Sunday, July 15, 2007

தமிழ் தேசியம் ‍- எனது பார்வை

இந்தக் கட்டுரை 2007ல் எழுதப்பட்டது. ஆனால் 2009ல் முள்ளிவாய்க்காலில் ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்ட பெருத்த தோல்விக்கு பிறகும், திராவிட இயக்கங்கள் நடத்திய நாடங்களைக் கண்ட பிறகும் தமிழ் தேசியமே முழுமையான தீர்வு என்பதான நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. காரணம் இந்தியாவிற்குள் இருக்கும் தமிழகம், தமிழர்களின் உரிமைக்கு எந்த ஒரு நன்மையையும் செய்ய முடியாது என நான் உண்மையாக நம்புகிறேன். அந்த அடிப்படையில் என்னுடைய அடையாளம் "தமிழன்" என்றும் என்னுடைய தேசியம் "தமிழ் தேசியம்" என்றும் நான் வலுவாக நம்புகிறேன்.


எனவே 2007ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை என்னுடைய தற்போதைய நிலைப்பாட்டினை பிரதிபலிப்பதில்லை என்றாலும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் சாதி ஒழிப்பை ஒப்புக்கொள்வதில்லை என்ற அவதூறு கருத்தினை உடைக்க 2007ல் நான் எழுதிய இந்தக் கட்டுரை ஒரு சான்றாக இருக்கும் என நம்புகிறேன்


தமிழ் தேசியம் நோக்கி நகர சாதியை ஒழிக்க வேண்டும் என்ற என் கருத்தினை இந்தக் கட்டுரை வலுவாக முன்வைப்பதாக நான் நம்புகிறேன். அதே நேரத்தில் சாதியை ஒழித்து விட்டு தான் தமிழ் தேசியம் நோக்கி நகர முடியும் என்ற என்னுடைய முந்தைய கருத்தினை முள்ளிவாய்க்கால் உடைத்து விட்டது. சாதி ஒழிப்பும், தமிழ் தேசியமும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டிய ஒன்று என நான் உறுதியாக நம்புகிறேன்

**********************



குழலி, அசுரன் இருவரும் மகஇக குறித்தும், தமிழ் தேசியவாதிகள் குறித்தும் சில கருத்துக்களை முன்வைத்து இருந்தார்கள். அதில் அவர்கள் எழுதியிருந்த தமிழ் தேசியம் குறித்து மட்டும் எனது சில கருத்துக்கள்...

ஈழத்தைச் சார்ந்த தமிழ் தேசியத்திற்கும், தமிழகத்தில் எழுந்த தமிழ் தேசியத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஈழத்தில் தமிழ் மக்கள் இன ரீதியாக அவர்கள் தமிழராக இருக்கும் பொருட்டு ஒடுக்கப்பட்டனர். அதனால் ஈழத்தைச் சார்ந்த தமிழ் தேசியம் என்பது சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானது எனக்கொள்ளலாம். இலங்கையில் நடப்பது "வர்க்க போராட்டம்" என்னும் கருத்தினை நான் எதிர்க்கிறேன்.

இந்தப் பதிவில் தமிழகத்தைச் சார்ந்த தமிழ் தேசியம் குறித்து மட்டும் எனது சில கருத்துக்களை முன்வைக்கிறேன். ஈழம் குறித்து மற்றொரு பதிவில் எழுத உள்ளேன்.

முதலில் தேசியம் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கிறேன்.

இனரீதியாக ஒடுக்குமுறையை சந்திக்காத ஒரு சமூகத்தில் இருந்து எழும் தேசியவாதத்திற்கும் ஈழம், காஷ்மீர் போன்ற சமூகத்தில் எழும் தேசியவாதத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

உதாரணமாக இந்திய தேசியவாதம் என்பது அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் விடுதலைப் பெற்ற ஒரு இனத்தாலேயே முன்னெடுக்கப்படுகிறது. இன ரீதியாக எந்த ஒடுக்குமுறையையும் சந்திக்காத நிலையில் இருக்கிற ஒரு சமூகம் தான் இவ்வாறான தேசியத்தினை முன்னெடுக்கிறது. அது போலவே ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் அந் நிலையில் இருந்து விடுதலை அடைந்த பின்பு முன்வைப்பதும் தேசியவாதமே...

இன ரீதியிலான ஒடுக்குமுறை இல்லாத சூழலில் தன்னுடைய வாழ்க்கைக்கான வாழ்வியல் தேவைகள், சமூக, பொருளாதார விடுதலை குறித்த போராட்டத்தில் இருக்கும் எந்த ஒரு இனமும் தேசியம் குறித்து உணர்ச்சிவயப்பட்டு பார்ப்பதுமில்லை. அது குறித்து சிந்திப்பதும் இல்லை. இந்திய வரலாற்றில் கூட காந்தி முதலில் இந்திய விடுதலை, இந்திய தேசியம் போன்றவற்றை மறுக்கிறார். மக்கள் சமூக விடுதலையை பெற வேண்டும் என்றே சிந்திக்கிறார். ஆங்கிலேயரின் கைகளில் இருக்கும் ஆட்சியை இந்திய பேரிஸ்டர்களிடம் கொண்டு வருவதால் சமூக ரீதியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றே காந்தி நினைத்தார். ஆனால் பின் அவர் இந்திய தேசிய சூழலில் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக விடுதலையை முன்னெடுக்கும் தந்தை பெரியார் தேசியத்தை கடுமையாக எதிர்க்கிறார். பெரியார் கூறுகிறார்.

"தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது"

*************

இந்திய தேசியம் எப்படி இந்துத்துவா சார்ந்த பார்ப்பனியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதோ, அது போல தமிழ் தேசியம் என்பது தமிழகம் சார்ந்த மேட்டுக்குடி மற்றும் பிற சாதி இந்துக்களால் முன்னெடுக்கப்பட்டதே ஆகும். அதன் ஆரம்பகட்டம் நீதிக்கட்சி மேட்டுக்குடியினரால் முன்னெடுக்கப்பட்டது. பிராமணர் அல்லாதோர் என்பதாக தொடங்கி பிராமணர் அல்லாத சமூகங்களின் சமூக விடுதலையையே நீதிக்கட்சி முன்னிறுத்தியது. இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. நீதிக்கட்சி சமூக விடுதலையை முன்னெடுக்கையில் சமூக விடுதலையை அடைந்த பிராமணர் சமூகம் காங்கிரஸ் மூலமாக தேசிய விடுதலையை முன்வைக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சில மேட்டுக்குடி சமூகங்கள் சமுக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னேற்றம் அடைந்த பின்பு திராவிட தேசம், தமிழ் தேசம் போன்றவற்றை முன்வைக்கின்றனர். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வரை தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய திமுக, ஆட்சியை பிடித்த பின்பு இந்திய தேசியத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் இடையே ஒரு சரிசமமான சமூக பொருளாதார சூழல் இல்லாத நிலையில், தமிழன் என்பதால் தமிழகத்தில் தமிழ் இனம் எந்த ஒரு இன அழிப்பிற்கு உள்ளாகாத நிலையில் தமிழ் தேசியத்தை சார்ந்த ஒரு விவாதக்களம் எழுவது இயல்பானது.

தமிழ் இனத்தில் இருக்கின்ற பல்வேறு சமூக பிளவுகளை நீக்காத வரையில் தமிழ் தேசியம் என்ற ஒன்றை அடைய முடியாது என்றே நான் நம்புகிறேன். அது மட்டுமில்லாமல் சமூக ரீதியிலான ஒடுக்குமுறை தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய திமுக ஆட்சிக் காலத்திலும், தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளிடையேயும் கடந்த காலங்களில் இருந்தததை கவனிக்கும் பொழுது தமிழ் தேசியம் செல்ல வேண்டிய தூரத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் திமுக சமூக விடுதலையை முன்னெடுத்தாலும் அந்தச் சமூக விடுதலையின் பலனைப் பெற்றவர்கள் தமிழகத்தைச் சார்ந்த மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமுகத்தினரே. மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் சமூக, பொருளாதார விடுதலையை பெற முடியாத சூழலே நிலவி வந்தது. தமிழக சமூக நிலையில் இருக்கும் சாதிப் பிளவுகளும் தலித் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான சாதி இந்துக்களின் சாதி வெறித்தனமும் இன்றளவும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

கீழ்வெண்மணி சம்பவம் நடந்தது கூட சமூக நீதி முன்னெடுக்கப்பட்டு ஓரளவிற்கு வளர்ந்த காலக்கட்டத்தில் தான் என்பதும் திமுக அப்பொழுது ஆட்சியில் இருந்தது என்பதும் பிற்படுத்தப்பட்ட மேட்டுகுடியினர் எவ்வாறு தலித் மக்களை ஒடுக்கினர் என்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. (இது குறித்த விரிவான பதிவு).

கீழ்வெண்மணி சம்பவத்தினை பார்ப்பன அறிவுஜீவிகள் வர்க்க போராட்டமாக முன்னெடுக்கின்றனர். சில அறிவுஜீவிகள் அதனை பிற்படுத்தப்பட்ட மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். என்றாலும் கீழ்வெண்மணி உள்ளிட்ட சம்பவங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை ஒரே அணியில் திரட்டுவதற்கும், இவர்கள் அனைவரையும் தமிழ் தேசியம் என்னும் வடிவத்தில் அடக்க முனைவதற்கும் எதிராகவே உள்ளது.

கீழ்வெண்மணி சம்பவத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் கூட தெளிவற்றவையாகவே உள்ளன.
கீழ்வெண்மணி குறித்த பெரியாரின் அறிக்கை.

ரோசாவசந்த்தின் கருத்து - http://rozavasanth.blogspot.com/2006/12/blog-post.html

கீழ்வெண்மணி மட்டுமில்லாமல் அதற்கு பிறகு கூட மேலவளவு, கொடியங்குளம், மாஞ்சோலை என தமிழகத்தில் சாதி இந்துக்களின் தாக்குதல் தலித் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. இதனை முதலாளி, தொழிலாளி என்பதாக பார்த்தாலும் கூட பாதிக்கப்பட்ட அனைவருமே தலித் சமூகத்தினர் என்பதையும், தாக்குதல் தொடுத்தவர்கள் மேல்தட்டு மற்றும் இடைநிலை பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதையும் கவனிக்கும் பொழுது தமிழகம் எந்தளவுக்கு சாதி ரீதியில் பிளவு பட்டு நிற்கிறது என்பது தெளிவாகிறது.

 (தமிழகத்தில் தலித்துகளின் நிலை என்ற பிபிசியின் பெட்டக தொடர் - http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml)

வடமாவட்டங்களில் இன்றளவும் இரட்டை டம்பளர் முறை இருப்பதை பிபிசி தொடர் உறுதிப்படுத்துகிறது. தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் திருமாவும், ராமதாசும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்திலும் இன்னமும் சாதி ரீதியிலான அடக்குமுறைகள் தொடருகின்றன என்கிற கூற்றும் மேலே உள்ள பெட்டகத்தொடரில் எதிரொலிக்கிறது.

இவ்வாறு தலித் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் எவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்கள் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டிய தேவையை முன்வைக்கின்றனரோ, அது போலவே தலித் மக்கள் பிற சாதி இந்துக்களான ரெட்டியார், முதலியார், வன்னியர், தேவர் போன்றோரை எதிர்க்க வேண்டிய அவசியத்தை முன்வைக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தான் பார்ப்பனத்தலைமை என்பது 200% நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து தலித் மக்களின் பார்வையில் பெரும் முரண்பாடாகிறது. உண்மையில் சாதி இந்துக்களின் தலைமை 200% தலித்களைச் சார்ந்து இருந்தால் கூட அதனை நம்பமுடியாத நிலையில் தான் தலித் மக்கள் உள்ளனர். அந்தளவுக்கு தலித் சமூகத்திற்கும் பிற இடைத்தட்டு மற்றும் மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இடையேயான இடைவெளி உள்ளது. அரசியல் காரணங்களுக்காக தலித் மக்களுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே சுயநலக்காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட கூட்டணி எவ்வாறு தோல்வி அடைந்தது என்பதை தமிழகத்திலும் பார்க்க முடியும், பிற மாநிலங்களிலும் பார்க்க முடியும்.

தமிழகத்தில் தலித் மக்களிடையேயான கூட்டணியை முன்வைத்த டாக்டர் ராமதாஸ் தோல்வி கண்டார். அவரிடம் கூட்டணி வைப்பதை தலித் மக்கள் விரும்பவில்லை. இதைப் போலவே உத்திரபிரதேசத்திலும் மாயாவதி - முலயாம் சிங் யாதவ் இடையேயான கூட்டணி முறிந்து போயிற்று. தலித் மக்கள் நேரடியாக தங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய ஒரு சமூகத்தினை ஏற்க மறுக்கின்றனர். அதே சமயத்தில் தலித் மக்களை "நேரடியாக" ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காத பார்ப்பனர்களை ஏற்க தலைப்படுகின்றனர். தலித் விடுதலையை முன்னெடுக்கும் பார்ப்பன அறிவுஞீவிகளை தலித் மக்கள் ஏற்றுக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. உத்திரபிரதேசத்தில் மாயாவதி பார்ப்பனர்களுக்கிடையேயான கூட்டணி மூலமும் காண முடிகிறது.(இது குறித்து எனக்கு சில விமர்சனங்கள் உள்ளது. அது மற்றொரு தருணத்தில்...)

தலித்களுக்கும் மேல்தட்டு மற்றும் இடைநிலை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையேயான பிரச்சனை இவ்வாறு உள்ளது என்றால், பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த சமூக நீதியால் அதிகம் பலன் பெற்றவர்கள் மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரே. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பொருளாதார ரீதியிலான விடுதலையை பெற முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக பல சமுதாயங்கள் முன் வைத்த போராட்டங்களால் 1989ல் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 20% இடஒதுக்கீட்டினை அப்போதைய திமுக அரசாங்கம் கொண்டு வந்தது. இது பாமக தொடங்கிய காலக்கட்டத்தில் சில அரசியல் காரணங்களுக்காக, தன்னுடைய ஓட்டு வங்கியை தக்கவைக்க வேண்டும் என திமுக கொண்டு வந்தது.

1989க்குப் பிறகு தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவுக்கு பொருளாதார விடுதலையை பெற தொடங்கியுள்ளனர். தலித் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவருமே தங்களுக்கான முழுமையான பொருளாதார விடுதலையை பெறாத வரையில் தமிழ் தேசியம் என்பதை அடையமுடியாது என்றே நம்புகிறேன்

****************

என்னுடைய கடந்த சில பதிவுகளில் நான் "தமிழ் தேசிய இனம்" என்ற கருத்தை முன்வைத்திருக்கிறேன். தமிழன் என்னும் தேசிய இனத்தின் தனித்தன்மையை சிதைக்க முனைவதை நான் எதிர்க்கிறேன். இந்தியாவில் இருக்கும் பல தேசிய இனங்களின் பன்முகத்தன்மை பராமரிக்கப்பட வேண்டிய அவசியமும், தேவையும் உள்ளது. தேசிய இனங்களின் பன்முகத்தன்மையை தட்டையாக இந்தியன் என்ற வடிவத்தில் அடக்க முனைவது எதிர்க்கப்பட வேண்டியது.

அதே நேரத்தில் அந்த தேசிய இனங்களைச் சார்ந்த "பிரிவினையை" இன ரீதியாக அடக்குமுறை இல்லாத இந்தியச் சூழலில் முன்னிறுத்தப்படுவதை எதிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. இதில் சில விதிவிலக்குகளை காஷ்மீர் போன்ற பிரச்சனைகளில் வழங்க முடியும். காரணம் காஷ்மீர் என்னும் தேசிய இனம் இந்தியா, பாக்கிஸ்தான் என இரு வேறு நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. அந்த தேசிய இனத்தை இணைக்க காஷ்மீரின் சுயநிர்ணயத்தை ஆதரிக்க வேண்டிய தேவை எழுகிறது.

ஆனால் தனித்தமிழ்நாடு என்பதோ, தமிழ் தேசியம் மூலம் வைக்கப்படும் பிரிவினைவாதமோ ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல. காரணம் இன்று பார்ப்பனியத்தை சார்ந்து முன்வைக்கப்படுகிற வாதங்கள் நாளை தமிழ் தேசியத்தை சார்ந்த மேட்டுக்குடியினரிடமும் முன்வைக்க முடியும். தமிழ் சமூகத்தில் இருக்கும் சாதிப் பிரிவுகளை கலைவதும், அனைத்து பிரிவினரும் பொருளாதார விடுதலையை பெறுவதும், சாதியினை மறுப்பதுமே தற்போதைய அவசியமான தேவையாகிறது. அவ்வாறு சாதியற்ற சமுதாயம் உருவாகும் நிலையில் தான் தமிழன் என்ற இனம் எந்த ஒரு பிளவும் இல்லாமல் உருவாக முடியும்.

எந்த தேசியத்தை விடவும் மக்கள் முக்கியமானவர்கள்....


15 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

சசி விரிவாக இப்போது எழுத முடியவில்லை ஆதலால் செல்வன் பதிவில் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு வாதத்தில் நான் எழுதியவைகளை இங்கே பின்னூட்டமாக இடுகிறேன்...

http://santhipu.blogspot.com/2006/05/blog-post_114794445389596838.html

இனி சந்திப்பு அவர்களுக்கு, உலகில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் இந்திய தேசத்தில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் உண்டு, இங்கே திராவிடம்/தமிழ் எந்த இடத்திலும் தளத்திலும் சுரண்டலை அனுமதிக்கவில்லை, இன்னும் குறிப்பாக சொல்ல வருகிறேன், மார்க்சியமும் கம்யூனிசம் உலகலாவிய அளவில் உள்ள முதலாளி தொழிலாளி சுரண்டலை எதிர்த்து ஒரு ஆதர்ச சமுதாயத்தை உருவாக்க முயல்கிறது, இங்கேயும் அதே பிரச்சினைகள் ஆனால் அதன் வடிவம் வேறு, சுரண்டும்/ சுரண்டப்படும் சமுதாயங்கள் சாதியின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளன, இங்கே எந்த இடத்திலும் திராவிடம்/தமிழ் கருத்தாக்கங்கள் என்று கூறிக்கொண்டு ஒரு சாதிக்காரர்கள் மற்றொரு சாதிக்காரர்களை சுரண்டுவதை அனுமதிக்கவில்லை, அங்கே முதலாளி/தொழிலாளி வித்தியாசம் இங்கே ஆண்டை அடிமை வித்தியாசம், இன்னும் சரியாக சொல்லப்போனால் கம்யூனிசத்தின் மண்வாசனை வெளிப்பாடு தான் திராவிட/தமிழ் கருத்தாக்கம்...

கம்யூனிச,மார்க்சிய கோட்பாடுகள் இங்குள்ள பிரச்சினைகளுக்கேற்ற மாதிரி அமல்(implement) செய்யப்படவில்லையென்றால் ஆங்கிலப்படத்தை தமிழில் டப்பிங் செய்த மாதிரி தான் இருக்கும்.

தமிழ்- முகமூடி,குழலி பதிவுகளை முன்வைத்து என்று இது தொடர்பான பதிவை எழுத்தாளர் மாலன் எழுதியுள்ளார்....

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.

அது மட்டுமின்றி நிறைய விவாதங்கள் செல்வனின் பதிவிலும் நடந்துள்ளது....

http://holyox.blogspot.com/2006/08/139.html

அதிலே ஒரு இடத்தில் சொல்லியிருப்பேன்...

//ஜாதி தமிழகம் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் இருக்கிறது.ஆக இது ஒரு இந்திய அளவிலான போராட்டமே அன்றி தமிழகம் தழுவிய போராட்டமல்ல.
//
வெறும் சாதியொழிப்பு மட்டுமல்ல தமிழ் தேசியம், எனவே சாதியொழிந்த இந்திய தேசியம் தமிழ் தேசியத்திற்கு மாற்றாக அமைய முடியாது, இது மிக விரிவானது சில வார்த்தைகளில் முடியாது, நேரம் கிடைத்தால் விளக்கமாக என் பதிவிலேயே எழுதுகிறேன்.

9:45 PM, July 15, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

குழலி,

இந்திய தேசியத்திற்குள்ளான சமூக விடுதலை என்ற வட்டத்தில் என்னுடைய கருத்தினை அடைக்க முடியாது. எனது நிலை இந்திய தேசியவாதிகள் முன்னிறுத்துவது போன்றது அல்ல.

என் கருத்து மக்களைச் சார்ந்தது. மக்களின் வாழ்வியலுக்கான சமூக, பொருளாதார விடுதலையை முன்னெடுக்காமல் தேசியத்தை முன்னெடுப்பதை நான் எதிர்க்கிறேன். அடிப்படையில் பொருளாதாரமும், சமூக நிலையும் தான் மக்களின் அன்றாட பிரச்சனையே தவிர தேசியம் அல்ல என்பது தான் எனது நிலைப்பாடு

11:07 PM, July 15, 2007
Unknown said...

Sasi,
pulikaLin vaan patai paRRi ungkaL karuththukkaLai aRiya romba naalaay kaaththuk koNtirukkiREn. ezuthum eNNam irukkiRathaa?

11:52 PM, July 15, 2007
அதி அசுரன் said...

தமிழ் சமூகத்தில் இருக்கும் சாதிப் பிரிவுகளை கலைவதும், அனைத்து பிரிவினரும் பொருளாதார விடுதலையை பெறுவதும், சாதியினை மறுப்பதுமே தற்போதைய அவசியமான தேவையாகிறது. அவ்வாறு சாதியற்ற சமுதாயம் உருவாகும் நிலையில் தான் தமிழன் என்ற இனம் எந்த ஒரு பிளவும் இல்லாமல் உருவாக முடியும்.

மிகச்சரியான பெரியாரியல் பார்வை. ''எந்த தேசியங்களை விடவும் மக்கள் முக்கியமானவர்கள்''. மிகச்சிறந்த நிறைவு வரிகள். பெரியார் எப்போதும் மண்விடுதலைக்காகப் போராடவில்லை. மக்கள் விடுதலையே அவரது குறிக்கோள். பாராட்டுக்கள். நன்றி.

அதி அசுரன்

12:07 AM, July 16, 2007
Badri Seshadri said...

தனித் தமிழ்நாடு, அல்லது தமிழ்த் தேசியம் போன்ற கட்டமைப்புகள் ஒரு காலத்தில் தேவைப்பட்டன. இந்தி / இந்திய தேசியம் என்ற முரட்டுத்தனமான சித்தாந்தத்துக்கு எதிராக பிராந்திய தேசிய உணர்வுகள் முன்வைக்கப்பட்டதால்தான் இன்று இந்தி / இந்திய தேசியம் மழுங்கியுள்ளது.

இந்தி / இந்திய தேசியம் மழுங்க மழுங்க, அதற்கு எதிராக வைக்கப்பட்ட தமிழ்த் தேசியமும் மழுங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதுதான் இன்றைய நிலை.

பொதுவாகவே தேசிய உணர்வுகள் வலதுசாரித் தன்மை வாய்ந்தவை. இடது சாரிய தமிழ்த் தேசியம் என்பதைக் கட்டமைப்பதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

குழலி வர்க்கச் சுரண்டல் என்பது தமிழகத்தில் சாதிச் சுரண்டலாக மாறி விட்டது என்கிறார். இதில் எந்த உண்மையும் கிடையாது. ஒரே நேரத்தில் மூன்றுவிதமான சுரண்டல்கள் நடைபெறுகின்றன - சாதிச் சுரண்டல், வர்க்கச் சுரண்டல், பால் சுரண்டல் (ஆண் பெண்ணைச் சுரண்டுவது). இவை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும். அதனால்தான் சாதிச் சுரண்டலை எதிர்க்கும் பலர் சந்தோஷமாக வர்க்க, பால் சுரண்டலைச் செய்துவருகின்றனர்.

"கம்யூனிசத்தின் மண்வாசனை வெளிப்பாடுதான் திராவிட/தமிழ் கருத்தாக்கம்" என்பதை எந்தவிதத்திலும் நிரூபிக்க முடியாது.

1:43 AM, July 16, 2007
வெற்றி said...

சசி,
வழமைபோல நல்ல அலசல்.

/* ஈழத்தைச் சார்ந்த தமிழ் தேசியத்திற்கும் */

ஈழத்துத் தமிழ்த் தேசியவாதம் பற்றிய என் கருத்தை ஒரு சிறு பின்னூட்டத்திற்குள் எழுதிவிட முடியாது. இருப்பினும் மிகவும் சுருக்கமாக சில முக்கிய கருத்துக்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஈழத் தமிழ்த் தேசியவாதம் என்பது ஒரு தற்காப்புத் தேசியவாதமே
[Defensive Tamil Nationalism ]என்பது என் கருத்து. அதேநேரம் ஈழத்தமிழர்களின் வரலாற்றிலிருந்து தமிழகத் தமிழர்கள் சில படிப்பினைகளைப் படித்துக்கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பட வேண்டும் என்பதும் என் அவா. ஈழத் தமிழர்கள் அன்று விட்ட சில தவறுகளைத் தற்போது சில தமிழக உறவுகள் செய்வதைக் காண்கிறேன். இது தமிழகத்தில் எமது இனத்திற்கு எதிர்காலத்தில் சில ஊறுகளை விளைவிக்கலாம். [இது பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவு போடுகிறேன்].

ஈழத்துத் தமிழ்த் தேசியவாதம் என்பது சில கால கட்டங்களில் எழுச்சி பெற்றும் சில காலங்களில் அடக்கி வாசிப்பக்பட்டும் வந்திருக்கிறது[தேவைக்கு ஏற்றபடி].சில காலகட்டங்களில் துப்பரவாகக் கைவிடப்பட்டும் இருக்கிறது.

ஈழத்தில் முதன் முதலில் தமிழ்த்தேசியவாதத்தை துவக்கி வைத்தவர் ஆறுமுக நாவலர் என்பது இலங்கையின் சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. எனக்கும் அக் கருத்துடன் உடன்பாடு உண்டு. ஆனால் இப்போது கொழுந்து விட்டெரியும் நவீன தமிழ்த் தேசியவாதம் நாவலர் காலத்தில் தோன்றியது இல்லை என்று நான் நம்புகிறேன்.

யாழ்ப்பாண கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி போர்த்துக்கீசரின் கைக்குள் வீழந்ததிலிருந்து தமிழினத்திற்கு ஒழுங்கான தலைமை இல்லாது தமது அடையாளங்களைத் தொலைத்தவர்கள் போல சிதைவுற்றிருந்தனர் ஈழத்தமிழர்கள்.

ஆறுமுக நாவலர் அவர்கள்தான் தமிழன் என்றொரு இனம் உண்டு, அவர்கட்கென்றொரு குணம் உண்டு எனும் வகையில் தமிழினத்தைத் தட்டியெழுப்பியவர். ஆனால் ஆறுமுக நாவலர் ஒரு [extremist]இனவெறியராகவோ மொழி வெறியராகவோ இருந்ததில்லை. ஆனால் இவரை ஒத்த சிங்களவரான தர்மபால ஒரு இன, மத வெறியராகவே[extremist] செயற்பட்டார்.

ஆறுமுக நாவலரைப் போல ஈழத்தமிழர்களுக்கு இதுவரை ஒரு தலைவன் கிடைக்கவில்லை[இது பற்றி விரைவில் ஒரு தனிப்பதிவு போடவுள்ளேன்].

இந்துமதம் எனும் பெயரால் ஈழத்தமிழர்கள் கடைப்பிடித்துவந்த பல மூட நம்பிக்கைகள், அநீதியான சாதிவேற்றுமைக் கொள்கைகள் போன்றவற்றைக் ஓரளவேனும் களைந்தவர் ஆறுமுக நாவலர். தமிழர்களின் மதம் சைவமே என்றும் ஆரிய முறைகளைக் கடுமையாகச் சாடியிருந்தவரும் இவரே. இவரின் பல சீர்திருத்தக் கொள்கைகளால்
யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாக இருந்த வெள்ளாளர்கள் சிலர் நாவலரை எதிர்த்தனர். [பிராமணர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டிய மகாகவி பாரதியும் அவரின் சாதியான பிராமண சமூகத்தால் எதிர்க்கப்பட்டது போல.]

இவரின் பணிகள் ஈழத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழகத்திலும் இவர் பல செயற்திட்டங்களைச் செய்திருக்கிறார்.

ஆறுமுக நாவலரின் தொலைநோக்குப் பார்வையுள்ள பல செயற்திட்டங்களால் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழர்கள் சிங்களவர்களை விட பொருளாதார ரீதியாகவும், கல்வியறிவிலும் முன்னணியில் திகழ்ந்தார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழர்கள் சிங்களவர்களை விட வசதியாக வாழ்ந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியவாதம் தேவைப்படவில்லை. இக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியவாதம் என்பது ஈழத்தில் இருக்கவில்லை. தேவையும் இருக்கவில்லை.

உண்மையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வகுப்புவாதம்தான் இருந்தது.படித்த தமிழ்,சிங்கள அதிகார வகுப்பினர் பதவிகளில் இருந்தார்கள். அவர்களுக்கு தமிழ்த்தேசியவாதமோ சிங்களத் தேசியவாதமோ தேவைப்படவில்லை.

1932ம் ஆண்டிற்கு முன்னர், படித்த ஆங்கில அறிவு உள்ளவர்கள் மட்டும்தான் வாக்குப் போடலாம் எனும் சட்டம் இருந்தது. கொழும்பில் நடந்த தேர்தலில்[சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதியில்] Sir. பொன்.இராமநாதன் சிங்களவர் ஒருவரை எதிர்த்துப் போட்டி போட்டு வெற்றி பெற்றார். இராமநாதனை எதிர்த்துப் போட்டி போட்டவர் சிங்கள மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அப்போது படித்தவர்களாக அதிகமாக தமிழர்களில் உயர்சாதி வெள்ளாளர்களும் , சிங்களவர்களில் கோபிக[வெள்ளாளருக்கு ஒத்த சிங்கள உயர் சாதியினர்] சாதியினருமே இருந்தனர். இந்த உயர்சாதிச் சிங்களவர்கள் சாதியில் குறைந்த சிங்கள வேட்பாளருக்கு வாக்குப் போட விரும்பாததால்தான் இராமநாதன் வென்றார்.

ஆக 1932ம் ஆண்டிற்கு முன் படித்த தமிழ்-சிங்கள வர்க்கம் ஒரு வகுப்பினராகவும் மற்றையோர் இன்னொரு வகுப்பினராகவும் இருந்தனர். இக் காலகட்டத்தில் சிங்கள தேசியவாதமோ தமிழ்த் தேசியவாதமோ இருக்கவில்லை. தேவையும் இல்லை.

ஆனால் இக் காலகட்டத்தில் பெளத்த மறுமலர்ச்சி அமைப்பு செயற்பட்டு வந்தது. அவ் அமைப்பு அக்கால காட்டத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மற்றும் இந்திய, பாகிஸ்தானிய குடியேற்றவாசிகளுக்கு [immigrants]எதிராகப் பிரச்சாரம் செய்தும், சில தடவைகள் வன்முறைகளிலும் ஈடுபட்டிருந்த போதும், ஈழத் தமிழர்களுக்கெதிராகப் பிரச்சாரங்களோ , வன்முறைகளோ செய்யவில்லை. அதனால் ஈழத் தமிழர்களும் இவ் அமைப்பின் செயற்பாடுகளைக் கண்டிக்கவோ அல்லது அதற்கு எதிராகச் செயற்படவோ இல்லை. ஆக இந்த புத்த மறுமலர்ச்சி அமைப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

1932ம் ஆண்டிற்குப் பின் இலங்கையில் நிலைமைகள் மாறத் தொடங்கியது. ஆங்கிலேயர் பிரிட்டனில் சகலரும் வாக்களிக்கலாம் எனச் சட்டம் கொண்டு வந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையிலும் அதே சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இச் சட்டம் வந்ததும் ஆட்சியைப் பிடிப்பதற்கு சிங்கள அரசியல்வாதிகள் பெளத்த மறுமலர்ச்சி, சிங்கள தேசியவாதம் என்பவற்றைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் இக் கட்டத்தில் ஈழத்தில் தமிழர்கள் தமிழ்த்தேசியவாதத்தை முன்னிறுத்தவில்லை. அவர்கள் இலங்கையில் சிங்களவருடன் சம உரிமையுடன் ஒன்றுபட்ட நாட்டிற்குள்ளேயே வாழ விரும்பினர்.

1952ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இரண்டு முக்கிய தமிழ்க்கட்சிகள் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் போட்டியிட்டன. G.G. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு, தமிழ்மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்றுபட்ட இலங்கையில் சம உரிமையுடனான புரிந்துணர்வுடன் வாழ்வதுதான் சிறந்தது எனும் கோரிக்கையுடன் தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டது. அதேநேரம் சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியவாதத்தை முன்னிறுத்தி நான்கு அம்சக் கோரிக்கையுடன் மாநில சுயாட்சி எனும் கோரிக்கையோடு தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டது.

ஆனால் தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி ஆக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆக, ஈழத்தமிழர்கள் 1952 லும் தமிழ்த்தேசியவாதத்தை முதன்மைப்படுத்த விரும்பவில்லை.

1952ம் ஆண்டிற்குப் பின் இலங்கையில் நிலைமைகள் மிகவும் தலைகீழாக மாறத் தொடங்கியது.
சிங்கள தேசியவாதம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்கியது.

1956ல் பண்டாரநாயக்க கொண்டுவந்த தனிச் சிங்களச் சட்டம் தான் இலங்கையின் தற்போதைய தமிழ்த்தேசியவாதத்தின் உதயம் என்றால் மிகையல்ல.

இக் காலகட்டத்தில் தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஹிந்தி எதிர்ப்புக்கு எதிரான பாரிய வெற்றிகளும், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் தமிழின எழுச்சிப் பேச்சுக்களும் எழுத்துக்களும் இலங்கைத் தமிழர்களிடத்திலும் தமிழரசுக் கட்சியினரிடையேயும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. அறிஞர் அண்ணா ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராகச் செயற்பட்டது போல தமிழரசுக் கட்சியும் செயற்பட விரும்பியது. அறிஞர் அண்ணா போன்றோரை செல்வநாயகம் , அமிர்தலிங்கம் ஆகியோர் சந்தித்து ஆதரவு தேடினர்.

ஆக ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியவாதம் என்பது Defensive Tamil Nationalism என்பதே சாலச் சிறந்தது. அதாவது சிங்களவர்கள் தமது தேசியவாதத்தைத் தூக்கிப்பிடித்து பல தமிழ்விரோதச் சட்டங்களை அமுல்படுத்தியதால் அதற்கு எதிராக உருவாகிய தற்காப்புத் தேசியவாதம் தான் ஈழத்தமிழர்களின் தேசியவாதம்.

அத்துடன் தமிழகத்தில் இருந்த அறிஞர் அண்ணாவினதும் அவர் தலைமையில் இருந்த தி.மு.கவின் பாதிப்பும் ஈழத்துத் தமிழ் தேசியவாதத்திற்கு உந்து சத்தியாகத் திகழ்ந்தன எனலாம்.

ஈழத்தில் இப்போதுள்ள தமிழ்த் தேசியவாதம் கூட இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டால் மறைந்து விடலாம். அல்லது மழுங்கிவிடலாம் என்பது என் எண்ணம்.

2:25 AM, July 16, 2007
அசுரன் said...

//என்னுடைய கடந்த சில பதிவுகளில் நான் "தமிழ் தேசிய இனம்" என்ற கருத்தை முன்வைத்திருக்கிறேன். தமிழன் என்னும் தேசிய இனத்தின் தனித்தன்மையை சிதைக்க முனைவதை நான் எதிர்க்கிறேன். இந்தியாவில் இருக்கும் பல தேசிய இனங்களின் பன்முகத்தன்மை பராமரிக்கப்பட வேண்டிய அவசியமும், தேவையும் உள்ளது. தேசிய இனங்களின் பன்முகத்தன்மையை தட்டையாக இந்தியன் என்ற வடிவத்தில் அடக்க முனைவது எதிர்க்கப்பட வேண்டியது.

அதே நேரத்தில் அந்த தேசிய இனங்களைச் சார்ந்த "பிரிவினையை" இன ரீதியாக அடக்குமுறை இல்லாத இந்தியச் சூழலில் முன்னிறுத்தப்படுவதை எதிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. இதில் சில விதிவிலக்குகளை காஷ்மீர் போன்ற பிரச்சனைகளில் வழங்க முடியும். காரணம் காஷ்மீர் என்னும் தேசிய இனம் இந்தியா, பாக்கிஸ்தான் என இரு வேறு நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. அந்த தேசிய இனத்தை இணைக்க காஷ்மீரின் சுயநிர்ணயத்தை ஆதரிக்க வேண்டிய தேவை எழுகிறது.

ஆனால் தனித்தமிழ்நாடு என்பதோ, தமிழ் தேசியம் மூலம் வைக்கப்படும் பிரிவினைவாதமோ ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல. காரணம் இன்று பார்ப்பனியத்தை சார்ந்து முன்வைக்கப்படுகிற வாதங்கள் நாளை தமிழ் தேசியத்தை சார்ந்த மேட்டுக்குடியினரிடமும் முன்வைக்க முடியும். தமிழ் சமூகத்தில் இருக்கும் சாதிப் பிரிவுகளை கலைவதும், அனைத்து பிரிவினரும் பொருளாதார விடுதலையை பெறுவதும், சாதியினை மறுப்பதுமே தற்போதைய அவசியமான தேவையாகிறது. அவ்வாறு சாதியற்ற சமுதாயம் உருவாகும் நிலையில் தான் தமிழன் என்ற இனம் எந்த ஒரு பிளவும் இல்லாமல் உருவாக முடியும்.//


///இந்திய தேசியத்திற்குள்ளான சமூக விடுதலை என்ற வட்டத்தில் என்னுடைய கருத்தினை அடைக்க முடியாது. எனது நிலை இந்திய தேசியவாதிகள் முன்னிறுத்துவது போன்றது அல்ல.

என் கருத்து மக்களைச் சார்ந்தது. மக்களின் வாழ்வியலுக்கான சமூக, பொருளாதார விடுதலையை முன்னெடுக்காமல் தேசியத்தை முன்னெடுப்பதை நான் எதிர்க்கிறேன். அடிப்படையில் பொருளாதாரமும், சமூக நிலையும் தான் மக்களின் அன்றாட பிரச்சனையே தவிர தேசியம் அல்ல என்பது தான் எனது நிலைப்பாடு//


þ§ததான் நானும் சொல்கிறேன். தேசியம் உரிமை என்பதையெல்லாம் மறுக்கவில்லை. இந்திய சூழலில் சாதியம் எனப்தை மறுத்து பேசுவதையும் மறுக்கிறேன்.

ஆனால் இவையெல்லாம் மக்களின் வாழ்வியலுக்கான சமூக பொருளாதார விடுதலையை முன்னெடுக்காமல் பேசப்படும் போது அவற்றின் இயக்கம் என்பது அதிகாரத்தில் பங்கு கேற்க்கும் தன்மை கொண்டதாக மாறுகிறது.

//தமிழ் சமூகத்தில் இருக்கும் சாதிப் பிரிவுகளை கலைவதும், அனைத்து பிரிவினரும் பொருளாதார விடுதலையை பெறுவதும், சாதியினை மறுப்பதுமே தற்போதைய அவசியமான தேவையாகிறது. அவ்வாறு சாதியற்ற சமுதாயம் உருவாகும் நிலையில் தான் தமிழன் என்ற இனம் எந்த ஒரு பிளவும் இல்லாமல் உருவாக முடியும்.

மிகச்சரியான பெரியாரியல் பார்வை. ''எந்த தேசியங்களை விடவும் மக்கள் முக்கியமானவர்கள்''. மிகச்சிறந்த நிறைவு வரிகள். பெரியார் எப்போதும் மண்விடுதலைக்காகப் போராடவில்லை. மக்கள் விடுதலையே அவரது குறிக்கோள். பாராட்டுக்கள். நன்றி.//

இதுவும் கூட சரியான வாதமே?

தமிழன் என்று சொல்லும் போது எந்த தமிழனை சொல்கிறார்கள்? தேவர் தமிழனா?

தேசியம் என்பது இந்தியாவில் ஒரு முழுமையான வடிவை அடையாமல் இருப்பதன் காரணம் நிலபிரபுத்துவ சாதிதான்.

அசுரன்

6:34 AM, July 16, 2007
Thangamani said...

சசி:

பதிவின் பலவிதயங்களோடு ஒத்துப்போனாலும் குறிப்பிடவிரும்பியவைகள் சில.

1. பதிவின் தலைப்பு. இது தமிழ் தேசியம் குறித்த ஒன்றைப்பார்வையை மட்டும் குறிப்பிடுவதாக அமைந்துவிட்டது. ஒரு வறட்டு தேசிய வாதமாக ஒருசில நிலைகளில் இருந்தாலும், தமிழ் தேசியவாதம் பல தளங்களைக் கொண்டது. தலைப்பு இதைக் குறிப்பதாக இல்லை. (அதே போன்று முன்பு குறிப்பிட விரும்பியது, அப்துல் கலாம் பற்றிய பதிவில், அ.க இந்திய தேசியவாதத்தின் முகமூடி என்பதற்குப் பதிலாக இந்துத்துவ தேசியவாதத்தின் முகமூடி என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நினைத்தேன்)

2. மொழிவழி தேசியங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் என்றுமே உள்ளுறைந்து கிடப்பவை. இதற்கு மாற்றான அல்லது மறுதலிப்பான (ஒரே இந்தியக்) கலாச்சார தேசியத்தினை கூர்மையாக மறுத்தும், முரண்பட்டும், எதிர்த்தும், அரிதாகச் சில சமயங்களில் உடன்பட்டும் அவைகள் செயல்பட்டு வந்தன; வருகின்றன.

2. தமிழ்தேசியம் மட்டுமல்ல மற்ற எல்லா மொழிவழித் தேசியங்களும் செழிப்பாகவும், வளமாகவும் இருக்கும்வரையில் தான் இந்திய ஒன்றியம் பன்முகத் தன்மை கொண்டதாகவும், உண்மையான மக்களாட்ட்சியாகவும் இருக்கும். இதற்கு எதிரான போக்குகள் வலுக்கும் போது பத்ரி குறிப்பிட்டது போல மொழிவழி தேசியங்கள் தங்களை உறுதிப்படுத்திகொள்ளவேண்டிய, கட்டமைக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தும் உள்ளது.

3. இன்றைய நிலையில் இந்திய ஒன்றியத்தில் தனிதமிழ்நாடு என்ற அரசியல் அமைப்பும் வேண்டுமானால் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்தேசியம் என்பதான அரசியல், கூட்டமைப்பில் அவசியமானதாகவே இருக்கிறது. நதிநீர் பங்களிப்பு, வனச்செல்வங்களைப் பாதுகாத்தல், மக்களில் மொழியில் உச்சபட்ச சிவில் உரிமைகளை வழங்க துணைநின்றல், தமது தேசிய வரலாற்றை கட்டமைப்பு செய்தல், அதைப் பாதுகாத்தல், தமது புவியியல் பரப்பை தக்கவைத்துக்கொள்ளுதல், தமது மக்களுக்குத் தேவையான நியாயமான பங்கீட்டை அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளங்களில் கோரிப்பெறுதல் போன்றவைகள் திறமையாக நடைபெற்று அதிகாரமும், பலனும் கூட்டமைப்பில் சரியாகப் பகிரப்பட மொழிவழி தேசியங்கள் வலுவாக இருத்தல் அவசியம்.

4. இதையெல்லாம் விட மொழிவழி தேசியத்துக்கு (தமிழ்தேசியத்துக்கு) இன்னொரு முக்கியமான தேவை இருக்கிறது. இன்று இந்திய தேசிய முகமூடியில் திரண்டுவரும் ஒற்றைத் தன்மை கொண்ட மக்கள் விரோத இந்துத்துவ பயங்கரவாதத்தையும் அதனை முன் வைத்து வேர்பிடிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் எதிர்கொள்ள மொழிவழி தேசியவாதம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

5. சாதிப்பிரிவுகள், சுரண்டல், வர்க்க, பாலடிப்படையிலான சுரண்டகளை தன்னுடைய தேசியத்துக்குள் எதிர்கொள்ள வேண்டிய தேவையும், அதை ஒழிக்க வேண்டிய தேவையும் எல்லா மொழிவழி தேசியங்களுக்கும் உள்ளது; ஒவ்வொன்றும் தமக்கே உரிய வழிகளில் அத்தகைய செயல்பாடுகளில் இறங்கிக்கொண்டே உள்ளன.

6. இன்னும் ஒரு பார்வையில் தமிழ் தேசியம் என்ற பார்வையை தலித் விடுதலைக்கும், பெண்விடுதலைக்கும் கூட அகலப்படுத்துவதற்கு ஏதுவான கூறுகளையும், வளங்களையும் மொழி என்ற அளவிலும் அரசியல் என்ற அளவிலும் தமிழ் தன்னுள் கொண்டே இருக்கிறது. தமிழை வேராகக் கொண்ட கலக முயற்சிகள் பழங்காலந்தொட்டே தமிழில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் வலுப்படுத்தப்படவேண்டும்.

7. பெரியாரின் தேசியம் பற்றிய கருத்துக்களைக் குறிப்பிட்ட நீங்கள் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற அவரது கருத்தையும் இணையாக கொண்டு வந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் இரண்டும் எதிரெதிரானவை அல்ல.

8. சுருக்கமாகச் சொன்னால் தனிஅரசாக செயல்பட வேண்டிய தேவை இல்லாவிட்டாலும், தமிழ்தேசியத்துக்கு தற்போது அனேக வேறு தேவைகள் இருக்கின்றன.

நன்றி!

6:59 PM, July 16, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

சாதி மறுப்பு என்பது "சாதிகள் இல்லையடி பாப்பா" என்பதானது அல்ல. தற்போதைய இந்திய சூழலில் சாதிகள் இல்லை என்பது மக்கள்
விரோதமானதும் கூட. சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை கலைவது முதற்படியாகவும், அப்படி சாதி ஏற்றத்தாழ்வுகளை கலைந்த பின்பு சாதி என்பதை வேறோடு அறுப்பது அடுத்த நிலை என்பதாகவும் உள்ளது. சாதி மறுப்பு என்பது மக்களின் பொருளாதார விடுதலையையே முன்நிறுத்துகிறது. சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட காரணம் பொருளாதாரமே. தலித் மக்கள் தங்களுக்கான பொருளாதார விடுதலையை அடையும் பொழுது சாதியும் இயல்பாக மறுக்கப்படும்.

இந்தியன் என்பது எப்படி ஒரு தட்டையான வடிவமோ இந்து/இந்தி சார்ந்து முன்னிறுத்தப்படுகிறதோ அது போலவே மொழி சார்ந்த "தமிழன்" என்பதும் தட்டையான வடிவமே - தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழன் என்று சொல்வது. என்றாலும் செயற்கையான இந்தியன் என்பதை விட மொழி ரீதியிலாக தமிழன் என்பது ஒரு வலுவான வடிவம் என்பதை நான் மறுக்கவில்லை

2000 ஆண்டு மொழிவளம் கொண்ட
தமிழகத்தில் இருந்த பல்வேறு சமூக பிளவுகள் எக் காலத்திலுமே தமிழன் என்ற நிலையை அடைய விடவில்லை. எனவே தான்
என்னுடைய பதிவில் "சாதியற்ற சமுதாயம் உருவாகும் நிலையில் தான் தமிழன் என்ற இனம் எந்த ஒரு பிளவும் இல்லாமல் உருவாக
முடியும்" என்று கூறினேன்.

என்னுடைய பதிவில் "அது போலவே ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் அந் நிலையில் இருந்து விடுதலை அடைந்த பின்பு முன்வைப்பதும்
தேசியவாதமே..." என்று கூறினேன்

சமூகப் பிளவுகள் மறைந்து ஒரு சமூகம் பொருளாதார விடுதலை பெறும் பொழுது இயல்பாக தேசியவாதம் அந்த சமுகத்தால்
முன்நிறுத்தப்படும்

தங்கமணிக்கான பதிலும், அசுரனுக்கான பதிலும் இதில் உள்ளது...

****

தங்கமணி,

"அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி" என்னும் என்னுடைய தலைப்பு சரியானதே. காரணம் அப்துல் கலாம் இந்திய தேசியத்தின்
மதச்சார்பின்மை என்னும் முகமூடிக்கும் தேவைப்படுகிறார். இந்திய இராணுவம் சார்ந்த வலிமைக்கும் தேவைப்படுகிறார். அதனால் வெறும் இந்துத்துவா முகமூடி என்று கூற முடியாது. அது போலவே மக்களின் தற்போதைய வாழ்வியல் தேவைகளை முன்னெடுக்காமல் செயற்கையான தேசியத்தை முன்னிறுத்துவது வறட்டுத்தனமாகவே எனக்கு தெரிகிறது

****

பத்ரி கூறியிருக்கும் இந்தி எதிர்ப்பு சார்ந்த தமிழ் தேசியம் குறித்து என் பதிவில் எழுதியிருக்க வேண்டும். தவறி விட்டேன்...

11:35 PM, July 16, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

வெற்றி,

ஈழத்தின் தமிழ் தேசியம் குறித்த உங்களது கருத்துகளுக்கு நன்றி. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பு இருந்த சூழ்நிலை குறித்த என்னுடைய புரிதல் மிகவும் குறைவு. அது போலவே ஈழத்தைச் சார்ந்த சமூகக்கட்டமைப்பு குறித்தும் அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளது. உங்களது கருத்துக்களை எழுதுங்கள்

****

உமையணன்,

ஈழத்தில் இருக்கும் போர் சூழ்நிலை குறித்து நான் எழுதி பல மாதங்களாகி விட்டது. விரைவில் எழுதுகிறேன்.

11:41 PM, July 16, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

மறுமொழிகள் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி

11:46 PM, July 16, 2007
வெற்றி said...

சசி,
நேற்றைய எனது பின்னூட்டத்தில் ஈழத் தமிழ்த்தேசியவாதம் பற்றி எழுதும் போது பின்னூட்டம் நீண்டு விட்டதால் தமிழக தமிழ்த் தேசியவாதம் குறித்த என் கருத்தைச் சொல்ல முடியவில்லை.

/* தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் இடையே ஒரு சரிசமமான சமூக, பொருளாதார சூழல் இல்லாத நிலையில், தமிழன் என்பதால் இந்தியாவில் தமிழ் இனம் எந்த ஒரு இன அழிப்பிற்கு உள்ளாகாத நிலையில் தமிழ் தேசியத்தை முன்நிறுத்துவது தேவையற்ற ஒன்று. */

சசி, நீங்கள் மேலே சொல்லியுள்ள கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. தமிழகத்தில் தமிழ்தேசியவாதம் இன்று மிகவும் அவசியமானது. ஆனால் இத் தேசியவாதம் அறிஞர் அண்ணா , பெரியார் போன்றோர் காலத்திலிருந்த காரணங்களுக்காக அல்ல. இப்போது தமிழகத் தமிழர்கள் எதிர்நோக்கும் புதிய சிக்கல்களுக்காக. ஆகவே இப்போது தமிழகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை எதிர்கொள்ள புதிய அணுகுமுறையுடன் கூடிய தமிழ்த்தேசியவாதம் தமிழகத்திற்கு மிகவும் அவசியம்.

நீங்கள் கூறியுள்ளது போல் தமிழர்கள் தமக்குள் இருக்கும் சாதி வேற்றுமைகள், பொருளாதார வேறுமைகளைக் களைந்த பின்னர்தான் தமிழ்த்தேசியம் தேவை என்பது யதார்த்தமற்றது. நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல நடைமுறைக்குச் சாத்தியமற்ற பொதுவுடைமைவாதிகளின் கருத்துக்கள் போன்றது. ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள வேறுபாடுகள் நிச்சயம் களையப்பட வேண்டியவைதான். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் தமிழ்த் தேசியவாத முன்னெடுப்புக்களும், இந்த சாதி ஒழிப்பு போன்றன சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியவை.

/* தமிழகத்தில் தமிழின தேசியவாதிகளின் தற்போதைய தலைவராக பலராலும் முன்நிறுத்தப்படுபவர் பழ.நெடுமாறன் அவர்கள். பழ.நெடுமாறன் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர். இந்திய இராணுவம் சார்ந்த இந்திய தேசியவாதத்தை இந்தியாவில் மட்டுமில்லாமல் அண்டை நாடுகளிலும் முன்னெடுத்த இந்திரா காந்தியை தனது தலைவராக கொண்டவர் */

இக் கருத்துடனும் எனக்கு உடன்பாடில்லை. தமிழ்த்தேசியவாதத்தை ஆதரிக்கும் ஒருவர் ஏன் இந்திய தேசிய அபிமானத்தைக் கொண்டிருக்க முடியாது? இந்திரா காந்தி அம்மையாரால் முன்னெடுக்கப்பட்ட இந்திய தேசியவாதம் என்பது இப்போது ஆட்சியில் உள்ளவர்களினால் முன்னிறுத்தப்படும் தேசியவாதத்தை விட வித்தியாசமானது. இப்போதுள்ள கொள்கை வகுப்பாளர்கள் தமது பிராமண சமூகத்தின் நலனை முன்னிறுத்தியே இந்திய தேசியவாதத்தை முன்னிறுத்துகின்றனர். இதைத்தான் நெடுமாறன், வைகோ போன்றவர்கள் எதிர்க்கிறார்கள். ஹிந்து ஆசிரியர் ராம், துக்ளக் சோ போன்றவர்களை விட இந்திய தேசத்தை நேசிப்பவர்கள் நெடுமாறன் , வைகோ போன்றவர்கள். இந்திய தேசியத்தை நேசிக்கும் அதே நேரம் தமிழினத்தின் அடையாளத்தைத் தொலைக்காமல் தமிழின உணர்வுடன் வாழ வேண்டும் என்கிறார்கள். இதில் என்ன தப்பு? ஆனால் பிராமண நலன்களை முன்னிறுத்தி இந்திய தேசியவாதத்தைக் கட்டியெழுப்ப முனைபவர்கள் இதை இந்தியாவிற்கு எதிரான துரோகம் என பொய்ப் பரப்புரைகள் செய்து இதை நசுக்க முனைகிறார்கள். அதாவது பிராமண நலனைப் பேணும் இந்திய தேசியவாதத்தை மட்டும் ஆதரிப்பவர்கள்தான் இந்தியர்கள் எனவும் தமது சொந்த இனத்தின் அடையாளத்தை முன்னிலைப்படுத்துவதோ அது பற்றிப் பேசுவதோ இந்திய தேசியவாதத்திற்கும் இந்திய நலனுக்கும் எதிரானது என ஒரு மாயையை ஏற்படுத்த முனைகிறது பிராமண சமூக ஆதிக்க சத்திகள். ஆக இதைத் தடுக்க தமிழ்த் தேசியவாதம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். சிறந்த தமிழனாக இருந்தால் சிறந்த இந்தியனாக இருக்க முடியாது என்பது பொய்வாதம்.

தமிழகம் இந்தியாவின் அங்கமாக இருப்பதுதான் தமிழகத்திற்குச் சாலச் சிறந்தது. தற்போதுள்ள சூழ்நிலையில் தனித் தமிழ்நாடு பற்றிப் பேசுவது முட்டாள்தனம். அதேநேரம் இந்தியாவின் அங்கமாக இருக்க வேணும் என்பதற்காக தமிழினம் தனது அடையாளத்தை, தனித்துவத்தை இழக்க வேணும் என்றில்லை. அனைத்து இனமும் தமது தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேணிக்காத்து அவர்களின் இனத்தை பொருளதார சமூக முன்னேற்றத்திற்கு கொண்டு செல்வதற்குத் தான் பல்லினங்களைக் கொண்ட ஒரு நாடு எனும் அமைப்புக்கு உடன்படுகிறார்கள்.

12:14 AM, July 17, 2007
அற்புதன் said...

//என் கருத்து மக்களைச் சார்ந்தது. மக்களின் வாழ்வியலுக்கான சமூக, பொருளாதார விடுதலையை முன்னெடுக்காமல் தேசியத்தை முன்னெடுப்பதை நான் எதிர்க்கிறேன். அடிப்படையில் பொருளாதாரமும், சமூக நிலையும் தான் மக்களின் அன்றாட பிரச்சனையே தவிர தேசியம் அல்ல என்பது தான் எனது நிலைப்பாடு//

மக்களைச் சாராத எந்தப் போராட்டமும் வெற்றி பெறப் போவதில்லை.உங்களின் பல கருதுக்களோடு உடன் பாடு உண்டு.

மேலும் தங்கமணி, வெற்றி ஆகியோர் சுட்டிக்காட்டிய படி தமிழ்த் தேசியம் என்பது பிரிவினை என்பதை மையமாக வைத்து எழும் ஒன்றாக நீங்கள் ஒற்றைப் படியாகச் சிந்திப்பதாக உள்ளது.இது தனித் தமிழ் நாட்டு இயக்கங்கள் முன் வைக்கும் தமிழ்த் தேசியத்தை மட்டுமே குறிக்கும்.ஆனால் ஈழத்தில் கூட தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கான போரே நடக்கிறது.சுய நிர்ணயம் என்பது நேரடியாகப் பிரிவினை ஆகாது.தம்மை ஓர் இனம் என்று உணரும் இனம் தனது தலைவிதியைத் தானே நிர்ணயயிப்பது சுய நிர்ணயம்.அந்த வகையில் இந்தியக் கூட்டாட்சிக்குள் தமிழ் இனத்தின் பொருளாதார சமூக வாழ்வு நசுக்கப்படுமானால் தன்னைப் பாதுகாக்க அது தனித்துப் போகவே முயற்ச்சிக்கும்.ஆனால் அவ்வாறான ஒரு நிலைமை இல்லாதவிடத்து பிரிந்து போவதற்கான காரணங்கள் இல்லாது கூட்டாற்ச்சிக்குள் இருப்பதுவே தமிழ் இனத்தின் பொருளாதாரா வாழ்வு மேம்பட அவசியம் என்று உணரும் நிலையில் அது தொடர்ந்து கூட்டற்ச்சிக்குள் இருக்கவே முயலும்.ஆனால் இந்துதுவா வழியில் பார்ப்பனீயம் முன் வைக்கும் இந்தியத் தேசியம் என்பது இந்தியா தேசிய இனங்களின் கூட்டாச்சி என்பதை மறுதலிக்கிறது.எனெனில் இந்தியத் தேசிய இனங்கள் அரசியற் பலம் பெறும் போது மத்தியில் குவிந்திருக்கும் பார்ப்பனீயத்தின் அரசியற் பலம் குன்றி விடுகிறது.ஆகவே கூட்டாட்ச்சி என்பது தேசிய இனங்களின் உண்மையான கூட்டாச்சியாக இருக்க வேண்டும் எனில் மொழி வாரி மா நிலங்கள் மேலும் அரசியற் பலம் உள்ளவையாக இருக்க வேண்டும்.இன்று அந்த நிலையா இருக்கிறது? மத்தியில் இருக்கும் ஒரு அதிகாரி சொல்வத்தைக் கேட்கும் நிலையில் அல்லவா மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் அமைச்சர் இருக்க வேண்டி உள்ளது.

இதற்காத் தான் பெரியார் அன்றே சொன்னார், பார்ப்பானை எதிர்க்கத் தான் நான் தமிழ் நாடு தமிழெருக்கே
என கேட்கிறேன் என்று.

மேலும் வெற்றி ஆறுமுக நாவலர் பற்றிச் சொன்னவற்றுடன் நான் பெரிதும் மாறு படுகிறேன்.சம பந்திப் போசனம் சைவத்திற்கு எதிரானது என்று சொல்லி வெள்ளாரின் சாதிய வெறியைப் பிரதினிதிப் படுத்தியவர் நாவலர்.அவர் பிரதி நிதிப் படுத்தியது சைவ வேளாளச் சாதிவெறியே அன்றி இன்றிருக்கும் தமிழ்த் தேசியம் அல்ல.

நீங்கள் சொல்லி இருப்பதைப் போல் சமூக சாதிய ஏற்றத் தாழ்வுகளை களைய அறை கூவல் இடும், தமிழர்களை ஒன்று பட்டுப் போராட அழைக்கும் தமிழ்த் தேசியமே ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்த வல்லதாக இருக்கும்.ஈழத்தில் இப்போது நடப்பது அத்தகைய போராட்டமே.அதற்கான சூழலை உருவாக்கியது சிங்களப்பவுத்த பேரின வாதாம்.சமூகத்தின் எல்லாச் சாதியினரையும் எல்லா வர்க்கத்தினரையும் வேற்றுமை பாராது அடக்கிய பேரின வாத்தற்கு எதிராக சகல வேறுபாடுகளையும் களைந்து ஒன்று பட்ட ஒரு போராட்டட்தை நடத்த வேண்டிய தேவை ஈழத்தில் எழுந்தது.

அதே போல் ஒரு நிலை இந்தியச் சூழலில் எழுவதை தீர்மனிப்பது ஈழப்போராட்டத்தில் இந்திய மத்திய அரசு எடுக்கும் நிலைப்பபாடுகளுடன் சம்பந்தப்படதாக இருக்கும்.இந்திய மத்திய அரசில் இருக்கும் ஆளும் பார்ப்பனீயக் கும்பல்களின் சிறிலங்கா அரசுக்கானா ஆதரவு என்பது, இந்தியாவில் அவர்களின் செல்வாக்கைத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான் ஒரு முயற்சியே.அதனாலையே அவை மறைமுகமாக ஈழப்போராட்டம் வெல்லப் படக் கூடாது என்பதற்கான சதிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றன.

தமிழ் நாட்டில் தமிழர்களின் அரசியற் செல்வாக்கும், வாழ்வும்,பொருளாதரமும் மேம்பட வேண்டுமாயின், இந்தியா என்னும் கூட்டாட்ச்சிக்குள் அதன் அரசியற் செல்வாக்கு பலம் பெற வேண்டும்.ஆகவே அதனை முன் நிறுத்த தேசிய இனங்களின் சுய நிர்ணயம் என்னும் கோட்பாடு மத்தியில், மானிலங்கள் செலுத்தும் அதிகாரச் செறிவாக இருக்க வேண்டும்.மத்திய பார்ப்பனீய அதிகார வர்க்கத்தின் செல்வாக்கு என்பது மழுங்கடிக்கப்பட வேண்டும். மானில அரசுகளைக் கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்து பிடுங்கி எறியப்பட வேண்டும்.வெளியுறவுக் கொள்கையிலும் நிதிக் கொள்கைகளிலும் மாநில அரசுகள் தீர்மனிக்கும் ஆற்றலைக் கோர வேண்டும். நெடுமாறனும் மற்றும் தமிழ்த் தேசிய வாதிகளும் இன்று வலியுறுத்தும் அரசியற் நிலைப்பாடு இது தான் என்பதுவே எனது பார்வை.

4:42 AM, July 29, 2007
Thamizhan said...

தோழர்களின் ஆக்க பூர்வமான சிந்தனைகள் மிகவும் நல்லது.
முதலில் சில அடிப்படை உண்மைகள்.
தற்போதுள்ளத் திராவிடத் தலைமையில் பெரும்பாலோனோர் மிகவும் எளிய நிலைகளிலிருந்து வந்தவர்கள் தான்.நீதி்க் கட்சியின் அரச பரம்பரை சேலம் திராவிடர் கழக மாநாட்டில் பெரும் மாற்ற மடைந்தது.

தற்போதுள்ள பிற்படுத்தோர்,தழ்த்தப் படுத்தப் பட்டோர் முன்னேற்றம் என்பது பெரியாரின் கடைசிப் பேச்சான மரண சாசனத்தில் அவர் கேட்டது.ஏதோ கொஞ்சம் பேர் படித்திருகிறீர்கள்,பதவிகளிலிருக்கிறீர்கள்
அதற்காக நான் போராட வில்லை.எத்தனை பேர் பண்பட்டிருக்கிறீர்கள்.இன்னும் சூத்திரனாக இருக்கிறோமே என்று எத்தனை பேர் வெட்கப் படுகிறீர்கள்?அதை ஒழிக்க எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்?என்பது தான் இன்றைய உண்மை.

ஒன்று பார்ப்பனர்கள் உள்ளத்தால் மாறி
அனைவரும் சமம்,ஆண் பெண் சமம் என்பதை ஒத்துக் கொண்டு வாழ்க்கையி்ல் கடைப் பிடிக்க வேண்டும்.அல்லது கடைப் பிட்க்க வைக்கப் பட வேண்டும்.

பார்ப்பனத்தன்ம் உடைய தமிழர்கள் அனைத்துத் தமிழர்களும் ஒரே இனம்,சாதியில்லை,இல்லவே இல்லை என்பதை உள்ளத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் அல்லது கட்டாயப் படுத்தப் பட வேண்டும்.

நடை முறையில் முக்கியமானவை
கல்வி,பொருளாதார முன்னேற்றம்.இதில் முன்னேறியவர்களைப் பார்த்து பொறாமை அடைவதால் பின்னுள்ளவர்கள் முன்னேறிவிட முடியுமா?
படித்தவர்கள்,பொருளாதார வசதி வந்தவுடன் ஏதாவது நன்றி உணர்வுடன் மற்றவர்கள் முன்னேற வழி வ்குக்கின்றனரா?
ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பார்ப்பனன் பம்பாய்,டில்லி போனால் அந்தக் கிராமமே அங்கே சென்று முன்னேறி விடுகின்றனர்.ஒரு தமிழ்ன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தாலே பாதி பார்ப்பனராகி விடுகின்றார்.கிராமத்தை மறந்து நடிக்கின்றார்.
தமிழன் உலகெங்கும் உள்ள நிலையில்
தமிழ்ன் புது டில்லி மட்டுமல்லாது உலகெங்கும் தமிழன் ஒன்றாக முன்னேற வழி வகுக்காமல் சென்ற இடத்திலும் சாதிச் சங்கம் அமைக்கின்றான்.
இதையெல்லாம் ஒழிப்பது தான்,தமிழ்ன் மற்றொரு தமிழன் முன்னேறக் கல்வி.பொருளாதாரத்தில் முன்னேற உதவுவதுதான் உண்மையானத் தமிழ் தேசியமாக இருக்க முடியும்.
தமிழ் தேசியம் நிலப் பரப்புத் தேசியமல்ல,உள்ளத்து ஒற்றுமை,உயர்வில் தேசியம் என்பதுதான் எதிர்காலத்திற்கு உதவும்.
40 பாராளுமன்ற உறுப்பினர்கள்,பல் மந்திரிகள்,ஆட்சியின் உயிர் தமிழர்கள் கையில் இருந்தும் என்ன பயன்?
புது டில்லியின் அதிகார வர்க்கம் தமிழுக்கும் ,தமிழினத்திற்கும் எதிரான சூழ்ச்சி ஆட்சி யாகத்தானே இருக்கிறது.
இந்த நிலை கன்னடத்துக் காரர்களிடம் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

2:11 PM, July 29, 2007
அசுரன் said...

///2000 ஆண்டு மொழிவளம் கொண்ட
தமிழகத்தில் இருந்த பல்வேறு சமூக பிளவுகள் எக் காலத்திலுமே தமிழன் என்ற நிலையை அடைய விடவில்லை. எனவே தான்
என்னுடைய பதிவில் "சாதியற்ற சமுதாயம் உருவாகும் நிலையில் தான் தமிழன் என்ற இனம் எந்த ஒரு பிளவும் இல்லாமல் உருவாக
முடியும்" என்று கூறினேன்.

என்னுடைய பதிவில் "அது போலவே ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் அந் நிலையில் இருந்து விடுதலை அடைந்த பின்பு முன்வைப்பதும்
தேசியவாதமே..." என்று கூறினேன்

சமூகப் பிளவுகள் மறைந்து ஒரு சமூகம் பொருளாதார விடுதலை பெறும் பொழுது இயல்பாக தேசியவாதம் அந்த சமுகத்தால்
முன்நிறுத்தப்படும்///

Sarithaan... I agree with this point.

Asuran

9:00 AM, November 22, 2007