Tuesday, May 02, 2006

கம்யுனிசத்தின் தேவை


மேதின வாரத்தில் கம்யுனிசம் குறித்து நல்ல விவாதங்கள் வலைப்பதிவில் நடந்து கொண்டு இருக்கிறது. கம்யுனிசத்தின் தேவை இன்றைக்கும் இருக்கும் சில காரணங்களை என் வலைப்பதிவில் பத்ரி பட்டியலிட்டிருந்தார் (1, 2). யோசிக்க வைத்த கருத்துக்கள். அது போலவே முத்துவின் வலைப்பதிவிலும் கம்யுனிசம் பற்றி சூடான விவாதம் சென்று கொண்டு இருக்கிறது.

மயூரன் கம்யுனிசத்தின் தேவை குறித்து ஒரு வித்தியாசமான பார்வையை கொடுத்திருக்கிறார். அது வலைப்பதிவில் கவனம் பெறும் பொருட்டு இங்கு தனிப்பதிவாக இடுகிறேன் (ஆட்சேபிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்).

இது குறித்து எனது கருத்தை பிறகு நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்.

மூலதனவாதத்தை, அல்லது முதலாளியத்தை அடிப்படையாக கொண்ட நிறுவனங்கள், அவற்றை நிர்வகிக்கும் முறை, அதற்கான விஞ்ஞான முறைகள் போன்றவற்றைக்கொண்டு கட்டியெழுப்பப்பட்ட அறிவியல் இருக்கிறது. அதை மாணவர்கள் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள், அதில் பெரும் அறிஞர்களாக வருகிறார்கள்.

மூலதனவாத நிறுவனம் ஒன்றை சிறப்பாக கொண்டு நடத்துவது பற்றியும் , இந்த அடிப்படையில் நாட்டின், உலகின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பற்றியும் இந்த அறிஞர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டவண்ணமிருக்கிறார்கள். இந்த "காப்ரேட்" உலகத்திற்கு வெளியே இன்னொரு உலகம் இருக்கிறது. அது கம்யூனிச உலகமோ அல்லது ஆன்மீக உலகமோ அல்ல. அது உலகில் இருக்கவே செய்கின்ற பெரும்பான்மை மக்களது உலகம்.

நிறுவனங்கள், கம்பனிகள், மூலதனம் பொருளாதாரம் என்ற சித்தாங்களும் ஆர்ப்பாட்டங்களும் மிகச்சிறுபான்மையினரிடையேதான் இருக்கிறது..

இதற்கு வெளியே கோடிக்கணக்கான மகக்ள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் சாப்பாடு இல்லாமலிருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு வாழும் உருமை மறுக்கப்படுகிறது. அவர்கள் தான் சாலைப்பணியாளர்களாய் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்கள் தான் எலிக்கறி சாப்பிடுகிறார்கள். அவர்கள்தான் சம்பந்த சம்பந்தமில்லாமல் ஈராக்கில், சூடானில் பாலஸ்தீனத்தில் அழிகிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்ல கம்பனிகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் நேரமில்லை. அவர்கள் லாபம் பார்ப்பதையே முதன்மைத்தொழிலாகக்கொண்டவர்கள்.

இந்த "வெளியே இருக்கும் " மக்களுக்கு போராடுவதைத்தவிர வேறு வழியில்லை. அவர்கள் உயிர்வாழ்வதற்கான ஒரே வழி போராடுவதுதான். தன்னை சுரண்டும் முதலாளிக்கு எதிராக, தன்மீது போரைத்திணித்த அமெரிக்க எண்ணைக்கம்பனிகளுக்கெதிராக, தன்னை பணி நீக்கம் செய்த அரசாங்கத்திற்கெதிராக அவர்கள் போராடியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் செத்துப்போய்விடுவார்கள்.

போராடுவதற்கு ஆயுதமும் ஆட்களும் மட்டும் இருந்தால் போதாது. ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். யாருக்கெதிரான போராட்டம் என்ற தெளிவு இருக்க வேண்டும். போராட்டத்திற்கெதிராக எழும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான கொள்கைத்தெளுவு இருக்க வேண்டும். ( இதைப்பற்றி போராட்டங்களை பற்றி எழுதும் தமிழ் சசிக்கு விளக்க வேண்டியதில்லை) இவ்வாறான போராட்டங்களுக்கு முதுகெலும்பான சித்தாந்தங்களை, ஆதரவை, ஆன்மீகமோ முதலாளியமோ தருவதில்லை. அவர்கள் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். போர் நடந்தால் அவர்களால் லாபம் பண்ண முடியாது. தாம் லாபம் பண்ணும் இடத்திற்கு வெளியே வேறு வகையான லாபங்களுக்காக அவர்களே போர்களை உருவாக்குகிறார்கள்.

இந்த இடத்தில் தான் தனது உரிமைகளுக்காக போராடுவோருக்கு கம்யூனிசம் ஆதரவை தருகிறது. அவர்கள் கையிலெடுக்கக்கூடிய பலமான சித்தாந்தாஅயுதமாக கம்யூனிசம் இருக்கிறது.

தலித்துகளின் விடுதலைக்கான போராட்டத்தை முதலாளியம் ஆதரிக்காது. அங்கே அவர்களுக்கு லாபம் இல்லை. கம்யூனிச்டுக்களே அங்கே தோழமை கொள்கிறார்கள். சாலைப்பணியாளர் வாழ வழியில்லாத தற்கொலை செய்யும்போது கொகா கோலா கம்பனியோ, டாட்டாவோ, மைக்ரோசொஃப்டோ அவர்களுக்காக குரல்கொடுப்பதில்லை. கம்யூனிஸ்டுக்களே அவர்களுக்காக வெய்யிலில் வீதியில் இறங்குகிறார்கள்.

ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது தமக்கு எந்த விதமான லாபமும் இல்லாதபோதும், தமது உயிருக்கு ஆபத்து அதிகரிக்கிறது என்று உணர்ந்தவாறும் பேரினவாதத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் சிங்களத்தோழர்கள் கம்யூனிஸ்டுக்களே. வேறு யாரும் அல்லர். தமிழ் தேசியத்தின் கலை பண்பாட்டு நிகழ்வை கொழும்பில் நடத்தி அங்கே பேரினவாதிகள் ஆயுதங்களோடு தமிழ் புத்திஜீவிகளை அடிக்க வந்தபோது மனித வளையம் அமைத்து அடிகளை தாமே வாங்கி இரத்தம் சிந்தி எம்மை காத்தவர்கள், முதலாளிய யூ என் பீ யோ, நோர்வேயோ, அமைதியை விரும்பும் கம்பனிகளின் கூட்டமைப்போ, அமைதிக்காக குரல்கொடுக்கு ல்லித் கொத்தலாவலவோ இல்லை. சிங்கள கிராமங்களிலிருந்து வந்த ஏழை இளைஞர்கள். தாம் வரித்துக்கொண்ட கம்யூனிச கோட்பாடு தந்த தெளிவின் நிமித்தம், அந்த கோடாப்பாடுதந்த நம்பிக்கையின் நிமித்தம் அவர்கள் எமக்காக குரல் கொடுக்கிறார்கள். அங்கே சுய நலம் இல்லை. இலாபம் அவர்களை "மோட்டிவேட்" பண்ணவில்லை. அவர்களது சித்தாந்தம் அதை வழங்கியது.

லலித் கொத்தலாவல தனது ஏசீ காரை விட்டு இறங்கி ரத்தம் சிந்த வரமாட்டார். இவர்கள்தான் முதலாளிகள். சமாதானம் குறித்து வாய் கிழிய கத்துபவர்கள்.

கொழும்பு ரயில் பாதைகளில் சட்டவிரோதமாக குடியிருப்புக்களை அமைத்து காலகாலமாக வாழ்ந்துவரும் ஏழைகளை எந்த மாறுத்திட்டமுமில்லாமல் அரசு அப்புறப்படுத்தியபோது, வீதியில் நின்று கதறியழுத அந்த அப்பாவி மக்களை ஓடி வந்து பார்த்த்தது முதலாளிய அரசாங்கமோ, இலங்கை ரய்ல் சேவையை வாங்க விரும்பும் கம்பனிகளோ , சுயநல ஜேவீ பீ யோ அல்ல. மக்கள் ஆதரவை, தமிழரை ஆதரிப்பதால் இழந்துவரும் சிறு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் விக்ரமபாகு கருணாரத்னவே.


ஆக தெட்டத்தெளிவான விசயம், மக்கள் ஒடுக்கப்படும்போது அவர்கள் உரிமைகள் பறிக்கப்படும்போது அவர்களுக்கு துணையாக களத்தில் இறங்குபவர்கள் எப்போதும் கம்யூனிச்டுக்களே. எப்போதும் முதலாளிகள் வீதிக்கு இறங்குவதில்லை.

இப்பொழுது புரிகிறதா, கம்யூனிசத்தினதும், கம்யூனிச்டுக்களினதும் தேவை என்ன என்று?


இது நல்ல மனிதர்கள் செய்யும் பணி என்று குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிடாதீர்கள். நல்ல மனிதர்கள் கோயிலுக்கு போவாரக்ள், சில வேளை தனியாளாக வ்ந்து அடிவாங்கி செத்துப்போவாரக்ள். ஒரு சித்தாந்தம் வேண்டும். சித்தாந்தம் போராடுவதற்கான உறுதியை தரவேண்டும். போராடம் பற்றிய தெளிவினை தரவல்ல சித்தாந்தம் வேண்டும். எல்லா ஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் தமது மூல ஊற்றாக முதலாளித்துவத்தையும் இலாபச்சுயநலத்தையுமே கொண்டிருப்பதால், அவற்றுக்கெதிரான எல்லா போராட்டங்களும் கம்யீனிஸ்டுக்களின் நட்பினை சம்பாதிக்கின்றன. கம்யூனிசம் ஒடுக்குமுறையின் மூல ஊற்றினை அழிப்பதற்கான விஞ்ஞானத்தை தனகத்தே கொண்டிருப்பதால் அது ஒடுக்கப்படுவோரின் வலிய ஆயுதமாக எப்போதும் இருக்கிறது.

தேசத்தின் முன்னேற்றத்திற்கு எப்போது கம்யூனிஸ்டுக்கள் தடையாக இருந்தார்கள்?

நிலநீரை சுரண்டும் கொகாகோலா கம்பனியை விரட்டியடிக்க போராடுவது முன்னேற்றத்துக்கு தடையா?
மேல் கொத்மலை தோட்டத்தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக நீர்மின்சார திட்டத்திற்கு எதிராக போராடுவது தேச முன்னேற்றத்துக்கு தடையா?
யுனிலிவரின் அப்பட்டமான கொள்ளையடிப்புக்கெதிராக சோப்பு செய்து போராடுவது, நாகரிகமில்லையா?


உங்கள் பார்வையில் தேச முன்னேற்றம் என்பது பளபளப்பான ரோடுகள், வானுயர்ந்த கட்டடங்கள், எங்கும் ஏசி கார்கள், இந்தியாவின் முன் கைகட்டி நிற்கும் மைக்ரோசொப்ட். இவை எல்லாம்.

எங்கள், கம்யூனிஸ்டுக்களின் பார்வையில் தேச முன்னேற்றம் என்பது, எல்லா மக்களுக்கும் வாழ்வதற்கான உரிமை. மக்களுக்கு தெவையான பொருட்களின் அதிக உற்பத்தி. மக்களுக்கு தேவையான சேவைகளின் பெருக்கம். மக்கள் ஆரோக்கியமாக, தேவைகளை தீர்த்துக்கொண்டு வாழ்வதற்கான தொழிற்றுறைகள்.

ஏசீ கார்கள் என்றால், அது எல்லோருக்கும்.

பாரதியின் வார்த்தைகளில் சொன்னால்,
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இல்லாத வளர்ச்சி.

இதனை முதலாளித்துவத்தால் வழங்க முடியாது. இலாப நோக்கம் எப்போதும் இலாபம் கிடைக்காத நோக்கங்களை கவனிப்பதில்லை.


அப்படி முதலாளியம் முற்போக்கானதாக, வளர்ச்சியின் தத்துவமாக இருந்திருந்தால், முதலாளியத்தின் தலைமை நாடான அமெரிக்கா வல்லரசக, உலக வல்ல்ரசாக இருக்கும் இன்றைய வரலாறுக்காலகட்டமல்லவா உஅக மகக்ளின் பொற்காலமாக இருந்திருக்கும்.

அமெரிக்காவும் அதன் நிறுவனங்களும் இன்றைக்கு பட்டினியை, ஒடுக்குமுறைகளை எல்லாவற்றையும் தீர்த்து சொர்க்கத்தையல்லவா உலகத்தில் நிலைநாட்டியிருக்கும்.

முதலாளியம் என்ற சுரண்டல் சித்தாந்தத்தின் கேவலமா லாபப்பெருக்க உத்திகளின் யதார்த்தத்தை எப்படி உங்களால் வசதியாக மறந்துவிட முடிகிறது?

4 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

அப்படியா சார், ரொம்ப சந்தோஷம். கம்யூனிசம் தழைத்தோங்கியபோது ரஷ்யாவிலோ, போலந்திலோ அல்லது வேறு எங்குமோ வேலை நிறுத்தமே இல்லை என்பது சரித்திரம். அந்த நிலை தொழிலாளர்கள் சந்தோஷமாக இருந்ததால் வந்தது என்று நீங்கள் கருதினால் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

போன நூற்றாண்டின் முப்பதுகளில் ரஷ்யாவில் நிலத்தை மறு வினியோகம் செய்கிற வேலையில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் சந்தோஷமாக செத்தார்களா?

சோவியத் யூனியனின் கடைசி காலத்தில் கூட்டுப் பண்ணைகளை விட ஒவ்வொரு குடும்பத்துக்கும் அளிக்கப் பட்ட தனியார் நிலங்களில் விளைந்த உணவுப் பொருட்களே உணவுப் பஞ்சத்தை பெருமளவு தவிர்த்தன என்பதை மறந்து விட்டீர்களா?

"வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை" என்று பாடிய கவியரசு கண்ணதாசனே வல்லானாக இருந்து நிறையப் பாடல்கள் எழுதி பொருள் குவித்தவர்தானே. சோவியத் யூனியனில் அவர் இருந்திருந்தால் அவரது கவிதைகளும் பொதுக் கோட்டாவின் கீழ்தான் வந்திருக்கும் என்பதை அறிவீர்களா?

கம்யூனிச சித்தாந்தம் என்பது மற்றவர்களை குறைகூறி ஆட்சிக்கு வந்து, பிறகு தேர்தல் நடப்பதையே ரத்து செய்யும் அமைப்பு. அதன் கைங்கர்யத்தால் கிழக்கு ஜெர்மனி, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளே உலக வரைபடத்திலிருந்து மறைந்தன. சீனா முதலாளித்துவத்துக்கு மாறினதால் தப்பிப் பிழைத்தது.

மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டுகள் பன்னாட்டு கம்பெனிகளின் முதலாளிகளோடு கூடிக் குலாவுவது உங்களுக்குத் தெரியாதா?

கம்யூனிசத்தின் அடிப்படை சித்தாந்தமே மனித இயல்புக்கு விரோதமானது. "From each according to ability and to each accordig to needs" என்பதைத்தான் நான் சொல்கிறேன்.

பல ஏழைகள் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்த கதை தனியார் பொருளாதாரம் உள்ள நாடுகளில்தான் நடக்கும். இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி என்ன பெரிய பணக்காரக் குடும்பத்தை சார்ந்தவரா? 1991-ல் சோவியத் யூனியன் அழிந்த போது எல்லா மக்களும் கிட்டத்தட்ட ஒரே பொருளாதார நிலையில் தான் இருந்தனர். ஆனால் இப்போது?

துர் உபயோகம் ஆகக்கூடிய அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீங்கள் வைத்துள்ளதால் இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய "வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/blog-post_17.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

10:22 PM, May 02, 2006
குழலி / Kuzhali said...

http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_112451737668150218.html

11:48 PM, May 02, 2006
Muthu said...

சசி,
நல்லா இருக்கு..மயூரனுக்கும் வாழ்த்துக்கள்...

சித்தாந்தம்,நடைமுறைப்படுத்துதல் இங்கதான் எல்லா சிந்தாந்தமும் அடிபடுது...

விளக்கமாக பிறகு..

1:16 AM, May 03, 2006
யாத்ரீகன் said...

சித்தாந்தங்கள் தவறாகச்செயல்படுத்தப்படுவதால் சிந்தனைகளே தவறானவை என்று கூற இயலாது...

டோண்டு அவர்களே, அப்படிப்பார்த்தால் தவறான வழிகாட்டிகளால் ஒரு மதமே தவறானது என்று வரிந்து கட்டிக்கொண்டு வருபவர்களை என்னவென்று சொல்வது.... (அதில் நீங்களும் இருப்பீர்கள் அல்லவா ?)

9:24 AM, May 03, 2006