ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியது, ஈழ மக்களுக்காக போராடியது, முன்னாள் பிரதமர்களுடனும், முதல்வர்களுடனும் பழகியது, கல்லூரியில் பேசி பாராட்டைப் பெற்றது என என்னைக் குறித்து நிறைய எட்டுகளை எழுத வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். ஆனால் என்ன செய்வது...அப்படி ஒன்றும் இல்லையே. சுயத்தேவைகளுக்காக வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பதே அன்றாட வாழ்க்கையாக இருக்கும் பொழுது சுயதம்பட்டம் அடித்து சுயவிளம்பரம் செய்து கொள்ளும் செயலில் எனக்கு விருப்பம் இல்லை.
ஆனாலும் அருணா அவர்கள், நண்பர் மாயன், நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் போன்றோர் என்னை இந்த எட்டு ஆட்டத்திற்கு அழைத்திருப்பதால் ஒரு விதமான தர்மசங்கடமான நிலையில் அவர்களின் மின்னஞ்சல்களை புறக்கணிக்க முடியாத சூழலில் இந்த எட்டு விளையாட்டில் நானும் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக வலைப்பதிவுகளில் நடக்கும் இத்தகைய விளையாட்டுக்கள் ஒரு சிலருக்கு வரப்பிரசாதம். தங்களைப் பற்றிய "பிம்பத்தை" வலைப்பதிவுகளில் முன்வைக்க முனைவார்கள். சிலர் நகைச்சுவையாக கலாய்ப்பார்கள், சிலர் தங்களின் வாழ்க்கையை இயல்பாக திரும்பிப் பார்க்கிறார்கள்.
நானும் என் நினைவில் நிற்கும் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்
*****
2005ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், என் வாழ்க்கையில் மறந்த முடியாத உன்னதமான தருணம். அதிகாலை குளிரில் சுமார் மூன்று மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்த பொழுது மனம் பலவிதமான எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒரு விதமான அச்சம், எதிர்பார்ப்பு என அனைத்தும் மனதில் இருந்தது. வரவழைக்கப்பட்டிருந்த டாக்சியில் நானும் என் மனைவியும் நியூஜெர்சி Hackensackல் உள்ள Hackensack University Medical Centerக்கு சென்றோம். எங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான ஒரு தருணம் அது. ஆரம்பகட்ட பரிசோதனை எல்லாம் முடிந்து காலை சுமார் 7:59மணிக்கு என்னுடைய முதல் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தார்கள். அடுத்த சில நொடிகளில் 8மணிக்கு அடுத்த குழந்தையையும் வெளியில் எடுத்தார்கள். ஆம்.. எங்களுக்கு இரட்டைக்குழந்தைகள். முகத்தில் சில ரத்த துளிகளுடன் வெளியே வந்த என்னுடைய குழந்தைகளின் முகத்தை அருகில் இருந்து பார்க்கும் உன்னதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்னமும் முதன் முதலாக வெளியில் வந்த பொழுது இருந்த என குழந்தைகளின் முகபாவம் என் மனதில் நிற்கிறது. இந்தியாவில் இருந்திருந்தால் என்னை அறுவைச் சிகிச்சை அறைக்குள் நுழையவே அனுமதித்திருக்க மாட்டார்கள் என்பதை நினைக்கும் பொழுது, இந்த வாய்ப்பு உண்மையில் விலைமதிப்பற்றது என்றே சொல்ல வேண்டும்.
என் அம்மாவின் விசா தாமதமாக, இரட்டைக்குழந்தைகளை அடுத்து ஒரு மாதம் நானும் என் மனைவியும் மட்டுமே கவனிக்க நேர்ந்த அனுபவம் சுவாரசியமானது. இன்னும் வாழ்க்கையில் எத்தனை தருணங்கள் வந்தாலும் என்னுடைய குழந்தைகள் பிறந்த அந்த தருணத்திற்கு ஈடாகுமா என்பது சந்தேகமே...
*****
கல்லூரி நாட்கள் என்பது அனைவருக்குமே மகிழ்ச்சியான நாட்கள். அதுவும் ஒரு நண்பர் குழு கிடைத்து விட்டால் போதும் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இருக்காது. நான் 12ம் வகுப்பில் வாங்கி கிழித்த மதிப்பெண்களுக்கு எனக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியில் கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. கல்லூரியில் படிப்பதற்கு தான் நுழைந்தோம் என்பதே மறந்து போகும் அளவுக்கு அங்கு அடித்த கூத்துகளும் இனிமையானவை. அதில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல உள்ளன. ஆனால் அடிவாங்காமல் தப்பிக்க ஓடிய ஒரு நினைவு உள்ளது.
எங்கள் கல்லூரி விடுதிக்கு அருகில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் உள்ளன. ஒரு நாள் மாலை நண்பர்கள் சுமார் 10 பேருடன் அந்த விளைநிலங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு நண்பன் கடலை நன்றாக விளைந்துள்ளது, பறித்து சாப்பிடலாமா என்றான். வேண்டாம் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே சிலர் களத்தில் இறங்கினர். பறித்த கடலைகளை உட்கார்ந்து தின்று கொண்டிருந்த பொழுது திடீரென்று தூரத்தில் ஒரு கும்பல் எங்களை நோக்கி உருட்டு கட்டைகளுடன் ஓடிவருவது தெரிந்தது. ஓடிவருவது எங்களை நோக்கி தானா என்பது எங்களுக்கே சந்தேகமாக இருந்தது. ஆனாலும் வேறு யாரும் அங்கு இல்லாததால் நாங்கள் தான் இலக்கு என்பது எங்களுக்கு புரிந்து நாங்களும் ஓடத்தொடங்கினோம். ஓடிச்சென்று சிக்காமல் விடுதி மாணவர் கூட்டத்தில் கலந்து விட்டோம். அதன் பிறகு கல்லூரியில் விசாரணை, மிரட்டல் இறுதியாக அப்பாலஜி லெட்டர் என வழக்கமான அரங்கேற்றங்கள் நடந்தன. அந்த ஒரு நிகழ்வில் கிடைத்த நல்ல பெயர் நான்கு ஆண்டுகளும் கல்லூரியில் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனாலும் வேர்கடலை புடுங்கியதற்காக உருட்டுக்கட்டைகளுடன் ஆட்கள் ஏன் துரத்த வேண்டும் என எனக்கு புரிந்ததேயில்லை. கல்லூரியில் அதையொட்டி பலக் கதைகள் அப்பொழுது உலாவிக்கொண்டிருந்தன.
மேல்மருவத்தூர் கோயில் மீதும், பங்காரு அடிகளார் மீதும் பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தக் கோயில் பலருக்கு தனிப்பட்ட வகையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றால் அது மிகையல்ல. அங்கு தமிழில் தான் மந்திரம் சொல்லப்படும். கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம். பெண்கள் மாதவிலக்கு காலத்திலும் கூட கருவறைக்குள் சென்று வழிபடலாம். இவை பல பக்தர்களுக்கு மேல்மருவத்தூர் கோயில் மீது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தான் மேல்மருவத்தூர் கோயிலின் வெற்றியும் கூட. இந்து சனாதன தர்மங்களை உடைத்த ஒரு இடம் மேல்மருவத்தூர். அதே சமயத்தில் இந்து மதம் முன்வைத்த மூடநம்பிக்கைகளை முன்வைப்பதில் மேல்மருவத்தூரும் குறை வைத்ததில்லை.
*****
கல்லூரியை முடித்தப் பிறகு தான் கல்லூரி வாழ்க்கையை படிக்காமல் சொதப்பி விட்டோமோ எனப் புரிந்தது. படித்தது இயந்திரப் பொறியியல் என்பதால் அதில் வேலை தேடத் தொடங்கிய பொழுது அதில் "நல்ல" வேலை கிடைப்பது கடினம் என்பது புரிந்தது. அப்பொழுது தான் கணினித் துறை அதிக கவனத்தை பெற தொடங்கி இருந்த நேரம். நண்பர்கள் பலர் Y2K காலத்தில் நல்ல வேலைகளில் செட்டில் ஆகிக் கொண்டிருக்க நான் கணினி படிக்கத் தொடங்கினேன். பிறகு இரு சிறு நிறுவனங்களில் நிரலி எழுத தொடங்கியது தான் கணினித்துறையில் முதல் படி. குறைந்த சம்பளத்தில் சில மாதங்கள் குப்பை கொட்டியப் பிறகு ஐந்து இலக்க சம்பளத்துடன் மற்றொரு வேலையைப் பெற்ற பொழுது கல்லூரியை முடித்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தன. வேலை கிடைத்த பொழுது மகிழ்ச்சியை விட "அப்பாடா" ஒரு வழியாக கிடைத்து விட்டது என்றே நினைக்கத் தோன்றியது
*****
வலைப்பதிவுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது. வலைப்பதிவுகள் மூலம் எனக்கு கிடைத்த முக்கிய பலன் - பல நண்பர்கள். பலரிடம் இருந்து அவ்வப்பொழுது வரும் நேசமான மின்னஞ்சல்கள். அந்த வகையில் வலைப்பதிவுகள் எனக்கு பிடித்தமான ஒன்று. அதே சமயத்தில் வலைப்பதிவுகள் மூலம் கிடைத்த சில நண்பர்களை இழந்தும் இருக்கிறேன். ஆனால் அதற்காக வருந்தியது இல்லை. கருத்து ஒற்றுமையின் காரணமாக கிடைக்கும் நட்பு சில நேரங்களில் கருத்து வேறுபாடால் முறிவது கூட இயல்பானதே...
அவ்வப்பொழுது வேலைப்பளு காரணமாக சில இடைவேளை இருந்தாலும் வலைப்பதிவுகளை விட்டும் விலகும் எண்ணம் ஏற்பட்டதில்லை. காரணம் சிறுவயதில் இருந்தே எழுத்தின் மீது இருக்கும் காதல்.
என்னுடைய அப்பா நியூஸ் ஏஜண்ட் என்பதால் பல தினசரிகளும், வார இதழ்களும் வீட்டில் கிடைக்கும். நான் முதன் முதலில் படிக்க தொடங்கியது என்றால் அது தினமணிக்கதிரில் வந்து கொண்டிருந்த தும்பி படக்கதைகள் தான். தினமணி, தினமணிக்கதிர், துக்ளக் போன்றவை வாசிப்பது ஒரு அறிவுஞீவித்தனமான செயல் என்பதான ஒரு பிம்பம் அப்பொழுது இருந்தது. இந்த அறிவுஞீவி பிம்பத்தை என் அப்பாவிடமும், அப்பாவின் நண்பர்களிடமும் இருந்து பெற வேண்டும் என்பதற்காக தினமணிக்கதிர் மற்றும் துக்ளக் போன்றவற்றை தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் எனது பள்ளிக்காலத்தில் இருந்தது. தினமணிக்கதிரில் அப்பொழுது பல நல்ல அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வரும். ஆனால் மாநில அரசியலை விட டெல்லி அரசியலுக்கு அதிக முக்கியத்துவத்தை தினமணிக்கதிர் கொடுத்துக் கொண்டிருந்தது. டெல்லி அரசியலுக்காகவே ஒரு தனிப்பக்கம் இருந்ததாக ஞாபகம். அப்பொழுது கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்ததார் என்று நினைக்கிறேன். கஸ்தூரி ரங்கனுக்குப் பிறகு மாலன் ஆசிரியராக பொறுப்பேற்ற பொழுது தான் மாநில அரசியல்களுக்கும் தினமணிக்கதிர் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது என நினைக்கிறேன். தினமணிக்கதிர் தற்பொழுது ரொம்ப அரசியல் வாசனை அடிக்கிறது என என் சித்தப்பா விமர்சித்ததும் ஞாபகத்தில் உள்ளது. அது போலவே "புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பதழ்" என ஒன்றை வெளியிட்டு அதில் முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பது போல முன்நிறுத்தியதும் தினமணிக்கதிர் மீதான எனது அப்போதைய விமர்சனங்கள்.
அது போலவே துக்ளக்கில் வெளியாகிக்கொண்டிருந்த "எங்கே பிராமணன் ?" தொடர், "கூவம் நதிக்கரையினிலே.." என்னும் சோவின் அரசியல் விமர்சனப் பகுதி, தலையங்கம், கேள்வி பதில்கள் போன்றவற்றை படிக்கும் பழக்கம் இருந்தது. இவற்றை படித்தே அதில் முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை வளர்த்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு ஏற்பட்டு விட்டது. வலைப்பதிவுகளுக்கு வந்த பிறகு என்னைப் போன்ற பலர் இருப்பதை நானும் கண்டு கொண்டேன். அந்த வகையில் சோவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
அது போலவே அப்பொழுது வெளியாகிக்கொண்டிருந்த சுப.வீரபாண்டியனின் "இனி" போன்ற மாற்று இதழ்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அவர்கள் முன்வைத்த நடைமுறைச்சாத்தியம் அற்ற, மக்களின் ஆதரவு இல்லாத தனித்தமிழ்நாடு, தமிழ் தேசியம் குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு.
இந்த இதழ்கள் தவிர, நான் பிறந்து வளர்ந்த நெய்வேலியில் படிப்பதற்கான வசதிகள் அதிகம். நல்ல நூலகம் ஒன்று உண்டு. அது தவிர ஒரு நடமாடும் நூலகத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நடத்தி வந்தது. ஒரு பேருந்து நூலகமாக மாற்றப்பட்டு நெய்வேலியின் ஒவ்வொரு பகுதிக்கும் இந்த நடமாடும் நூலகம் வரும். சில மணி நேரங்கள் ஒரு இடத்தில் நிற்கும். என் வீட்டின் எதிரிலேயே இந்த பேருந்து நிற்கும் என்பதால் நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பிறகு கல்லூரி சென்ற பொழுது நல்ல நூலங்கள் அங்கு இல்லாததால் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து பிறகு ஒரு கட்டத்தில் வெகுஜன ஊடகங்களை மட்டுமே வாசிக்கும் பழக்கம் என்றளவில் தான் இருந்தது. பிறகு வலைப்பதிவுகளுக்கு வந்தது மறுபடியும் பலவற்றை வாசிக்கும் பழகத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வலைப்பதிவுகளில் நுழைந்தேன். ஆனால் பங்குச்சந்தை, பொருளாதாரம், அரசியல், சமூகம் என எழுதத்தொடங்கி இது வரை ஒரு சிறுகதை கூட எழுதவில்லை என்ற எண்ணம் அவ்வப்பொழுது எனக்கு எழுவதுண்டு. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான அரசியல் குறித்து எழுதக்கூடியதாக உள்ளது என்பதால் "கட்டுரை வடிவம்" எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
*****
ஈழப் போராட்டத்தை சிறு வயது முதல் கவனித்து வருகிறேன். எனக்கு அப்பொழுது 10 அல்லது 11 வயது இருக்கலாம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், சிங்கள இனவெறி ஜெயவர்த்தனேவுக்கு எதிராகவும் தமிழகத்தில் பல இடங்களில் நடக்கும் ஊர்வலங்கள் தான் என்னை இந்தப் போராட்டம் ஈர்த்த முதல் நிகழ்வு. ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி எரிக்கும் பழக்கம் அப்பொழுது எல்லா ஊர்களிலும் நடக்கும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு தமிழகத்தில் இருந்த ஒவ்வொரு தமிழனின் உணர்விலும் கலந்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் போராட்டத்தை கவனிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. இதில் பின்னிப்பினைந்த அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளும் வயது அது அல்ல. என்றாலும் இந்தப் போராட்டம் என் மனதில் ஆணித்தரமாக பதிந்தது. விடுதலைப் புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் எனக்கு பல விமர்சனங்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுந்தாலும் இந்தப் போராட்டத்தினை ஆதரிக்கும் எனது கருத்துகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை. வெகுஜன ஊடகங்கள் தமிழகத்தில் இந்தப் போராட்டத்தை திரித்தும், பொய்க்கதைகளை பரப்பியும் வந்ததற்கு "பின்னே" இருக்கும் அரசியல்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது
ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் என்னை வெகுவாக பாதித்தன. திலீபனின் மரணம், கிட்டு நடுக்கடலில் கப்பலை வெடிக்கச்செய்து தற்கொலைச் செய்து கொண்டது, யாழ்ப்பாணத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றியது மற்றும் அவ்வபொழுது போர்களிலும், சிங்கள இராணுவத்தாலும் கொல்லப்படும் அப்பாவி தமிழர்களின் மரணங்கள் என்னை வெகுவாக பாதித்தன.
இன்று ஈழப்போராட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் சூழலில் அம் மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை ஏற்பட வேண்டும் என்பதே எனது ஆசை. இந்தப் போராட்டத்திற்கு விரைவில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சிங்கள இனவாதமும், உலக நாடுகளின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பதே உண்மை
*****
எட்டு எழுத வேண்டும் என்பது தான் விளையாட்டு, ஆனால் இப்போதைக்கு இது போதும் என்றே நினைக்கிறேன்.
இப்பொழுது இன்னும் சிலரை மாட்டி வைக்கும் படலாம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நான் ஐந்து மட்டும் எழுதியுள்ளதால் ஆறு பேரை மட்டும் அழைக்கிறேன்
வெற்றி
மயிலாடுதுறை சிவா
கார்த்திக்ராமாஸ்
குழலி
டிசே தமிழன்
பொட்"டீ" கடை சத்யா
விளையாட்டின் விதிகள்:
விதிகள் என்பதே உடைப்பதற்கு தான் என்பதால் :)) உங்களுக்கு எதைப் பற்றி எழுத வேண்டுமோ "அந்த எட்டைப்" பற்றி எழுதி விடுங்கள்
Wednesday, July 04, 2007
நினைவில் நிற்கும் எட்டு
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 7/04/2007 04:33:00 PM
குறிச்சொற்கள் வலைப்பதிவு எட்டு விளையாட்டு, வாழ்க்கை அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
18 மறுமொழிகள்:
//கல்லூரியை முடித்தப் பிறகு தான் கல்லூரி வாழ்க்கையை படிக்காமல் சொதப்பி விட்டோமோ எனப் புரிந்தது. //
5:13 PM, July 04, 2007என்னைப்போல் ஒருவன்:)
/அது போலவே "புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பதழ்" என ஒன்றை வெளியிட்டு அதில் முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பது போல முன்நிறுத்தியதும் தினமணிக்கதிர் மீதான எனது அப்போதைய விமர்சனங்கள்./
5:18 PM, July 04, 2007அஃது ஈழத்தமிழகத்துக்கு எதிரானவர்களுக்கு இடையேயான தொப்புட்கொடி உறவோ? :-)
~~~~~~
நடுஎட்டுக்குச் சேர்த்திருக்கும் தலையும் வாலும் அருமை.
சசி,
5:19 PM, July 04, 2007முதலாம் நிகழ்வின் அந்த இனிமையான தருணத்தின் உங்கள் மகிழ்ச்சியை உணர முடிகிறது.
// கல்லூரியில் அதையொட்டி பலக் கதைகள் அப்பொழுது உலாவிக்கொண்டிருந்தன. // இதைப்பற்றியும் விரிவாக எழுதியிருந்தால் ஒரு பிரளயம் கிளப்பியிருக்கலாம்! :)
மேல்மருவத்தூரின் ஆரம்பகால புரட்சிகரமான கொள்கைகளின் வெற்றியும் அது நிறுவனமயமான பின்னான அதன் தோல்வியும் ( உண்மையில் தோல்வின்னு நாமதான் சொல்லிக்கனும் அது வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது! ) நிச்சயம் ஆராயப்படக்கூடிய விடயம்!
// //கல்லூரியை முடித்தப் பிறகு தான் கல்லூரி வாழ்க்கையை படிக்காமல் சொதப்பி விட்டோமோ எனப் புரிந்தது. //
5:20 PM, July 04, 2007என்னைப்போல் ஒருவன்:) //
நம்மைப்போல் ஒருவன்! :)
இதைப்பற்றியும் விரிவாக எழுதியிருந்தால் ஒரு பிரளயம் கிளப்பியிருக்கலாம்! :)
5:42 PM, July 04, 2007***
இளவஞ்சி,
கல்லூரில் உலாவிக்கொண்டிருந்த அந்தக் கதைகள் அடிப்படையில் ஆதாரம் அற்றவை என்பதால் தவிர்த்து விட்டேன்
மேல்மருவத்தூரின் வளர்ச்சி என்பது இன்று அரசியல் கட்சிகள் போன்று மாறி விட்டது. அடிகளாருக்குப் பிறகு அடுத்த அடிகளார் அவரது மகன்கள் என்றாகி விட்டது.
மேல்மருவத்தூர் குறித்து எழுத நிறைய விடயங்கள் உள்ளது. அவகாசம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்
சசி,
6:08 PM, July 04, 2007//மேல்மருவத்தூர் கோயில் மீதும், பங்காரு அடிகளார் மீதும் பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தக் கோயில் பலருக்கு தனிப்பட்ட வகையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றால் அது மிகையல்ல//
எங்கள் ஊர் (ராஜபாளையம் அருகில்)இருந்து பல பெண்கள் கூட்டமாக மேல்மருவத்தூருக்கு ரயிலில் புனித யாத்திரை போன போது எனக்கும் ஆச்சரியமாகவே இருந்தது :)
//அவ்வப்பொழுது வேலைப்பளு காரணமாக சில இடைவேளை இருந்தாலும் வலைப்பதிவுகளை விட்டும் விலகும் எண்ணம் ஏற்பட்டதில்லை. காரணம் சிறுவயதில் இருந்தே எழுத்தின் மீது இருக்கும் காதல்//
ரொம்ப நல்ல விசயம். நன்றி !!
//மேல்மருவத்தூர் குறித்து எழுத நிறைய விடயங்கள் உள்ளது. அவகாசம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்//
நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
நன்றாக்க இருந்தது சசி!
8:26 PM, July 04, 2007சசி,
10:33 PM, July 04, 2007அருமையான எட்டுப்பதிவு.
/* சுயத்தேவைகளுக்காக வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பதே அன்றாட வாழ்க்கையாக இருக்கும் பொழுது */
உண்மைதான் சசி. எவ்வளவோ செய்ய வேணும் என்ற ஆசை இருப்பினும், செயலில் செய்ய முடியாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
/* கல்லூரி நாட்கள் என்பது அனைவருக்குமே மகிழ்ச்சியான நாட்கள். அதுவும் ஒரு நண்பர் குழு கிடைத்து விட்டால் போதும் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இருக்காது. */
கல்லூரி வாழ்க்கையை பற்றி எழுதுவதென்றால் பல புத்தகங்களே எழுதிவிடலாம். இல்லையா? :-))
/* யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். */
சசி, அழைப்புக்கு மிக்க நன்றி. கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள்.
கட்டாயம் எழுதுகிறேன்.
// வாழ்க்கையில் எத்தனை தருணங்கள் வந்தாலும் என்னுடைய குழந்தைகள் பிறந்த அந்த தருணத்திற்கு ஈடாகுமா என்பது சந்தேகமே...//
11:32 PM, July 04, 2007உண்மைந்தாங்க சசி. அந்தத் தருணத்திற்கு ஈடு இணையே இல்லை
சசி, விமர்சனங்கள் இருந்தாலும், நீங்கள் குறிப்பிட்ட காரணங்களில் எனக்கும் ஈர்ப்பிருந்ததால் மேல்மருவத்தூருக்குச் சென்றிருந்தேன். இவ்வளவு புகழ் இருந்தும், அங்கே விளம்பரப்படங்கள் போல், சினிமா/அரசியல் நபர்களோடு படங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு மாட்டப்படிருந்தது எனக்கு வியப்பாயிருந்தது.
11:38 PM, July 04, 2007//அது போலவே அப்பொழுது வெளியாகிக்கொண்டிருந்த சுப.வீரபாண்டியனின் "இனி" போன்ற மாற்று இதழ்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது//
1:29 AM, July 05, 2007அட நீங்களும் "இனி" வாசகரா?
தமிழ் நடைக்காகவேனும் ஒரு முறை படிக்கலாம்!
//இன்னமும் முதன் முதலாக வெளியில் வந்த பொழுது இருந்த என குழந்தைகளின் முகபாவம் என் மனதில் நிற்கிறது.//
இரட்டையருக்கு எனது வாழ்த்துக்கள்!
உண்மை தான் சசி. தலைமுடி தெறிக்க, முதன் முதலாகச் சிறு கண்களைக் காணும் போதும், அழுகுரலைக் கேட்கும் போதும்....அந்த ராகங்கள் மறக்க முடியாதவை! தனிமையில் பல தருணங்களில் அசை போட வைக்கும்!
//இந்து சனாதன தர்மங்களை உடைத்த ஒரு இடம் மேல்மருவத்தூர். அதே சமயத்தில் இந்து மதம் முன்வைத்த மூடநம்பிக்கைகளை முன்வைப்பதில் மேல்மருவத்தூரும் குறை வைத்ததில்லை//
:-)))
அடிகளார், கல்லூரியில் மாணவர்களிடம் உரையாற்றும் வழக்கம் இருந்ததா சசி?
சசி ..நன்று...
4:04 AM, July 05, 2007உங்கள் சிந்தனைகள் நல்ல திசைகள் நோக்கி பயணித்தாலும், சில விடயங்களில் (ஈழ விவகாரங்களில்) உங்கள் மனம் உண்ர்ச்சி பூர்வமான நிலையை எடுத்தாள்கின்றது. யாரையோ எதிர்க்க வேண்டுமென்பதற்காக யாரையோ முழுக்க முழுக்க கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. கொள்கைப் பிடிப்பு என்கிற மாயவலையில் எல்லாரும் சிக்கிக் கொள்கிற அவசியம் தேவை இல்லை.
அன்புடன்
சசி
8:16 AM, July 05, 2007இப்போது புரிகிறது உங்கள் அரசியல் கட்டுரைகளின் ஆழம் எங்கிரூந்து வருகிறது என்று :-)
//இரட்டைக்குழந்தைகளை அடுத்து ஒரு மாதம் நானும் என் மனைவியும் மட்டுமே கவனிக்க நேர்ந்த அனுபவம் சுவாரசியமானது. //
இது பற்றி நீங்கள் ஒரு புத்தகமே எழுதலாம் அளவுக்கு அனுபவம் இருந்திருக்குமே ! விரைவில் ஒரு நகைச்சுவை கட்டுரை எதிர்பார்க்கிறோம்.
உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சசி.
அடிகளார், கல்லூரியில் மாணவர்களிடம் உரையாற்றும் வழக்கம் இருந்ததா சசி?
8:53 AM, July 05, 2007***
நான் அங்கு படித்த ஆண்டுகளில் அடிகளார் கல்லூரி விவகாரங்களில் தலையிட்டதில்லை. மத ரீதியான சிகப்பு சட்டை உடுத்தும் பழக்கம் கூட அப்பொழுது இருந்ததில்லை
ஆனால் அவரது குடும்பத்தினரின் தலையீடு கல்லூரியில் இருந்தது. அவரது இரண்டாவது மகன், நான் படிக்கும் பொழுது எனக்கு ஒரு ஆண்டு சீனியர். அது ஒரு தனிக்கதை :)
சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்ற பொழுது கல்லூரி முழுக்க மாறியிருந்ததை கண்டேன். வாரத்திற்கு ஒரு நாள் சிகப்பு சட்டை போடும் பழக்கத்தை பொறியியல் கல்லூரிக்கும் கொண்டு வந்து விட்டார்கள்
யாரையோ எதிர்க்க வேண்டுமென்பதற்காக யாரையோ முழுக்க முழுக்க கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. கொள்கைப் பிடிப்பு என்கிற மாயவலையில் எல்லாரும் சிக்கிக் கொள்கிற அவசியம் தேவை இல்லை.
9:41 AM, July 05, 2007****
சுந்தர்,
இந்திய நலன், இந்திய தேசியவாதம் என கூறிக்கொண்டு தமிழ் ஈழ மக்கள் நம் அருகில் கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியாது
என்னுடைய கொள்கை ஈழம், காஷ்மீர், பாலஸ்தீனம் என அனைத்திலுமே ஒரே நிலைப்பாடு கொண்டது தான்
பாலஸ்தீனத்திற்கு ஒரு கொள்கை, நம் நாட்டில் இருக்கும் காஷ்மீருக்கு ஒரு கொள்கை, ஈழத்திற்கு ஒரு கொள்கை என என்னால் இந்தியாவின் சில அதிகாரிகள் கட்டமைத்த "வெளியூறவுக் கொள்கையைச் சார்ந்தே" எனது கொள்கையை வைத்திருக்க முடியாது
இந்தியாவின் அந்த வெளியூறவு கொள்கைகள் உலகமயமாக்கப்பட்ட இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றது என என்னுடைய பதிவுகளிலும் எழுதியுள்ளேன்
உங்கள் கருத்துக்கு நன்றி
சசி
10:33 AM, July 05, 2007வழக்கம்ப் போல் உங்கள் அனுபவம் நன்று. உங்கள் கொள்கையை மிக எளிமையாக உணர்த்தியதற்கு நன்றி.
என்னை அழைத்து வம்பில் மாட்டி விட்டீர்களே! அடுத்த வாரம் நிச்சயம் எழுதுகிறேன்.
"சுயதம்பட்டம் அடித்து சுயவிளம்பரம் செய்து கொள்ளும் செயலில் எனக்கு விருப்பம் இல்லை..." நெத்தியடின்னா இதுதானா சசி!?
மயிலாடுதுறை சிவா...
சிவா, வெற்றி,
4:10 PM, July 05, 2007என் அழைப்பினை ஏற்று கொண்டமைக்கு நன்றி
மறுமொழி மூலம் கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
kalluriyil (PSG Tech) kastam illamal padithu, campusil vellai kidaithu... ITil settle aagi, USA 1994 mudal 1999 varai paarthu - meendum India thirumbi, vazhkai sappaiyaga, manam vedumbiyeh ullathu. aarudhal ungalai pole, blog thaan.
8:26 AM, February 09, 2008Post a Comment