சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 4

undivided Srilanka என்பது தீர்வாக கூறப்படும் நிலையில் சிறீலங்காவின் இன்றைய நிலை என்ன ?
சிறீலங்கா ஏற்கனவே இரண்டு துண்டுகளாகி விட்டது.

தென்னிலங்கையில் இருக்கும் சிங்களப் பகுதி, தமிழ்ப் பகுதிகளான யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை நகரங்கள், மன்னார், தமிழர் மற்றும் முஸ்லீம்களின் பகுதியான அம்பாறை போன்ற பகுதிகள் தான் சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வடகிழக்கு மாகாண தமிழர் பகுதிகளில் சுமார் 30%-40% மட்டுமே சிறீலங்கா அரசு வசம் உள்ளது.
கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு, போன்ற பகுதிகளும், மட்டகளப்பு, திரிகோணமலை, அம்பாறை போன்ற பகுதிகளில் சில இடங்களிலும் என சுமார் 60-70% வடகிழக்கு மாகாண தமிழ்ப் பகுதிகள் இன்று புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. அதாவது "தமிழீழம்" என்று கருதக்கூடிய தமிழர் பகுதிகளில் ஏற்கனவே 60% முதல் 70% புலிகள் வசம் உள்ளது.
இந் நிலையில் "undivided Srilanka", "Sovereignty and territorial integrity of Sri Lanka" என்பது புலிகள் தங்கள் வசம் உள்ள பகுதிகளை சிறீலங்கா அரசுக்கு ஆயுதங்களை கைவிட்டு "விட்டுக் கொடுத்தால்" கிடைக்கும். அல்லது சிறீலங்கா இராணுவம் புலிகளை தோற்கடித்து கைப்பற்றினால் undivided Srilanka கிடைக்கும். ஆனால் இது இரண்டுமே சாத்தியம் அற்றது என்பது இந்தப் பிரச்சனையை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு கூட புரியும்.
யானையிறவு இராணுவ முகாமை கைப்பற்றி புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நிலையில் இருந்த பொழுது அமெரிக்க, இந்திய அரசுகள் புலிகளுக்கு யாழ்ப்பாணத்தை கைப்பற்ற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்ததாகவும், அதனாலேயே புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் தங்கள் திட்டத்தை நிறுத்திக் கொண்டதாகவும் ஒரு கருத்து உண்டு. யாழ்ப்பாணம் புலிகளின் கைகளுக்கு எளிதாக சென்று விடும் என்ற நிலையில் உலக நாடுகளை நோக்கி தன் நாட்டை காப்பாற்றுமாறு சந்திரிகா கேட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றாமல் யாழ்ப்பாணத்தைச் சுற்றியப் பகுதிகளில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.
இது அமெரிக்க, இந்திய அரசுகளின் எச்சரிக்கையால் ஏற்பட்டது என்று என்னால் நினைக்க முடியவில்லை.புலிகளின் எண்ணிக்கை ஒரு பரந்து பட்ட தமிழீழத்தை தக்க வைக்க கூடிய நிலையில் அன்றைக்கு இல்லை. நிலங்களை கைப்பற்றுவதை விட கைப்பற்றிய இடங்களில் நிலை நிறுத்திக் கொள்ள தேவைப்படும் பலம் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மரபுரீதியான போரில் புலிகள் தோல்வி அடைந்து பின்வாங்கிய நிலையும் ஒரு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தை கைப்பற்றியப் பின் அதனை இராணுவத்திடம் இழப்பதை விட இருக்கின்ற நிலைகளை தக்க வைத்துக் கொள்வது புலிகளின் நோக்கமாக அன்றைக்கு இருந்தது.
இராணுவம் எப்படி "undivided Srilanka"வை அடையவேண்டுமென்றால் புலிகளின் பகுதிகளை முழுமையாக கைப்பற்ற வேண்டுமோ அதே போல புலிகள் தமிழீழத்தை அடைய வேண்டுமானால் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை ஆகிய இரண்டு பகுதிகளை கைப்பற்ற வேண்டும். யாழ்ப்பாணம் ஈழத் தமிழர்களின் கலாச்சார அடையாளம் என்றும், திரிகோணமலை நகரம் தமிழீழத்தின் தலைநகரம் என்றும் புலிகள் கூறியுள்ள நிலையில் போர் தொடங்கினால் இந்த இரண்டு நகரங்களை கைப்பற்ற புலிகள் தங்களுடைய முழுபலத்தையும் பிரயோகிப்பார்கள்.
ஆனால் இந்த நகரங்களை கைப்பற்றுவது எந்த அளவுக்கு சாத்தியம் ? சிறீலங்கா இராணுவத்தின் அத்தனை இராணுவ பலமும் இந்த இரு நகரங்களைச் சூழ்ந்திருக்கிற நிலையில் புலிகளின் இராணுவ பலம் மூலம் இந்த இரண்டு பகுதிகளை கைப்பற்ற முடியுமா ?
யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய இரண்டு பகுதிகளை கைப்பற்றும் அவர்களின் நோக்கமே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தை செண்ட்டிமெண்ட்டாக புலிகள் கருதினாலும், அவர்களின் முக்கியமான இலக்காக திரிகோணமலை இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இதற்கு முக்கிய காரணம் திரிகோணமலையின் இராணுவ மற்றும் பொருளாதார கேந்திர முக்கியத்துவம். திரிகோணமலையின் இராணுவ முக்கியத்துவம் ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான். இயற்கையான துறைமுகம், பாதுகாப்பான துறைமுகம் என்பதால் இந்த துறைமுகத்தை தங்கள் வசம் கொண்டு வர இந்தியா மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் என ஒரு நீண்ட வரலாறு இந்த துறைமுகத்திற்கு உண்டு.
1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பொழுது இராஜீவ் காந்திக்கும், ஜெயவர்த்தனேவுக்கும் இடையே நடந்த கடித உறையாடல்களின் மூலம் இந்த துறைமுகத்தை இந்தியாவின் நலன்களுக்கு எதிராக பிற நாடுகளுக்கு இலங்கை கொடுப்பது தடுக்கப்பட்டு விட்டது.
அந்தக் கடிதங்களின் சாராம்சம்
- Trincomalee or any other port of Sri Lanka, will not be made available for military use by any country in a manner prejudicial to India’s interests.
- The work of restoring and operating the Trincomalee oil tank farm will be undertaken as a joint venture between India and Sri Lanka.
இது தவிர மாறிவரும் உலகச் சூழலில் இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து உள்ள நிலையில் அமெரிக்க-இந்திய கடற்ப்படைகளுக்கு இடையே இந்தப் பிரச்சனையில் போட்டி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவே. ஆனால் நாடுகளிடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புகள், Globalization போன்றவை இலங்கையின் பொருளாதார கேந்திர முக்கியத்துவத்தை அதிகரித்து உள்ளன. இந்த முக்கியத்துவத்தின் காரணமாகத் தான் உலகநாடுகள் இந்தப் பிரச்சனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.
2000ம் ஆண்டிற்கு முன்பு வரை இந்தப் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருந்த ஜப்பான் போன்ற நாடுகள் கூட தற்பொழுது இந்தப் பிரச்சனையில் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதை கவனிக்க வேண்டும். இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் மாநாட்டை டோக்கியோவில் நடத்தியது, தன்னிச்சையான சமாதான முயற்சிகள் என ஜப்பான் இந்தப் பிரச்சனையில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஆர்வத்தை செலுத்த தொடங்கியதன் பிண்ணனி சுவாரசியமானது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் வரலாற்று காலம் தொடங்கி இன்றைய நிலை வரை கடல் மீதான ஆளுமையைச் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. தமிழக வரலாற்றை சோழர் காலம் முதல் ஆராயும் பொழுது கூட ( என்னுடைய முந்தையப் பதிவு - சோழர்களின் பொருளாதாரப் போர்கள்) இந்த உண்மை நமக்கு தெளிவாகும். கடல் மீது இருந்த மிகப் பலமான ஆதிக்கம் மூலமே பிரிட்டிஷ் அரசாங்கம் உலகெங்கும் நிறுவப்பட்டது. சோழர் காலம் முதல் இன்றைய உலகமயமாக்கல் காலம் வரை இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை.
இன்றைய இலங்கை இனப் பிரச்சனையில் கூட உலக நாடுகளை இந்த வர்த்தக எண்ணமே செலுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு தீவாக ஆசியாவின் மையப் பகுதியில் மத்திய கிழக்கு, கிழக்காசியா இடையேயான கடல் பாதையில் இருப்பதே இந்தப் பிரச்சனையில் பல நாடுகளை ஆர்வம் கொள்ளச் செய்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் மலாக்கா நீரிணைவு இடையேயான கடல் பாதை உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.
உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணைவு வழியாகத் தான் நடைபெறுகிறது. உலக மொத்த வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் சுமார் 80% இந்தப் பகுதி வழியாகத் தான் நடைபெறுகிறது. மலாக்கா நிரிணைவு சீனாவை ஆசியாவுடன் இணைக்கும் பகுதி என்பதும், சீனா தனது 60% எண்ணெய் தேவைகளுக்கு இந்தப் பகுதியையே நம்பி இருக்கிறது என்பதும் இந்தக் கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.
அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் முதல் ஐந்து இடம் பெறக் கூடிய பொருளாதார வல்லரசு நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான் போன்றவற்றின் எரிபொருள் தேவை இந்தக் கடற்பகுதி வழியாகத் தான் நடைபெறும் என்பதால் தங்களின் தேவைகளுக்கு எந்தப் பிரச்சனையும் எதிர்காலத்தில் நேர்ந்து விடக் கூடாது என்ற அக்கறை இந்த நாடுகளுக்கு உண்டு. ஆசியாவின் பிற பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்றவையும் இந்தப் பகுதியில் இருப்பதை கவனிக்க வேண்டும். இவை தவிர எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் இந்தப் பகுதியில் தன்னுடைய எண்ணெய் வளத்துடன், இராணுவ ரீதியிலான பலத்தை பெறுவதற்கும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது.
எதிர்காலத்தில் உலகின் முக்கியமான பொருளாதார கேந்திரமாக உருவாகக்கூடிய இந்தக் கடற்பரப்பில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது.
கச்சா எண்ணெய் தவிர அணுமின் நிலையங்களுக்கும், அணுஆயுத உற்பத்திக்கும் தேவைப்படும் புளூட்டோனியம் போன்றவையும் கடல்வழியாகத் தான் கொண்டுச் செல்லப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் உலகின் முக்கியப் பொருளாதாரப் பிரச்சனையாக இருக்கப் போவது கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் தேவைகள் தான். தங்களுடைய எரிபொருள் தேவைகளுக்கு தன்னிச்சையான முயற்சிகளை மேற்கொள்ள சீனா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
இந் நிலையில் தான் கடல் மீதான ஆதிக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. தங்களுடைய எண்ணைக் கப்பல்களின் பாதுகாப்பு, பிரச்சனையில்லாத போக்குவரத்தை கப்பல்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு, தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கான பாதுகாப்பு, கடற்பரப்பில் இருக்கின்ற எண்ணெய் வளங்களை கண்டறிவது போன்றவற்றுடன் இந்த கடல்வெளியில் இருக்கும் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது என்ற ரீதியில் தான் உலக நாடுகளின் நிலை அமைந்து இருக்கிறது.
இந்தக் கடற்பரப்பில் தங்களின் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வதும், எதிர்காலங்களில் பிரச்சனை நேரும் சமயங்களில் தங்களின் இருப்பை இந்த வர்த்தக முக்கியத்துவம் மிக்க பகுதியில் நிலை நிறுத்திக் கொள்வதிலும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முனைந்தன.
உலக கடல் போக்குவரத்தில் chokepoint என்று சொல்லக்கூடிய பகுதிகள் நிறைய உண்டு. அதாவது மிகக் குறுகலான பாதை உடையப் பகுதிகளை chokepoint என்று கூறுவார்கள். இவ்வாறு குறுகலான பாதை உடைய கடல் பாதையை ஏதேனும் ஒரு நாட்டின் படையோ அல்லது தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் அதனை விடுவிப்பது கடினம். அவ்வாறான ஒரு chokepoint உள்ள இடம் தான் மலாக்கா நிரிணைவு ஆகும். இதில் சுமார் 2.5கி.மீ அகலம் மட்டுமே கொண்ட பல குறுகலான பாதைகள் உள்ளன. இதனை ஏதேனும் ஒரு நாட்டின் கடற்ப்படையோ, தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் உலகின் மிக முக்கியமான வர்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்படும். இது உலகப் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனை தடுக்கும் பொருட்டு தான் இந்தப் பகுதியில் பல நாடுகளின் கடற்ப்படை தளங்கள் உருவாக தொடங்கின. அமெரிக்கா இந்தப் பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முனைந்து வருகிறது. இந்திய அமெரிக்க கடற்ப்படை இடையே இராணுவ ஒத்துழைப்பு, மலாக்கா நிரிணைவுகளில் கூட்டு ரோந்து நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. சுனாமியை முன்னிட்டு அமெரிக்கா தனது கடற்படையை இப் பகுதியின் பலப் பகுதிகளுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் நாடாக கருதப்படும் சீனா இந்தப் பகுதியின் சில முக்கியமான இடங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முனைந்தது. இப் பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா மூலம் எதிர்காலத்தில் தன் வர்த்தகத்திற்கு அச்சறுத்தல் நேராமல் தடுக்கவும், தன் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் மியன்மார் (பர்மா), மாலத்தீவுகள் போன்ற பகுதிகளில் தன் கடற்ப்படை மற்றும் தொலைத்தொடர்பு தளங்களை சீனா அமைத்துக் கொண்டது. அது தவிர மியன்மார் அரசுடன் எண்ணெய் கிடங்குகளை பராமரிக்கும் வசதிகளையும் பெற்று இருக்கிறது.
இந்தியாவிற்கு ஏற்கனவே அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. இது மலாக்கா நிரிணைவு பகுதியின் அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் எண்ணெய்க் கிடங்குகளையும் இந்தியா அமைத்துள்ளது. திரிகோணமலையிலும் இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காப்ரேஷன் எண்ணெய் கிடங்குகளை பராமரித்து வருகிறது.
இவை தவிர இந்தக் கடற்பரப்பில் தேவைப்படும் கண்காணிப்பிற்கு தொலைத்தொடர்பும் மிகவும் முக்கியமானது. மத்திய கிழக்கு முதல் மலாக்கா நிரிணைவு வரையிலான பகுதியில் இருக்கும் வர்த்தக கப்பல்கள் மற்றும் இராணுவ நிலைகளிடையே தொடர்பு கொள்ளக் கூடிய தேவையும் உள்ளது. இலங்கை இந்தக் கடற்ப்பாதையின் மையப் பகுதியில் இருப்பதால் இத்தகைய தொலைத்தொடர்புக்கு உகந்த இடமாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் வாய்ஸ் ஆப் அமெரிக்கா போன்ற நிலைகளை 1980களிலேயே இங்கு அமைக்க அமெரிக்கா முனைந்தது. இன்று தொலைத்தொடர்பு அசுர வளர்ச்சிப் பெற்றிருக்கிற சூழ்நிலையில் இது ஒரு பெரிய பலம் என்று சொல்ல முடியாது. என்றாலும் இதுவும் இலங்கைக்கு ஒரு முக்கியமான பலம் தான் என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு இந்தப் பகுதி மிக முக்கியமான பொருளாதார கேந்திரமாக இருப்பதால் தான் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப் பிரச்சனையில் மிகத் தீவிரமான ஆர்வம் காட்ட தொடங்கின. இயல்பாகவே இந்த நாடுகள் இப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவது தான் தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கு உகந்ததாக இருக்ககூடும் என்ற எண்ணத்தில் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டினை எடுத்தன. அதனால் புலிகளுக்கு அதிகப்படியான நெருக்கடியை கொடுக்க தொடங்கின. இவ்வாறு நெருக்கடி கொடுப்பதன் மூலம் புலிகளை போர் நோக்கி செல்லாமல் தடுக்க முடியும் என நினைத்தன. அதன் விளைவு தான் அமெரிக்கா ஐரோப்பிய யூனியனை நிர்பந்தம் செய்து புலிகள் மீதான தடையினை கொண்டு வந்தது.
ஆனால் புலிகளின் போக்கு உலக நாடுகளை தங்களின் வழிக்கு கொண்டு வருவது என்ற ரீதியிலேயே இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு நாடும் விடுக்கும் நிர்பந்தங்களுக்கு அடிபணியும் பொழுது தமிழீழம் என்ற தீர்வினை விட்டுக்கொடுக்க நேரும். அது மட்டுமில்லாமல் ஈழப்போராட்டம் ஒரு தன்னிச்சையான பாதையில் செல்லாமல் உலகநாடுகளின் எண்ணங்களுக்கு ஏற்ப வளைந்து செல்லக்கூடிய நிலை நேர்ந்து விடும்.
இன்று இராணுவ ரீதியில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிறையப் பின்னடைவுகளை எதிர்கொண்டு இருக்கும் அமெரிக்கா, இலங்கைப் பிரச்சனையில் இராணுவ ரீதியில் "நேரடியாக" உள்ளே நுழையாது. வேறு எந்த நாடும் இந்தப் பிரச்சனையில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாது என்ற நிலையில் உலக நாடுகளின் நிர்பந்தம் வெறும் அச்சறுத்தல், அங்கீகாரம் மறுப்பு என்ற அளவில் தான் இருக்கும்.
இந் நிலையில் இந்தக் கடற்ப்பரப்பில் தங்களது ஆளுமையை நிலை நிறுத்துவது தான் உலக நாடுகளை தங்களின் நிலை நோக்கி கொண்டு வரும் ஒரே வழி என புலிகள் முடிவு செய்தனர். இந்தப் பிராந்திய கடற்பகுதியில் தாங்களும் ஒரு முக்கியமான சக்தி என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் அவர்களின் எண்ணம். எனவே தான் திரிகோணமலை புலிகளின் முக்கிய இலக்காக எதிர்வரும் காலங்களில் இருக்கும் என நான் நினைக்கிறேன்.புலிகளின் கடற்படை இப் பிராந்தியத்தின் கடற்ப்பரப்பில் ஒரு முக்கியமான சக்தி என்பதை நிலை நிறுத்தும் வகையில் தான் கடந்த ஆறு மாத நிகழ்வுகள் இருந்தன.
அதனால் புலிகள் பெறப் போகும் பலன் என்ன ?
பொருளாதார முக்கியத்துவம் மிக்க ஒரு பகுதியில், ஒரு முக்கியமான சக்தியை எந்த நாடும் புறக்கணித்து விட முடியாது.
(தொடரும்)
Tags
Strategic Analysis
தமிழ்ப்பதிவுகள்
ஈழம்