Monday, July 31, 2006

Selective மனித உரிமைகள்

திசைகள் மின்னிதழின் "தனி மனிதர் சுதந்திரம்" சிறப்பு பகுதியில் வெளியாகி இருக்கும் எனது கட்டுரை

ஒரு தனிமனிதன் தான் நினைக்கும் எதையும் எந்த வித அச்சமும் இல்லாமல் செய்ய முடிகின்ற ஒரு நிலையை தான் சுதந்திரமான உலகமாக கருதமுடியும். நாம் நினைக்கும் எதையும் என்னும் பொழுது, அது பிறர் சுதந்திரத்திற்கு பிரச்சனையாக அமைந்து விடாமல் இருப்பது முக்கியம். என்னுடைய சுதந்திரம் அளவில்லாமல் இருக்கும் பொழுது, அந்த சுதந்திரத்தை நான் தவறாக பிரயோகிக்கலாம். அவ்வாறு நான் தவறாக பிரயோகிப்பதை தடுக்க சட்டங்களும், தனி மனித சுதந்திரத்தை "குறுக்கும்" அரசாங்கத்தின் நெறிமுறைகளும் தோன்றின.

அரசாங்கத்தின் இந்தச் சட்டங்கள் தனி மனிதனை நெறிப்படுத்துவதற்காக இருந்த நிலை மாற்றம் பெற்று தன்னுடைய இருப்பை நிலை நிறுத்த அரசாங்கங்கள் செயல்படத் தொடங்கும் பொழுது தான் பிரச்சனைகளும் தோன்றுகின்றன. ஒரு நாடு தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் பொழுது, அந்த நிலைப்பாடு ஒரு சமூகத்தின் உரிமைகளை பாதிக்கும் பொழுது பிரச்சனைகள் தோன்றுகின்றன.

தன்னுடைய தனி மனித உரிமைக்கு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் அதனை மக்கள் இயக்கங்கள் எதிர்த்தே வந்திருக்கின்றன. இதில் பலப் பரிமாணங்கள் உள்ளன. தன்னுடைய சுயநிர்ணய உரிமை, மொழியின் சுதந்திரம், இனத்தின் சுதந்திரம், மதச் சுதந்திரம், தன்னுடைய தனிப்பட்ட பேச்சு சுதந்திரம் போன்றவற்றை காப்பாற்ற எல்லா காலங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

தனி மனித சுதந்திரத்தில் மிக முக்கியமானதாக நான் கருதுவது என்னுடைய பேச்சு மற்றும் எழுத்துரிமையை தான். இது தான் பலப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம். பேச்சு மற்றும் எழுத்துரிமை மிகச் சுதந்திரமாக இருக்கும் நிலையில் தான் அந்தச் சமூகம் பல ஆக்கப்பூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூகத்தின், இனத்தின், மொழியின் வளர்ச்சி இத்தகைய ஒரு தடையில்லாத சுதந்திரமான சமூகத்தில் தான் நடைபெற முடியும். பேச்சு உரிமை ஆக்கப்பூர்வமான சிந்தனை வளத்தை உண்டாக்கும். மாற்றுச் சிந்தனைகளும், மாற்று கருத்துக்களும் வளர்ச்சி பெறும். அவ்வாறான ஒரு சமூகச் சூழலில் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி என அனைத்து நிலையிலும் பல ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நடைபெறும்.

" I disapprove of what you say, but I will defend to the death your right to say it" என்று ஒரு பிரபல ஆங்கில எழுத்தாளர் கூறியுள்ளது போல ஒரு தனிமனிதனின் மாற்று கருத்துரிமை காப்பற்றப்பட வேண்டும்.
அதே சமயத்தில் அனைத்து நாடுகளிலுமே ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தை எந்தளவுக்கு அனுமதிப்பது என்பதும், எந்தப் பிரிவுகளில் தனிமனிதனின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது என்பதையும் சட்டங்கள் தீர்மானிக்கின்றன. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் இருக்கின்ற தீண்டாமை தடுப்பு சட்டத்தைச் சொல்லலாம். சுதந்திரத்தை தேவையில்லாமல் பயன்படுத்தி ஒரு சமூகத்தை அவமதிப்பதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. அது போல "வன்முறையை" பிரயோகித்து, மக்களின் சகஜவாழ்க்கையில் ஊறு விளைவிப்பதை பொடா போன்ற சட்டங்கள் தடைசெய்கின்றன. ஆனால் இந்தச் சட்டங்களை சரியாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சனைகள் தோன்றுகின்றன.

ஜனநாயக நாடுகளில் தனிமனித சுதந்திரம் மிக முக்கியமானதாக கருதப்பட்டாலும், ஜனநாயக நாடுகளிலும் பிரச்சனைகள் ஏற்படவே செய்கின்றன. ஒரே சமூக நிலையை பெற்றிருந்தால் எந்த நாடுகளிலும் பிரச்சனைகள் இருக்காது. ஆனால் ஏற்ற இறக்கங்களுடன் பல வகையான சமூக இனங்கள் வாழுகின்ற நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படுவது மிக இயல்பான நிலையாகவே இருக்கின்றது.

இதற்கு அடிப்படை காரணம் "பெரும்பான்மை" என்ற ஒரு நிலையைச் சுற்றியே இங்கு இருக்கின்ற ஜனநாயக அரசாங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது தான். ஒரு பெரும்பான்மை சமூகம் ஆளும் பொழுது அந்த பெரும்பான்மை சமூகத்தை முன்நிறுத்தி சிறுபான்மை சமூகத்தின் முக்கியத்துவத்தை குறைக்க "முயலும் பொழுது" பிரச்சனைகள் உருவாகின்றன. அவ்வாறு பிரச்சனைகள் உருவாகும் பொழுது மக்களை நெறிப்படுத்த வேண்டிய சட்டங்கள் தவறாக பயன்படுத்தப் படுகின்றன.

இப்படியான அடிப்படை நிலையை கொண்டு நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளை அலசும் பொழுது, தனிமனித சுதந்திரம் குறித்த போராட்டங்களை நாம் உணர முடியும்

1967ல் இந்தியை கட்டாயமாக்கிய இந்திய மைய அரசின் சட்டம் தங்களுடைய உரிமைகளை, மொழிச் சுதந்திரத்தை பாதித்ததையடுத்து தமிழகத்தில் மொழிப் போராட்டம் தொடங்கியது.

சிங்கள மொழிக்கு மட்டும் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை எதிர்த்து இலங்கையில் தொடங்கிய போராட்டம் தான் பின்னர் படிப்படியாக மாற்றம் பெற்று உரிமை போராட்டமாக, சுதந்திர தமிழீழ போராட்டமாக உருவாகி இருக்கிறது.

அது போல ஒரு தேசியத்தின் இருப்பை ஒரு சமூகம் கேள்விக்குள்ளாக்கும் பொழுது, அரசாங்கம் இந்த மாற்று சிந்தனைகளை ஒடுக்க முயலுகிறது.

இன்று உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் சிலப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் தேசியம் என்பதைச் சார்ந்து நடைபெறும் பிரச்சனைகளே. இது தனிமனித சுதந்திரத்தில் ஒரு சிக்கலான நிலையை தோற்றுவித்து இருக்கிறது. தேசியம் என்பது ஒவ்வொருவரின் விருப்பங்களைச் சார்ந்தே இருக்க முடியும். என்னுடைய தேசியத்தை நான் யார் மீதும் திணிக்க முடியாது. ஒரு தேசியத்தை ஏற்க மறுக்கும் சமூகத்தின் நிலையை நாம் மதிக்க வேண்டும். அவர்களின் சுயநிர்ணய உரிமைகளை நாம் பேண வேண்டும். ஒரு சமூகம் தான் விரும்பும் நாட்டினை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப அம் மக்கள் சுயநிர்ணயம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் அதற்கு நேர்மாறான நிலையே பல தேசிய இனங்களின் பிரச்சனைகளாக இன்று உலகெங்கிலும் பல இடங்களில் நடந்து வருகிறது.

அது போல பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற பழமைவாதம் முன்நிறுத்தப்படும் பொழுது, அதனை எதிர்க்கும் நிலையில் பிரச்சனைகள் உருவாகின்றன. இந்தக் கட்டுரையை எழுதும் சமயத்தில் கூட சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடும் உரிமை தடைசெய்யப்பட்டது குறித்து பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இங்கும் என்னுடைய வழிபாட்டு உரிமையை சில ஆகம கட்டுப்பாடுகள் மூலம் தடைவிதிக்கும் முயற்சிகள் என்னுடைய தனிமனித சுதந்திரத்தை பாதிக்கவே செய்கின்றன.

இப்படியான பலப் பரிமாணங்களில் தனிமனித சுதந்திரம் குறித்த பிரச்சனைகள் இன்று இந்தியாவிலும், பிற நாடுகளிலும் எழுந்திருக்கிற நிலையில் தனிமனித சுதந்திரம் எந்தளவுக்கு இந்தியாவில் பேணப்படுகிறது என்ற கேள்வி இந்தியா சுதந்திர தின மலருக்காக கட்டுரை எழுதும் பொழுது எனக்கு எழுகிறது.

இந்தியாவில் தனிமனித உரிமைகள் மிக மோசமான நிலையில் இல்லை என்றாலும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. பிற மாநிலங்களில் Selective மனித உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

பல தருணங்களில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. ஒரு மேடைப் பேச்சிற்காக ஒரு வருடம் பொடா சிறையில் இருந்த வைகோ, ஒரு அரசாங்கத்திற்கு எதிராக இருந்த காரணத்தால் பொடாவில் அடைக்கப்பட்ட நக்கீரன் கோபால், அஸ்ஸாம் மற்றும் காஷ்மீரில் மனித உரிமைகளை துச்சமாக மதிக்கும் இராணுவம் போன்றவை இந்தியாவில் தனிமனித சுதந்திரம் எந்தளவுக்கு பேணப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன.

1 மறுமொழிகள்:

Muthu said...

சசி,

நல்ல கட்டுரை

8:34 AM, August 01, 2006