இந்த தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதற்கு அடுத்த படியாக அனைவரும் எதிர்பார்த்து இருந்தது விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேறுவாரா என்பது தான். தேர்தலின் போக்கு மாறிக்கொண்டிருந்த அதே சூழலில் அங்கு விஜயகாந்த் கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தார் என்று நான் கேள்விபட்டுக் கொண்டிருந்தேன். விஜயகாந்த், பாமக என யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற இறுதி கட்ட நிலவரம் இருந்த சூழலில் இறுதி முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் என்று எண்ணியிருந்த நிலையில் 14,000 வாக்கு வித்தியாசம் என்பது பாமகவிற்க்கு பெருத்த பின்னடைவு என்பதில் எந்த விதச் சந்தேகமும் இல்லை. விருத்தாசலம் முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த இடம் என்பதும் சினிமா கவர்ச்சி அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதிலும் எந்த விதச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் அது மட்டுமே விஜயகாந்த்திற்கு இந்த வெற்றியை கொடுத்து விட வில்லை. ஒரு மாற்று அரசியல் தலைவர் தேவை என்ற எண்ணம் தமிழகத்தில் எழுந்திருக்கிறது என்பது கருத்துக் கணிப்புகளில் பரவலாக முன்வைக்கப்பட்ட கருத்து. இதைத் தவிர வடமாவட்டங்களில் இருக்கும் ராமதாஸ்-பாமக எதிர்ப்புணர்வை மிகச் சரியாக விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது தான் அவரது வெற்றிக்கு முக்கியமான காரணமாக நான் நினைக்கிறேன்.
விஜயகாந்த் இந்த தேர்தலில் தன்னுடைய துணிச்சலான முடிவு மூலம் சாதித்துக் காட்டியிருக்கிறார். அவரை நிச்சயமாக பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் அவர் தன்னுடைய இந்த வெற்றியை நிலை நிறுத்திக் கொள்ள, தன்னுடைய தளத்தை இன்னும் விரிவாக்கிக் கொள்ள தற்போதைய அரசியல் பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும். இரு கழகங்களுக்கும் மாற்றாக ஒரு அரசியல் இயக்கம் வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்திருக்கிற இந்தச் சூழலில் அதே கழங்களின் அரசியல் பாணியை பின்பற்றுவது அவருக்கு பெரிய வளர்ச்சியை கொடுத்து விடாது. தற்பொழுது அவருக்கு கிடைத்திருக்கும் கவனம் கூட முதல் முறை என்பதால் தான்.
எதிர்வரும் தேர்தலில் அவர் தனித்தோ அல்லது திமுக, அதிமுக அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பொழுதோ தான் அவரது வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். மாறாக ஏதோ ஒரு கூட்டணியில் ஒட்டிக் கொள்ள நினைத்தால் நிச்சயம் அவரது வளர்ச்சி தேக்கத்தை அடைந்து விடும். இவை தவிர அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் தன்னை ஒரு முழு நேர அரசியல்வாதியாக மாற்றிக் கொள்வது அவசியம். சட்டமன்றத்திலும் விருத்தாசலத்திலும் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே அவரது ஆதரவு பெருகும்.
இது வரை விஜயகாந்த்தை ஒரு மாற்று அரசியல் தலைவராக என்னால் நினைக்க முடிந்ததில்லை. தமிழகத்தில் தற்பொழுது இருக்கின்ற எல்லா அரசியல்வாதிகள் போலத் தான் இவரையும் பார்க்கிறேன். அதே அதிரடி, கவர்ச்சி அரசியல் தான். எதிர்காலத்திலும் அவர் ஒரு மாற்று அரசியல் தலைவராக தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.
********
இந்த தேர்தலில் மற்றுமொரு ஆச்சரியம் - கருத்துக்கணிப்புகளின் வெற்றி (குமுதத்தைச் சொல்லவில்லை). குறிப்பாக CNN-IBN Exit Polls.
மிகத் துல்லியமாக முடிவினை இவர்கள் கணித்திருந்தார்கள். CNN-IBN முதல் கட்ட கருத்துக் கணிப்பு குறித்து என்னுடைய விமர்சனத்தை ஒரு பதிவில் எழுதியிருந்தேன். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பினை சாதி, மதம் என பல பிரிவுகளில் கணித்திருந்தார்கள். இந்த முடிவுகளின் படி மிகச் சரியாக தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன என்று சொல்லலாம்.
திமுக தன்னுடைய கோட்டையாக கருதிய வடமாவட்டங்கள் ஒரளவிற்குச் சரிந்துள்ளது. சென்னை திமுகவின் கோட்டையாக இருந்த நிலை மாறியிருக்கிறது. பாமக தன்னுடைய தளத்தை கணிசமாக இழந்திருக்கிறது. இவையெல்லாம் கருத்துக்கணிப்புகளில் சரியாக சொல்லப்பட்டது ஆச்சரியம் தான். அது போல தென்மாவட்டங்கள் அதிமுகவிற்கு சரிவினை ஏற்படுத்தி உள்ளது. அதனுடைய தேவர் வாக்கு வங்கி இம் முறை சரிந்திருக்கிறது. தென்மாவட்டங்களில் பலமான கட்சியாக கருதப்பட்ட மதிமுக சரிவை சந்தித்துள்ளது.
********
இம் முறை மக்களின் தீர்ப்பு ஒரு கலவையான சட்டசபையை அமைக்க உதவியிருக்கிறது. பாஜக தவிர போட்டியிட்ட அனைத்து பெரிய கட்சிகளும் சட்டசபையில் நுழைகின்றன. சட்டசபையில் இருந்து இனி யாரையும் தூக்கி எறிய முடியாது. அம்மா, அய்யா என இருவரும் எதிரும் புதிருமாக உட்காருவார்களா, அம்மா சட்டசபைக்கு வருவாரா, கேப்டன் சட்டசபையில் என்ன புள்ளி விபரங்கள் பேசுவார் என்பன போன்ற சுவாரசியமான கதைகளை நிறைய படிக்கலாம்.
முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமையப்போகிறது. ஆனால் கூட்டணி கூத்துகள் நடக்க பெரிய வாய்ப்புகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. திமுகவிற்கு கணிசமான தொகுதிகள் கிடைத்திருப்பதால் ஏதோ ஒரு கட்சி (காங்கிரசோ, பாமகவோ) திமுகவை தொடர்ந்து ஆதரித்து கொண்டு தான் இருக்கும்.
Thursday, May 11, 2006
தேர்தல் 2006 ஆச்சரியங்கள்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 5/11/2006 06:51:00 AM
குறிச்சொற்கள் தேர்தல் 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
விஜயகாந்த்தின் வெற்றிக்கு நீங்கள் சொல்லும் காரணங்களை விட சில முக்கியமாண காரணங்கள் இருக்கின்றன.
8:37 AM, May 11, 2006அந்த தொகுதியை சார்ந்தவன் என்கிற முறையில் நான் அறிந்தவை இவை. மற்றபடி எனக்கு அரசியலில் அ ஆ கூட தெரியாது!
1. முதல் முக்கிய காரணம்: பமக வேட்பாளர் கோவிந்தசாமி செனற முறை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிடக்கூட செல்லவில்லை. அந்த பகுதிகள் இவர் வசிக்குமிடத்திலிருந்து சொற்ப கி. மீ. தூரத்திலிருந்தும் இந்த நிலை!
2. கட்சியின் தலைவர் என்பதாலும், வாய்ப்பளித்தால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள கண்டிப்பாக உருப்படியாய் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை.(ஒரு புதிய மூன்றாம் அணி என்றெல்லாம் யோசிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கக்கூடும். மூன்றாவது அணி என்று மதிக்கிற அளவிற்கு அங்கு ஒன்றுமில்லை.)
3. விஜயகாந்த் வெற்றிபெண்றால், விருத்தாசலம் ஒரு VIP தொகுதி ஆகிவிடும் என்கிற ஆவல்.
4. அதிக பரிச்சயமில்லாத அதிமுக வேட்பாளர்.
பாமக கோட்டையில் வெல்வது என்பது பெரிய விசயம்!
9:03 AM, May 11, 2006விருதாசலத்தில் பாமகவின் தோல்விக்கு முயல் ஆமை ஓட்டப்பந்தயத்தினை உதாரணமாகக் கூறலாம். நம்ம சாதிசனங்கதானே வேற எவனுக்கும் ஓட்டுபோட மாட்டானுங்க என்ற திமி ர்த்தனம் தனத்திற்கு கிடைத்த பரிசுதான் இந்த தோல்வி.
4:54 AM, May 12, 2006மற்றபடி, உள்ளங்கை நிறைய தேனை அள்ளி யவன் புறங்கையை நக்கமாட்டானா என்ன? அப்படித்தான் விஜயகாந்த் கதையும், தேர்தலுக்கு முன்பே அவர் அம்மையாரின் தோ ழமையை விரும்பியதாக கேள்வி. இனிமேலும் அவர் சாயம் மாறமாட்டார் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது!
Post a Comment