"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி எங்கள் தமிழ்க் குடி" என்று சொல்லும் பொழுதெல்லாம் சிலருக்கு மெய்சிலிர்க்கும். சிலருக்கு கோபமும், எரிச்சலும் வரும். கல் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றி இருக்க முடியாது. என்றாலும் தமிழ் மிகப் பூர்வீகமான மொழி என்ற கருத்தாக்கத்துடன் எழுதப்பட்ட பாடலை பலர் தங்களின் சார்புகளுக்கு ஏற்ப திரித்தும், புகழ்ந்தும், இகழந்தும், விமர்சித்தும் பேசி வந்திருக்கிறார்கள்.
மொழி மீது தமிழகத்தில் ஒரு காலத்தில் அதீத பற்று இருந்த நிலை மாறி இன்று "தமிழன்" என்று கூறுவதே இரண்டாம் பட்சமாக மாறி விட்ட சூழ்நிலையில், தமிழனின் வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தமிழக வரலாற்று தேடல் என்பது தமிழனின் மிகத் தொன்மையான வரலாற்று தடயங்களை தேடிச் செல்லும் மிக நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் தங்கள் வரலாற்றை துச்சமென மதிக்கும் தமிழர்கள், தமிழக அரசுகள் எனப் பல இடற்பாடுகளை கடந்து தான் வரலாற்று ஆய்வாளர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் என்று கூக்குரலிட்டு அரியணை ஏறிய அரசாங்கங்கள் கூட தமிழ் குறித்த ஆய்வுகளுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்ததில்லை. பல வரலாற்று ஆய்வாளர்கள் தங்களின் தனிப்பட்ட சேமிப்புகளை கூட வரலாற்று ஆய்வுகளுக்காக இழந்துள்ளனர். தமிழக ஆய்வாளர்களைக் கடந்து வெளிநாட்டு ஆய்வாளர்களும் தமிழின் தொன்மை குறித்த ஆய்வுகளை கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளனர்.
தமிழனின் வரலாற்று தடங்கள் பல இடங்களில் அழிந்து போய் விட்டன. இன்னும் சில தடங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதனை பாதுகாக்க மிகப் பெரிய ஒரு கூட்டுமுயற்சி தேவைப்படும் சூழ்நிலையில் சில புதிய வரலாற்று கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. புதிய "அரிய" வரலாற்று கண்டுபிடிப்புக்கள் நிகழும் பொழுதெல்லாம் அதனைச் சிறுமைப் படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பலப் பரிமாணங்களைக் கொண்டது. கடவுளின் இடது பக்கத்தில் இருந்து ஒரு மொழியும், வலது பக்கத்தில் இருந்து மற்றொரு மொழியும் முளைத்து விடுவதில்லை. ஒரு மொழியின் பேச்சு வழக்கம் தொடங்கி அது எழுத்து வடிவமாக உருப்பெறுவது வரை பல நூறு ஆண்டு கால தொடர்ச்சியான வளர்ச்சி தேவைப்படுகிறது. தமிழ் மொழியும் இத்தகைய பல நூறு ஆண்டுகள் வளர்ச்சியைப் பெற்று தான் இன்று இணையம் வரை கிளைப் பரப்பி இருக்கிறது. செம்மொழி நிலையையும் "தாமதமாகப்" பெற்று இருக்கிறது.
தமிழின் இன்றைய எழுத்து வடிவம் உருப்பெறுவதற்கான மூல வடிவம் பிராமி வடிவம் தான். பிராமி எழுத்துருவத்தில் இருந்து தான் பல மொழியின் எழுத்துருக்கள் உருவாகின.
இந்த பிராமி எழுத்துரு இரு வடிவமாக உருப்பெற தொடங்கியது. வடக்கே பிராமியின் ஒரு வடிவமும், தெற்கே வேறு ஒரு வடிவத்திலும் அது உருவாகியது. வடக்கே உருவாகிய வடிவம் கிரந்தம் எனவும், தெற்கே உருவாகிய வடிவம் தமிழ் பிராமி என்றும் வழங்கப்படுகிறது.
இந்த கிரந்த வடிவ எழுத்துருவைத் தான் அசோகர் பயன்படுத்தினார். அசோகர் காலத்து கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கிடைக்கப்பெற்றதன் வாயிலாக அவரது வரலாற்றையும், அவர் காலத்து எழுத்து வடிவமும் கண்டு பிடிக்கப்பட்டது. கிமு 8ம் நூற்றாண்டு வரை கிரந்த வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டது. பல்லவர் கால கல்வெட்டுகளில் இந்த வடிவத்தை காணமுடியும்.
கிமு6 - கிமு10ம் நூற்றாண்டுகள் இடையே தமிழ் "வட்டெழுத்துக்கள்" தமிழ் பிராமி எழுத்துக்களில் இருந்து உருவாகின. வட்டெழுத்து என்பது அதன் பெயருக்கு ஏற்ற வகையிலேயே வட்ட வடிவத்தில் இருக்கும் எழுத்துருக்கள் ஆகும். அக் காலத்தில் பனை ஓலைகளில் எழுதும் முறை இருந்ததால் எழுத்துக்களை எழுதும் பொழுது பனை ஓலை கிழிந்து விடாமல் இருக்கும் பொருட்டு வட்ட வடிவமாக எழுத்துக்கள் எழுதப்பட்டன. இந்த எழுத்துக்களே வட்டெழுத்துக்கள் எனப்பட்டன. இவை பனை ஓலைகளிலும், கல்வெட்டுகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டன. இதற்கு பிறகு கிமு8 - கிமு10 இடையே இன்றைய தமிழ் எழுத்துருக்கள் உருவாகின.
வடக்கே இருந்த கிரந்த எழுத்துருக்கள் பிற்காலத்தில் மலையாளமாக உருமாறியது. கிரந்த எழுத்துருக்களின் தாக்கம் தமிழ், சிங்களம் போன்ற மொழிகளிலும் காணமுடியும். இன்றைக்கும் கிரந்த வடிவ எழுத்துருக்கள் தமிழில் புழங்குவதை நாம் அறிவோம். தமிழில் வடமொழி எழுத்துக்கள் என்று நாம் பொதுவாக கூறும் எழுத்துக்கள் தான் கிரந்த எழுத்துருக்கள் எனப்படுகிறது.
பிராமி எழுத்துரு தான் இந்திய மொழி அனைத்திற்குமான பொதுவான மூல வடிவம்.
இந்த வடிவம் கிரந்தமாக மாறி பின் இதிலிருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் போன்ற தெற்கு பகுதி எழுத்துருக்கள் உருவாகின. ஆனால் இந்த வகை எழுத்துருக்களுக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
சமஸ்கிருதம், ஹிந்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் தேவாங்கிரி என்ற எழுத்துருக்களில் இருந்து உருவாகியது. தேவாங்கிரிக்கும் அடிப்படை பிராமி தான்.
இது தான் பொதுவான மொழி எழுத்துருக்களின் வரலாறு. மொழிகளின் வரலாற்றில் நம்முடைய தொன்மை குறித்த பெருமை ஒரு புறம் இருக்க அசோகரின் பல கல்வெட்டுகளை கண்டுபிடித்ததன் வாயிலாக அசோகரின் பிராமி எழுத்துக்கள் தான் பல மொழிகளின் அடிப்படை என்ற கருத்தாக்கம் நிலவி வந்தது. இதற்கு காரணம் அசோகரின் காலத்திற்கு முந்தைய எந்த கல்வெட்டுக்களும், எழுத்துருக்களும் கிடைக்கவில்லை என்பது தான். இதனால் தமிழ் மொழி அசோகரின் எழுத்துருவில் இருந்தது வந்திருக்க கூடும் என்ற கருத்து நிலவி வந்தது.
ஆனால் சமீபத்தில் தேனி அருகே கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அசோகர் காலத்திற்கு முந்தைய காலத்திலேயே தமிழ் எழுத்துருக்கள் உருவாகி விட்டன, என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் 'இந்தியா முழுவதற்கும்' எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கலைக்கோவன்.
இந்த கண்டுபிடிப்புகள் ஏதோ தமிழ் ஆர்வளர்கள் அதீத ஆர்வம் கொண்டு கூறும் கதைகள் அல்ல. விஞ்ஞான ரீதியில் இதன் தொன்மையான காலம், அந்த எழுத்துருக்களின் வடிவம் இவற்றைக் கொண்டு இந்த உண்மை நிருபிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தான் சமீபத்தில் ஒரு வரலாற்று ஆதாரம் மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்துவில் செய்தியும், அந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்த கட்டுரையும் வந்திருந்தன.
சிந்து சமவெளி நாகரித்தின் மொழி என்ன என்பது குறித்து பலவிதமான ஆருடங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. சிலர் இது குறித்த சில முயற்சிகள் மேற்கொண்டு வெளியிட்ட தகவல்கள் சரியான fraud என்றும் நிருபிக்கப்பட்டன.
சிந்து சமவெளியில் இருந்த மொழி குறித்து பலர் பல தியரிகளை பலர் முன்வைத்துள்ளனர். அங்கு இருந்த மொழி ஆரிய மொழி என்று சிலரும், திராவிட மொழி எனச் சிலரும் கூறிவருகின்றனர். ஆனால் பொதுவாக அங்கு இருந்த மொழி ஒரு திராவிட மொழியாகத் தான் இருக்கும் என்ற கருத்தாக்கத்திற்கு நிறைய ஆதரங்கள் உள்ளன. இன்றைய பாக்கிஸ்தானில் இருக்கும் மொழிகளில் கூட திராவிட மொழிகளின் தாக்கம் இருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு கட்டுரை - http://asnic.utexas.edu/asnic/subject/peoplesandlanguages.html. சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிகள் Indus script என்ற எழுத்துருவில் தான் இருந்தன. இவை pictograms போல உள்ளவை.
சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்த மொழி ஆரிய மொழியா, திராவிட மொழியா என்ற சச்சரவு இருந்த நிலையில் தான் மயிலாடுதுறை கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்களால் செதுக்கப்பட்ட ஆயுதம் இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு ஆகும்.
மயிலாடுதுறை அருகே உள்ள செம்பியன் கண்டியூர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்களால் செதுக்கப்பட்ட இந்த ஆயுதத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட Indus எழுத்துரூ வடிவில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது தான் இதன் முக்கியத்துவத்திற்கு காரணம். இது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் தென்னிந்தியாவைச் சார்ந்தக் கல் என்பதால் இது வடநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்தது என்ற கருத்துக்கும் இடமில்லை.
இந்த எழுத்துருவை decode செய்த இத் துறையில் உலகளவில் மதிக்கப்பெறும் ஐராவதம் மகாதேவன் அவர்கள், இந்தக் கல்லில் காணப்படும் Indus script "முருகன்" என்னும் பொருளைக் கொடுப்பதாக கூறுகிறார். இதன் மூலம் சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழகத்தின் ஆதி கால மனிதனுக்கும் இடையே தொடர்புகள் இருந்தன என நிருபிக்கப்படுவதுடன், சிந்துசம வெளி நாகரிகத்தின் மொழி குறித்து இருக்கும் சச்சரவுகளுக்கும் ஒரு தெளிவான விடை கிடைக்கிறது.
சிந்துசம வெளியின் மொழி ஒரு "திராவிட" மொழியாக மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.
திராவிட மொழி என்னும் பொழுது அது "தமிழின் மூல வடிவம்" என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?
எந்த கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானது தான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்புமோ முன்வைக்கப்படும் வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம்.
தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானப்பூர்வமான சான்றுகள் ஆகும்.
தன்னிகரில்லாத நம் தமிழ் மொழி குறித்து பெருமை கொள்ள வேண்டும்.
References
http://www.varalaaru.com/ & நண்பர் கமலக்கண்ணன்
http://www.ancientscripts.com
Languages in pre-Islamic Pakistan
http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html
http://www.thehindu.com/2006/05/01/stories/2006050112670100.htm
Tuesday, May 16, 2006
தன்னிகரில்லாத தமிழ்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 5/16/2006 09:20:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
28 மறுமொழிகள்:
வாழிய செந்தமிழ்!வாழ்க நற்றமிழர்!
9:40 PM, May 16, 2006வாழிய பாரத மணித்திருநாடு!
நல்ல பதிவு!!
9:41 PM, May 16, 2006இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் நிறைய உள்ளது! நான் மீன்டும் வந்து படித்து தெரிந்துகொள்கிறென்!!
நன்றி!!
விளக்கங்களுக்கும், மேற்கோள்களுக்கும் நன்றி சசி. அலெக்ஸாண்ட்ரியாவினைக் குறித்த ஆராய்ச்சிகள் பரபரப்பாக வெளிக் கொணரப்பட்டும், மேலாராய்ச்சிக்கு உட்படுத்தப் பட்டுக் கொண்டும் இருக்கும் வேளையில் தமிழ்த் தடயங்களைப் பற்றிய கண்டுபிடுப்புகளுக்கு அரசும், தனியாட்களும் கொடுக்கும் ஆதரவு மிகவும் கவலை தருவது. வேட்கையின்றி எதுவும் வளராது என்பது மீண்டும் நிரூபனமாகிறது.
10:09 PM, May 16, 2006நல்ல பதிவு, கல்தோன்றா காலத்திற்கு முன்பு தமிழ் தோன்றியதால் தான், கல்தோன்றிய போது அதன் மீது எழுதமுடிந்தது. கல்தோன்றாக காலத்தில் தோன்றிய தமிழ் என்று சொல்வதில் தவறில்லை.
10:19 PM, May 16, 2006சசி, இப்பதிவின் சாராம்சம் நன்று. மெனக்கெட்டு நிறைய ஆய்ந்தும் எழுதி இருக்கிறீர்கள்.
10:40 PM, May 16, 2006ஆனால், இராம.கி அவர்களின் ஒரு இடுகையையும் நீங்கள் பார்த்திருந்தால், கீழ்க்கண்ட கருத்தில் மாற்றம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
>>>
தமிழின் இன்றைய எழுத்து வடிவம் உருப்பெறுவதற்கான மூல வடிவம் பிராமி வடிவம் தான். பிராமி எழுத்துருவத்தில் இருந்து தான் பல மொழியின் எழுத்துருக்கள் உருவாகின.
>>>
தமிழி என்ற எழுத்து வடிவமே மூலம் என்றும், பிராமி அங்கிருந்து எழுந்து பின் கிரந்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மிக நல்ல பயனுள்ள தவல்கள்.
10:41 PM, May 16, 2006நன்றி
அருமையான கட்டுரை. உங்களுடைய தமிழ் ஆர்வம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
10:51 PM, May 16, 2006தமிழுக்காகவும், தமிழ் ஆராய்சிக்காகவும் புதிதாய் அமைந்திருக்கும் அரசு ஏதாவது செய்யும் என்று நம்புகிறேன்.
சசி,
11:11 PM, May 16, 2006இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி. மயிலாடுதுறைக் கண்டுபிடிப்புச் செய்தி வந்து இரண்டு வாரங்களாகியும் இது குறித்து முன்வரலாற்றுத் தகவல்கள் கொண்ட பதிவு எதுவும் இது வரை வரவில்லையே என்று நினைத்திருந்தேன். எளிமையான உங்கள் அறிமுகத்துக்கு நன்றி. ஆனாலும் நிறைய தகவல்களுடன் தொடர்பதிவு எழுதுவதற்கான பொருள் இது.
தேவநாகரியைத் தேவாங்கிரி என்று பிழையாக குறிப்பிடப் பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் வலைப் பதிவில் பேராசிரியர் ஐராவதம் மகாதேவனுடைய ஒரு நேர்காணல் அல்லது கடித விவாதம் வெளியானது. பதிவர் பெயர் நினைவில்லை. அப்பதிவு கூட தமிழ் மணத்தில் பின்னூட்டம் அல்லது வாக்கு கிட்டாமல் அதிக நேரம் இருக்கவில்லை. சமீபத்திய கண்டுபிடிப்பு பற்றியும் பேராசிரியர் மகாதேவனிடம் இன்னும் விவரமான கருத்துக்கள் வெளியிட்டால் நல்லது. வலைப்பதிவர் அருள்செல்வனும் இது குறித்து எழுதிய பழைய கட்டுரை ஒன்றை படித்திருக்கிறேன். பத்ரியும் இது தொடர்பாக முன்பு தன் பதிவில் எழுதியுள்ளார்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
சசி,
11:38 PM, May 16, 2006அருமையான கட்டுரை..ஆழ்ந்து படிக்கவேண்டிய ஒன்று...
இதைப்பற்றி பாஸிடிவ்வாக எந்த விவாதமும் இல்லாமல் மட்டையடியாக ஜல்லியடிப்பவர்கள் இதை படிக்கவேண்டும்..
(பி.கு. நீங்களும் தி.ரா வா)
செல்வராஜ்,
12:02 AM, May 17, 2006இராம.கி அவர்களின் பதிவினைப் படித்தேன்.
இது குறித்த துறைச் சார்ந்த விஷயங்கள் எனக்கு தெரியாது. இவை குறித்து எழுந்த ஆர்வத்தால் படித்து நான் எழுதிய விடயங்கள் மட்டுமே.
பொதுவாக முன்நிறுத்தப்பட்ட வாதங்களை தான் பதிவில் எழுதியிருக்கிறேன்.
///
தமிழி என்ற எழுத்து வடிவமே மூலம் என்றும், பிராமி அங்கிருந்து எழுந்து பின் கிரந்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
///
இது நிருபிக்கப்பட்ட உண்மை என்றால் மகிழ்ச்சியே
(பி.கு. நீங்களும் தி.ரா வா)
12:19 AM, May 17, 2006நான் த.ரா
பதவி கொடுத்தால் தி.ரா வாக மாறுவதில் பிரச்சனையில்லை :-))
வணக்கம் சசி!
1:06 AM, May 17, 2006//தேனி அருகே கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அசோகர் காலத்திற்கு முந்தைய காலத்திலேயே தமிழ் எழுத்துருக்கள் உருவாகி விட்டன, என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் 'இந்தியா முழுவதற்கும்' எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது //
அசோகர் பிறந்தது கி,மு.304,இறந்தது கி.மு 262.அவர் தன் கல்வெட்டுகளில் பிரம்மி எழுத்து வடிவில் அமைந்த மகதி என்ற மொழியை பயன் படுத்தியுள்ளார்.கல்வெட்டுகளில் அசோகர் பெயர் தேவனாம்பிய பியாதசி என்றே குறிப்பிட பட்டிருந்ததால் நீண்ட காலம் வரை அந்த கல்வெட்டுகள் அசோகரினால் பதியப்பட்டவை என்று தெரியாமல் போய்விட்டது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள புதிய கண்டு பிடிப்பின் காலம் அசோகர் காலத்திற்கு முன்னதாக இல்லையே,பிறகு எப்படி இந்தியா முழுதும் எழுத்து முறை தந்தவன் தமிழன் என சொல்ல முடியும்.
தமிழ் தொண்மையானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .தொண்மையானதாக இல்லையெனில் செம்மொழி ஆக முடியுமா!
பதிவிற்கு நன்றி! திராவிட மொழிகளின் மூல வடிவம் பிராமி என்பது போலத்தான் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் எழுதிவைத்துள்ளனர்.
1:37 AM, May 17, 2006சசி,
1:48 AM, May 17, 2006நல்ல அருமையான பதிவு. "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என ஒவ்வொரு தமிழனும், தமிழிச்சியும் பெருமைப் பட வேண்டும். அதே நேரம் , எம் முன்னோர்கள் எம் மொழியைக் காத்தது போல் , எம் மொழியை அழிய விடாது காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் , தமிழிச்சிக்கும் உண்டு.
பி.கு:- "சசியின் டைரி" என இருக்கும் தங்கள் தளத்தின் தலைப்பை, 'சசியின் நாட்குறிப்பு' என்று மாற்றினால் இன்னும் அழகாக இருக்கும் என நினைக்கிறேன். தயவு செய்து முடிந்தால் மாற்றப் பாருங்களேன்!
அன்புடன் சசிக்கு, அருமையான தகவல்கள். முதலில் தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டிய தகவல்.
8:30 AM, May 17, 2006தொடருங்கள். வாழ்த்துகள்
http://aaivuthamizh.blogspot.com
சசி
8:42 AM, May 17, 2006நல்ல பதிவு, எளிமையாகவும் இருந்தது.
வெற்றி சொன்னது போல, நாட்குறிப்பு என்று மாற்றலாமே?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
சிறு வயதில் எங்கள் தாத்தா புராதன கோயில்களுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பழங்கால கல்வெட்டுகளில் உள்ள வித்தியாசமான எழுத்துக்களை
9:32 AM, May 17, 2006படித்துக்காட்டியது நினைவுக்கு வருகிறது.செந்தமிழ் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்!!!!!.
அன்புடன்,
துபாய் ராஜா.
பதிவுக்கு நன்றி சசி. தமிழ் மொழி வரலாறு பற்றிய ஆராய்ச்சி காய்தல், உவத்தல் இன்றி செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
12:30 PM, May 17, 2006அநேகருக்குப் போய்ச் சேர வேண்டிய தகவல்கள். அதற்கு இந்த நல்ல கட்டுரை உதவட்டும்.
10:55 PM, May 17, 2006ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மொழியின் வரலாற்றையும் அதன் எழுத்துருவின் (script) வரலாற்றையும் தனித்தனியே நோக்கும் அணுகுமுறை வேண்டும். மொழிக் குடும்பங்கள் (Groups) வேறுபட்டாலும், எழுத்துருக்களின் வரலாற்றைப் பொறுத்த வரையில் (மூலம் தெற்கா, வடக்கா அல்லது மத்திய கிழக்கு ஆசிய நாடா என்ற விவாதம் இருந்தாலும்) அனைத்து இந்திய மொழிகளின் (உருது போன்ற மொழிகளைத் தவிர்த்து) எழுத்துருக்களின் வரலாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே தோன்றுகின்றது.
--குமார் குமரப்பன்
Kal Thondrri mann thonnra NOT Kal Thondra Mann Thondra.
9:42 AM, May 18, 2006You are missing something here.
Madhu
சசி,
2:25 PM, May 18, 2006என் மனதில் தோன்றிய எண்ணம் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
//தமிழ் என்று கூக்குரலிட்டு அரியணை ஏறிய அரசாங்கங்கள் கூட தமிழ் குறித்த ஆய்வுகளுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்ததில்லை. பல வரலாற்று ஆய்வாளர்கள் தங்களின் தனிப்பட்ட சேமிப்புகளை கூட வரலாற்று ஆய்வுகளுக்காக இழந்துள்ளனர். //
சசி, இப்படி ஆய்வுகள் செய்யும் ஆய்வாளர்களுக்கு, நாங்கள் , குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஆவலர்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாகச் சேர்த்து ($10 or $20 etc) அன்பளிப்புச் செய்தால் என்ன? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வெற்றி,
8:43 PM, May 18, 2006வரலாறு.காம் இணைய இதழ் நடத்திக் கொண்டிருக்கும் நண்பர்கள் ஏற்கனவே டாக்டர் கலைக்கோவன் அவர்களின் வரலாற்று இதழ்கள் வெளிவர இவ்வாறு உதவி செய்கிறார்கள்.
இது நல்ல யோசனை தான்.
அது போலவே இருக்கின்ற வரலாற்று தடங்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஒரு கூட்டு முயற்சி மேற்கொள்ளலாம் என்பது என் எண்ணம். பல இடங்களில் பல வரலாற்று தடங்கள் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. இதனை காக்கும் அக்கறை அரசுக்கு இல்லை.
இந் நிலையில் ஆர்வம் உள்ள பலரை ஒன்று சேர்ந்து இதனை காக்கும் முயற்சிகளை மேற்க்கொள்ளலாம். அது அடுத்த சில தலைமுறைகளுக்காவது இந்த வரலாற்று சின்னங்கள் சேதமடையாமல் பாதுகாக்க உதவும்
ஆர்வமுள்ளவர்கள் திரண்டால் நிச்சயமாக இதனைச் செய்ய முடியும்
//இந் நிலையில் ஆர்வம் உள்ள பலரை ஒன்று சேர்ந்து இதனை காக்கும் முயற்சிகளை மேற்க்கொள்ளலாம். அது அடுத்த சில தலைமுறைகளுக்காவது இந்த வரலாற்று சின்னங்கள் சேதமடையாமல் பாதுகாக்க உதவும்
11:07 AM, May 19, 2006ஆர்வமுள்ளவர்கள் திரண்டால் நிச்சயமாக இதனைச் செய்ய முடியும் //
சசி, இது பற்றி விளக்கமாக ஓர் தனிப்பதிவு போட்டால் பலர் அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கும். உங்களுக்கு ஆய்வு செய்பவர்களுடன் தொடர்பிருந்தால் அவர்களுடன் பேசி உங்கள் தலைமையில் நாம் இணைந்து இவ் ஆய்வாளர்களுக்கு உதவலாம் என நினைக்கிறேன்.
வெற்றி,
1:12 AM, May 20, 2006உங்கள் மின்னஞ்சலையோ, தொலைபேசி எண்ணையோ எனக்கு அனுப்ப முடியுமா ?
thamizhsasi@gmail.com
மிக நல்ல பதிவு. உங்களுக்கு ஒரு (+) குத்து.
8:07 AM, May 22, 2006தங்கமணி சொன்னதை நானும் வழிமொழிகிறேன். காய்தல் உவத்தல் இன்றி தமிழ்மொழியின் வரலாறும் தமிழ்ப்பண்பாட்டின் வரலாறும் ஆராயப் படவேண்டும். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் தொடங்கலாம். வடமொழி நூல்கள் ஆராயப்பட்ட அளவுக்கு தமிழிலக்கியங்கள் ஆராயப்படவில்லை என்று தான் நினைக்கிறேன்; தமிழிலக்கிய ஆய்வு நூற்கள் சில போன நூற்றாண்டு வெளிவந்திருக்கின்றன; ஆனால் அவை பெரும்பான்மையானவர்களுக்குத் தெரியவில்லை. அது போன்ற ஆராய்ச்சி நூற்களை மறுபதிவுகள் செய்தும், இணையத்தில் ஏற்றியும் அவை மக்களிடையே பரவும் வகை செய்யல் வேண்டும். அப்போது தான் நம் வரலாறு நம் நூற்களில் இருந்து தெரியும்; அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை வைத்து நம்மை நாம் மதிப்பிடுவதும் அவர்கள் மேல் வெறுப்பு கொள்வதும் குறையும்.
12:32 PM, May 22, 2006அதற்குரிய செயலாக்கத்திற்கு வெற்றி சொன்ன வழியை வழிமொழிகிறேன். சசி. நானும் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். என்னையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எழுத்துருக்கள் தொடர்பான கட்டுரை ஒன்றை தொடர்வதற்கு கூகிளில் தேடியப் போது உங்களின் தளத்திற்கு வந்தேன்.
5:02 AM, September 07, 2008உண்மையில் மெய்மறந்துப் போனேன்.
சிறந்தப் பதிவு.
இன்றும் சிந்து சமவெளியில்
7:27 AM, September 14, 2011ஒன்று - அசி
இரண்டு-இரு
மூன்று- முசி
என்று எண் வழக்குகள் உண்டு.
நீ,நான் ஆகியவையும் உண்டு
Post a Comment