சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 1
ஈழம் குறித்தப் பதிவினை சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, இவ்வாறு கூறியிருந்தேன்.
உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளார்
இரு நாடுகளின் ராஜதந்திர யுத்தம் பற்றி அந்தப் பதிவில் எழுதியிருந்தேன். இம் முறையும் இந்த ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோற்று தான் உள்ளனர். போர்க் களத்திற்கும், சமாதானக் கால செயல்பாடுகளுக்கும் இடையே இருக்கும் பெருத்த வேறுபாட்டினை இந்த நீண்ட சமாதானக் காலத்தில் (மறைமுக போர்க் காலம் என்று தான் சொல்ல வேண்டும்) புலிகள் உணர்ந்திருப்பார்கள். போர்க் காலங்களை விட இந்தச் சமாதானக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு நிறைய பின்னடைவுகள் நேர்திருக்கின்றன என்று சொல்லலாம்.
சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கிய காலக்கட்டத்தை நோக்கிப் பின்நோக்கி செல்லும் பொழுது சிறீலங்கா அரசு எந்த நிலையில் இருந்தது என்பதையும், தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பதையும் கவனிக்க முடியும்.
யானையிறவு போரில் அரசு படைகள் தோற்று விட்ட சூழலில் தான் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கியது. இராணுவ பலத்தில் புலிகளின் கை ஓங்கியிருந்தது. சிறீலங்கா அரசின் பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்து இருந்தது. மிகவும் வலுவாக 7% பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு காலத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சிறீலங்கா, 2001ல் வெறும் 1.5% பொருளாதார வளர்ச்சி என்ற நிலைக்குச் சரிவடைந்து மிகக் கடுமையான நிதி நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இருந்தது. திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வெளிநாட்டுக் கடன், மிகக் குறைந்த வருவாய், எந்த நலத்திட்டத்தையும் செய்ய முடியாத நிதி நிலை என ஒரு Bankrupt நிலைக்கு இலங்கைப் பொருளாதாரம் சென்று கொண்டிருந்தது. அன்றைய சூழலில் போர் தொடர்ந்திருந்தால் இன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கும். இலங்கை சீர்குலைந்து போய் இருக்கலாம். ( இதற்கு நேர்மாறாக உலக நாடுகள் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம் என்று நம்புவதற்கும் இடமுள்ளது. ஆனாலும் இவை யூகங்களே ).
2001-2005க்கு இடையேயான சமாதானக் காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் ஓரளவிற்கு தன்னுடைய ப்ழைய நிலையை மீட்டு எடுத்து விட்டது. கடந்த ஆண்டின் நிலவரப் படி சுமார் 5% பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடைந்து இருக்கிறது. இராணுவ ரீதியிலும், ஆயுத தளவாடங்களிலும் அரசின் பலம் அதிகரித்து உள்ளது. 2005ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 8% அதிகமாக இரணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்களைத் தவிர இராணுவ வீரர்களின் பலம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக 2001ல் 10,000மாக இருந்த விமானப் படை கடந்த ஆண்டு நிலவரப் படி சுமார் 18,000மாக உயர்ந்துள்ளது.
புலிகளின் இலகு ரக விமானங்கள் குறித்து எழுந்த விமர்சனம் அளவுக்கு இலங்கை அரசின் விமானப் படையின் பலமோ, பலமாக அதிகரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலம் குறித்தோ எதுவுமே எழுதப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இலங்கை அரசு மேற்கொண்ட சில strategic நடவடிக்கைகள் புலிகளின் பலத்தை வெகுவாக குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக இரண்டு நடவடிக்கைகளைச் சொல்லலாம்
- புலிகளின் அதே கொரில்லா உத்தியைப் பின்பற்றி புலிகளை தாக்குவது. இதனைச் செய்ய கருணா பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது.
கருணா பிரச்சனை மூலம் புலிகளை வடக்கு, கிழக்கு எனப் பிளவுப் படுத்தலாம் என்பதாக முதலில் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து, கருணா "இந்தியாவிலோ", வேறு ஏதோ "ஒரு நாட்டிலோ" பாதுகாப்பாக தஞ்சம் அடைந்து விட்டாலும் அந்தப் பிரச்சனையை அப்படியே இலங்கையின் உளவுப் பிரிவு தக்கவைத்துக் கொண்டது.
கருணா என்ற கவசத்தை அணிந்து புலிகளை திடீரென்று தாக்குவது என்ற அரசு உளவுப் பிரிவின் திட்டம் புலிகளை கடுமையாகப் பாதித்து இருக்கிறது. புலிகளின் முக்கியமான பிரமுகர்கள், இராணுவ தளபதிகள் இவர்களைக் குறிவைத்து நடந்து வரும் இந்தத் தாக்குதல் தமிழ் ஈழப் போராட்டத்தின் போர் சூழ்நிலையில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்சல்யன் தொடங்கி, கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட ரமணன் வரை புலிகளின் பல முக்கியமான தளபதிகள் இந்த சமாதானக் காலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இன்று ஒரு அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை புலிகளும் எதிர்கொண்டு இருக்கின்றனர். ஏனெனில் அவர்களும் ஒரு தனி அரசாங்கத்தை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கொரில்லா நிலையில் இருந்து மாறுதல் பெற்று ஒரு தனி அரசாங்கத்தை அவர்கள் நிறுவி நடத்தி வரும் சூழ்நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தான் இலங்கையில் தற்பொழுது தொடர்ந்து நடந்து வரும் சண்டைகளுக்கு முக்கிய காரணம்.
- மற்றொரு விடயம், புலிகளின் சார்பு நிலையில் இருந்த சில சிறந்த சிந்தனையாளர்களை அகற்றுவது, அதன் மூலம் அங்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவது.
சமாதானக் காலத்தில், பேச்சுவார்த்தை போன்ற சூழ்நிலை நிலவும் பொழுது இந்தப் பிரச்சனையை சிறந்த வகையில் வெளிப்படுத்தும் சிறந்த சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பிற சமூகத்தினரும் மதிக்கும் எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் முக்கியமான ஆயுதம் என்றே அறியப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு முகத்தை தமிழ் ஈழ தமிழ் சமுதாயத்தில் வெளிப்படுத்தியவர் "தாரகி" என்று அழைக்கப்படும் தருமரத்தினம் சிவராம்.
தாரகி சிறந்தப் பத்திரிக்கையாளர், இராணுவ ஆய்வாளர் மற்றும் சிந்தனையாளர். இவரை கொழும்புவில் "அதிகப் பாதுகாப்பு மிக்கப் பகுதியாக" அறியப்பட்ட ஒரு பகுதியில் "சிறீலங்கா அரசு உளவுப்பிரிவினர்" கொன்றனர். இதன் மூலம் தமிழ் ஈழ சமுதாயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திய ஒரு சிறந்த சிந்தனையாளரை அகற்றி விட்டனர்.
சமீபத்தில் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட தினமும் கொல்லப்படும் எத்தனையோ அப்பாவி மக்கள், திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மாணவர்கள், ஜோசப் பரராஜசிங்கம், கொளசல்யன் தொடங்கி கடந்த மாதம் ரமணன் வரை சுட்டுகொல்லப்பட்ட சில முக்கியமான புலிகள் பிரமுகர்கள் எனப் பல "பயங்கரவாத" நடவடிக்கைகளை மேற்க்கொண்டிருந்த சிறீலங்கா அரசு மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் பலச் செயல்களும் இதையொட்டியே இருந்தன. லஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியங்களில் பயணம் செய்ய தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்தத் தடைக்கு நியாயமான காரணம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. படுகொலைகள் ஒரு பயங்கரவாதச் செயல் என்ற வகையில் புலிகளின் அரசியல் படுகொலைகள் கண்டனத்திற்குரியது.
அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.
"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது.
இந்தப் பிரச்சனைக்கு எத்தகைய தீர்வு தான் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
புகைந்துக் கொண்டிருந்த இந்தப் பிரச்சனை விஸ்ரூபம் எடுத்தது கடந்த ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றப் பிறகு தான். மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலத்தில் நிலவியச் சூழ்நிலை கவனிக்கத்தக்கது. புலிகள் "ஆதரவு", "எதிர்ப்பு" என்ற உணர்வுகளை விலக்கிப் பார்க்கும் பலருக்கும் அப்பொழுது நிலவிய சூழ்நிலை தெளிவாகப் புரியும்.
மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையில் நானும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு எழுதிய சூழ்நிலையிலும் தமிழ் ஈழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவே நான் நம்பினேன். முக்கியமான கட்டம் என்பது "தமிழீழம்" என்ற தனி நாட்டை நோக்கிய ஒரு முக்கியமான முன்னேற்றம், அல்லது சிறீலங்கா அரசு போர் நோக்கி நகரும் தீவிரம் இவை ஏதேனும் ஒன்று என்ற ரீதியில் தான் எனது பதிவில் அதனைக் குறிப்பிட்டிருந்தேன்.
அந்தக் காலக்கட்டத்தில் பல ஊடகங்களின் செய்தியை நோக்கினால், குறிப்பாக சிறீலங்காவில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" போன்ற ஆங்கில நாளிதழ்கள், சிறீலங்காவிற்கு வெளியே இருக்கும் சிறீலங்கா அரசு சார்பு ஏடுகளான "ஹிந்து" போன்ற நாளிதழ்களை கவனித்து வருபவர்களுக்கு இந் நிலை தெளிவாகப் புரிந்திருக்கும்.
புலிகளுக்கு உலக நாடுகள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் "புலிகள்" எதிர்ப்பாளர்களை கவலை கொள்ள வைத்திருந்தது. மஹிந்த ராஜபக்ஷ போன்ற சிங்கள இனவாத தலைவர்கள் பதவியேற்றிருக்கும் சூழ்நிலையில் புலிகளின் நிலைக்கு பலம் சேர்ந்திருந்தச் சூழலில்
தான் இந்தப் போக்கு தடம் மாறியது.
பல நாட்டு உளவு அமைப்புகள், Strategists போன்றவர்கள் இணைந்து அமைத்த வியூகத்தில் புலிகள் சிக்கிக் கொண்டனர். இன்று பல நாடுகளின் தடை நோக்கி அவர்கள் செல்ல காரணமாக அமைந்ததும் இந்த வியூகச் சிக்கல் தான். வழக்கம் போல தங்களுடைய வியூகத்தை தெளிவாக அமைக்காமலேயே, நிறுவனப்படுத்தப்பட்ட நாடு என்ற ஒரே முகமூடியைக் கொண்டு இந்தப் பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திக் கொண்டது.
முதலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த "தமிழ் தேசம்" என்பதை கேள்விக்குள்ளாக்குவது, புலிகள் அனைத்து தமிழ் மக்களுக்குமான பிரதிநிகள் அல்ல என்று நிலை நிறுத்துவது என்ற போக்கில் தான் அரசின் உத்தி இருந்தது. அதற்கு அவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரம் தான் "கருணா". "ஹிந்து" போன்ற சிறீலங்கா அரசு சார்பு ஊடகங்களில் "கிழக்கு மக்களின்" உரிமைகள் குறித்து தொடர்ந்து எழுதப்படுவதை இங்கே கவனிக்க வேண்டும்.
இவ்வாறு சிறீலங்கா அரசுக்கும், புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக் கொண்டவர்கள் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இருக்கும் நம்முடைய அப்பாவி தமிழ்ச் சகோதர/சகோதரிகள் என்பது தான் வேதனைப்படுத்தும் உண்மை
சிறீலங்கா அரசு விளையாட தொடங்கிய இந்த சதுரங்க ஆட்டத்தில் புலிகள் எடுத்த எதிர் நிலைப்பாடு குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்