சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 3

புலிகளின் ராஜதந்திர உத்திகள் கடந்த இருபது ஆண்டுகளில் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது ? இன்று ஈழப் போராட்டம் சர்வதேச மயமாகி பல நாடுகளின் தடைகள் புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி வலுப்பெறுகிறது.

இதற்கு விடை தேடும் பொருட்டு என்னுடைய கருத்தாக எதனையும் முன்வைக்காமல் புலிகள் எவ்வாறு இந்தப் பிரச்சனையை கடந்த 20 ஆண்டுகளில் அணுகியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் இந்தப் பதிவினை எழுத முயன்றுள்ளேன்.

புலிகளின் உத்தி ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பிரச்சனையை படிப்படியாக அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் உந்துதல் மட்டுமே கொண்டு அமைந்திருந்தது. இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டுச் செல்ல புலிகள் தொடர்ந்து பல்வேறு வழிகளில் முனைந்தாலும் ஈழப் போரட்டத்தின் தனித்துவத்தையோ, இந்தப் போராட்டத்தை தீர்மானிக்கும் உரிமையையோ அவர்கள் யாருக்கும் விட்டுக்கொடுத்ததில்லை. ஈழப் போராட்டத்தின் எதிர்காலம், நிகழ்காலம் என்ற அனைத்தையும் தாங்கள் மட்டுமே தீர்மானிப்போம் என்பதை புலிகள் ஒவ்வொரு நிலையிலும் உறுதிச் செய்துள்ளார்கள். அது தவிர மாற்றுச் சக்திகள் இந்தப் போராட்டத்தின் போக்கினையோ, எதிர்காலத்தையோ தீர்மானிக்கும் ஒரு நிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் தங்களின் உத்தியை அதற்கேற்றவாறு மாற்றி மிகவும் dynamicஆக தங்களின் ராஜதந்திரங்களை அமைத்து தமிழ் ஈழப் போராட்டம் நீர்த்துப் போகாமல் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தாங்கள் கருதும் ஒரு முக்கியமான காலகட்டத்தை இன்று எட்டியும் இருக்கிறார்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்ற வாசகத்தை எந்த நிலையிலும் புலிகள் சமரசம் செய்து கொண்டதில்லை. அதற்கு காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன். பிரபாகரனைப் பற்றி முந்தைய ஒரு பதிவில் ஜெ.என்.தீக்க்ஷ்த் கூறியதை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

the character and personality of its leader V Prabhakaran who is disciplined, austere and passionately committed to the cause of Sri Lankan Tamils's liberation. Whatever he may be criticised for, it cannot be denied that the man has an inner fire and dedication and he is endowed with natural military abilities, both strategic and tactical. He has also proved that he is a keen observer of the nature of competitive and critical politics. He has proved his abilities in judging political events and his adroitness in responding to them.

இந்த வரிகளில் வெளிப்படும் பிரபாகரனின் குணாதிசயங்கள் தான் இன்று ஈழப் போராட்டத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் ஒவ்வெரு கட்டத்திலும் அதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் தன்னுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு தான் தனது ராஜதந்திர உத்திகளை பிரபாகரன் அமைத்துக் கொண்டுள்ளார். இந்த ராஜதந்திர உத்திகளில் சில தேர்ந்த இராணுவ, அரசியல் நடவடிக்கைகளும் உள்ளன. சில பயங்கரவாத படுகொலைகளும் உள்ளன.

1984ல் இந்தியா புலிகளுக்கு ஆயுதங்களையும், உதவிகளையும் கொடுத்து கொண்டிருக்கிற நேரத்தில் தன்னுடைய போராட்டத்திற்கான அடிப்படை தேவைகளுக்காக இந்தியாவின் உதவியை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்கிறார். அதே நேரத்தில் இந்தியாவை மட்டுமே நம்பி இருக்காமல் இந்திய உளவு நிறுவனமான ராவுக்கு தெரியாமல் தன்னுடைய இயக்கத்தினரை பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடமும் பயிற்சிக்கு அனுப்புகிறார். பின் இஸ்ரேலின் மொசாட் உளவுப்பிரிவுடனும் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு அங்கும் தன்னுடைய அமைப்பினரை பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அன்றைய காலக்கட்டத்தில் பல தமிழ்ப் போராளிக் குழுக்கள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றனர். ஆனால் பிற போராளிக் குழுக்கள் இவற்றுடன் தங்களை குறுக்கி கொண்ட நிலையில் வெளிநாட்டு தமிழர்களிடம் தன் தொடர்புகளை பிரபாகரன் வளர்த்துக் கொள்கிறார்.

இந்தியாவிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே தன்னுடைய போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு தேவையான அடித்தளத்தை புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மூலமாக பிரபாகரன் அமைத்துக் கொள்கிறார். ஈழப் போராட்டம் இன்று ஒரு முக்கியமான நிலையை அடைந்ததற்கு காரணம் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் வழங்கும் பொருளுதவி தான் என்பது நமக்கு தெரியும். ஆனால் இதனை 1984லேயே திட்டமிட்ட பிரபாகரனின் உத்தி வியப்பிற்குரியதாக இருக்கிறது. அது தான் யாரையும் சாராமல் ஒரு நிலையான பொருளாதார வசதியை புலிகளுக்கு கொடுத்தது. ஈழப் போராட்டத்திலும் எந்த தேக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

புலிகளுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே, 1985ல் சில கப்பல்களை பிரபாகரன் புலிகள் இயக்கத்திற்காக வாங்குகிறார். பல்வேறு நாடுகளில் வாங்கப்பட்ட இந்தக் கப்பல்கள் சரக்கு போக்குவரத்தில் பெரும்பாலான நேரங்களில் ஈடுபடுகின்றன. எஞ்சி இருக்கின்ற நேரத்தில் புலிகளுக்கான ஆயுதங்களை கடத்தும் வேளையில் இந்தக் கப்பல்கள் ஈடுபடுகின்றன. இதன் மூலம் ஆயுதங்களுக்காக யாரையேனும் நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை 1985லேயே திட்டமிட்டு தவிர்த்து விடுகிறார். இன்று கிட்டதட்ட 20கப்பல்கள் புலிகளுக்காக இயங்குவதாக கூறப்படுகிறது. இந்தக் கப்பல்கள் மூலம் கடற்படை, விமானப்படை, பலமான ஆயுதங்களுடன் தரைப்படை போன்றவற்றை பிரபாகரன் உருவாக்கி கொண்டிருக்கிறார். இது அனைத்தும் இந்தியாவின் ஆதரவு இருந்த நிலையிலேயே அமைத்து கொண்டது தான் புலிகளின் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.

1984ல் அளித்த ஒரு பேட்டியில் "நான் எதிர்காலத்தில் இந்தியாவை எதிர்த்து போரிட நேரலாம்" என்று பிரபாகரன் கூறியிருந்தார். அன்றைய காலக்கட்டத்தில் அந்தப் பேட்டியை எடுத்த இந்தியாவின் பிரபல செய்தியாளர் அனிதாவிற்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது "ஏனெனில் இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியா தமிழ் ஈழம் அடைய அனுமதிக்காது" என்று பிரபாகரன் கூறினார். இந்த எண்ணம் அவருக்கு இருந்த காரணத்தால் தான் ஈழப் போரட்டத்திற்கு இந்தியாவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை மிக கவனமாக தவிர்த்துக் கொண்டார்.

அவர் எதிர்பார்த்தது போலவே 1987ம் ஆண்டிற்கு பிறகான சூழ்நிலை அமைகிறது. தன்னுடைய எதிர்கால பாதுகாப்பு, மொழியைச் சார்ந்த ஒரு நாடு உருவானால், தன்னுடைய இறையான்மைக்கு அச்சுறுத்தல் நேரும் போன்ற எண்ணங்கள் காரணமாக புலிகளின் போராட்டத்தை நசுக்க இந்திய நினைக்கிறது. புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே சண்டை மூளுகிறது. புலிகளை எளிதாக அடக்கி விடலாம் என்று எண்ணியதற்கு மாறாக புலிகள் இந்தியப்படைக்கு கடும் சவாலினை விடுக்கின்றனர். இதற்கு புலிகளின் போர்த்திறன், உயிரை துச்சமென மதித்து போரிடுதல் போன்றவற்றுடன் பல கப்பல்கள் மூலம் அவர்கள் சேர்த்திருந்த ஆயுதங்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

அந்தக் கால கட்டத்தில் ஈழப் போராட்டம் இந்தியாவின் நிர்பந்தம் காரணமாக கடுமையான சவாலினை எதிர்கொண்டிருந்தது. இந்தியாவின் எண்ணத்திற்கு ஏற்ப ஈழப் போராட்டம் மாறக்கூடிய சூழ்நிலை இருந்தது. இது தமிழ் ஈழம் நோக்கிய தனது பயணத்திற்கு தடையாக அமையும் என்று பிரபாகரன் நினைத்தார். இந்தியாவை இந்தப் போராட்டத்தை விட்டு முழுமையாக அகற்ற வேண்டும் என்பது தான் அவரது எண்ணம். இதற்கு முதல் படியாக பிரேமதாசேவுடன் கூட்டு அமைத்து இந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து வெளியேற்றினார்.

இந்தப் பிரச்சனையில் ஈடுபட்டது தவறு என்பன போன்ற எண்ணங்கள் இந்தியாவில் அப்பொழுது நிலை பெற்று இருந்தன. ஆனால் இந்தியாவை மறுபடியும் இந்தப் போராட்டத்திற்கு கொண்டுச் செல்லக் கூடிய ஒருவர் ராஜீவ் காந்தி மட்டுமே. அவரைத் தவிர இந்தப் பிரச்சனையில் ஆர்வம் காட்டக் கூடிய இந்திய தலைவர்கள் யாருமே இல்லை. அவரை அகற்றுவது மூலம் இந்தியாவை நிரந்தரமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்க முடியும் என்று பிரபாகரன் முடிவு செய்தார். அதன் விளைவு தான் ராஜீவ் காந்தியின் படுகொலை. 1991க்குப் பிறகு இன்று வரை இந்தியா இந்தப் பிரச்சனையில் நேரடியாக தலையிடவேயில்லை.

ராஜீவ் காந்தியின் படுகொலை காரணமாக இந்தியாவின் ஆதரவை நிரந்தரமாக புலிகள் இழக்க நேரிடும் என்று பிரபாகரனுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது. 1984ல் இருந்து அவரது அரசியல் உத்திகளை ஆராய்பவர்களுக்கு இது தெளிவாக புரியும். இதன் காரணமாய் தமிழகத் தமிழர்களின் ஆதரவை முழுவதும் இழக்க கூடும் என்றும் அவர் அறிந்திருக்க கூடும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்தியாவை இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்க நினைக்கும் அவரது எண்ணம் மட்டும் தான் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் பயங்கரவாதச் செயலை செய்ய தூண்டியிருக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தின் ஆதரவை இழந்தது ஒரு முக்கிய இழப்பாக பலர் கூறினாலும், தமிழகத்தின் ஆதரவை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை என்பது கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நகழ்வுகளைக் கொண்டு நாம் அறியக் கூடியதாக இருக்கிறது.

பிராந்திய நிலையில் இருந்த இந்தப் போராட்டத்தை சர்வதேச நிலைக்கு கொண்டு செல்வது தான் பிரபாகரனின் அடுத்த திட்டம். சில முயற்சிகளுக்குப் பின் லியம் பாக்ஸ் என்ற பிரிட்டிஷ் அமைச்சரின் மேற்ப்பார்வையில் ஒரு புதிய முயற்சி தொடங்கியது. அன்றைக்கு தொடங்கிய முயற்சி படிப்படியாக வளர்ந்து நார்வேயை முக்கிய அணுசரணையாளராகக் கொண்டு இன்று ஈழப் போராட்டம் சர்வதேச தளத்திற்குச் சென்று விட்டது. சர்வதேச அளவில் தமிழ் ஈழப் பிரச்சனை மீது பல நாடுகள் ஆர்வம் காட்ட தொடங்கின. பொருளாதாரக் காரணங்களால் இந்த ஆர்வம் எழுந்த அதே நேரத்தில் நிர்பந்தங்களும் எழுந்தன.

சமீபத்திய மிக முக்கிய நிர்பந்தம் ஐரோப்பிய யூனியனின் தடை. ஆனால் இந்த தடையை எந்தக் கோணத்தில் புலிகள் அணுகினர் என்பதை நோக்கும் பொழுது ஆச்சரியமே ஏற்படுகிறது.

ஐரோப்பிய யூனியனின் தடைக்குப் பிறகு ஓஸ்லோவில் பேச்சுவார்த்தைக்குச் செல்ல புலிகள் ஒப்புக் கொண்டனர். இதைத் தவிர வேறு எந்த வழியும் அவர்களுக்கு இல்லை என்பதான ஒரு கருத்தாக்கம் நிலவி வந்தது. இலங்கை அரசு வழக்கமாக அனுப்பும் அமைச்சர்கள் மட்டத்திலான தனது தூதுக்குழுவை தவிர்த்து அதிகாரிகள் மட்டத்திலான ஒரு தூதுக்குழுவை ஒஸ்லோவிற்கு அனுப்பியது. ஐரோப்பிய யூனியன் தடை, உலக நாடுகளின் நிர்பந்தம் இவற்றுக்கு மத்தியில் புலிகளுக்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை தவிர வேறு எந்த வாய்ப்பும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை.

ஆனால் நடந்ததோ உலக நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், நார்வேயையும் வியப்பில் ஆழ்த்தியது.

தன்னிச்சையான "தமிழீழ விடுதலைக்கு" குறைவான ஒரு பிரகடனத்தை ஓஸ்லோவில் புலிகள் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை இவ்வாறு தொடங்குகிறது.

The de facto State of Tamil Eelam exercising jurisdiction over 70 percent of the Tamil Homeland, with control over the seas appurtenant there, with its own laws, independent judiciary, police force and full administrative apparatus; the Liberation Tigers of Tamil Eelam (LTTE), being the authentic representative of the Tamil Nation and its sole interlocutor in the current peace process facilitated by the Royal Norwegian Government; the LTTE acting as the sole defender and protector of the Tamil Nation, its People and the State institutions with its modern defence forces;

இதன் மூலம் மற்றொரு முறை தங்கள் மீதான நிர்பந்தத்தை விடுவித்து கொண்டதோடு மட்டுமில்லாமல், தாங்கள் ஒரு நாட்டினை நடத்தி வருகிறோம் என்று ஓஸ்லோவில் சென்று அறிவித்துள்ளனர். இவை தவிர ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் SLMM குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். பிரச்சனையை தீர்ப்பதற்கான கோணத்தில் செல்லாமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கைகுலுக்க வைக்கவே நார்வே ஆர்வம் காட்டுவதாக நார்வேயை சாடியிருக்கின்றனர்.

தங்களின் கோரிக்கையை நோக்கி உலக நாடுகள் வரவேண்டுமே அல்லாமல், உலக நாடுகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து தாங்கள் நகர வேண்டிய அவசியம் இல்லை என்று புலிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ஆனால்...

இது எந்தளவுக்கு சாத்தியமாகும் ? கடந்த 20 ஆண்டுகளில் ஈழப் போராட்டத்தை உலக அரங்கிற்கு தன்னிச்சையாக கொண்டு சென்றிருக்கிற பிரபாகரன் தொடர்ந்து இதனைச் செய்ய முடியுமா ? உலக நாடுகள் இதனை எப்படி அணுகும் ? இலங்கை அரசு என்ன செய்யும் ?

இன்று உலகில் ராஜதந்திர உத்திகளை யாராவது படிக்க வேண்டுமானால் முதலில் இலங்கைக்குச் செல்ல வேண்டும். இலங்கை அரசு, புலிகள், சர்வதேச நாடுகள் இவற்றிடையே நடக்கும் இந்த சதுரங்க ஆட்டத்தின் உத்திகள் குறித்து யோசிக்கும் பொழுது சுவாரசியமாக இருந்தாலும் இதற்கு பின்னே அற்பமாகிப் போன மனித உயிர்களும், மனிதநேயமும் மனதை உளுக்குகிறது.

(தொடரும்)