தன்னந்தனியாக "ஜெ"

தன்னந்தனியாக போர்க்களத்திற்கு சென்று சாதனைப் புரிந்து வந்திருக்கும் "ஜெ"வின் புகழாரங்கள் பல பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்பட்டு வருகிறது. எதிரிகள் நிறைந்த போர்க்களத்திற்கு சென்று பலமான ஆயுதங்களை எதிர்கொண்டு இன்று அவர் "சாதனைச் செல்வியாக" மாறியிருக்கிறார். அவர் ஆற்றிய ஜனநாயகக் கடமையை தமிழகமே இன்று மெய்சிலிர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இனி அவருடைய "தைரியத்தை" மெச்சி பாராட்டும், புகழாரமும் "சில" அரசியல் விமர்சகர்களிடம் இருந்து வாசிக்கப்படும்.

இந்தப் புகழாரங்களின் மத்தியில் சட்டசபையில் அதிமுகவினர் செய்த ரகளை மறைக்கப்பட்டு விடும். சில நாட்களுக்கு முன்பு வரை தனக்கு பாதுகாப்பு இல்லாத இடம் எனக் கூறிய ஜெயலலிதா அதே இடத்திற்குச் சென்றிருக்கிறார். அவரை அங்கு செல்ல தூண்டியது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டதா அல்லது அவர்கள் செய்த ரகளையை மறைப்பதற்கான முயற்சியா, அல்லது பிற எல்லாவற்றையும் மழுங்கடித்து தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியா என்ற கேள்விகள் எழுகின்றன.

அவருடைய "புதிய ஜனநாயக உணர்வு" பலருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், அது மட்டுமே வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ஊடகங்களின் சூழ்நிலையில் அந்த "புதிய உணர்வு" பாராட்டுதலுக்குரியதா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

சட்டசபைக்குச் செல்வதை தவிர ஒரு எம்.எல்.ஏ வுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது ? சட்டசபைக்கு செல்வதற்கு தானே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ?

இன்று ஊடகங்கள் வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் சட்டசபை நிகழ்ச்சிகள் படமாக்கப்படும் சூழலில் ஒரு டிவியில் ஒரு மாதிரியும், மற்றொரு டிவியில் வேறு மாதிரி காண்பித்தாலும் இவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் பல நேரங்களில் வெளிப்பட்டு விடுகின்றன. அந்த வகையில் ஜெயலலிதா கேட்ட கேள்விகளை மறைத்த சன் டிவி, அதிமுகவின்ர் செய்த ரகளையை மறைத்த ஜெயா டிவி என இரண்டு டிவியை பார்த்தாலும் சில விடயங்கள் நமக்கு தெளிவாகவே தெரிகின்றன.

பாரளுமன்ற கூட்டங்களில் மட்டுமே நாம் பார்த்த ரகளையை இனி சட்டமன்றத்திலும் பார்க்கலாம் என்ற வகையில் தான் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆனால் 15ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போன்று கைகலப்பு, மைக் பிடுங்குதல் என அதிமுகவினரும், காங்கிரசும் செய்த ரகளை அதிமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தி "கலைஞரை அடிக்க முனைந்ததாக" ஒரு அனுதாபம் உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் ஜெயலலிதா அந்த அனுதாபத்தை முறியடிக்க, அதிமுகவினர் மீது எழுந்த அதிருப்தியை மறைக்க சட்டசபைக்கு செல்வதென்ற அஸ்திரத்தை எடுத்திருக்கிறார். இதனால் அவரது "ஜனநாயக கடமை உணர்வுக்கு" அதிக விளம்பரம் கிடைத்திருக்கிறது. இப்பொழுது அந்த விளம்பரத்தை தக்க வைக்க எதிர்கட்சி தலைவராகவும் மாறிவிட்டார்.

இது ஒரு புறம் இருக்க ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காமல் நக்கலாகவும், நையாண்டியாகவும் பேசி பிரச்சனையை திசை திருப்பிய திமுக அமைச்சர்களின் பிரச்சனைகள் குறித்த "அறிவின்மையும்" வெளிப்பட்டு இருக்கிறது. மத மாற்ற தடுப்புச் சட்டம் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டு விட்டது. அவ்வாறு இருக்க திமுக அரசு இந்தச் சட்டத்தை திரும்பப் பெறுவதாக எப்படி கூற முடியும் என்பது குறித்த குழப்பம் இருந்தது. ஜெயலலிதா சட்டசபையில் இந்தப் பிரச்சனையை எழுப்பிய பொழுது தான் அது குறித்து தெளிவாக புரிந்தது. திமுக அரசு மேற்கொள்ளும் இது போன்ற "ஸ்டண்ட்" நடவடிக்கைகள் அவசியமற்றவை. இவை மலிவான விளம்பர உத்திகள் என்பதை தவிர இதன் மூலம் எந்த ஒரு உருப்படியான விடயத்தையும் சாதிக்க இயலாது.

ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் பட்சத்தில், ஆக்கப்பூர்வமான விவாதக் களமாக சட்டசபை மாறும் பட்சத்தில் ஆளுங்கட்சியை எப்படி ஒழுங்காக செயல்படவைக்க முடியும் என்பதை ஜெயலலிதா வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த காலங்களில் தமிழக சட்டசபை இவ்வாறு செயல்பட்டிருக்கிறது.

ஆனால் இது ஏதோ வேறு எங்குமே நடக்காத புதிய விடயங்கள் என்பன போன்று வெளியிடப்படும் செய்திகள் தான் நகைச்சுவைக்குரியது. ஜெயலலிதா எந்தப் புதிய சாதனையையும் நிகழ்த்தி விட வில்லை. ஜனநாயகக் கடமைகளுக்கு தமிழகத்தில் மறுவாழ்வு கொடுத்து விடவில்லை. அரசியல் சாசனம் ஒரு எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்று கூறியிருப்பதற்கு நேர்மாறாக இதுவரையில் ஜெயலலிதா, கருணாநிதி என அனைவருமே செயல்பட்டு வந்திருக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் தற்பொழுது அரசியல் சாசனம் ஒரு எதிர்கட்சிக்கு நிர்ணயம் செய்துள்ள பல கடமைகளில் ஒரு "சாதாரண கடமையை" தான் ஜெயலலிதா நிறைவேற்றி இருக்கிறார்.

கடமையை செய்வதற்கு பாராட்டும் "வித்தியாசமான" மனநிலை இந்தியர்களிடமும், தமிழர்களிடமுமே நிலவிக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திற்கு சென்று கடமையை நிறைவேற்றுவது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை. அதற்காகத் தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவர் அதனைச் சரியாக செய்யவில்லையெனில் குற்றம்சாட்டலாம். அதே நேரத்தில் அந்தக் கடமையை அவர் செய்திருக்கிறார் என்பதற்காக பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு எம்.எல்.ஏவும் "தன்னந்தனியான" மனநிலையுடன் சென்று தங்கள் தொகுதி குறித்து, தங்கள் தொகுதி மக்கள் குறித்து பேச வேண்டுமே தவிர, "குழுவுடன்" சென்று "குஸ்தி" போட வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றம் அதற்கான இடமும் அல்ல.