Thursday, April 13, 2006

அத்வானி : ஜின்னா : நேரு

இந்தியாவின் இரண்டாவது "இரும்பு மனிதர்" என்று ஒரு காலத்தில் பாரதீய ஜனதா கட்சியினரால் அழைக்கப்பட்ட அத்வானி இன்று மிகக் "குழப்பமான மனிதர்" ஆகியிருக்கிறார். கட்டுக்கோப்பான கட்சி என்றும், நேர்மையான கட்சி என்றும் என்றும் சோ போன்ற பார்ப்பனீய ”self proclaimed அரசியல் விமர்சகர்களால்” சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி இன்று கோஷ்டி பூசல்கள், லஞ்ச விவகாரங்கள், தலைவர்களின் தலைமை ஆசை என திண்டாடிக் கொண்டிருக்கிறது. கட்சியின் ஒரு தலைவர் மீது மற்றொரு தலைவர் பாலியல் காசெட்டுகளை வெளியிட்டு காலை வாரி விட முயலுவது என "அதி நாகரிகமான" கட்சியாக பாஜகவின் சுயரூபம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

கடந்த காலங்களில் "நாக்பூரில்" இருந்து திரைமறைவில் இயக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி இன்று வெளிப்படையாக நாக்பூரில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராகக் கூடியவர் என்று வருணிக்கப்பட்ட அத்வானி போன்ற "பவர்புல்" தலைவர்களே இன்று நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையால் அரசியலில் இருந்து தூரத்தப்படும் நிலையில் இருக்கிறார்கள்.


கட்சியில் சரிந்து போய் விட்ட தன் செல்வாக்கினை சரி செய்ய அத்வானி மற்றொரு ரதயாத்திரை தொடங்கி விட்டார். அவருடைய முதல் ரதயாத்திரை அனைவராலும் ஆதரிக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சி முதல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங்பரிவார் குழுக்கள் வரை அனைவரும் அத்வானியை தங்கள் கொள்கைகளை காப்பாற்ற வந்த "பிதாமகனாக" நினைத்தனர். அந்த ரதயாத்திரை தான் பாபர் மசூதியையும் இடிக்க வைத்தது. பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாகியது.

ஆனால் இம் முறை அத்வானி மேற்கொள்ளும் ரதயாத்திரைக்கு அவரது சொந்த கட்சியினரிடம் கூட ஆதரவு இல்லை. அவராக வலியச் சென்று ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் ஆதரவு கேட்ட பொழுதும் அவர்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் "சலுகை" கொடுக்கிறது, "அமெரிக்காவிடம் இந்தியா தன்னுடைய பாதுகாப்பை அடகு வைத்து விட்டது" போன்ற உப்புசப்பில்லாத விவகாரங்களை ரதயாத்திரைக்கான காரணங்கள் என அத்வானி கூறிக்கொண்டிருப்பது அவருடைய பரிதாபமான நிலையையே காட்டுகிறது. கிரிக்கெட் ஆட்டக்காரர் இர்பான் பத்தான் முஸ்லிம், ஆனாலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறார் என்று ரதயாத்திரையில் உளறிக்கொண்டிருக்கிறார். இர்பான் பத்தானை ஒரு உதாரணமாக காட்டி பிற முஸ்லிம்கள் அப்படி இல்லை என்று கூறும் முயற்சியாகவே இது தெரிகிறது. ஆனால் அதற்கெல்லாம் இப்பொழுது பலன் இருக்க போவதில்லை.

ஒரு காலத்தில் வாஜ்பாய் வெறும் "மாஸ்க்" தான், ஆட்சியின் ரிமோட் அத்வானி கையில் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்க, அத்வானியே நாக்பூரில் இருந்து ரிமோட் மூலம் இயக்கப்படும் வெறும் மொம்மை தான் என்று அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் தெளிவு படுத்தின. அத்வானி கட்சியின் தலைமையையும், கட்சி மீதான தனது கட்டுப்பாட்டையும் இழந்து விட்டார். அடுத்து பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால் கூட நரேந்திர மோடி பிரதமராகக் கூடிய அளவிற்கு கூட அத்வானிக்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.

அத்வானியின் இந்த நிலைக்கு அவர் ஜின்னாவை குறித்து பாக்கிஸ்தானில் பேசியது தான் காரணம் என்று கூறப்படுகிறது. எந்த அத்வானி தங்களின் "கொள்கையை" கட்டிக் காப்பாற்றுவார் என ஆர்.எஸ்.எஸ் நினைத்ததோ, அதே அத்வானி ஜின்னாவை பாக்கிஸ்தானில் சென்று பாராட்டியது ஆர்.எஸ்.எஸ் க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் "பாக்கிஸ்தான்" என்ற தேசத்தையே ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்ள வில்லை. அவ்வாறு இருக்கும் பொழுது பாக்கிஸ்தான் உருவாக காரணமாக இருந்த ஜின்னாவை தங்களின் "கதாநாயகன் அத்வானி" புகழ்ந்துரைத்ததை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் ? இத்தனைக்கும் வெளிப்படையாக அத்வானி ஜின்னா குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை. ஜின்னாவின் ஒரு உரையை மட்டுமே மேற்கோள் காட்டினார். ஆனால் அதைக் கூட சங்பரிவார் அமைப்புகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அத்வானி முதலில் தான் பெரிதாக வளர்த்த பாரதீய ஜனதா இயக்கம் தன்னை கைவிடாது என்று நினைத்தார். தன்னுடைய ராஜினாமா அறிவிப்பு போன்ற அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனையை சரியாக்கி விடலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து பாரதீய ஜனதா கட்சியை விடுவித்து விடலாம் என்றும் நினைத்தார். ஆனால் பாஜகவில் இருந்த அடுத்தக் கட்ட தலைவர்கள் அத்வானியை அகற்ற இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கட்டிக் காப்பதாக தங்களை முன்நிறுத்திக் கொண்டனர். இதனால் அத்வானி விலகும் சூழலும், அடுத்த தலைவராக ஆர்.எஸ்.எஸ் முடிவெடுப்பவரே தலைமையேற்க முடியும் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது.

நாக்பூர் தலைமையை தங்கள் பக்கம் ஈர்க்க பல தலைவர்கள் முயற்சி எடுக்க, நாக்பூர் தலைமை "குஜராத் தாதா" நரேந்திர மோடியை பாஜக தலைவராக்கி விடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் அதிகம் அறிமுகமில்லாத ராஜ்நாத் சிங்கை பாரதீய ஜனதா கட்சி தலைவராக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ். இது அத்வானியை வீட்டிற்கு அனுப்பும் முதல் கட்ட நடவடிக்கை. இன்று அத்வானி மறுபடியும் ஒரு ரதயாத்திரை தொடங்கி விட்டார். இதன் மூலம் தன்னுடைய செல்வாக்கினை நிலைநிறுத்த முனைகிறார். ராஜ்நாத் சிங்கும் மற்றொரு புறம் இருந்து ரதயாத்திரை தொடங்குகிறார். அத்வானியின் ரதயாத்திரையை வாஜ்பாய் விமர்சித்தார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பாஜகவில் அத்வானியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும்.

ஒரு மத அடிப்படைவாதியாக தன்னை காட்டிக் கொண்ட அத்வானி, ஏன் ஜின்னாவை புகழ்துரைக்கும் தவறைச் செய்தார் ? இந்திய அரசியலில் "Pseduo secularist" என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி அதற்கு காங்கிரசை உதாரணமாக கொடுத்த அத்வானி தன்னுடைய இயக்கத்தின் ஜென்ம விரோதியான ஜின்னாவை எப்படி Secularist என்று வர்ணிக்க துடித்தார் ?

அத்வானி என்ன தான் பாஜகவின் அசைக்க முடியாத தலைவராக இருந்தாலும், ஒரு மத அடிப்படைவாதி, ரதயாத்திரை மூலம் பாபர் மசூதியை இடித்தவர் என்ற வகையில் தான் பிரபலமானார். தன்னுடைய இந்த இமேஜ் கூட்டணி ஆட்சியில் பிரதமராக தனக்குபலவீனத்தை ஏற்படுத்தும் என்று அத்வானி நினைத்தார். அது போல ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து கட்சியை விடுவிப்பதிலும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கடும் மத அடிப்படைவாதத்தில் இருந்து கட்சியை விலக்க வேண்டுமெனவும் நினைத்தே "ஜின்னா Securalist" என்ற அஸ்திரத்தை பிரயோகித்துப் பார்த்தார். இதன் மூலம் வாஜ்பாய் போன்று தானும் ஒரு மிதவாதி என்று காட்டிக் கொள்வதும், தன்னுடைய அடிப்படைவாதி இமேஜை அகற்றிக் கொள்வதும் அவரது நோக்கமாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் கொள்கையில் இருந்து பாஜகவை விலக்கிக் கொள்வதும் அவரது நோக்கமாக இருந்தது.

ஆனால் இதனை பாரதீய ஜனதா கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் தலைமை பதவிக்கு குறிவைத்த நிலையிலும், பாஜக எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் கூறியது தான் அவரது நிலையை மோசமாக்கி விட்டது. அத்வானியின் இந்த நோக்கமும், பாரதீய ஜனதா கட்சியை ஒரு மத அடிப்படைவாத இயக்கத்தின் பிடியில் இருந்து விலக்குவதும் மிகச் சரியான நடவடிக்கையாகவே எனக்கு தெரிகிறது. ஆனால் மதவாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு அதனை அவரால் விலக்க முடியவில்லை. மறுபடியும் சிறுபான்மையினருக்கு எதிரான அஸ்திரத்தை எடுத்து பழைய நிலைக்கு மறுபடியும் நுழைய முனைகிறார்.

ஜின்னா மதரீதியாக இந்தியாவை பிளந்து பாக்கிஸ்தானை உருவாக்கினார். எனவே அவர் மதவாதி என்பது இந்தியாவின் வாதம். சங்பரிவார் என்றில்லாமல், காங்கிரசும் இவ்வாறு தான் ஜின்னாவை அழைத்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஜின்னாவை மதவாதி என்ற முத்திரை குத்தியதே காங்கிரஸ் கட்சி தான். உண்மையில் ஜின்னா காங்கிரஸ் மற்றும் சங்பரிவார் இயக்கங்கள் கூறுவது போல மதவாதி தானா ?

நிச்சயமாக இல்லை என்று சொல்ல முடியும். அதே நேரத்தில் மதத்தை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது.

ஜின்னாவை குறித்த அத்வானியின் கருத்துக்கள் தவறானவை அல்ல. ஜின்னா இன்றைய பாக்கிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் தேவைப்படும் மதச்சார்பின்மை குறித்த பல விஷயங்களை 1947லேயே கூறினார். ஆனால் இரண்டு நாடுகளுமே இன்று மதரீதியாகவே பிளவுபட்டு நிற்கிறது. ஜின்னா பாக்கிஸ்தான் கிடைத்த சில வருடங்களில் இறந்து விட்டார். அவருடன் அவர் பாக்கிஸ்தானை உருவாக்கிய நோக்கங்களும் மறைந்து போய் விட்டன. அதன் பிறகு பாக்கிஸ்தானில் உருவாகிய தலைவர்கள் பாக்கிஸ்தானை படிப்படியாக மதரீதியான தேசமாக மாற்றி விட்டனர்.

ஜின்னா பாக்கிஸ்தான் குறித்து 1947ல் பின் வருமாறு கூறினார். இந்த நோக்கங்கள் இன்றைக்கு பாக்கிஸ்தானுக்கும் சரி, இந்தியாவிற்கும் சரி மிகுந்த தேவைக்குரியதாக இருக்கிறது.

'Now, if we want to make this great State of Pakistan happy and prosperous we should wholly and solely concentrate on the wellbeing of the people, and specially of the masses and the poor. If you will work in cooperation, forgetting the past, burying the hatchet, you are bound to succeed. If you change your past and work in a spirit that every one of you, no matter to what community he belongs, no matter what relations he had with you in the past, no matter what is his colour, caste or creed, is first, second and last a citizen of this state with equal rights, privileges and obligations, there will be no end to the progress you will make.

'I cannot overemphasise it too much. We shall begin to work in that spirit and in course of time all these angularities of the majority and minority communities, the Hindu community and Muslim community,… will vanish. Indeed, if you ask me, this has been the biggest hindrance in the way of India to attain its freedom and independence and but for this we would have been free people long ago.

Therefore, we must learn a lesson from this. You are free, you are free to go to your temples. You are free to go to your mosques or to any other places of worship in this State of Pakistan. You may belong to any religion or caste or creed; that has nothing to do with the business of the State.…You will find that in course of time Hindus will cease to be Hindus and Muslims would cease to be Muslims, not in the religious sense, because that is the personal faith of each individual, but in the political sense as citizens of the State.'

Jinna's Address to the Constituent Assembly of Pakistan, Karachi
August 11, 1947

ஜின்னாவின் இந்த பேச்சினை பிறகு வந்த பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் பல காலக்கட்டங்களில் அவரின் உரையிலிருந்தே நீக்கி விட்டனர். குறிப்பாக ஹியா-உல்-ஹக் என்ற பிரபலமான இராணுவ ஆட்சியாளர், இந்தப் பேச்சினை "ஜின்னாவின் தொகுக்கப்பட்ட உரைகளில்" இருந்து நீக்கினார். ஜின்னாவின் இந்தப் பேச்சு பாக்கிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு தான் என்ற நிலையை மாற்றி விடுவதாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

ஜின்னா தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னை ஒரு முஸ்லிம் என்று என்றைக்கும் முன்னிறுத்த வில்லை. வசதியான குடும்பம், மேற்கத்திய நாகரிகம், மேற்கத்திய வாழ்க்கை முறை போன்றவை மூலம் அவர் ஒரு ஆங்கிலேயர் போலத் தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜின்னா மத நம்பிக்கை கொண்டவரும் அல்ல. உதாரணமாக கூற வேண்டுமானால் பன்றிக் கறி உண்பது போன்ற இஸ்லாமுக்கு உவ்வாத காரியம் என்று கூறப்படுவதை கூட அவர் செய்து வந்திருக்கிறார். இதனை ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தன்னை முஸ்லிம் என்று நிலைநிறுத்த என்றைக்கும் முனைந்ததில்லை.

ஆனால் காங்கிரசில் இருக்கும் தலைவர்களுக்கு எதிரான தன்னுடைய ஈகோவை தீர்த்துக் கொள்ள முஸ்லிம் என்ற அடையாளத்தை எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்படும் வாதங்களில் உண்மை இருக்கவேச் செய்கிறது.

ஜின்னா முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கோரினார். முஸ்லிம்களுக்கு தனி பிரதிநிதித்துவம், முஸ்லீம்களுக்கு ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு அதிகாரம் போன்றவையை அவர் முன்னிறுத்தினார். ஒன்றுபட்ட இந்தியாவுடன், முஸ்லிம்களுக்கு அதிக அதிகாரம் என்பதாகத் தான் அவரது கோரிக்கை ஆரம்பத்தில் இருந்து வந்தது. ஆனால் அதனை நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து பிரிவினரையும் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், முஸ்லீம் லீக்கை காங்கிரசுடன் இணைத்து விட வேண்டும் என்றும் அவர்கள் எண்ணினர். 1937ல் நடந்த தேர்தல் கூட காங்கிரசின் இந்த வாதத்தை வலுப்படுத்தவே செய்தது. முஸ்லீம் லீக் மூஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் அதிக இடங்களை பிடிக்க முடியவில்லை. ஆனாலும் பிற இடங்களில் ஓரளவுக்கு கணிசமான வெற்றியை மூஸ்லீம் லீக் பெற்றது என்று சொல்லலாம்.

சாதி இந்துக்கள் அதிகம் இருக்கும் காங்கிரசில், முஸ்லீம்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று ஜின்னா நினைத்தார். 1940 முதல் "இரு தேசம்" என்ற கொள்கையை ஜின்னா எடுக்கத் தொடங்கினார். பிரிட்டிஷாரும் இதனை ஊக்குவித்தனர். வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஜின்னாவுக்கு இருந்த நெருங்கிய நட்பு அவரது கோரிக்கைக்கு வலுசேர்த்தது.

ஆனால் பாக்கிஸ்தானை ரத்த வெள்ளத்திற்கு இடையே தான் ஜின்னாவால் அமைக்க முடிந்தது. 1946ல் பாக்கிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தி "Direct Action Day" என்று ஜின்னா அறிவித்தது கல்கத்தாவில் பெரும் கலவரமாக உருவெடுத்தது. இந்து முஸ்லீம் கலவரமாக மாறி அந்த நாளில் பல ஆயிரக்கணக்கான இந்துக்களும், முஸ்லீம்களும் பலியானார்கள். 10,000 பேர் பலியாகி இருக்கலாம் என்று அரசின் புள்ளி விபரங்கள் கூறுகிறது. ("ஹே ராம்" திரைப்படத்தில் கூட கமல் இதனை தன்னுடைய கதையில் கொண்டு வந்திருப்பார்) இந்துக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பத்தில் இருந்த ஜின்னா பின் இந்துக்களுடன் ஒரே இந்தியாவில் இருக்க முடியாது என்ற முடிவிற்கு வர காங்கிரஸ் தலைவர்களுடன் மூஸ்லிம்களுக்கு பிரநிதித்துவம் போன்றவற்றில் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான் முக்கிய காரணமாக தெரிகிறது.

அதே சமயத்தில் பாக்கிஸ்தான் என்ற தேசம் 1947ல் உருவாகாமல் இருந்திருந்தால் அதன் பிறகு அப்படி ஒரு தேசம் நிச்சயமாக உருவாகி இருக்காது என்றும் கூறிவிட முடியாது. பாக்கிஸ்தானில் ஜின்னாவிற்கு பின் தோன்றிய முஸ்லீம் வெறியர்களும், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சங்பரிவார் குழுக்களும் நிச்சயம் பல தேசங்களை உருவாக்கியிருக்க கூடும். பாக்கிஸ்தான் பின் இரண்டாக உடைந்து பங்களாதேஷ் உருவாகியதும் கவனிக்கத்தக்கது. 1947ல் ஏற்பட்ட பிரிவினையால் மூன்று தேசங்கள் மட்டுமே உருவாகியது.

இந்தியா இன்னும் "ஒரு" தேசமாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் நேரு தான் என்பது என்னுடைய எண்ணம். சர்தார் வல்லபாய் பட்டேல் ஒரு இந்து மத அடிப்படைவாதி. அவரைப் போன்றவர்கள் இந்தியாவின் பிரதமராகக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தால் இந்தியாவை பாக்கிஸ்தான் போன்ற ஒரு முழுமையான மதம் சார்ந்த நாடாக மாற்றி இருப்பார்கள். அதுவே இந்தியா பல துண்டுகளாக சிதற வழி ஏற்படுத்தியிருக்கும்.

இன்றைக்கு இந்தியா ஒரு முழுமையான இந்து மத அடிப்படைவாத நாடாக மாறாமைக்கு நேருவின் தலைமை ஒரு முக்கிய காரணம் என்பதே என்னுடைய கருத்து.
நேரு இந்தியாவை ஒரு மத அடிப்படைவாத நாடாக மாற்ற விரும்பவில்லை. மேற்கத்திய சூழலில் வளர்ந்த நேரு இந்தியாவை அத்தகைய ஒரு திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதுவே அவரது சோஷசலிச பொருளாதாரக் கொள்கைகளுக்கும், ஐஐடி போன்ற கல்வி நிலையங்களுக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. நேருவின் காஷ்மீர், ஹிந்து மொழி உள்ளிட்ட பில்வேறு கொள்கைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு நேரு அமைத்த அடித்தளம் முக்கியமானது.

0 மறுமொழிகள்: