Sunday, October 08, 2006

காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

காஷ்மீரில் இன்று நடப்பது சுதந்திர போராட்டம் என பாக்கிஸ்தான் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு நடப்பது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் பயங்கரவாதம் என இந்தியா கூறி வருகிறது. தீவிர இந்திய, இந்துத்துவா அனுதாபிகளும், அடிப்படைவாதிகளும் இதனையே கூறிவருகின்றனர்.

ஆனால் உண்மையில் அங்கு நடந்தது, நடைபெறுவது என்ன ?

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையாக ஆரம்பித்து, பின் அவர்களில் சில குழுக்களின் ஆயுதப் போராட்டமாக உருவாகியது தான் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம்.

ஆனால் அவர்களுக்கு ஆதரவு தருகிறேன் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து அந்த போராட்டத்தின் முகத்தை சிதைத்து இன்று காஷ்மீரை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிய பெருமை பாக்கிஸ்தானையேச் சாரும்.

காஷ்மீர் முஸ்லிம்கள் சுபிஸம் என்ற இஸ்லாம் பிரிவைச் சார்ந்தவர்கள். இதனை Liberal Islam என்று கூறுவார்கள். ஆனால் இன்று பாக்கிஸ்தானின் பஸ்தூன்களும், முல்லாக்களும், ஆப்கானிஸ்தானின் அடிப்படைவாதிகளும் காஷ்மீரில் புகுந்து காஷ்மீரின் முகத்தையும், காஷ்மீர் முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையையும் சிதைத்து இருக்கின்றனர். காஷ்மீர் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நெருங்கிய இணக்கம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் பாக்கிஸ்தானின் வருகைக்குப் பிறகு இந்துக்கள் மீதான தாக்குதலை பாக்கிஸ்தான் ஆதரவு குழுக்கள் தொடுத்தன. காஷ்மீர் பூர்வீக இந்துக்களான காஷ்மீரி பண்டிட்களை காஷ்மீரில் இருந்து விரட்டியவர்கள் கூட பாக்கிஸ்தான் அதரவு குழுக்கள் தான். இதனை காஷ்மீரின் ஆயுதக்குழுக்களும், மிதவாத போராட்டக் குழுக்களும் எதிர்த்தன என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இன்று காஷ்மீர் மக்கள் தங்களின் சிதைந்து போன வாழ்க்கை முறையையும், போராட்ட முகத்தையும் வெளிக்கொண்டு வரமுடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர்.

இது குறித்து நான் முன்பு எழுதிய காஷ்மீர் குறித்த கட்டுரையை மீள்பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

அதனை இங்கே தருகிறேன் (காஷ்மீர் குறித்த எனது பதிவுகள் - 1, 2, 3, 4, 5, 6)


காஷ்மீர் முஸ்லீம்கள் சுபிஸம் - Sufism என்ற ஒரு முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். இதனை முஸ்லீம்களின் ஒரு பிரிவாக சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாமுக்கு வெளியே இருந்து இது தோன்றயதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள். எது எப்படியாயினும் இதுவும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தது தான்.

காஷ்மீரில் பண்டிட் என்று அழைக்கப்படும் அனைவருமே ஹிந்துகள் என்று கூறி விட முடியாது. முஸ்லீம்கள் கூட தங்கள் பெயருடன் பண்டிட் என்பதை இணைத்துக் கொள்வது வழக்கம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் மிக இணக்கமாக இருந்த சூழலில் ஹிந்து கலாச்சார தாக்கம் முஸ்லீம்களிடம் இருந்தது. காஷ்மீரில் இருந்த முஸ்லீம் மதகுருக்களை "முஸ்லீம் ரிஷிகள்" என்று அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.


காஷ்மீர் முஸ்லீம் மதகுருக்களில் நந்தி ரிஷி என்பவர் முக்கியமானவர். சுபிஸம் காஷ்மீர் முஸ்லீம்களிடையே பரவ இவர் தான் காரணம். முஸ்லீம் மக்களால் மட்டுமில்லாமல் ஹிந்துக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்டவர். இவருடைய நினைவிடத்துக்கு Chrar-e-Sharief என்று பெயர். ஹிந்து, முஸ்லீம் மக்கள் இருவருமே இந்த நினைவிடத்துக்கு செல்வது வழக்கம். அவரை பின்பற்றியவர்களில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக இருந்தனர். மாமிசம் உண்ணாமை, தியானம் போன்றவை இவர்களால் பின்பற்றப்பட்டது.
முஸ்லீம்-ஹிந்து கலாச்சாரம் போன்ற வித்தியாசங்கள் இல்லாமல், "காஷ்மீர் கலாச்சாரம்" என்பதாகவே அக் காலத்தில் இருந்தது.

முஸ்லீம் பிரதேசமா, ஹிந்து பிரதேசமா என்ற கேள்வியை விட சமத்துவமான ஒரு பிரதேசமாகத் தான் காஷ்மீர் இருந்தது. எனவே தான் காஷ்மீர் இந்தியாவுடனும் செல்லக்கூடாது, பாக்கிஸ்தானுடனும் செல்லக்கூடாது, சுதந்திரமாக ஒரு சமத்துவ பூமியாக, தன் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் காஷ்மீர் மக்களிடையே இருந்தது.

உண்மையில் காஷ்மீரில் தீவிரவாதம் எப்படி தோன்றியது ? பாக்கிஸ்தான் தூண்டுதலால் தான் தோன்றியதா, இல்லை பிரச்சனையின் இறுதி வடிவமாக தீவிரவாதம் வெடித்ததா ?

காஷ்மீர் மக்களிடையே இருந்த விடுதலை உணர்வு, மைய அரசு தொடர்ந்து நடத்தி வந்த மொம்மை ஆட்சி போன்றவற்றால் வெறுப்புற்று ஆயுத போராட்டத்தை காஷ்மீர் இளைஞர்கள் தொடங்கிய பொழுது, இந்த தருணத்திற்காகவே பல வருடங்களாக காத்திருந்த பாக்கிஸ்தான் தன் ஆதரவு கரத்தை நீட்டி காஷ்மீரை இன்றைக்கு ரத்த பூமியாக மாற்றி விட்டது.காஷ்மீரில் தீவிரவாதம் வேரூன்ற காரணமான நிகழ்ச்சிகளை கவனிப்போம்.

ஷேக் அப்துல்லா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் மிர்சா முகமது அப்சால் பெக் போன்றோர் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணயம் கேட்டு போராட தொடங்கியதால் கொடைக்கானலில் கொண்டு வந்து சிறைவைக்கப்பட்டனர், காஷ்மீரின் தலைவரை தமிழ்நாட்டில் கொண்டு வந்து சிறை வைத்து அவரை காஷ்மீர் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இந்தியா முயன்றது. பல ஆண்டுகள் ஷேக் அப்துல்லா சிறையில் இருந்ததையடுத்து மிர்சா முகமது அப்சால் பெக் ஆதரவுடன் "ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பு" உருவாக்கப்பட்டது. இவர்கள் ஷேக் அப்துல்லாவின் விடுதலை கேட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் மூலம் உருவாகிய முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் சபீர் ஷா, இன்றைய பிரிவினைவாத அமைப்பான "ஜம்மு காஷ்மீர் ஜனநாயக விடுதலை முண்ணனியின்" தலைவர்.

1967ல் இந்த அமைப்பை சார்ந்த சில இளைஞர்கள் சி.ஆர்.பி.எப் பிரிவைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதே ஆண்டில் "காஷ்மீர் தேசிய விடுதலை இயக்கம்" என்ற அமைப்பை முகமது மெக்பூல் என்பவர் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் நோக்கம் காஷ்மீரை கொரில்லா போர் மூலமாக விடுவிப்பது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களுக்காக சில முறை கைது செய்யப்பட்டனர்.

பின்னாளில் காஷ்மீரின் முக்கிய தீவிரவாத அமைப்பாக உருவாகிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி (JKLF), 1978ல் அமானுல்லா கான் என்பவரால் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

இது தவிர அல்-பத்தா, ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைப்பு என பல தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் தோன்றிய வண்ணம் இருந்தன.

இவையெல்லாம் காஷ்மீரில் சுயமாக, பாக்கிஸ்தான் சார்பு இல்லாமால் காஷ்மீரின் விடுதலை என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு காஷ்மீர் இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள்.

1982ல் ஷேக் அப்துல்லாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரானார். அவர் முதல்வர் ஆனார், பிறகு இந்திரா காந்தி அவரை டிஸ்மிஸ் செய்தார். வழக்கம் போல பலக் குழப்பங்கள் காஷ்மீரில் அரங்கேறின.

1987 தேர்தலில் பரூக் அப்துல்லா ராஜீவ் காந்தியின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

இந்த தேர்தல் தான் காஷ்மீரில் தீவிரவாதம் தோன்ற வழிவகுத்தது.

இந்த தேர்தலில் காஷ்மீரின் பல அமைப்புகள் ஒன்றினைந்து "முஸ்லீம் ஐக்கிய முண்ணனி - Muslim United Front - MUF", என்ற அமைப்பை தோற்றுவித்தனர். இது பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டது. பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் (76 தொகுதிகள்) போட்டியிட்டது. MUF 43 தொகுதிகளில் போட்டியிட்டது.

காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த தேர்தலில் கலந்து கொண்டனர். அவர்கள் MUF ஐ ஆதரித்தனர். இந்த தேர்தலில் பல இடங்களில் MUF வெல்லும் என்று நம்பப்பட்டது.

ஆனால் வழக்கம் போல இந்த தேர்தலிலும் தில்லியில் இருந்து தேர்தல் முறைகேடுகள் அரங்கேறின. MUFன் தேர்தல் ஏஜெண்ட்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் முறையற்று நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையும் சரியாக நடக்க வில்லை.

MUF 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பரூக் அப்துல்லா வெற்றி பெற்று முதல்வரானார்.

பல இடங்களில் எளிதாக வெற்றி பெற்றிருக்க கூடிய MUF முறையற்ற தேர்தலால் தோல்வியடைந்ததை கண்ட காஷ்மீர் இளைஞர்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை இழந்தனர். ஆயுதம் ஏந்த தொடங்கினர். 1987 தேர்தலில் கலந்து கொண்டு போட்டியிட்ட பலர் பின்னர் தீவிரவாதிகளாக மாறினர்.

1987 தேர்தல் முறையாக நடந்திருந்தால் தீவிரவாதம் தோன்றியிருக்காது. ஆனால் தில்லியின் அதிகாரத்தை எதிர்க்கும் ஒரு அரசாங்கம் காஷ்மீரில் அமைந்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு வலுவான எதிர்கட்சி உருவாகியிருக்கும். ஆனால் இந்திய ஆதரவு அரசாங்கம் தான் காஷ்மீரில் அமைய வேண்டும், எதிர்கருத்துக்கள் இருக்ககூடாது என்ற மைய அரசின் எண்ணம் தான் காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய ஆட்சி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய அதிகாரத்தின் மீது தோன்றிய இந்த அவநம்பிக்கை தான் காஷ்மீரில் தீவிரவாதம் ஏற்பட முக்கிய காரணம்.

பல ஆண்டுகளாக காஷ்மீரில் என்ன செய்யலாம் என்று காத்திருந்த பாக்கிஸ்தான் இந்த வாய்ப்பை கைவிட விரும்பவில்லை. காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவத் தொடங்கியது. ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. பயிற்சி மையங்களை நடத்தியது. தீவிரவாதத்தை வளர்த்தது.

அதே நேரத்தில் JKLFன் கோஷமும் பாக்கிஸ்தானை எரிச்சல் படுத்தியது. அவர்கள் கேட்டது ஒட்டுமொத்த விடுதலை. இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருக்கும் காஷ்மீரை இணைத்து ஒன்றிணைந்த காஷ்மீரை உருவாக்கி ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவது. இதனை பாக்கிஸ்தான் விரும்பவில்லை. காஷ்மீர் தன்னுடன் இணைய வேண்டும் என்பது தான் பாக்கிஸ்தானின் எண்ணம்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி - JKLF, காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சூழலில், காஷ்மீரின் சுதந்திர கோஷம் வலுப்பெற்றிருந்த நிலையில் ஹிஸ்புல் முகாஜீதீன் Hizbul Mujahideen என்ற அமைப்பை JKLFக்கு போட்டியாக பாக்கிஸ்தான் காஷ்மீரில் களம் இறக்கியது.

மதச்சார்பின்மையையும் காஷ்மீரின் விடுதலையையும் வலியுறுத்தி போராட தொடங்கிய JKLF ஒரம்கட்டப்பட்டு ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றை சேர்ந்த மதவெறி கும்பல்கள் காஷ்மீர் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டன. ஹிந்துக்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்பிய காஷ்மீரிகளுக்கு எதிராக முஸ்லீம் அடிப்படைவாதத்தை இவர்கள் வலியுறுத்த தொடங்கினர். மதரீதியாக ஹிந்து, சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் நடத்தி மதநல்லிணக்கத்தை குலைத்தனர்.

Sufism என்ற மென்மையான முஸ்லீம் வழி வந்த காஷ்மீர் மக்கள் இன்று தலிபான் போன்ற பயங்கரவாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டனர். காஷ்மீரிகளின் விடுதலையை ஆதரிப்பதாக கூறி அந்த போராட்டத்தின் முகத்தை பாக்கிஸ்தான் சிதைத்து விட்டது.

உண்மையான காஷ்மீரிகள் தங்கள் விடுதலையையும் அல்லது குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க, காஷ்மீர் பிரச்சனை பயங்கரவாதமாக, ஜிகாத் என்ற பெயரில் உருமாற்றப் பட்டு விட்டது.

இன்று காஷ்மீரிகள் நினைத்தால் கூட தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க முடியாதவாறு அவர்களது கலாச்சாரமும், மத நல்லிணக்கமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது.

23 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

தற்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், பதிவுக்கு நன்றி

12:44 PM, October 08, 2006
வெற்றி said...

சசி,
நான் இன்னும் உங்களின் பதிவை முழுமையாகப் படிக்கவில்லை. படித்த பின்னர் கருத்துச் சொல்கிறேன்.

//ஆனால் அவர்களுக்கு ஆதரவு தருகிறேன் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து அந்த போராட்டத்தின் முகத்தை சிதைத்து இன்று காஷ்மீரை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிய பெருமை பாக்கிஸ்தானையேச் சாரும்.//

CIA இன் பங்கும் கணிசமானது என்றே நான் கருதுகிறேன். இந்தியா முன்னர் சோவியத் ஒன்றியத்தின் நட்புநாடாக இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தானில் சோவியத்திற்கு எதிராகப் போராடிய தலிபான் போராளிகளுக்கு அமெரிக்க உளவுப் படையும் பாகிஸ்தான் உளவுப்படையுமே பின் பலமாக இருந்தனர். அத் தருணத்தில் சோவியத்தின் நட்புநாடாகத் திகழ்ந்த இந்தியாவிலும் சிக்கலைத் உருவாக்க அமெரிக்க உளவுப் படையும் பாகிஸ்தான் உளவுப் படையும் முடிவெடுத்தன. இவர்களே காஷ்மீரை இப்படியொரு நிலைக்குத் தூண்டினர் என்பதுதான் என் கருத்து.

3:32 PM, October 08, 2006
பத்மா அர்விந்த் said...

1987 தேர்தல் முறையாக நடந்திருந்தால் தீவிரவாதம் தோன்றியிருக்காது. ஆனால் தில்லியின் அதிகாரத்தை எதிர்க்கும் ஒரு அரசாங்கம் காஷ்மீரில் அமைந்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு வலுவான எதிர்கட்சி உருவாகியிருக்கும். ஆனால் இந்திய ஆதரவு அரசாங்கம் தான் காஷ்மீரில் அமைய வேண்டும், எதிர்கருத்துக்கள் இருக்ககூடாது என்ற மைய அரசின் எண்ணம் தான் காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய ஆட்சி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய அதிகாரத்தின் மீது தோன்றிய இந்த அவநம்பிக்கை தான் காஷ்மீரில் தீவிரவாதம் ஏற்பட முக்கிய காரணம்.

- I am just surprised at this conclusive statements sasi. One can not proove or disproove these statements. I agree with vetri on his assumptions. But they are also just assumptions and predictions. Infact in many political wars one can only assume, than proof something beyond doubt

4:30 PM, October 08, 2006
வஜ்ரா said...

இன்றய நிலையில், JKLF ஐ யோ, மற்ற "கஷ்மீரியத்" பேசும் கட்சிகளையோ, ஆதரிப்பதிலா, அல்லது எதிர்ப்பதிலா இந்தியாவின் மற்றும் கஷ்மீர் மக்களின் நலன் உள்ளது?

தற்பொழுது, தனி கஷ்மீர் என்பது சாத்தியமாகத் தெரியவில்லை. ஆகவே, கஷ்மீரில் இருந்து அழிக்கப் பட்ட மென்மையான மத நல்லிணக்க "இஸ்லாமிய மரபு" இந்தியாவுடன் கஷ்மீர் இருப்பதில் வருமா, அல்லது இஸ்லாமிய சர்வாதிகார ஆட்சி இருக்கும் பாக் உடன் இணைவதில் வருமா?

உங்கள் கருத்து என்ன?

தனி கஷ்மீர் தான் உங்கள் பதில் என்றால், அந்த தனி கஷ்மீரை கேட்டுப் போராடுபவர்கள், பாக்கிடம் கையூட்டு பெற்றிருப்பதினால் கஷ்மீர் உருவானவுடன் அதை பாக் தன் நலனுக்கும் இந்தியாவின் அழிவிற்கும் பயன் படுத்தாது என்று என்ன நிச்சயம்? மேலும், பாக் கின் இஸ்லாமிய கரங்கள் கொண்டு "கஷ்மீரியத்"தை அழித்தே தீரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

P.S., இந்த கஷ்மீரியத் (அ) கஷ்மீரில் இருக்கும்/இருந்த சூபி இஸ்லாமிய மரபு, பற்றி எனக்கு பல மாற்று கருத்துக்கள் இருப்பதினால் அதை நீங்கள் கூறிய வரையரையினிலேயே பார்க்க.

5:03 PM, October 08, 2006
வஜ்ரா said...

//
CIA இன் பங்கும் கணிசமானது என்றே நான் கருதுகிறேன்.
//

நீங்கள் எதைவேண்டுமானாலும் கருதலாம். கருதுவதற்குத் தடையேதும் இல்லை, ஆனால் ஆதாரம் வேண்டும்.

இந்தியா சோவியத்தின் கைக்கூலியாக இருந்ததற்கும் இந்தியாவின் முதன்மை தேசியக் கட்சிகளில் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் கையூட்டு பெற்றதையும் புஸ்தகமாக வெளியிட்டு விட்டார் மிட்ரோகின்.

5:37 PM, October 08, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

பத்மா,

தீவிரவாதம் தோன்றியிருக்கலாம், தோன்றாமலும் இருந்திருக்கலாம். தீவிரவாதம் தோன்றியிருக்காது என்பது assumption தான். இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கமோ, இந்த வரிகளின் நோக்கங்களோ என்னுடைய ஊகங்களை முன்நிறுத்த அல்ல.

1987ல் காஷ்மீர் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட தேர்தலில் அவர்களின் உரிமைகள் சரியாக மதிக்கப்பட்டிருந்தால் காஷ்மீர் பிரச்சனை இன்றைக்கு இருக்கும் அளவுக்கு சக்கல் அடைந்திருக்காதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தீவிரவாதம் காஷ்மீரிகளின் முகத்தை சிதைத்து விட்டது.

வரலாற்றை வெறும் புள்ளிவிபரங்களால் மட்டுமே எழுதமுடியாது. அதன் மீது நம்முடைய கருத்துக்களை ஏற்றும் பொழுது அது assumption என்றாகி விடுகிறது

6:32 PM, October 08, 2006
வெற்றி said...

வஜ்ரா,

//நீங்கள் எதைவேண்டுமானாலும் கருதலாம். கருதுவதற்குத் தடையேதும் இல்லை, ஆனால் ஆதாரம் வேண்டும்.//

இப்படியான நாசகார வேலைகளை மறைமுகமாகச் செய்யும் போது எந்த ஒரு நாடும் தான்தான் செய்தது என்று சொல்லாது. எடுத்துக்காட்டாக, 1960 களில் பல இலட்சம் மக்கள் இந்தோனேசியாவில் கொல்லப்பட்டமைக்கு CIA உதவியது. கடந்த ஆண்டுதான் CIA தனது பங்களிப்பை உறுதி செய்து ஒத்துக்கொண்டது. எனவே இந்த நாசகாரச் சதிவேலைகளுக்கான ஆதாரங்கள் இப்போது வெளிவராது. சிலவேளைகளில் இன்னும் ஒரு 50 அல்லது 60 ஆண்டுகளின் பின் வெளிவரலாம்.
வியற்னாம் யுத்தத்தில் அமெரிக்கா செய்த இரகசிய யுத்தம் [covert operations/shadow war] பற்றி அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர் Shultz அவர்கள் CIA அமைப்பு வெளியிட்ட தகவல்களை வைத்து ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை பின்வருமாறு தொடங்குகிறார்:

From the inception of the OSS(Office of Strategic Services) in World War II to the present, the U.S. government has employed special operations forces to excute covert missions in support of American foreign policy. However, because of the highly secretive and politically sensitive nature of many of these missions, little is known about them. To be sure, snippets of information slipped out over the years, but most of the documents and records of these covert operations remained locked in government vaults. They are among the deepest secrets of the Cold War.

7:01 PM, October 08, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

தற்பொழுது, தனி கஷ்மீர் என்பது சாத்தியமாகத் தெரியவில்லை. ஆகவே, கஷ்மீரில் இருந்து அழிக்கப் பட்ட மென்மையான மத நல்லிணக்க "இஸ்லாமிய மரபு" இந்தியாவுடன் கஷ்மீர் இருப்பதில் வருமா, அல்லது இஸ்லாமிய சர்வாதிகார ஆட்சி இருக்கும் பாக் உடன் இணைவதில் வருமா?

உங்கள் கருத்து என்ன?
---------

வஜ்ரா,

இது குறித்து பிறகு ஒரு தனிப்பதிவாகவே எழுதுகிறேன்

11:54 PM, October 08, 2006
வஜ்ரா said...

//
இப்படியான நாசகார வேலைகளை மறைமுகமாகச் செய்யும் போது எந்த ஒரு நாடும் தான்தான் செய்தது என்று சொல்லாது.
//

இது உங்கள் பதிலின் முதல் வரி.

//
கடந்த ஆண்டுதான் CIA தனது பங்களிப்பை உறுதி செய்து ஒத்துக்கொண்டது. எனவே இந்த நாசகாரச் சதிவேலைகளுக்கான ஆதாரங்கள் இப்போது வெளிவராது. சிலவேளைகளில் இன்னும் ஒரு 50 அல்லது 60 ஆண்டுகளின் பின் வெளிவரலாம்.
//

இது அடுத்த வரி.

முன்னுக்குப் பின் முரனாக இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்தே கஷ்மீர் பிரச்சனையில் தான் இருந்துவந்துள்ளது. அப்பவும் அமேரிக்கா இருந்தது. அமேரிக்காவில் ரகசிய பத்திரங்கள் eternally ரகசியமாக்கப் படுவதில்லை.20-30 ஆண்டுகளில் அதை வெளியிட்டு விடுகின்றனர். அதைத் தான் CIA வும் செய்து வந்துள்ளது. எந்த நாடும் தன் நலனைத் தான் எந்தப் பிரச்சனையிலும் பார்க்கும். அதை உணர்ந்து தான் எந்த Strategic decision ம் எடுக்க்ப படவேண்டும்.

CIA செய்தது என்றால் அது வெளிவரும். அது வரை, அடக்கி வாசிப்பது நல்லது. வியட்நாமில் நடந்தது என்றால் கஷ்மீரில் நடந்தது அல்ல.

//
the U.S. government has employed special operations forces to excute covert missions in support of American foreign policy.
//

Power இருந்தால் எல்லா கவர்மெண்டும் செய்யும். US மட்டும் விதிவிலக்கல்ல. What protects US interest matters to them most.

6:50 AM, October 09, 2006
பத்மா அர்விந்த் said...

வரலாற்றில் நம்முடைய கருத்துக்களை சேர்த்து எழுதலாம் சசி. ஆனால் அது நமது கருத்துக்கள் என்பது தெளிவாக படிப்பவருக்கு தெரிய வேண்Dஉம். இல்லை எனில் வருங்காலத்தில் படிப்பவருக்கு எது ஆசிரியர் கருத்து எது உண்மை எது அனுமானம் என தீர்மானிக்க முடியாமல் போய்விடும். இதூ என் ஆதங்கம் மட்டுமே.

7:34 AM, October 09, 2006
Anonymous said...

சசி,



காஷ்மீர் இன சுத்திகரிப்பு பற்றி பலர் பலவாறு சொல்கிறார்கள்.

இன சுத்திகரிப்பு நடப்பதற்கு முன்னால் காஷ்மீரில் எத்தனை இந்துக்களும், புத்த மதக்கார்ரகளும், சீக்கியர்களும் இருந்தார்கள்? இப்போது எத்தனை ஆட்கள் உள்ளார்கள்?

ஆசாத் காஷமீர் அமையுமாயின் எத்தனை ஆட்கள் இருக்க முடியும்? அப்போது அங்கு சிறுபான்மை மக்களுக்கு எக்தகைய உரிமைகள் கிடைக்கும்?

பாகிஸ்தான் ஏன் சீன தேசத்துக்கு காஷ்மீரின் ஒரு பகுதியை தாரை வாய்த்தது.

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷமீர் தனிநாடு என விட்டு வைத்திருந்தால் திபெத்துக்கு நேர்ந்த கதி காஷ்மீருக்கு நேர்ந்திருக்குமா?

இப்படி எல்லா நாடுகளும் விட்டு கொடுக்க மறுக்க காஷ்மீரில் அப்படி என்ன உள்ளது? கனிம வளங்களோ, பெட்ரோலோ கிடையாது.

ஒரு மாநிலத்துக்கு தனி நாடு உரிமை கிடைக்கையில் இந்திய யூனியனில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும்?

1987-ல் எல்லாம் ஒழுங்காக நடந்திருந்தால் நன்றாய் இருக்கும் என ஆணி அடித்து போல சொல்லியிருந்திர்கள்.

1987-ல் தேர்தல் நடந்திருந்தாலும்
ஆப்கானிஸ்தானின் தாலிபான்களும், isi-ம் காஷ்மீரை விட்டு வைத்திருப்பார்களா? அவர்களின் தாக்கம் எந்த அளவு இருந்திருக்கும்?

9:02 PM, October 09, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

அனானிமஸ்,

உங்கள் பல கேள்விகள் நியாயமானவை

காஷ்மீர் வெறும் முஸ்லீம்களின் பிரச்சனை அல்ல. காஷ்மீரிகளின் பிரச்சனை. காஷ்மீரிகள் எனப்படும் பொழுது - முஸ்லீம்கள், அங்கிருந்து துரத்தப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள், புத்த மதத்தினர் என அனைவரும் சார்ந்தப் பிரச்சனை இது

இது தான் காஷ்மீரின் சிக்கலுக்கும் முக்கிய காரணம். எனது அடுத்தப் பதிவில் இது குறித்து எழுதுகிறேன்

உங்கள் கேள்விகளுக்கு நன்றி

9:10 PM, October 09, 2006
Anonymous said...

மறந்து போன கேள்விகள்

இப்போதுள்ள சிந்தனை மலர்கள் இந்திய சுதந்திரம் அடைந்த போது
இல்லாத நிலையில் நாட்டின் எல்லைகளை வரையறுக்க இந்தியா முழுவதும் பதட்டமும் பக்கத்து நாடுகளான பாகிஸ்தானிடமும், சீன தேசத்திடம் பயமும் இருந்ததா? இல்லையா? இரு நாடுகளும் நம்மூடன் நேச கரம் நீட்டிய நிலையில் இருந்தனவா? இல்லை கிடைத்த நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்யும் மனநிலையில் இருந்தனவா?

ஒரு நாட்டை நிர்வகிப்பது எத்தனை சுலபமான வேலை அதில் ஏன் இந்தியாவுக்கு இத்தனை பிரச்சனைகள்?

இந்திய குடிமகனாய் உரிமைகளை அனுபவிக்கும் போது தீவிர இந்திய அனுதாபியாய் இருப்பது எதுவும் பாவமா?

சுயநிர்ணய உரிமை குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?

9:20 PM, October 09, 2006
கூத்தாடி said...

நல்லப் பதிவு.

உங்களின் காஷ்மீர் படிவை நான் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன்.

காஷ்மீர் பிரச்சினையை ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் மேல் மட்டுமே போட்டு விட்டு மாற்றுக்கருத்துக்களை நாட்டுப் பற்று என்று சப்பைக் க்ட்டு கட்டுவது முட்டாள் தனம். உங்களின் கருத்துக்கள் உண்மையானது

12:55 PM, October 10, 2006
CAPitalZ said...

அது என்னெண்டு சசி எல்லா அரசியலைப் பற்றியும் எழுதுறீங்கள்? தீவிரவாதம், சுயநிர்ணய போராட்டம் இது போன்றவற்றில் ஏதாவது ஆராய்ச்சி செய்கிறீர்களா என்ன?

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

3:56 PM, October 10, 2006
Anonymous said...

சசி,

JKLF செக்யுலர் அமைப்பு. காஷ்மீரி மக்களின் சுய நிர்ணயம் என்ற வார்த்தைகள் பல இடங்களில் பரவலாக உபயோக படுத்த மட்டுள்ளது.

ஏதேனும் சீக்கியரோ, பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடன் போராட்டத்தில் இறங்கியுள்ளார்களா?
வலையில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. நீங்கள் நிறைய ஆய்வு ஏற்கனவே புரிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். ஏதேனும் பார்த்து இருந்தீர்களனால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

8:57 PM, October 10, 2006
வஜ்ரா said...

//
JKLF செக்யுலர் அமைப்பு.
//

கஷ்மீர் காட்டுல காஞ்ச சுள்ளி பொருக்கிட்டு இருக்குறவண்ட போயி சொல்லுங்க இந்த "உண்மை" யை.

3:52 PM, October 11, 2006
Anonymous said...

வஜ்ரா,

நீங்கள் ஒரு சார்பாக பேசுகிறீர்கள். சசி உங்களுக்கு அதை விளக்குவார்.

இந்த கட்டுரையை திரும்ப படியுங்கள்

1)காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம்.

2)இந்துக்களான காஷ்மீரி பண்டிட்களை காஷ்மீரில் இருந்து விரட்டியவர்கள் கூட பாக்கிஸ்தான் அதரவு குழுக்கள் தான். இதனை காஷ்மீரின் ஆயுதக்குழுக்களும், மிதவாத போராட்டக் குழுக்களும் எதிர்த்தன

3)முஸ்லீம்-ஹிந்து கலாச்சாரம் போன்ற வித்தியாசங்கள் இல்லாமல், "காஷ்மீர் கலாச்சாரம்" என்பதாகவே அக் காலத்தில் இருந்தது

4)சுதந்திரமாக ஒரு சமத்துவ பூமியாக, தன் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் காஷ்மீர் மக்களிடையே இருந்தது.

5)காஷ்மீரின் விடுதலை என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு காஷ்மீர் இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள்.

6)MUF முறையற்ற தேர்தலால் தோல்வியடைந்ததை கண்ட காஷ்மீர் இளைஞர்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை இழந்தனர். ஆயுதம் ஏந்த தொடங்கினர்.

7)காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய அதிகாரத்தின் மீது தோன்றிய இந்த அவநம்பிக்கை தான் காஷ்மீரில் தீவிரவாதம் ஏற்பட முக்கிய காரணம்

8)ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி - JKLF, காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சூழலில்

9)மதச்சார்பின்மையையும் காஷ்மீரின் விடுதலையையும் வலியுறுத்தி போராட தொடங்கிய JKLF ஒரம்கட்டப்பட்டு

இந்த ஓன்பது இடங்களிலும் காஷ்மீர இளைஞர்கள் அல்லது மக்கள் என்ற வார்த்தையை பயன் படுத்தி இருப்பார். ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த இளைஞர்கள் என்று கூறியிருக்க மாட்டார்.

JKLF என்ற வார்த்தையையும் மதசார்பின்மை மற்றும் விடுதலை போராட்டம் என்ற வார்த்தைகளோடு சேர்த்தே பயன்படுத்தி இருப்போர்.

வெறும் பிரச்சார நோக்கத்தோடு இதை எழுதியிருக்க மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்.

சசி JKLF புலம் பெயர்ந்த காஷ்மிர மக்களுக்களின் உரிமைக்காக
என்ன வித போராட்டங்கள் நிகழ்த்தி இருக்கிறது என அவசியம் பதியுங்கள்.

உங்கள் விளக்கங்களுக்காக காத்திருக்கிறேன்.

9:04 PM, October 11, 2006
வஜ்ரா said...

Please Read this.

JKLF leader Yasin Malik's stand that Kashmiri Pandits ought to be allowed back in the Valley provided they gave up any position on the secessionist movement, sounds exceedingly odd in that context. In a secular disposition anyone has the right to express his political views, and minorities cannot be silenced in exchange for the right to survival. Pandits are right to say that accepting Malik's 'precondition' would relegate them to the status of second class citizens. Malik may have been trying to address a fundamental flaw in the movement for 'self-determination' in the Valley, which can be attained, it appears, only at the cost of purging its minorities - known in today's parlance as ethnic cleansing. He can do so, however, only by sounding blatantly communal. If one were to switch Kashmiri Pandits for Gujarati Muslims, Malik would find Narendra Modi in hearty agreement with him.

5:57 AM, October 13, 2006
K.R.அதியமான் said...

ithai paarkkavum :

http://tamilopinion.blogspot.com/2007/05/kashmir-view-from-india-by-tavleen.html

10:38 PM, January 13, 2008
Anonymous said...

neengal solvathu pol kashmir kku

thani naadu anthashthu koduththu

vittal inge ulla tamilnadum thani

naadu ketkum enbathu uruthi.

8:04 AM, July 07, 2010
M.Natrayan said...

நேருவின் தவறான கொள்கைதான் இப்போதைய காஷ்மீரின் நிலைக்கு காரணம். இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம் இருக்கும் போது காஷ்மீருக்கு தனி சட்டம் எதற்கு? இந்திய அரசியலமைப்பின முன்று, ஏழு.பூஜ்யம் சட்டத்தை ரத்து செய்திருந்தால் பிரச்சனைக்கு முடிவு தெரிந்திருக்கும். இப்போதும் ஒன்றும் குடி முளுகிப்போகாது. உடனடியாக அந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும். முஸ்லீம்களுக்கு வக்காலத்து வக்காகுவதிலேயே
உள்ளது இந்த கட்டுரை! அனைவரும் ஓரினம் என்ற உணர்வை வளர்க்க வேண்டும். ஜாதி மதம் இனம் மொழி உணர்வுகளை கொண்டு பயங்கர வாதத்தை வளர்க்காமல் இருக்க வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல!!

11:23 AM, April 02, 2012