இஸ்ரேலின் பயங்கரவாதம்

இந்தப் போர் இப்படியே தொடர்ந்தால் லெபனான் என்ற நாட்டின் சிலப் பகுதிகள் முற்றிலும் அழிந்து போய் விடுமோ என்று அச்சப்படும் வகையில் அங்கிருந்து ஊடகங்களில் வரும் படங்களும், தொலைக்காட்சிப் படங்களும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேல், லெபனான் மக்கள் மீது தொடுத்திருக்கும் பயங்கரவாதத்தை கோர முகத்தை உணர்த்துவதாகவே இந்த தாக்குதல் உள்ளது.
















எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு மீதோ, சிவிலியன் பகுதிகள் மீதோ இவ்வளவு பெரிய தாக்குதலை இது வரை நடத்தியதில்லை. இஸ்ரேல் என்ற அரசாங்கம் இதனை செய்வதால் இதற்கு "இராணுவ நடவடிக்கை", "Deterrent Strikes" என்றெல்லாம் பெயர் சூட்டப்படுகின்றன. ஒரு அரசாங்கம் நடத்தும் தாக்குதல் என்றாலும் சரி, தீவிரவாத குழுக்கள் நடத்தும் தாக்குதல் என்றாலும் சரி பொதுமக்கள் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும் பயங்கரவாதச் செயலாகத் தான் நான் பார்க்கிறேன்.














இஸ்ரேலின் இந்த பயங்கரவாதத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் நேச நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் போக்கு இந்த நாடுகளின் மோசமான சார்பு நிலையை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப்படுத்திக் கொண்டே இருக்கும் பட்சத்தில், அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாத எண்ணங்களும் இஸ்லாமிய நாடுகளில் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.










இந்தப் பிரச்சனை இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஜூலை 12ம் தேதி இஸ்ரேல் துருப்புகளுக்கும், ஹெஸ்பொல்லா அமைப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களை ஹெஸ்பொல்லா அமைப்பினர் சிறையெடுக்கின்றனர். இது ஒரு தேவையற்ற நடவடிக்கை. இஸ்ரேலை சீண்டிப்பார்க்கும் வேலை என்பது தான் எனது கருத்து. இஸ்ரேல் வீரர்களை விடுவிக்க வேண்டுமென்றால் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விடுக்கின்றனர். இந்தப் பிரச்சனைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறுகின்றனர். இதனை நிராகரிக்கும் இஸ்ரேல் தங்களுடைய இரு இராணுவ வீரர்களை உடனே விடுவிக்க வேண்டுமெனக் கூறுகிறது. இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படும் வரையில் ஹெஸ்பொல்லா நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் எனவும் கூறி லெபனான் முழுவதும் விமானத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

நம்முடைய சமகால வரலாற்றில் மிக மூர்க்கமான ஒரு நாடு இஸ்ரேல் தான். இதனை இஸ்ரேல் அபிமானிகள் "இஸ்ரேலின் தைரியம்" எனக்கூறி கொண்டாடலாம். ஆனால் இந்த மூர்க்கத்தனத்தின் தற்போதைய கோர முகம் தான் லெபனானில் நகழ்ந்து வருகிறது.
உலகெங்கிலும் அனைத்து நாடுகளின் பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இங்கு பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை, தாக்குதல் தான் சரியான வழி என்ற இஸ்ரேலின் நிலையை ஆதரிக்கும் இரட்டை வேட நாடகம் நடத்திக் கொண்டு இருக்கின்றன. இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்காக தொடங்கிய இஸ்ரேலின் பதில் தாக்குதலில் சுமார் 350க்கும் மேற்பட்ட அப்பாவி லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹெஸ்பொல்லாவின் தாக்குதலில் சுமார் 36 இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் (இஸ்ரேல் சமீபகாலங்களில் இல்லாத வகையில் மிக அதிகமான இழப்பை சந்தித்து உள்ளதாக இங்கிருக்கும் ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன!!).

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களை விட பலம் குறைந்த நாடுகளிடமே தங்களுடைய "வீரத்தை" தொடர்ந்து நிலை நிறுத்தி வருகின்றன.

லெபனான் மீது தாக்குதலை தொடுத்திருக்கும் இஸ்ரேலுக்கு தன் மீது லெபனானால் பதில் தாக்குதல் தொடுக்க முடியாது என்பது தெரியும். காரணம் லெபனான் படையின் மொத்த பலமே 40,000 இராணுவ வீரர்கள் தான். லெபனானிடம் விமானப்படை இல்லை, கடற்ப்படை இல்லை. விமான எதிர்ப்பு பீரங்கி கூட அதிகளவில் இல்லை. இந்த தைரியம் தான் இஸ்ரேலை அந் நாடு மீது குரூரமான தாக்குதல் தொடுக்க காரணமாக அமைந்து இருக்கிறது.

ஆனால் தங்கள் மீது பதிலடி கொடுக்கக் கூடிய வல்லமை பெற்ற நாடுகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்களுடைய வீரத்தை பேச்சளவிலேயே வைத்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஈரான், வடகொரியா போன்ற நாடுகளைச் சொல்லலாம். குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்காவுக்கு அச்சம் உண்டு. இன்று மரபுரீதியாக அல்லாமல் ஆயுத பலத்தை ஒட்டி தான் ஒரு நாட்டின் இராணுவ பலம் தீர்மானிக்கப் படுகிறது. இதில் பலமான நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கக் கூடிய வல்லமை நவீன ஆயுதபலம் மூலம் கிடைத்து விடுகிறது. வடகொரியாவை அமெரிக்காவால் தாக்க முடியும் என்றாலும் வடகொரியா அமெரிக்கா மீதும் பலமான பதிலடி கொடுக்க முடியும். அலாஸ்கா வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் வடகொரியாவிடம் உள்ளன. Missile Defence system போன்றவற்றை அமெரிக்க நிறுவ முனைந்து கொண்டிருந்தாலும், வடகொரியாவின் இந்த பலம் தான் இந் நாடு மீதான அமெரிக்காவின் தாக்குதலை பேச்சளவிலேயே வைத்திருக்கிறது.

ஆனால் இராக், லெபனான் போன்ற பலமில்லாத நாடுகளை எளிதில் தாக்கி தங்கள் "வீரத்தை" நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஹெஸ்பொல்லா அமைப்பு தான்

லெபனானின் தென்பகுதிகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்த பொழுது, தெற்கு லெபனானை விடுவிக்க 1980களில் உருவாகிய படை தான் ஹெஸ்பொல்லா. 2000ம் ஆண்டு இஸ்ரேல் படைகள் லெபனானில் இருந்து வெளியேற ஹெஸ்பொல்லாவின் தாக்குதல் மிக முக்கியமான காரணம். இஸ்ரேல் படைகள் வெளியேறியப் பின்னால் லெபனானில் இரு படைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஒன்று லெபனானின் அரசு இராணுவம். மற்றொன்று ஹெஸ்பொல்லா அமைப்பு.

ஹெஸ்பொல்லாவை தீவிரவாதக் குழு என அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறினாலும், இந்த அமைப்பிற்கு லெபனான் மக்களிடையே பலமான ஆதரவு உண்டு. இஸ்ரேல் படைகள் லெபனானில் இருந்து வெளியேற ஹெஸ்பொல்லா தான் முக்கிய காரணம். இதனால் லெபனான் மக்களுக்கு ஹெஸ்பொல்லா மீது அபிமானம் உண்டு. ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு அரசியல் பிரிவு, இராணுவப் பிரிவு என்ற இரு பிரிவுகள் உண்டு. லெபனான் பாரளுமன்றத்தில் இதன் அரசியல் பிரிவிற்கு உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கட்சியிலும் இது அங்கம் வகிக்கிறது. இதன் அரசியல் பிரிவு லெபனான் மக்களுக்கு பிற நிறுவனங்களுடன் இணைந்து நிறைய உதவிகளை செய்து வருகிறது. 2000ம் ஆண்டுக்குப் பின் லெபனானில் போருக்குப் பிந்தைய பல ஆக்கப்பூர்வமான பணிகளில் ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு முக்கியப் பங்கு உண்டு

ஹெஸ்பொல்லா தனது இராணுவப் பிரிவையும் தொடர்ந்து பராமரித்து வருகிறது. ஹெஸ்பொல்லாவிற்கு உதவிகள் சிரீயா, ஈரான் போன்ற நாடுகள் மூலம் கிடைக்கிறது என நம்பப்படுகிறது. இந்த இராணுவப்பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் இருந்தாலும் அதனை ஹெஸ்பொல்லா ஏற்றுக்கொள்வதில்லை. லெபனானுக்கு என்று ஒரு இராணுவம் இருந்தாலும், தெற்கு லெபனானை தங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும் என ஹெஸ்பொல்லா கூறுகிறது. ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவு கலைக்கப்பட்டு லெபனான் இராணுவம், லெபனானின் தென்பகுதிகளை தங்கள் கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது இஸ்ரேலின் வாதம். ஆனால் இதனை ஹெஸ்பொல்லா தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது. அது தவிர ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவை தங்கள் கட்டுப்பட்டில் கொண்டு வரக்கூடிய பலம் கூட லெபனானிடம் இல்லை என்பது தான் உண்மை.

இப்படி ஒரு சிக்கலானப் பிண்ணனியில் தான் தன்னுடைய இரண்டு இராணுவ வீரர்களை விடுவிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறி வருகிறது. ஹெஸ்பொல்லா இஸ்ரேலின் இராணுவ வீரர்களை விடுவிக்கப் போவதில்லை என்று கூறி வருகிறது. ஹெஸ்பொல்லாவின் பலத்தை குறைக்க தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஹெஸ்பொல்லாவின் பலம் குறையவில்லை என அதன் தலைவர் கூறி வருகிறார்.

இவ்வாறு பிரச்சனையின் சூழல் இருக்கும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி லெபனான் மக்கள் தான். ஹெஸ்பொல்லாவின் நிலைகள் என்று கூறிக் கொண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பயங்கரவாதச் செயலாகவே நான் கருதுகிறேன்


உலகெங்கிலும் மனித உரிமைகளை வலியுறுத்தி வரும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இந்த தாக்குதலை நியாயப்படுத்துவதும், போர் நிறுத்த்தை வலியுறுத்தாமல் இருப்பதும் இந் நாடுகளின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகின்றன.

ஹெஸ்பொல்லாவின் முதல் நடவடிக்கை நியாயமற்றது என்பதைக் காரணம் காட்டி லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.