இந்தியா - ஈழம்

இன்று தமிழ் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் மறுபடியும் பேசப்படுவது "சிலருக்கு" எரிச்சலாகவே அமைந்து இருக்கிறது. கடந்த காலங்களில் "தமிழீழ ஆதரவாளர்கள்" அனைவரும் "இந்தியாவின் எதிரிகள்" அல்லது "பிரிவினைவாதிகள்" என முன்நிறுத்தப்பட்ட வாதத்தை மீண்டும் நிலை நிறுத்த இவர்கள் தலைப்பட்டுள்ளார்கள்.

"தமிழீழ ஆதரவாளர்கள்" இந்தியாவின் இறையான்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலம், இப் பிரச்சனை குறித்து பேசு முனைபவர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவது தான் இவர்களின் நோக்கமாக உள்ளது.

சில ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகள் தொடங்கி அத்தகைய சிலரை தமிழ் வலைப்பதிவுகளிலும் காண முடியும். "இந்திய தேசியத்தை" முன்னிலைப்படுத்தி அதன் மூலம் தங்களின் அரசியல் சார்புகளை மறைத்து, ஈழம் குறித்து பேச முற்படுபவர்களை பயமுறுத்துவது, தமிழீழ நோக்கங்களை தமிழகத்தில் மறுபடியும் எழாமல் மழுங்கடிப்பது என்பன தான் இவர்களின் நோக்கங்களாக இருந்து வந்திருக்கிறது.

இந்திய தேசிய ஆதரவாளர்கள், தமிழீழ ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்று "சிலரால்" நிலைநிறுத்தப்பட்ட கருத்தாக்கத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, அந்தப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகமும் இன்று முன்னிலையில் இருக்கும் பொருளாதாரச் சூழலில் வளர்ந்த எனக்கு, எந்த உரிமைகளும் இந்தியாவில் மறுக்கப்பட்டதில்லை. இந்தியாவில் தமிழகம் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.

சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் கேட்டு மறுக்கப்பட்ட மாநில சுயாட்சியை விட, வளர்ச்சியடைந்த நிலையில் இன்று மைய அரசில் தமிழகத்தின் முக்கியமான பங்களிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, இன்று மைய அரசின் கூட்டாட்சி நிலையில் வெளிப்பட்டுள்ளது. "தமிழன்" என்று நாம் தொடர்ந்து பராமரித்து வந்த அடையாளமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். தமிழன் என்று நாம் பராமரித்து வந்த அடையாளத்தின் இந்த தாக்கம் தான் இந்திய தேசியத்தில் தமிழகத்திற்கு கணிசமான பங்களிப்பை ஏற்படுத்தி, இன்று இந்தியாவின் ஒரு முக்கியமான பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறது. இந்தியா என்றில்லாமல், ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பிராந்தியங்களில் தமிழகம் முன்னிலை அடைந்திருக்கிறது.

இவ்வாறான சூழலில், தமிழகத்தில் பிரிவினை என்பது எந்தளவுக்கு அர்த்தமற்ற விவாதம் என்பது நமக்கு தெரியும். இந் நிலையில், ஈழம் பற்றிய விவாதக் களம் அமையும் பொழுதெல்லாம், தமிழகத்தில் பிரிவினையை நுழைப்பது சிலரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இவர்கள் இந்திய தேசியத்தைப் பேசுபவர்கள் என்பதை விட தமிழீழத்தை எதிர்ப்பதற்கு இந்திய தேசியத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் உணமையான நிலை.

தமிழீழம், இன்று தமிழகத்தில் இருப்பவர்களின் ஆதரவு/எதிர்ப்பு நிலையைச் சார்ந்து இல்லை. தமிழீழம் குறித்த ஆதரவு/எதிர்ப்பு நிலை சர்வதேச தளத்திற்குச் சென்று விட்டது. எதிர்கால உலகப் பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்த பார்வையில் இவை அலசப்படுகின்றன. இத்தகைய நிலையில் தங்களின் உத்திகளை புலிகள் எப்படி அமைக்கிறார்களோ, சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றுகிறார்களோ, அதைப் பொறுத்தே தமிழீழம் அமைவதோ, ஒன்றுபட்ட இலங்கை அமைவதோ இருக்க முடியும்.

இந்தியாவின் Strategic நடவடிக்கைகள் கூட அவ்வாறே இருப்பதாக நான் கருதுகிறேன். அதனுடைய சில அறிகுறிகள் தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. நேற்று வெளியான இந்திய அமெரிக்க அணுத்துறை ஒத்துழைப்பிற்கான அமெரிக்க செனட்டின் ஆதரவு கூட எதிர்கால பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்து கட்டியம் கூறுகின்றன. இந்தியா எதிர்கால பொருளாதார வல்லரசாகும் சூழலில், இந்தியாவை தன் பக்கம் வைத்துக் கொள்ள அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவுடன் நெருங்குவதன் மூலம் எதிர்காலத்தில் எழக்கூடிய சீனாவின் சவாலை சமாளிக்க இந்தியா நினைக்கிறது. இந் நிலையில் தான் தனது கடந்த கால வெளியுறவு கொள்கைகளில் நிறைய மாற்றங்களை இந்தியா தற்பொழுது கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் Strategic உத்திகள் dynamicக, யதார்த்தங்களைச் சார்ந்து தான் இருக்குமே தவிர, உணர்ச்சிப் பூர்வமாக என்றுமே இருந்ததில்லை.

சில ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களின் "வெறித்தனமான" அபிமானங்களோ, "சில" குழுக்களின் உணர்ச்சி மிகுந்த கூக்குரல்களோ இந்தியாவின் கொள்கைகளை வகுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இந்தியாவை முன்னிலைப்படுத்தி ஈழம் குறித்து Pack செய்யப்படும் என்னுடைய பதிவுகளின் நோக்கங்களும், இந்தியாவின் நோக்கங்களைச் சார்ந்து தான் வெளிப்பட்டுகொண்டிருக்கிறது.