Saturday, July 28, 2007

வாசிங்டனில் தமிழர் சுயநிர்ணய அமைதி பேரணி

வாசிங்டன் நகரில் கேபிடல் ஹில் (Capitol Hill) கட்டடித்திற்கு எதிரில் "ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய ஆதரவு அமைதி பேரணி" கடந்த திங்களன்று (ஜூலை 23, 2007) நடைபெற்றது. தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்தும், மனித உரிமைகளை வலியுறித்தியும், சிறீலங்காவிற்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. காலை சுமார் 11:30 மணிக்கு கேபிடல் ஹில் முன்பாக ஆரம்பித்த இந்த பேரணி மதியம் 3 மணி வரை நீடித்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வட கரோலினா மாநிலங்களைச் சார்ந்த செனட் உறுப்பினர்கள் இந்தப் பேரணிக்கு அதரவு தெரிவித்து செய்திகள் அனுப்பியிருந்தனர். பேரணியின் இறுதியில் உரையாற்றிய மனித உரிமை சட்டவல்லுனரும் ஈழப் போரட்டத்தில் ஈடுபாடு கொண்டவருமான கேரன் பார்க்கர் தமிழர்கள் ஏற்கனவே சட்டப்படி ஒரு தமிழ் ஈழத்தை ஈழத்தில் அமைத்து விட்டதாக குறிப்பிட்டார். வழக்கமாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தமிழ் ஈழப் பகுதிகளை de facto state என்று சொல்வார்கள். ஆனால் அதனை அவ்வாறு அழைப்பது சரியல்ல. அது de jure - சட்டப்படியான தனி நாடு என்பதே சரி என்றார் கேரன் பார்க்கர்.

Ms Parker said: "Because of the right to self- determination, the Tamil areas belong to the Tamils. It is their land. The civilian government and the military force - the LTTE - have a right de jure (by law) to this State. Tamils presence in their own land is not de facto and their government is not a de facto one.

"The Sri Lankan government’s occupation of part of the historic Tamil Eelam is de facto. They are there by the clear facts on the ground but they don’t have the legal right to it," Ms. Parker added.

குறிப்பிட்டத்தக்க அளவில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை தமிழர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். மிக சொற்பமான அளவிளான தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tamil American Peace Rally: Speech by Dr. Ellyn Shander M.D








இது குறித்த செய்திகள் :
"Struggle to achieve self-rule will continue"- American Tamils

********

உலக நாடுகளின் அங்கீகாரத்தினை பெறுவது என்பதான ஒரு நிலையில் தான் கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளின் கொள்கை இருந்து வந்தது. ஆனால் உலகநாடுகளின் அங்கீகாரம் என்ற நிலையிலேயே தங்களை அடைத்துக்கொள்ளாமல் அதனைக் கடந்து வேறு வகையில் தங்களின் சுயநிர்ணயத்தை ஈழத்தமிழர்கள் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை தற்பொழுது எழுந்துள்ளது. தொடர்ச்சியாக உலகநாடுகளின் ஒரு தலைச்சார்பான நடவடிக்கை இருக்கும் சூழலில் உலகநாடுகளின் அங்கீகாரம் எளிதாக கிடைத்து விடாது. இது தவிர உலகளவில் மேற்கத்திய நாடுகளின் மக்களை அச்சுறுத்தும் மதத்தைச் சார்ந்த அடைப்படைவாத பயங்கரவாத கண்ணாடி மூலமே ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பார்க்கப்படும் சூழ்நிலையும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையெல்லாம் கடந்து தமிழீழம் அமைவது என்பது தான் தற்போதைய சவால். அதனை உலக நாடுகளின் அங்கீகாரம் என்ற ஒரே வியூகத்தின் மூலமாக அணுக முடியாது.

ஈழத் தமிழர்கள் தங்களுக்கான சுயநிர்ணயத்தினை தாங்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்று கேரன் பார்க்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் கவனிக்க வேண்டும்

17 மறுமொழிகள்:

சிவபாலன் said...

அமெரிக்க கொடியுடன் இருப்பது நல்லது. ஏனென்றால், மெக்சிகோவில் இருந்து குடியேறியவர்கள் இது போன்று பேரணி நடத்தும் போது அந் நாட்டு கொடியை எடுத்து சென்றனர் என இங்குள்ள பத்திரிக்கைகள் அதை பெரிது படுத்தின. பிறகு அடுத்த நாள் நடந்த பேரணியில் அமெரிக்க கொடியுடன் சென்றனர்.

8:29 AM, July 28, 2007
மயிலாடுதுறை சிவா said...

தகவலுக்கு நன்றி....இதுப் போல் அமைதியான பேரணியில் இன்னமும் நிறைய ஈழ தமிழர்கள் கலந்துக் கொள்ள வேண்டும்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...

8:38 AM, July 28, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

நன்றி சிவபாலன்

சிவா,

ஈழத்தமிழர்களின் பங்கேற்பு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற உங்களது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு

9:07 AM, July 28, 2007
இவன் said...

//மிக சொற்பமான அளவிளான தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.//

இதற்கு காரணம் தமிழகத்தை சார்ந்த ஊடகங்களும், தமிழக மக்களின் ஈழபிரச்சனை பற்றிய புரிதலும்தான்.

தமிழகத்தை சார்ந்த ஊடங்கள் ஈழத்து பிரச்சனை பற்றிய செய்திகளை வெளிவிடுவதில்லை. தமிழக மக்களும் தாம் ஈழத்து மக்களின் தெப்புள் கொடி உறவு என்பதை மறந்து போய்விட்டனர்.

நீங்கள் தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் இருந்து வந்தவராயின் உங்கள் தாத்தா/பாட்டி அல்லது அவர்களது உறவினர் ஒருவராது இலங்கை தேயிலை தோட்டத்தில் வேலை செய்தவராய்யிருப்பர்.


//இதுப் போல் அமைதியான பேரணியில் இன்னமும் நிறைய ஈழ தமிழர்கள் கலந்துக் கொள்ள வேண்டும்..//

இந்த கருத்தில் எனக்கு துளியும் உடன்பாடுகிடையாது. இதில் மொத்த தமிழ் இனமே கலந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள ஒருசில தமிழ் சங்கங்கள் சங்கத்திற்கான ஆட் சேர்ப்பு மற்றும் நிதிவசூலலில் (inclding payed events) ஈழத்தமிழர்களை தமிழன் என்ற ஒற்றை இனத்தினுள் சேர்த்து கொள்கின்றன.

ஆனால் ஈழத்து பிரச்சனை என வருகையில் அதை பற்றி பேசகூட மறுக்கிறது.

தனி ஈழத்துக்காக ஒவ்வொரு தமிழனும் குரல் கொடுக்க வேண்டும்.

வசிங்டனில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மக்கள் மட்டும் இதில் கலந்திருந்தால் இது மிகப் பெரிய பேரணியாக அமைந்திருக்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

10:12 AM, July 28, 2007
கானா பிரபா said...

நிறையத் தகவல்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது, நன்றி

10:18 AM, July 28, 2007
Unknown said...

வாசிங்டனில் அல்லது அருகில் இருந்திருந்தால் நானும் கட்டாயம் கலந்துகொண்டிருப்பேன். பேரணி நல்லவிதமாக முடிந்ததில் மகிழ்ச்சி.

தமிழர்களின் வேறுபாடுகளைப் பற்றியும், ஈழத்தமிழர்களைப் பற்றி, அவர்களுக்கு மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அளிக்க வேண்டிய அவசியத்தையும் நான் எழுத முயற்சித்த பகுதியில் காணலாம்:

http://thanjavuraan.blogspot.com/2007/07/blog-post.html

1:30 PM, July 28, 2007
குழைக்காட்டான் said...

ஈழத்தமிழர்கள் மிக அதிகளவில் கலந்து கொள்ளவேண்டும் என்பது சரியானது தான். எமது பிரச்சினைகளுக்கு நாம் தான் முன்நின்று குரல் கொடுக்க வேண்டும். தமிழ் நாட்டுத்தமிழர்கள் தமது தார்மீக ஆதரவை வழங்கினாலே நன்றியுடையவர்களாயிருப்போம்.
எனினும் 'ஆட்சேர்ப்பு, நிதி வசூலிப்பில்' தமிழர்களை 'ஒன்றாக' கருதுவோர் ஏன் போராட்டம் என்னும் போது பின்வாங்குகிறார் என கேட்பதும் நியாயம் போல் படுகிறது.
இதை நானும் கண்டிருக்கிறேன். கோவில் கட்டட நிதி, நாடகங்கள், சங்கங்கள் என்று வரும்போது பல தமிழ்நாட்டு தமிழர்கள் 'நாங்க தமிழங்கதானே' என கூறுவதை பலமுறை கேட்டிருக்கிறேன். இப்போது யோசித்துப்பார்த்ததில் அவர்கள் எவருமே எமது ஆர்ப்பாட்ட/அமைதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதே இல்லை என்னும் உண்மை உறைக்கிறது.
எனினும் மிகப்பல தமிழ் நாட்டுத்தமிழர்கள் ஈழத்தமிழர்களிலும் கூடியளவு கரிசனை கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறேன்.
அவர்கள் எப்போது கண்டாலும் ஈழம் பற்றி கேட்காமல் வேறு விடயங்களுக்கு போகவே மாட்டார்கள்!
அன்றைய அமதிப்பேரணியில் ஒரு பெண்ணையும் அவரது தாயாரையும் காண நேர்ந்தது. அவர்கள் சுற்றுலா வந்தவர்கள் போல் இருந்தனர். எந்த சலனமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தனர். நானும் இவர்கள் ஏதோ ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர் என எண்ணினேன். ஆனாலும் ஆச்சர்யம் தமிழில் பேசிக்கொண்டதைக்கேட்ட போது. பல சுற்றுலாப்பயணிகள் முக்கியமாக ஐரோப்பிய வாசிகள் எம்மிடம் வந்து விளக்கம் கேட்டுச்சென்றனர். ஆனால் இந்த தமிழ்நாட்டு பெண்மணிகளோ எந்த சலனமும் அற்று விதம் விதமாக தம்மை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். திரும்பிச்செல்லும் போதுகூட அந்தப்பக்கம் திரும்பவில்லை. இவ்வளவுதூரம் ஒரு மனிதனால் ஒரு பாரிய அழிவு பற்றி கரிசனை கொள்ளாமல் வெறும் கட்டடத்தை படம் பிடிப்பதில் மனம் செல்லுமா என நினைத்து ஆச்சர்யமாகவும் அவர்கள் தமிழர்கள் எனும்போது வேதனனயாகவும் இருந்தது.
ignorance is worse than indifference -
அக்கறையின்மை அறியாமையை விடவும் மோசமானது

7:42 PM, July 28, 2007
வெற்றி said...

சசி,
பதிவுக்கு மிக்க நன்றி.

/* குறிப்பிட்டத்தக்க அளவில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை தமிழர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.*/

இந்தப் பேரணி ஒரு வார இறுதி நாளில் நடாத்தப்பட்டிருந்தால் இன்னும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

உண்மையில் நீங்கள் சொன்னது போல், புலத்திலேயே பிறந்து வளர்ந்த இந்த இரண்டாம் தமிழ்த் தலைமுறை தாம் வாழும் அனைத்து நாடுகளிலும் மிகவும் சிறப்பாகச் செயற்படுகிறார்கள். குறிப்பாக, கனடாவில் கிட்டத்தட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மாணவர் அமைப்புக்கள் அமைத்து, ஈழப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு மிகவும் மெச்சத்தக்க வகையில் செயற்படுகிறார்கள்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் ஈழப் போராட்டத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள் என்றால் மிகையல்ல.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஆரம்ப காலங்களில் தாங்கிப் பிடித்தவர் முன்னாள் தமிழக முதல்வர் MGR. அமரர் MGR இல்லையென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பே இருந்திருக்காது என்று சொன்னால் மிகையல்ல.

அமரர் இராமச்சந்திரனுக்குப் பின் விடுதலைப் புலிகள் அமைப்பை தாங்கி நிற்பவர்கள் புலம் பெயர் தமிழர்கள் என்று கூறலாம்.

ஈழத் தமிழர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் [1880 களில்] பிற்பகுதிகளிலே புலம்பெயரத் தொடங்கினர். அக் காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் கல்வித் தகைமைகள் இருந்ததால் நல்ல தொழில்வாய்ப்புக்கள் பெற்றிருந்தனர்.

"தமிழர்கள் உலகின் பலம் வாய்ந்த சிறுபான்மையினத்தவர்கள்" என்று J.R.ஜெயவர்த்தனே சொல்லியிருந்தார். காரணம், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் பொருளாதார ரீதியாக வெற்றியீட்டியதுடன் இல்லாமல், அந்தந்த நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றதால் அந்தந்த நாட்டு அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டு ஈழப் பிரச்சனையை எடுத்துரைத்தனர்.

ஈழத்தின் தலைசிறந்த அரசியல் விஞ்ஞானியும், J.R.ஜெயவர்த்தனாவின் நண்பராகவும் விளங்கிய பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் [இவர் தந்தை செல்வாவின் மருமகன்] அவர்கள் இப்படி எழுதியிருந்தார்:

'This anti-Tamil record of successive Sri Lanka government gave rise to what President JR Jayawardene in one of his despairing moments said, "They constitute the world's most powerful minority". Secondly, not only did the Tamils become a powerful minority but they also became economically successful. You cannot keep good men down'
[Dr.Alfred Jeyaratnam Wilson, FIFTY YEARS OF NATIONAL DISASTER, 1998]

இன்று பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் அந்தந்த நாடுகளின் பிரஜாவுரிமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் சொன்னது போல் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது உரிமைகளையும், செல்வாக்கையும் பயன்படுத்தி நல்ல முறையில் திட்டமிட்டு அந்தந்த நாடுகளில் தமிழர்களின் போராட்ட நியாயங்களை சகலரும் அறியும் வண்ணம் செயற்பட வேணும் [என்னையும் சேர்த்து.] இப்போது பல செயற்திட்டங்களைப் புலம் பெயர் தமிழர்கள் செய்தாலும் இன்னும் நாம் அதை விரிவுபடுத்த வேணும்.

நாம்[புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்] போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு. அடுத்த தலைமுறை மிகவும் சிறப்பாகச் செயற்படுவதைக் காணும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

8:05 PM, July 28, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் ஈழப் பிரச்சனையில் தீவிர ஈடுபாடு, அபிமானம், கொள்கைப்பிடிப்பு போன்றவற்றுடன் இருப்பவர்கள் மட்டுமே பெரும்பாலும் இத்தகைய பேரணியில் பங்கேற்கின்றனர். பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பணியின் சூழல் காரணமாக வார நாட்களில் பங்கேற்க முடியாதவர்களும் உண்டு. ஆனால் இவர்கள் மிக சொற்பமான எண்ணிக்கையினரே...

பெரும்பாலான தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களுக்கு இவ்வாறான பேரணியில் கலந்து கொள்வது குறித்த அச்சம் இருக்கிறது. ஈழப் பிரச்சனையை ஆதரிப்பவர்கள் கூட இந்த அச்சத்தில் இருந்து விடுபடவில்லை. கடந்த காலங்களில் பொடா போன்றவை பெருந்தலைகளுக்கே பாய்ந்த சூழ்நிலையில் மிக சாமானியனான ஒரு தமிழக தமிழன் இந்தப் பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் தன் வாழ்வியல் பாதிக்கப்படுமோ என அஞ்சுகிறான்.

ஒரு அமைதி பேரணியில் கலந்து கொள்வது ஜனநாயக நாட்டில் ஒருவனின் "தனி மனித உரிமை" என்ற புரிதல் பல தமிழக தமிழர்களுக்கு இல்லை. இந்திய ஜனநாயக சூழலும், அதனைச் சார்ந்த அரசியலும் கற்றுக் கொடுத்த ஜனநாயக நம்பிக்கை அது தான் என்றால் அந்த ஜனநாயகத்தை கேள்வி கேட்க வேண்டிய எண்ணம் கூட பலருக்கு இல்லை. தேர்தல் நடந்தால் இந்திய ஜனநாயகம் செழிப்பதாக ஒரு பிம்பம் மட்டும் தொடர்ந்து முன்நிறுத்தப்படுகிறது

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் அது குறித்த வேறுபாடுகள் உள்ளன. ஒரு தடை செய்யப்படும் இயக்கத்திற்கு அளிக்கப்படும் நிதி உதவிகள் சட்டரீதியாக தவறானது.

அதே நேரத்தில் இவ்வாறான பேரணிகளில் கலந்து கொள்வது ஒருவனின் ஜனநாயக உரிமை. அதனை அமெரிக்காவின் ஜனநாயக சூழல் மறுக்க வில்லை. ஆனாலும் இந்தியாவின் ஜனநாயக சூழலில் வளர்ந்து இங்கே வருபவர்களுக்கு அது குறித்த அச்சமே நிலவுகிறது. அது தவிர இந்தியாவிற்கு திரும்பி செல்லும் பொழுது இதனால் ஏதேனும் சிக்கல் நேருமோ என்ற அச்சம் பலருக்கு உண்டு.

ஒரு மேடைப் பேச்சிற்காக ஒரு ஆண்டு வைகோ, நெடுமாறன், சுபவீ உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் சிறையில் இருந்ததும், இந்தியாவில் ஜனநாயகம் தழைத்து ஓங்கி இருப்பதாக ஜல்லி அடிக்கும் இந்திய/தமிழக வெகுஜன பத்திரிக்கையாளர்கள் வைகோவின் சிறைவாசத்தை நியாயப்படுத்தியதும் இந்திய ஜனநாயக சூழலுக்கு ஒரு உதாரணம். அவ்வாறான சூழலில் இருக்கும் ஒரு தமிழக தமிழன் தன் வாழ்வியலை தக்கவைத்து கொள்ள நினைக்க வேண்டிய தேவை நேர்ந்து விடுகிறது.

அது தவிர தற்போதைய தலைமுறை தமிழக தமிழர்களுக்கு இந்தப் பிரச்சனை குறித்து அதிகம் தெரியாது. இதன் நியாயங்கள் புரிந்தவர்கள் மிகவும் குறைவு. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ரஜினி படங்களும், விசில் சத்தங்களும் தான்.

****

தமிழக தமிழர்கள் நிலை இதுவென்றால் ஈழத்தமிழர்களின் நிலையிலும் பெரிய வித்யாசம் இல்லை என்றே நான் அறிகிறேன். புலம் பெயர்ந்த தமிழர்களில் எத்தனை சதவீதத்தினர் ஈழப்பிரச்சனையை முன்னெடுக்கின்றனர் ? எத்தனை சதவீதத்தினர் முருகனுக்கு காவடி எடுக்க அலைகின்றனர் ? எத்தனை சதவீதத்தினர் தமிழக பாணியில் சினிமா மோகத்தில் முழ்கி இருக்கின்றனர் ?

போராட்டத்திற்கான புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவு என்பது வேறு, போராட்டத்தினை முன்னெடுப்பது என்பது வேறு. ஈழப் போராட்டத்தினை முன்னெடுக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மிகவும் சிறுபான்மையினர் என்றே நான் அறிகிறேன்

9:36 PM, July 28, 2007
வெற்றி said...

/* தமிழக தமிழர்கள் நிலை இதுவென்றால் ஈழத்தமிழர்களின் நிலையிலும் பெரிய வித்யாசம் இல்லை என்றே நான் அறிகிறேன். புலம் பெயர்ந்த தமிழர்களில் எத்தனை சதவீதத்தினர் ஈழப்பிரச்சனையை முன்னெடுக்கின்றனர் ? எத்தனை சதவீதத்தினர் முருகனுக்கு காவடி எடுக்க அலைகின்றனர் ? எத்தனை சதவீதத்தினர் தமிழக பாணியில் சினிமா மோகத்தில் முழ்கி இருக்கின்றனர் ? */

சசி, சோகமான உண்மை.

/* போராட்டத்திற்கான புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவு என்பது வேறு, போராட்டத்தினை முன்னெடுப்பது என்பது வேறு. ஈழப் போராட்டத்தினை முன்னெடுக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மிகவும் சிறுபான்மையினர் என்றே நான் அறிகிறேன் */

சசி, சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இதுபற்றி எனது கருத்தை நாளை சொல்கிறேன்.

9:55 PM, July 28, 2007
Kanags said...

சசி, நல்ல பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள்.

வெற்றி, //இந்தப் பேரணி ஒரு வார இறுதி நாளில் நடாத்தப்பட்டிருந்தால் இன்னும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.//

இப்படியான எதிர்ப்புப் பேரணிகள் வார நாட்களில் இடம்பெறுவதே நல்லது. முக்கிய அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் சென்றடையும். இப்படியான நிகழ்வுகளுக்கு தமிழர்கள் விடுப்பு எடுத்துச் சென்று பங்கு பற்ற வேண்டும்.

10:17 PM, July 28, 2007
குழைக்காட்டான் said...

கனெக்ஸ்,
//.இப்படியான எதிர்ப்புப் பேரணிகள் வார நாட்களில் இடம்பெறுவதே நல்லது. முக்கிய அரசியல்வாதிகளையும்..//
இங்கே அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் தலைநகரம் தூங்கிவிடும். எந்த ஒரு அரசியல்வாதியும் இருக்கமாட்டான். அதனாலேயே வார நாட்களில் ஒழுங்கமைத்தார்கள்.

சசி,
//.எத்தனை சதவீதத்தினர் முருகனுக்கு காவடி எடுக்க அலைகின்றனர் ? எத்தனை சதவீதத்தினர் தமிழக பாணியில் சினிமா மோகத்தில் முழ்கி இருக்கின்றனர் ? ..//

அனேகர் இவ்வாறானவர்கள் என்ற உண்மையை தலை குனிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். அன்று வந்தவர்களில் 75%ஆனோர் கடந்த 20-25 வருடங்களாக மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருப்போரே. புதிய முகங்கள் மிக சொற்பமே. இன்னும் பலர் வராமல் போனதற்கு சொன்ன காரணங்கள் ஆத்திரம்கலந்த வேதனை கொள்ள வைப்பவை.

11:18 PM, July 28, 2007
இவன் said...

குழைக்காட்டான், தாங்களும் அப்பேரணியில் கலந்து கொண்டவர் என்பதில் மகிழ்ச்சி. கனக்ட்டிகட் மாகணத்தில் இருந்து அப்பேரணியில் கலந்து கொண்ட ஒற்றை தமிழன் நான். prabhunkl@yahoo.com ல் தொடர்பு கொள்ளுங்கள் நிரம்ப பேசுவோம்.

தஞ்சாவூரான், தங்களது பதிவை படித்தேன் உங்களது கருத்துகளில் பெரும்பான்மையானவை எற்புடையவையே.


வெற்றி;
//இந்தப் பேரணி ஒரு வார இறுதி நாளில் நடாத்தப்பட்டிருந்தால் இன்னும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.//

சுதந்திரம் கேட்பதற்கு விடுமுறை நாள் எல்லாம் கிடையாது.

//பெரும்பாலான தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களுக்கு இவ்வாறான பேரணியில் கலந்து கொள்வது குறித்த அச்சம் இருக்கிறது. ஈழப் பிரச்சனையை ஆதரிப்பவர்கள் கூட இந்த அச்சத்தில் இருந்து விடுபடவில்லை.//

இதை முழுக்க முழுக்க ஏற்று கொள்கிறேன் சசி. நான் இந்த பேரணியில் கலந்து கொண்டேன் என்று கூறியதும் என் அலுவலக நண்பர்கள் முகத்தில் ஆச்சர்யம் மற்றும் பயத்தையும் ஒரு சேர பார்த்தேன்.

12:24 AM, July 29, 2007
குழைக்காட்டான் said...

//..கனக்ட்டிகட் மாகணத்தில் இருந்து அப்பேரணியில் கலந்து கொண்ட ஒற்றை தமிழன் நான்..//

உங்கள் பங்களிப்புக்கு மிகவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மிக்க நன்றி 'இவன்' அவர்களே.
கனக்டிக்கட்டில் இருந்து எவராவது வந்திருந்தார்களா என திரும்பி வரும்போதுதான் யோசித்தேன். CT என்ற அட்டையை கண்டதாக ஞாபகம். அடே அவர்களுடன் பேசாமல் வந்துவிட்டோம் என நினைத்தேன். இப்போது வந்தவர் தமிழ்நாட்டுத்தமிழர் என அறியும் போது குற்ற உணர்வு தாக்குகிறது.

கனக்டிக்கட் மாநிலத்தை 'மரணச்சடங்கு மாநிலம்' என்று வேடிக்கையாக நான் சொல்வதுண்டு. ஏனெனில் எம்மை (ஈழத்தமிழரை) பொறுத்தவரை நாம் நண்பர் குடும்பத்து மரணச்சடங்குகளில் கலந்துகொள்ளவே அங்கு செல்வோம். இதை நான் ஒரு கனக்டிக்கட் மரணச்சடங்கிலேயே வெளிப்படையாக கூறினேன்! அம்மாநிலத்தில் வாழும் ஈழத்தமிழரை எந்தவொரு ஈழத்தமிழர் நிகழ்வுகளிலும் காணமுடியாது. எனவே நாமும் அங்கு செல்வது கிடையாது, மரணச்சடங்கு தவிர்த்து!

1:28 AM, July 29, 2007
-/பெயரிலி. said...

சசி,
பதிவைப் பற்றி இங்கே சொல்ல வரவில்லை :-) ஒரு பின்னூட்டக்கயமை இது

குழைக்காட்டான்,
/கனக்டிக்கட் மாநிலத்தை 'மரணச்சடங்கு மாநிலம்' என்று வேடிக்கையாக நான் சொல்வதுண்டு. ஏனெனில் எம்மை (ஈழத்தமிழரை) பொறுத்தவரை நாம் நண்பர் குடும்பத்து மரணச்சடங்குகளில் கலந்துகொள்ளவே அங்கு செல்வோம். இதை நான் ஒரு கனக்டிக்கட் மரணச்சடங்கிலேயே வெளிப்படையாக கூறினேன்! அம்மாநிலத்தில் வாழும் ஈழத்தமிழரை எந்தவொரு ஈழத்தமிழர் நிகழ்வுகளிலும் காணமுடியாது. எனவே நாமும் அங்கு செல்வது கிடையாது, மரணச்சடங்கு தவிர்த்து!/

ஐயோ! தெரியாமல் ஒரு கிழமைக்கு முன்னால், என் பதிவிலே 'குழக்காட்டன்' என்று எழுதிவிட்டதற்காக, என்னைச் சாகக்கொல்லும் பிளானா? :-)
===

2:28 AM, July 29, 2007
இவன் said...

//CT என்ற அட்டையை கண்டதாக ஞாபகம்.//

அட்டையை தாங்கி நின்றது நான்தான்.

//அடே அவர்களுடன் பேசாமல் வந்துவிட்டோம் என நினைத்தேன். இப்போது வந்தவர் தமிழ்நாட்டுத்தமிழர் என அறியும் போது குற்ற உணர்வு தாக்குகிறது.//

அதனால் என்ன இப்போது பேசிவிட்டால் போய்யிற்று.

4:31 PM, July 29, 2007
meena said...

தகவல் திருப்திகரம். வெளிநாடு வாழ் தமிழர்கள் பற்றிய செய்திகள் தங்கள் பதிவில் நிறையவும், நிறைவாகவும் உள்ளது.

6:10 PM, July 29, 2007