Thursday, May 18, 2006

நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு

என்னுடைய முந்தையப் பதிவான "தன்னிகரில்லாத தமிழ்" பதிவில் தமிழின் மூல வடிவம் பிராமி எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அது சரியான தகவல் அல்ல, தமிழி தான் என செல்வராஜ் அப் பதிவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

என்னுடைய அப்பதிவின் திருத்தப்பட்ட பதிவு இம் மாத வரலாறு.காம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அப் பதிவில் சில திருத்தங்கள் செய்து, மேலும் சில தகவல்களையும் சேர்த்த நண்பர் கமலக்கண்ணனுக்கு என் நன்றி

இந்த நூற்றாண்டின் இணையற்ற தொல்லியல் கண்டுபிடிப்பான மயிலாடுதுறை கண்டுபிடிப்பு குறித்து இந்து தவிர பிற ஊடகங்கள் எதிலும் அதிகம் எழுதப்படவில்லை.
அக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்து இம் மாத வரலாறு.காம் இணைய இதழில் எழுதப்பட்டுள்ளது. அக் கட்டுரையை இங்கு பதிகிறேன். வரலாறு இணைய இதழுக்கு நன்றி

தொல்லியல் இமயம் என்று கருதப்படும் முதுபெரும் வரலாற்றறிஞர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களே "Discovery of the century" என்று இக்கண்டுபிடிப்பைக் குறிப்பிட்டார் என்றால் இதன் முக்கியத்துவத்தை வாசகர்கள் நன்கு அறிந்து கொள்ளலாம். இந்து நாளேடு இது தொடர்பான செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட்டுப் பெருமை கொண்டது. வரலாற்றுச் செய்திகளுக்கு அத்துணை முக்கியத்துவம் தராத ஜூனியர் விகடன் முதலான தமிழ்ப்பத்திரிக்கைகளும் இதுபற்றிக் கட்டுரைகள் வெளியிட்டன. நமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஹிந்துவைத் தவிர பல இந்திய-தென்னக நாளிதழ்கள் இவ்வரிய கண்டுபிடிப்பை முழுமையாக இருட்டடிப்புச் செய்து அதில் இன்பமடைந்தன. இது ஏதோ தமிழகத்துக்கு மட்டுமே உரிய செய்தி என்று அவை அறியாமையினால் நினைத்துக்கொண்டன போலும் !

வரலாறு டாட் காம் வாசகர்களுக்காக இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு பதிவு செய்கிறோம்.

கண்டுபிடிக்கப்பட்ட தடயத்தைப் பற்றிப் பேசுமுன் ஒரு சிறிய வரலாற்றுப் பின்னணி.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்து சமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானவை. ஏறக்குறைய கிமு 3000 - 2500 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிந்துவெளி எழுத்துக்களை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்த டாக்டர் ஆஸ்கோ பர்போலா (Asko parpola) மற்றும் திரு ஐராவதம் மகாதேவன் முதலான அறிஞர்கள் இது தமிழின் தொன்மையான வடிவமாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். என்றாலும் இதனை ஒரு ஊகமாக வெளியிடமுடிந்ததே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்க சான்றுகளில்லை.

சிந்துவெளிக்குப் பிறகு இந்திய எழுத்துத் தடயங்களில் ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது. நால்வேதங்களும் உபநிடதங்களும் இக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருந்தாலும் அவை எழுத்து வடிவம் பெறவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வேதங்களை சுருதி - ஸ்மிருதி என்று குறிப்பிடுவது வழக்கம். "வேதங்கள் 18ம் நூற்றாண்டுவரைகூட எழுத்து வடிவம் பெறவில்லை" என்று கூறப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக இன்றுவரை வாய்மொழியாகவே வேதம் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது.

சிந்துவெளிக்குப்பிறகு இந்தியாவல் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுச் சாசனம் அசோகரின் சாசனமாகும். இந்த எழுத்து வடிவங்களை பிராம்மி என்று குறிப்பிடுவார்கள். அசோகரின் கல்வெட்டே மிகத் தொன்மையானது என்பதால் பிராம்மியே இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தாய் என்பதான ஒரு பிரமை உண்டாகிவிட்டது. வரலாற்றறிஞர்களும் இதனை ஒப்புக்கொண்டு இதனைப் பின்புலமாகக் கொண்டே ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தனர்.

இதே அசோகர் காலத்தையொட்டி தமிழ் நாட்டிலும் பல கல்வெட்டுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை முற்காலத் தமிழ் எழுத்துக்களாகும். இவற்றுக்கும் பிராம்மிக்கும் உள்ள தொடர்ப்பைக் கருத்தில் கொண்டு தமிழ் எழுத்து வடிவமே பிராம்மியிலுருந்துதான் உருவானது என்னும் கருத்து ஏறக்குறைய நாற்பதாண்¡டு காலமாக நிலைபெற்றுவிட்டது. பிராம்மியிலிருந்து கிளர்ந்த எழுத்து வடிவம் ஆதலின் இவ்வெழுத்துக்களை தமிழ் பிராம்மி என்று குறிப்பிடும் அளவிற்கு தமிழின் பிராம்மி சார்பு குறிப்பிடப்பட்டது.

தமிழின் மிகத் தொன்மையான இலக்கியப் பாரம்பரியத்தை நினைவில் கொள்ளாமலே மேற்கூறிய தமிழ் பிராம்மி பற்றிய கருத்துக்கள் ஆழமாக வேரூன்றப்பட்டன.

தமிழகத்தின் மற்றொரு தொல்லியல் இமயம் டாக்டர் சுப்பராயலுவின் தலைமையில் நடந்த கொடுமணல் ஆய்விலும் அழகன்குளம் ஆய்விலும் கிடைத்த சில தடயங்கள் தமிழின் எழுத்து வடிவம் பிராம்மிக்கு முற்பட்டது என்பதைச் சுட்டுவதாக அமைந்திருந்தது. தமிழகத்தின் ஆய்வாளர்களில் மூத்தவர்கள் சிலர் கருத்தரங்கங்களில் இதுபற்றிய கருத்தை முன்வைத்தும் இதனை அதிகம் கண்டுகொள்வாரில்லை.

எத்தனைதான் மண்ணில் மூடி மறைத்தாலும் உண்மைக்கென்று ஒரு தார்மீக சக்தி உண்டல்லவா ? அந்த உண்மை சில வருடங்களுக்கு முன் நடந்த மாங்குளம் மற்றும் கொடுமணல் ஆய்வில் முதன் முதலில் தலைகாட்டியது. இதற்கடுத்ததாக சென்ற மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற் கல்வெட்டுக்கள் தமிழின் எழுத்து வடிவமே இந்தியாவில் மிகத் தொன்மையானது என்று ஆழமாகவும் அறுதியிட்டும் அறிஞர்கள் கூறுவதற்கு அரணாக அமைந்தது. இதனைப் பற்றிய மிக விரிவான செய்திகளை சென்ற வரலாறு இதழில் பெருமிதத்துடன் வெளியிட்டோம். இவ்வெழுத்துக்களை தமிழ் பிராம்மி என்று குறிப்பிடாமல் தமிழி என்னும் பெயரால் குறிப்பிட ஆரம்பித்துள்ளனர் அறிஞர்கள்.

இன்னும் ஒரே ஒரு கண்ணிதான் மிச்சமிருந்தது.

அது என்னவெனில் இந்தியாவின் ஆகத் தொன்மையான சிந்துவெளி எழுத்துக்களுக்கும் தொன்மைத் தமிழி எழுத்துக்களுக்கும் உள்ளதான தொடர்பாகும். இது ஏன் முக்கியமானது எனில் தமிழி தனித்துத் தமிழ்நாட்டில் வளர்ந்த எழுத்து வடிவமா அல்லது சிந்து சமவெளியில் எழுதப்பட்டதே தமிழின் மிக முற்பட்ட வடிவம்தானா என்பது இந்தத் தொடர்பைப் புரிந்துகொண்டால்தான் விளங்கும்.

நாம் "இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு" என்று குறிப்பிடும் வரலாற்றுத் தடயமானது இந்த முக்கியக் கண்ணியை முன்வைக்கிறது,

தென்தமிழ் நாட்டில் மயிலாடுதுறைக்கருகே செம்பியன் கண்டியூர் என்கிற இடத்தில் பள்ளி ஆசிரியர் திரு சண்முகநாதன் தனது தோட்டத்தில் குழிவெட்ட முற்படுகையில் இந்த முற்காலக் கற்கருவியைக் கண்டறிந்தார். இதில் சில எழுத்து வடிவங்களைக் கண்ட அவர் தனது நண்பருக்கு இதனைக் கொடுக்க, உரிய கரங்களை இது சென்றடைந்து இதன் மகத்துவம் உலகிற்கு அறிமுகமானது.

புதிய கற்காலத்தைச் (Neolithic - 4500 BC to 2000 BC) சேர்ந்த இக் கற்கருவி சிந்து வெளி எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதனை மிக அரிய தடயமாக்கிக் காட்டுகிறது. ஐராவதம் தனது ஆய்வு வழி இந்த எழுத்துக்களை படித்து வெளியிட்டுள்ளார். அது தொடர்பான செய்தியை இந்த மாத Links of the Month பகுதியில் வெளியிட்டுள்ளோம்.

இக்கண்டுபிடிப்பின் மூலம் -

1. சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகம் வரை பரவியிருந்தன என்பது நிலைநாட்டப்பட்டுவிட்டது

2. தமிழின் எழுத்து வடிவமான தமிழிக்கும் சிந்துவெளி எழுத்துக்களுக்கும் இருக்கும் நெருக்கம் நிலைபெறுகிறது

3. சிந்துவெளி எழுத்துக்கள் தமிழாக இருந்திருக்கலாம் என்னும் அறிஞர்களின் ஊகம் சரியானதே என்பதற்கு இது ஒரு முக்கியத் தடயமாகும்

4. சிந்து வெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வுகளை பண்டைய தமிழக எழுத்துக்களை பின்புலமாக வைத்துத் தொடர்வதற்கு வழியேற்பட்டுள்ளது

ஹீராஸ் பாதிரியார் முதல் ஐராவதம் மகாதேவன் வரையிலான அறிஞர்கள் சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே என மொழிந்த கூற்று இப்போது ஆதாரபூர்வமான உண்மையாக நிலைபெறுவதற்கு வழியேற்பட்டுள்ளது. தமிழியின் பின்புலத்தில் சிந்துவெளி எழுத்துக்கள் படிக்கப்படும் நாள் அதிகத் தொலைவிலில்லை.

இக்கண்டுபிடிப்பு உலகத்தை சரியான முறையில் சென்றடையக் காரணமான திரு சண்முகநாதனையும் தொல்லியல்துறை நண்பர்களையும் ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களையும் வரலாறு டாட் காம் மின்னிதழ் வாழ்த்தி மகிழ்கிறது. இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இந்திய மக்களுக்கு சரியானபடி சேர்க்கத் தவறிய நாளிதழ்களுக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

3 மறுமொழிகள்:

Sivabalan said...

மிக அருமையான பதிவு!!

நல்ல செய்தி!

நன்றி, சசி!!

10:32 PM, May 18, 2006
Gurusamy Thangavel said...

மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடிய பதிவு. நன்றி சசி.

2:31 AM, May 19, 2006
வசந்தன்(Vasanthan) said...

முக்கியமான கட்டுரை.
வெளியிட்டதுக்கு நன்றி.

7:18 PM, May 29, 2006