அப்துல் கலாம் : கே.ஆர்.நாராயணன் - யார் சிறந்த குடியரசுத் தலைவர் ?

இந்தியாவில் குடியரசுத் தலைவர் என்ற பதவியின் மீது ஒரு பெரிய புனிதத்தன்மையை பூசி புனித பிம்பங்களை அந்தப் பதவியில் அமர்த்த முனைவது தொடர்ந்து சில காலங்களாக நடந்து வருகிறது. அப்துல் கலாமிற்கு அடுத்ததாக நாரயணமூர்த்தி பெயர் சிலரால் முன்மொழியப்பட்டது. ஊடகங்களும் நாராயணமூர்த்தியை ஆதரித்தன. நாராயணமூர்த்தி மற்றும் ரத்தன் டாடா ஆகியோரது பெயர்கள் ஊடகங்களில் சில காலமாக உலாவிக்கொண்டிருந்தன. இதன் மூலம் அடுத்த குடியரசுத்தலைவர் பதவிக்கு சிலரைச் சார்ந்து ஒரு கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த சில ஊடகங்கள் முனைந்தன. அப்துல் கலாம் கூட நாரயணமூர்த்தி பெயரை வழிமொழிந்து இருந்தார். ஆனால் "நல்ல வேளையாக" நாரயணமூர்த்தியே தேசிய கீதம் குறித்த தன் "சிந்தனைகளை" வெளியிட்டார். அவர் மீது இருந்த பிம்பம் சரிய, அவரது பெயர் பரிசீலனை கூட செய்யப்படாமல் கைவிடப்பட்டது.

சரி....அப்படி என்ன தான் சமீபக்கால குடியரசுத்தலைவர்கள் சாதித்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம் என்று தோன்றியது.

சமீபக்கால குடியரசுத்தலைவர்களில் அதிகளவில் பேசப்பட்டவர்கள் என்றால் அது கே.ஆர்.நாராயணன் மற்றும் அப்துல் கலாம் தான். மற்றவர்கள் வெறும் அலங்காரமாக அந்தப் பதவியை அனுபவித்தவர்கள். வெறும் ரப்பர் ஸ்டாம்ப்புகள்.

இந்தியக் குடியரசுத் தலைவர்களிலேயே சிறந்தவராக அனைவரும் நினைப்பது, ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவது தற்போதைய குடியரசுத் தலைவரான அப்துல்கலாமைத் தான். ஆனால் சிறப்பாக செயலாற்றிய குடியரசுத்தலைவர் என்றால் அது கே.ஆர்.நாராயணன் தான். அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக சில விடயங்களில் சரியாக செயல்பட்டிருக்கிறார். ஆனால் கே.ஆர்.நாராயணன் அளவுக்கு செயல்பட்டாரா என்பது கேள்விக்குரியே. அப்துல் கலாமின் சாதனை குடியரசுத்தலைவர் என்ற பதவியை நடுத்தரவர்க்க இந்தியர்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியது தான். On the lighter side, குடியரசுத்தலைவர் பதவியை கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவிக்கு இணையாக மாற்றினார் என்று கூறலாம். (எந்தக் கொள்கைகள் என்பதை என்னுடைய முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்)

கே.ஆர்.நாராயணன் குடியரசுத்தலைவர் என்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே அல்ல என்பதை முதன் முதலாக வெளிப்படுத்தினார். குடியரசுத்தலைவர் பதவிக்கு இருக்கும் சில அதிகாரங்களை முதன்முதலாக பயன்படுத்தியவர் கே.ஆர்.நாராயணன் தான். குடியரசுத்தலைவர் மீது ஒரு கவன ஈர்ப்பினை நாராயணன் கொண்டு வந்தார். குடியரசுத்தலைவர் அரசின் முடிவுகளை தீர்மானிக்க முடியாது என்றாலும் தன்னுடைய ஆலோசனைகளை அரசுக்கு கொடுக்க முடியும். நாராயணனுக்கு முன்பு வரை இருந்த குடியரசுத்தலைவர்கள் அதனை செய்ததில்லை. அவர்கள் மைய அமைச்சரவையின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதே வழக்கம். ஆனால் மைய அமைச்சரவைக்கு தன்னுடைய ஆலோசனைகளை அழுத்தமாக வழங்கியவர் கே.ஆர்.நாராயணன். அதனாலேயே அப்போதைய வாஜ்பாய் அரசாங்கத்தின் எதிர்ப்பினையும் எதிர்கொண்டார். ஊடகங்களும் இவரைச் சாடின. ஏனெனில் வாஜ்பாய் தலைமையில் இந்தியா ஒளிர்வதாக இந்த ஊடகங்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தன.

கே.ஆர்.நாரயணன் தான் நினைத்த அளவுக்கு குடியரசுத் தலைவர் பதவி மூலம் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று வருந்தியவர். அதை அவர் இவ்வாறு கூறுகிறார்

As the President of India, I had lots of experiences that were full of pain and helplessness. There were occasions when I could do nothing for people and for the nation. These experiences have pained me a lot. They have depressed me a lot. I have agonised because of the limitations of power. Power and the helplessness surrounding it are a peculiar tragedy, in fact.

கே.ஆர்.நாராயணன் இந்துத்துவ சக்திகள் தங்களின் ஆட்சி மூலம் இந்தியாவை "ஹிந்து" நாடாக மாற்ற முனைந்த சமயத்தில் குடியரசுத்தலைவராக இருந்தவர். குஜராத்தில் நரேந்திரமோடி அரசாங்கம் தன்னுடைய காவல்துறை மூலமே முஸ்லீம் மக்களை வேட்டையாடிய சமயத்தில் குடியரசுத்தலைவராக இருந்தவர். இந்த சமயத்தில் மைய அரசாங்கம் குஜராத்திற்கு உடனே இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார். ஆனால் கே.ஆர்.நாராயணனின் வேண்டுகோளுக்கு வாஜ்பாய் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. பின்னாளில் குஜராத் அரசாங்கம் மட்டுமில்லாமல் வாஜ்பாய் அரசாங்கமும் குஜராத் சமயத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்ததாக நாராயணன் சாடினார்.

கே.ஆர்.நாராயணன் பல விடயங்களில் குடியரசுத்தலைவர்களின் செயல்பாட்டிற்கு முன்னோடியாக திகழ்ந்தார். முதன் முதலாக தேர்தலில் வாக்களித்த குடியரசுத்தலைவர் என்றால் அது கே.ஆர்.நாராயணன் தான். இந்தியாவில் நாராயணனுக்கு முன்பு வரை குடியரசுத்தலைவர்களாக இருந்தவர்கள் தேர்தலில் வாக்களிப்பதில்லை. காரணம் குடியரசுத்தலைவர்கள் எந்தச்சார்பும் இல்லாமல் இருப்பதாக "வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்பது ஒரு மரபாக இருந்தது. இது எந்தளவுக்கு ஒரு போலித்தனமான மரபு என்பதை நாம் அறிவோம். அனைத்து குடியரசுத்தலைவர்களும் ஒரு கட்சியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதே கட்சிக்கு விசுவாசமாக ரப்பர் ஸ்டாப்பாக செயல்பட்ட நிலையில் குடியரசுத்தலைவர் பதவியை சார்ந்த புனித பிம்பத்திற்காக தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது என்பது ஒரு கேளிக்கூத்தான மரபு. நாரயணன் இந்த போலித்தனமான மரபை முதன் முதலாக மீறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் பழக்கத்தை கே.ஆர்.நாராயணன் கொண்டு வந்தார்.

அது மட்டுமில்லாமல் மைய அமைச்சரவை பரிந்துரைக்கும் அனைத்து மசோதாவிற்கும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கையொப்பம் இடுவது குடியரசுத்தலைவர்களின் பழக்கமாக இருந்து வந்தது. இந்தப் பழக்கத்தை முதலில் உடைத்தவர் கே.ஆர்.நாராயணன் தான். 1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்திரபிரதேச பாஜக அரசாங்கத்தை கலைக்க அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான அரசாங்கம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆனால் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் இதனை ஏற்க மறுத்து அமைச்சரவையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பினார். இந்தியாவில் தொடர்ச்சியாக பல மாநில அரசுகள் எக்காரணமும் இல்லாமல் கலைக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்த மரபு. அதனையும் தடுத்து நிறுத்தியவர் கே.ஆர்.நாராயணன் தான். இந்த சமயத்தில் ஜனநாயகத்தை கே.ஆர்.நாராயணன் காப்பாற்றியதாக அவரை ஆதரித்த பாஜக, பின் ஆட்சிக்கு வந்த பொழுது அவரை எதிர்த்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசாங்கம் 1998ல் பீகாரின் ராப்ரீதேவி அரசாங்கத்தை கலைக்க முனைந்த பொழுது கே.ஆர்.நாராயணன் அதனையும் ஏற்க மறுத்து அமைச்சரவையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பினார்.

கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் முதல் தலித் குடியரசுத்தலைவர். குடியரசுத்தலைவராக இருந்த சமயத்திலும் தலித் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். கே.ஆர்.நாராயணன் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் (University of Travancore) எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரிவுரையாளர் பணி தருவது வழக்கம். ஆனால் நாராயணன் தலித் என்பதால் அவருக்கு clerk வேலையே தர முடியும் என பல்கலைக்கழகம் கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த நாராயணன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். எம்.ஏ. பட்டத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் குடியரசுத்தலைவரான பிறகு தான் (50 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்தப் பட்டம் பல்கலைக்கழகத்தால் அவருக்கு வழங்கப்பட்டது.

கே.ஆர்.நாராயணன் குடியரசுத்தலைவராக இருந்த பொழுது தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்தவர். அவர் 1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த தகுதியான பலர் இருக்கையில் அவர்களை உச்சநீதிமன்றத்தில் நியமிக்காமல் இருப்பது எவ்வகையிலும் நியாயமாகாது என்று கூறினார்.

"Eligible persons from SC/ST categories are available and their underrepresentation or non-representation would not be justifiable. Keeping vacancies unfilled is also not desirable given the need for representation of different sections of society and the volume of work which the Supreme Court is required to handle."

இதையடுத்து தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் 2000ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 1989க்குப் பிறகு 10 ஆண்டுகள் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாத சூழலில் பாலகிருஷ்ணன் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.பாலகிருஷ்ணன் தற்பொழுது இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.

குடியரசுத்தலைவருக்கும், பிரதமருக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் தலித்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பரிமாறப்பட்ட இந்த "தனிப்பட்ட" கடிதம் வாஜ்பாய் அரசாங்கத்தால் கள்ளத்தனமாக ஊடகங்களிடம் வழங்கப்பட்டது. இந்திய ஊடகங்கள் நீதிமன்றத்தின் "திறமைக்கு" குடியரசுத்தலைவர் இடஒதுக்கீடு மூலமாக வேட்டு வைக்கிறார் என்ற தங்களது வழக்கமான பல்லவியை பாடின. இந்திய ஊடகங்களால் கடுமையாக சாடப்பட்டார் கே.ஆர்.நாரயணன்.

இந்துத்துவவாதிகள் ஆரம்பம் முதலே கே.ஆர்.நாராயணனை எதிர்த்தனர். அவர் காங்கிரசை சேர்ந்தவர் என்றாலும் அவரது பெயரை குடியரசுத்தலைவர் பதவிக்கு முன்மொழிந்தவர் வி.பி.சிங். காங்கிரசிலேயே அவருக்கு எதிர்ப்பு இருந்தது. அதுவும் அவரது சொந்த மாநிலமான கேரளாவின் காங்கிரஸ் கட்சி தலைமை அவர் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை நம்புகிறவர் என்பதால் அவரை எதிர்த்தது. இந்திய ஊடகங்களும் அவரது இடஒதுக்கீடு ஆதரவு நிலைப்பாடு, தீவிர பொருளாதார தனியார்மயமாக்கத்தை எதிர்க்கும் அவரது நிலைப்பாடு போன்றவற்றுக்காக அவரை எதிர்த்தன.

இந்திய குடியரசுத்தலைவர்களியே அதிகம் செயலாற்றிய கே.ஆர்.நாராயணனின் செயல்பாடுகள் இந்த எதிர்ப்பை மீறி மக்களிடம் சென்று சேர்ந்தன என்றாலும் ஊடகங்கள் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் அப்துல் கலாமை முன்னிறுத்தி கே.ஆர்.நாராயணனை மறைத்தன. இந்தியக் குடியரசுத்தலைவர்களில் ஆக்கப்பூர்வமாக செயலாற்றிய கே.ஆர்.நாராயணன் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

கடந்த ஐந்து ஆண்டுக்காலத்தில் அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக சாதித்தது என்ன ? பல இடங்களில் இந்தியா வல்லரசாகும் என அப்துல் கலாம் உரையாற்றினார், குழந்தைகளிடம் பேசினார் என்பதாகத்தான் பலர் கூறுகின்றனர். ஆனால் அது குடியரசுத்தலைவரின் செயல்பாடு அல்லவே...

ஆதாயம் தரும் பதவி குறித்தான மசோதாவை பாரளுமன்றத்தின் பரிசீலனைக்கு அப்துல் கலாம் திருப்பி அனுப்பினார். இது அவரது சிறந்த நடவடிக்கை என்பதில் மாற்று கருத்து எதுவும் எனக்கு இல்லை. ஆனால் இது கூட நாராயணன் தொடங்கி வைத்த மரபு தான். அதைத் தான் கலாமும் பின்பற்றினார். இதைத்தவிர அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக மக்களின் தேவைகளை முன்னிட்டு எதனையும் செய்ததாக தெரியவில்லை. அப்துல் கலாமின் சாதனையாக ஊடகங்கள் கூறுவது குடியரசுத்தலைவர் என்ற பதவிக்கே தனிக் கவர்ச்சியை கொண்டு வந்தார் கலாம் என்பது தான். அது மட்டுமில்லாமல் அவரது சாதனையாக CNN IBN இவ்வாறு பட்டியலிடுகிறது

As a President he achieved innumerable firsts. In June 2006, the Supreme Commander of the Armed Forces took a ride on a fighter jet. In February 2006, the President traveled 40 metres below sea level in an Indian Navy submarine. In April 2004, he visited the Siachen glacier.

அதைத் தான் என்னுடைய முந்தைய பதிவில் கூறினேன். அப்துல் கலாம் முன்னிறுத்தியது இந்தியாவின் இராணுவ வலிமையை. நாராயணன் முன்னிறுத்தியது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை. தேசிய உணர்ச்சியை விட மக்களின் அடிப்படை தேவைகளும், அவர்களுடைய உரிமைகளும் முக்கியம். நாராயணன் குடியரசுத் தலைவர் பதவி மூலம் அதைத் தான் செய்ய நினைத்தார்.

நாராயணன் தொடங்கி வைத்த மரபுகளிலும் சில சறுக்கல்களை கலாம் எதிர்கொண்டார். 2005ம் ஆண்டு பீகார் சட்டமன்றத்தை மைய அரசு கலைத்தது. அப்துல் கலாம் இதற்கு ஒப்புதல் கொடுத்தார். பிறகு உச்சநீதிமன்றம் பீகாரின் சட்டமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறியது.

அப்துல் கலாமின் இந்தியா 2020 கனவுகள் குறித்து பலர் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கனவுகள் - "வெறும் கனவுகள் தான்". நடைமுறைச் சாத்தியங்கள் இல்லாத அடிப்படையானவை. வெறும் இலக்குகள் குறித்து பேசுபவை. அவர் முன்வைக்கும் இலக்குகளை 2020க்குள் அடைவது எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை. அடிப்படையில் இந்தியா போன்ற பெரிய நாட்டை, மக்கள் தொகை அதிகம் இருக்கும் நாட்டை சில பொருளாதார அளவுகோள்கள் மட்டும் கொண்டு வளர்ந்த நாடு என்று கூறி விட முடியாது. எந்த வளர்ச்சியும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

அப்துல் கலாம் சிறந்த பேச்சாளரா என்று எனக்கு தெரியவில்லை. இது வரை ஒரு முறை கூட அவரது பேச்சினை நான் கேட்டதில்லை. ஆனால் அவரது பேச்சினை வாசித்திருக்கிறேன். சில நேரங்களில் அந்த பேச்சில் அபத்தங்கள் நிறைந்து இருப்பதை கவனிக்க முடியும். அவருடைய சிறப்பான பேச்சு என்பதாக மின்னஞ்சல்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் பேச்சினை அனைவருமே படித்திருக்க முடியும்.

I have three visions for India. In 3000 years of our history, people from all over the world have come and invaded us, captured our lands, conquered our minds. From Alexander onwards, The Greeks, the Turks, the Moguls, the Portuguese, the British, the French, the Dutch, all of them came and looted us, took over what was ours. Yet we have not done this to any other nation. We have not conquered anyone. We have not grabbed their land, their culture, their history and Tried to enforce our way of life on them. Why? Because we respect the freedom of others.

இது எவ்வளவு அபத்தமான ஒன்று. வட இந்தியத்தனமான பார்வை. "நாம்" யார் மீதும் படையெடுத்ததில்லை என்று அவர் கூறுவது முதலில் பொருந்தாது. ஏனெனில் இந்தியா என்ற தேசம் பல நூற்றாண்டுகளாக இருந்ததில்லை. பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு பிறகு தான் இந்தியா என்ற தேசமே உருவானது. ("தமிழை" அடிப்படையாக் கொண்டு கூட ஒரு தேசம் இருந்ததில்லை)

அதற்கு முன்பு இருந்த அனைவரையும் அவர் இந்தியர்கள் என்கிறார் என்றால் கூட அவர்கள் யார் மீதும் படையெடுத்ததில்லை என்பது வரலாற்று தவறு. படையெடுத்தே அடுத்தவன் நாடு, அரண்மனை, பெண்கள் என அனைத்தையும் சிதைத்த மன்னர்களை கொண்டது இந்தப் பிராந்தியம். சோழன், சேரன், பாண்டியன், விஜயநகரம் என அடுத்த நாடு மீது படையெடுத்து அடுத்த நாட்டின் சுதந்திரத்தை பறித்தவர்கள் இந் நாட்டு மன்னர்கள். அது மட்டுமல்ல, சோழ சாம்ராஜ்யம் தென்னிந்தியா முழுமையும் ஆக்கிரமித்து இருந்தது. அது தவிர இலங்கை, மாலத்தீவுகள், கடாரம், சுமத்ரா என பல நாடுகள் மீது சோழர்கள் படையெடுத்தனர். சோழ ஏகாதிபத்யம் (Chola imperialism) என்று கூட இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. சோழ ஏகாதிபத்யம் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் போலவே பொருளாதாரத்திற்காக நாடு பிடிக்கும் ஆசையை அடிப்படையாக கொண்டது. பொருளாதாரக் காரணங்களுக்காகவே இவர்கள் மாலத்தீவுகள், கடாரம், சுமத்ரா போன்றவற்றின் மீது படையெடுத்தனர். (இது குறித்த என்னுடைய பதிவு)

உண்மை இவ்வாறு இருக்க அப்துல் கலாம் தன்னுடைய உரை மூலம் என்ன கூற வருகிறார் ? எதைக் கட்டியெழுப்ப முனைகிறார் என்பது தெளிவாக வெளிப்படுகிறது.

இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. அப்துல் கலாமின் பேச்சு மற்றும் கனவுகள் குறித்து இன்னும் கூட விரிவாக பேச முடியும். அதை மற்றொரு சமயத்தில் விரிவாக பேசும் எண்ணம் உண்டு.

*****

தேர்தலில் வாக்களிக்காமல் இந்தியக்குடியரசுத்தலைவர்கள் நடுநிலைமை முகமூடி அணிந்தாலும் சாமியார்கள் மடத்தில் ஆஜராவதில் எந்தக் குறையும் வைத்ததில்லை. வெங்கட்ராமன் குடியரசுத்தலைவர் மாளிகையை காஞ்சிபுரத்திற்கு மாற்றாதது தான் ஆச்சரியம். அடிக்கடி காஞ்சிபுரத்திற்கு வந்து செல்வார். சங்கர் தயாள் சர்மா திருப்பதிக்கு செல்வதை முக்கிய கடமையாக வைத்திருந்தார்.அப்துல் கலாமும் இந்த விடயத்தில் குறைவைத்ததில்லை. எல்லா மடங்களுக்கும் சென்று வந்தார். புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாளுக்காக புட்டபர்த்திக்கே சென்றவர் அப்துல் கலாம்.


ஆனால் நாராயணன் குடியரசுத்தலைவராக இருந்த காலத்தில் எந்த சாமியார் மடத்திற்கும், வழிபாட்டு தளங்களுக்கும் செல்லாதவர் என்பதே அவரை பிற குடியரசுத்தலைவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

****

அடுத்த குடியரசுத்தலைவராகப் போவது பிரதீபா பட்டீல். அவருக்கு சேனியா காந்தி தான் இந்த வாய்ப்பினை வழங்கினார். என்றாலும் அவர் வழிபடும் பாபாவின் ஆவி தான் அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியுள்ளாதாக கூறியிருக்கிறார் :)

தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதீபா பட்டீல் :

நான் சமீபத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மிக பல்கலைக்கழகத்தின் தலைவர் தாதிஜியை சந்தித்து பேசிய போது, எனக்கு ஓர் இனிய அனுபவம் கிடைத்தது. தாதிஜியின் உடலில் பாபா (பிரம்மகுமாரிகள் பிரிவின் நிறுவன தலைவர் மறைந்த லெக்ராஜ்) ஆவி வந்து அவர் மூலம் பாபா எனக்கு அருள்வாக்கு சொன்னார். நான் அதிர்ஷ்டசாலி என்றும் மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்து இருப்பதாகவும் அதற்கு நான் தயாராக இருக்குமாறும் கூறினார்.

இவரைத் தான் காங்கிரசும், இடதுசாரிகளும், திமுகவும், பாமகவும் ஆதரிக்க போகின்றனராம். இவர் தான் இந்திய ஜனநாயகத்தின் உயர்ந்த பொறுப்பை வகிக்க போகின்றாராம்.

வாழ்க இந்திய ஜனநாயகம் :)