.
இன்றைக்கு திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. அதனால் தங்கள் மீது கடந்த முறை போல பழி வராத வண்ணம் காய் நகர்த்தி வைகோவை வெளியில் தள்ளி விட்டார்கள்.
த.மா.க, காங்கிரஸ் கட்சியை பார்த்தால் ஏன் திமுக தொண்டர்கள் ஸ்டாலினை ஏற்றுக்கொள்வார்கள் என புரியும்.
முப்பனாருக்கு பிறகு வாசன் எப்படி தலைவரானார்? யாருக்கு தெரியும் அவரை? பல கோஷ்டிகள் இருந்த காரணத்தினாலேயே அவர் தலைவரானார்.
திமுகவிலும் அதே நிலை தான். எத்தனை இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவனாக ஏற்பார்கள். அவர்களால் ஸ்டாலினை மட்டும் தான் தலைவரின் மகன் என்ற முறையில் ஏற்க முடியும். அதில் அவர்களுக்கு சிரமும் இருக்காது. வாசனை ஒப்பிடும் போது ஸ்டாலின் நீண்ட அனுபவம் உள்ளவர். மக்களிடையே அறிமுகம் உள்ளவர். அதனால் திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலினாக இருப்பதை தடுக்க முடியாது.
ஆனால் தமிழக மக்கள் அவரை ஏற்பார்களா என்பது தான் விடை தெரியாத கேள்வி. அப்படி ஏற்பட்டாலும் இதில் வைகோ தான் முந்துவார். (ஈழ பிரச்சினையில் வைகோவின் கருத்து மாறாதவரை தமிழக சட்டமன்ற தலைவர் வாய்ப்பு வைகோவிற்கு குறைவே.)
ஏற்கனவே என்னுடைய இந்த பதிவில் ஸ்டாலின் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.
http://deedaya.blogspot.com/2006/03/blog-post.html
//ராமதாசை மட்டுமே அந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அது போல தலித் சமுதாயத்தில் பல தலைவர்கள் இருந்தாலும் திருமாவளவன் தான் தலைவராக உருவாக முடிந்தது.
10:54 AM, March 26, 2006//அது சரி. ஆரம்பத்தில் கட்சி ஆரம்பித்தபோது இருந்தவர்களை ராமதாஸ் பிற்காலத்தில் ஏற்க மறுத்ததும் உள்ளது என்று ஒரு கருத்து கேள்விப்பட்டேன். :-)
தயா,
3:06 PM, March 26, 2006மூப்பனாரையும், வாசனையும் ஸ்டாலின் மற்றும் திமுகவுடன் ஒப்பிடுவது சரியான ஒப்பீடு அல்ல. மூப்பனார், வாசன் போன்றவர்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் அல்ல. காமராஜருக்கு பிறகு தமிழக தலைவர்களைச் சார்ந்து காங்கிரஸ் இயங்கியதில்லை. காங்கிரஸ் அகில இந்திய தலைமையைச் சார்ந்தே இயங்குகிறது.
1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது அதன் வெற்றி எல்லாமே "ஜெ எதிர்ப்பு" என்பதால் தானே தவிர மூப்பனார் மக்கள் மத்தியில் கொண்ட ஆதரவினால் அல்ல. அது போல தமிழக அரசியலில் தனக்கென ஒரு ஓட்டு வங்கியை காங்கிரஸ் பெற்றுள்ளது. அந்த ஓட்டு வங்கி தலைவர்களைச் சார்ந்து இயங்காமல் காங்கிரஸ் என்ற இயக்கத்திற்காகவே இயங்கி வருகிறது என்று நான் நினைக்கிறேன். மூப்பனார் தனித்து போட்டியிட்டு தோல்வி கண்டதையும் இங்கு கவனிக்க வேண்டும்
//
ஈழ பிரச்சினையில் வைகோவின் கருத்து மாறாதவரை தமிழக சட்டமன்ற தலைவர் வாய்ப்பு வைகோவிற்கு குறைவே.
//
ஈழப் பிரச்சனையில் வைகோவின் கருத்து ஏன் மாற வேண்டும் ? அதற்கு எந்த அவசியமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஈழ பிரச்சனை தமிழக அரசியில் எந்த எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தாது. அது போல ஈழப்பிரச்சனையால் வைகோவிற்கு தனி ஆதரவும் வந்து சேர்ந்து விடாது.
இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். இது அரசியலாக்கப் பட வேண்டிய அவசியம் இல்லை.
It's evident that Vaiko is gonna come out of ADMK alliance after this election.what will be the mood of DMK's adimatta thondan then? In Vaiko vs Stalin episode common people will play more role than DMK cadres.
8:23 PM, March 26, 2006If Vaiko changes his stand on Eelam then he can go play volley ball,that's what MDMK cadres would prefer him to do.
சசி,
9:40 AM, March 27, 2006நான் வாசனையும் ஸ்டாலினையும் அவர்கள் அரசியல் அனுபவத்தை கொண்டு ஒப்பிடவில்லை. மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டார்களா என்பதும் முக்கியமல்ல. அந்த கட்சியின் தொண்டர்களின் பார்வையில் வாசனே தா.ம.க பின்னர் காங்கிரஸ் (அத்தனை கோஷ்டிகளுக்கும்) என தலைவராகிவிட்ட பிறகு, அடுத்த தலைமை என ஏற்கனவே ஆண்டாண்டுகளாக அறியப்பட்டிருக்கும் ஸ்டாலினை புறந்தள்ளிவிட்டு வைகோ அவ்வளவு சுலபத்தில் திமுகவை கைப்பற்ற முடியாது என்பதை தான். இந்நிலையில் வைகோவும் மதிமுகவும் அப்படி ஒரு கனவில் அங்கே இருப்பது அவர்கள் தங்களுக்கு தாங்களே மரண ஓலை எழுதுவற்கு சமம்.
அடுத்து வைகோவின் ஈழ நிலைப்பாடு:
நான் அதில் அரசியல் கலக்கவில்லை. அது தேவையில்லாதது. தமிழக மக்களுக்கு இலங்கை பிரச்சிணையில் எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அது தமிழர்கள் அல்லாமல் மலையாளியாகவோ தெலுங்கரகாவோ இருந்தாலும் அவர்கள் பிரச்சனை தீர்ந்து அமைதியாக வாழ விரும்புவோம். அவர்களுக்குகாக போராடுவது விடுதலை புலிகள் (மட்டுமே) என்பதையும் கூட ஏற்றுக்கொள்வோம். இயல்பான உணர்ச்சியது. மாறாக அவர்களை கொண்டாடுவதையோ, தமிழகத்தில் ஒரு போராட்ட களம் அமைத்து கொடுப்பதையோ யாரும் விரும்புவதாக தெரியவில்லை. இதே கருத்தை வைகோவும் ஏற்றுக்கொண்டால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள். அது அல்லாமல் இங்கே கூட்டம் ஆர்பாட்டம் என்றால் ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. அதனாலேயே வைகோவை ஏற்பதில் மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.
கோபாலன்:
9:45 AM, March 27, 2006அவர் அந்த நிலைப்பாட்டை விட்டுவிட்டால் "கொள்கையில் உறுதி"யும் போய்விடும் என்பதால் தான் நானும் அவர் சிறந்த பாராளுமன்றவாதியாக மட்டுமே பார்க்கிறேன்.
எஸ்.எஸ். சந்திரன் போன்றவர்களெல்லாம் அங்கே போய் வேடிக்கை பார்பதற்கு பதில் வைகோ போன்ற வாதத்திறமை உள்ளவர்கள் அங்கே இருந்தால் தமிழகத்திற்கு உதவியாக இருக்கும்.
தயா,
6:42 PM, March 27, 2006ஈழம் குறித்த உங்கள் கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது குறித்து நான் ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன், அப்பொழுது அதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.
இங்கே கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடந்தால் சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். மக்களுக்கு எந்த வித பயமும் இல்லை. ஏனெனில் புலிகளுக்கு எந்த வித போராட்ட களத்தையும் இங்கு யாரும் அமைத்து கொடுத்து விட முடியாது. அது அவசியமில்லாதது.
தார்மீக ஆதரவு, உணர்வுப்பூர்வமான ஆதரவு போன்றவை தான் தமிழகத்தில் இருந்து தேவைப்படுகிறது.
தமிழகத்தை நம்பியோ, இங்கு போராட்ட களத்தை உருவாக்க வேண்டிய அவசியமோ புலிகளுக்கு இல்லை
ஸ்டாலின் மேயராக இருந்த போது, நல்ல பல ஆக்கப்பூர்வமான பணிகளை செய்தார் என்றே நான் நினைக்கிறேன். தி.மு.க. வில் கருணாநிதியின் நிழல் அவரை/அவர் திறமையை "overshadow" என்று தோன்றுகிறது.
7:01 PM, March 27, 2006வைகோ பற்றி பெரிய கருத்து ஒன்றும் இல்லை. மற்ற கட்சிக்கும் அவர் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாக தோன்றவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம், மற்ற எல்லாரும் என்ன நினைக்கிறார்கள் என்று.
பாலம் கட்டியதை சாதனையாக சொல்கிறார்கள். நான் பெங்களுரில் கண்ட பாலத்திற்கும் சென்னையில் கண்ட பாலத்திறகும் தரத்தில் ஏக வித்தியாசம். இத்தனைக்கும் இரண்டையுமே செய்தவர்கள் எல்&டி குழுமத்தினர்.
9:29 AM, March 30, 2006அந்த பாலங்கள் உண்மையிலேயே போக்குவரத்து பிரச்சினைகளை சரிசெய்ததா என சென்னையிலுள்ளவர்கள் தான் சொல்ல வேண்டும். அதை வாக்கு சீட்டில் காட்டுவார்கள்.
Post a Comment