ஒரு சமூகத்தில் வன்முறை நீண்ட காலங்களாக நிலவும் பொழுது அந்த வன்முறை சமூகத்தின் பல நிலைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. பல தலைமுறைகள் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படியான ஒரு வன்முறை சமுதாயமாகத் தான் இன்றைய இலங்கை காட்சியளிக்கிறது. இலங்கை போன்று காட்சியளிக்ககூடிய பிற நாடுகள் என்று பார்த்தால் அவை ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாக்கிஸ்தான் பகுதிகள், காஷ்மீர், ஈராக், பாலஸ்தீனம் போன்றவை ஆகும்.
இந்த வன்முறைக்கு யார் காரணம் என்பதை ஆராய்வதைக் காட்டிலும் பல காலமாக நிலவி வரும் வன்முறை மக்களின் அன்றாட வாழ்விற்கும், எதிர்கால தலைமுறையினரின் இயல்பான வாழ்விற்கும் விடுக்கக் கூடிய சவால் மிகவும் கவலை அளிக்க கூடியதாகும். என்னுடைய முந்தைய ஒரு கட்டுரையில் கூறியிருந்தது போல அரசாங்கம் ஒரு சமூகத்தின் மீது வன்முறையை திணிக்கும் பொழுது, அந்தச் சமூகம் அரசாங்கத்தின் வன்முறையை தன் எதிர் வன்முறையால் தான் எதிர்க்க முயலுகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கூட ஜாலியன்வாலாபாக்கில் பிரிட்டிஷ் எகாதிபத்தியம் நிகழ்த்திய வன்முறைக்கு எதிராக எழுந்த இந்திய எதிர்ப்பும் அத்தகைய எதிர்வன்முறை தான். இவ்வாறு பல இடங்களில் அதிகார மையங்கள் முன்நிறுத்தும் வன்முறையை எதிர்த்து முன்வைக்கபடும் எதிர்வன்முறையை நியாயப்படுத்துவதும், மறுப்பதும் அவரவரின் சார்புகளைப் பொறுத்தே உள்ளது.
ஆனால் இவ்வாறு எழும் எதிர்வன்முறை வலுத்து ஆயுதக்கலாச்சாரம் பரவும் பொழுது, அந்த சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான். அவர்களின் வாழ்க்கை அந்த வன்முறை சமூகத்தில் சிக்கி சீர்குலைந்து போய் விடுகிறது. அவ்வாறான ஒரு சமுதாயமாக அனைத்து மட்டங்களிலும் வன்முறையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இடமாக இலங்கை உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்த வன்முறையை எதிர்க்க தொடங்கிய தமிழ் போராளிக்குழுக்கள், அதன் பிறகு தொடங்கிய போர், ஆயுதக்கலாச்சாரம் போன்றவை இலங்கையில் மிக ஆழமாக ஊடுறுவி விட்டன. இலங்கையில் சமாதானம் நிலைப்பெற்றால் கூட ஆயுதங்களின் பிடியில் இருந்து விலகி இலங்கை ஒரு சகஜமான சூழ்நிலையைப் பெற பல காலங்கள் பிடிக்கும். அந்தளவுக்கு வன்முறை இலங்கையின் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளது.
ஆயுதங்களின் புழக்கம் மிக அதிகளவில் காணப்படுகிறது. பிபிசி தமிழோசையில் தினமும் வடகிழக்கு இலங்கையில் நிகழும் வன்முறை குறித்து தொகுத்து அளிக்கப்படும் தகவல்கள் அதிர்ச்சியை அளிக்க கூடியதாக உள்ளது. தினமும் சிலர் சுடப்பட்டு இறக்கும் நிகழ்வுகளும், அரசாங்கத்தின் மேற்பார்வையிலேயே பலர் கடத்தப்படுவதும், பணத்திற்காக மிரட்டப்பட்டு கொலை செய்யப்படுவதும், எம்.பிக்கள் கொலை செய்யப்படுவதும் மிகச் சாதாரணமான நிகழ்வாகி விட்டது. கடந்த வாரம் தமிழ் எம்.பி. ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு முந்தைய வாரம் பலர் மர்மான முறையில் அரசாங்கத்தால் கடத்தப்படுவது குறித்து மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து இருந்தன.
இவ்வாறு நடந்து வந்த தொடர் வன்முறையின் உச்சக்கட்டமான ஒரு செய்தியை ஐநா வெளியிட்டு உள்ளது. கடந்த காலங்களில் இதனை தமிழ் ஊடகங்கள் எழுதியிருந்தாலும், இது அதிகம் பொருட்படுத்தப்படவில்லை. ஆனால் இம்முறை இதனை அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து ஐநா அமைப்பு வெளியிட்ட பொழுது கடந்த வாரம் அது உலகெங்கிலும் தலைப்புச்செய்தியாக இருந்தது. பிபிசி தன்னுடைய உலகச்செய்திகளில் அதிகளவு முக்கியத்துவம் அளித்து இந்தச் செய்தியை வெளியிட்டு இருந்தது. சமீபகாலங்களில் இலங்கை விடயத்தில் பிபிசியின் செய்தி வழங்கும் முறை மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. மிகுந்த நடுநிலையுடன் சரியான செய்திகளை பிபிசி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
அந்தச் செய்தி - சிறீலங்கா இராணுவம், குழந்தைகளை வலுக்கட்டாயமாக கருணாவின் குழுவில் சேர்த்து புலிகளுக்கு எதிராக அவர்களை "குழந்தைப் போராளியாகளாக" மாற்றியிருக்கிறது என்பது தான். கடந்த காலங்களில் புலிகள் மீது முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு இம்முறை சிறீலங்கா அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. புலிகள் குழந்தைகளை அவர்கள் அமைப்பில் சேர்ப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதனை கண்டிக்கும் அதே வேளையில் சிறீலங்கா அரசாங்கத்தின் செயலை சர்வதேச நாடுகள் கண்டிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய உலகமயமாக்கப்பட்ட சந்தையில் இலங்கை மீதான பொருளாதார தடை எந்தளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த சிலருக்கு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்யும் தடையை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் பரிசீலிக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா அரசாங்கம் மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டிய கட்டயத்திற்கு சர்வதேச சமூகம் வந்துள்ளது.
கடந்த ஓராண்டாக நடந்து வரும் நிகழ்வுகளை நோக்கும் பொழுது "தேர்தல் திருவிழா" ஜனநாயக நாடு என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருந்த சிறீலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாத சிங்கள கோரமுகம் மிக தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இதன் அனைத்து பெருமையும் சிங்கள தேசியவாதத்தை முன்நிறுத்தும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையேச் சாரும். மகிந்த ராஜபக்ஷ மிக மோசமான மனித உரிமை மீறல்களை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துள்ளதை உலகநாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டிக்க தொடங்கியுள்ளன. அதே சமயத்தில் மகிந்த ராஜபக்ஷ இராணுவ நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பது இராணுவத்தின் பலம் சிவிலியன் நிர்வாகத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் நிலை நோக்கிச் செல்வது, இலங்கையின் "தேர்தல் திருவிழா" ஜனநாயகத்திற்கு கூட கேடுவிளைவிக்க கூடியது ஆகும்.
உலகின் பிரச்சனைக்குரிய பலப்பகுதிகளில், உள்நாட்டுக் கலவரம் அதிகளவில் இருக்கும் நாடுகளில் இராணுவத்திற்கு அதிக பலம் இருக்கும். சில நேரங்களில் அந்த பலம் சிவிலியன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு கூட காரணமாக அமைந்து விடுகிறது. இலங்கையின் நீண்ட உள்நாட்டு போர் சூழலில் சிவிலியன் அரசு தொடர்ந்து தாக்கு பிடிப்பதே கூட ஒரு வகையில் வெற்றி தான். ஆனால் கடந்த காலச் சூழ்நிலைகள் போல இல்லாமல் இம்முறை சர்வதேச நாடுகளின் நிர்பந்தம், சிங்கள தேசியவாதிகளின் ஆதிக்கம், சிறீலங்கா இராணுவத்தில் ஆதிக்கம் பெற்று வரும் சிங்கள தேசியவாதிகள் என நோக்கும் பொழுது சிறீலங்கா இராணுவத்தின் ஆதிக்கம் சிவிலியன் நிர்வாகத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்கும் நிலையை எட்டி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
BBC செய்தி: செய்திப்படம்
Thursday, November 16, 2006
வன்முறை சமுதாயம்
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 11/16/2006 05:35:00 PM
குறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
6 மறுமொழிகள்:
நன்றி.
5:58 PM, November 16, 2006Good summary, now read the joke of the day here
6:12 PM, November 16, 2006Sri Lankan president asks rebels to surrender weapons while envoy meets insurgents
//அரசாங்கம் ஒரு சமூகத்தின் மீது வன்முறையை திணிக்கும் பொழுது, அந்தச் சமூகம் அரசாங்கத்தின் வன்முறையை தன் எதிர் வன்முறையால் தான் எதிர்க்க முயலுகிறது.
8:42 PM, November 16, 2006//
மிகச்சரியான வார்த்தைகள்
பொருளாதாரத்தடை வந்தாலும் கூட இதனால் பெரிய முன்னேற்றம் எதும் ஏற்படும் என்று தோன்றவில்லை, ஏனெனில் இலங்கை, ஈழம், மனிதாபிமானம், உரிமை பிரச்சினைகளை விட மற்றவர்களுக்கு சுயநலம் முக்கியமாக இருப்பதால் இதுவும் கூட எந்த அளவிற்கு பிரச்சினையை தீர்க்கும் என தெரியவில்லை...
சசி ஈழம் பற்றி விரிவான அலசல்களைத் தருகிறீர்கள்.அரச படைகளால் தமிழ்ச் சிறுவர்கள் பிடித்துச் செல்லப்பட்டு பயிற்றப்பட்டு புலிகளுக்கு எதிராக போரிட வைப்பது கடந்த ஓராண்டாக அதிகமாக நடந்து வருகிறது.இதை இப்போதுதான் சர்வதேச சமூகம் கண்டுகொண்டது கொஞ்சம் பரவாயில்லை.புலிகள் இயக்கம் சிறுவர்களை சேர்க்கும்போது வாய்கிழிய கத்தும் இலங்கை இந்தியப் புத்திஜீவிகள் இந்த விடயத்தில் மௌனம் சாதிப்பது வழக்கமாகிவிட்டது.
10:17 PM, November 16, 2006இதை விட கேள்விப்படும் இன்னொரு தகவல் அதிர்ச்சி தருகிறது யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்படும் இளைஞர்கள் பாதிப்பேர் 15- 17 வயதான சிறுவர்களே.அதுமட்டுமன்றி கடத்தப்பட்டுக் காணாமற் போகும் சிறுவர்களை இரவுச் சுற்றுக்காவலின் போது இராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது.அப்படி மனித கேடயமாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தப்பி வந்து யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளான்.கண்ணிவெடியிலோ சுட்டோ இராணுவத்தினர் கொல்லப்படும்போது பிடித்து வைத்திருக்கும் இருவர் மூவரை சுட்டுக்கொன்று உடலை சம்பவம் நடந்த இடத்தில் போடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
பட்டியினால் குழந்தையொன்றின் சா நேற்று-முதற் பட்டினிச்சா- யாழில் நடந்திருக்கிறது நிலமை விபரீதமாகிக்கொண்டிருக்கிறது.கையறுநிலையில் நாம் என்னதான் செய்யமுடியும்
நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி
10:56 PM, November 16, 2006சிறீலங்கா அரசு செய்து வரும் மனித உரிமை மீறல்கள் இன்று அதிகளவில் வெளிப்பட்டு வரும் நிலையில் பல நாடுகள் சிறீலங்கா அரசை ஆதரிக்க முடியாத நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சில எச்சரிக்கை நடவடிக்கைகளை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். ஜெர்மனி ஏற்கனவே சில தடைகளை விதித்து உள்ளது. ஆனால் இதனால் பெரிய நன்மைகள் விளையப் போவது இல்லை. ஏனெனில் இதனால் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள் தான்
ஏற்கனவே யாழ் மக்கள் பொருளாதார தடையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
நல்லதொரு அலசல், மிகவிரவில போரினை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்,அல்லாவிடில் நினைத்துபார்கமுடியாத அளவுக்கு மனித அவலம் நிகழும், எப்படி எனதுதான் புரியாத புதிர்.
1:14 AM, November 17, 2006Post a Comment