புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ?

சம்பூருக்குப் பிறகு புலிகள் மற்றொரு கிழக்கிலங்கைப் பகுதியான வாகரையையும் இழக்கப் போகிறார்கள். புலிகள் தங்களது ஆர்ட்டிலரிகளையும் பிற முக்கிய தளவாடங்களையும் வாகரையில் இருந்து விலக்கி கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவம் வாகரையை நோக்கி முன்னேறும் பொழுது புலிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்தப் பகுதியில் இருந்து தங்கள் படைகளை விலக்கி கொள்வார்கள். வாகரையை இராணுவம் ஆக்கிரமித்தால் அரசியல் ரீதியாக புலிகள் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

அதில் முக்கியமானது கிழக்கிலங்கை - கருணாவின் வசம் செல்வது. கருணா பிரச்சனையின் ஆரம்பகாலங்களில் கருணா பிரச்சனையே புலிகளின் ஒரு ராஜதந்திரமோ என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதற்கு காரணம் கருணா மீதான நம்பிக்கை என்பது ஒரு புறம் இருக்க, கிழக்கு இலங்கை புலிகளின் பலவீனமான பகுதியாகவும் இருந்து வந்தது. இதனை இராணுவ ரீதியாக கைப்பற்றுவது புலிகளுக்கு சவால் மிகுந்த காரியம். கிழக்கு இலங்கையை அரசியல் ரீதியாக வெற்றி கொள்வது தான் புலிகளுக்கு சரியான உத்தியாக இருந்திருக்கும்.

ஒட்டுமொத்த தமிழருக்கும் ஒரே பிரதிநிதியாக புலிகள் தங்களை முன்நிறுத்தியதற்கு எதிராகத் தான் கருணாவை இலங்கை-இந்திய உளவு நிறுவனங்கள் புலிகளுக்கு போட்டியாக உருவாக்கின. கிழக்கிலங்கை மக்களுக்கும், வடக்கு பகுதி மக்களுக்கும் காலங்காலமக நிலவிய பிரச்சனையை உளவு நிறுவனங்கள் இதற்கு பயன்படுத்திக்கொண்டன. இராணுவ ரீதியாக இவர்களின் இந்த முயற்சி எடுபடவில்லை என்றாலும் அரசியல் ரீதியாக இதனை சாதித்துக் கொள்ள தற்பொழுது முனைகின்றனர்.

புலிகள் வாகரையை இழப்பதாலோ, கிழக்கு இலங்கையில் கருணா தலைமையில் ஒரு மொம்மை அரசாங்கம் அமைவதாலோ புலிகளுக்கு இராணுவ ரீதியில் பெரிய இழப்பு ஏற்படப்போவதில்லை, என்றாலும் அரசியல் ரீதியாக இதனால் புலிகளுக்கு நிறைய நிர்பந்தங்கள் ஏற்படும்.

புலிகள் இராணுவ ரீதியில் மிகவும் பலவீனமாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிற நிலையில், புலிகளின் நடவடிக்கைகளும் இந்த சந்தேகத்தை வலுவாக்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் புலிகளின் உண்மையான பலம் குறித்த கேள்விகள் எழுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பூரை புலிகள் இழந்த பிறகு கூட இவ்வாறு ஊடகங்கள் எழுதிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பூரை கைப்பற்றிய பிறகு ஆனையிறவை நோக்கி சிறீலங்கா இராணுவம் நகரக்கூடும் என்றும், ஆனையிறவை கைப்பற்றியப் பிறகு அந்த பலத்துடன் பேச்சுவார்த்தைக்கு சிறீலங்கா செல்லும் என்றும் ஊடகங்களில் செய்திகள் காணப்பட்டன. DBS.ஜெயராஜ் கூட இது போன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் ஆனையிறவை நோக்கி முன்னேறிய இராணுவத்தை புலிகள் முகமாலையில் தாக்கி அவர்களுக்கு மிகக் கடுமையான தோல்வியை ஏற்படுத்தினர். அதன் பிறகு சில மாதங்கள் குறைந்திருந்த "புலிகள் பலவீனமடைந்து விட்டனர்" என்ற வாதம் இப்பொழுது மறுபடியும் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.புலிகள் பலவீனமடைந்து விட்டனரா என்பது புலிகளை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை.

புலிகள் இது வரை தங்கள் பலத்தில் சிறிய அளவு கூட பயன்படுத்த வில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் தன்னுடைய விமானப் படையின் முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. இராணுவச் செலவு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. புலிகளை அழிக்க இது தான் சரியான சமயம் என்பதாக சிறீலங்கா ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கிழக்கு பகுதியை கைப்பற்றியப் பிறகு வடக்கு பகுதியையும் கைப்பற்றுவோம் என்கிறார் சிறீலங்கா இராணுவ தளபதி போனஸ்கா.

நிறைய இடங்களை கைப்பற்றி அதனை தக்க வைக்க கூடிய வலிமை சிறீலங்கா இராணுவத்திற்கு உள்ளதா என்பதை எதிர்வரும் நாட்கள் தெளிவு படுத்தும்

புலிகளின் யுத்தம் குறித்து எங்கோ படித்த சில வரிகள் இவை.
கொரில்லா யுத்தம் குறித்து மாவோ இவ்வாறு கூறுகிறார்
"the enemy advances, we retreat; the enemy camps, we harass; the enemy tires, we attack; the enemy retreats, we pursue."

புலிகளின் கடந்த கால யுத்த முறை இவ்வாறு தான் இருந்தது. the enemy advances, we retreat என்ற நிலையில் இருந்து தான் முன்னேறி ஆனையிறவு உட்பட பல இடங்களை கைப்பற்றினர்.

கடந்த காலங்களுக்கும் இப்போதைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இம்முறையும் புலிகளால் தாங்கள் இழந்த இடத்தை கைப்பற்ற முடியுமா ?

புலிகள் பதில் தாக்குதல் நடத்தும் வரை அவர்களின் உண்மையான பலத்தை யாராலும் கணிக்க முடியாது