Sunday, July 23, 2006

இஸ்ரேலின் பயங்கரவாதம்

இந்தப் போர் இப்படியே தொடர்ந்தால் லெபனான் என்ற நாட்டின் சிலப் பகுதிகள் முற்றிலும் அழிந்து போய் விடுமோ என்று அச்சப்படும் வகையில் அங்கிருந்து ஊடகங்களில் வரும் படங்களும், தொலைக்காட்சிப் படங்களும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேல், லெபனான் மக்கள் மீது தொடுத்திருக்கும் பயங்கரவாதத்தை கோர முகத்தை உணர்த்துவதாகவே இந்த தாக்குதல் உள்ளது.
















எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு மீதோ, சிவிலியன் பகுதிகள் மீதோ இவ்வளவு பெரிய தாக்குதலை இது வரை நடத்தியதில்லை. இஸ்ரேல் என்ற அரசாங்கம் இதனை செய்வதால் இதற்கு "இராணுவ நடவடிக்கை", "Deterrent Strikes" என்றெல்லாம் பெயர் சூட்டப்படுகின்றன. ஒரு அரசாங்கம் நடத்தும் தாக்குதல் என்றாலும் சரி, தீவிரவாத குழுக்கள் நடத்தும் தாக்குதல் என்றாலும் சரி பொதுமக்கள் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும் பயங்கரவாதச் செயலாகத் தான் நான் பார்க்கிறேன்.














இஸ்ரேலின் இந்த பயங்கரவாதத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் நேச நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் போக்கு இந்த நாடுகளின் மோசமான சார்பு நிலையை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப்படுத்திக் கொண்டே இருக்கும் பட்சத்தில், அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாத எண்ணங்களும் இஸ்லாமிய நாடுகளில் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.










இந்தப் பிரச்சனை இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஜூலை 12ம் தேதி இஸ்ரேல் துருப்புகளுக்கும், ஹெஸ்பொல்லா அமைப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களை ஹெஸ்பொல்லா அமைப்பினர் சிறையெடுக்கின்றனர். இது ஒரு தேவையற்ற நடவடிக்கை. இஸ்ரேலை சீண்டிப்பார்க்கும் வேலை என்பது தான் எனது கருத்து. இஸ்ரேல் வீரர்களை விடுவிக்க வேண்டுமென்றால் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விடுக்கின்றனர். இந்தப் பிரச்சனைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறுகின்றனர். இதனை நிராகரிக்கும் இஸ்ரேல் தங்களுடைய இரு இராணுவ வீரர்களை உடனே விடுவிக்க வேண்டுமெனக் கூறுகிறது. இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படும் வரையில் ஹெஸ்பொல்லா நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் எனவும் கூறி லெபனான் முழுவதும் விமானத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

நம்முடைய சமகால வரலாற்றில் மிக மூர்க்கமான ஒரு நாடு இஸ்ரேல் தான். இதனை இஸ்ரேல் அபிமானிகள் "இஸ்ரேலின் தைரியம்" எனக்கூறி கொண்டாடலாம். ஆனால் இந்த மூர்க்கத்தனத்தின் தற்போதைய கோர முகம் தான் லெபனானில் நகழ்ந்து வருகிறது.
உலகெங்கிலும் அனைத்து நாடுகளின் பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இங்கு பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை, தாக்குதல் தான் சரியான வழி என்ற இஸ்ரேலின் நிலையை ஆதரிக்கும் இரட்டை வேட நாடகம் நடத்திக் கொண்டு இருக்கின்றன. இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்காக தொடங்கிய இஸ்ரேலின் பதில் தாக்குதலில் சுமார் 350க்கும் மேற்பட்ட அப்பாவி லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹெஸ்பொல்லாவின் தாக்குதலில் சுமார் 36 இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் (இஸ்ரேல் சமீபகாலங்களில் இல்லாத வகையில் மிக அதிகமான இழப்பை சந்தித்து உள்ளதாக இங்கிருக்கும் ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன!!).

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களை விட பலம் குறைந்த நாடுகளிடமே தங்களுடைய "வீரத்தை" தொடர்ந்து நிலை நிறுத்தி வருகின்றன.

லெபனான் மீது தாக்குதலை தொடுத்திருக்கும் இஸ்ரேலுக்கு தன் மீது லெபனானால் பதில் தாக்குதல் தொடுக்க முடியாது என்பது தெரியும். காரணம் லெபனான் படையின் மொத்த பலமே 40,000 இராணுவ வீரர்கள் தான். லெபனானிடம் விமானப்படை இல்லை, கடற்ப்படை இல்லை. விமான எதிர்ப்பு பீரங்கி கூட அதிகளவில் இல்லை. இந்த தைரியம் தான் இஸ்ரேலை அந் நாடு மீது குரூரமான தாக்குதல் தொடுக்க காரணமாக அமைந்து இருக்கிறது.

ஆனால் தங்கள் மீது பதிலடி கொடுக்கக் கூடிய வல்லமை பெற்ற நாடுகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்களுடைய வீரத்தை பேச்சளவிலேயே வைத்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஈரான், வடகொரியா போன்ற நாடுகளைச் சொல்லலாம். குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்காவுக்கு அச்சம் உண்டு. இன்று மரபுரீதியாக அல்லாமல் ஆயுத பலத்தை ஒட்டி தான் ஒரு நாட்டின் இராணுவ பலம் தீர்மானிக்கப் படுகிறது. இதில் பலமான நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கக் கூடிய வல்லமை நவீன ஆயுதபலம் மூலம் கிடைத்து விடுகிறது. வடகொரியாவை அமெரிக்காவால் தாக்க முடியும் என்றாலும் வடகொரியா அமெரிக்கா மீதும் பலமான பதிலடி கொடுக்க முடியும். அலாஸ்கா வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் வடகொரியாவிடம் உள்ளன. Missile Defence system போன்றவற்றை அமெரிக்க நிறுவ முனைந்து கொண்டிருந்தாலும், வடகொரியாவின் இந்த பலம் தான் இந் நாடு மீதான அமெரிக்காவின் தாக்குதலை பேச்சளவிலேயே வைத்திருக்கிறது.

ஆனால் இராக், லெபனான் போன்ற பலமில்லாத நாடுகளை எளிதில் தாக்கி தங்கள் "வீரத்தை" நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஹெஸ்பொல்லா அமைப்பு தான்

லெபனானின் தென்பகுதிகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்த பொழுது, தெற்கு லெபனானை விடுவிக்க 1980களில் உருவாகிய படை தான் ஹெஸ்பொல்லா. 2000ம் ஆண்டு இஸ்ரேல் படைகள் லெபனானில் இருந்து வெளியேற ஹெஸ்பொல்லாவின் தாக்குதல் மிக முக்கியமான காரணம். இஸ்ரேல் படைகள் வெளியேறியப் பின்னால் லெபனானில் இரு படைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஒன்று லெபனானின் அரசு இராணுவம். மற்றொன்று ஹெஸ்பொல்லா அமைப்பு.

ஹெஸ்பொல்லாவை தீவிரவாதக் குழு என அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறினாலும், இந்த அமைப்பிற்கு லெபனான் மக்களிடையே பலமான ஆதரவு உண்டு. இஸ்ரேல் படைகள் லெபனானில் இருந்து வெளியேற ஹெஸ்பொல்லா தான் முக்கிய காரணம். இதனால் லெபனான் மக்களுக்கு ஹெஸ்பொல்லா மீது அபிமானம் உண்டு. ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு அரசியல் பிரிவு, இராணுவப் பிரிவு என்ற இரு பிரிவுகள் உண்டு. லெபனான் பாரளுமன்றத்தில் இதன் அரசியல் பிரிவிற்கு உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கட்சியிலும் இது அங்கம் வகிக்கிறது. இதன் அரசியல் பிரிவு லெபனான் மக்களுக்கு பிற நிறுவனங்களுடன் இணைந்து நிறைய உதவிகளை செய்து வருகிறது. 2000ம் ஆண்டுக்குப் பின் லெபனானில் போருக்குப் பிந்தைய பல ஆக்கப்பூர்வமான பணிகளில் ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு முக்கியப் பங்கு உண்டு

ஹெஸ்பொல்லா தனது இராணுவப் பிரிவையும் தொடர்ந்து பராமரித்து வருகிறது. ஹெஸ்பொல்லாவிற்கு உதவிகள் சிரீயா, ஈரான் போன்ற நாடுகள் மூலம் கிடைக்கிறது என நம்பப்படுகிறது. இந்த இராணுவப்பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் இருந்தாலும் அதனை ஹெஸ்பொல்லா ஏற்றுக்கொள்வதில்லை. லெபனானுக்கு என்று ஒரு இராணுவம் இருந்தாலும், தெற்கு லெபனானை தங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும் என ஹெஸ்பொல்லா கூறுகிறது. ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவு கலைக்கப்பட்டு லெபனான் இராணுவம், லெபனானின் தென்பகுதிகளை தங்கள் கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது இஸ்ரேலின் வாதம். ஆனால் இதனை ஹெஸ்பொல்லா தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது. அது தவிர ஹெஸ்பொல்லாவின் இராணுவப் பிரிவை தங்கள் கட்டுப்பட்டில் கொண்டு வரக்கூடிய பலம் கூட லெபனானிடம் இல்லை என்பது தான் உண்மை.

இப்படி ஒரு சிக்கலானப் பிண்ணனியில் தான் தன்னுடைய இரண்டு இராணுவ வீரர்களை விடுவிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறி வருகிறது. ஹெஸ்பொல்லா இஸ்ரேலின் இராணுவ வீரர்களை விடுவிக்கப் போவதில்லை என்று கூறி வருகிறது. ஹெஸ்பொல்லாவின் பலத்தை குறைக்க தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஹெஸ்பொல்லாவின் பலம் குறையவில்லை என அதன் தலைவர் கூறி வருகிறார்.

இவ்வாறு பிரச்சனையின் சூழல் இருக்கும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி லெபனான் மக்கள் தான். ஹெஸ்பொல்லாவின் நிலைகள் என்று கூறிக் கொண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பயங்கரவாதச் செயலாகவே நான் கருதுகிறேன்


உலகெங்கிலும் மனித உரிமைகளை வலியுறுத்தி வரும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இந்த தாக்குதலை நியாயப்படுத்துவதும், போர் நிறுத்த்தை வலியுறுத்தாமல் இருப்பதும் இந் நாடுகளின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகின்றன.

ஹெஸ்பொல்லாவின் முதல் நடவடிக்கை நியாயமற்றது என்பதைக் காரணம் காட்டி லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.

12 மறுமொழிகள்:

╬அதி. அழகு╬ said...

லெபனான் குழந்தைகளுக்கு இஸ்ரேல் குழந்தைகளின் கையெழுத்துகளோடு பரிசு!

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளைக் கொன்றொழித்து, இஸ்ரேல் வெற்றிக்கொடி நாட்டியது!
படங்கள்:
http://www.fromisraeltolebanon.info/

3:46 PM, July 23, 2006
மு. மயூரன் said...

உலகப்போராட்டங்கள் பற்றிய நேர்மையான பார்வையை கொண்டிருந்து அப்போராட்டங்களை வலைப்பதிவுகலுக்கு சரியான கோணத்தில் அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்த பதிவில் சிறு விளக்கப்போதாமை எனக்கு இருக்கிறது.

//இது ஒரு தேவையற்ற நடவடிக்கை. இஸ்ரேலை சீண்டிப்பார்க்கும் வேலை என்பது தான் எனது கருத்து. //

பாலஸ்தீனப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக எதிரிநாட்டு படைவீரரை கைப்பற்றியிருக்கிறார்கள் ஹெஸ்புல்லா போராளிகள்.

இது ஏன் தேவையற்ற நடவடிக்கை?

இஸ்ரேல் பலமான நாடு திருப்பி தாக்கிவிடும் என்பதற்காக , தொடர்ந்தும் அடங்கிப்போய்க்கொண்டும் சமரசம் பேசிக்கொண்டும் இருக்க வேண்டுமா/

இப்படியே பலமான நாடுகளுக்கெல்லாம் அடிப்பணிந்துபோய்க்கொண்டிருப்பதுதான் நியாயமா?

ஜேர்மனி - ஜப்பான் -இத்தாலி கூட்டின் இரண்டாம் உலகயுத்த அனுபவங்களை, இந்தக்கால அமெரிக்க கூட்டுக்களின் வாயிலாக வரலாறு திரும்ப எமக்கு தந்துகொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் வல்லரசுகளுக்கு அடிப்பணிந்துபோவதுதான் சரியான அரசியல் தீர்மானமா/

3:52 PM, July 23, 2006
ALIF AHAMED said...

மனித உயிர் மலிவு விலையில்

4:15 PM, July 23, 2006
மு. மயூரன் said...

இப்பொழுதுதான் சீ என் என் இனுடைய ஹெஸ்புல்லா தொடர்பான ஆவணப்படங்களை பார்த்தேன் சசி.

எவ்வளவு கேவலமாக தம் மக்களையும் உலகையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏமாற்றுகிறது/


நாசிக்கள் பரவாயில்லை போலிருக்கு.

முதலாளிய ஏகாதிபத்தியம் தனது அழிவை உற்பத்தி செய்யத்தொடங்கிவிட்டதாய் தெரிகிறது.

5:23 PM, July 23, 2006
Anonymous said...

//அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களை விட பலம் குறைந்த நாடுகளிடமே தங்களுடைய "வீரத்தை" தொடர்ந்து நிலை நிறுத்தி வருகின்றன.
//

Duh! I guess you're not too familiar with the stories about the Medina divisons last stand or the fact about how the Iraqi Air Force was one of the best in the world before the first Gulf War.

Terms like valour etc are best classified as rhetoric.They have their places in a politicians speech not in a military proffesionals evaluation.

The North Korean missiles are far from ready.None of the IRBMs operationalised(I hope you know what operationalising a missile unit means).

My 2 cents.

5:31 PM, July 23, 2006
Boston Bala said...

முத்துவின் பதிவில் எழுதியதில் இருந்து:

---கொஞ்சமும் மனித தன்மையற்ற இந்த தாக்குதலில் ஏகப்பட்ட சிவிலியன்கள் உயிரிழப்பு---

ஹெசபொல்லா இராணுவ வீரர்களைக் கடத்திக் கொண்டே இருப்பது மட்டும் மனிதத் தன்மையா? ஹமாஸ் கடத்தல்களுக்கு மட்டும் பாராமுகம் ஏனோ?

----அமெரிக்கா இருக்கும் தைரியத்தில் பேட்டை ரவுடி மாதிரி ---

இவ்வளவு எளிதாக இதை அர்த்தமாக்க முடியாது. 2000-த்தில் லெபனான் ஆக்கிரமிப்பை விலக்கியவுடன் ஜனநாயக முறையில் போராளிக் குழுவான ஹெசபொல்லா தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகும் லெபனான் இராணுவம், லெபனான் எல்லையருகே நிறுத்தப்பட வில்லை. சிரியாவின் ஆதிக்கம் அதிகரித்தது. பிரதம் மந்திரியே ஹெசபொல்லாவை 'எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹெசபோல்லா தயவு செய்து தங்கள் தீவிரவாதப் போக்கைக் கைவிட வேண்டும்' என்று வேண்டுகோள் வைக்குமளவு கையாலாகதவராக தன்னை நிலைநிறுத்தி (ப்ரொஜெக்ட்) செய்து கொள்கிறார்.

கோலன் ஹைட்ஸ் தொடர்பாக சிரியா இன்னும் கோபத்தில் இருக்கிறது. பாலஸ்தீன விடுதலைக்குப் பின் ஹமாஸின் நடவடிக்கைகளில் எந்த வித தொய்வும் காணப்படவில்லை. 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம்' என்று இஸ்ரேல் காட்டாவிட்டாலும், இரண்டு கண், கை, கால் எல்லாம் போன பிறகு 'on eye for two eyes, two legs, two hands' என்பது போல் சீற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஈரானின் தற்போதைய பிரதம மந்திரி Mahmoud Ahmadinejad-இன் 'நாஸி அடக்குமுறையே கிடையாது. யூதர்கள் பம்மாத்து செய்கிறார்கள்' என்று பொதுவில் பேசி, சிரியாவின் மூலமாக ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு - செய்யும் அரசியலையும்; ஹமாஸ் வளர்ந்தால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அடங்கி ரஷியாவை மட்டும் மீண்டும் ஆதிக்க சக்தியாக்கும் ப்யூடினின் திட்டத்தையும்; மீசையில் மண் ஒட்டியதைத் தட்டிவிட இஸ்ரேல் தலைவர் Ehmud Olmert, 'தானும் அடித்து ஆட வல்லவன்' என்று நிரூபிக்கும் ஆண்மை பிரஸ்தாபிப்பையும் சேர்த்துப் பார்க்காமல்; 'இஸ்ரேலின் தற்காப்பு' என்று பொதுமையாக்க இயலாது.

=====================

----லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது----

எதை நியாயப்படுத்தி யாருக்கு லாபம்? ஒருவரின் நியாயம் இன்னொருவருக்கு அநியாயம் :-) இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் தொலைதூரப் பார்வை இருக்கிறதா, வெற்றி பெறுமா என்பதைத்தான் - ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் இரானும், நிரந்த்ரப் பகை பாராட்டும் சிரியாவும், விஷயமே தெரியாமல் தாக்கிக் கொண்டிருக்கும் ஹிசபொல்லாவும் ஆராய வேண்டும்.

இந்த சர்ச்சையில் நிரந்தர சமரச தூதுவன் எகிப்தும், அண்டை நாடான ஜோர்டானும் என்ன சொல்கிறது? பக்கத்து வீட்டுக்காரர்களான அவர்களின் நிலைப்பாடு என்ன?

----வடகொரியா மீது அமெரிக்காவுக்கு அச்சம் உண்டு----

நிறைய. வட கொரியாவின் ஏவுகணை சோதனை முடிந்தவுடன், அமெரிக்க நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த தலைப்பு செய்தி: 'North Korean Missiles cannot Reach America'.

அதாவது அமெரிக்காவைத் தாக்காத வரைக்கும் உலகம் எக்கேடு கெட்டுப் போனாலும் அமெரிக்காவுக்கு கவலையில்லை. இரானிய் பிரதமருக்கும் இதே எண்ணம்தான். ஈரானை நேரடியாக பிறர் தாக்க முடியுமா, எப்படி தற்காத்துக் கொள்ள முடியும் என்று சோதனைச்சாலையாக லெபனானைப் பயன்படுத்துகிறார்.

தங்களின் 'தகவற் கட்டுரை'யோடு ஒத்துப் போகிறேன். சிறப்பு நன்றி.

ஹெசபொல்லா என்னும் அண்டை வீட்டார் சொற்படி நடக்கும் முரட்டு குழந்தையைக் கட்டுப் படுத்த முடியாததால், லெபனான் தன்னுடைய வீட்டையே பாழாக்கிக் கொண்டிருக்கிறது.

6:21 PM, July 23, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

பாலா,

வடகொரியாவின் ஏவுகணையின் பலம் குறித்து சரியாக கணிக்க முடியாது. அதே சமயத்தில் அதனை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது.

The U.S. intelligence estimates that untested Taepodong-2 missile could reach Alaska, Hawaii, and parts of the western continental United States with a small high-explosive, biological or chemical payload, but probably not with a nuclear warhead. A three-stage version could theoretically strike all of the United States. Given the probable inaccuracy of the Taepodong-2, these payloads would be militarily insignificant .

However, this missile could possibly threaten the populations of a few large West Coast cities

நான் என்னுடைய கட்டுரையிலேயே கூறியிருந்தேன். வடகொரியாவை தாக்கும் அமெரிக்காவின் பலத்தை யாரும் சந்தேகிக்க முடியாது. ஆனால் அமெரிக்காவிற்கு எதிரான பதிலடியை வடகொரியா கொடுக்க இயலும்.

இதனை முற்றாக நிராகரித்தால் கூட மற்றொன்றை நிராகரிக்க முடியாது. ஜப்பான் முழுமையையும் எளிதாக தாக்க வடகொரியாவால் முடியும்.

North Korea has missiles that can strike Japan. The Nodong could deliver conventional warheads throughout most of Japan (including several U.S. military bases). However, given the missile’s relative inaccuracy, the Nodong is more useful as a “terror weapon” against population centers than as a significant military system


(வடகொரியாவின் ஏவுகணை சோதனையின் பொழுது படித்தச் செய்திகளின் இருந்து நான் சேகரித்த சில தகவல்கள்)

உங்கள் கருத்துக்கு நன்றி

6:56 PM, July 23, 2006
Anonymous said...

////நம்முடைய சமகால வரலாற்றில் மிக மூர்க்கமான ஒரு நாடு இஸ்ரேல் தான். இதனை இஸ்ரேல் அபிமானிகள் "இஸ்ரேலின் தைரியம்" எனக்கூறி கொண்டாடலாம்./////

ரிப்பீட்டு.

* ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.

* எளியவனிடம் தன் வீரத்தைக் காட்டுபவன் அந்த எளியவனிடமே கடைசியாக தோற்றுப் போவான்.

* வாள் எடுத்தவன் வாளால் மடிவான். இது எளியவனுக்கும் பொருந்தும். வலியவனுக்கும் பொருந்தும்.

* ஆடும் வரை ஆடட்டும் நியூட்டனின் மூன்றாவது விதியை சரியாக புரிந்து கொள்ளாத பேதைகள்.

* அன்பே உலக அமைதிக்கு அடிப்படை. அதற்கு எதிராக செயல்படும் எவரும் இங்கு வாழ தகுதியற்றவர்களே.

நடுநிலையான ஓர் கட்டுரையை தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.

//இது ஒரு தேவையற்ற நடவடிக்கை. இஸ்ரேலை சீண்டிப்பார்க்கும் வேலை என்பது தான் எனது கருத்து.//

சகோதரர் மு.மயூரன் அவர்களின் இது தொடர்பான விளக்கத்தையும் தாங்கள் கருத்தில் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

காரணம் என்னவென்றே கூற முடியாத "இஸ்ரேலிய வெறிப்பற்றாளர்கள்" தமிழ் சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நிலைபாட்டை இனியாவது மாற்றிக் கொள்வார்கள் என எதிர்பார்ப்போம்.

அன்புடன்
இறை நேசன்

6:13 AM, July 24, 2006
மு. மயூரன் said...

ஹெஸ்புல்லா பற்றிய தமிழ் கலைக்களஞ்சியக்கட்டுரை ஒன்று தமிழ் விக்கிபீடியாவில் வளர்ந்து வருகிறது.

திறந்த நிலையில் தொகுக்கப்படும் இக்கட்டுரையை வளர்த்தெடுக்க உதவுமாறு அனைவரையும் வேண்டுகிறேன்.

கட்டுரையின் மேலே இருக்கும் "தொகு" என்ற தொடுப்பை அழுத்தி நீங்கள் கட்டுரையில் மாற்றங்கள் செய்யலாம். தகவல்களை சேர்க்கலாம். எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம்.

கட்டுரை இங்கே

5:18 PM, July 24, 2006
CAPitalZ said...

என்னைப் பொறுத்த வரையில், இஸ்ரேல் செய்வது சரியே.

முன்பும் இவ்வாறு ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பணயம் வைத்து வேறு தீவிரவாதிகளுக்காக பண்டமாற்றம் செய்தது. அந்த ருசியில் தான் இப்போதும் செய்ய எத்தணிக்கிறார்கள். இப்படியே போனால், இன்னும் ஓர் முறை ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பண்டமாற்று கேட்கும்.

இயேசு நாதர் உண்மையென்றால், இஸ்ரேல் யூதர்களின் தாயகமாக அங்கீகரிக்க வேண்டும் தானே? அயலில் உள்ளவர்கள் இஸ்ரேலை ஒரு நாடு என்று அங்கீகரிக்க மாட்டோம், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் அழிக்கப்படவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி பிரச்சினை தீரும்?

என்னைப் பொறுத்த வரையில் யூத மதத்தவர்கள் தான் மிகவும் பாவப்பட்டவர்கள். கிறிஸ்தவர்கள் அவர்களை வெறுத்து கொன்றுகுவித்தார்கள். ஜேர்மன், ரஷ்யா என்று பலம் பொருந்திய அத்தனை பேரும் கொன்று குவித்தார்கள். இப்போது முஸ்லிம்களும் கொல்ல வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/

12:38 PM, July 25, 2006
Santhosh said...

இதன் பின்விளைவுகள் பயங்கரமாகும் இந்த போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரவாதிகளாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. இஸ்ரேலின் இந்த போக்கை கண்டிக்காத ஜ.நாவின் போக்கு கண்டனத்துக்குரியதே. எதுக்கு ஜநா இதற்கு மேல்?

3:12 PM, July 26, 2006