சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 2

கடந்த மாதம் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமணன் மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் புலிகளின் முன்னரங்க நிலைகளை (Forward Defence Line) பார்வையிட்டுக் கொண்டிருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கும், அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையே சில நூறு மீட்டர் இடைவெளி மட்டுமே இருக்கும் அந்தப் பகுதியில் சிறீலங்கா அரசின் பலமான இராணுவ முகாமும், முன்னரங்க நிலைகளும் உள்ளன.

புலிகளின் பகுதிக்கும், இராணுவ நிலைகளுக்கும் இடையே இருக்கும் யாருக்கும் உரிமை இல்லாத பகுதியில் மறைந்திருந்து நடத்தப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதலில் கர்னல் ரமணன் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகளின் பகுதி மிகவும் பலமாக பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதும், இராணுவத்தின் உதவி இல்லாமல் இராணுவ முன்னரங்க நிலையில் இருந்து யாரும் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த முடியாது என்பதும் தெளிவான நிலைமை. இந்த தாக்குதலை சிறீலங்கா இராணுவத்தின் deep penetration unit தான் செய்திருப்பார்கள் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என கருணாப் பிரிவு கூறிக் கொண்டது. இராணுவம் சமாதானக் கால ஒப்பந்தத்தை மீறி இவ்வாறு செய்ததை விடுதலைப் புலிகளின் இரு குழுக்களிடையேயான சண்டையாக மாற்ற அரசு தொடர்ந்து செய்து வரும் தந்திரங்களின் ஒரு உதாரணம் தான் இந்தத் தாக்குதல்.

சமாதானக் காலக்கட்டத்தில் கருணா என்றப் பிரிவை உருவாக்கி இராணுவம் செய்து வரும் இத்தகைய தந்திரங்களை முறியடிக்க, உலகின் கவனத்தை இந்தப் பிரச்சனையின் பக்கம் திருப்ப புலிகள் அதே வகையான உத்தியினை கடைபிடிக்க தொடங்கினர். இராணுவத்திரை மக்கள் குழுக்கள் என்ற அமைப்பினர் மூலம் தாக்க தொடங்கினர். இராணுவம் மீதான இந்த தாக்குதலை நிகழ்த்த அவர்கள் உருவாக்கிய குழுக்கள் தான் மக்கள் குழுக்கள் என்றாலும் இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புலிகள் தெரிவித்தனர்.

ராஜபக்ஷ பதவியேற்றப் பிறகு குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி அவருக்கு இந்த மக்கள் குழுக்கள் மூலம் புலிகள் கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இதன் மூலம் சில முக்கிய விடயங்களை சாதிக்க புலிகள் எண்ணினர்.

  • ராஜபக்ஷ தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த அவகாசமும் வழங்காமல், இந்தப் பிரச்சனையை சர்வதேச அளவில் அதிக கவனத்தைப் பெற வைப்பது. அதன் மூலம் ராஜபக்ஷ மற்றும் சிங்கள இனவாதக் குழக்களின் பிரச்சனைகளையும், தெற்கில் இருக்கின்ற முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவது.
  • மக்கள் குழுக்கள் என்ற பெயரில் தொடுக்கப்படும் தாக்குதல் தங்களால் நடத்தப்படவில்லை என்று கூறிக்கொண்டு, இராணுவம் கருணா பெயரில் நடத்துவதற்கு பதில் தாக்குதல் தொடுப்பது.

மக்கள் குழுக்கள் நடத்திய தாக்குதலை நாங்கள் நடத்த வில்லை என்று புலிகள் கூறிக்கொண்டதை யாரும் நம்ப வில்லை. இந்த தாக்குதலுக்கு புலிகள் தான் ஆயுதங்கள் வழங்குகின்றனர் என்பதும், புலிகளின் சிலப் பிரிவு இதனை தொடுத்திருக்கலாம் என்பதாகவுமே அனைவருக்கும் தோன்றியது. உலக நாடுகளும் இந்த தாக்குதலுக்கு புலிகளையே கண்டனம் செய்தன. என்றாலும் இதன் மூலம் புலிகள் மீது நடந்து வரும் தாக்குதல் கருணாவால் நடத்தப்படவில்லை, இராணுவம் தான் செய்து கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. SLMM கூட இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் கருணாப் பிரிவு என்ற பெயரில் இராணுவம் செய்து கொண்டிருக்கும் தாக்குதல் தான் என்று குற்றம்சாட்டி இருந்தது.

புலிகளின் உள்பிரச்சனை எனக் கூறிக்கொண்டிருந்தமைக்கு மாறாக இதன் பிண்ணனியில் இருப்பது இராணுவம் தான் என்பதை உலகறிய வைத்ததில் புலிகளுக்கு நிச்சயம் வெற்றி தான். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் என சமாதானத்தில் அணுசரணையாளராக இருக்கும் அனைத்து நாடுகளுமே துணைப்படைகள் என்று கூறிக் கொண்டிருக்கும் பல ஆயுதக்குழக்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கின்றன. ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கூட புலிகளின் நிலைக்கு கணிசமான வெற்றி கிடைத்தது. இந்தப் பேச்சுவார்த்தையே சமாதானக் கால உடன்படிக்கைகளை பலப்படுத்துவது குறித்து தான் நடைபெற்றது. ஜெனிவா மாநாட்டின் முக்கிய தீர்மானமான "துணை ஆயுதக் குழுக்களை" அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானமே, புலிகளின் கோரிக்கையை ஒட்டியே இருந்ததை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

இது அனைத்துமே புலிகளின் ராஜதந்திர செயல்பாடுகள் சரியான தடத்திலேயே சென்று கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. அது மட்டுமில்லாமல் ராஜபக்ஷ போன்ற அனுபவம் இல்லாத ஒரு அரசியல்வாதி, ஜனாதிபதியாகிய பொழுது இத்தகைய சிக்கலான விடயத்தை பதவிக்கு வந்த உடனேயே எதிர்கொள்ள வேண்டி நேர்ந்த சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகவே புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். இந்தப் பிரச்சனைகளை சமாளிக்க ராஜபக்ஷ தடுமாறியதை தெளிவாக காண முடிந்தது.

ரனில் ஜனாதிபதியாகி இருந்தால் சமாதானத்திற்கு வாய்ப்பிருந்திருக்கும் என்பதான ஒரு கருத்து நிலவி வருகிறது. ரனில் பிரதமராக இருந்த பொழுது நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை, Co-chairs ஏற்படுத்தப்பட்டது குறித்து என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் புலிகளுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்ட ரனில் முயற்சி மேற்கொண்டிருந்தார். இதன் மூலம் புலிகளுக்கு ஒரு நெருக்கடியான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவரது திட்டம். அது மட்டுமில்லாமல் ரனில் வெற்றி பெற்றிருந்தால் சிறீலங்காவின் பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளில் ஒரு continuity இருந்திருக்கும். இது புலிகளுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். மாறாக ராஜபக்ஷ வெற்றி பெற்றப் பிறகு சிறீலங்கா அரசு மீண்டும் புதியதாக வெளியுறவு கொள்கைகளை புதுப்பிக்க வேண்டிய நிலைக்குச் சென்றிருந்தது. இதனால் சிறீலங்கா அரசுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு தேக்கம் நிலவியதை கவனிக்க வேண்டும்.

இவை தவிர சிறீலங்கா அரசு ராஜபக்ஷ தலைமையில் இருந்தாலும் சரி, ரனில் தலைமையில் இருந்தாலும் சரி சில விடயங்களில் (சிங்கள/புத்த இனவாத நிலைமையில்) பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சி செய்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சி செய்தாலும் சரி பொருளாதார, வெளியுறவு கொள்கைகளில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டதில்லை. இத்தகைய விடயங்களில் ஒரு தொடர்ச்சி இருக்கத் தான் செய்கிறது. அவ்வாறே பாக்கிஸ்தானில் முஷ்ரப் ஆட்சி செய்தாலும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்தாலும் சரி காஷ்மீர் போன்ற விடயங்களில் அங்கு நிலைப்பெற்றிருக்கும் ஒரு பொதுவான நிலையில் இருந்து பெரிய மாற்றத்தை காண முடியாது.

இந் நிலையில் ராஜபக்ஷவிற்கு பதிலாக ரனில் வந்திருந்தால் எப்படி ஒரு அரசாங்கத்தின் கொள்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு அதிக அதிகாரம் இருந்தாலும் தென்னிலங்கையில் இருக்கும் அரசியல் நிலைமைக்கு எதிராக ரனில் எதுவும் செய்திருக்க முடியாது. அதுவும் தவிர தென்னிலங்கையில் குறைவான ஆதரவை கொண்டிருக்கும் ரனில் எவ்வாறு தென்னிலங்கையில் இருக்கும் அரசியல் சக்திகளை புறக்கணித்து சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும் ? ரனில் வந்திருந்தால் இன்று வெளிக்கொணரப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதியின் "தென்னிலங்கை அரசியல் இனவாதம்" மறைக்கப்பட்டு ஒரு மிதவாத நிலை வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம். அந்த மிதவாத நிலைமையைக் கொண்டு இலங்கை பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வலுவடைந்திருக்கும். புலிகள் மேலும் சர்வதேச அளவில் பலவீனப்படுத்தப்பட்டிருப்பார்கள்.

இது தான் ராஜபக்ஷவை புலிகள் வெற்றி பெற வைத்ததன் மூலம் முக்கியமாக சாதித்தவை.

தென்னிலங்கையில் இருந்த சிங்கள இனவாதத்தையும், முரண்பாடுகளையும் ஓரளவிற்கு வெளிப்படுத்திய அதே நேரத்தில் தெற்கின் முரண்பாடுகளை முழுவதும் வெளிப்படுத்த புலிகளால் முடியவில்லை. இது புலிகளின் திட்டத்தினை முழுமை அடைய வைக்க வில்லை. அது மட்டுமில்லாமல் புலிகளின் நோக்கங்கள் அனைத்துமே இராணுவ அளவிலான திட்டமாக மட்டுமே இருந்தது.

புலிகளின் முக்கியமான தோல்வியாக நான் கருதுவது, அவர்கள் கூற நினைப்பதை ராஜதந்திர ரீதியில் கூறாமல் தொடர்ந்து இராணுவ வழியிலேயே கூற முற்பட்டது. இலங்கை அரசும் புலிகளின் தாக்குதலை தொடர்ந்து ஊக்குவித்து கொண்டே இருந்தது. சிறிய தாக்குதலாக மக்கள் குழுக்கள் என்பன போன்ற பெயரில் தொடர்ந்த தாக்குதல் பிறகு வெளிப்படையாக புலிகள், இராணுவம் என்பதாகச் சென்று விட்டது. இரு குழுக்களும் சமாதானக் கால உடன்படிக்கைகளை மீறி இருக்கிறார்கள் என்றாலும் புலிகள் இராணுவம் மீது தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக விளம்பரம் கிடைத்தது.

இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல் இறுதியில் புலிகள் கொழும்புவில் தற்கொலை தாக்குதல் தொடுக்க வழி செய்து விட்டது. இத்தகைய தாக்குதலை கூட அரசு எதிர்பார்த்திருக்க கூடும். அரசு ஒரு வகையில் அதனை தூண்டி விட்டது என்று சொல்லலாம். இது அரசின் நிலைக்கு வலுச்சேர்த்தது. இந்த தாக்குதலுக்குப் பிறகு புலிகளின் நிலை மீது சிறீலங்கா அரசு விமானத் தாக்குதலை தொடுத்தது. போர் மூளக் கூடும் என்ற அச்சத்தில் புலிகளுக்கு நெருக்கடி அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் சிறீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம், கப்பல் போக்குவரத்தின் கேந்திர முக்கியத்துவம் போன்றவற்றால் உலக நாடுகள் இலங்கை ஒரு அமைதியான நாடாக இருப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன. பனிப்போர் காலங்களில் இருந்த இராணுவ முக்கியத்துவம் தற்பொழுது அதே அளவிற்கு இல்லை (என்னுடைய முந்தையப் பதிவு). என்றாலும் தற்போதைய பொருளாதார வளர்ச்சி நிலையில் இருந்து இலங்கை தடம் மாறுவதை ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்பவில்லை. கடந்த வாரம் இலங்கை வந்திருந்த அமெரிக்கவின் வெளியுறவுச் செயலர் ரிசர்ட் பவுச்சர் "புலிகளின் கோரிக்கை நியாயமானது என்றாலும் அவர் கடைப்பிடிக்கும் வழிகள் தான் எங்களுக்கு பிரச்சனைக்குரியதாக இருக்கிறது" என்று தெரிவித்தார் (the US recognises the Tamils’ “legitimate desire … to govern themselves in their own homeland.” Furthermore, “they (Tigers) need to focus their vision on how to achieve their legitimate goals through a legitimate process of negotiation [rather than arms],” )

தமிழர்களின் இந்த நியாயமான கோரிக்கையை தென்னிலங்கையில் இருக்கிற சிங்கள இனவாத தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய தேர்தல் முழுக்கமாக கூட்டாச்சியை மறுதலித்த ராஜபக்ஷ, சில மாதங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில் கூட தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்ததை கவனிக்க வேண்டும். ராஜபக்ஷ மற்றும் சிங்கள இனவாதிகளின் இத்தகைய நிலையை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தான் புலிகள் ராஜபக்ஷவை வெற்றி பெற வைத்தனர். என்றாலும் அதற்கு பிறகு இந்த வழியில் இருந்து தடம்புரண்டது தான் தற்போதைய பின்னடைவுக்கு முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன்.

புலிகள் தங்களுடைய இராணுவ ரீதியிலான உத்திகளுடன் ராஜதந்திர ரீதியிலான உத்திகளையும் பிணைத்திருக்க வேண்டும். ஆனால் ராஜதந்திர ரீதியில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விட்டு இராணுவ ரீதியில் மட்டுமே அமைந்த அவர்களின் நோக்கம் உலகநாடுகளிடம் சரியான வகையிலான தக்கத்தை ஏற்படுத்த வில்லை. ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டிற்கு எதிராக போராடும் பொழுது, உலக நாடுகளின் கவனம் அந்தப் பிரச்சனையை நோக்கி திரும்பும் பொழுது, அந்தப் போராட்டத்தைச் சரியான வகையில் பல நாடுகளிடம் கொண்டுச் செல்லப் பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள்.

ஒரு நாட்டிற்குரிய தனி நிர்வாக அமைப்பை நிறுவியிருக்கும் புலிகள் ஒரு நாட்டின் முக்கியமான நிர்வாகப் பிரிவான வெளியுறவுப் பிரிவு, தூதரகங்கள் போன்றவற்றை சரியான வகையில் அமைக்க தவறி விட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். இங்கு நான் கூறும் வெளியுறவுப் பிரிவு, தூதரகங்கள் போன்றவை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைப் போன்ற பிற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிற நாடுகளுடனான உறவுகளைப் பராமரிக்க சிலச் சிறந்த அறிவுஞீவிகளைக் கொண்ட அமைப்புகள் வேண்டும் என்றே நான் குறிப்பிடுகிறேன். இதன் மூலம் பிற நாடுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பராமரிக்க தக்க ஒரு வழி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த அமைப்புகள் அரசுகளுடன் மட்டுமில்லாமல் பிற நாட்டு ஊடகங்களிலும் இந்தப் பிரச்சனையை கொண்டுச் செல்ல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் அமைப்புகளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ராஜதந்திர ரீயிலான உறவுகள் கடந்த காலங்களில் தேவைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த நீண்ட சமாதானக் காலத்தில் இவ்வாறு ஒரு அமைப்பின் தேவை நிச்சயம் இருக்கிறது. இவர்கள் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அவர்கள் பிற நாட்டு அரசாங்கம், ஊடகங்கள் போன்றவர்களுடன் உறவை பராமரிக்கத்தக்க "திறமையுள்ளவர்களாக" இருக்க வேண்டும். ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்கள் சில நாடுகளுடன் ஏற்படுத்தியிருக்கும் தொடர்புகள் ஒரு சிறந்த உதாரணம். என்றாலும் இது ஒரு சிலரால் செய்யக் கூடிய முயற்சி அல்ல. நிர்வாக ரீதியில் செய்யப்பட வேண்டிய முயற்சி.

இவ்வாறு செய்யும் பொழுது உலகத்தின் கவனத்தை இந்தப் பிரச்சனையின் பக்கம் திருப்ப தொடர்ச்சியான தாக்குதல் தேவைப்பட்டிருக்காது. ராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை மற்றும் இராணுவ ரீதியிலான அணுகுமுறை போன்றவற்றின் ஒரு கலவை இருந்திருக்கும்.

அது போல தற்பொழுது சர்வதேச மயமாகி விட்ட ஈழப் போராட்டத்தில் அரசியல் ரீதியிலான படுகொலைகள் பின்னடைவுகளை ஏற்படுத்துமே தவிர எந்த அனுகூலத்தையும் கொடுத்து விடாது.

(தொடரும்)