Monday, May 01, 2006

கம்யுனிச காதல் - 1

இந்தியாவில் கம்யுனிசம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ அல்ல. ஒரு மாநிலத்தின் பெயர் தான் நம் நினைவுக்கு வரும். அந்த மாநிலம் தான் மேற்கு வங்காளம். இங்கு ஆட்சி மாற்றம் நிகழந்தால் அது உலகெங்கிலும் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்படும். ஆனால் ஏனோ அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இம் முறையும் ஆட்சி மாற்றம் நிகழப்போவதில்லை என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. புத்ததேவ் பட்டாச்சாரியாவின் தலைமையில், இழந்திருந்த தன் வாக்கு வங்கியை இடதுசாரிகள் மீண்டும் பலப்படுத்திக் கொண்டுள்ளனர் என CNN-IBN கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 30வருடங்களாக இடதுசாரிகளின் ஆட்சி தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. உலகில் ஜனநாயக முறைப் படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் முறையில் 30 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஒரே கம்யுனிச அரசாங்கம் மேற்கு வங்காளம் தான். இது உலகெங்கிலும் விமர்சனப் பார்வையுடனும், ஆச்சரியத்துடனுமே பார்க்கப்பட்டுள்ளது. எனக்கும் இந்த ஆச்சரியம் உண்டு. கம்யுனிசத்திற்கும் மேற்கு வங்காளத்திற்கும் அப்படி என்ன காதல் ?

இந்தியா பொருளாதார ரீதியில் முன்னேறி வரும் நேரத்தில் இந்த முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களில் முக்கியமானவர்களாக மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் இருந்து பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்படும் கம்யுனிஸ்ட்களை நான் நினைக்கிறேன். அந்த வகையிலும் மேற்கு வங்காளம் ஏன் தொடர்ந்து கம்யுனிச மாநிலமாக இருந்து வருகிறது என்ற எனது ஆர்வத்தின் விளைவும் தான் இந்தப் பதிவு. வங்காளிகள் பொதுவாக இந்தியாவில் படித்தவர்களாகவும், அறிவுஞானம் உள்ளவர்களாகவும், தங்கள் மொழி மீது அதீத பற்று கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டவர்கள். அது உண்மையும் கூட. அப்படிப்பட்ட படித்தவர்கள் இருக்கும் ஒரு மாநிலம் இந்த நவீன பொருளாதார யுகத்திலும் ஏன் கம்யுனிசத்தை பின்பற்ற வேண்டும் ?


கம்யுனிசம் என்பது ஒரு theoretical சித்தாந்தம். இந்த "theoretical" சித்தாந்தம் இது வரையில் எந்த நாட்டிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. லெனினின் ரஷ்ய புரட்சியால் அமைந்த அரசாங்கம் கூட கம்யுனிசத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வில்லை. ஆனாலும் கம்யுனிசம் மீது உலகெங்கும் பல நாடுகள் கொண்ட காதல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த சித்தாந்தம், யதார்த்த வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாத நிலையை என்றைக்கோ எட்டி விட்டது. ரஷ்யாவை லெனின் உருவாக்கிய பொழுது கூட கார்ல் மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளை முழுமையாக லெனினால் கைக்கொள்ள முடியவில்லை. மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளில் இருந்து "நழுவி" அவர் நிலைநிறுத்திய கொள்கைகள் தான் பின் நாளில் "லெனினிசம்" என்று பிரபலமாயிற்று. அது போலவே கம்யுனிசத்தில் பல கூறுகள் பல்வேறு காலகட்டத்தில் உருவாகின. பல புதிய பெயர்களும் அதற்குச் சூட்டப்பட்டன. லியான் ட்ராட்ஸ்கி, மாவோ போன்றவர்களின் சிந்தனைகள் கம்யுனிசத்தின் பல்வேறு வடிவங்களாக தோன்றின. ஆனால் கம்யுனிச சிந்தனையையே மாற்றி எழுதிய ஸ்டாலினின் "ஸ்டாலினிசம்", கம்யுனிசமாக ஒப்புக்கொள்ளப்பட்டதில்லை. (ஸ்டாலினிசம், லெனினிசம் போன்றவையெல்லாம் அவர்கள் எழுதி வைத்த சிந்தனைகள் அல்ல. அவர்கள் செயல்பட்ட விதம் தான் பின்னர் அவ்வாறு அழைக்கப்பட்டது). ஆனால் அந்த "ஸ்டாலினிசம்" தான் உலகெங்கிலும் கம்யுனிசத்திற்கு கவர்ச்சியையும் கொடுத்தது. அந்த கவர்ச்சியால் இந்தியா உட்பட பல காலனியாதிக்க நாடுகள் கம்யுனிசம் தான் நாடு முன்னேற அனைத்து மக்களும் நலம் பெற சிறந்த வழி என முடிவு செய்தன. பல நாடுகள் கம்யுனிசத்தை பின்பற்ற தொடங்கின.

இந்தியா முழுமையான கம்யுனிசத்தை கைக்கொள்ளவில்லை. இதற்கு ஸ்டாலினின் சர்வாதிகாரம் ஒரு முக்கிய காரணம். இந்தியா சோஷலிச முறைப்படி செல்ல வேண்டிய அதே நேரத்தில் முழு கம்யுனிஸ்ட் நாடாகவும் மாறிவிடக் கூடாது என்ற எண்ணம் பலருக்கு இருந்தது. குறிப்பாக நேருவுக்கு இருந்தது. அதன் விளைவு தான் ஒரு கதம்பமான அமைப்பாக, ஆனால் சோஷலிசம் மேல் கொண்ட அதீத காதலுடன் இந்திய பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருந்தது.

கம்யுனிசம் சிதைந்து போனதற்கு கம்யுனிசம் என்ற பெயரில் ஸ்டாலின் எழுப்பியிருந்த பிம்பம் தான் முக்கிய காரணம். ஸ்டாலினின் சர்வாதிகார முறைகளை பல நாடுகளால் பின்பற்ற முடியவில்லை. அதனாலேயே கம்யுனிசம் மீதான கவர்ச்சி படிப்படியாக குறைந்து விட்டது. தனி மனித சுதந்திரம் மேல் அதிக நம்பிக்கை கொண்டிருந்த நேருவால் ஸ்டாலினின் சர்வாதிகார முறையை பின்பற்ற முடியவில்லை. அதனாலேயே ஸ்டாலின் பெற்ற வெற்றியை நேருவால் பெற முடியவில்லை.

மார்க்ஸ், லெனினின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, மாவோ என பல்வேறு பரிமாணங்களில் வர்க்க பேதமில்லா சமுதாயத்தை "உலகெங்கிலும்" அமைக்க உருவாகிய கம்யுனிசம் தான் இன்று குறுகிய பிராந்திய உணர்வுகளுடன் பல நாடுகளில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது. வர்க்க பேதமில்லா சமுதாயம் அமைக்க குரல் கொடுத்த மாவோ தான் திபெத் மீது தாக்குதல் தொடுத்து திபெத்தை சீனாவுடன் இணைத்தார். மனித உரிமை மீறல்களும் அங்கு அரங்கேறின. மக்களின் விடுதலை பற்றி பேசும் சில கம்யுனிச குழுக்கள் தான் திபெத், ஈழம் போன்ற மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கின்றன. இனவெறி பிடித்த சிங்கள ஜேவிபியுடன் கம்யுனிச ரீதியில் உறவாட முடிகிற இந்திய மார்க்ஸ்சிட்ஸ்களால் அதே கம்யுனிசத்தை தங்களுடைய சித்தாந்தமாக கொண்டிருக்கிற புலிகளுடன் உறவாட முடிவதில்லை என்பதும் ஆச்சரியம் தான். கம்யுனிச நாடு என்று கூறிக்கொள்ளும் சீனா தான் இன்று உலகில் முதலாளித்துவ ரீதியிலான பொருளாதார முறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நாடு. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை "தில்லியில்" எதிர்க்கும் மார்க்ஸ்சிஸ்ட்கள் தான் "கல்கத்தாவில்" அந்நிய முதலீட்டை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி பலவிதங்களில் இன்று கம்யுனிசம் சிதைந்து, உருமாறி போய் விட்டது. கம்யுனிசத்தை பின்பற்றக் கூடிய நாடுகள் கூட தனியார் பொருளாதார மயமாக்கம் தொடங்கி முதலாளித்துவ ஆதரவு நிலை வரை தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. அப்படி மாற்றிக் கொண்டதன் காரணமாகவே சரிந்து கொண்டிருந்த கம்யுனிச செல்வாக்கினை மேற்கு வங்காளத்தில் மீண்டும் வலுவாக்க புத்ததேவ் பட்டாச்சாரியாவால் முடிந்திருக்கிறது.

இன்று "மே தினம்" என்பதால் மற்றொரு முறை முதலாளித்துவத்திற்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு கார்ப்ரேட் நிர்வாக முறையில் இயங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இன்னும் "சுரண்டும் முதலாளித்துவம்" என்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா ?

இந்தியா, இலங்கை, நேபாளம் என தொடங்கி பல காலனி ஆதிக்க நாடுகளில் உள்ள பல இயக்கங்கள் கம்யுனிசம் மீது கொண்ட காதல் ஆச்சரியமானது அல்ல. காலனி ஆதிக்கத்தில் நிலவிய வறுமை, ஏற்றத்தாழ்வுகள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்த சாதி ரீதியான அடக்குமுறை இவற்றால் "சமதர்ம" சமுதாயத்தை அமைக்க கம்யுனிசம் ஒரு சரியான வழியாக பலருக்கு தோன்றியது. நில உரிமை இல்லாத பலருக்கு பொதுவுடமை சிறந்த சித்தாந்தமாக தோன்றியது. ஆனால் ரஷ்யாவிலேயே இதனை நிறைவேற்ற முடியவில்லை. ரஷ்ய புரட்சிக்கு பின்பு லெனின் தனது கம்யுனிச சிந்தனைகளில் நிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கம்யுனிசம் ரஷ்யாவின் பல பிரச்சனனகளுக்கு உடனடி தீர்வாக முடியாது என்பதை லெனின் உணர்ந்தார். தனது புதிய பொருளாதார கொள்கை (New Economic Policy) மூலம் லெனின் அந்த சமரசத்தை செய்து கொண்டார். முழுவதும் கம்யுனிசம் என்ற தனது கொள்கை தற்போதைய ரஷ்ய சூழ்நிலையில் எடுபடாது என்பதை உணர்ந்த லெனின் கம்யுனிசத்தை நோக்கி ஒரு அடி வைக்க வேண்டுமானால் இரு அடிகள் பின்நோக்கி சென்று தான் தீர வேண்டும் என்று வாதிட்டார் ( One Step Forward, Two Steps Back). அதன் பிறகு ஸ்டாலின் கொண்டு வந்த முறைகள் வெற்றி பெற்றன என்றாலும், அது கம்யுனிசத்தைச் சார்ந்தது அல்ல என்று தான் லியான் ட்ராட்ஸ்கி மற்றும் ஸ்டாலினுக்கு பிறகு வந்த ரஷ்ய தலைவர்கள் வாதிட்டனர்.

ஸ்டாலினின் வெற்றியை தான் ரஷ்யாவில் கம்யுனிசத்தின் வெற்றியாக கூற முடியும் என்னும் பொழுது, ரஷ்யா எப்படி கம்யுனிச சிந்தனைகளால் முன்னேறியது என்று கூற முடியும் ?

(மேற்கு வங்காளத்தில் ஏன் கம்யுனிஸ்ட்கள் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி கொண்டு இருக்கிறார்கள் என எழுத தொடங்கினேன். நீண்ட நாட்களாக கம்யுனிசம் குறித்த எழுத நினைத்த விடயங்களும் சேர்ந்து கொண்டன. அடுத்தப் பதிவில் அது குறித்து எழுதுகிறேன்)

என்னுடைய "பில்லியன் டாலர் கனவுகள்" பதிவில் லெனின், ஸ்டாலின் குறித்து எழுதிய சில பதிவுகள்

http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=Sasi2&taid=2

http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=Sasi2&taid=3

15 மறுமொழிகள்:

வஜ்ரா said...

சிறந்த பதிவு. நன்றி.

one step forward, two step back ஆ நடக்குது....one step forward, ten step back அதைத்தான், இந்திய கம்மியூனிஸ்டுகள் கடைபிடிக்கும் சித்தாந்தம்.

புத்ததேவ் பட்டாச்சார்யார், அவர்கள், சோவியத்/ரஷ்யாவின் கொர்பச்சேவ் போல், சீக்கிரமே, மே. வ த்தின் 30 ஆண்டுகால "பின்னேற்றத்தை" முடிவுக்குக் கொண்டுவருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஷங்கர்.

2:28 AM, May 01, 2006
Badri Seshadri said...

சசி: சுரண்டும் முதலாளித்துவம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. முதலாளித்துவத்தின் சில பிரச்னைகள் இன்றும் இருப்பதாக நாம் பார்ப்பது:

1. உழைக்கும் தொழிலாளிகளைவிட நிர்வாகத்துக்கும் முதலாளிகளுக்கும் மிக அதிக அளவு லாபம் கிடைக்கிறது. 99% நிறுவனங்களில் stock options என்ற முறையே கிடையாது.

2. பங்குச்சந்தையைக் குழப்பி சொந்த வருமானத்தை அதிகமாக்க கம்பெனி கணக்குகளில் தில்லுமுல்லு செய்வது; அதன்மூலம் தான்மட்டும் சம்பாதித்துவிட்டு திடிரென ஒருநாள் கம்பெனி மூழ்கும்போது அலுவலர்களையும் முதலீட்டாளர்களையெல்லாம் ஏமாற்றுவது. எ.கா: என்ரான், கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் ...

3. பல நாடுகளில் பிரச்னைகளை அதிகமாக்கி அதில் குளிர்காய்ந்து, அந்த நாட்டு மக்கள் எக்கேடுகெட்டுப்போனாலும் பரவாயில்லை, நம் லாபம் அதிகாமானால் போதும் என்ற எண்ணத்துடன் செயல்படுவது - உலகின் பல எண்ணெய் கம்பெனிகள், காங்கோ, சூடான் போன்ற பல ஆப்பிரிக்க நாடுகளில் கனிம வளத்தைச் சுரண்டும் அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகள் ...

4. தொழிலாளர்களுக்கு எந்த வசதிகளும் செய்துகொடுக்காமல் தான் மட்டும் சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பல முதலாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். தொழிலாளிகளை நண்பர்களாகப் பாவிக்காமல் கொத்தடிமைகளாகப் பாவித்து அடிமட்ட சம்பளத்தை மட்டும் கொடுத்துத் தொழில்நடத்தும் பலர் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் இருக்கிறார்கள்.

ஆக தொழிலாளர்களுக்கு என்று genuine grievences உள்ளது. தொழில்சங்கங்கள், சரியான தொழிலாளர் நலச் சட்டங்கள் இல்லாவிட்டால் தவறுசெய்யும் முதலாளிகளைத் திருத்தவே முடியாது. கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு அவசியத் தேவை இன்னமும் இருக்கிறது இந்த உலகத்தில்.

3:22 AM, May 01, 2006
Anonymous said...

கம்யூனிஸ்டுக்களை தேடிக் கருவறுக்கும் புலிகள். இடதுசாரி என்ற சொற்பதத்தையே வெறுக்கும் புலிகள் அவர்களை கொன்றழித்த அழிக்கும் புலிகள். கம்யூனிச சித்தாந்தத்தையே வெறுக்கும் புலிகளின் தலைமை. நிலைமைகள் இவ்வாறிருக்க அவர்களை கம்யூனிஸ்டுக்கள் என்று மதிப்புரை கூறும் திருவாளர் தமிழ் சசி அவர்களே

புலிகளை கம்யூனிஸ்டுக்கள் என்று கூறுவதன் உங்கள் உள்நோக்கம் என்ன ?

அவர்களை கம்யூனிஸ்டுக்கள் என்று அடையாளப்படுத்துவதற்கான ஆதாரங்களுடன் எழுதுங்கள்.


தங்களை கம்யூனிஸ்டுக்கள் என்றழைப்பதை புலிகளே பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

புலிகளின் பாசிசத் தேசியமானது கம்யூனிஸம் என்ற உங்கள் கண்டுபிடிப்பானது அடிப்படையில்லாதது.

புலிகளை கம்யூனிசத்தோடு இணைப்பது புலிகள் மீதுள்ள பற்றினாலா அல்லது கம்யூனிசத்தின் மீதுள்ள வெறுப்பினாலா ?

6:05 AM, May 01, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

புலிகள் என்றில்லாமல் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் தோன்றிய போராளி அமைப்புகள் யாவும் கம்யுனிசத்தை அடிப்படையாக கொண்ட இடதுசாரி போராளி அமைப்புக்கள் தான்.

இலங்கையில் இருந்த பல போராளி அமைப்புகளும் அவ்வாறு தான் இருந்தன. ஆனால் இடதுசாரி போராளி அமைப்பாக வேண்டும் என்பதற்காக புலிகள் அமைப்பு தோன்றவில்லை. தமிழீழம் என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட பொழுது ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்களின் கம்யுனிச சார்புடன் தான் அந்த இயக்கமும் இருந்தது. அந்த வகையில் தான் நான் குறிப்பிட்டேன்.

பிரபாகரன் தன்னை எந்தக் கட்டத்திலும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் சர்ந்தவராக வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அவரது நோக்கம் இந்த சித்தாந்தங்களை கடந்த யதார்த்த "தமிழ் ஈழம்" என்பது தான்

புலிகள் கம்யுனிஸ்ட்களை எப்பொழுது தேடி கருவறுத்தார்கள் என்று சொல்ல முடியுமா ?
அல்லது பிற தமிழ் போராளிகள், சிங்கள இராணுவம் போன்றவற்றை கம்யுனிஸ்ட்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா ?

இது ஒரு அவசரப் பின்னூட்டம், பிறகு விபரமாக வருகிறேன்

6:55 AM, May 01, 2006
வஜ்ரா said...

//
ஆக தொழிலாளர்களுக்கு என்று genuine grievences உள்ளது. தொழில்சங்கங்கள், சரியான தொழிலாளர் நலச் சட்டங்கள் இல்லாவிட்டால் தவறுசெய்யும் முதலாளிகளைத் திருத்தவே முடியாது. கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு அவசியத் தேவை இன்னமும் இருக்கிறது இந்த உலகத்தில்.
//

Genuine grievences க்கு தொழிற் சங்கம் தேவை என்பது மறுக்கவில்லை. ஆனால் அது கம்மியூனிஸக் கொள்கையில் தான் இருக்கவேண்டும், என்பது சரியெனப் படவில்லை. கம்மியூனிஸக் கொள்கை இல்லாத தொழிற் சங்கம் இல்லையா? பாரதிய மஜ்தூர் சங் கம்மியூனிஸ கொள்கையா கடைபிடிக்கிறது?

ஷங்கர்.

10:12 AM, May 01, 2006
Anonymous said...

நல்லது சசி அவர்களே வாங்க

இந்தியாவில் நக்சலைட் அமைப்பைக் கூறுங்கள். நேபாளத்தில் மாவோயிஸ்ட் கெரில்லாக்களைக் கூறுங்கள். இவர்கள் வரித்துக் கொண்ட தத்துவம் கம்யூனிஸம்.

அதற்காக மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் ஆட்சி பிடிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள் போலத்தான் இலங்கையிலும் ஜேவிபி என்பதுவும். சுலோகங்களையும் பதாகைகளையும் வெளிச்சாயமாக்கி உள்ளே இனவாத அடிப்படை கொண்டது தான் ஜேவிபி என்பது அதனது நடைமுறையினூடு கண்டுகொள்ளப்படவேண்டியது.

இதே போலவே உதட்டளவில் சோசலிசம் கம்யூனிசம் பேசிய இலங்கைத் தமிழ் போராளிக்குழுக்கள் தலைமை மட்டத்தில் வலதுசாரிய பாசிச போக்குக்களை கட்டவிழ்த்து விட்டன. பிரச்சார மட்டத்தில் கம்யூனிசம் பேசிய போலிகளே இவர்கள்.

சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்ட போராளிகளை தம்மகத்தே சேர்த்துக் கொள்ள செய்யப்பட்ட சோடினைகளே இவர்களது இடதுசாரி வேடங்கள்.

புலிகள் கம்யூனிஸ்டுக்கள் அல்ல என்று மறுத்ததாலேயே புலிகளுக்கு எதிரான போக்குடையவர்கள் எல்லோருமே சிங்கள இராணுவம் உட்பட கம்யூனிஸ்டுக்கள் என கருத்தாகுமா? பூவா தலையா என்ற மாதிரி வாதிடமுடியாதது.

சித்தாந்தம் கடந்த யதார்த்தம் என்பது என்ன ?

தமிழீழம் என்பது ஒரு தேசிய சித்தாந்தம். இந்தத் சித்தாந்தத்தின்படி அமையவிருக்கும் தமிழீழம் தனது பொருளாதாரத்தைக் கட்டியமைக்கும் போது அது கடைப்பிடிக்கப் போகும் பொருளாதார கொள்கை என்ன வெறும் வெற்று வெளியிலா கட்டமைக்கப்படப்போகின்றது ? தனது பொருளாதாரத்தை தனது வளங்களினூடு கட்டியமைக்கப் போகின்றதா அல்லது உலகமயமாதல் சந்தைப் பொருளாதாரத்தினூடு கட்டியமைக்கப் போகின்றதா?. இந்தக் கேள்விக்கு உலகமயமாதல் சந்தைப் பொருளாதாரமே என புலிகளின் தலைமை பதிலிறுத்திருக்கின்ற போது இது வலதுசாரிய சித்தாந்தத்தை வரித்துக் கொண்டதல்லாமல் எப்படி சித்தாந்தம் கடந்த யதார்த்த தமிழீழம் ஆகும். சித்தாந்தம் கடந்த என்ற ஒன்று எதுவும் இல்லை.


கொலை செய்யப்பட்ட கம்யூனிச போராளிகள் அல்லது அதனை தாபன மயப்படுத்தியவர்கள் படுத்த முனைந்தவர்கள் யாரையுமே புலிகள் அவர்கள் கம்யூனிஸ்டுக்கள் என்பதாலேயே கொன்றோம் என்று கூறியதில்லை. அந்தப் போராளிகளது இருப்பைத் துடைத்தெறிய அவர்கள் நயவஞ்சகமான கொலைகளைச் செய்தார்கள்.

துரோகி, கள்ளன், பெண்பிளைப் பொறுக்கி, உளவாளி என்ற பட்டங்களுடன் மக்கள் கண்களில் மண்ணைத் தூவினார்கள்.

தமிழீழ மக்கள் பாதுகாப்புப் பேரவை, Nடுகுவு போன்ற இயக்கப்(விசுவானந்த தேவர்) போராளிகள் இல்லாதொழிக்கப்பட்டதும் மற்றைய இயக்கங்களிலிருந்து விலகி நின்று சரியான தடம் பதிக்க விழைந்த தீப்பொறி போன்ற இயக்கபோராளிகள் இன்னும் உதிரிகளாய் இருந்தவர்கள் இரையானதும் பேசப்படாத விடயங்கள் அல்ல. அவற்றை அறிய முனையுங்கள்


சிறி

10:31 AM, May 01, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

சிறி,

கம்யுனிசம் குறித்து நான் சொல்ல வந்த கருத்தை தான் நீங்களும் கூறியிருக்கிறீர்கள். இன்றைய யதார்த்தமான வாழ்க்கையில் கம்யுனிசம் போன்ற theoretical சித்தாந்தங்களை யாரும் பின்பற்ற முடியாது. புலிகள், ஜேவிபி, இந்திய மார்க்ஸ்சிஸ்ட்கள் என எல்லோருமே கம்யுனிசஸ்ம் என்ற பெயரில் போலி முகமூடிகளை தான் அணிந்து கொண்டு திரிகிறார்கள். இவர்கள் தான் இப்படி என்றால் கம்யுனிச நாடு என்று தன்னை கூறிக் கொள்ளும் சீனா பின்பற்றும் கம்யுனிசமும் போலி கம்யுனிசம் தான். கம்யுனிசத்தை முழுமையாக அமல்படுத்திய எந்த நாட்டினையும் பார்க்க முடியாது. எந்தக் குழுவையும் அமைப்பையும் பார்க்க முடியாது.

மக்களின் உரிமைகள் என்று கூறி போராடிய நக்சல்பாரி இயக்கங்கள் "ஆதிக்கச் சக்திகள்" என்ற பெயரில் பலரைக் கொல்லவில்லையா ?

கம்யுனிசம் இன்றைய யதார்த்த வாழ்க்கையில் எவ்வாறு தங்களின் தேவைகளுக்கு ஏற்ப திரிக்கப்படுகிறது என்பதற்கு தான் ஜேவிபி, இந்திய மார்க்ஸ்சிட்கள், புலிகள் போன்றோரை உதாரணம் காட்டினேன். கம்யுனிசம் என்று சொல்லிக் கொள்கிற எல்லோருமே போலிகள் தான். நக்சல்பாரி இயக்கங்கள் உட்பட

****

இது இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லை என்றாலும் உங்களின் பின்னூட்டத்தின் பொருட்டு எழுத வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது

"கம்யூனிஸ்டுக்களை தேடிக் கருவறுக்கும் புலிகள்"

இது வரை இதனை நான் கேள்விப்பட்டதேயில்லை. கம்யுனிஸ்ட்களை எப்பொழுது தேடிப்பிடித்து கருவறுத்தார்கள்.

புலிகள் முஸ்லீம்களை தாக்கினார்கள், சக போராளி குழுக்களை தாக்கினார்கள், சிங்கள மக்கள் மற்றும் சிங்கள் இராணுவத்தினரை தாக்கியிருக்கிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர "கம்யுனிஸ்ட்களை" தேடிக் கொன்றார்கள் கம்யுனிசத்தை வெறுக்கிறார்கள் என்றல்லாம் கேள்விப்பட்டதில்லை. அதனால் தான் அவர்கள் தாக்கிய சக போராளி குழுக்கள், சிங்கள இராணுவம் போன்றோரை கம்யுனிஸ்ட்கள் என்று சொல்கிறார்களா என்று கேள்வி எழுப்பினேன்.

பூவா தலையா பார்த்து விவாதம் செய்ய வேண்டாம். சரியான கருத்துக்களுடன் செய்தாலே போதுமானது.

ஒரு காலத்தில் கம்யுனிசம் பேசிய எல்லோருமே, இன்றைக்கு உதட்டளவில் தான் அதனைச் சொல்கிறார்கள். வீர முழுக்கமாக பேசிக் கொண்டிருக்கும் காம்ரேடுகள் முதல் குழப்பமாக சிகப்பு கொடி ஏந்தும் தொண்டர்கள் வரை யாருக்கும் இன்றைய நடைமுறையில் இதனை நிறைவேற்ற முடியும் என்ற எண்ணமில்லை.

******

புலிகளின் தலைவர் சமாதான பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது கூறியதை தான் நீங்கள் இங்கு சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அந்தக் கேள்வியினை கேட்டவர் யார் என்று தெரியுமா ? சென்னையில் இருந்து வெளிவரும் ஒரு பிரபலமான ஆங்கில நாளிதழின் பெண் செய்தியாளர். இன்றைக்கும் அவர் புலிகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். புலிகளை மடக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்வி அது.

அந்தக் கேள்விக்கு அவர்கள் கூறிய பதில் சரியான பதில் தான்

தமிழீழம் முதலாளித்துவ பொருளாதாரத்தை கைக்கொள்வது தான் சிறந்தது என்ற புலிகளின் முடிவை பாரட்டவேண்டும். துருப்பிடித்த கம்யுனிசம் தேவையற்றது

9:19 PM, May 01, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

பத்ரி,

கம்யுனிச சிந்தனைகள் அர்த்தமற்றவை அல்ல.

ஆனால் யதார்த்த வாழ்க்கையில் தனிமனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள், ஆசைகள், தேவைகள் இவற்றுக்கு மத்தியில் கம்யுனிசத்தின் சிந்தனைகள் மட்டும் எப்படி வெற்றி பெற முடியும். ரஷ்யாவில் கம்யுனிசத்தை நிலை நாட்டிய லெனின் இன்னும் மக்கள் கம்யுனிசத்திற்கு பக்குவப்படவில்லை என்று தானே கூறினார். விவாசாயத்தை அரசுடமையாக்க அவரால் முடியவில்லையே ? தங்கள் நிலங்கள் அரசுடமைக்கப்பட்டதால் விவசாயிகள் உற்பத்தியை குறைத்தார்கள். அவர்களிடம் லெனின் விவசாயத்தை திருப்பி ஒப்படைத்த பொழுது அதன் உற்பத்தி உயரவில்லையா ?

லெனின் காலத்து ரஷ்யாவை விடுங்கள். நம்மூர் பொதுத்துறை நிறுவனங்கள் ஏன் முன்னேற வில்லை ? நெய்வேலி போன்ற பொதுத்துறை ஊழியர்களின் மத்தியில் இருந்ததால் இந்த நிறுவனங்களின் மனிதவளம் எந்தளவுக்கு வீணாக்கப்பட்டது என்று எனக்கு தெரியும். ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரிகளால் தான் இத்தகைய நிறுவனங்களில் தொழிலாளிகளை பிழிந்து எடுத்து வேலை வாங்க முடிந்தது. உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது. ஆனால் நம்மூரில் சம்பளம் வந்தால் போதும் என்ற மனநிலையில் தான் பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன.

பொதுத்துறை நிறுவனங்கள் ஸ்டாலின் பாணி கம்யுனிசம் தான். என்றாலும் தொழிலாளிகளே முதலாளிகள் ஆகும் நிலை சோம்பேறிகளை தான் அதிகம் உருவாக்கும். இன்றைய சூழ்நிலையில் இருக்கும் உற்பத்தி, பொருளாதார உயர்வு போன்றவற்றுக்கு இந்த சோம்பல் பாணி சரிவராது

******

நீங்கள் கூறும் முதலாளித்துவ லாப சதவீதம் போன்றவற்றை ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் இன்றைக்கு எல்லாவற்றுக்கும் "சந்தை விலை" என்று வந்து விட்டது. என்னுடைய சந்தை விலை தான் என்னுடைய சம்பளம். இந்த நிலையில் இருந்து நான் முன்னேறினால் என்னுடைய சம்பளம் உயருகிறது. நான் அப்படியே இதே நிலையில் இருந்தால் சம்பளம் அப்படியே இருக்கும். இன்று வேலை வாய்ப்பு பெரும் பொழுது, மென்பொருளாளர்களுக்கு தேவை அதிகரிக்கும் பொழுது சம்பளம் அதிகரிக்கிறது. Market value உயருகிறது.

இரட்டை கோபுரங்கள் தகர்ந்த காலகட்டத்தில் சம்பளத்தை எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ள எல்லோரும் தயாரக இருந்தனர். ஆனாலும் நிறைய வேலை இல்லை. ஆனால் இன்றைக்கு சம்பளம் அதிகரிக்கிறது.

பொருளுக்கு மட்டும் சந்தை விலை இல்லை. நமக்கும் இருக்கிறது :-)

இது தான் எல்லா துறைகளிலும் நடந்து வருகிறது.

இந்திய மென்பொருள் நிறுவனங்கள் ஒரு மணி நேரத்திற்கு "குறைந்தது" 20டாலர் (Offshore வேலைக்கு) பெறுகின்றன. ஆனால் சம்பளமாக கொடுக்கப்படும் தொகையோ மாதம் 30,000-40,000 வரை தான் (அவர்கள் கொடுக்கும் சலுகைகள் உட்பட). ஆனால் இந்த தொகை தான் Market value. சிலருக்கு அதிகமாக இருக்கலாம். சிலருக்கு இதை விட குறைவாக கூட இருக்கலாம். நிறைய நிறுவனங்கள் கல்லூரியில் இருந்து புதியதாக வருபவர்களை பணிக்கு அமர்த்துகின்றன. அவர்களுக்கு நிறைய லாபம். அதே நேரத்தில் எங்களுடைய Market value குறைவதில்லை.

இதனை சுரண்டப்படுவது தெரியாமல் சுரண்டும் நிலை இருப்பதாக கம்யுனிஸ்ட்கள் கூறலாம். ஆனால் இன்றைய உலக நடைமுறையில் இதற்கு பொருள் இருப்பதாக தெரியவில்லை.

சில துறைகளில் வேறு மாதிரி இருக்கலாம். உண்மையிலேயே பல நிறுவனங்களில் சுரண்டல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதற்கு கம்யுனிசம் தீர்வாக முடியாது.

11:17 PM, May 01, 2006
Badri Seshadri said...

சசி:

உங்களது பதிவில் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தீர்கள்:

இன்றைய காலகட்டத்தில் ஒரு கார்ப்ரேட் நிர்வாக முறையில் இயங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இன்னும் "சுரண்டும் முதலாளித்துவம்" என்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா ?

அதற்கு பதிலாகத்தான் நான் சுரண்டும் முதலாளித்துவம் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன; இன்னமும் நடைமுறையில் இருப்பதுதான் அது என்று எழுதியிருந்தேன். இதை நான் ஒரு "முதலாளித்துவ"வாதியாக எழுதுகிறேன். Benevolent capitalism என்பது இன்னமும் முழுமையாக நடைமுறையில் இல்லை. இது என்றாவது நடைமுறைக்கு வருமா என்றும் தெரியவில்லை.

தொடக்ககால கம்யூனிசச் செயல்முறையால்தான் இன்று தொழில்துறையில் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. ஆரம்ப காலத்தில் அறிவுசார் தொழில்கள் அதிகம் இல்லாத நிலையில் உழைப்புக்கான சந்தை என்பது நடைமுறையில் இல்லை. இன்றும்கூட நீங்கள் வேலைசெய்யும் அறிவுசார் துறையில் மட்டும்தான் உழைப்புக்கான சந்தை உள்ளது. இந்த நிறுவனம் இல்லையென்றால் வேறொரு நிறுவனம் என்று உங்களால் போகமுடிகிறது. உங்கள் உழைப்புக்கேற்ற கூலியைக் கேட்டு வாங்க முடிகிறது. இந்த நிலை பல துறைகளிலும் - முக்கியமாக அறிவுத்திறன் குறைந்த துறைகளில் - கிடையாது. அங்கெல்லாம் collective negotiation இல்லாமல் எதுவுமே நடக்காது.

மாதம் 3,000 ரூபாய் வருமானம் பார்க்கும் தொழிலாளியால் எதையுமே தட்டிக்கேட்க முடிவதில்லை. அவன் நடுத்தெருவில் நின்றால், social security இல்லாத நம் நாட்டில் அவன் குடும்பமே நிர்க்கதிதான். இந்நிலையில் தொழில்சங்கரீதியில் போராடுவதைத்தவிர அவனுக்கு வேறு வழி இல்லை. இதுபோன்ற தொழிலாளியின் உழைப்பு மாதாமாதம் சுரண்டப்படுகிறது. அவனுக்குத் தேவையான வசதிகள் சரியாகச் செய்யப்படுவதில்லை. ஏனெனில் பல இடங்களில் labour market விசாலமானதாக உள்ளது. இப்பொழுது உழைக்கும் தொழிலாளியைவிட இன்னமும் அதிகமாக பஞ்சப் பரதேசிகள் அதைவிடக் குறைந்த ஊதியத்தில் உழைக்கத் தயாராக உள்ளார்கள்; எனவே சுரண்டலும் தொடர்கிறது.

தொழிலாளர் நிலையைப் பற்றி மட்டும்தான் நான் பேசினேன். ஏன் ரஷ்யாவில் collectivization எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லை என்ற கேள்வி நியாயமானது. அதே நேரம் சீனாவில் கொண்டுவரப்பட்ட limited collectivization விளைச்சலை அதிகப்படுத்தியது. ரஷ்யாவில் நடந்தது ஒருவகையில் collectivization இல்லை; statization அது.

அரசுடைமையாக்குவது சரியான தீர்ப்பு அல்ல. நான் private property என்பதன்மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவன். கம்யூனிச சித்தாந்தங்கள் எல்லா இடங்களிலும் சரியான்ன தீர்ப்பைக் கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் தொழில்துறையைப் பொருத்தவரையில் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது, நிர்வாகத்துடன் எப்பொழுதும் கலந்துபேசி தங்கள் உரிமைகளுக்காக வாதாடுவது ஆகியவை முக்கியம். அது கம்யூனிசம் என்ற பெயரில் நடக்கவேண்டியதில்லை. எப்படி இருந்தாலும் தொழிலாளர் அமைப்புகள் அவசியம். இல்லாவிட்டால் முதலாளித்துவச் சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கும் என்பதுதான் என் கருத்து.

பொதுத்துறை நிறுவனங்கள் ஏன் சீரழிகின்றன என்பதன்மீது எனக்குப் பல கருத்துகள் உள்ளன. அதுபற்றி வேறொரு நேரத்தில் பேசலாம். ஆனால் முக்கியமாக அது தொழிலாளிகளின் சோம்பலால் மட்டும்தான் என்று சொல்லமுடியாது. அரசுத் தலையீடு; தேவையற்ற மோனோபொலி, அதனால் வரும் மெத்தனம், திறமையான மேலாண்மை நிர்வாகிகளுக்கு பதில் IAS அதிகாரிகள் தலைமையின்கீழ் நிறுவனத்தை நடத்துவது என்று பல காரணங்களைச் சொல்லலாம். அத்துடன் வரைமுறையற்ற ஊழலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

12:36 AM, May 02, 2006
Badri Seshadri said...

ஷங்கர்: கம்யூனிசத்தில் வளர்ச்சியே தொழிலாளர் சங்கங்களிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இன்று வேண்டுமானால் கம்யூனிசக் கலப்பில்லாத தொழிற்சங்கங்கள் இருக்கலாம். என்ன முக்கியம் என்றால் தொழிலாளர் நலனைக் காக்கக்கூடிய, அதற்காகப் போராடக்கூடிய அமைப்புகள் தேவை. அவை எந்தப் பின்னணியில் இருந்து வந்தாலும் சரி.

12:38 AM, May 02, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

பத்ரி,

தொழிலாளர் அமைப்புகள் சுரண்டல் இருக்கும் பல துறைகளுக்கு தேவைப்படுகின்றன என்ற உங்கள் கருத்துக்களை ஒப்புக் கொள்கிறேன்

7:25 AM, May 02, 2006
மு. மயூரன் said...

சசி

தமிழ் மணத்திற்கு வருவது மிகவும் குறைந்துவிட்டதால் உங்கள் பதிவை நீண்ட நாட்களாக தவறவிட்டுவிட்டேன்.


மூலதனவாதத்தை, அல்லது முதலாளியத்தை அடிப்படையாக கொண்ட நிறுவனங்கள், அவற்றை நிர்வகிக்கும் முறை, அதற்கான விஞ்ஞான முறைகள் போன்றவற்றைக்கொண்டு கட்டியெழுப்பப்பட்ட அறிவியல் இருக்கிறது. அதை மாணவர்கள் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள், அதில் பெரும் அறிஞர்களாக வருகிறார்கள்.

மூலதனவாத நிறுவனம் ஒன்றை சிறப்பாக கொண்டு நடத்துவது பற்றியும் , இந்த அடிப்படையில் நாட்டின், உலகின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பற்றியும் இந்த அறிஞர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டவண்ணமிருக்கிறார்கள். இந்த "காப்ரேட்" உலகத்திற்கு வெளியே இன்னொரு உலகம் இருக்கிறது. அது கம்யூனிச உலகமோ அல்லது ஆன்மீக உலகமோ அல்ல. அது உலகில் இருக்கவே செய்கின்ற பெரும்பான்மை மக்களது உலகம்.

நிறுவனங்கள், கம்பனிகள், மூலதனம் பொருளாதாரம் என்ற சித்தாங்களும் ஆர்ப்பாட்டங்களும் மிகச்சிறுபான்மையினரிடையேதான் இருக்கிறது..

இதற்கு வெளியே கோடிக்கணக்கான மகக்ள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் சாப்பாடு இல்லாமலிருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு வாழும் உருமை மறுக்கப்படுகிறது. அவர்கள் தான் சாலைப்பணியாளர்களாய் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்கள் தான் எலிக்கறி சாப்பிடுகிறார்கள். அவர்கள்தான் சம்பந்த சம்பந்தமில்லாமல் ஈராக்கில், சூடானில் பாலஸ்தீனத்தில் அழிகிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்ல கம்பனிகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் நேரமில்லை. அவர்கள் லாபம் பார்ப்பதையே முதன்மைத்தொழிலாகக்கொண்டவர்கள்.

இந்த "வெளியே இருக்கும் " மக்களுக்கு போராடுவதைத்தவிர வேறு வழியில்லை. அவர்கள் உயிர்வாழ்வதற்கான ஒரே வழி போராடுவதுதான். தன்னை சுரண்டும் முதலாளிக்கு எதிராக, தன்மீது போரைத்திணித்த அமெரிக்க எண்ணைக்கம்பனிகளுக்கெதிராக, தன்னை பணி நீக்கம் செய்த அரசாங்கத்திற்கெதிராக அவர்கள் போராடியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் செத்துப்போய்விடுவார்கள்.

போராடுவதற்கு ஆயுதமும் ஆட்களும் மட்டும் இருந்தால் போதாது. ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். யாருக்கெதிரான போராட்டம் என்ற தெளிவு இருக்க வேண்டும். போராட்டத்திற்கெதிராக எழும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான கொள்கைத்தெளுவு இருக்க வேண்டும். ( இதைப்பற்றி போராட்டங்களை பற்றி எழுதும் தமிழ் சசிக்கு விளக்க வேண்டியதில்லை) இவ்வாறான போராட்டங்களுக்கு முதுகெலும்பான சித்தாந்தங்களை, ஆதரவை, ஆன்மீகமோ முதலாளியமோ தருவதில்லை. அவர்கள் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். போர் நடந்தால் அவர்களால் லாபம் பண்ண முடியாது. தாம் லாபம் பண்ணும் இடத்திற்கு வெளியே வேறு வகையான லாபங்களுக்காக அவர்களே போர்களை உருவாக்குகிறார்கள்.

இந்த இடத்தில் தான் தனது உரிமைகளுக்காக போராடுவோருக்கு கம்யூனிசம் ஆதரவை தருகிறது. அவர்கள் கையிலெடுக்கக்கூடிய பலமான சித்தாந்தாஅயுதமாக கம்யூனிசம் இருக்கிறது.

தலித்துகளின் விடுதலைக்கான போராட்டத்தை முதலாளியம் ஆதரிக்காது. அங்கே அவர்களுக்கு லாபம் இல்லை. கம்யூனிச்டுக்களே அங்கே தோழமை கொள்கிறார்கள். சாலைப்பணியாளர் வாழ வழியில்லாத தற்கொலை செய்யும்போது கொகா கோலா கம்பனியோ, டாட்டாவோ, மைக்ரோசொஃப்டோ அவர்களுக்காக குரல்கொடுப்பதில்லை. கம்யூனிஸ்டுக்களே அவர்களுக்காக வெய்யிலில் வீதியில் இறங்குகிறார்கள்.

ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது தமக்கு எந்த விதமான லாபமும் இல்லாதபோதும், தமது உயிருக்கு ஆபத்து அதிகரிக்கிறது என்று உணர்ந்தவாறும் பேரினவாதத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் சிங்களத்தோழர்கள் கம்யூனிஸ்டுக்களே. வேறு யாரும் அல்லர். தமிழ் தேசியத்தின் கலை பண்பாட்டு நிகழ்வை கொழும்பில் நடத்தி அங்கே பேரினவாதிகள் ஆயுதங்களோடு தமிழ் புத்திஜீவிகளை அடிக்க வந்தபோது மனித வளையம் அமைத்து அடிகளை தாமே வாங்கி இரத்தம் சிந்தி எம்மை காத்தவர்கள், முதலாளிய யூ என் பீ யோ, நோர்வேயோ, அமைதியை விரும்பும் கம்பனிகளின் கூட்டமைப்போ, அமைதிக்காக குரல்கொடுக்கு ல்லித் கொத்தலாவலவோ இல்லை. சிங்கள கிராமங்களிலிருந்து வந்த ஏழை இளைஞர்கள். தாம் வரித்துக்கொண்ட கம்யூனிச கோட்பாடு தந்த தெளிவின் நிமித்தம், அந்த கோடாப்பாடுதந்த நம்பிக்கையின் நிமித்தம் அவர்கள் எமக்காக குரல் கொடுக்கிறார்கள். அங்கே சுய நலம் இல்லை. இலாபம் அவர்களை "மோட்டிவேட்" பண்ணவில்லை. அவர்களது சித்தாந்தம் அதை வழங்கியது.

லலித் கொத்தலாவல தனது ஏசீ காரை விட்டு இறங்கி ரத்தம் சிந்த வரமாட்டார். இவர்கள்தான் முதலாளிகள். சமாதானம் குறித்து வாய் கிழிய கத்துபவர்கள்.

கொழும்பு ரயில் பாதைகளில் சட்டவிரோதமாக குடியிருப்புக்களை அமைத்து காலகாலமாக வாழ்ந்துவரும் ஏழைகளை எந்த மாறுத்திட்டமுமில்லாமல் அரசு அப்புறப்படுத்தியபோது, வீதியில் நின்று கதறியழுத அந்த அப்பாவி மக்களை ஓடி வந்து பார்த்த்தது முதலாளிய அரசாங்கமோ, இலங்கை ரய்ல் சேவையை வாங்க விரும்பும் கம்பனிகளோ , சுயநல ஜேவீ பீ யோ அல்ல. மக்கள் ஆதரவை, தமிழரை ஆதரிப்பதால் இழந்துவரும் சிறு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் விக்ரமபாகு கருணாரத்னவே.


ஆக தெட்டத்தெளிவான விசயம், மக்கள் ஒடுக்கப்படும்போது அவர்கள் உரிமைகள் பறிக்கப்படும்போது அவர்களுக்கு துணையாக களத்தில் இறங்குபவர்கள் எப்போதும் கம்யூனிச்டுக்களே. எப்போதும் முதலாளிகள் வீதிக்கு இறங்குவதில்லை.

இப்பொழுது புரிகிறதா, கம்யூனிசத்தினதும், கம்யூனிச்டுக்களினதும் தேவை என்ன என்று?


இது நல்ல மனிதர்கள் செய்யும் பணி என்று குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிடாதீர்கள். நல்ல மனிதர்கள் கோயிலுக்கு போவாரக்ள், சில வேளை தனியாளாக வ்ந்து அடிவாங்கி செத்துப்போவாரக்ள். ஒரு சித்தாந்தம் வேண்டும். சித்தாந்தம் போராடுவதற்கான உறுதியை தரவேண்டும். போராடம் பற்றிய தெளிவினை தரவல்ல சித்தாந்தம் வேண்டும். எல்லா ஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் தமது மூல ஊற்றாக முதலாளித்துவத்தையும் இலாபச்சுயநலத்தையுமே கொண்டிருப்பதால், அவற்றுக்கெதிரான எல்லா போராட்டங்களும் கம்யீனிஸ்டுக்களின் நட்பினை சம்பாதிக்கின்றன. கம்யூனிசம் ஒடுக்குமுறையின் மூல ஊற்றினை அழிப்பதற்கான விஞ்ஞானத்தை தனகத்தே கொண்டிருப்பதால் அது ஒடுக்கப்படுவோரின் வலிய ஆயுதமாக எப்போதும் இருக்கிறது.

தேசத்தின் முன்னேற்றத்திற்கு எப்போது கம்யூனிஸ்டுக்கள் தடையாக இருந்தார்கள்?

நிலநீரை சுரண்டும் கொகாகோலா கம்பனியை விரட்டியடிக்க போராடுவது முன்னேற்றத்துக்கு தடையா?
மேல் கொத்மலை தோட்டத்தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக நீர்மின்சார திட்டத்திற்கு எதிராக போராடுவது தேச முன்னேற்றத்துக்கு தடையா?
யுனிலிவரின் அப்பட்டமான கொள்ளையடிப்புக்கெதிராக சோப்பு செய்து போராடுவது, நாகரிகமில்லையா?


உங்கள் பார்வையில் தேச முன்னேற்றம் என்பது பளபளப்பான ரோடுகள், வானுயர்ந்த கட்டடங்கள், எங்கும் ஏசி கார்கள், இந்தியாவின் முன் கைகட்டி நிற்கும் மைக்ரோசொப்ட். இவை எல்லாம்.

எங்கள், கம்யூனிஸ்டுக்களின் பார்வையில் தேச முன்னேற்றம் என்பது, எல்லா மக்களுக்கும் வாழ்வதற்கான உரிமை. மக்களுக்கு தெவையான பொருட்களின் அதிக உற்பத்தி. மக்களுக்கு தேவையான சேவைகளின் பெருக்கம். மக்கள் ஆரோக்கியமாக, தேவைகளை தீர்த்துக்கொண்டு வாழ்வதற்கான தொழிற்றுறைகள்.

ஏசீ கார்கள் என்றால், அது எல்லோருக்கும்.

பாரதியின் வார்த்தைகளில் சொன்னால்,
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இல்லாத வளர்ச்சி.

இதனை முதலாளித்துவத்தால் வழங்க முடியாது. இலாப நோக்கம் எப்போதும் இலாபம் கிடைக்காத நோக்கங்களை கவனிப்பதில்லை.


அப்படி முதலாளியம் முற்போக்கானதாக, வளர்ச்சியின் தத்துவமாக இருந்திருந்தால், முதலாளியத்தின் தலைமை நாடான அமெரிக்கா வல்லரசக, உலக வல்ல்ரசாக இருக்கும் இன்றைய வரலாறுக்காலகட்டமல்லவா உஅக மகக்ளின் பொற்காலமாக இருந்திருக்கும்.

அமெரிக்காவும் அதன் நிறுவனங்களும் இன்றைக்கு பட்டினியை, ஒடுக்குமுறைகளை எல்லாவற்றையும் தீர்த்து சொர்க்கத்தையல்லவா உலகத்தில் நிலைநாட்டியிருக்கும்.

முதலாளியம் என்ற சுரண்டல் சித்தாந்தத்தின் கேவலமா லாபப்பெருக்க உத்திகளின் யதார்த்தத்தை எப்படி உங்களால் வசதியாக மறந்துவிட முடிகிறது?

6:20 PM, May 02, 2006
வஜ்ரா said...

//
கம்யூனிசத்தில் வளர்ச்சியே தொழிலாளர் சங்கங்களிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இன்று வேண்டுமானால் கம்யூனிசக் கலப்பில்லாத தொழிற்சங்கங்கள் இருக்கலாம். என்ன முக்கியம் என்றால் தொழிலாளர் நலனைக் காக்கக்கூடிய, அதற்காகப் போராடக்கூடிய அமைப்புகள் தேவை. அவை எந்தப் பின்னணியில் இருந்து வந்தாலும் சரி.
//

பத்ரி,

பின்பு கம்யூனிஸத்தின் தேவை எதற்கு?

ஒடுக்கப் பட்ட மக்களுக்காக வந்த சித்தாந்தமே கம்யூனிஸம், ஆனால் இன்று கம்யூனிஸம் வாழ ஒடுக்கப் பட்ட மக்க்ள் தேவை என்ற நிலையில் இருக்கிறது. அத்தகய கொள்கை நமக்குத் தேவை இல்லை.

ஷங்கர்.

5:27 AM, May 03, 2006
வஜ்ரா said...

மயூரனின் பதில் கண்டேன்,

நன்றாகவே விளக்கியிருக்கிறார். ஆனால், இன்றய தேதியில், முன்னேற்றம் என்பது ஒருவரை கீழே தள்ளிவிட்டு மேலே வருவது அல்ல. அவரவர் தன்னைத் தானே முன்னேற்றி கொண்டு போவது தான் நடக்கிறது.

பாரதியின் வார்தைகளில் அவர் கூறுவது போல் "மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இல்லாத வளர்ச்சி." அதுதான் ஒரு வகையில் நடக்கிறது. (இது விவாதத்திற்குறியது என்பது தெரிந்து தான் எழுதுகிறேன்).

ஒருவன் முன்னேறுகிறான் என்றான் அவன் இன்னொருவனுடய முன்னேற்றத்தை தடுக்கிறான் என்ற கண்ணொட்டமே தவறானது. (பணக்காரர்கள் ஏழைகளை சுரண்டித்தான் முன்னேறுகிறார்கள் என்பதைத்தான் சொல்கிறேன்).

அடுத்தவரை குறை கூறி மேலே வந்து விட்டு, தம் மேல் குறை கூறும் வாய்ப்பை அளிக்காத கம்யூனிசம் இன்றய தேவை அல்ல. அடிப்படையிலே தப்பான சித்தாந்தமான "For each according to his ability, to each according to his needs" கொண்டுள்ள கம்மியூனிசத்தில் திறமைக்கு மதிப்பில்லாமல் போய்விடும் அபாயம், தனி மனித சுதந்திரம் இல்லாது ஆட்டு மந்தை போல் வாழவேண்டிய நிலை, அதனால் அழிந்த நாடுகள் எல்லாமே சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தில் எந்த கம்மியூனிஸ்டும் இல்லை என்பது நிதர்சனம்.

ஷங்கர்.

7:11 AM, May 03, 2006
வஜ்ரா said...
This comment has been removed by a blog administrator. 1:55 PM, May 03, 2006