Tuesday, October 24, 2006

இலங்கை : கூட்டாட்சியா ? போரா ?

ஈழ விடுதலைப் போராட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைப் பெற்று இருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் மிக நீண்ட விடுதலைப் போராட்டங்களாகத் தான் இருந்து வந்திருக்கிறது. சில வருடங்களில் எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. அரை நூற்றூண்டுக்கும் மேலான போராட்டங்களை நாம் உலக வரலாற்றில் பார்த்து இருக்கிறோம். நீண்ட காலமாக நடந்தாலும் விடுதலைப் போராட்டம் பயணிக்கும் பாதை முக்கியமானது. விடுதலைப் போராட்டம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், தேங்கிப் போய் விடக்கூடாது. அதற்கு மிகச் சரியான அரசியல் பாதை வகுக்கப்பட வேண்டும்.

ஈழப் போராட்டம் கடந்த 20 ஆண்டுகளில் அத்தகைய ஒரு திட்டமிட்ட பாதையில் சரியாக முன்னேறியிருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன். குறிப்பாக கடந்த ஒரு வருட நிகழ்வுகள் இலங்கையின் சிக்கல் மிகுந்த காலமாக பலர் பார்க்கிறார்கள். புலிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பலர் நம்புகிறார்கள். அவ்வாறு நம்பும் பல ஈழத் தமிழர்களின் குரல்களையும் கேட்க முடிகிறது. ஊடகங்கள் புலிகள் பலவீனம் அடைந்து இருப்பதாக எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த ஒரு வருடம் தான் ஈழப் போராட்டத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த ஒரு வருடம் ஈழப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தின் தொடக்கம். திட்டமிட்ட ஒரு பாதையின் அடுத்த கட்டம்.

மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகான கடந்த ஒரு வருட நிகழ்வுகள் முக்கியமானது. மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் தமிழர்களின் தேர்தல் புறக்கணிப்பு தான். பிரபாகரன் ராஜபக்ஷவை வெற்றி பெற வைத்தன் முக்கிய நோக்கம் சிங்கள் இனவாதத்தை வெளிப்படுத்துவது தான் (இது குறித்த என்னுடைய முந்தையப் பதிவுகள் - தேர்தலும் தமிழ் ஈழ அங்கீகாரமும், புதிய யுத்தம்).

கடந்த ஓராண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை நோக்கும் பொழுது அந்த நோக்கம் வெற்றி பெற்று இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சர்வதேச சமூகம் ராஜபக்ஷவின் சிங்கள தேசியவாத முகத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்திருக்கிறது. அதன் போர் உத்திகளை உணர்ந்திருக்கிறது. ஆனாலும் அதனை தடுக்காத இரட்டை வேடத்தை தான் வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் அதனை அப்படியே தொடர முடியாது என்பதற்கு சாட்சியாகத் தான் பல நாடுகள் தங்களது பொருளாதார உதவிகளை நிறுத்தப்போவதாக அச்சுறுத்த தொடங்கியிருக்கின்றன. ஜெர்மனி அதை செயலிலும் காட்டியிருக்கிறது.

Unitary Nation என்ற கோஷத்துடன் ஆட்சியை கைப்பற்றிய ராஜபக்ஷ, புலிகள் கொடுத்த நிர்பந்தத்தால் ஒரு Federal அமைப்பில் ஆட்சிப் பகிர்வை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளானார். அதிலிருந்து தப்பிக்க போர் நோக்கி ராஜபக்ஷ செல்ல தொடங்கினார். இதற்கிடையில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் போக்கில் முனைந்தார். ஆனால் சிங்கள தேசியவாதக் குழுக்களின் போர் முழுக்கத்திற்கு கட்டுப்பட்டு போர் புரிய முனைந்த பொழுது, புலிகள் சம்பூரில் இருந்து தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். இது சிங்கள இராணுவத்திற்கு கிடைத்த வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. ஒரு வகையில் சம்பூரில் இருந்து புலிகள் தங்கள் படைகளை விலக்கி கொண்டதன் மூலம் செயற்கையான ஒரு வெற்றியை அவர்களுக்கு ஏற்படுத்தியும் கொடுத்தனர். ( சம்பூர் போரில் முன்னேறிய இராணுவத்தை புலிகள் எதிர்க்க வில்லை என்பதையும், அது ஒரு தந்திரமாக இருக்கும் என்றும் முகமாலையின் தோல்விக்கு பிறகே இராணுவ நோக்கர்கள் கூற தொடங்கினர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்)

சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், வங்காலை படுகொலை, மூதூர் தன்னார்வ நிறுவன ஊழியர்களின் படுகொலை, ஐநாவின் கண்டனம் என கடுமையான சர்வதேச கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு இன்றைக்கு சிறீலங்கா அரசை "முழுமையாக" ஆதரிக்க முடியாத சூழலுக்கு சர்வதேச சமூகம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் சிங்கள இனவெறி முகத்தை சந்திரிகா, ரனில் போன்றோர் தங்களின் Diplomatic முகத்தால் மறைத்திருந்தனர். ஆனால் இன்று அந்த Diplomatic முகமூடி அகற்றப்பட்டு சிறீலங்கா அரசின் இனவெறி, சர்வதேச சமூகம் முன் கொண்டு வரப்பட்டிருக்கிறது. புலிகளின் பயங்கரவாதத்தை கண்டிக்கின்ற சர்வதேச சமூகம், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்க தொடங்கியிருக்கிறது. ஐநா அமைப்பு இலங்கைக்கான தங்களது மனிதாபிமான உதவிகளை நிறுத்தப் போவதாக கூறி பிறகு அதனை மாற்றிக் கொண்டது.

சிறீலங்கா அரசு இன்று சர்வதேச சமூகம் முன் குற்றவாளியாக்கப்பட்டு கடும் நிர்பந்தங்களை எதிர்கொண்டிருந்த சூழலில் போரில் வெற்றி பெறுவது ஒரு முக்கிய தேவையாக இருந்தது. புலிகளின் தோல்வியை விரும்பும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை திருப்தி படுத்தும் வகையில் புலிகள் மீது சிறிலங்கா போர் தொடுத்தது. புலிகளும் தொடர் தோல்விகளை எதிர்கொண்டு இருப்பதான ஒரு பிம்பம் ஏற்பட்டது. அமைதியாக இந்தப் போரை ரசித்துக் கொண்டிருந்த சர்வதே சமூகம், முகமாலை தோல்விக்குப் பிறகு விழித்துக் கொண்டது. பலம் புலிகளின் பக்கம் சாய்வதை அவர்கள் விரும்பவில்லை. சர்வதேச தூதுவர்கள் இலங்கைக்கு பறந்து வந்தனர்.

இதன் பலன், இன்று சர்வதேச சமூகத்தின் நிர்பந்தம் சிறீலங்கா அரசு மீது அதிகம் எழுந்து இருக்கிறது. ராஜபக்ஷ தன்னுடைய Unitary state என்ற கோரிக்கையை கைவிடவேண்டிய தேவை எழுந்து இருக்கிறது. தென்னிலங்கை அரசியலில் பிளவுகள் இருக்கும் வரையில் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தை வழங்க முடியாது. சர்வதேச நிர்பந்தங்களுக்கு மத்தியில் எதிரும், புதிருமாக இருந்த இரு கட்சிகள் இன்று இணைந்து இருக்கின்றனர்.

தென்னிலங்கை அரசியல் பிளவுகளை சுட்டி தமிழ் ஈழ விடுதலைக்கான காரணங்களை வலுப்படுத்துவது தான் பிரபாகரனின் திட்டம். அந்த திட்டத்தை முறியடிக்கவே இன்று இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கின்றன.

இந்த கூட்டணியின் பிண்ணனியில் இருந்த சர்வதேச சமூகத்தின் மாற்றம் முக்கியமானது

கடந்த ஒரு வருட காலத்தில் ஈழப் பிரச்சனையில் தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கான நியாயங்கள் பலரால் அலசப்பட்டிருக்கின்றன. அமெரிக்க செனட்டில் கடந்த மாதம் பேசிய நியூஜெர்சி Congressman, Frank Pallone மற்றும் U.S. Assistant Secretary of State for South and Central Asian Affairs, Richard Boucher தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்துள்ளனர்.

"though we reject the methods that the Tamil Tigers have used, there are legitimate issues raised by the Tamil community and they have a legitimate desire to control their own lives, to rule their own destinies, and to govern themselves in their homeland.''

இன்றைக்கு தமிழர்களின் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற அதே வேளையில் அந்த சுயநிர்ணயத்தின் அளவுகோள்கள் முடிவு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லாத ஒரு வடகிழக்கு மாகாணத்தை இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய சூழலுக்கு பின், கடந்த 20 ஆண்டுகளில் பரந்த அதிகாரங்களுடன் தமிழர் பிரதேசம் இருக்க வேண்டிய அவசியம் (Federal) சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களால், அடுத்தக் கட்ட ஈழப் போராட்டம் புலிகளுக்கும், சிங்கள அரசுக்குமான ஒரு அரசியல் சமநிலை பலத்தைக் கொண்டு தான் அமையும். அந்த சமநிலை கடந்த காலங்களில் இருந்ததில்லை. இன்றைக்கு அமைந்து இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சமநிலையை தெளிவாக அங்கீகரிக்க முடியாத நிலையில் சர்வதேச சமூகம் உள்ளது. இந்த சமநிலையை சர்வதேச சமூகம் விரும்புவதும் இல்லை. அதனை வெளிப்படுத்துவதும், சர்வதேச சமூகத்தை அந்த சமநிலையை அங்கீகரிக்க வைப்பதும் புலிகளின்/பிரபாகரனின் அடுத்த முக்கிய நோக்கமாக இருக்கலாம்.

அடுத்தக் கட்ட ஈழப் போராட்டம் இராணுவ போராட்டமாக மட்டுமில்லாமல், இராணுவ-அரசியல் போராட்டமாக இருக்கும்.

1997ல் புலிகள் இயக்கத்தை "Most ruthless terrosrist group" என்று அமெரிக்கா தடை செய்ததது. பின் புலிகளை சர்வதேச பயங்கரவாதக் குழுவான அல்கொய்தாவுடன் ஒப்பிட்டு பார்த்தது. பின் புலிகள் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், புலிகள் அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் ராஜாங்க உறவுகளை பராமரிக்கும் வாய்ப்புகள் உள்ளது - ஆனால் அவர்கள் பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் எனக் கூற தொடங்கியது (If the Tigers give up terrorism, the United States will be able to consider dealing with them). இவ்வாறு கடந்த ஓராண்டாக அமெரிக்காவின் போக்கு மாற்றம் காண தொடங்கியிருக்கிறது (சில நேரங்களில் குழப்பாக இரு வேறு கருத்துகளையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. இது கூட அமெரிக்காவின் மாறி வரும் கொள்கைகளை தான் சுட்டிக் காட்டுகிறது).

"தங்கள் தாயகப் பகுதிகளை தமிழர்கள் ஆட்சி செய்யக் கூடிய உரிமை இருக்கிறது" எனக் கூறிய அமெரிக்கா, கடந்த வாரம் இதை வலியுறுத்தியது மட்டுமில்லாமல் புலிகளின் நோக்கத்தை அங்கீகரித்தும் உள்ளது. ஆனால் புலிகள் தங்கள் நோக்கத்தை அரசியல் வழியில் மேற்கொள்ள வேண்டும், பயங்கரவாத/இராணுவ ரீதியில் அல்ல என கூறியிருக்கிறது

Assistant Secretary Richard Boucher addressing a press briefing in Colombo, ending his two-day visit to the island said on October 20 "They (LTTE) have aspirations to satisfy some of the legitimate grievances of the Tamil community. They have aspirations to see the Tamil community respected, and be able to control its own affairs within a unified island, and the only way they’re going to achieve those aspirations is through negotiations."

இந்தியா இதுவரையில் தெளிவாக இது குறித்த தன்னுடைய கொள்கைகளை அறிவிக்காததால், இந்தியா தன் மொளனம் மூலம் அமெரிக்காவின் நிலைப்பாடுகளை சார்ந்தே உள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது - to control its own affairs within a unified island.

இந்த வாக்கியத்தை நோக்கும் பொழுதே அதில் இருக்கின்ற தெளிவற்ற குழப்பம் நமக்கு புரியும் - to control its own affairs within a unified island. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களின் ஆட்சியை அமைத்து கொள்வது என்றால் என்ன ? தற்பொழுது புலிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்களே - அது போலவா ? அல்லது வெளியூறவு, நிதி, பாதுகாப்பு போன்றவற்றை மைய அரசாங்கத்திடம் (ஒன்றுபட்ட இலங்கை அரசாங்கம்) கொடுத்து விட்டு எஞ்சிய துறைகளை புலிகள் நிர்வகிப்பார்களா ? அப்படியெனில் தற்போதைய நிலையில் தமிழர் பகுதியின் பாதுகாப்பு புலிகளின் கைகளில் உள்ளதே, அதை எப்படி புலிகள் விட்டுகொடுப்பார்கள் ? வெளியூறவு மைய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்றால் தற்பொழுது வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்புக்கு சென்று ராஜபக்ஷவை சந்தித்து விட்டு வன்னிக்குச் சென்று தமிழ்ச்செல்வனை சந்திக்கிறார்களே அதனை புலிகள் எப்படி விட்டு கொடுப்பார்கள் ?

இவ்வாறான சூழ்நிலையில் எத்தகைய கூட்டாட்சியை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் முன்வைக்கும் ? அதனை சிங்கள அரசாங்கம் ஏற்குமா ?

தற்பொழுது புலிகளை விட சிறீலங்கா அரசிற்கு தான் பாதகமான சூழல் நிலவி வருகிறது. கடந்த காலங்களை போல இல்லாமல் இன்றைய Globalization சிறீலங்கா அரசாங்கத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபக்ஷ-JVP-JHU கூட்டணி தமிழர் தாயகப் பகுதிகளை அங்கீகரிக்க மறுத்து வந்திருக்கிறது. கடந்த வாரம் இலங்கையின் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு கூட சிங்கள இனவெறி நிலைப்பாட்டை தான் முன்நிறுத்தியிருக்கிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து உள்ளது. இது சிங்கள தேசியவாதக் குழுக்களுக்கு ஒரு பெரிய நெருக்கடியான சூழ்நிலை என்பது உண்மை.

இவ்வாறான நிலையில் சர்வதேச நிர்பந்தங்களால் மட்டுமே ஒன்று சேர்ந்திருக்கும் ராஜபக்ஷ-ரனில் எவ்வளவு காலம் இதனை தக்கவைத்துக் கொள்வார்கள் ? தென்னிலங்கை அரசியல் நிலைமையால் இந்தக் கூட்டணி சிதைத்து போகும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. சமீபகால ஜனாதிபதிகளில் மிக அதிக அளவில் சிங்கள தேசியவாதத்தை முன்வைத்த மகிந்த ராஜபக்ஷ எப்படி மிதவாத போக்குக்கு மாறி அதிகபட்ச அதிகாரங்களுடன் ஒரு Federal அமைப்பை ஏற்படுத்துவார் ? அதுவும் தவிர இந்த இருவரும் இணைவது சிங்கள தேசியவாத சக்திகளை எதிரணியில் ஒன்று திரள வைத்து, சிங்கள தேசியவாத சக்திகள் அரசியல் ஆதிக்கம் அதிகரிக்கவும் வழிவகுத்து விடும் என்னும் பொழுது இந்தக் கூட்டணியின் சாத்தியங்கள் கேள்விக்குறியாகவே இருக்கும்.

இவ்வாறான நிலையில் புலிகளின் உத்தி கடந்த காலங்களில் இருந்து வந்த இராணுவ ரீதியிலான அணுகுமுறை தவிர இனி இராணுவ-அரசியல் உத்தியாக மாறும். ஜெனிவாவில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைகளில் கூட சில மாறுபட்ட போக்குகள் காணப்படலாம். கடந்த முறை ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் புலிகள் எடுத்த சில நடவடிக்கைகள் சர்வதேச சமூகம் மீது சில நிர்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது. ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது விதித்த தடையை நார்வே சாடியிருந்தது. புலிகளுக்கு நெருக்கடியை கொடுப்பதன் மூலம் தங்கள் வழிக்கு புலிகளை கொண்டு வரலாம் என்ற சர்வதேச சமூகத்தின் முடிவு கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்தது. இது சர்வதேச சமூகம் இந்தப் பிரச்சனையை அணுகும் விதத்தை கேள்விக்குரியாக்கியிருந்தது. இந் நிலையில் இப் பிரச்சனையில் சர்வதேச சமூகம் அணுகி வரும் முறையில் மேலும் சில மாற்றங்களை ஏற்படுத்தவே பிரபாகரன் முயலுவார்.

சிறீலங்கா அரசு முன் இருக்கும் சவால் அதிகபட்ச அதிகாரங்களுடன் ஒரு Federal அமைப்பை ஏற்படுத்துவது. அதிகபட்ச Federal அமைப்பு என்னும் பொழுது இலங்கையில் தற்பொழுது இருக்க கூடிய இரண்டு இராணுவங்கள் (சிறீலங்கா மற்றும் புலிகள் இராணுவம்) அப்படியே நீடிப்பது, இரண்டு நிர்வாக அமைப்புகள், பொருளாதார உதவிகளை தனித்தனியாக பெற்றுக் கொள்வது போன்றவை. ஆனால் சிறீலங்கா அரசால் இதனை ஏற்றுக் கொள்வது முடியாத காரியம் என்று தான் நினைக்கிறேன்.

புலிகள் முன் இருக்கும் சவால் - புலிகள் இராணுவ ரீதியாக பெறும் வெற்றி தான் சிறீலங்கா அரசு மீது சர்வதேச நிர்பந்தத்தை அதிகரிக்கும் என்னும் நிலையில் சிறீலங்கா அரசு போர் தொடுத்தால் அதனை முறியடிப்பது மட்டுமில்லாமல் இராணுவ நிலைகளை வெற்றிக் கொள்ள முடியுமா ? புலிகள் போரில் தோற்பதை சர்வதேச நாடுகள் விரும்பவேச் செய்யும் என்னும் நிலையில் சர்வதேச சமூகத்தை தங்களின் அரசியல் உத்திக்கு திருப்ப வேண்டுமானால் இராணுவ ரீதியில் சில முக்கிய வெற்றிகளை பெற்றாக வேண்டும். முகமாலையில் புலிகள் பெற்ற வெற்றியை போல மேலும் சிலப் பகுதிகளை புலிகள் கைப்பற்ற முடியுமா ?


************************

இலங்கையில் தற்பொழுது நடந்து வரும் நான்காவது ஈழப் போர் ஒரு சமநிலையை கடந்த வாரம் எட்டியது. ஆனையிறவு நோக்கி சிறீலங்கா அரசுபடைகளின் நகர்வை புலிகள் முறியடித்துள்ளனர். முகமாலையில் நடந்த இப்போர் சிறீலங்கா அரசு படைக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருப்பது மட்டுமில்லாமல் தற்போதைய இராணுவ நிலையில் ஒரு சமநிலையையும் கொண்டு வந்திருக்கிறது. மாவிலாறு, சம்பூர் போன்ற இடங்களில் இராணுவம் பெற்ற வெற்றி கூட புலிகளின் Strategic move தானே தவிர அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என இராணுவ நோக்கர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இராணுவ ரீதியில் புலிகள் பெற்ற இந்த வெற்றி இந்த வார இறுதியில் ஜெனிவாவில் நடக்க இருக்கின்ற பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயத்தில் புலிகள் ஹபரணை மற்றும் காலியில் நடத்திய தற்கொலைத் தாக்குதல் புலிகளின் நிலையை மேலும் வலுவாக்கியிருக்கின்றது. பேச்சுவார்த்தையை ஒட்டிய சமயத்தில் நடந்த இந்த தாக்குதல் பேச்சுவார்த்தை மேஜையில் புலிகளுக்கு சில சாதகமான விடயங்களை ஏற்படுத்தியிருக்கிறது

எப்பொழுதுமே தங்களுடைய இராணுவ வெற்றியின் பிண்ணனியில் பேச்சுவார்த்தை மேஜைக்கு "பலத்துடன்" செல்வது தான் புலிகளின் வழக்கம். இம்முறை அத்தகைய பலத்தை பெற்று விட சிறீலங்கா அரசு முனைந்தது. அதன் விளைவு தான் புலிகள் மீது தொடுக்கப்பட்ட சம்பூர், மாவிலாறு மற்றும் முகமாலை தாக்குதல். இதில் சிறீலங்கா அரசுக்கு வெற்றி கிடைத்ததாக ஒரு சூழல் எழுந்தது. அதன் விளைவு தான் ஆனையிறவு நோக்கிய படைநகர்த்தல். இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போர் உத்திகளை நோக்கினால் ஒரு விடயம் தெளிவாக புரியும். சிறீலங்கா அரசு பெறும் எந்த வெற்றியும்/தோல்வியும் அரசியல் ரீதியாக சாதகமான/பாதகமான சூழ்நிலையை தென்னிலங்கையில் ஏற்படுத்தும். இரணுவ உத்திகள் மட்டுமில்லாமல், அரசியல் கள நிலையும் சிறீலங்கா இராணுவத்தின் வியூங்களை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனைக் கொண்டு பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசின் உத்திகளை கணிப்பது யாருக்கும் பெரிய சிரமத்தை ஏற்படுத்தாது. நம்மைப் போன்ற சாமானியர்கள் கூட சிறீலங்கா அரசு எப்படி திட்டங்களை வகுக்கும் என்பதை பட்டியலிட்டு கூறிவிடலாம். ஆனால் புலிகளின் உத்திகளை கணிப்பது சிறீலங்கா அரசுக்கும், ஏன் சர்வதேச சமூகத்திற்கும் கூட கடினமாகவே இருந்து வந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவர்கள் பின்பற்றிய வியூகங்களை கணிக்கும் பொழுது அவ்வாறு தான் எனக்கு தோன்றுகிறது. புலிகளுக்கு, சிறீலங்கா அரசு போல அரசியல் நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. அவர்களுடைய உத்திகள் அனைத்துமே இராணுவம் சார்ந்த நிலைகளை பொறுத்தே இருந்து வந்திருக்கிறது.

முதல் தாக்குதல் மாவிலாறு யுத்தம் தான். மூதூர் மீதான தாக்குதலுக்குப் பிறகு திடீரென்று புலிகள் பின்வாங்கினர். இது புலிகளுக்கு வெற்றியா, தோல்வியா என்பதை கணிக்க முடியாத அளவுக்கு தான் இருந்தது. புலிகளை பின்வாங்கச் செய்து விட்டதாக இராணுவம் கூறியது. இது அரசியல் ரீதியாக மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது. மூதூரை கைப்பற்றும் நோக்கம் புலிகளுக்கு இல்லை என்றாலும் அவர்கள் தாக்குதல் தொடுத்த வேகத்திலேயே பின்வாங்கியது சந்தேகங்களை நிச்சயம் எழுப்பியது. அடுத்த முக்கிய தாக்குதல் சம்பூர் மீதான தாக்குதல். புலிகள் இங்கும் இராணுவத்தின் முன்னேற்றத்தை எதிர்க்காமல் பின்வாங்கினர். இராணுவம் சம்பூரை கைப்பற்றினாலும், புலிகளின் இராணுவ பலத்தை சிதைக்கவேயில்லை என்பதை கவனிக்க வேண்டும். அடுத்ததாக சிறீலங்கா அரசின் Kfir விமானத்தை எதிர்க்க கூடிய பலம் புலிகளிடம் இல்லை என்பதாக இராணுவ நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். இப்பொழுதும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் புலிகளிடம் Surface to Air missiles (SAM) எனப்படும் விமானங்களை தாக்க கூடிய ஏவுகணைகள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் நிச்சயம் புலிகளிடம் இந்த ஏவுகணைகள் உள்ளன. புலிகள் இதனை பயன்படுத்தாமல் இருப்பது கூட ஒரு உத்தியாக இருக்க கூடும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போர் ஒரு முழு அளவிலான போர் அல்ல என்பதால் தங்களுடைய இராணுவ பலத்தை முழுமையாக புலிகள் பிரயோகிக்கவேயில்லை.

தங்களுடைய இராணுவ பலத்தை முழுமையாக பிரயோகிக்காமல் இருப்பது இராணுவ ரீதியாக மட்டும் இல்லாமல் அரசியல் ரீதியாகவும் சில விடயங்களை சாதித்துக் கொள்வதற்காக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

***************

சிறீலங்கா அரசு முன்வைக்க இருக்கும் தீர்வும், தென்னிலங்கை அரசியலும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் புலிகள் முன்வைக்க இருக்கும் உத்திகளையும் பொறுத்தே கூட்டாட்சியா அல்லது போரா என்பது முடிவாகும்.

கடந்த கால தென்னிலங்கை அரசியலும், புலிகளின் நிலைப்பாடும் கூட்டாட்சி குறித்த நம்பிக்கையை எனக்கு தற்பொழுது ஏற்படுத்தவில்லை. ஒரு இடைக்கால தீர்வினை எட்டவே ஒரு சில ஆண்டுகள் தேவைப்படலாம்

4 மறுமொழிகள்:

Chellamuthu Kuppusamy said...

நன்கு அலசி ஆராயப்பட்ட பதிவு. நன்றி.

10:12 PM, October 24, 2006
மயிலாடுதுறை சிவா said...

சசி

இலங்கை பிரச்சினையை, போரின் சூழ்நிலை, இயக்கத்தின் யுக்தி போன்றவற்றை மிக தெளிவாக உங்கள் கட்டுரை விளக்குகிறது.

அங்குள்ள தமிழ் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாள் எந்நாளோ?

மயிலாடுதுறை சிவா...

11:14 PM, October 24, 2006
ஈழபாரதி said...

யதார்தத்தை அலசும் கட்டுரை, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. இனிவரும் காலங்கள் நீங்கள் சொல்லும, புலிகளிற்கான ராணுவ வெற்றிகளை கொடுக்கலாம். பொறுத்திருந்து பார்போம்.
காட்டுரைக்கு வாழ்துக்கள்.

1:57 AM, October 30, 2006
CAPitalZ said...

///மாவிலாறு, சம்பூர் போன்ற இடங்களில் இராணுவம் பெற்ற வெற்றி கூட புலிகளின் Strategic move தானே தவிர அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என இராணுவ நோக்கர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.///

இதைத் தான் நான் அன்றைக்கே சொன்னேன். புலிகளின் வியூக அமைப்புக்கள் எவராலும் ஊகிக்க முடியாதவை. ஏன் ஈழத்தமிழர்களாலேயே ஊகிக்க முடியாமல் இருப்பதுண்டு.

புலிகளின் பலவீனம் தான் அவர்களின் பலம்.

அவர்கள் பலவீனப்பட்டவர்கள்; சிறு அளவிலானவர்கள்; தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு; கொஞ்சக் காலத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாது; "இப்போது தாக்கினால்" இலகுவாக புலிகளை வெல்லலாம்; என்றெல்லாம் சிந்திப்பதால் தான் இன்னும் புலிகள் "புலிகளாக" இருக்கிறார்கள்!

______
CAPital
http://1paarvai.adadaa.com/
http://1padam.adadaa.com/

11:12 PM, November 01, 2006