In the Line of Fire - Nuclear Proliferation

இந்தக் கட்டுரையின் முந்தையப் பகுதி

பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப்பின் புத்தகம் இந்திய ஊடகங்களால் மட்டுமில்லாமல் பாக்கிஸ்தான் ஊடகங்களாலும் மிகக் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இதற்கான காரணங்களை அவருடைய புத்தகத்தின் மற்றொரு அத்தியாயமான Nuclear Proliferation - பாக்கிஸ்தான் அணு ஆயுதங்கள் குறித்த அத்தியாயத்தில் காண முடிகிறது. ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு பாக்கிஸ்தான் அணு ஆயுத திட்டங்கள் குறித்த ஆரம்ப கால ரகசியங்களை முஷ்ரப் வெளிப்படுத்தியுள்ள விதம் இந்தப் புத்தகத்திற்கு கடுமையான எதிர்ப்பை பாக்கிஸ்தான் ஊடகங்களிலும் அவரின் எதிர்ப்பாளர்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது

என்ன தான் இந்திய ஊடகங்கள் முஷ்ரப்பின் புத்தகத்தை நிராகரிக்க முயன்றாலும், இந்தப் புத்தகம் மிக சுவாரசியமான பல இராணுவ விடயங்களை சொல்லிக் கொண்டு செல்வதால் நிச்சயம் நிறையப் பிரதிகளை விற்று தீர்க்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயத்தில் இதில் எழுதப்பட்டுள்ள சில கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்றாலும் இது நிராகரிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. அவ்வளவு எளிதாக நிராகரித்து விடவும் முடியாது என்று தான் தோன்றுகிறது

பாக்கிஸ்தானின் ஆணு ஆயுதங்கள் பற்றிய ஆரம்ப கால விடயங்களை சுவாரசியமாக விவரிக்கிறார் முஷ்ரப். பாக்கிஸ்தான் அணு திட்டத்தின் தந்தை எனக்கூறப்படும் A.Q.கான் நெதர்லாந்தில் யூரேனியம் என்ரிச்மெண்ட் துறையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தவர். 1975ல், அதாவது 1974ல் இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை மேற்க்கொண்டப் பிறகு இவர் பாக்கிஸ்தான் அணுதிட்டத்தில் பங்காற்ற தாமாக முன்வந்ததாக முஷ்ரப் கூறுகிறார். இவர் நெதர்லாந்தில் இருந்து பாக்கிஸ்தான் வந்த பொழுதே, அங்கிருந்து centrifuges drawingsஐ கொண்டு வந்ததாக முஷ்ரப் கூறுகிறார். அதோடு இல்லாமல் பாக்கிஸ்தானின் ஆரம்ப கால அணு ஆயுத திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை ஐரோப்பாவில் உள்ள சில "திரைமறைவு" தனியார் குழுக்களிடம் இருந்து பெற்றதாக முஷ்ரப் கூறுகிறார். இந்தியாவும் இதே சமயத்தில் தன் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்ததால் இந்தியாவும் இதே தனியார் குழுக்களிடம் இருந்து அணு தொழில்நுட்பத்தை பெற்றிருக்கலாம் என்கிறார் முஷ்ரப்.

...In the years that followed, we obtained all the other materials and technology we needed through an underground network based mainly in the developed countries of Europe. India was also developing its nuclear arsenal during these years. Perhaps we were both being supplied by the same network, the non-state proliferators

தங்களுக்கு கிடைத்த அணு ஆயுத தொழில்நுட்பம் தங்களுடையது அல்ல என்றும் அது சில தனியார் அமைப்புகளிடம் இருந்து திரைமறைவு காரியங்களில் பெறப்பட்டது என்பதை முஷ்ரப் வெளிப்படையாக கூறியது தான் பல பாக்கிஸ்தான் ஊடங்களில் முஷ்ரப் மீது தாக்குதல் தொடுக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும்.

இந்தியா தெற்காசியாவிலும், மத்திய கிழக்குப் பகுதியிலும் தன்னை ஒரு வல்லரசாக உருவாக்கிக் கொள்ளவே அணு ஆயுதங்களை முதலில் சோதனை செய்தது என்றும், அதைத் தொடர்ந்து தான் பாக்கிஸ்தான் தன்னுடைய தற்காப்புக்காக அணு ஆயுதங்களை சோதித்தது - India's intentions were offensive and aggressive; ours were defensive என்கிறார் முஷ்ரப். முஷ்ரப்பின் இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்திரா, ராஜீவ், வாஜ்பாய் இவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியாவின் hegemonyஐ வெளிப்படுத்தவே பல சமயம் முயன்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்திரா, ராஜீவ் காலங்களில் ரா அமைப்பு மூலம் இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளில் ஏற்படுத்திய நாசவேலைகள் ஒரு சிறந்த உதாரணம்.

பாக்கிஸ்தானின் அணு ஆயுத தந்தை எனப்படும் A.Q.கான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் முஷ்ரப். A.Q.கானின் திரைமறைவு வேலைகள் தனக்கு தெரிந்து இருந்தாலும், அவர் மீது பாக்கிஸ்தான் மக்கள் வைத்திருந்த அளவற்ற மரியாதை காரணமாக தன்னால் அவரது குற்றங்களை சரியாக வெளிக்கொண்டு வரமுடியவில்லை என்கிறார் முஷ்ரப். A.Q.கானுக்கும் வடகொரியா, ஈரான், லிபியா போன்ற நாடுகளுக்கு இருந்த திரைமறைவு தொடர்புகளை வெளிப்படுத்துகிறார். இவை தவிர கான் துபாயில் சட்டவிரோதமான ஒரு அணு ஆயுத குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் பல நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றார் என்கிறார் முஷ்ரப். இந்த சட்டவிரோதக் குழுவில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் பயற்சி எடுத்தனர் என்றும் முஷ்ரப் கூறுகிறார்.

இலங்கை, பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் கான் குழுவில் அணு ஆயுதப் பயிற்சி எடுத்ததாக முஷ்ரப் கூறுகிறார். இவர்கள் தவிர இந்தியாவைச் சேர்ந்த சிலரும் இங்கு பயிற்சி எடுத்தாகவும் இந்தியாவின் யூரேனியம் என்ரிச்மெண்ட் தொழில்நுட்பம் பாக்கிஸ்தான் அணு விஞ்ஞானி A.Q.கானிடம் பயிற்சி எடுத்த இந்தியர்கள் மூலமாக இந்தியாவிடம் சென்று சேர்ந்து விட்டது என்று கூறி ஒரு புதுக் கதையை எழுப்புகிறார் முஷ்ரப்.

Ironically, the network based in Dubai had employed several Indians, some of whom have since vanished. There is a strong probability that the Indian uranium enrichment program may have its roots in the Dubai-based network and could be a copy of the Pakistani centrifuge design. This has also been recently alluded to by an eminent American nonproliferation analyst

முஷ்ரப்பின் இந்த வாதம் தான் பலருக்கு நகைச்சுவையை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் முஷ்ரப் இதனை கூறுகிறார் ? அந்த அமெரிக்கன் nonproliferation analyst யார் ? யாரோ கூறியதை எப்படி ஒரு ஜனாதிபதி தன் சயசரிதையில் கூற முடியும் ?

எனக்கு ஒரு பட்சி சொன்னது என்ற பாணியில் முஷ்ரப் இவ்வாறு எழுதியிருப்பது தான் இந்திய ஊடகங்களும், தீவிர இந்திய அபிமானிகளும் இந்த புத்தகம் மீது தொடுத்திருக்கும் தாக்குதலுக்கு முக்கிய காரணம். அதுவும் தவிர பாக்கிஸ்தானின் அணு ஆயுதப் பாதுகாப்பு எவ்வாறு மிக மோசமான நிலையில் இருந்தது என்பதை அவரே விவரித்து விட்டு, அமெரிக்கா இந்தியாவின் அணு ஆயுத நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, இந்தியாவுடன் அணு ஆயுத ஒத்துழைப்பை செனட் மூலமாக நிறைவேற்றியுள்ள தருணத்தில், இந்தியாவின் அணு திட்டம் பாக்கிஸ்தானின் காப்பி என்று போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்வது தான் இந்த புத்தகத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது.

அதே சமயத்தில் முஷ்ரப் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறியிருக்கும் இந்த வரிகள் பொருட்படுத்த வேண்டியவை அல்ல. இந்த ஒரு வரிக்காக முழு புத்தகத்தையும் நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த புத்தக ஆசிரியரும் தன்னுடைய சார்புகளை சில இடங்களில் அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தவே செய்வார். முஷ்ரப்பின் இந்த வரிகளும் அந்த வகையைச் சார்ந்தது தான்

இந்தப் புத்தகத்தில் பொதுவாகவே தன்னையும், பாக்கிஸ்தானையும் அதிக அளவில் முன்னிலைப்படுத்துகிறார் முஷ்ரப். பாக்கிஸ்தான் அணு நிலையங்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் எழ ஏ.யு.கான் தான் காரணம் என்கிறார் முஷ்ரப். தனக்கு ஏ.யு.கான் பற்றி தெரிந்தாலும் பாக்கிஸ்தான் மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஹீரோ இமேஜ் காரணமாகவே தன்னால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்கிறார் முஷ்ரப்.

பல சட்டவிரோதமான அணு ஆயுத தொடர்புகளைக் கொண்டிருந்த ஏ.யு.கான் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், பொதுமக்களிடம் இந்த உண்மையை கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தான் கூறியதாகவும் முஷ்ரப் கூறுகிறார். ஏ.யு.கான் இதற்குப் பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பாக்கிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கோரினார். பின்பு வீட்டுக் காவலிலும் அடைக்கப்பட்டார். இப்பொழுதும் வீட்டு காவலில் தான் உள்ளார்.

இந்தியா குறித்தான விரிகளை நீக்கி விட்டு பார்த்தால் இந்த அத்தியாயம் சுவாரசியமாகவே உள்ளது. ஆனால் தற்பொழுது ஜனாதிபதியாக உள்ள ஒருவர், அவரது நாட்டு ரகசியங்களை வெளிப்படுத்துவது சரியானது தானா ? அதைத் தான் பாக்கிஸ்தான் ஊடகங்கள் சாடிக் கொண்டிருக்கின்றன

Excerpts from "In the Line of Fire" by Pervez Musharraf
Published by FREE PRESS
Copyright 2006 by President Pervez Musharraf