Saturday, June 10, 2006

மனிதாபிமான அரசியல்

ஈழத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் தொடர் கதை பலக் காலங்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதும், அவ்வாறு நிகழும் பொழுதெல்லாம் அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் தொடங்கி உலகின் பல ஊடகங்களும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையாக நடக்கும் கதையாகி விட்டது.

அதே நேரத்தில் தென்னிலங்கையில் நிகழும் நிகழ்வுகள் தொடங்கி இராணுவம் மீது புலிகள் தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எந்த மனித உயிரும் அற்பாக கருதப்படக் கூடியவை அல்ல. புலிகளின் குண்டுவெடிப்புகளில் பலியாகும் ஒரு அப்பாவி சிங்களன் உயிருக்கும் புலிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு அப்பாவி சிங்களன் மடிவது அங்கு கொல்லப்படும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் உயிர்களை விட மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே நான் கருதுகிறேன். இத்தகைய செயல்களை புலிகள் செய்தாலும், வேறு எந்த அமைப்பு செய்தாலும் அது படு பயங்கரமான "பயங்கரவாத", "மனித உரிமை" மீறலாகவே நான் பார்க்கிறேன்.

அவ்வாறே அங்கு கொல்லப்படும் என்னுடைய அப்பாவி தமிழ்ச் சகோதரனின் மரணத்தையும் நான் பார்க்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய சகத் தமிழன் பாதிக்கப்படும் பொழுது எனக்கு சற்று அதிகமான உணர்ச்சி ஏற்படுகிறது.

இதனைச் செய்யும் இனவாதிகளின் வெறியை விட அதனை மூடிமறைக்கும் ஊடகங்களை அதனை விட வெறிப் பிடித்த இனவெறியர்களாகவே நான் பார்க்கிறேன். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை வெளியிட "தனி செய்தியாளரை" கொண்டிருக்கும் ஹிந்து இதனை ஒரு செய்தியாக கூட வெளியிடவில்லை என்பது ஹிந்து எந்தளவுக்கு ஒரு "இனவெறிப்" பத்திரிக்கையாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. புலிகள் ஆளுமையில் இருக்கும் பகுதிகள் மீது இலங்கை அரசு குண்டு வீசிய பொழுது எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டதையும், இடம்பெயர நேரிட்டதையும் குறித்து BBC போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலைமையில், Sri Lanka defends air strikes என்று அந்த குண்டு வீசுதலை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்ட ஹிந்து, தற்பொழுது எந்தச் செய்தியையும் வெளியிடாமலேயே இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துகிறது. ஹிந்து என்றில்லாமல் இன்று இருக்கும் ஊடகங்கள் அனைத்துமே "வெள்ளைத் தோல்" அல்லாத ஆப்ரிக்க, ஆசிய சாமானிய மக்களுக்கு வழங்கும் மதிப்பு இவ்வாறு தான் உள்ளது.

புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று கூறும் சர்வதேச நாடுகள், இலங்கை அரசின் இத்தகைய தொடர் வன்முறைகளை, Amnesty போன்ற மனித உரிமை அமைப்புகள் கூட வெளிப்படையாக கண்டித்த மனித உரிமை மீறல்களை எந்தக் கோணத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை பார்க்கும் பொழுது எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்த சர்வதேச நாடுகள் தான் தங்களை மனித உரிமை காவலர்களாக சித்தரித்து கொண்டிருக்கின்றன. புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை அரசின் "பயங்கரவாத செயல்களுக்கு" இராணுவ உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன.

ஈழத்தில் சமீபகாலங்களில் நடந்து வரும் படுகொலைகள் மிக மோசமான இனவாதம் என்பது மட்டுமல்ல. ஊடகங்கள் வளர்ச்சியடைந்த காலகட்டத்திலும் இந்த நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுவது மிக மோசமான இனவாத வன்முறையாக, பேதமாக நான் கருதுகிறேன். அங்கு நடத்தப்படும் சாமானிய மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் மிகக் கொடூரமாக நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஒரூ பீதியை ஈழத் தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சியை சிறீலங்கா இராணுவம் இருபது ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.

இரண்டு வயது கூட நிரம்பாத ஒரு குழந்தையை, தான் தமிழன் என்றோ, சிங்களன் என்றோ அல்லது ஏதோ ஒரு எழவு பிடித்த இனம் என்றோ கூட அறியாத ஒரு குழந்தையை குத்தி கொடூரமாய் கொலை செய்யும் படுமோசமான இனவாத வெறிக்கு ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து இலக்காகி கொண்டிருக்கின்றனர். நேற்று நடந்த படுகொலை படங்களை பார்க்க முடியாமல் வேகமாக அந்தப் பக்கங்களில் இருந்து வெளியேறி விட்டேன். இதனை பார்க்கும் மனவலிமை கூட எனக்கு இல்லை. ஆனால் இத்தகைய பல நிகழ்வுகளுடன் தங்கள் வாழ்க்கையை நடத்தும் பல ஈழத் தமிழர்களின் வாழ்க்கை எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.

வேதனை என்பதே ஒரு சுயவிளம்பரம் தான். இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதும், வேதனை மட்டுமே நம்மிடம் இருந்து வெளிப்படுவதும் வெறும் இயலாமையாகத் தான் எனக்கு தெரிகிறது.


தெருவொன்றில் பயணித்தபோதோ
தூங்கும்போதோ
கனிந்து பொழியும் கனவுகளில்
முழுகும் போதோ
காணாமற் போனீர்கள்.

உறவுகளின் இழைகள் ஈய்ந்து
அறுபட்ட புண்களிடை
துயரொழுகத் துயரொழுக
சிறகுகள் கிழியுற்ற வலுவீனராய்
கொலைக்கருவி முனைகளாற் கொழுவுண்டு
கடத்தப்பட்டீர்கள்.

உங்களுடைய ஆண்குறிகள்
பிதுக்கிச் சிதைக்கப்பட்டிருக்கலாம்
திறக்க மறுத்த பெண்குறிகள்
திரண்ட முனைகளின்
மூர்க்கத் துளாவல்களால்
பிளக்கப்பட்டிருக்கலாம்
வித வித வதைகளால் விகாரித்து
சிறையிருளில் நெரியுண்டு
மரித்திருக்கலாம் நீங்கள்.

பெருவெட்டையொன்றின் ஆழமோ
மலக்குழிகளோ
பாழடைந்த கிணறுகளோ
இன்னும் என்னவென்னவோ
உங்களை விழுங்கி
மெளனித்திருக்கலாம்.

உங்கள் வீடுகளின் வெற்றிடங்கள்
இனி யாரால் நிரப்பப்பட முடியும்

அந்நியக் கொடூரர்களின் பிடுங்குதலில்
உங்களை இழந்தோரின்
புண்களை ஆற்றும் தகமை
யாருக்குண்டு

துயர்களின் உராய்வுகள் பெருக
அவர்களிடையே மூளும்
மையத்தழல்களைத் தணிக்கும் வலு
யாருக்கு வரக்கூடும்?

-அமரதாஸ்
(நன்றி: செம்மணி, http://elanko.net/pathivu/?p=185)

12 மறுமொழிகள்:

Anonymous said...

Sasee

Nan oru eelathamilan "emmakuu aluvathukuu kaneerumm illaii irrupathukkuu edamumm illai"

ellapathukuuu onrum illai emathuu savaa pettikalai thaveera

9:42 AM, June 10, 2006
Anonymous said...

என்ன கொடுமை இது...
/*நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதும், வேதனை மட்டுமே நம்மிடம் இருந்து வெளிப்படுவதும் வெறும் இயலாமையாகத் தான் எனக்கு தெரிகிறது*/
இதே எண்ணம் தான் எனக்கும். ஆனால் ஊடகங்களின் மௌனம் தான் இதில் அநியாயம்.
..aadhi

10:06 AM, June 10, 2006
Anonymous said...

இப்படியான கொலைகளை முன்னர் புலிகள் எதிர்கொண்டவிதம் கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று சிங்களவர்களுக்கு அதே வலியை கொடுத்துத்தான். இப்போது இவர்கள் அதனைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் புலிகள் அதே வழிமுறையைக் கையாண்டால் வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுக்க எல்லா ஊடகங்களும் நாடுகளும் பின்னிற்கப்போவதில்லை. புலிகள் இதை அவதானமாக கையாளவேண்டும்.

10:13 AM, June 10, 2006
thamillvaanan said...

அண்மையில் நடந்த வங்காலைப்படுகொலையின் பயங்கரத்தை இணையத்தளங்களுடாக பார்த்தபோது சிங்களக்காடையரின் கொலைவெறியையும் வக்கிரபுத்தியையும் புரிந்துகொள்ளமுடிகிறது. எந்தவொரு ஆத்திரமூட்டல் சம்பவங்கள் நடக்காதநிலையில் இவ்வாறு கொலைவெறியோடு அலையும் இவர்களை என்ன செய்யமுடியும். இந்த சிறுவர்களை இப்படி கொல்லும் இவர்களை எந்தவகையில் சேர்ப்பது?

அதனைவிட நீங்கள் சொல்வதுபோல இவ்வாறான செய்திகளை வேண்டுமென்றே மறைப்பவர்களும் இனவெறி கொண்டவர்களே.

இதற்கு முன்தினம் கோப்பாயில் இந்துக்குருக்கள் ஒருவரின் உடல் இராணுவ முகாமுக்கு அருகில் புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்து அப்பகுதிக்கு சென்று அப்பகுதிமக்கள் தோண்டி எடுத்தனர். அப்போது மேலும் இரண்டு சடலங்கள் அப்பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டுகொண்டனர். இதன்போது அப்பணியில் ஈடுபட்ட கிராமஅலுவலர் அடுத்தநாள் வீதியில் வைத்து சுடப்பட்டுஇருக்கிறார்.

10:48 AM, June 10, 2006
மு. சுந்தரமூர்த்தி said...

The gruesome pictures remind me of those we saw in early 80s. The complete black out of the news of these atrocities on unarmed civilians in Indian/Tamil media, and stoic silence of Tamil Nadu leaders are appalling.

"We will have to repent in this generation not merely for the hateful words and actions of the bad people but for the appalling silence of the good people."
- Rev. Martin Luther King, Jr.

9:38 PM, June 10, 2006
வெற்றி said...

சசி,
வழமைபோல் ஓர் நல்ல பதிவைத் தந்தமைக்கு நன்றி. தமிழர்களினதும், ஈழத் தமிழர்களின் பாதுகாவலர்களான தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஆத்திரமூட்டும் பல மோசமான செயல்களில் சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது. சிங்களவர்களின் நோக்கம் என்னவென்றால், அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்யும் போது புலிகள் ஆத்திரமடைந்து அப்பாவிச் சிங்கள மக்களை கொன்றால், அச் சம்பவங்களை வைத்து சர்வதேச சமூகத்தில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரிப்பதற்கு முயற்சிக்கிறது. அத்துடன் இப்படியான அப்பாவித் தமிழர்களின் மீதான தாக்குதல்களால் புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்ததை மீறி போரைத் துவங்கினால், புலிகள் வலிந்து கொண்டு போரைத் துவக்குகிறார்கள் என பிரச்சாரம் செய்யவும் சிங்கள அரசு எண்ணுகிறது. ஆனால் தமிழர்களின் தலைமை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் தமது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. புலி பதுங்குவது பாயத்தான் என்பது போல் சரியான நேரத்தில் சரியான விதத்தில் இத் தாக்குதல்களுக்கெல்லம் சரியான பதிலடி தமிழர் தரப்பில் இருந்து வரும்.

12:57 AM, June 11, 2006
Anonymous said...

அக்கறையுடன் பதிவிட்ட உங்கள் பதிவுகளாவது ஒரு சில தமிழக மக்களை சென்றடைய
உதவும் என்று நம்புகிறோம். நன்றி.

12:17 PM, June 11, 2006
Anonymous said...

உங்களுடையக் கருத்துகளுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.

இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் மவுணம் அவர்களின் வெளிப் பாடான பக்கச் சார்பைக்
காட்டுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யத்தான் தவறிவிட்டோம்.
அட்லீஸ்டு அவர்களின் துக்கங்களையாவது பகிர்ந்து கொள்வோமே......

2:38 PM, June 11, 2006
Anonymous said...

//அவ்வாறே அங்கு கொல்லப்படும் என்னுடைய அப்பாவி தமிழ்ச் சகோதரனின் மரணத்தையும் நான் பார்க்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய சகத் தமிழன் பாதிக்கப்படும் பொழுது எனக்கு சற்று அதிகமான உணர்ச்சி ஏற்படுகிறது.//
இதே உணர்வும், ஒரு கையாலாகத்தனமும் மிகவும் தளர்வடையச் செய்கின்றன.
பாலாஜி-பாரி

3:18 PM, June 11, 2006
-/சுடலை மாடன்/- said...

பிரபல மலையாள-ஆங்கில எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்டுமான ஓ. வி. விஜயன் மாத்ருபூமியில் எழுதிய ஒரு தொடர் கட்டுரையில் ஈழப்பிரச்சினை பற்றி எழுதிய கருத்தின் சாராம்சம் (கேரள நண்பர் ஒருவர் மொழிபெயர்த்துச் சொன்ன வரிகள் என்னுடைய நினைவிலிருந்து எழுதுகிறேன்):

//ஈழப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரான செயல் பாடுகளையே எப்பொழுதும் கொண்டிருக்கும். ஏனெனில் ஈழப்பிரச்சினை என்பது ஒருவிதத்தில் ஆரிய - திராவிடர் பிரச்சினை. மத்திய அரசை ஆளும் வர்க்கம் ஆரியர்கள், எனவே அவர்களுடைய இனமாகிய சிங்கள இனத்தின் இனவெறியையும், வன்முறையையும் விட அந்த வன்முறையிலிருந்து தம்மை பாது காத்துக்கொள்ள உருவாகும் தமிழ் இனவாதமும், வன்முறையும்தான் இந்திய அரசையும், ஆளும் வர்க்கத்தையும் உறுத்தும். அப்பொழுது தமிழர்களின் வன்முறையை ஒழிக்கிறேன் என்ற போர்வையில் சிங்களப் பேரினவாதத்துக்கு இந்திய அரசு துணை போகும்.//

அப்பொழுது எனக்கு அது ஒரு மிகைப் படுத்தப் பட்ட அல்லது வீண் பயங்கொண்ட சிந்தனையாகப் புலப்பட்டது. அவர் எழுதியது 1986 என்று நினைக்கிறேன், ஈPKF இந்தியா போகும் முன்பு. இரு சிங்களக் கட்சிகளும் பல ஒப்பந்தங்களைக் குழி தோண்டி புதைத்து தமிழர்களின் மேல் பிரிவினை வாதத்தை திணித்து அரசு வன்முறையின் மூலம் போராளி இயக்கங்களை உருவாக்கி விட்டிருந்த வேளையில் தமிழர்களுடைய நியாயங்களை இந்திய அரசு புரிந்து உதவ முன் வரும் என்று எல்லாத் தமிழரும் நம்பிய காலம்.

இந்திய அரசைப் பற்றிய ஓ. வி. விஜயனின் தீர்க்கதரிசனம் என்றோ நிரூபணமான உண்மை என்பதை சொல்லத் தேவையில்லை. இரட்டை வேடம் போடும் பத்திரிகைகளையும் இப்படி பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் வந்து விட்டது என நினைக்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

11:46 PM, June 11, 2006
Anonymous said...

வணக்கம் ,

வெறும் வலைப்பதிவில் மட்டும் நின்றுவிடாது செயற்பாட்டு ரீதியாகவும் காரியம் ஆற்ற முன் வருமாறு ஆலோசனை வழங்கிய , பத்ரி அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய , கீழ் உள்ள இணைப்புக்களில் சில கோப்புக்கள் உள்ளன, அவற்றைத் தரவிறக்கி உங்கள் நண்பர்கள்,உறவினர்,மற்றும் உங்களுக்குத் தெரிந்த பத்திரிகை நண்பர்கள்,அரசியல் வாதிகளுக்கு அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன்.

http://sooriyan.com/index.php?option=content&task=view&id=3138&Itemid

http://connecttamils.com//images/MISC/This_is_not_a_junk_file_%20%21.ppt

சிறு துளி பெரு வெள்ளம், ஒரு சில மணித்துளிகள்
எமக்காக நீங்கள் ஒவ்வொருவரும் செலவு செய்தால் மின்னஞ்சல் ஊடாகவே பல்லாயிரம் மனிதர்களுக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் அறியச் செய்யலாம்.இன்னும் செய்திப் பத்திரிகைகளயோ அரசியல் வாதிகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனக்களையோ நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை.

நன்றி

3:50 PM, June 13, 2006
Anonymous said...

"நீங்களெல்லாம் பாசிசவாதிகள். கொலைகளை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். இது மேலும் மேலும் கொலைகளைத் தூண்டத்தான் செய்யும். நீங்கள் புலிப்பாசிசத்துக்குத் துணை போகிறீர்கள்."

என்று நான் சொல்லவில்லை. சிறிரங்கன் கவிதை பொழிகிறார்.

10:50 PM, June 13, 2006