நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. அமெரிக்காவில் நண்பர்களுடன் இருந்த வரையில் இத்தகைய விழாக்களில் நான் கலந்து கொண்டதில்லை. கலந்து கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. ஆனால் குடும்பத்துடன் இருக்கும் பொழுது பொழுதுபோக்கிற்காக இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது.
நான் அரங்கில் நுழைந்த பொழுது பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நன்றாக தமிழில் பேசிக்கொண்டிருந்தார். பரவாயில்லையே என்று நினைத்த நேரத்தில் ஆங்கிலத்திற்கு நுழைந்து அப்புறம் நிறைய ஆங்கிலம், போனால் போகிறது என்று சில வார்த்தைகளை தமிழில் பேசினார். Over to NJ Tamil Sangam President என்றவுடன் வந்த தமிழ்ச்சங்க தலைவராவது தமிழில் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். வணக்கம் என்று தொடங்கி ஆங்கிலத்திலேயே எல்லோருக்கும் சில Instructions கொடுத்தார். இறுதியாக "We have ordered fresh flowers from chennai. மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போங்கள்" என்று 4 வார்த்தைகள் தமிழில் பேசி முடித்தார்.
தமிழ்ச்சங்க விழாவை தொகுத்து வழங்குவதில் தமிழை சரியாக பயன்படுத்தாத அலட்சியம் மற்றும் தமிழ்ச்சங்க தலைவர் கூட தமிழில் பேசுவதை முக்கியமாக நினைக்காதது என்னை எரிச்சல் படுத்தியது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தொகுத்து வழங்கியிருக்கலாம்.
நாடகம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் சிலர் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். மேடையில் இருந்து ஒருவர் அனைவரும் அமைதியாக நாடகத்தை பாருங்கள் என்று கூறினார். கூடவே "குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளும் டெக்னிக் கற்று கொடுக்கிறீர்களா என்று கேட்க தோன்றியதை அடக்கிக் கொண்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினோம்
நிகழ்ச்சி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ? சக்கரைப் பொங்கல் சுவையாக இருந்தது என்பதை தவிர No Comments
******
பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் போல ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் புத்தக கண்காட்சி புண்ணியத்தால் நிறைய புத்தகங்களை பதிப்பகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய பதிப்பகங்களும் முளைத்து விடுகின்றன. இவையெல்லாம் ஆரோக்கியமான மாற்றமா என்பதை பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை கொண்டு தான் தீர்மானிக்க முடியும். பொங்கலுக்கு வெளியாகி இருக்கிற புத்தகங்கள் வரிசையில் சில என்னை கவர்ந்தன.
கிழக்குப் பதிப்பகத்தின் ஒலிப்புத்தகங்கள் நல்ல முயற்சி. IPodல் பாட்டு கேட்பதற்கு பதிலாக இதனை கேட்கலாம். வேலைக்கு சென்று வரும் 2 மணி நேரத்தை உருப்படியாக செலவிட்டது போல இருக்கும்.
ஹிந்து நாளிதழின் ராம், துக்ளக் சோ, சுப்ரமணியம் சாமி ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் ? அப்படி தான் இருந்தது முஷ்ரப் புத்தகத்தின் தமிழாக்க வெளியீட்டு விழா. Interesting !!
ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பில் (In the Line of Fire) இருந்த கவர்ச்சி "உடல் மண்ணுக்கு" என்ற தமிழ்ப் பெயரில் இல்லாதது போல உணர்ந்தேன். ஆங்கிலப் புத்தகம் வழக்கமான சுயசரிதை போல இல்லாமல் நல்ல விறுவிறுப்பாக இருந்தது. உலக அளவில் அதிகம் பேசப்பட்ட புத்தகம் தமிழல் உடனே மொழிபெயர்க்கப்படுவது நல்ல முயற்சி தான்.
******
சிறீலங்கா இராணுவம் வாகரையை கைப்பற்றி இருக்கிறது. புலிகள் தங்கள் படைகளை வாகரையில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal தான், என்றாலும் இதனை பெரிய வெற்றியாக ஊடகங்கள் முன்நிறுத்துகின்றன. வாகரையை இராணுவம் கைப்பற்றியிருக்கும் சூழலில் புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்ற வாதம் இன்னும் அதிகமாகும்.
இது வரை நடந்தவற்றை நோக்கும் பொழுது சில விடயங்கள் புலப்படும்
- புலிகள் இதுவரை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தவில்லை. புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் (Surface to Air missiles - SAM) உள்ளன. சமாதானக் காலத்தில் இன்னும் அதிகமாக கூட பெற்றிருக்கலாம்
- புலிகளிடம் சில இலகுரக விமானங்கள் உள்ளன. இதனை பெரும் செலவிட்டு வாங்கியிருக்கும் புலிகள் அதனை இது வரை பயன்படுத்தவில்லை
- பெரிய அளவிலான கடற்படை தாக்குதலை புலிகள் நடத்தவேயில்லை
- புலிகளின் தாக்குதல் தொடர்ச்சியாக நடக்கும். முகமாலையில் தாக்குதல், அடுத்த சில தினங்களில் ஹபரணையில் தாக்குதல், காலியில் தாக்குதல் என புலிகள் நடத்திய தொடர் தாக்குதலுக்கு பிறகு இராணுவ பலம் புலிகள் வசம் சாய்ந்து விட்டதாக ஊடகங்கள் எழுதின. சிறீலங்கா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்தினாலும் புலிகள் இது வரை பெரிய பதில் தாக்குதல் எதுவும் நடத்த வில்லை.
இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது ஒரு விடயம் புலப்படும் - தங்களுடைய பலத்தை புலிகள் தக்கவைத்து கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் பிரயோகிக்கலாம்.
They have lost some battles, but not war. ஆனால் இந்தப் போரை யாருமே வெல்ல முடியாது என்பது தான் உண்மை.
இந்த சமயத்தில் குறிப்பிட வேண்டியது - சர்வதேச சமூகத்தின் அமைதி. சிறீலங்கா இராணுவம் முகமாலையில் தோற்ற பொழுது பாய்ந்தோடி வந்த சர்வதேச சமூகம், தற்பொழுது அமைதி காத்து வருகிறது. அதன் இரட்டை வேடம் தெளிவாக புலப்படுகிறது.
******
நியூஜெர்சியில் இந்த வருடம் மிகவும் வெப்பமான குளிர் காலம் என்றும், Snow பார்க்க முடியாதா என்றும் நினைத்து கொண்டிருந்த நிலையில், இந்த வாரம் நல்ல குளிர். லேசான Snow இருந்தது. ஜனவரியில் கூட 70°F அளவு இருந்த வெப்பநிலை இந்த வாரம் 20°F அளவுக்கு வந்து குளிர்காலம் எட்டிப் பார்த்து இருக்கிறது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதத்தில் காணக்கூடிய நியூயார்க் Cheery blossom இந்த வருடம் ஜனவரியிலேயே எட்டிப் பார்த்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
8 மறுமொழிகள்:
நான் பார்த்த ஒரு தமிழ்ச்சங்கத்தின் அத்தனை ஆண்டுவிழாக்களிலும் /நிகழ்ச்சி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ?/ - இதுக்கும் -/நாடகம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் சிலர் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர்/-இதுக்கும்- /கூடவே "குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார்/ - இதுக்கும் நெருங்கிய சம்பந்தமிருப்பதாகத் தோன்றுகிறது. தாமாகவே கத்த முடியாத குடும்பத்தோடு போய் தமிள்ஷங்க நாடகம் பார்க்கும் சில பெற்றோர்கள் குழந்தைகளை வேண்டுமென்றே கிள்ளிவிடுகின்றார்களோ என்று மிகவும் சந்தேகமுண்டு ;-)
1:06 PM, January 21, 2007சில பெற்றோர்கள் குழந்தைகளை வேண்டுமென்றே கிள்ளிவிடுகின்றார்களோ என்று மிகவும் சந்தேகமுண்டு ;-)
1:33 PM, January 21, 2007:-)
சசி,
2:08 PM, January 21, 2007உண்மையில் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் ஆங்கிலத்தில் பேசுவது கவலைக்குரிய விடயம் தான். இங்கே Toronto வில் நடக்கும் பல தமிழ்விழாக்களில் இரு தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதைப் பார்த்திருக்கிறேன். ஒருவர் தமிழிலும் மற்றையவர் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்குவர். உண்மையில் இம் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் இப்படியான தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலம் தெரியாத பலர் வருவதால் தமிழில் தொகுத்து வழங்குவதால் அவர்கள் பயன் பெறுவர். அதே நேரம், தமிழே பேச முடியாத ஒரு தமிழ்ச் சந்ததி இங்கே உருவாகிக் கொண்டு வரும் வருத்தமான நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான சந்ததியினர், மொழியைத் தொலைத்தாலும் பல தமிழ் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர். அதனால் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்குவதால் அவர்கள் பயன் பெறுவர்.
மற்றும்படி, நீங்கள் சொன்னது போல் சில பேச்சாளர்கள், தங்களது ஆங்கிலப் புலமையைச் சபையினருக்குக் காட்ட வேண்டும் என்பது போல் பல வார்த்தைகளை ஆங்கிலத்திலும் தமிங்கிலிசிலும் பேசுவதையும் அவதானித்து இருக்கிறேன். அந்த நேரத்தில் எழும்பி அவர்களுக்குச் செருப்பால் அடிக்க வேண்டும் போல் இருக்கும்.
/* பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் போல ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் புத்தக கண்காட்சி புண்ணியத்தால் நிறைய புத்தகங்களை பதிப்பகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. */
சசி, சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியைச் சொல்கிறீர்களா? அல்லது இப் புத்தகக் கண்காட்சி நியூ ஜெர்சியில் நடந்ததா? நியூஜெர்சியில் நடப்பது தெரிந்திருந்தால் நான் வந்திருப்பேன். இது பற்றி நான் அறியவில்லை.
/* சிறீலங்கா இராணுவம் வாகரையை கைப்பற்றி இருக்கிறது. புலிகள் தங்கள் படைகளை வாகரையில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal தான், என்றாலும் இதனை பெரிய வெற்றியாக ஊடகங்கள் முன்நிறுத்துகின்றன. வாகரையை இராணுவம் கைப்பற்றியிருக்கும் சூழலில் புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்ற வாதம் இன்னும் அதிகமாகும்.*/
இது பற்றி நான் விரைவில் ஒரு பதிவே போட்டாக வேண்டும். பலர் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் என்னிடம் வினாவும் கேள்வி இதுதான். என்ன புலிகள் பின்வாங்குகிறார்களே? உண்மையில் புலிகள் பலமிழ்ந்து விட்டனரா எனும் ஏக்கம் ஒரு வித பயம் எம் மக்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அது ஞாயமானதும் கூட.
இது புலிகளின் பலவீனம் இல்லை என்பதை மிகவும் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விருப்புகிறேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அன்று தொட்டு இன்று வரை இப்படியான நிகழ்வுகளைப் பெரிது படுத்துவது வழக்கம். காரணம் அவர்கள் இதை வைத்துத் தான் அரசியல் நடத்துவது. சிங்கள மக்களை புலிகள் பலம் இழந்துவிட்டனர் என்றும் அவர்களை இல்லாதொழிப்போம் என்னும் மாயைக்குள்ளும் கொண்டு செல்கின்றனர். இதற்கு எதிர்கால நிகழ்வுகள் பதில் சொல்லும்.
பிரபாகரனைப் பொறுத்த வரையில் அவர் தனது இலட்சியமான தமிழின விடுதலை என்பதில் வைத்த கண் வாங்காது, இப்படியான சலசலப்புகளைக் கண்டு குழம்பாது எமது போராட்டத்தை வெற்றிகரமாக முன்நகர்த்திச் செல்கிறார். ஈழ விடுதலை என்றால், தமிழ்மண்ணில் உள்ள சகல சிங்களப் படை முகாம்களையும் அழித்து அங்குலமங்குலமாக தமிழ் மண்ணை விடுவிப்பதுதான் என பல தமிழ்மக்கள் ஒரு மாயயை தம் மனதில் பதித்து வைத்திருக்கின்றனர். அதனால், வாகரை , சம்பூர் போன்ற இடங்களில் புலிகள் பின் வாங்கியதும் பெரும் பின்னடைவு, புலிகள் பலவீனம் என்று முடிவுக்கு வருகிறார்கள். அது தவறு.
எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் எதிரியின் சகல முகாம்களையும் அழித்து அங்குலமங்குலமாக தமது மண்ணை மீட்டு விடுதலை பெற்றதாக வரலாறு இல்லை. வியற்னாமில் அமெரிக்கர்களின் முழு முகாமையும் தகராமல் , முழு தென் வியற்னாமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமல் தான் வியற்நாம் வென்றது. அதே போலத் தான் சோவியத் படைகளின் முழு முகாமையும் அழித்து ஆப்கானிஸ்தானில் இருந்து உருஷ்சியப் படைகளை பின்வாங்க வைக்கவில்லை.
ஆக, மண்ணை மீட்பதற்கு முழு நிலப்பரப்பையும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, எமது மண்ணில் உள்ள முழு எதிரிகளையும் அழித்துத் தான் நாம் விடுதலை அடைய முடியும் என்பது தவறானது. வியற்னாமில் என்ன நடந்ததோ, ஆப்கானிஸ்தானில் என்ன நடந்ததோ, அதே தான் இன்று ஈழத்திலும் நடக்கிறது. தலைவர் பிரபாகரன், மிகவும் அவதனமாகவும், உறுதியாகவும் அடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
சரி, எதிரியின் முழுமுகாம்களையும் அழிப்பதோ அல்லது முழுமண்னையும் அங்குலமங்குலமாக மீட்பதோ புலிகளின் நோக்கம் இல்லையென்றால் அவர்களின் நோக்கம்தான் என்ன என்று பலர் கேட்கலாம்.நியாயமான கேள்வி. இதற்கான விடையை இன்று இரவு நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
நன்றி.
// நிகழ்ச்சி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ? சக்கரைப் பொங்கல் சுவையாக இருந்தது என்பதை தவிர No Comments //
2:09 PM, January 21, 2007மேலுள்ள வரி நீங்கள் மறந்த போய் பண்ணித்தமிழில் எழுதியதா அல்லது வஞ்ச புகழ்ச்சியா.. ? உண்மையைச் சொல்லுங்கள் ;)
வாரக்கடைசியில் மனைவி அவர்கள் indiaglitz தளத்தில் தமிழ்த் திரைப்பட நிகழ்ச்சிகளை கண்ணுறுவார். எனக்கும் பழக்கம்
ஒட்டிக்கொண்டது. நேற்று நடிகர் சூரியா 'ஆடிஸம் நோய் - விழிப்புணர்வு' பற்றி அங்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
நல்ல விஷயம். ஆனால் மனுஷன் ஒரு வரி கூட ஒழுங்காய் தமிழில் பேசவில்லை. பண்ணி,பண்ணி தமிழாங்கிலத்தில்
பேசினார். அலுப்பாய் இருந்தது. முழுதாய் ஒரு மொழியில் பேசி தொலையலாம்.
இந்தியாவில் பிறந்து வளர்ந்து கொண்டிருப்பவர்களே இப்படி இருக்க, நியு ஜெர்சியில் நீங்கள் ரொம்ப எதிர் பார்க்கிறீர்கள் !
சசி, சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியைச் சொல்கிறீர்களா? அல்லது இப் புத்தகக் கண்காட்சி நியூ ஜெர்சியில் நடந்ததா?
2:35 PM, January 21, 2007*****
வெற்றி,
சென்னை புத்தக கண்காட்சியை தான் குறிப்பிடுகிறேன்.
வாசன்,
மேலுள்ள வரி நீங்கள் மறந்த போய் பண்ணித்தமிழில் எழுதியதா அல்லது வஞ்ச புகழ்ச்சியா.. ? உண்மையைச் சொல்லுங்கள் ;)
*****
:-)
நியு ஜெர்சியில் நீங்கள் ரொம்ப எதிர் பார்க்கிறீர்கள் !
*****
தமிழ்ச்சங்கங்களுக்குள் சண்டை மூட்ட வேண்டாம் என்று பதிவில் குறிப்பிட வில்லை :-)
வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த திருக்குறள் மாநாட்டில் சென்ற ஆண்டு கலந்து கொண்டேன். அங்கு நிகழ்ச்சிகளில் தமிழ் மட்டுமே முன்னிறுத்தப்பட்டது.
வாஷிங்டனில் முடிந்தது நியூஜெர்சியில் முடியாதா என்ற ஆதங்கம் தான்.
அது தவிர தமிழில் மட்டும் தான் தொகுத்து வழங்க வேண்டும் என்று கூறவில்லை. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் தொகுத்து வழங்கலாம்.
---"குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார்.---
3:07 PM, January 21, 2007இந்தியாவில் பக்கத்து சீட்டில் அரட்டை கச்சேரி நடத்தினாலும், தியேட்டரில் குழந்தை படுத்தினாலும், கண்டு கொள்ளாது கருமமே கண்ணாக திரையைப் பார்ப்பார்கள்.
ஆனால், மேற்கத்திய நாடுகளில் நாகரிகம் என்னும் பெயரில் ஓபரா நிகழ்ச்சி ஆகட்டும்; மிஷன் இம்பாசிப்ள் திரையிடும் அரங்கமாகட்டும்; நூலகத்தில் நடைபெறும் விழாவாகட்டும்... குழந்தைகள் அமைதியைக் குலைக்காமல் இருக்க முயல்கிறார்கள்.
சிலர் வீட்டிலேயே, இன்னொருவரை பாதுகாக்க சொல்கிறார்கள். குழந்தைகளே உலகம் என்று, சிலர் விழாவுக்கே செல்வதில்லை. அல்லது இதற்கென்றே இருக்கும் childcare கைகொடுக்கலாம்.
உள்ளூர் நிகழ்ச்சிகளில் பதவிசாக நடந்து கொள்ளும் இந்தியர்களும், நடன அரங்கேற்றத்தில் 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க' என்று சொல்லி, வேறுவிதமாக நடக்கிறார்கள்.
நடன அரங்கேற்றத்தில் 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க' என்று சொல்லி, வேறுவிதமாக நடக்கிறார்கள்.
8:27 PM, January 21, 2007*****
இந்தியாவாக இருந்தால் பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சி பக்கம் எட்டி பார்க்காதவர்கள் கூட இங்கு பொங்கல் விழாவில் பரதநாட்டியமோ, குச்சுப்புடியோ எது நடந்தாலும் பொழுதுபோக்கிற்காக வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் இத்தகைய நிகழ்ச்சிக்கு வந்து விடுகிறார்கள். குழந்தைகளை அழைத்துக் கொண்டு விழாவுக்கு வருவது கூட இதன் பொருட்டு தான்.
அதனுடைய விளைவு பரதநாட்டியம் மேடையில் நடந்து கொண்டிருக்க பார்வையாளர்கள் சுவாரசியமான அரட்டை, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல், பக்கத்து இருக்கையில் இருப்பவரிடம் குசாலம் விசாரித்தல் என்று பொழுதை கழிக்கிறார்கள்.
நேற்று கூட "எவ்வளவு அற்புதமான நடனம், யாரும் கைதட்ட வில்லையே" என்று தொகுப்பாளர் வருத்தப்பட்டு கொண்டார். அற்புதமான நடனமா என்று விளங்காமலேயே பக்கத்து இருக்கையில் இருப்பவரிடம் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு கைதட்டினார்கள் :-)
வெகுஜன மக்களால் அதிகம் விரும்பப்படாத இத்தகைய நிகழ்ச்சிகளை, வெகுஜன மக்கள் அதிகம் பங்கு பெறும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஏன் புகுத்தப்படுகிறது என்பது புரியவில்லை.
அது தமிழ்ச்சங்க "கொள்கை" என்றால், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை
---இந்தியாவாக இருந்தால் பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சி பக்கம் எட்டி பார்க்காதவர்கள் கூட---
9:59 AM, January 22, 2007ஆமாம்.
நிகழ்வுகள் சமுதாய சந்திப்பாக, சொந்த பந்தங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக பயன்படுகிறது. ரொம்ப நாளாக தொலைபேசாதவர், எப்பொழுதோ 'ஹாய்' சொன்னவர் போன்ற தவறவிட்டவர்களை புதுப்பித்துக் கொள்ளவும் தமிழ் சங்க விழாக்கள் உபயோகமாகும்.
குழந்தைகளுடன் இந்த மாதிரி பொது இடங்களுக்கு செல்வது சிரமமானது. 'அரங்கத்தினுள் எந்த உணவையும் உள்ளே எடுத்துப் போகாதீர்கள்' என்று சொல்வார்கள். வாடகைக்கு விட்டவரின் விதிமுறையால் குழந்தையின் சிறப்பு உணவு தடுக்கப்படும். பலர் உபயோகிப்பதால், டயாபர் மாற்றுதலுக்கு சுகாதாரமான இடமாக இருக்கும் என்று வாக்குறுதி அளிக்க முடியாது. அவர்களின் தூக்க நேரம் பார்த்து இன்னிசை கச்சேரி துவங்கும். கார் சீட்டில் உறங்கும் சௌகரியம் கொண்டவர்களை, 'நடைபாதை வழியில் வைக்காதே' என்பார்கள்.
இத்தனைக்கும் நடுவில் நிகழ்ச்சியை ரசிக்கவும், நண்பர்களை கவனிக்கவும் பொறுமை இழப்பேன்.
---வெகுஜன மக்களால் அதிகம் விரும்பப்படாத இத்தகைய நிகழ்ச்சிகளை, ---
இந்த முடிவுக்கு எப்படி வர இயலும்? பொதுமைப்படுத்தலுக்கு கருத்துக் கணிப்பு இல்லாத நிலையில், எனது அனுமானங்களை எப்படி பலரின் கருத்தாக சுருக்க முடியும்?
---பரதநாட்டியம் மேடையில் நடந்து கொண்டிருக்க பார்வையாளர்கள் சுவாரசியமான அரட்டை---
அரட்டை அடிக்க, வீடு அல்லது உணவகம் போன்ற இடங்கள் இருக்கிறதே... விழா அரங்கத்தில்தான் இதை செய்யவேண்டுமா?
Post a Comment