ஸ்டாலின் முதல்வராக வேண்டும், கலைஞர் விலகவேண்டும்


82வயதில் திமுகவை கலைஞர் ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார். அவருக்கும் திமுகவிற்கு பலர் தெரிவித்துள்ள வாழ்த்துக்களில் என்னுடைய வாழ்த்தினையும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். வாழ்த்த வயதில்லை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஓட்டு போடும் வயதிருப்பதால் தேர்தலில் வெற்றி பெறும் எவரையும்ஹ் வாழ்த்துவதற்கும் வயது ஒரு பொருட்டல்ல.

இந்த தேர்தலில் எனக்கு ஏற்பட்ட பல ஆச்சரியங்களில் ஒன்று கலைஞரின் பிரச்சாரம். 82வயதில் தமிழகத்தின் பல தொகுதிகளுக்கு சென்ற அவரது உடல் உறுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் நெய்வேலிக்கு செல்வதற்குள் ஏற்படும் பயண எரிச்சல் ஒரு புறம் என்றால் இந்த கோடை காலத்தில் பயணம் செய்வதே எரிச்சல் மிகு தருணம் தான். என்ன தான் ஏசி காரில் சென்றாலும் கூட கோடை காலங்களில் ஏசியை மீறிய எரிச்சல் சில நேரங்களில் ஏற்படுவது இயல்பு. ஆனால் 82 வயதிலும் கடும் கோடை வெப்பத்திற்கிடையே சில ஆயிரம் கீ.மீ பயணம், பிரச்சார கூட்டம், தொண்டர்களின் அலைமோதல் இவற்றிடையே அவரது பேச்சின் ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. அதே கரகரப்பான குரல். அதில் தெரியும் கம்பீரம் போன்றவை கலைஞருக்கே உரித்தான இயல்புகள்.

என்றாலும் அதை மீறி தள்ளாட்டத்துடன் நடக்கும் அவரது நடை, நிற்பதற்கு கூட தேவைப்படும் ஒரு உதவியாளர், நிற்க முடியாமல் உட்கார்ந்து கொண்டே பேசும் அவரது முதிய நிலை போன்றவையெல்லாம் பார்க்கும் பொழுது கலைஞர் இந்த அரசியல் சாக்கடையை விட்டு கொஞ்சம் விலகி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் 82வயதிலும், 2006 தேர்தலில் திமுக வெற்றி பெற கலைஞர் தான் தேவைப்படுகிறார் என்பதை கவனிக்கும் பொழுது திமுகவின் அடுத்த தலைமுறையினர் பற்றிய கேள்விக்குறியும் எழுகிறது. அடுத்த தேர்தலில் திமுகவிற்கு மக்களிடையே ஆதரவு திரட்ட கலைஞர் ஆரோக்கியமுடன் இருப்பார் என்ற எண்ணம் எழுந்தாலும் அடுத்த தலைமுறை திமுகவை கலைஞர் அவரது காலத்திலேயே ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தோன்றுகிறது. தமிழக அமைச்சரவையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி என வயதான தலைமுறையினரை தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்ற அலுப்பும் ஏற்படுகிறது.

இன்று இந்தியாவின் இளையதலைமுறை பல நாடுகளில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தென் மாநிலங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. தமிழகம் பல இளைய தலைமுறை பொறியாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு இயல்பாக இருக்கின்ற கல்வி வளம், உள்கட்டமைப்பு காரணமாக ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து சேருகின்றன. தமிழகம் ஆசியாவின் எதிர்கால முக்கிய பிராந்தியத்திற்கான விருதினைப் பெற்று இருக்கிறது (ASIAN REGION OF THE FUTURE). ஆஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் இந்த விருதினைப் பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழகம் இந்த முதலீடுகளைப் பெற தகுந்த அளவிலான ஒரு அரசாங்கத்தை கடந்த 5ஆண்டுகளாகப் பெற்றிருந்தது.

என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தது போல ஜெயலலிதாவின் கடந்த 5ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார ரீதியில் தமிழகம் ஒரு நல்ல நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா போன்ற ஏழ்மை அதிகம் இருக்கும் நாடுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியடைய முக்கிய காரணங்களாக இருப்பதில்லை. பொருளாதாரமும் உயரவேண்டும், மக்களுக்குச் சலுகைகளும் வழங்க வேண்டும். இதனை சரியான முறையில் பேலன்ஸ் செய்வதில் தான் இந்தியாவில் அமையும் அரசாங்கங்களின் திறமை இருக்கிறது. அந்த வகையில் பொருளாதார ரீதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஜெயலலிதா மக்களுக்கு சலுகைகள் வழங்கும் விதத்தில் சரியாக செயல்படவில்லை. இதை தவிர ஜனநாயக முறையில் இந்தியா கடுமையான சட்டதிட்டங்களை வைத்திருக்காவிட்டால் ஜெயலலிதா ஒரு முழுமையான சர்வாதிகாரியாகவே மாறியிருப்பார். எனவே பொருளாதார செயல்பாட்டில் ஜெயலலிதா சரியாக செயல்பட்டிருந்தால் கூட பிற வகையில் அவரின் செயல்பாடு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது. அதுவே அவர் 2004தேர்தலின் தோல்விக்கும், அதனை அவர் தாமதமாகப் புரிந்து கொண்டு தவறுகளை திருத்திக் கொண்டமை தான் 2006 தேர்தலில் மோசமான தோல்வியை தழுவாமைக்கும் முக்கிய காரணம்.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் செயல்பாடு. அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும். பொருளாதார ரீதியில் பன்னாட்டு நிறுவனங்களை மாநிலத்திற்கு கொண்டு வந்து முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கும் சலுகைகள், அடிப்படை வாழ்க்கை தேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் அரசாங்கத்தின் வருவாய் பெருக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் போட்டி இன்று அதிகரித்து இருக்கிறது. அண்டை மாநிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர கடுமையாக முயற்சி மேற்க்கொள்கின்றன. இந்த முதலீடுகளை பெருமளவில் கவர்ந்தால் தான் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டுமானால் தமிழகத்திற்கு கவர்ச்சியான முதல்வர் வேண்டும். இந் நிலையில் தமிழகத்திற்கு 82வயது கலைஞர் முதல்வராக இருப்பது ஏற்புடையது தானா என்ற கேள்வி எழுகிறது.

கலைஞர் முதல்வராகும் பட்சத்தில் அவரது அரசாங்கம் ஒரு முதிய மந்திரி சபையாகத் தான் இருக்கும். அரசாங்கம் அரசியல்வாதிகளை விட அவர்கள் தங்களிடையே வைத்துக் கொள்ளும் அரசாங்க அதிகாரிகளால் தான் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த முதல்வர் தான் அரசாங்கத்தின் முகம். தன்னுடைய மொத்த அமைச்சர்களையும் டம்மியாக்கி ஜெயலலிதா தன்னை முதலீடுகளுக்குச் சாதகமான முதல்வராக வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால் கலைஞரால் அது போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஏற்கனவே அவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் தமிழக பொருளாதாரத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படும். அவரது முதிய வயதில் செயல்பாடு மந்தப்படும் பொழுது, தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும். இது கலைஞர் மீதும், தமிழக அரசு மீதும் கடும் சுமையை ஏற்படுத்தும். இந்த காரணங்களால் தான் கலைஞர் முதல்வராவது சரியானது அல்ல என நான் நினைக்கிறேன்.

கலைஞருக்கு இந்த வாய்ப்பு இல்லையெனில் வேறு யாருக்கு இருக்கிறது ? நிச்சயமாக திமுகவில் தொண்டர் பலம் கொண்ட ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இந்த வாய்ப்பு இருக்கப்போவதில்லை. எனவே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு கலைஞர் விலக வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

ஸ்டாலினுக்கு அந்த தகுதி எந்தளவிற்கு இருக்கிறது ? ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லையெனில் தயாநிதி மாறன் முதல்வராகலாமா ?

ஸ்டாலினின் வாய்ப்புகளும், தகுதிகளும் ஒரு புறம் இருக்க, ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.

கலைஞர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்கும் தருணங்களில் அவரது ஆசை பேரன் தயாநிதியையும் அரசியலில் இருந்து விலக்கி தன்னுடன் அழைத்துக் கொள்வது நல்லது. திமுக மீதான அபிமானம் இனிமேலும் அதிகம் சேதம் அடையாமல் காப்பாற்ற இது உதவும்.

அரசாங்கத்தை தவிர திமுகவின் எதிர்காலத்தை முன்னிட்டும் கலைஞர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

எனது வாதங்களை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்