Friday, March 23, 2007

INDIA - you deserved to lose !!!


இந்திய அணி இது போல மோசமாக கடந்த உலககோப்பைகளில் விளையாடியதாக நினைவில் இல்லை. எனக்கு தெரிந்து இந்திய அணி மோசமாக விளையாடிய உலககோப்பை என்று பார்த்தால் அது 1992 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடந்த உலககோப்பைகளில் தான். ஆனால் அப்போதைய இந்திய அணி இந்தளவுக்கு வலுவான அணியாக இருந்ததில்லை. தற்போதைய அணி மற்ற அணிகளுடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு வலுவான அணி (On Paper) என்பதால் இந்த தோல்வி பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த உலககோப்பை ஒரு ஏமாற்றம் தான். என்றாலும் at the end of the day, it is just a game.

இந்திய கிரிக்கெட் அணியை ஒட்டி எழுப்பப்படும் வலது சாரி இந்திய தேசியவாதம், ஊடகங்கள் எழுப்பும் போலி பிம்பங்கள், இந்திய நிறுவனங்கள் அறுவடை செய்ய முயலும் பல கோடி ரூபாய் வருமானங்கள் போன்றவைக்கு இந்த தோல்வி தற்காலிகமான பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தவிர இந்த தோல்வி இந்திய தேசியவாத-பண பிம்பத்தில் இருந்து கிரிக்கெட்டிற்கு ஒரு தற்காலிகமான விடுதலையையும் கொடுக்கும். இந்த போலி பிம்பங்கள் இல்லாமல், நிம்மதியான ஒரு உலககோப்பை ஆட்டத்தினை பார்க்கலாம் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எந்த அணியை பின் தொடர்வது என்பதில் தான் கொஞ்சம் குழப்பம்.

விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது என்பது பள்ளிக் கால உற்சாகம். அப்படி தொடங்கியது தான் கிரிக்கெட் மீதான காதல். நெய்வேலியில் எங்கள் ஏரியா அணிக்கும், பக்கத்து ஏரியா அணிக்கும் இடையே "bet match" என்ற பெயரில் விளையாடுவது வழக்கம். 10ரூபாய், 20 ரூபாய், 50ரூபாய் என்று பல வகை போட்டியில் விளையாடுவோம். சில போட்டிகளில் வெற்றி பெற்றும் இருக்கிறோம், சில போட்டிகளில் தோற்றும் இருக்கிறோம்.

இவ்வாறு கிரிக்கெட் மீது உருவான காதல் இந்திய அணி விளையாடும் போட்டிகளை தொடர்ந்து பின்பற்றும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்திய அணியை பின்பற்றும் ஆர்வம் என்பது போட்டியை விளையாடிதாலும் புரிந்து கொண்டமையாலும் எழுந்தது என்பதால் வெற்றி தோல்விகளை ஆட்டத்தின் அன்றைய விளையாட்டைப் பொறுத்ததாக ஏற்றுக்கொள்ள முடிந்தது.

ஆனால் கிரிக்கெட்டின் இந்த இயல்பான உற்சாகத்தை ஊடகங்களின் வளர்ச்சியும், வணிகமயமாக்கமும் கெடுத்து விட்டன என பாப் உல்மரின் படுகொலைக்கு பிறகு இன்று பலர் பேசத்தொடங்கி உள்ளனர். கிரிக்கெட்டின் இந்த நிலைக்கு இந்தியாவை/இந்திய ரசிகர்களைச் சார்ந்து கிரிக்கெட்டிற்கு கட்டமைக்கப்பட்டுள்ள பொருளாதார சூழல் தான் முக்கிய காரணம் என பலர் கூறத் தொடங்கி உள்ளனர்.

இந்தியா தோல்வி அடைந்தால் ரசிகர்கள் செய்யும் கலாட்டாவை நேரடி ஒளிபரப்பு செய்யாதது மட்டும் தான் பாக்கி. டோனி வீடு தாக்கி உடைக்கப்படுவதை அருகில் இருந்து அழகாக படம் பிடிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களின் திறன் வியக்க வைக்கிறது. இது ரசிகர்களின் reaction என்று கூறி "ஒரு பத்து பேர் + சில தொலைக்காட்சி நிருபர்கள்" செய்யும் விடயத்தை தொலைக்காட்சிகள் இந்தியாவெங்கும் "விற்கின்றன". தொலைக்காட்சிகளில் தங்களுக்கு கிடைக்கும் விளம்பர வருமானத்திற்காக உலககோப்பையை ஒட்டி IBNLIVEல் எத்தனை விதமான கிரிக்கெட் சார்ந்த நிகழ்ச்சிகள் என்பதை கணக்கில் எடுக்க முடியவில்லை. யார் உலககோப்பையை வெல்லுவார்கள் என்று கருத்துகணிப்பு, ஜோதிடம் என நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை பார்த்தால் சிரிக்கத் தான் முடிந்தது.

இன்னும் எத்தனை நிகழ்ச்சிகளோ, நல்ல வேளை இந்தியாவில் இருக்க வில்லை, தப்பித்தோம் என்று நினைத்து கொள்கிறேன்.

இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் கிரிக்கெட் விற்கப்பட்டு இந்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நல்ல விளம்பர வருவாய் கிடைக்கிறது. இந்திய அணி குறித்த பிம்பம் எழுப்படுகிறது.

இவை மட்டுமா... நாடாளுமன்றம் கிரிக்கெட் தோல்வி குறித்து விவாதிப்பதும், கிரிக்கெட் என்பது ஒரு போட்டி, விளையாட்டு என்பது மறக்கப்பட்டு இந்தியாவிற்கு இது அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேசியவாதிகள் குரல் எழுப்புவதும் கேலிகூத்தானது தான். இந்தியாவில் இருக்கும் ஏழ்மை, சுரண்டல், மக்களை வேட்டையாடும் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் மறக்கப்பட்டு கிரிக்கெட் தோல்வி தான் பிரதானம் என்பதாக ஊடகங்கள் அடுத்த சில நாட்கள் குரல் எழுப்புவதை பார்க்கலாம். நந்திகிராமம், காஷ்மீர் போன்றவைகளை விட 2007 உலககோப்பையில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட அவனமானத்தை எண்ணி துக்கம் சிந்தும் ஊடகங்களை அடுத்த சில தினங்கள் பார்க்கலாம்.

****

இன்றைய போட்டியில் மதிய நேர ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் இந்த அடுகளத்திலும் சரியாக பேட்டிங் செய்யாத இந்திய அணி உலககோப்பையில் இருப்பதற்கு தகுதி அற்றது என்றே நான் நினைக்கிறேன்.

இந்த உலககோப்பையில் இது வரை நடந்த போட்டிகளில் அதிக சுவாரசியம் இருக்கவில்லை. இந்தியா பங்களாதேஷ் அணியிடம் தோற்றது, பாக்கிஸ்தான் அயர்லாந்து அணியிடம் தோற்றது போன்றவை உலககோப்பையில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலும், இது உலககோப்பையின் சுவாரசியத்தை மேலும் குறைத்திருக்கிறது. அயர்லாந்து, பங்களாதேஷ் போன்ற அணிகள் சூப்பர் 8ல் விளையாடும் போட்டிகளை கவனிக்கும் ஆர்வம் எனக்கு நிச்சயம் இல்லை. சிறிய அணிகளை பெரிய அணிகள் துவசம் செய்து உலக சாதனை படைப்பதை ரசிக்க முடியாது. பங்களாதேஷ் இந்திய அணியை தோற்கடித்த பொழுது நல்ல அணியாக தெரிந்தது. ஆனால் அந்த அணி சிறீலங்காவிடம் அடைந்த படுதோல்வியை பார்க்கும் பொழுது அவ்வாறு தெரியவில்லை.

இது வரை நடந்த ஆட்டங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்கா போன்றவை உலககோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெறக்கூடிய அணிகளாக தெரிகிறது.

11 மறுமொழிகள்:

-/சுடலை மாடன்/- said...

சசி மாதிரி நல்லா சிந்திக்கிற ஆளுங்களே கிரிக்கட்டை இப்படி மாய்ந்து மாய்ந்து பார்ப்பதும், பின்னாடி கன்னத்தில் போட்டுக் கொண்டும் இருக்கும் போது அப்பாவி இளைஞர்களை நினைத்து என்ன செய்ய :-)

கிரிக்கட்டை காலனியாதிக்கத்தின் எச்சம் என்று யார் இலேசாச் சொன்னது? நவகாலனியாதிக்கத்தின் வேர்கள்ல ஒன்னுன்னு சொல்லியிருக்கனும்!

நன்றி - சொ. சங்கரபாண்டி

10:36 PM, March 23, 2007
ஆதிபகவன் said...

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்கா.

இந்த நான்கு அணிகள்தான் செமிபைனல்ஸ் வரும்.

11:47 PM, March 23, 2007
Mugundan | முகுந்தன் said...

நியாயமான அலசல் சசி,

காசை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மக்களிடம் ஒரு வித வெறித் தனத்தை
தூண்டுவது தொலைக்காட்சிகள் தான்.

ஊடங்கள் எல்லாம் கிரிக்கெட்-டை
விளம்பரத்திற்காகவே,
விளையாடுகின்றன.

நம் மக்களுக்கு பிடித்துள்ள கிரிக்கெட் வியாதி,மாயை மாற சில காலம் ஆகும்.

நன்றி!

அன்புடன்,
கடலூர் முகு

12:13 AM, March 24, 2007
மணியன் said...

கிரிக்கெட் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் இடிதான். அப்படியாவது இந்த விளையாட்டு ஊடக/விளம்பர பிடிகளிலிருந்து விடுபட்டால் நல்லதுதான்.

3:09 AM, March 24, 2007
பாரதிய நவீன இளவரசன் said...

We have 3 players with 10000+ runs and still how could we say we deserve to lose....?

collective failure..for indians, Captain or coach not to be blamed.

12:21 PM, March 24, 2007
sansri said...

Loose or win is part of any game. But the amount of money being spent on this event for the last four year and amount of the player’s endorsement are all too much. If you could use that money for science and technology I'm pretty sure it will be quite equal to a satellite

10:55 PM, March 24, 2007
சல்மான் said...

/// இவை மட்டுமா... நாடாளுமன்றம் கிரிக்கெட் தோல்வி குறித்து விவாதிப்பதும், கிரிக்கெட் என்பது ஒரு போட்டி, விளையாட்டு என்பது மறக்கப்பட்டு இந்தியாவிற்கு இது அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேசியவாதிகள் குரல் எழுப்புவதும் கேலிகூத்தானது தான். இந்தியாவில் இருக்கும் ஏழ்மை, சுரண்டல், மக்களை வேட்டையாடும் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் மறக்கப்பட்டு கிரிக்கெட் தோல்வி தான் பிரதானம் என்பதாக ஊடகங்கள் அடுத்த சில நாட்கள் குரல் எழுப்புவதை பார்க்கலாம்
///

ஊடகங்கள் மக்கள் மனதில் இந்த பிம்பத்தை ஏற்கனவே ஏற்றி விட்டதாகவே நினைக்கிறேன்.

இந்தியா தோற்றது என 15 மணி நேரமாகியும் நான் அறிந்திருக்காததால், புனித பிம்ப கருத்துப்படி 'தேசாபிமானம் இல்லாத துரோகி' என என் பணியிடத்தில் சக ஊழியர்களால் அறிவிக்கப்பட்டேன் !!!

இந்த பட்டமளிப்பை செய்தவர்களில் மெத்தப் படித்த (MBA XLRI, M.S IIT, etc) கனவான்கள் மட்டுமின்றி, பாரதி கண்ட புதுமை பெண்களும் அடங்குவர்..

சுனாமி நிகழ்ந்த போது, இதே ஊழியர்கள், அன்று நாங்கள் ஏற்பாடு செய்திருந்த இன்ப சுற்றுலாவை புறக்கணித்து அந்த செலவை சுனாமிக்கு அளிக்கலாம் என்று 'சில' தேசாபிமான துரோகிகள் சொன்ன யோசனைக்காக முகம் சுழித்தது நினைவில் வருகிறது..

துணிகளை துவைக்கும், நூலகம் செல்லும் ஆக்கபூர்வமான வேலகள் இருந்ததால், இந்திய தோல்விக்காக வருந்தும் நேரம் இல்லை என சொல்லி எஸ்கேப் ஆனதில், இன்னும் அவர்களுக்கு வருத்தம்

வலைப்பதிவு முற்போக்கு எழுத்தாளர்கள் கூட இன்னும் இந்த 'அவமானத்திலிருந்து' மீளவில்லை போலும்

சல்மான்

11:50 PM, March 24, 2007
Naufal MQ said...

//இது வரை நடந்த ஆட்டங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்கா போன்றவை உலககோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெறக்கூடிய அணிகளாக தெரிகிறது
//
என்னோட கணிப்பும் அதுவே. :)

1:06 AM, March 25, 2007
Naufal MQ said...

நீங்கள் கூறுவதைப்போல் இதை வைத்து காசு பண்ணும் கும்பலை ஒழிக்க வேண்டும். இதை ஒரு விளையாட்டாக மட்டுமே பார்க்கவேண்டும். நல்ல பதிவு.

1:09 AM, March 25, 2007
மருதநாயகம் said...

//
இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் கிரிக்கெட் விற்கப்பட்டு இந்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நல்ல விளம்பர வருவாய் கிடைக்கிறது
//

மீடியாவுக்கு இந்தியா வென்றாலும் விற்பனை வேண்டும் தோற்றாலும் விற்பனை வேண்டும். கிரிக்கெட், தேசப்பற்று எல்லாம் பிறகு தான்

3:55 AM, April 16, 2007